🌞 மதி 19 🌛

பெண்களின் பலவீனங்கள் என்று இது நாள் வரை சொல்லப்பட்டவை எல்லாம் ஆண்களின் கற்பனையில் உருவானக் கட்டுக்கதைகளே ஆகும் டாக்டர். எஸ். பத்மாவதி (இந்தியாவின் முதல் பெண் இருதயநோய் நிபுணர்)

இஷானியும் ருத்ராவும் எலியும் பூனையுமாகச் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது வீட்டை நோக்கி வந்த சஞ்சீவினி அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்தபடி அவர்களிடம் வந்து நிற்க முதலில் சுதாரித்தது ருத்ரா தான். இஷானியின் அருகில் நின்ற அஸ்மிதாவும் திரும்பி பார்க்குமாறு அவளுக்குச் சைகை காட்ட

“நீ உன் மாமாவைக் காப்பாத்த டிரை பண்ணுறியா அஸ்மி? இன்னைக்கு நான் விடுறதா இல்ல… எவ்ளோ தைரியம் இருந்தா என்னை சைட் அடிக்கறாருனு என் கிட்டவே சொல்லுறாரு” என்று படபடவென்று பொறிந்தபடி திரும்பியவள் அங்கே கையைக் கட்டிக்கொண்டு நின்றிருந்த சஞ்சீவினியைப் பார்த்ததும் “அம்மா!” என்று சொல்லிவிட்டு திருதிருவென்று விழிக்க ஆரம்பித்தாள்.

“ம்ம்.. அம்மாவே தான்… அவன் ஷேர்ட்டை விட்டுட்டுக் கூட அம்மா கிட்ட பேசலாம்” என்று சஞ்சீவினி சொன்னது தான் தாமதம் இஷானி பதறியவளாய் ருத்ராவின் சட்டையை விடுவித்தவள் இப்போது என்ன சொல்லி சமாளிப்பது என்று புரியாமல் விழிக்க ருத்ராவோ தமக்கையை எப்படி எதிர்கொள்வது என்று சங்கடத்துடன் அஸ்மிதாவை நோக்கினான்.

அவள் இருவரையும் பார்த்து நமட்டுச்சிரிப்பு சிரித்தவள் சஞ்சீவினியிடம் “நல்லவேளை நீங்க வந்திங்கமா! இல்லைனா இவங்க ரெண்டு பேரும் இந்த இடத்தைப் போர்க்களமா ஆக்கிருப்பாங்க… அருவா, கத்தி இல்லாதது ஒன்னு தான் குறை” எனூர் அவர்களைக் கேலி செய்ய சஞ்சீவினிக்கு அவர்கள் இருவரும் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்த விதம் சிரிப்பை மூட்ட மேற்கொண்டு எதையும் விசாரிக்காமல் நகைத்தபடி மூவரையும் வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.

உள்ளே இஷானியுடன் நுழைந்த ருத்ராவை ராஜகோபாலனும் அலமேலுவும் பார்த்துவிட்டு அர்த்தபுஷ்டியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கூடவே சஞ்சீவினியும் அஸ்மிதாவும் வரவே சிறிது நேரம் அரட்டைக்கச்சேரியில் நேரம் கழிந்தது. ருத்ரா “ஹப்பா! நல்லவேளை அஸ்மி சொன்னதை யாரும் தப்பா எடுத்துக்கல” என்று நிம்மதி பெருமூச்சு விட்டான்.

இஷானியோ “நல்லவேளை நான் மாமா கூட சண்டை போட்டதுக்கு அம்மா எதுவும் சொல்லலை… சை… நானே மறுபடி மறுபடி மாமானு சொல்லி மாட்டிக்கிறேன்… இனிமே தப்பித் தவறி கூட அப்பிடி சொல்லாதே இஷானி” என்று தனக்குத் தானே அறிவுறுத்திக் கொண்டபடி அவர்களின் பேச்சில் கலந்துகொண்டாள்.

என்ன தான் தமக்குள் பேசிக்கொண்டாலும் இருவரின் விழிகளும் ஒருவரையொருவர் மற்றவர் அறியாவிதமாய் தீண்டிச் சென்றது. கலகலப்பான உரையாடலில் நேரம் சென்றதே தெரியவில்லை. ருத்ரா வீட்டுக்குத் திரும்ப எழுந்திருக்கவும் சஞ்சீவினி

“ருத்ரா கொஞ்சநேரம் இருடா… டின்னர் ரெடியாகுது, சாப்பிட்டிட்டு போ” என்று அவனைக் கேட்டுக்கொள்ள

“இல்லக்கா! அஜ்ஜூ எனக்காக வெயிட் பண்ணிட்டிருப்பான். அஸ்மியைப் பார்க்கலாம்னு தான் வந்தேன்” என்றவனின் விழிகள் இஷானியை நோக்க அந்த அறையிலிருந்த அனைவருமே “நீ யாரை பார்க்க வந்தேனு நல்லாவே தெரியுது” என்று மனதிற்குள் கிண்டலாய் சொல்லிக் கொண்டனர்.

“நான் கிளம்புறேன்கா” என்றவன் கிளம்பாமல் நின்று கொண்டிருக்க அஸ்மிதா “கிளம்புறேனு சொல்லிட்டு நின்னுட்டே இருந்தா என்ன அர்த்தம் மாமா? ஓ! நானே வந்து வழியனுப்பணுமா? தோ வர்றேன்” என்றபடி அவனது கையைப் பற்றி வெளியே இழுத்துச் செல்ல அவனோ பரிதாபமாக இஷானியை நோக்கியபடியே அஸ்மிதாவுடன் சென்றான்.

இஷானி அவனை முறைத்தாலும் அறையின் வாயிலைத் தாண்டும் முன்னர் அவன் அவளைப் பார்த்துக் கண் சிமிட்டியதில் அவளது பெரியக் கண்கள் ஆச்சரியத்தில் இன்னும் விரிய, எவ்வளவு தைரியமிருந்தால் பெரியவர்கள் இருக்கும் போதே இவன் கண் சிமிட்டுவான் என்று திகைத்துப் போனாள் இஷானி.

அவர்கள் வெளியேறிய சில நிமிடங்களில் கார் கிளம்பிச் சென்ற சத்தம் கேட்க, அஸ்மிதாவும் வீட்டுக்குள் வந்ததாள். இஷானியின் ஆச்சரியமான முகபாவத்தைப் பார்த்தவள் அவளைக் கேலி செய்தபடி இரவுணவை முடித்தாள்.

அனைவரும் உறங்கச் செல்ல இஷானியின் விழிகள் உறக்கத்தைத் தொலைத்திருந்தன. அஸ்மிதா அவள் பக்கத்தில் சீரான உறக்கத்திலிருக்க அவளது துயில் கலையாமல் எழுந்தவள் அறையைவிட்டு வெளியேறி மாடி வராண்டாவிற்கு வந்தாள்.

சிறிதுநேரம் சிலுசிலுவென்று அடித்தக் காற்றில் நின்றவளின் மனம் ருத்ராவின் இருநூற்று எழுபத்தைந்து முறை என்ற வாசகத்தை அசை போட ஆரம்பித்தது. முதலில் கேட்கும் போது முணுக்கென்று கோபம் வரவைத்தாலும் பின்னர் இஷானிக்கு அவன் சொன்ன விதத்தை எண்ணி இப்போது சிரிப்பு தான் வந்தது.

ருத்ரா கிளம்பும் போது கண் சிமிட்டியதை எண்ணும் போது அப்போது போல இப்போதும் ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தன. எப்போதும் போல பெயரிடப்படாத உணர்வு ஒன்று மனதில் எழ அதை அனுபவித்தபடி நின்றவளைத் தழுவிச் சென்றது இரவுநேர தென்றல் காற்று.

***********

அன்று ஞாயிறு. வழக்கம் போல ருத்ராவும் அர்ஜூனும் வந்து சஞ்சீவினி பவனத்தில் ஆட்டம் போட இஷானியும் அஸ்மிதாவும் துளி நிறுவனத்துக்கு எப்போதும் போல சென்றனர். இஷானி நடன வகுப்பு எடுக்க சென்றுவிட தனித்துவிடப்பட்ட அஸ்மிதா நேரம் போகாமல் அந்த வளாகத்தினுள் சுற்றித் திரிந்து கொண்டிருந்தாள்.

அப்போது நோட்டில் எதையோ வரைந்து கொண்டிருந்த மலர் அவளது கண்ணில் படவும் அவளை நோக்கிச் சென்றாள். படம் வரைந்து கொண்டிருந்தவளின் முகம் கலக்கத்தில் இருந்தது. அஸ்மிதா ஏன் என்று யோசித்தவாறு அவள் அருகில் அமர்ந்தாள்.

“ஏன் உன் முகம் இப்பிடி டென்சனா இருக்கு மலர்? எனி பிராப்ளம்? அந்தப் பையன் மறுபடியும் எதும் பிரச்சனை பண்ணுறானா?” என்று வினவ அஸ்மிதாவின் குரல் கேட்டு நிமிர்ந்த மலர்

“அவன் பிரச்சனை அன்னைக்கே முடிஞ்சு போச்சுக்கா… இப்போ எனக்கு இருக்கிற பிரச்சனை என்னோட பாட்னி மேம்… என்னால டயகிராம் எதுவுமே தெளிவா வர முடியலைக்கா… எனக்கு வரையவே வர மாட்டேங்குது… மேம் வேற ரொம்ப ஸ்ட்ரிக்ட்… பிரசண்டேசன் நல்லா இல்லைனா மார்க்கை கம்மி பண்ணிடுவேனு நேத்து சொல்லிட்டாங்க” என்று சொல்லும் போதே முகம் கூம்பி விட்டது அவளுக்கு.

அஸ்மிதா நாடியில் கைவைத்து யோசித்தவள் ஜெய்யின் நினைவு வரவும் “உன் நோட்டைக் குடு மலர்… டயகிராம் வரையிறதுக்கு ஆள் கிடைச்சாச்சு” என்று சொன்னவள் அவளையும் அழைத்துக் கொண்டு ஜெய்யின் ஓவியப்பயிற்சி வகுப்புக்குச் சென்றாள்.

வெளியே நின்றபடி உள்ளே அமர்ந்து வரைந்து கொண்டிருந்த வாண்டுகளிடம் பேசியபடி அவன் எதையோ வரைந்து கொண்டிருக்க அஸ்மிதா தொண்டையைச் செறுமிவிட்டு “மே ஐ கம் இன் சார்?” என்று கேட்க ஜெய் அவளது குரலைக் கேட்டதும் திரும்பி வாசலை நோக்கினான்.

அஸ்மிதா மலரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவள் அவளது வரைபடக்குறிப்பேட்டை ஜெய்யிடம் காட்டிவிட்டு “இவளுக்குக் கொஞ்சம் டயகிராம் வரைஞ்சு குடுக்கிறியா? நல்லா வரையலைனா அவங்க மேம் திட்டுவாங்களாம்” என்று நயமாகப் பேச ஜெய்யால் அவளது இந்தத் திடீர் பணிவை நம்ப முடியவில்லை.

ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்லாமல் “இவங்களுக்குக் கிளாஸ் போயிட்டிருக்கு மேடம்… இப்போ என்னால பாதியில நிறுத்திட்டு வரமுடியாதே” என்று தண்மையாக உரைக்க

“இந்த பட்டர்ஃப்ளையும், நாய்க்குட்டியும் நெக்ஸ்ட் வீக் கூட வரைஞ்சுக்கலாம்… ஆனா மலருக்கு நாளைக்கு நோட் சப்மிட் பண்ணனும் ஜெய்” என்றாள் அவள் சட்டென்று.

அவனிடம் சொன்ன கையோடு குழந்தைகளிடம் திரும்பியவள் “குட்டீஸ்! இன்னைக்கு டிராயிங் கிளாஸ் முடிஞ்சு போச்சு… எல்லாரும் போய் விளையாடுங்க போங்க” என்று அறிவித்தது தான் தாமதம் குழந்தைகள் நோட்டுகள், கலர்ப்பென்சில்களை எடுத்துக்கொண்டு “பை ஜெய் அண்ணா!” என்று அவனுக்கு டாட்டா காட்டி விட்டு கிளம்பிவிட

அஸ்மிதா அவனிடம் “இப்போ வரையலாமா மிஸ்டர் டேமேஜர்?” என்று கேட்கவும் அவள் பக்கத்திலிருந்த மலர் நமட்டுச்சிரிப்பு சிரித்தவள் ஜெய்யின் பார்வையைக் கண்டதும் “சாரி அண்ணா! இனிமே சிரிக்க மாட்டேன்… பட் ப்ளீஸ் இந்த டயகிராம் மட்டும் வரைஞ்சு குடுங்க” என்று கேட்கவும் ஜெய்யால் அதைத் தட்ட முடியவில்லை.

சரியென்று ஒத்துக்கொண்டு நோட்டையும் புத்தகத்தையும் வாங்கிக் கொண்டவன் கையோடு வரைய அமர்ந்துவிட அஸ்மிதா மலரிடம் தான் அவன் வரைந்ததும் புத்தகம் நோட்டுடன் திரும்புவதாகக் கூறி அவளை அனுப்பிவைத்தாள்.

மலர் சென்றதும் ஜெய் அமர்ந்திருந்த பெஞ்சின் எதிர்புறமிருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டவள் தனக்கும் அவனுக்கும் இடையே கிடந்த உயரமான டெஸ்கில் அவன் நோட்டு புத்தகங்களை வைத்து வரைவதைப் பார்த்துக்கொண்டு நேரத்தைப் போக்கினாள்.

ஆனால் சில நிமிடங்களுக்கு மேல் அவளால் அமைதி காக்க முடியவில்லை. அவன் சொன்ன ஒரு விஷயம் அவள் மனதை உறுத்திக் கொண்டேயிருக்க அதை இன்று கேட்டுவிடவேண்டியது தான் என்று எண்ணியவளாய் பேச்சை ஆரம்பித்தாள்.

“ஜெய் அன்னைக்கு ஒரு நாள் நீ உன் மனசுல யாரையோ தெய்வமா நினைச்சிருக்கேனு சொன்னியே… அவங்க யாரு?” என்று கேட்க ஜெய் அவ்வளவு நேரம் வரைந்து கொண்டிருந்தவன் அஸ்மிதாவை நிமிர்ந்து பார்த்தான்.

அவளது கண்களை ஊடுருவிப் பார்த்தவன் “அது யாருனு கண்டிப்பா தெரிஞ்சிக்கணுமா மேடம்?” என்று கேட்டபோது அவளால் பதிலளிக்க இயலவில்லை. ஆனால் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று சொல் என அவளது மனசாட்சி அவளைத் தூண்டிவிட்டது. அதன் குரல் ஜெய்யின் செவியிலும் விழுந்ததோ என்னவோ அது யாரென்று சொல்ல ஆரம்பித்தான் அவன்.

அஸ்மிதாவோ அது யாராக இருக்கக்கூடுமென்ற யோசனையுடன் அவனது பதிலை எதிர்பார்த்து நகம் கடித்துக் கொண்டிருந்தாள்.

“அது வேற யாருமில்ல என்னோட அம்மா தான்” என்று அவன் சொல்லி முடிக்கவும் தான் இவ்வளவு நேரம் இழுத்துப் பிடித்துவைத்திருந்த மூச்சு அவளுக்குச் சீரானது. பதிலை அளித்தவன் மீண்டும் படம் வரைய ஆரம்பித்துவிட அஸ்மிதாவின் மனம் மகிழ்ச்சிக்கடலில் தத்தளித்தது.

காரணமேயின்றி அந்தப் பதில் அவளுக்கு நிம்மதியை அளித்தது. மனதின் மகிழ்வு முகத்தில் தெரிய “ஹப்பாடா நான் கூட என்னவோ ஏதோனு நினைச்சு பயந்துட்டேன்” என்றாள் அவள் நிம்மதி பெருமூச்சுடன்.

அவளது பேச்சில் அவன் தலை மீண்டும் உயர, “நான் கூட உன்னோட எக்ஸ் லவ்வர்னு சொல்லிருவியோனு பயந்துட்டேன் ஜெய்” என்றாள் அவள் அப்பாவி போல.

“அதுக்கு ஏன் நீங்க பயப்படணும் அஸ்மி மேடம்?” என்று சாதாரணமாகக் கேட்டவனுக்கு அஸ்மிதா அளித்த பதிலில் அவன் அதிர்ந்து போய்விட்டான்.

அஸ்மிதா அலட்டிக்கொள்ளாமல் “நான் உன்னோட ஒய்ப் இல்லையா, அதான் கொஞ்சம் பயந்துட்டேன்” என்று சொல்லவும் ஜெய் பதறிப் போய் யாரும் அந்த அறையின் வெளியே இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு வந்தவன்

“மேடம் ப்ளீஸ்! இன்னொரு வாட்டி அப்பிடி சொல்லாதிங்க… யாரும் கேட்டா என்ன நினைப்பாங்க?” என்று தயக்கத்துடன் உரைக்க

“என்ன நினைப்பாங்க? ஜெய்கும் அஸ்மிக்கும் சம்திங் சம்திங்னு நினைப்பாங்க” என்று சொல்லிவிட்டு முகத்தைப் பரிதாபமாக வைத்துக் கொண்டவள் அவன் இன்னும் நின்று கொண்டிருக்கவும்

“இப்போ எதுக்கு நின்னுட்டிருக்க? சிட் நவ்… சீக்கிரமா வரைஞ்சு முடி” என்று கட்டளையிட அவன் தயக்கத்துடன் அவளைப் பார்த்தபடி அவள் எதிரே சென்று அமர்ந்து வரையத் தொடங்கினான்.

அஸ்மிதா பதற்றத்தில் அவன் நெற்றியில் பூத்திருந்த வியர்வையைப் பார்த்து நமட்டுச்சிரிப்புடன் போனை எடுத்து கேம் விளையாடத் தொடங்கினாள். இன்றைக்கு அவள் மனதில் இருந்த உறுத்தல் அகன்று விட, கேமில் கவனத்தைச் செலுத்தியவள் அனைத்து நிலைகளிலும் வெற்றிவாகை சூடிக் கொண்டிருந்தாள்.

ஒரு வழியாக ஜெய் படம் வரைந்து முடித்துவிட்டு நோட்டு புத்தகங்களை அவளிடம் ஒப்படைத்துவிட்டு “எல்லா டயகிராமும் வரைஞ்சு முடிச்சிட்டேன் மேடம்… அந்தப்பொண்ணு கிட்ட குடுத்துடுங்க” என்று சொல்லிவிட்டுக் கிளம்ப எத்தனிக்க

“ஹலோ! எங்க போறிங்க சார்? இன்னைக்காச்சும் எங்களோட உக்காந்து சாப்பிடுங்க” என்று அவள் சொல்லவும் அவன் மறுப்பாய் ஏதோ சொல்ல வந்தான்.

அஸ்மிதா அதைக் காது கொடுத்துக் கேட்கும் மனநிலையில் இல்லாதவள் “நீ எந்தக் காரணமும் சொல்லவேண்டாம். ஒழுங்கா என் கூட வா” என்று அவன் கரத்தைப் பற்றி அழைத்துச் சென்றவள் மலரிடம் நோட்டு புத்தகங்களை ஒப்படைத்துவிட்டு சாப்பிடும் அறைக்கு அவனை இழுத்துச் சென்றாள் விடாப்பிடியாக.

“ஏங்க நான் சொல்லுறதை கேளுங்க… இன்னொரு நாள் சாப்பிடுறேங்க… இப்போ டைம் இல்லை” என்று புலம்பியபடி வந்தவனைத் திரும்பி பார்த்து முறைத்தவள்

“ஏன் பெரிய பொசிசன்ல உக்காந்ததும் உங்களுக்கு இவங்களோட உக்காந்து சாப்பிட அன்கம்ஃபர்டபிளா இருக்கோ?” என்று குத்தலாகக் கேட்டுவிட்டு அவன் கையை உதறிவிட்டாள்.

“நீ கிளம்பு… அவ்ளோ கஷ்டப்பட்டு நீ எங்களோட சாப்பிடணும்னு அவசியம் கிடையாது”

“இல்ல மேடம்.. அது…. வந்து…”

“என்ன வந்து, போயினு சொல்லிட்டிருக்க ஜெய்? உங்களுக்குலாம் நல்ல வேலை, சொந்த வீடுனு ஆனதும் பழசு மறந்து போயிதுல்ல… சே நான் உன்னை என்னவோனு நினைச்சேன்… ஆனா நீயும் சராசரி மனுசன் தான்”

அஸ்மிதா வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவள் தன்னெதிரே பாவம் போல நின்று கொண்டிருந்தவனைக் கடுப்புடன் நோக்கிவிட்டு

“வீக்லி ஒன் டே நானும் இஷியும் ஏன் இங்கே சாப்பிடுறோம் தெரியுமா? இவங்க யாருமே அப்பா அம்மா இல்லாதவங்க இல்லை… அப்பா அம்மானு குடும்பத்தோட பாசத்தை முழுசா அனுபவிச்சவங்க… கௌரவம், மான மரியாதையைக் காரணம் காட்டி பெத்தவங்களால கைவிடப்பட்டவங்க… அவங்க ஒரு நிமிசம் கூட நம்ம அம்மா அப்பா அக்கா தங்கச்சி இவங்க யாராவது நம்மளோட இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்னு ஏங்கிடக் கூடாதேனு தான் அவங்களோட ஒன் டேயை நாங்க ஸ்பெண்ட் பண்ண முக்கியக்காரணம்…

மத்த நாள்ல குழந்தைங்க ஸ்கூலுக்குப் போயிடுவாங்க… கேர்ள்ஸ் எல்லாரும் காலேஜ்னு கிளம்பிடுவாங்க… சண்டே மட்டும் தான் எல்லாரும் இங்கே இருப்பாங்க… அப்போ அவங்களோட நாங்களும் இருந்தா அவங்க சந்தோசப்படுவாங்க… இது வரைக்கும் இங்க வந்த டியூட்டர்ஸ், டிராயிங் டீச்சர் எல்லாருமே இவங்களோட சேர்ந்து ஒரு வேளை சாப்பாட்டைச் சாப்பிடுவாங்க… இதனால அந்தக் குழந்தைகளுக்குச் சின்னச் சந்தோசம். அதைக் கூட செய்ய முடியாத அளவுக்கு சாருக்கு பிரஸ்டீஜ் பிராப்ளம்” என்று திட்டித் தீர்த்துவிட்டு நகர முயல அவளது கையைப் பற்றி தடுத்து நிறுத்தினான் ஜெய்.

என்னவென்று ஏறிட்டவளிடம் “நானும் இன்னைக்கு இங்கேயே சாப்பிடுறேன் மேடம்” என்று சொல்ல அஸ்மிதா என்ன திடீர் ஞானோதயம் என்பது போல அவனைப் பார்த்தாள்.

“நிஜமா தான் சொல்லுறேன் மேடம்.. நான் இங்கேயே சாப்பிடுறேன்… உங்களுக்கு நம்பிக்கை இல்லைனா நான் சாப்பிடுற வரைக்கும் என் கையைப் பிடிச்சு வச்சுக்கோங்க” என்று அவனது கரத்தை அவளிடம் நீட்ட அஸ்மிதா முதலில் திகைத்தவள் பின்னர் எவ்வித தயக்கமுமின்றி அவன் கரத்தைப் பற்றிக் கொண்டாள்.

சற்று முன்னர் இருந்த கடுகடுப்பு அகல “இனிமே நீ எஸ்கேப் ஆகமுடியாது… வா சாப்பிடப் போலாம்” என்று சொல்லிவிட்டு ஜெய்யை நோக்கி அழகாகப் புன்னகைக்க, ஜெய்யும் சற்று முன்னர் இருந்த தயக்கம் அகல குறுஞ்சிரிப்பை வீசினான்.

இருவரும் சாப்பாட்டு அறைக்குள் எங்கே அமரலாம் என்று பேசிக்கொண்டிருக்க அஸ்மிதா அவனை அழைத்துக் கொண்டு சென்றவள் அர்ஜூனுடன் அங்கே வந்திருந்த ருத்ராவின் பார்வையில் விழுந்தாள்.

ருத்ரா ஜெய்யின் கையை அஸ்மிதா பற்றியிருப்பதையும் இருவரும் ஏதோ சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதையும் பார்த்தவன் ஆட்காட்டிவிரலால் நெற்றியில் தேய்த்துக் கொண்டான் ஏதோ யோசனையுடன்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛