🌞 மதி 17 🌛

பெண்கள் உடல்ரீதியாக ஆண்களுக்குச் சமமானவர்கள் என்று நான் கருதவில்லை. ஆனால் மனரீதியாக, உளவியல்ரீதியாக அவர்கள் ஆண்களுக்குச் சமமானவர்களேபேகம் அபிதா அகமத் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் 1980, 1984)

புரோகிதருடன் நின்ற தேவ்விற்கு அவன் முன்னே பரந்து விரிந்த கடலின் ஆர்ப்பரிக்கும் அலைகளின் சத்தம் இறைச்சலாய் ஒலித்தது. அவர் சொன்னபடி தர்ப்பணத்தைச் செய்து முடித்தவனது நினைவில் இதே கடற்கரையில் மானசாவுடன் பேசி சிரித்த நாட்கள் வந்து போனது. அதே இடத்தில் அவளுக்குப் பின் வரும் நாட்களில் தர்ப்பணம் செய்ய வேண்டிய நிலை வரும் என்று அப்போது இருவருமே சிந்தித்ததில்லை.

“ஒரு ஹஸ்பெண்டா உனக்கு நான் எதுவுமே செய்யலை மனு… என்னால உனக்குப் பண்ண முடிஞ்சது இந்த தர்ப்பணம் மட்டும் தான்” என்று முணுமுணுத்துக் கொண்டவனது கண்கள் வெறுமையை மட்டும் ஆடையாய் உடுத்தி கடலை வெறித்தது.

காலைத் தீண்டிச் செல்லும் அலைகளினூடே நின்றவனின் தோள் மீது படிந்தது ஒரு கை. தேவ் திரும்பி பார்க்க வருத்தம் தோய்ந்த முகத்துடன் நின்று கொண்டிருந்தான் ரிஷி.

“கிளம்பலாம் சார்… இதுக்கு மேல இங்கேயே நின்னிங்கனா உங்களுக்குத் தேவையில்லாத வருத்தம் தான் வரும்” என்றவனின் பேச்சைக் காது கொடுத்துக் கேட்டவன் ரிஷியுடன் அங்கிருந்து அகன்றான்.

சூரியன் பளீரென்று வெயிலை அள்ளித் தெளித்தாலும் தேவ்வின் உலகம் மட்டும் நான்கு ஆண்டுகளாக இருண்டு கிடந்தது. வழக்கம் போல சிந்தனையோட்டங்கள் பலமாக இருக்கும் போதே வீடு வந்துவிட்டது. கார் பார்க்கிங்கில் அதிகப்படியாக நின்ற காரை பார்த்ததும் விஸ்வநாதன் சென்னைக்குத் திரும்பிவிட்டார் என்பதை அறிந்துகொண்டவன் அவர் இன்று வருவதாகத் தன்னிடம் சொல்லவே இல்லையே என்று வியந்தபடி ரிஷியுடன் வீட்டுக்குள் நுழைந்தான்.

நுழைந்தவனின் கண்ணில் ஹாலில் அவனது அன்னையும் தாத்தாவும் மட்டுமே அமர்ந்து ஏதோ தீவிரமானக் குரலில் விவாதிப்பது விழுந்தது.

“அவனுக்கு என்ன வயசு ஆகுது மாமா? குடும்பம் குழந்தைனு சந்தோசமா வாழ வேண்டிய வயசுல இப்பிடி அவனோட பொண்டாட்டிக்கு தர்ப்பணம் பண்ணுற நிலமையை என் மகனுக்கு அந்த கடவுள் குடுத்திருக்க வேண்டாம்”

சாந்தினியின் வழக்கமான புலம்பல் தான். தனது கண்ணெதிரிலேயே மகன் மருமகளுக்குத் தர்ப்பணம் செய்துவிட்டு வருவதும், அவள் நினைவில் வாழ்க்கையை இலக்கின்றி வாழ்வதுமாய் இருப்பதைக் கண்டு எந்தத் தாய்க்கும் உள்ளுக்குள் தோணுகின்ற வருத்தம் தான் அந்தப் புலம்பலுக்குக் காரணம்.

தேவ் அதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் நடமாடுவது தெரிந்தும் அவரது புலம்பல் தொடர்ந்தது. வீட்டிற்குள் நுழைந்தவன் ஹாலில் அமர்ந்திருந்த இருவரிடமும் “நான் இப்போ வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு மாடியில் இருக்கும் அவனது அறையை நோக்கிச் செல்ல அவனுடன் வந்த ரிஷியைப் பிடித்துக் கொண்டனர் மாமனாரும் மருமகளும்.

அவனோ தேவ்வின் நிழல் போன்றவன். கல்லில இருந்து கூட நார் உறிக்கலாம், ஆனால் ரிஷியிடமிருந்து எந்த விஷயத்தையும் வாங்க முடியாது. இம்முறையும் தேவ் இப்போதெல்லாம் பரபரப்புடன் சுற்றுவதற்கான காரணத்தை அறிய சாந்தினி எவ்வளவோ முயன்றும் ரிஷி வாயைத் திறந்து பதிலளிக்கவில்லை. எனவே இப்போது கூட “சரியான கல்லுளிமங்கன்… எவ்ளோ கெஞ்சுறோம், கொஞ்சமாச்சும் இரக்கப்பட்டு விஷயத்தைச் சொல்லுறானானு பாரு” என்று அவர் வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் போதே படிகளில் யாரோ இறங்கிவரும் அரவம் கேட்டது.

தேவ் தான் வருகிறான் போல என்று நினைத்தவராய் திரும்பிய சாந்தினி அங்கே விஸ்வநாதன் வரவும் “நீங்களாங்க? நான் கூட தேவ் தான் ரூமுக்குப் போனவன் திரும்பிவந்துட்டானோனு நினைச்சேன்” என்று சொல்லவே அவர் இறுகிய முகத்துடன் மனைவியும் தந்தையும் அமர்ந்திருக்கும் இடத்தை அடைந்தார்.

மூக்குக்கண்ணாடியைக் கழற்றிவிட்டு ஏதோ யோசித்தவர் கண்ணாடியை மீண்டும் மாட்டியபடி “ரிஷி! உன் தேவ் சாரோட பழிவாங்கும் படலம் சிறப்பா போகுது போல?” என்று கடினமானக்குரலில் கேட்க ரிஷியால் இப்போதும் அமைதி மட்டுமே காக்க முடிந்தது. அவனால் அவரிடம் உண்மையை மறைக்கவும் இயலாது அதே நேரம் உரைக்கவும் இயலாது.

ஆனால் விஸ்வநாதன் மனிதர்களின் முகத்திலிருந்தே மனதைப் படிக்கும் வித்தை தெரிந்தவர். அப்படிப்பட்டவர் இதுவரை ஏமாந்தது சந்திரசேகரிடம் மட்டுமே. அது கூட நண்பன் மீது வைத்திருந்த கண்மூடித்தனமான நம்பிக்கையால் தான். யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல அச்சம்பவத்திற்குப் பின்னர் தனது நிழலைக் கூட அவர் நம்புவதில்லை. அதே நேரம் நண்பர்கள் என்று புதிதாக யாரையும் அவரது வாழ்க்கைக்குள் இழுத்துப் போட்டுக் கொள்ளவில்லை.

இது எல்லாவற்றிற்கும் மேலாக அவரது ஏமாற்றத்துக்கான பதிலடியை தேவ் நிறுமத்தின் வளர்ச்சியாகக் கொடுக்க ஆரம்பித்த தினத்திலிருந்து இன்று வரை வி.என். குழுமத்தின் கெமிக்கல் உற்பத்தி ஆலைகளைப் பற்றி அவனிடம் எதுவும் விசாரிப்பதில்லை. மகன் மீது அவ்வளவு நம்பிக்கை. ஆனால் இப்போது தேவ் எடுத்துவைக்கும் அடி தேவையே இல்லை என்பது தான் அவரது வாதம்.

ஆர்.எஸ் கெமிக்கல் நிறுமத்தை இல்லாமல் ஆக்குவதற்கு என்னென்ன வழிகள் உண்டோ அனைத்திலும் அவன் இறங்கிவிட்டதை அவரும் அறிவார். தற்போது மகன் அதன் உதிரிப்பங்குதாரர்களிடமிருந்து பங்குகளை வாங்கிய விவரமும் அவருக்குத் தெரியும். அவர் எவ்வளவு சொல்லியும் காதில் போட்டுக்கொள்ளாமல் அவன் இஷ்டத்துக்கு நடந்துகொள்பவன் சொன்ன ஒரே வார்த்தை “என் மனுவுக்கு நடந்த அநியாயத்துக்கு நான் இன்னும் பழி வாங்கலைப்பா… அப்பிடி பழிவாங்குறப்போ நீங்க என்ன சொன்னாலும் நான் கேக்கிறேன்” என்பது தான்.

அதற்கு மேல் அவரும் அவனைத் தடுக்கவில்லை. அதே நேரம் மகனது நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் தவறவில்லை. அவர் ரிஷியிடம் விசாரித்துக் கொண்டிருந்தபோதே தேவ் அவனது அறையிலிருந்து ஹாலுக்கு வந்துவிட ரிஷி அவரிடமிருந்து தப்பி விட்டான்.

“ரிஷி கிட்ட என்னப்பா என்கொயரி பண்ணிட்டிருக்கிங்க?” என்றபடி தந்தையின் அருகில் அமர்ந்தவன் ரிஷியைக் கண்ணாலேயே அவன் வீட்டுக்குச் செல்லும்படி பணிக்க அவனும் போனில் மற்ற விவரத்தைச் சொல்வதாகச் சைகை காட்டிவிட்டு அனைவரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டான்.

அவன் கிளம்பியதும் “இவனை எங்கே இருந்து பிடிச்ச தேவ்? சரியான அழுத்தக்காரன்” என்று குறைபட்டுக் கொண்டார் சாந்தினி. விஸ்வநாதனோ சங்கரராமனை ஏறிட்டவர்

“இவன் கிட்ட என்ன சொல்லி வச்சிருக்கிங்கப்பா? இவனோட நடவடிக்கை கொஞ்சநாளா சரியில்லை” என்று கேள்விக்கணையை வீசவும்

“எதுவா இருந்தாலும் என் கிட்ட கேளுங்க டாட்… தாத்தாவுக்கும் நான் இப்போ செய்யுறதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று தாத்தாவைக் காப்பாற்றுவதற்காக வேகமாகப் பதிலளித்தான் தேவ்.

ஆனால் அவன் சொன்னதை விஸ்வநாதன் நம்பவேண்டும் அல்லவா? அவர் நம்பாத பாவனையுடன் பார்க்கவும்

“பிலீவ் மீ டாட்! நான் தான் ரிஷி கிட்ட ஆர்.எஸ் கெமிக்கலோட உதிரி ஷேர் எல்லாத்தையும் வாங்கச் சொன்னேன்… இன்னும் கொஞ்சம் தான் பாக்கி… பட் அது எல்லாமே சந்திரசேகரோட முன்னாள் மனைவியோட கண்ட்ரோல்ல இருக்கு… அதை வாங்குறதுக்கான வேலையில தான் இப்போ ஒருத்தனை இறக்கிவிட்டிருக்கேன்… சீக்கிரமா அதுவும் முடிஞ்சிடும்… இந்த வருசத்தோட ஏ.ஜி.எம்ல ஆர்.எஸ் கெமிக்கலோட எம்.டியை செலக்ட் பண்ணுவாங்க… அது வேற யாருமில்ல… நான் தான்” என்று நம்பிக்கையுடன் உரைத்துவிட்டு எழுந்தவனைத் தடுக்கும் வழியறியாது விழித்தார் விஸ்வநாதன்.

தேவ் இதோடு பேச்சு முடிந்தது என்பது போல காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட விஸ்வநாதன் சங்கரராமனிடம்

“இதெல்லாம் உங்க ட்ரெயினிங்காப்பா? ஏன் உங்களுக்குப் புரியவே மாட்டேங்குது? வினாயகமூர்த்தி கிட்ட இப்போ நம்ம மோதுனா அது நமக்கு மட்டுமில்ல சந்திரசேகரோட உயிருக்கும் ஆபத்தா தான் போய் முடியும்… இவன் இப்போ செய்யுறதை எப்போவோ நான் செஞ்சிருப்பேனே… ஏன் செய்யலை? சந்திரசேகர் துரோகியா இருக்கலாம். ஆனா அவன் கெட்டவன் இல்லை… அவனோட முட்டாள்தனத்தை, முன்கோபத்தை வினாயகமூர்த்தி தனக்கு சாதகமா பயன்படுத்திக்கிறான்… அதுக்கு சந்திரசேகரோட எம்.டி பதவியை ஏன் பகடைக்காயா ஆக்கணும்?” என்று பொறுக்கமுடியாமல் வாதம் செய்ய ஆரம்பிக்க

அவரை நிறுத்துமாறு சைகை செய்த சங்கரராமன் “அதான் நீயே சொல்லிட்டியே! சந்திரசேகர் முட்டாள்னு… முட்டாளோட கையில இருக்கிற தலைமைப்பதவி குரங்கோட கையில இருக்கிற கொள்ளிக்கட்டை மாதிரி விஸ்வா! அதை வச்சு குரங்கு தன்னையும் புண்ணாக்கிட்டு தன்னைச் சுத்தி இருக்கிறதையும் எரிக்கிற மாதிரி தான் முட்டாள் தன்னோட பதவியை வச்சு அடுத்தவங்களை அழிப்பான்… உன் மருமகளோட சாவை மறந்துட்ட போல! சாகிற வயசாடா மானசாவுக்கு? எப்பிடி இருக்க வேண்டிய என் பேரன் இன்னைக்குப் பசி தூக்கம் எதுவுமில்லாம இப்பிடி வேண்டாவெறுப்பா வாழ்க்கையை நடத்துறதுக்கு யாரு காரணம்? உன் ஃப்ரெண்டுனு இப்போ நீ கொடி பிடிக்கிறியே அதே சந்திரசேகர் தான்… இனிமே இந்த விஷயத்துல நீ என்னையும், என் பேரனையும் தொந்தரவு பண்ணாதே விஸ்வா” என்று ஆணையிடும் குரலில் கூறிவிட்டுத் தோட்டத்தை நோக்கி சென்றார்.

அவர் சென்றதும் மனைவியிடம் திரும்பியவர் “சாந்தி! உனக்காச்சும் நான் சொல்லுறது புரியுதா? அவன் சின்னப்பையன்… ஆழம் தெரியாம காலை வைக்கிறான்… இதால அவனுக்கு எதுவும் ஆகிடுமோனு நான் பயப்படுறது உங்க யாருக்குமே ஏன் புரிய மாட்டேங்குது?” என்று சராசரி தகப்பனாக மகனது பாதுகாப்பு குறித்து கவலையுடன் உரைத்தார்.

சாந்தினி அதைக் கேட்டவர் பெருமூச்சு விட்டபடி “நீங்களோ நானோ சொன்னா அவன் காதுல போட்டுக்க மாட்டாங்க… அவனை அவன் போக்குல விடுங்க” என்று சொல்லிவிட்டார்.

விஸ்வநாதனோ மகனா, நண்பனா என்ற தர்மச்சங்கடத்தில் சிக்கிக் கொண்டார்.

அவரது நினைவு பின்னோக்கி செல்ல ஆரம்பித்தது. அந்தக் காலகட்டத்தில் விஸ்வநாதனும் சந்திரசேகரும் இணைபிரியாத நண்பர்கள். பிள்ளைப்பருவத்தில் ஒன்றாய் கல்விச்சாலையில் கால் பதித்த போதும் சரி, இளம்பருவத்தில் தொழிலில் அடியெடுத்து வைத்தபோதும் சரி அவர்களின் ஒற்றுமை அனைவரையும் வியப்படைய வைத்தது.

அவர்களின் தந்தையரும் ஆர்.எஸ் கெமிக்கல் நிறுமத்தை நிறுவியவர்களுமான ராமமூர்த்தியும் சங்கரராமனும் தமது புதல்வர்களின் இந்த ஒற்றுமை காலம் முழுவதும் நீடிக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்வர் பெருமிதத்துடன். இருவரும் தந்தையர்களுடன் சேர்ந்து தொழிலை நல்லமுறையில் நிர்வகித்து வந்தனர். ஒரு கட்டத்தில் இளைய தலைமுறைக்கு வழிவிட்டு பெரியவர்கள் இருவரும் வெறும் பங்குதாரர்களாகவே இருந்துகொள்ள நிர்வாகப்பொறுப்பை விஸ்வநாதனும் சந்திரசேகரும் சேர்ந்து பார்த்துக் கொண்டனர்.

அக்காலக் கட்டத்தில் தான் சந்திரசேகருக்கு சஞ்சீவினி மீது காதல் மலர்ந்தது. விஸ்வநாதனுக்கும் இது தெரியுமென்றாலும் அப்போது அவர் படித்துக் கொண்டிருந்ததால் நண்பரை சஞ்சீவினியின் படிப்பு முடியும் வரை காத்திருக்கும் படி அறிவுறுத்தியவர் தனது பெற்றோர் பார்த்து வைத்த சாந்தினியை மணமுடித்து இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்தார்.

விஸ்வநாதனுக்கும் சாந்தினிக்கும் தேவ் பிறந்து அவனுக்கு ஐந்து வயதான சமயத்தில் தான் சஞ்சீவினிக்கும் சந்திரசேகருக்கும் திருமணம் முடிந்தது. இருவரது வாழ்க்கையும் நல்லபடி போய் கொண்டிருந்த சமயத்தில் தான் சித்தியின் மறைவுக்குப் பின்னர் ஆதரவற்று நின்ற மந்தாகினியையும் ருத்ராவையும் சஞ்சீவினி தன்னுடன் அழைத்து வந்தார். சஞ்சீவினியின் வீட்டில் அவர்கள் இருப்பது சரிவராது என்பதால் அலமேலு தன்னுடன் அழைத்துச் சென்றுவிட அச்சமயத்தில் தான் ஒரு நாள் கண்ணீரும் கம்பலையுமாக வினாயகமூர்த்தி சேகர் வில்லாவுக்குள் நுழைந்தார்.

தனது முதலைக்கண்ணீரால் சஞ்சீவினியை ஏமாற்றியவர் ஆர்.எஸ் கெமிக்கல் நிறுவனத்தில் மேலாளராக பணியமர்த்தப் பட்டார். அவரது கண்ணை உறுத்திய முதல் விஷயம், விஸ்வநாதன் மற்றும் சந்திரசேகரின் ஒற்றுமை. அது ஏனோ வினாயகமூர்த்திக்கு பிடிக்கவே இல்லை.

அந்த நேரத்தில் எல்லா விஷயத்திலும் ஒத்தக் கருத்தினராய் இருந்த சந்திரசேகருக்கும் விஸ்வநாதனுக்கும் ஒரு விஷயத்தில் கருத்துவேறுபாடு வந்தது. அதுவே அவர்களை நிரந்தரமாகப் பிரித்துவிட்டது.

ஆர்.எஸ். கெமிக்கல் நிறுமமானது டைட்டானியம் டை ஆக்சைடை உற்பத்தி செய்யும் பெரும் நிறுமங்களில் ஒன்று. அதன் தொழிற்சாலைக்கென தாதுப்பொருட்களைப் பிரித்தெடுக்கும் நிறுமத்தை அவர்கள் விலைக்கு வாங்கியிருந்த சமயத்தில் அதற்கான ஏலம் தொடர்பான கோப்புகளை அரசுக்கு அனுப்புவது போன்ற பணிகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தவர் வினாயகமூர்த்தியே.

அதற்கான உரிமம் அவர்களின் நிறுமத்திற்கு கிடைத்ததும் தாதுப்பொருட்கள் நிறைந்த இடத்தை கையகப்படுத்தும் போது வினாயகமூர்த்தியின் குறுக்குப்புத்தியின் விளைவால் அப்பகுதி மக்கள் நிறைய பேர் தங்களின் வாழ்விடங்களை இழந்த செய்தி விஸ்வநாதனுக்குத் தெரியவந்தது.

அது குறித்து வினாயகமூர்த்தியைக் கேட்க அவரோ சந்திரசேகரின் ஆணைப்படியே தான் இவ்வாறு செய்ததாகச் சாதாரணமாகக் கூறிவிட்டார். அவரது இப்பதில் விஸ்வநாதனைச் சினம் கொள்ள செய்யவே நேரடியாக இது குறித்து சந்திரசேகரிடம் ஆவேசத்துடன் வினவினார் விஸ்வநாதன்.

“நமக்கு கவர்மெண்ட் அப்ரூவல் குடுத்த இடத்தைத் தாண்டி ஏன் லேண்டை கையகப்படுத்தச் சொன்ன சந்துரு? அந்த ஊர் மக்கள் பாவம்டா… வாழ வழியில்லாம அழுறதைப் பார்க்க உனக்கு கஷ்டமா இல்லையா?”

“என்ன பேசுற விஸ்வா நீ? பிசினஸ்னு வந்துட்டா இலாபம் நஷ்டம் மட்டும் தான் கண்ணுக்குத் தெரியணுமே தவிர பாவம் புண்ணியம்லாம் பார்க்க கூடாது… அங்கே கிடைக்கிற மினரல்ஸ் குவாலிட்டியானது விஸ்வா… இந்த நேரத்துல இடத்தை வளைச்சுப் போட்டா தான் உண்டு”

“என்னால இதுக்கு சம்மதிக்க முடியாது சந்துரு… இலாபம் முக்கியம் தான்… ஆனா அடுத்தவங்களோட வாழ்க்கையை அழிச்சு இலாபம் சம்பாதிக்கிறது தப்புடா.. புரிஞ்சிக்கோ”

“சும்மா எனக்கு லெக்சர் குடுக்காதே விஸ்வா… உன்னோட பழைய பாடாவதி கொள்கையை ஃபாலோ பண்ணுனா வேர்ல்ட் மார்க்கெட்ல நம்மளால நல்ல இடத்தைப் பிடிக்க முடியாது.. இந்த விஷயத்துல என்னோட டிசிசன் இது தான்” என்று சந்திரசேகர் பிடிவாதமாக உரைக்க அதன் பின் நடக்கக் கூடாத பல அனர்த்தங்கள் நடந்தன.

வினாயகமூர்த்தி சந்திரசேகரை விஸ்வநாதனுக்கு எதிராகத் திருப்பிவிடுவதில் மும்முரமானவர் அவர் இருந்தால் ஆர்.எஸ் கெமிக்கல் நிறுமம் இலாபம் ஈட்டுவது முடியாதக் காரணம் என்று வேப்பிலை அடித்து சந்திரசேகர் மனதில் நஞ்சைக் கலந்தார்.

அதோடு விஸ்வநாதன் அறியாவண்ணம் அவரிடம் பங்குமாற்றத்துக்குச் சம்மதிப்பதாக ஒரு பத்திரத்தில் கையெழுத்து வாங்கியவர் சூட்டோடு சூடாக அந்தப் பங்குகள் அனைத்தையும் சந்திரசேகரின் பெயருக்கு மாற்றினார். இதிலும் அவரது நரிப்புத்தி காரணத்தோடு தான் வேலை செய்தது.

பங்குகளை தனது பெயருக்கு வினாயகமூர்த்தி மாற்றியிருந்தார் என்றால் கட்டாயம் விஸ்வநாதன் சும்மா விடமாட்டார். அதனாலேயே சந்திரசேகரின் பெயருக்கு மாற்றம் செய்ய விஸ்வநாதன் தனது முதுகில் குத்தியது தனது நண்பன் தான் என்று அறிந்து உடைந்து போனார். சந்திரசேகர் அப்போது வெற்றிக்களிப்பில் இருந்ததால் அவரது கண்ணுக்கு விஸ்வநாதன் ஏமாளியைப் போல தோற்றமளிக்க அவரை கறிவேப்பிலையாக ஒதுக்கிவிட்டு அவருடனான நட்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

அந்தத் துரோகம் ஏற்படுத்தியக் காயம் தான் விஸ்வநாதனை வி.என் கெமிக்கல் நிறுமத்தை ஆரம்பிக்க வைத்தது. அவர்களுக்குச் சொந்தமாக இருந்த துணி ஏற்றுமதி தொழிலோடு இதையும் அவர் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார். ராமமூர்த்தியின் மறைவுக்குச் சென்றபோது கூட சஞ்சீவினியிடம் மட்டும் துக்கம் விசாரித்துவிட்டுக் கிளம்பிவிட்டார். காலப்போக்கில் சந்திரசேகரின் துரோகத்தை அவர் மறந்துவிட்டார். ஆனால் இன்று வரை அவரிடம் எவ்வித உறவும் வைத்துக்கொள்ளவில்லை.

அதன் பின் தேவ் வி.என் கெமிக்கல் நிறுமத்தின் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றதிலிருந்து விஸ்வநாதன் அதன் பக்கம் தனது கண்ணைக் கூட திருப்பவில்லை. எல்லாவற்றையும் மகன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை அவருக்கு. இது நாள் வரையில் அவரது நம்பிக்கையை அவனும் காப்பாற்றினான் தான். ஆனால் சமீபகாலங்களில் அவன் ஆர்.எஸ் கெமிக்கலின் பங்குகளை வாங்குவதில் தீவிரம் காட்டுவது தான் விஸ்வநாதனின் கவலைக்கு முக்கிய காரணம்.

மகன் பழிவாங்கப் போவதாகச் சொல்லும் சந்திரசேகர் ஒரு காலத்தில் அவரது உயிர்நண்பர். அதோடு வினாயகமூர்த்தியின் குள்ளநரித்தனம் வேறு விஸ்வநாதனுக்கு மகனைப் பற்றிய கவலையை அதிகரித்தது. இதில் தந்தையும் அவனுக்கு கூட்டு என்பதால் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தலையைப் பிடித்தபடி அமர்ந்துவிட்டார்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛