🌞 மதி 11 🌛


மரபியல் விதிகளின் படி ஆண் குழந்தைக்கு XY குரோமோசோம்களும், பெண் குழந்தைக்கு XX குரோமோசோம்களும் இருக்கும். இதற்கு மாறாக XXX, XXY, X0 என்று பதினான்கு வேறுபட்ட வகைகளில் அமைய வாய்ப்புள்ளது (கோபி ஷங்கர்- சிருஷ்டி அமைப்பு)


அஸ்மிதா ஓவிய வகுப்பு நடக்கும் அறையின் வெளி ஜன்னலோரம் நின்று கொண்டாள். துளி நிறுவனத்தின் அனைத்து அறைகளுமே பெரிய ஜன்னலுடன் தான் இருக்கும். அதன் கைப்பிடிச்சுவரில் அமர்ந்தவண்ணம் ஜெய் உண்மையாகவே ஓவியம் கற்பிக்கத் தான் வந்தானா என்று நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள்.


ஜெய் இதைக் கவனியாதவனாய் உள்ளே சென்றவன் அங்கிருந்த சிறுமிகளிடம், தான் அவர்களின் புதிய ஓவிய ஆசிரியன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். அவர்களில் ஒரு ஏழு வயது வாண்டு “உங்களுக்கு மிக்கி மவுஸ் வரையத் தெரியுமா அண்ணா?” என்று இந்த உலகிலேயே அது தான் வரைவதற்குக் கடினமான விஷயம் என்பது போலக் கேட்க ஜெய் புன்னகையுடன் ஆமென்று தலையசைத்தான்.


இன்னும் சில குழந்தைகள் குழந்தைப்பருவத்திற்கே உரித்தான கேள்விகளைக் கேட்டு அவனை மூழ்கடிக்க அனைத்துக்கும் முகம் மாறாது பொறுமையுடன் அதே சமயம் வாஞ்சை நிறைந்த குரலில் கூறியவனின் மீது அஸ்மிதாவுக்கு முன்பிருந்த சந்தேகம் சிறிது அகன்றது.


அடுத்து என்ன செய்கிறான் என்று வேடிக்கை பார்த்தவளுக்கு அவன் முதல் நாள் வகுப்பில் சின்ன சின்ன விஷயங்களைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பது சுவாரசியமாக இருக்கவே அவளும் ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்தாள்.


பின்னர் உள்ளே சென்று பார்த்தால் என்ன என்ற ஆர்வம் தலை தூக்க ஜன்னல் பக்கவாட்டுச்சுவரிலிருந்து இறங்கியவள் அந்த அறைக்குள் காலடி எடுத்து வைத்தாள்.


“க்கும்” என்று தொண்டையைச் செறுமிய சத்தத்தில் திரும்பிய ஜெய் அவளை அங்கே எதிர்பார்க்காததால் அதிர்ச்சியில் கையில் வைத்திருந்த சாக்பீசைக் கீழே தவறவிட அஸ்மிதா அதை எடுத்துக் கொடுத்துவிட்டு
“எதுக்கு இவ்ளோ ஷாக் ஆகிற நீ?” என்று சாதாரணமாக் கேட்டுவிட்டுக் குழந்தைகளிடம் திரும்பினாள்.


“ஹலோ கிட்ஸ்! உங்க நியூ டிராயிங் மாஸ்டர் எப்பிடி? நல்லா சொல்லிக் குடுக்கிறாரா?” என்று கேட்க அனைவரும் ஆமென்று தலையாட்டினர்.


“உங்க டிராயிங் நோட்டைக் காட்டுங்க… அக்கா செக் பண்ணிட்டு உங்களோட மாஸ்டர் எப்பிடி சொல்லிக் குடுத்திருக்காருனு தெரிஞ்சிக்கிறேன்”


அவள் அப்படி சொல்லிவிட்டு அவர்களின் நடுவில் சென்று அமர்ந்து கொள்ள அனைவரும் அஸ்மிதாவைச் சுற்றிக் குழுமினர். அவள் ஒவ்வொரு நோட்டிலும் இருந்த பட்டாம்பூச்சி, சூரியனுடன் கூடிய மலைமுகடு, ஓட்டுவீடு என அவர்களின் கைவண்ணத்தைப் பார்த்துக் கொண்டிருக்க சிறுமிகள் அவளிடம் எவ்வித தயக்கமுமின்றி அருகில் அமர்ந்தபடி, அவள் தோளில் சாய்ந்தபடி, இன்னும் சிலர் கழுத்தைக் கட்டிக் கொண்டு தங்களின் படைப்பாற்றலை அவர்களின் பிரியத்துக்குரிய ‘அஸ்மி அக்காவுக்கு’ காட்டிக் கொண்டிருந்தனர்.


அஸ்மிதாவும் “மயூரி எவ்ளோ அழகா சன்ஃப்ளவர் வரைஞ்சிருக்கா?” என்று கண்ணை விரித்துப் பேசியதாகட்டும் “உமாவோட ரிவர்ல எவ்ளோ மீன் பாருங்க” என்று அவர்களிடம் காட்டி குதூகலித்தது ஆகட்டும் குழந்தைகளிடம் சிரித்த முகத்துடன் பேச, அவளின் இந்த அவதாரம் ஜெய்கு புதிதாகத் தெரிந்தது.


எப்போதும் கோபத்துடனே சந்தித்து பழகியவளை இன்று சிரித்த முகமாய் காண்பது வித்தியாசமாய் தோண அவனை அறியாது அவளைப் பார்த்தவண்ணம் நின்றிருந்தவனைப் பார்த்து பக்கென்று நகைத்தாள் அஸ்மிதா.


ஏன் தன்னைப் பார்த்து இப்படி அடக்கமாட்டாமல் சிரிக்கிறாள் இவள் என்று ஜெய் குழம்பிப் போக, அஸ்மிதா வயிற்றைப் பிடித்தபடி எழுந்தவள் ஜெய்யிடம் வந்து ஒரு நோட்டை காட்ட அதில் ஒரு சின்ன வட்டம் அதன் கீழே ஒரு பெரிய வட்டம், அதன் இருபுறமும் கோடுகள் நீட்டியிருக்க, கீழேயும் இரண்டு கோடுகள் என ஏதோ ஒரு உருவம் வரையப்பட்டு அதில் ‘ஜெய் அண்ணா’ என்று எழுதியிருந்தாள் ஒரு சிறுமி.


அதைப் பார்த்ததும் அவனுக்கும் சிரிப்பு வந்துவிட, அஸ்மிதா “இதைப் பார்த்தா சிரிப்பு வருமா வராதா? உன்னோட இமேஜ் டோட்டல் டேமேஜ் ஆயிடுச்சு போ” என்று நகைக்க


“நீங்க சிரிக்கிறப்போ நல்லா இருக்கிறிங்க… எப்போவுமே இப்பிடி சிரிச்சிட்டே இருந்தா இன்னும் நல்லா இருக்கும்” என்று சட்டென்று வாய்விட்டு உளறியவன் அவள் திட்டிவிடுவாளோ என்ற பயத்தில் அதற்கு மேல் அவளது முகத்தைப் பார்க்கத் தயங்கியவனாய் அவள் கையிலிருந்த நோட்டை வாங்கிக் கொண்டான்.


“அண்ணா இதை ஒரு போட்டோ எடுத்துக்கிறேன் குட்டிமா” என்று வரைந்த சிறுமியிடம் கேட்க அவள் உற்சாகத்துடன் தலையாட்டவே அவள் வரைந்த அவனது ஓவியம் புகைப்படமாக அவனது அலைபேசியில் அடங்கியது.
அஸ்மிதா அவளது சிரிப்பைப் பற்றி அவன் சொன்னதைக் கேட்டு அமைதியானவள் அவன் புகைப்படம் எடுத்து முடித்ததும்


“ஓகே கிட்ஸ்! போய் சாப்பிடுங்க… டைம் ஆச்சு பாருங்க” என்று சொல்லவும் அந்தச் சிறுமியர் பட்டாளம் தத்தம் ஓவியங்களைப் பற்றி வளவளத்தபடி வெளியேறியது.


அஸ்மிதா இன்னும் தன்னருகில் நிற்பதைக் கண்டவன் இப்போது எப்படி சமாளிப்பது என்று பதற்றத்துடன் அவளிடம் “மேடம்… நா.. நான் சும்மா தான் அப்பிடி சொன்னேன்… நீ… நீ.. நீங்க தப்பா நினைச்சுக்காதிங்க” என்று சொல்லி முடிப்பதற்குள் அஸ்மிதா நிறுத்துமாறு சைகை காட்டிவிட்டு


“நான் என்ன உன்னைக் கடிச்சா முழுங்க போறேன்? சிரிக்கிறப்போ எல்லாரோட முகமும் பார்க்க அழகா தான் இருக்கும்… நீ உண்மையைத் தான் சொல்லிருக்க… அதனால நான் உன்னைத் திட்டமாட்டேன்” என்று சொல்லவும் தான் அவனுக்கு மூச்சு வந்தது.


“ரொம்ப தேங்க்ஸ் மேடம்” என்று கூறவும்


“அந்த மேடமை அடிக்கடி யூஸ் பண்ணாதே மேன்… என்னமோ வயசான மாதிரி ஃபீல் ஆகுது” என்று அவள் சலிக்கவும்
“ஒரு மரியாதைக்கு….” என்று இழுத்தவனிடம் அதெல்லாம் தேவை இல்லை என்றவள் தன்னை அஸ்மிதா என்றே அழைக்கும் படி சொல்லிவிட்டு அவனுடன் பேசியபடி அலுவலக அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.


இஷானி விறுவிறுவென்று அலுவலக அறையை விட்டு வெளியேறியவள் துளி வளாகத்தின் வலதுப்பக்கக்கோடியில் உள்ள நடன வகுப்பு எடுக்கும் அறையை நோக்கிச் செல்ல ருத்ராவும் அவளது நடனவகுப்பைக் காணும் ஆவலுடன் பின் தொடர்ந்தான்.


நீண்ட விஸ்தாரமான பெரிய ஜன்னல்களுடன் நல்ல வெளிச்சமும் காற்றோட்டமுமாய் இருந்த அந்த அறையில் பத்தும் பன்னிரண்டுமாய் வயதிருக்கும் சிறுமிகள் கலகலப்பாய் பேசிக்கொண்டிருந்தவர்கள் இஷானி நுழைந்ததும் “குட்மார்னிங் இஷிக்கா!” என்று கோரசாய்ப் பாட அவர்களை நோக்கிப் புன்னகைத்தவாறு


“பரவால்லயே! இன்னைக்கு எல்லாரும் டைமுக்கு வந்திருக்கிங்க? ஸ்வாதி கூட வந்துட்டாளே” என்று கொஞ்சுமொழியில் மிழற்ற அதை வெளியே இருந்து கேட்டுக் கொண்டிருந்த ருத்ராவுக்குச் சிரிப்பு தான் வந்தது.


இவ்வளவு நேரம் இவள் பேசிய பேச்சு என்ன, இப்போது சிறுமிகளுக்கு நிகராய் பேசுவது என்ன என்று எண்ணி நகைத்தவன் “பார்ப்போம்! இந்த நாட்டியத்தாரகை அப்பிடி என்ன பிரமாதமா டான்ஸ் கத்துக் குடுக்கப் போறாங்கனு” என்று காத்திருந்தான்.


அதற்குள் உள்ளே சலசலப்பு அடங்கி சதங்கையொலி கேட்க ஆரம்பித்தது. இஷானி அபிநயம் பிடித்து ஆடிக் கொண்டிருக்க அந்தச் சின்னஞ்சிறுமிகளும் அவளுக்கு ஈடாய் அருமையாய் முகபாவனைகளை மாற்றி ஆடினர்.


ருத்ராவிற்கு இஷானி ஆடியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் குழந்தைப்பருவத்தைத் தாண்டாத இந்தச் சிறுமிகளுக்கு முகபாவம் இவ்வளவு அழகாய் வருகிறதே என்பது அவனது ஆச்சரியமே. நடன ஆசிரியை அவ்வளவு கெட்டிக்காரி போல என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவனுக்கு ஒரு முறை சஞ்சீவினி பேச்சுவாக்கில் இஷானி பதினைந்தாம் வயதிலிருந்து நடனம் பயில ஆரம்பித்துவிட்டதாகச் சொன்னது அப்போது தான் நினைவு வந்தது.
வெளியே ஒருவன் நிற்கிறான் என்ற உணர்வின்றி அவள் வழக்கம் போல ஆடிக் கொண்டிருக்க இப்போதும் அவளது மூக்குத்தி அவளது ஒவ்வொரு அசைவுக்கும் ஜொலித்து வெட்டியது.


முகபாவத்தில் கோபம், தேடல், வருத்தம், இயலாமை, குறும்பு என அனைத்தையும் கொட்டி அவள் ஆடியவிதத்தில் மெய் மறந்து நின்றவனின் தோளை யாரோ தட்ட


“ப்ச்! யாருடா அது? கொஞ்சநேரம் மனுசன் நிம்மதியா இருந்தா உடனே மூக்கு வேர்த்துடுமே” என்று எரிச்சலுடன் திரும்பியவன் அங்கே ஜெய்யுடன் நின்றிருந்த அஸ்மிதாவைக் கண்டதும் சிரித்துச் சமாளிக்க முயல
“இந்தியன் பீனல் கோட் படி ஒரு பொண்ணை இப்பிடி பார்த்துட்டே இருக்கிறது கூட பெரிய அஃபென்ஸ் தெரியுமா?” என்று அமர்த்தலாகக் கேட்டவளின் காதைத் திருகினான் ருத்ரா.


“நீ ஒரு நடமாடும் ஐ.பி.சினு என் கிட்டவே ப்ரூவ் பண்ணுறியா?” என்று சொல்லிக் கொண்டே காதைத் திருகவும் ஜெய் அதைக் கண்டு நமட்டுச்சிரிப்புடன் நிற்க


“இப்போ எதுக்கு கெக்கெபிக்கேனு சிரிக்கிற மேன் நீ?” என்று அவனிடம் சீறிவிட்டு, தனது காதைப் பற்றியிருக்கும் ருத்ராவின் கையைத் தட்டிவிட்டாள்.


அவளது சீற்றத்தில் ஜெய் கப்சிப்பாகி விட, ருத்ரா “பார்க்கிறதுக்கும் வெறிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு அஸ்மி… நான் சும்மா அவளோட டான்ஸைப் பார்த்தேன்… நாட் பேட்… சுமாரா ஆடுறா உன் சிஸ்டர்” என்று சொல்லிவிட


“ஆஹா! சுமாரா ஆடுறவளைத் தான் இவ்ளோ நேரம் சைட் அடிச்சிங்களா மாமா?” என்று நக்கலாகக் கேட்டவளிடம்
“டான்ஸ் சுமார் தான்… பட் உன் சிஸ்டர் ரொம்ப பிரிட்டி… விட்டா நான் வாழ்க்கை முழுக்க அந்த அழகான முகத்தைப் பார்த்துட்டே இருப்பேன்” என்று நாடகவசனம் போல பேசிக் காட்டியவன் அவன் பேசியதைக் கேட்டபடி பின்னே கடுகடுப்புடன் வந்து நின்ற இஷானியைக் கவனிக்கவில்லை.


அஸ்மிதாவும் ஜெய்யும் மறுபடியும் சிரிப்பை அடக்க முயல ருத்ரா ஏன் இவர்கள் இப்படி நகைக்கிறார்கள் என்ற யோசனையுடன் திரும்பிப் பார்த்தவன் அங்கே கடுப்புடன் நின்று கொண்டிருந்தவளைக் கண்டதும் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை.


“அப்போ நான் பேசுனதை ஃபுல்லா கேட்டுட்டியா இஷி?” என்று அப்பாவியாய்க் கேட்டவனை பட்பட்டென்று அடிக்க ஆரம்பித்த இஷானியை அவனால் தடுக்க முடியவில்லை. சொல்லப் போனால் அவன் தடுக்க முயலவில்லை.
அவனுக்குத் தான் அடிப்பது வலிக்காது போல என்று உணர்ந்தவள் அடிப்பதை நிறுத்திவிட அஸ்மிதா அவளைச் சாந்தப்படுத்தியவள்


“விடு இஷி! நம்ம மாமா தானே” என்று சொன்னவளை முறைத்த இஷானி
“நம்ம மாமா இல்லடி… உன்னோட மாமா மட்டும் தான்… இனிமே அப்பிடி சொல்லாதே” என்று சொல்லிவிட்டு நடனவகுப்பு முடிந்துவிட்டதாக அறிவித்தவள் அங்கிருந்து அகல ருத்ரா செல்பவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அஸ்மிதா கேலியுடன் அவன் தோளைத் தட்டியவள் “மாமா! அவ போயிட்டா… சைட் அடிங்க.. ஆனா இவ்ளோ அப்பட்டமா சைட் அடிக்காதிங்க… சகிக்கல” என்று கிண்டல் செய்யவும் மீண்டும் அவளது காதுமடல் அவன் விரலால் திருக்கப்பட்டது.


“ஓவரா கலாய்க்காதே… அப்போ இருந்து இப்போ வரைக்கும் இந்த வாய் மட்டும் உனக்கு குறையவே இல்லை”
“ஐயோ காது வலிக்குது! என்னைக் காப்பாத்த யாருமே இல்லையா? ஏய் ஜெய்! என்ன மேன் சினிமா பார்க்கிற மாதிரி நிக்கிற? பனைமரத்துக்குப் பாதி வளர்ந்திருக்கிறியே… என் காதைக் காப்பாத்துயா”


“சார்! பாவம் விட்டிருங்களேன்… ரொம்ப வலிக்குது போல” என்று கண்ணைச் சுருக்கிப் பரிதாபத்துடன் கேட்ட ஜெய்யை புன்சிரிப்புடன் நோக்கிய ருத்ரா


“உங்களுக்குத் தெரியாது சார்! இவ நல்லா நடிப்பா… இப்போ கூட பொய் தான் சொல்லுறா” என்று உரைத்துவிட்டுக் காதை விடுவித்தான்.


“நீங்க ரெண்டு பேரும் ரிலேட்டிவ்ஸா?” – ஜெய்.


“ஆமா! நாங்க ரெண்டு பேர் மட்டும் இல்லை… கொஞ்சநேரத்துக்கு முன்னாடி ஒரு லேடி ராக் என்னை பஞ்ச் பண்ணிட்டுப் போனாளே அவளும் தான்… இந்த ரெண்டு வினோதமும் என் அக்காவோட சீமந்தபுத்திரிகள்” – ருத்ரா.


“ஓகே ஓகே! நாங்க வினோதமாவே இருந்துட்டுப் போறோம்… இன்னும் கொஞ்சநேரத்துல காமன் பிரேக்ஃபாஸ்ட் ரெடியாயிடும்… வழக்கமா நானும் இஷியும் சண்டே இங்கே தான் குட்டிப்பசங்களோட சேர்ந்து சாப்பிடுவோம்… நீங்க ரெண்டு பேரும் வர்றிங்களா?” என்று கேட்ட அஸ்மிதாவிடம் தனக்கு வேலை இருக்கிறது, அடுத்த வாரம் கலந்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு ஜெய் கிளம்ப, ருத்ராவும் அவளும் சாப்பிடும் அறையை நோக்கிச் சென்றனர்.


அங்கே குழந்தைகளும், சிறுமிகளும் வரிசையாய் அமர்ந்திருக்க பணியாட்கள் பரிமாறிக் கொண்டிருந்தனர். இஷானி ஏற்கெனவே குழந்தைகளுடன் அமர்ந்து விட ருத்ராவும் அஸ்மிதாவும் அவளுக்கு எதிரே அமர்ந்து கொண்டனர்.
காலையுணவு இட்லி சாம்பார் தான். ஆனால் அந்தக் குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிடும் உணர்வே தனி. இதை எப்போதுமே இஷானியும் அஸ்மிதாவும் தவறவிடுவதில்லை.


ருத்ராவும் இம்முறை கலந்து கொள்ள அஸ்மிதா கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடங்களுக்குப் பின்னர் அவளது ருத்ரா மாமாவுடன் சேர்ந்து உணவு அருந்த ஆரம்பித்தாள்.


இடையிடையே அவனது பார்வை எதிரில் சிறுமிகளிடம் பேசி சிரித்தபடி அவர்களுக்கு ஊட்டிவிட்டவளைத் தழுவி விட்டுத் திரும்ப


“சாப்பிட்டிட்டு பொறுமையா சைட் அடிங்க மாமா” என்று கேலி செய்தவள் அவனுக்குப் புரையேறவும் தலையைத் தட்டிக் கொடுத்துவிட்டுத் தண்ணீரை எடுத்து நீட்டினாள்.


எதிர்புறம் இருந்து இவையனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த இஷானிக்குத் தனது சகோதரியும் தானும் சேர்ந்து இருக்கும் பொன்னான தருணங்களை ருத்ரா வேண்டுமென்றே கலைத்துவிட்டான் என்ற கோபம். அவனுடன் சாதாரணமாகப் பேச ஆரம்பித்ததில் இருந்து அஸ்மிதா தன்னை விட அவனுடன் நெருக்கமாக இருப்பதைப் போல இஷானிக்குத் தோணவே, சகோதரியின் மீது உரிமையுணர்வு தோன்றியது அவளுக்கு. ஆனால் வாய் விட்டு இதைச் சொல்ல முடியவில்லை அவளால்.


தனது சகோதரியை தன்னிடம் இருந்து ருத்ரா விலக்கி வைக்கிறான் என்ற கடுப்பில் அவனது பார்வை ஒவ்வொரு முறை அவள் புறம் திரும்பும் போதும் முறைத்துவைத்தாள் இஷானி.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛