🌞மதி 63🌛 (Pre – final)

தாது மணல் ஆலைகளுக்குச் சுரங்கம் அமைக்கும் உரிமையை மத்திய அரசு தான் வழங்க முடியும். குத்தகை உரிமையை மட்டுமே மாநில அரசு வழங்கும். சுரங்க உரிமை (Mining license), சுரங்கம் அமைக்கும் திட்டங்களை (Mining plans) இந்தியன் பீரோ ஆப் மைன்ஸ் என்ற மத்திய அரசுத்துறை மூலம் வழங்கப்படும்.

அதிகாலையில் கண் விழித்த ஜெயதேவ் தன்னருகில் துயில் கொள்ளும் மனைவியை ஒரு கணம் நோக்கியவன் அவளது நெற்றியில் முத்தமிட்டான் மென்மையாக. பின்னர் வழக்கம் போல நடைப்பயிற்சிக்குத் தயாரானான்.

கீழே தோட்டத்தில் நடக்கும் போதும் பின்னர் தாயார் கொடுத்த காபியை அருந்தும் போதும் அவன் உதட்டில் உறைந்திருந்த புன்னகை வீட்டின் பெரியவர்களின் உள்ளத்தைக் குளிர்வித்தது.

அதே நேரம் அஸ்மிதாவும் அதே புன்னகையுடன் கீழே வரவும் சாந்தினி அவள் கரங்களில் காபி கோப்பையைத் திணிக்க அதை வாங்கியவளின் முகச்சிவப்பு ஆயிரம் கதைகளைச் சொல்ல சாந்தினி புன்னகையுடன் மருமகளை நோக்கியவர் கணவரிடம் கண்ஜாடையில் மகனையும் மருமகளையும் சுட்டிக்காட்ட அவர் மனைவியின் ஜாடைக்கான அர்த்தத்தைப் புரிந்து கொண்டார்.

அனைவரைக் காட்டிலும் நிம்மதியுற்றவர் சங்கரராமன் தான். தனது பேரனின் வாழ்க்கை மலர வேண்டுமென்று நினைத்து தன் நண்பனின் பேத்திக்கு அநியாயம் செய்துவிட்டோமோ என்று சில நேரம் அவருக்குத் தோணுவதுண்டு. இனி அந்தக் கலக்கம் அவருக்கு இல்லை என்பதால் உண்டான நிம்மதி தான் அது.

இதற்கு காரணமானவர்களின் விழிகள் மௌனபாஷையில் ஆயிரம் கதைகளைப் பேசிக் கொண்டிருந்தது. அஸ்மிதா கண்ணால் தன்னவனை ரசித்தபடி மாமியாரிடம் காபி கப்பை நீட்டியவள்

“ஆன்ட்டி! நான் இன்னைக்கு இஷியைப் பார்க்கப் போலாம்னு இருக்கேன்… போயிட்டுச் சீக்கிரமா வந்துடுவேன்” என்று செல்லம் கொஞ்சியபடி பேச அவளின் பேச்சில் இடையிட்டது ஜெயதேவ்வின் தொண்டைச்செறுமல்.

என்னவென்று அவனை நோக்கியவளை ஏறிட்டவன் “இன்னைக்கு மண்டே… சோ ஆபிஸ் வந்துட்டு ஈவினிங் போய்க்கலாம்” என்று கட்டளையிட்டுவிட்டு மாடிப்படிகளில் ஏற அஸ்மிதா அவனது கட்டளையிடும் தொனியில் இவ்வளவு நேரம் இருந்த மகிழ்ச்சியான மனநிலை கலைய கடுப்புடன் அவனைத் தொடர்ந்தாள்.

விறுவிறுவென்று அறைக்குள் நுழைந்தவள் “நான் இன்னைக்கு மார்னிங் இஷிய பார்க்க வர்றேனு சொல்லிட்டேன் ஜெய்… இப்போ பேச்சு மாறுனா நல்லாவா இருக்கும்?” என்று கேட்க ஜெயதேவ் அவளிடம் போனை நீட்டி

“ஈவினிங் வர்றேனு சொல்லிடு அஸ்மி! இன்னைக்கு இம்ப்பார்டெண்ட் மீட்டிங் இருக்கு… சோ யூ ஹேவ் டு அட்டெண்ட்” என்று மீண்டும் கட்டளையிடும் தொனியில் பேச அவள் எரிச்சலுற்றாள்.

“அதுக்கு ஏன் உன் போன்ல சொல்லணும்? என் கிட்ட போன் இல்லையா? இல்ல என் போன்ல பேலன்ஸ் இல்லையா? போடா! என்னால இன்னைக்கு ஆபிஸ்கு வர முடியாது” என்று சொல்லிவிட்டு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள்.

ஜெயதேவ் அதற்கு அசராமல் “நீ எப்பிடி வராம இருக்கேனு நானும் பார்க்கிறேன் மை டியர் ஒய்ஃப்… உனக்கு ஹாஃப் அன் ஹவர் டைம்! அதுக்குள்ள நீ ஆபிஸ்கு ரெடியாகுற… இல்லனா இதே டிரஸ்ஸோட கார்ல தூக்கிப் போட்டுக் கொண்டு போயிடுவேன்” என்று பிடிவாதக்குரலில் சொல்லிவிட்டு குளியலறைக்குள் புகுந்துகொள்ள அஸ்மிதா பற்களை நறநறவென்று கடித்தவள் டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டாள்.

கலைந்த கூந்தலில் வெறுமையான முகத்துடன் அவள் இயற்கையிலேயே அழகி தான். ஆனால் அலுவலகத்துக்கு இந்தக் கோலத்தில் செல்வது உசிதம் இல்லையே! தன்னை அனாயசமாக மிரட்டிச் சென்றவனை கடுப்புடன் மனதிற்குள் திட்டிக் கொண்டவள்

“ஹலோ! எனக்கு அரைமணி நேரம் டைம் குடுத்துட்டு நீ இப்பிடி பொறுமையா நீராடுனா என்னடா அர்த்தம்? நான் எப்பிடி ரெடியாகுறது?” என்று குளியலறைக்கதவின் அருகில் சென்று நின்றவள் கத்த ஆரம்பிக்கவும் சில நிமிடங்களில் தண்ணீரின் சத்தம் நிற்க அடுத்தச் சில நிமிடங்களில் ஜெயதேவ் வெளியே வர விருட்டென்று குளியலறைக்குள் புகுந்து கொண்டாள் அஸ்மிதா.

அதன் பின்னர் அவள் வழக்கம் போல அவனிடம் சண்டை போட்டபடி அலுவலகத்துக்குக் கிளம்பிவிட்டாள்.

அதே நேரம் இவர்களின் சந்தோசத்துக்கு உலை வைக்க காத்திருந்தவர் மருத்துவமனையில் நெஞ்சுவலிக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆம்! வினாயகமூர்த்தி தனது இந்நிலைக்கு யார் காரணம் என்று தெரிந்ததும் கொதித்துப் போய்விட்டார்.

சந்திரசேகர் தரப்பில் இனி தனக்கு உதவி வராது என்று தெளிவாக தெரிந்த நிலையில் அரசியல் வட்டாரங்களில் தனக்கு வேண்டியவர்கள் மூலம் முயன்றவருக்கு ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் சொன்ன அறிவுரையால் தான் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போல நடித்துக் கொண்டிருக்கிறார்.

அந்நபர் “இங்க பாருங்க அண்ணாச்சி! தலைவரு முன்ன மாதிரி இல்ல… இப்போ கட்சியே அவரு மகனோட கன்ட்ரோல்ல தான் இருக்கு… அவன் இளரத்தம்… போதாக்குறைக்கு தொழில்துறை அமைச்சர் வேற… நீங்க அரெஸ்ட் ஆன மறுநாளே அந்த அபிமன்யூ கட்சிக்கூட்டத்தைக் கூட்டுனான்.. உங்களுக்கு யாருமே உதவி பண்ண கூடாதுனு ஆர்டரே போட்டுட்டான் அண்ணாச்சி… இதுல அவன் சம்சாரம் வேற டிவி சேனல்ல வேலை பார்க்குது.. அந்தப் பொண்ணு தான் உங்கள பத்தி டாக்குமெண்ட்ரி ரெடி பண்ணுச்சு… உங்களுக்கு என்னால பண்ண முடிஞ்ச உதவி உங்களை வெளிநாட்டுக்குப் போகவைக்கிறது மட்டும் தான்… அதுக்கு நீங்க ஒரு ட்ராமா போட்டாகணும்” என்று சொல்லிவிட்டு நெஞ்சுவலி நாடகத்தை அவரிடம் விவரிக்க வினாயகமூர்த்தியும் சிறப்பாகத் தன் கதாபாத்திரத்தை நடித்து முடித்துவிட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட்டார்.

சற்று நேரத்தில் அந்த ஆளுங்கட்சி பிரமுகரின் ஆட்கள் மூலம் மருத்துவமனையிலிருந்து தப்பித்தவர் தனது பாஸ்போர்ட் மற்றும் இதர வகையறாக்களை எடுக்க சேகர்வில்லாவுக்குப் போயாக வேண்டிய கட்டாயம். இந்நேரத்தில் மந்தாகினியும் சந்திரசேகரும் வீட்டில் இருக்க மாட்டர் என்பதை அவர் நன்கு அறிவார்.

எனவே தைரியமாக ஆளுங்கட்சி பிரமுகர் ஏற்பாடு செய்த காரில் சேகர்வில்லாவில் சென்று இறங்கினார். அவர் நேரத்துக்கு அன்றைக்கு வீட்டில் காவலாளி முதற்கொண்டு அனைத்து பணியாளர்களும் விடுப்பு எடுத்திருக்க ருத்ராவின் மனைவி மட்டும் தான் வீட்டில் இருப்பாள் என்ற யோசனையுடன் வீட்டின் கேட்டை திறந்தவரின் சட்டைக்குள் உறுத்தியது பாதுகாப்புக்காக அவர் வைத்திருந்த கத்தி.

*****************

ஆர்.எஸ் கெமிக்கல்ஸ் அலுவலகம்…

அன்றையோடு தனக்கும் இந்நிறுவனத்துக்குமான உறவு முடிவடைகிறது என்பதை போர்ட் ஆப் டைரக்டர்ஸ் முன் தெளிவுப்படுத்திய ஜெயதேவ் இனி அவர்களுக்குத் தலைமை ஏற்க தகுதியானவள் அஸ்மிதாவே என்று முன்மொழிய சந்திரசேகரின் மகளாக அறியப்பட்டவளை யாரும் வேண்டாமென மறுக்கவில்லை. கூடவே சில காலங்களாக நிறும மேலாண்மையில் அவள் செலுத்தும் கவனம் அனைவரின் கண்ணிலும் படத் தான் செய்தது.

எனவே எவ்வித வாக்குவாதமுமின்றி அஸ்மிதா ஆர்.எஸ் கெமிக்கல்சின் மேலாண்மை இயக்குனராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள். சந்திரசேகருக்கு மகள் தலைமைப்பதவியில் அமர்வதில் பெருமை தான். கூடவே ஜெயதேவ்வின் பழக்க வழக்கங்கள் அனைத்தும் புதிராக இருந்த நிலை மாறி அவனது உண்மையான குணத்தை அறிந்தவர் மனம் நெகிழ்ந்து போனார்.

பார்ப்பதற்கு சற்று கடினமானவனைப் போல தோற்றமளித்தாலும் அவனும் விஸ்வநாதனைப் போலவே நியாயமானவன் என்பதில் தற்போது அவருக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. எதுவும் பேசாமல் வெறுமெனே அவன் தோளை மட்டும் தட்டிக்கொடுத்தவர் அஸ்மிதாவின் சிகையை ஆதுரத்துடன் வருடிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து அகன்றார்.

அவர் சென்றதும் அஸ்மிதா ஜெயதேவ்விடம் “ஓகே! மீட்டிங் முடிஞ்சுதுல்ல… இனிமே நான் இஷியை பார்க்க போகலாம்ல” என்று கேட்க அவன் இடவலமாய் தலையசைத்து மறுத்தான்.

அஸ்மிதா முகத்தைச் சுருக்கியவளாய் “ப்ளீஸ் ஜெய்! நான் வர்றேனு ப்ராமிஸ் பண்ணிட்டேன்டா” என்றவள் அவன் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்ச ஆரம்பிக்க ஜெயதேவ் கண்ணில் சிரிப்புடன் அவள் கரத்தைப் பற்றிக் கொண்டவன்

“போதும் போதும்! இங்க லவ்வர்பாய் அவதாரம் எடுக்கிற ஐடியா எனக்கு இல்ல” என்று கேலி செய்ய

“யூ ஆர் சோ மீன் ஜெய்… நான் மீட்டிங் முடிஞ்சு வர்றேனு சொல்லிட்டேன்.. இஷி எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பா” என்று அஸ்மிதா சொல்ல

“ஓகே கிளம்பு! பட் லஞ்சுக்கு நீ இங்க இருக்கணும்…. இன்னைக்கு இந்த ஆபிஸ்ல எனக்கு லாஸ்ட் டே… அதை நான் உன் கூட ஸ்பெண்ட் பண்ணனும்னு நினைக்கிறேன்.. ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட்” என்றவனை ஓடி வந்து கட்டிக்கொண்டவள்

“தேங்க்யூ சோ மச் ஜெய்… நான் சட்டுனு போயிட்டு சட்டுனு வந்துடுவேன்” என்று உறுதியளித்துவிட்டு தனது மொபைலை எடுத்துக் கொண்டாள்.

அவள் அங்கிருந்து வெளியேற எத்தனிக்க ஜெயதேவ்வின் மனதிற்குள் ஏதோ பிசைய ஆரம்பித்தது. இன்னும் அவள் அந்த அறையை விட்டு வெளியேறவில்லை. ஆனால் ஏதோ அவள் தொலைதூரம் செல்லப்போவதைப் போல ஏன் தோணுகிறது என கலக்கம் கொண்ட மனதுடன் நின்றவனுக்கு ஏதோ தவறாக நடக்கப் போகிறது என்பது மட்டும் புரிந்தது.

“அஸ்மி” என்று அழைத்தவன் அவள் நிற்கவும் அவளருகே சென்று அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அஸ்மிதாவுக்கு ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறான் என்ற யோசனையுடன் இருக்க ஜெயதேவ் “கவனமா இரு… உணர்ச்சிவசப்படாத… எதுவும் பிரச்சனைனா எனக்கு கால் பண்ணு” என்று மட்டும் சொல்ல அவள் வித்தியாசமாகப் பார்த்தாள்.

“எனக்கு என்ன ஆகப்போகுது ஜெய்? நீ தான் என் கூட இருக்கல்ல… நீ என்னைப் பார்த்துக்க மாட்டியா?” என்று ஒரு காலத்தில் அவன் சொன்ன அதே வார்த்தைகளை அவனிடம் மீண்டும் அவள் படிக்க வேகமாகத் தலையாட்டி ஆமென்றவனைப் பார்த்து புன்னகைத்தவள் தனது மணிக்கட்டைத் தொட்டிக் காட்டினாள்.

“இன்னும் அரைமணி நேரம் தான்… நான் இங்க வந்துடுவேன்… அப்பிடி வரலைனா நீயே என்னைத் தேடி வந்துடு… சரியா?” என்று கேட்டுத் தலை சாய்த்துப் பார்த்தவளிடம் முறுவலித்து வழியனுப்பி வைத்தான்.

அஸ்மிதா கணவனின் அன்பில் மனம் பூரித்தவாறே காரில் கிளம்பியவள் சேகர் வில்லாவின் வாயில் காவலாளி இல்லாததைக் கண்டு திகைத்தாள். காரிலிருந்து இறங்கியவள் அதன் பின்னர் தான் கவனித்தாள் வீட்டில் வேறு எந்த பணியாட்களும் அன்று வரவில்லை என்பதையே.

யோசனையுடன் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தவளை மந்தாகினியின் ஆவேசக்குரல் தான் வரவேற்றது.

“நீ பண்ணுறது தப்புண்ணா! ஆல்ரெடி நிறைய பாவம் பண்ணிட்ட… இனியாச்சும் திருந்தி வாழப் பாரு”

யாரிடம் பேசுகிறார் இவர் என்ற யோசனையுடன் ஹாலுக்குள் அடியெடுத்துவைத்தவள் அங்கே வஞ்சகம் நிறைந்த விழிகளுடன் நின்றிருந்த வினாயகமூர்த்தியைக் கண்டதும் மின்சாரத்தை தொட்டது போன்று அதிர்ந்து நின்றாள்.

தொலைகாட்சியில் அவர் நெஞ்சுவலிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தியைப் பார்த்திருந்ததால் சி.பி.ஐ காவலில் மருத்துவமனையில் இருக்கவேண்டிய நபர் இங்கே எப்படி வந்தார் என்ற யோசனையுடன் நின்றவள் அவர் என்ன தான் சொல்ல வருகிறார் என்பதை மறைந்திருந்து கேட்க முற்பட்டாள்.

“திருந்தி எங்க வாழணும் மந்தா? ஜெயிலுக்குள்ளயா? இம்பாசிபிள்… என்னோட இத்தனை வருச சாம்ராஜ்ஜியத்தை எல்லாருமா சேர்ந்து உடைச்சு தள்ளிட்டு இப்போ என்னை திருந்த சொல்லுறிங்களா? நான் ஏன் திருந்தணும்? கூடப்பிறந்தவளாச்சேனு பொறுமையா பேசிட்டிருக்கிறேன்… ஒழுங்கா என்னை போக விடு… இன்னும் ரெண்டு மணிநேரத்துல எனக்கு லண்டனுக்கு ஃப்ளைட்” என்றவரின் பேச்சில் அதிர்ந்த அஸ்மிதா இனியும் தாமதித்தால் இந்த மனிதர் சி.பி.ஐக்கு கம்பி நீட்டி விட்டு வெளிநாட்டுக்குப் பறந்துவிடுவார் என்று அவசர அவசரமாக அந்த இருவர் முன்னும் பிரசன்னமானாள்.

அவளைக் கண்டதும் வினாயகமூர்த்தி அதிர மந்தாகினியோ “அஸ்மி போலிசுக்குப் போன் பண்ணு… ம்.. சீக்கிரமா பண்ணு” என்று அவசரப்படுத்திவிட்டு சகோதரனைப் பிடித்துவைக்க முயல அவரோ போனில் எண்ணை அழுத்தப் போன அஸ்மிதாவின் கையில் தான் வைத்திருந்த கத்தியால் காயத்தை ஏற்படுத்த அவளது போன் நழுவி தரையில் விழுந்தது. அந்த வலியிலும் அஸ்மிதா மற்றொரு கரத்தால் கத்தியைத் தள்ளிவிட கத்தியும் தூரச் சென்று விழுந்தது.

கத்தி கொஞ்சம் ஆழமான காயத்தை உண்டாக்கிவிட அதை அழுத்தியவாறு நின்றவளை கொலை வெறியோடு வினாயகமூர்த்தி நோக்க மந்தாகினியோ அவள் கையில் வழியும் உதிரத்தைக் கண்டதும் அலறியவர் அவளைச் சகோதரனிடம் இருந்து காக்க முற்பட அதற்குள் முந்திக்கொண்ட வினாயகமூர்த்தி அஸ்மிதாவின் கழுத்தில் கரம் பதித்து அவள் கழுத்தை இறுக்க ஆரம்பிக்கவும் மந்தாகினி நகராமல் அங்கேயே நின்றுவிட்டார்.

“கிட்ட வராத மந்தா! புத்திசாலித்தனமா நடந்துக்கிறதா நினைச்சு மறுபடியும் சஞ்சீவினிக்குக் கஷ்டத்தைக் குடுத்துடாத… நீ என்னை இங்க இருந்து போக விடலைனா நான் இவளை பரலோகத்துக்கு அனுப்பிடுவேன்” என்று சொன்னவரின் விழிகள் கொலைவெறியில் பளபளத்தன.

மந்தாகினி மூச்சு விடச் சிரமப்படும் அஸ்மிதாவை நோக்க அவளோ விழிகள் செருக நிற்கவும் அதிர்ந்தார்.

“அண்ணா! அவளை ஒன்னும் பண்ணிடாத… வாழ வேண்டிய பொண்ணு”

“இவ தான் எல்லாத்துக்கும் காரணம்… இவளால தான் அந்த தேவ் கெமிக்கல் கம்பெனிக்குள்ள வந்தான்.. இவளால தான் மினரல் கம்பெனி அவன் கைவசம் போச்சு… இன்னைக்கு நான் சி.பி.ஐல சிக்கினதுக்கு இவ தான் மூலக்காரணம்… இவளோடச் சாவு தான் நான் தேவ்வுக்குக் குடுக்கப் போற பெரிய தண்டனை”

மந்தாகினி கண்ணில் நீர் வழிய நின்றவர் திடீரென்று ஏதோ யோசனையுடன் டீபாயை நோக்கியவர் உடைந்து அழுவது போல தரையில் அமர வினாயகமூர்த்தி தங்கை இனி தன்னை தடுக்க மாட்டாள் என்று எண்ணியவராய் அஸ்மிதாவின் கழுத்தில் இன்னும் அழுத்தம் கொடுக்க அவளுக்கு கழுத்து நெறிந்ததில் இருமல் வர ஆரம்பிக்கவும் வினாயகமூர்த்தி அஸ்மிதாவின் முகத்தைப் பார்த்த அந்தக் கணம் அவர் எதிர்பாரா ஒரு நிகழ்வு நடந்தது.

அஸ்மிதாவின் இருமல் கொடுத்த திருப்தியில் திரும்பிய வினாயகமூர்த்தி கையில் துப்பாக்கியுடன் நின்ற தங்கையைப் பார்த்து அதிர்ந்தார். பாதுகாப்புக்கென்று சந்திரசேகர் உரிமத்துடன் வைத்திருக்கும் துப்பாக்கி அது.

“மரியாதையா அவளை விட்டுரு அண்ணா” என்ற மந்தாகினியின் குரல் இறுக்கத்தைப் பூசியிருக்க வினாயகமூர்த்தி இன்னும் அஸ்மிதாவின் கழுத்தை நெறிக்க அவளுக்கு இப்போது புரிந்தது ஜெயதேவ்வின் பயத்துக்கான காரணம். இவரைப் பற்றி முழுவதுமாக அறிந்திருந்ததால் தான் ஜெயதேவ் தன்னையும் இஷானியையும் அவ்வளது தூரம் எச்சரித்திருக்கிறான் என்பது கால தாமதமாக அவள் புத்தியில் உறைத்தது.

மந்தாகினி இனியும் தாமதிக்காமல் துப்பாக்கியின் டிரிக்கரை அழுத்தப் போன அச்சமயத்தில் மருத்துவரைக் காணச் சென்ற ருத்ராவும் இஷானியும் ஹாலுக்குள் அடியெடுத்துவைத்தனர். அவர்களுக்குத் தாங்கள் கண்ட காட்சியை நம்பவே இயலவில்லை.

ருத்ராவின் பார்வையில் கண்ணில் கொலைவெறியுடன் அஸ்மிதாவின் கழுத்தை இறுக்கியிருக்கும் வினாயகமூர்த்தியும், ஆவேசத்துடன் துப்பாக்கியும் கையுமாக நிற்கும் சகோதரியும் பட இஷானியோ அஸ்மிதா கிட்டத்தட்ட மூச்சுக்கு ஏங்கி மயங்கும் நிலையில் கால்கள் தொய்ய நிற்கும் காட்சியும் பட்டது.

ருத்ரா பாய்ந்து சென்று வினாயகமூர்த்தியின் கரத்தை விலக்கி அவரைத் தள்ளிவிட அவர் திடீரென்று அவன் வருவான் என எதிர்பாராததால் நிலை தடுமாறி சாய்ந்தார். சாய்ந்தவரை கொல்லுமளவுக்கு அவனுக்கு ஆத்திரம் இருந்தாலும் உடன்பிறந்தவர், வயதில் மூத்தவர் என்ற ஒரு காரணத்துக்காக எதுவும் செய்யாமல் விட்டவன் அவரை அங்கிருந்து தப்பிக்க இயலாதவாறு பிடித்தபடி “அக்கா நீ போய் ஒரு கயிறு கொண்டு வா… இஷி நீ அஸ்மிக்கு என்னாச்சுனு பாரு” என்று கட்டளையிட அவர்கள் இருவரும் அவன் ஏவிய வேலைகளைச் செய்து முடித்தனர் விரைவாக.

அஸ்மிதாவுக்கு கைக்காயத்தோடு கழுத்து நெறிபட்டதால் உண்டான வலி வேறு சேர கிட்டத்தட்ட அரைமயக்க நிலையில் இருந்தவளுக்கு போலீஸ் வந்து வினாயகமூர்த்தியைக் கைது செய்தது ஏதோ கனவில் நடப்பதை போல தோன்றியது.

அவர் சென்று சில நிமிடங்களில் ஜெயதேவ் பதறியடித்துக் கொண்டு ஓடிவந்தவன் சோபாவில் இஷானியின் மடியில் கண் மூடிக் கிடந்த அஸ்மிதாவைக் கண்டதும் அதிர்ந்து போனான். மந்தாகினி அவளது கைக்காயத்தைச் சுத்தம் செய்து மருந்திட்டவர் ஜெயதேவ்வைக் கண்டதும் எழுந்து செல்ல அவன் அஸ்மிதாவை நெருங்கியவன் முழந்தாளிட்டு அமர்ந்தவன் நடுங்கும் குரலில் “அஸ்மி” என்று அழைக்க சிரமத்துடன் கண் விழித்தாள் அஸ்மிதா.

கண் விழித்தவளுக்குத் தன்னெதிரே அமர்ந்திருந்தவனைக் கண்டதும் வேகமாக எழுந்தவள் அவனை அப்படியே கட்டிக்கொண்டாள். இன்னும் அவள் மேனி நடுங்கிக் கொண்டிருக்க ஜெயதேவ்வுக்கு வினாயகமூர்த்தியின் மீது வந்த ஆத்திரத்துக்கு அளவில்லை.

“ஒன்னும் இல்ல அஸ்மி!” என்றபடி அவள் முதுகை தடவிக்கொடுத்தவனின் முதுகுப்பக்கத்தில் அவளின் கண்ணீர்த்துளிகள் இறங்குவதை அவனால் உணரமுடிந்தது.

கூடவே சிரமத்துடன் “கடைசியா உன்னைப் பார்க்காம நான் போய் சேர்ந்துடுவேனோனு பயந்துட்டேன் ஜெய்” என்றவளின் வார்த்தையில் கண் கலங்கியவன் அவளைத் தன்னிடமிருந்து பிரித்தெடுத்தான்.

“அப்பிடி எதுவும் நடக்காது… இனிமே எந்த ஆபத்தும் என்னைத் தாண்டி தான் உன்னை தொடமுடியும் அஸ்மி” என்றவனின் பார்வை சுற்றியிருந்தவர்களை நன்றியுடன் தழுவியது.

ருத்ராவையும் மந்தாகினியையும் ஒரு சேர பார்த்து “தேங்க்யூ சோ மச்… உங்க ரெண்டு பேரால தான் அஸ்மிக்குச் சின்ன காயத்தோட போச்சு… நீங்க மட்டும் இல்லைனா” என்றவனின் குரலே அந்த அபாயத்தை உணர்ந்து தானாய் நின்றுவிட ருத்ராவின் கரம் ஆதரவாய் அவனது தோளைத் தடவிக்கொடுத்தது.

மந்தாகினி ஜூஸ் தம்ளருடன் திரும்பியவர் இஷானியிடம் அதை நீட்டி அஸ்மிதாவுக்குக் கொடுக்குமாறு கூற இஷானி தானே அதை அவளுக்குப் புகட்டத் தொடங்கினாள்.

அஸ்மிதா ஜூசை குடித்து முடித்தவள் மந்தாகினியை நோக்கினாள். பதினைந்து வயதில் அவள் உண்டாக்கிய காயத்தின் தழும்பு இன்னும் அவள் முன் நெற்றியும் சிரமும் சந்திக்கும் இடத்தில் இருக்க அதை பார்த்தபடியே “தேங்க்ஸ் சித்தி” என்றவளின் குரலில் நன்றியுணர்வோடு கலந்த வேதனை.

மந்தாகினிக்கு பல வருடங்கள் கழித்து அவள் தன்னை சித்தி என்று அழைத்ததே பெரிய விசயமாகத் தோண ஜெயதேவ்விடம் “அவ கொஞ்சம் டயர்டா இருக்கா… கெஸ்ட் ரூம்ல ரெண்டு பேரும் இருங்க. நான் ஃபேமிலி டாக்டருக்கு விசயத்தைச் சொல்லிட்டேன்… அவர் வந்ததும் கட்டு போட்டுட்டு போகலாம்… இஷி ருத்ரா நீங்க கெஸ்ட் ரூமை இவங்களுக்குக் காட்டுங்க” என்று சொல்லிவிட்டார்.

அவர் சொன்னபடியே இஷானியும் ருத்ராவும் விருந்தினர் அறையை காட்டிவிட்டு மருத்துவருக்காக ஹாலில் சென்று காத்திருக்க ஆரம்பித்தனர். அஸ்மிதாவின் காயத்தைப் பார்த்ததும் இஷானிக்கு அவள் கண்ட காட்சியில் இன்னும் உள்ளுக்குள் உதறல் எடுத்துக் கொண்டிருந்தது. ஆதரவாய் கிடைத்த கணவனின் தோளில் சாய்ந்து கொண்டவளை ருத்ராவின் கரங்கள் தட்டிக்கொடுத்து அமைதிப்படுத்த தொடங்கின.

தனித்துவிடப்பட்ட ஜெயதேவ்வும் அஸ்மிதாவும் கூட அந்நிலையில் தான் இருந்தனர். அஸ்மிதா கணவனின் தோளில் கண் மூடி சாய்ந்திருந்தவள் “ஜெய் எதாச்சும் பேசேன்” என்று சொல்ல அவனோ இன்னும் அவளது காயம் கொடுத்த வலியை அனுபவித்தவனாய் யோசனையுடன் அமர்ந்திருக்க பழச்சாறு கொடுத்த தெம்பில் நிமிர்ந்து அமர்ந்தாள் அஸ்மிதா.

தொண்டை வலித்தது என்னவோ உண்மை. ஆனால் தங்கள் இருவரிடையே அமைதி ஆட்சி செய்வதில் விருப்பமற்றவளாய் அவள் பேச முயல அதற்குள் அவளை மீண்டும் தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தான் ஜெயதேவ்.

அவளுக்குப் பெரிதாய் ஆபத்தில்லை என்று மருத்துவர் உறுதியளிக்கும் வரை அவனுக்கு திக்திக்கென்று தான் இருந்தது. அவர் கட்டு போட்டுவிட்டு சென்றதும் அஸ்மிதாவிடம் திரும்பியவன் அவளது கழுத்தி தெரிந்த விரல் தடங்களைத் தடவியபடி “வலிக்குதா அஸ்மி?” என்று கேட்க அவள் மறுப்பாய் தலையசைத்தாள்.

“நீ இப்பிடி கேக்குறதுக்காகவே இன்னொரு தடவை காயம் படலாம் போல” அஸ்மிதா மெதுவான குரலில் முணுமுணுக்கவும் ஜெயதேவ் அவளை கண்ணில் உஷ்ணத்துடன் முறைக்க அவள் முகத்தைச் சுருக்கிக் கொண்டாள். ஏனெனில் அவள் அறிவாள் இந்தக் கோபம் அவள் மீதான அவன் அக்கறையால் விளைந்தது என்பதை. அந்த அக்கறை இதயத்தில் இதம் பரப்ப கை மற்றும் தொண்டையின் வலிகள் கூட குறைந்து போனது அஸ்மிதாவுக்கு.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛