🌞மதி 60🌛

உலகின் அதிகமான கனிமப்பொருட்களும் மணலும் இந்தியாவில் கிடைக்கின்றன. உலகமெங்கும் கிடைக்கும் 46 கோடி டன் வள ஆதாரங்களில் இந்தியாவின் பங்கு 27.8 கோடி டன்கள். இவற்றில் உலகத்தரம் கொண்ட கனரக கனிமங்கள் 20 முதல் 30 சதவிகிதம் இருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் மன்னார் வளைகுடாவின் நிலவியல் பண்புகள், தொடர்ந்து வீசும் அலைகள் மற்றும் கடற்கரை அமைப்பு ஆகியவற்றின் காரணமாக கார்னெட், இல்மனைட், ரூட்டைல் மற்றும் ஜிர்கான் போன்ற கனிமப் பொருட்கள் அதிகளவில் கிடைக்கும் பகுதியாக இது உள்ளது.

தூத்துக்குடி…

தன் வாழ்நாளில் இப்படி ஒரு நிகழ்வு நடக்க கூடுமென யோசித்துக் கூட பார்த்ததில்லை வினாயகமூர்த்தி. இன்றைக்கு அதிகாரிகள் சூழ்ந்திருக்கும் அந்த விருந்தினர் மாளிகையில் நேற்றைய இரவில் தான் போட்டத் திட்டங்களை நினைத்துப் பார்த்தார் அவர்.

நேற்று இதே நேரத்தில் அவரது வலது கரமாக இருப்பவன் சொன்ன தகவல்கள் அவரைப் பதற்றத்துக்குள்ளாக்கியது.

“அண்ணாச்சி! அந்த ஹார்பர் ஆபிசர் சரியான ராங்கி பிடிச்ச பார்ட்டியா இருப்பாரு போல.. நம்மாளு என்ன சொன்னாலும் மசியவே மாட்டேங்கிறாரு… மத்த ஆபிசருங்க கிட்ட கேட்டா அவர் கிட்ட எசல வேண்டானு சொல்லுறாங்க… நம்ம பயலுவ வேற முன்ன மாதிரி இல்ல… எந்த வேலை சொன்னாலும் சுணங்குறானுவோ”

அவன் சொன்ன பின்னர் யோசித்தவர் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சரக்கு போனால் இனி சரி வராது என்று முடிவெடுத்தவர்

“தூத்துக்குடி ஹார்பர் வேண்டாம்… நம்ம விசாகப்பட்டினம் வழியா சரக்கை அனுப்பி வச்சிடலாம்… என்ன.. புரொஜிசர் முடிக்க கொஞ்சம் நாளாகும், இங்கே இருந்து டிரான்ஸ்போர்ட் பண்ணுறப்போ இடையில மாட்டிக்க கூடாது… அதை அங்கங்க இருக்கிற நம்மாளுங்க கிட்ட இன்ஃபார்ம் பண்ணிடு” என்று கட்டளையிட்டுவிட்டார்.

இன்னும் யோசித்தவருக்கு அவனது பேச்சிலும் அண்ணாச்சி என்ற அழைப்பிலும் அவர் மீதான பயபக்தி வெளிப்படையாகத் தெரிந்தது. ஒரு காலத்தில் இதே இடங்களில் வேலை தேடி பிய்ந்த செருப்புடன் அலைந்திருக்கிறார். அந்த நேரத்தில் சந்தித்த அவமானங்கள் தான் இன்று அவரை பணத்துக்காக எதையும் செய்யும் பேராசைக்கார வியாபாரியாக மாற்றிவிட்டிருந்தது.

ஆனால் இப்படி யாருக்காக பணம் சேர்க்கிறார் என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை. அவரிடம் மட்டுமல்ல, எந்த பெருமுதலாளியிடமும் அதற்கான பதில் இருக்காது. பணம் சம்பாதிப்பது என்ற போதைக்கு அடிமையானவர்களுக்கு எந்த பாதகங்களும் பெரிதாகத் தோணுவதில்லையே.

அவன் சென்ற பிறகு தனியாய் அமர்ந்திருந்தவருக்கு அவனது பேச்சில் தொனித்த கோபம் புரியாமல் இல்லை. விட்டால் துறைமுக அதிகாரியைக் காலி செய்யுமளவுக்குக் கோபம். எத்தனை வருடம் இந்த முட்டாள்களை தூண்டிவிட்டே வேலையை முடித்திருக்கிறார்! அந்த முட்டாள்தனம் தான் அவரது மூலதனம். அந்த முட்டாள்களில் சந்திரசேகரும் ஒருவர்.

இவர்கள் முட்டாள்களாய் இருப்பது தான் அவருக்கு நல்லது என்று நேற்று கேலியாய் எண்ணியவர் இன்று தானே ஒரு கேலிப்பொருளாய் மாறி நின்றார்.

செய்தி சானல்கள் எல்லாவற்றிலும் அவரது முகம் தான். அவரது போனும் பறிமுதல் செய்யப்பட்டுவிடவே சந்திரசேகரைக் கூட அழைக்க இயலவில்லை. ஆனால் ஆர்.எஸ் மினரல்சின் உயரதிகாரிகளுக்கு அழைத்தவர் விவரத்தைச் சொல்ல அவர்கள் நிருபர்களைச் சமாளித்துக் கொண்டனர். சி.பி.ஐ அதிகாரிகளின் கேள்விக்கு வழக்கம் போல தந்திரத்துடன் பதிலளித்தவருக்கு இன்னும் ஆர்.எஸ் மினரல்சின் மேலாண்மை அதிகாரம் மாறிப்போன விசயம் தெரியாதல்லவா!

நேரம் செல்ல செல்ல சந்திரசேகர் தன்னை தொடர்பு கொள்ளாதது அவரது மூளையில் அபாயச்சங்கு ஒலிக்க ஆரம்பித்தது. தனது கைப்பொம்மைகளான அதிகாரிகள் மூலம் காவல்துறை மற்றும் அரசியல் வட்டாரங்களுக்குத் தகவல் அனுப்பியும் பலனில்லை. அதற்கு காரணம் அவர் இப்போது கையும் களவுமாக மாட்டியிருக்கிறார்.

துறைமுகத்துக்குச் செல்ல வேண்டிய சரக்கு பற்றிய தகவல் உடனடியாக செய்தி சேனலை சென்றடைந்து விட்டது தான் இதற்கு காரணம். அது ஒன்றும் வினாயகமூர்த்தி ஆட்டி வைக்கும் படி ஆடும் மூனாந்தர சேனல் இல்லை.

நடுநிலை வகித்து யார் சார்பிலும் பேசாத சேனலான ஜஸ்டிஸ் டுடே தான் வினாயகமூர்த்தியின் இத்தனை வருட தொழில் சாம்ராஜ்ஜியத்தின் கருப்பு பக்கங்களை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. உள்ளதை உள்ளபடி உரைப்பதில், உண்மையை மக்களிடம் கொண்டு செல்வதில் அவர்கள் யாருக்கும் இது வரை அடிபணிந்தது இல்லை. அதிலும் தாதுமணல் கொள்ளை குறித்த தகவல்களை திரட்டியது சிறந்த ‘இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்ட்’ என்று பெயர் வாங்கிய ஸ்ராவணி சுப்பிரமணியம்.

இப்போது ஜெயதேவ் ஜஸ்டிஸ் டுடே அலுவலகத்தில் அவளுடன் தான் உரையாடிக் கொண்டிருந்தான்.

“நீங்க இந்த விசயத்துக்காக ரொம்ப ரிஸ்க் எடுத்துருக்கிங்க மேடம்… தேங்க்யூ சோ மச்” என்றவனிடம் குறுநகையை வீசினாள் ஸ்ராவணி, அந்த சேனலின் ஸ்டார் ரிப்போர்ட்டரில் முக்கியமானவள் அவள்.

“நான் மட்டும் தனியா செஞ்சு முடிக்கல தேவ் சார்… உங்க மேனேஜ்மெண்ட்கு கீழ இருக்கிற கம்பெனியா இருந்தாலும் தப்பு நடக்கிறதை வேடிக்கை பார்க்காம நீங்க குடுத்த தகவல் தான் இதுக்குலாம் காரணம்” என்று சொன்னவள் மனதாற அவனுக்கு நன்றி கூற மறக்கவில்லை.

கூடவே “ஒரு ரிப்போர்ட்டரா நான் அங்கே போயிருந்தா கண்டிப்பா அந்த கிராமங்களுக்குள்ள என்னை விட்டுருக்கவே மாட்டாங்க… மினிஸ்டர் ஒய்ப்னு சொன்னதும் தான் அங்க தங்கிக்கிறதுக்கு அலோ பண்ணுனாங்க… இதுல என் ஹஸ்பெண்டுக்கு இன்னும் என் மேல வருத்தம்” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளுடன் பணிபுரியும் ரகு வந்தான்.

ஜெயதேவ்வுக்கு ஒரு சலாம் போட்டவன் ஸ்ராவணியிடம் “வனி! அபி சார் வந்துருக்காரு.. செம கோவத்துல இருக்காரு..  போய் அவரைச் சமாதானம் பண்ணு” என்று சொல்ல ஜெயதேவ்வுக்குத் தன்னால் தான் அவளுக்குச் சங்கடம் என்ற குற்றவுணர்வு எழுந்தது.

எனவே தானும் அவளுடன் வந்து அவளின் கணவனைச் சமாதானம் செய்வதாகச் சொன்னபடி ஸ்ராவணியுடன் அந்த அறையை விட்டு வெளியேறினான்.

கெஸ்ட் ரூமில் போடப்பட்டிருந்த சோபாவில் கால் மீது கால் போட்டு இரு கைகளையும் சோபாவின் பக்கவாட்டில் வைத்தபடி அமர்ந்திருந்தான்(ர்) அபிமன்யூ, தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் மற்றும் ஸ்ராவணியின் கணவன்.

அந்த அறைக்குள் ஜெயதேவ்வுடன் நுழைந்த ஸ்ராவணியைக் கண்டதும் கண்கள் அலைபாய சிரமத்துடன் அவற்றை கட்டுப்படுத்திக் கொண்டவன் இறுக்கமான குரலில்

“ரிப்போர்ட்டர் மேடம்கு வீட்டுக்கு வர்ற ஐடியா இருக்குதா? இல்ல உன்னோட சீஃப் குடுத்த டாஸ்க் முடியுற வரைக்கும் இங்க தான் தங்கிக்க போறியா?” என்று வினவிவிட்டு எழுந்தான்.

“நான் வீட்டுக்கு வர தான் கிளம்புனேன் அபி! ஆனா நீ நம்ப மாட்ட” என்று சொன்னவளின் குரலும் இறுக்கத்தை அணிந்து கொண்டது.

அபிமன்யூ ஏதோ சொல்ல வாயெடுத்தவன் ஜெயதேவ்வைக் கண்டதும் புருவத்தைச் சுருக்கிவிட்டு “பெஸ்ட் எக்ஸ்போர்ட்டர் ஆஃப் த இயர் அவார்ட் வாங்குனது நீங்க தானே!” என்று கேட்க ஜெயதேவ் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டவனாய் ஸ்ராவணியைக் கோபித்துக்கொள்ள வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் அபிமன்யூவுடன் பேச ஆரம்பித்தான்.

அபிமன்யூ அவன் தாது மணல் விவகாரம் பற்றி கேட்டவன் ஜெயதேவ்வை கேலியாகப் பார்த்துவிட்டு “என்ன சார் பிசினஸ்மேன்னு சொல்லுறிங்க! பிழைக்கத் தெரியாத ஆளா இருக்கிங்களே” என்று கேலி செய்ய அதைக் கேட்ட ஸ்ராவணி தனது ஹேண்ட்பாக்கால் அவன் தோளில் அடித்தாள்.

“நல்ல மனுசனையும் கெடுத்துவிட்டுடுடா… ஆளைப் பாரு” என்று அவள் திட்டவும் அபிமன்யூ அவளைச் சமாளித்தவன் ஜெயதேவ்விடம் திரும்பினான்.

“ஓகே! இந்த விசயத்துல அந்தாளு தப்பிக்காம கவர்மெண்ட் பார்த்துக்கும்… நீங்க கொஞ்சம் பிசினஸ்மேனா யோசிங்க தேவ்” என்று  அறிவுரையோடு சேர்ந்து உறுதியளித்துவிட்டு ஸ்ராவணியுடன் கிளம்பினான்.

ஜெயதேவ் அவர்களுக்குப் புன்னகையுடன் விடையளித்தவன் ஜஸ்டிஸ் டுடேவின் தலைமைக்கு அழைத்து நன்றி கூறிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினான்.

அவன் சென்ற நேரம் வீடு அமைதியில் மூழ்கியிருந்தது. அனைவரும் உறங்கிவிட்டனர் போல என்று எண்ணியவனாய் தனது அறைக்குள் நுழைந்தவனை பளீரென்று எரிந்த விளக்கொளி வரவேற்க இவ்வளவு நேரம் இருட்டுக்குப் பழகியிருந்த கண்கள் கூசியது.

கண்ணைக் கசக்கியபடி அறைக்குள் நுழைந்தவன் அங்கே இன்னும் உறங்காமல் லேப்டாப்பில் எதையோ நோண்டிக்கொண்டிருந்த அஸ்மிதாவைப் பார்த்து திகைத்தவன் எதுவும் சொல்லாமல் ஃப்ரெஷ் அப் ஆகச் சென்றான்.

அஸ்மிதா கதவு திறக்கும் சத்தமும் அவனது காலடியோசையும் காதில் விழுந்ததும் நிமிர்ந்தவள் அவன் உடை மாற்றி விட்டு வரும்வரை காத்திருந்தாள்.

ஜெயதேவ் டிசர்ட்டுடன் திரும்பியவன் தன்னை விழியகலாமல் நோக்கும் அஸ்மிதாவை நோக்கி புன்முறுவலை வீசியவன் “நீ இவ்ளோ நேரம் தூங்காம எனக்காக காத்திருக்கிற ஆள் இல்லையே? எதுவும் முக்கியமான விசயமா?” என்று கேட்டபடி அவள் அமர்ந்திருந்த இடத்தில் தானும் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டான்.

“சார் நினைச்சதை செஞ்சு முடிச்சிட்டிங்க… ரொம்ப ஹேப்பியா இருக்கிங்க போல” என்று அவனிடம் பேச்சு கொடுத்தபடியே லேப்டாப்பை மூடிவைத்தவள் அவன் புறம் திரும்பி அமர்ந்தாள்.

ஜெயதேவ் மறுப்பாய் தலையசைத்தவன் “இன்னும் என் வேலை முழுசா முடியலையே! என்னால எப்பிடி சந்தோசமா இருக்க முடியும்?” என்று சொல்ல அஸ்மிதா அவனைச் சலிப்புடன் பார்த்தாள்.

“இன்னும் என்ன நடக்கணும்னு ஆசைப்படுற தேவ்? அதான் வினாயகம் மாமாவ சி.பி.ஐ அரெஸ்ட் பண்ணிட்டாங்களே”

“அரெஸ்ட் மட்டும் தானே நடந்திருக்கு… இன்னும் கோர்ட்ல கேஸ் நடக்கும்… அதுல அவருக்கு ஜாமீன் கிடைக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு”

“அவரை யாரு ஜாமீன்ல எடுக்கப் போறாங்க? கண்டிப்பா அப்…. ஐ மீன் மிஸ்டர் சந்திரசேகர் அவரை நினைச்சு வருத்தம் தான் படுவாரு… இந்த தடவை அவரைச் சட்டத்துல இருந்து காப்பாத்த மாட்டாரு”

“வினாயகமூர்த்தி அரசியல்வாதிகளோட செல்வாக்கை யூஸ் பண்ணி வெளியே வர முயற்சி பண்ணுவாருனு தோணுது… அதோட இன்னும் கவர்மெண்ட் சைட் என்கொயரி ஆரம்பிக்கல… அது ஆரம்பிச்சு கவர்மெண்டோட கைடன்ஸ் படி தான் ஆழியூர் ப்ளாண்ட்டை என்ன பண்ணனும்னு முடிவெடுக்க முடியும்… அதோட இன்னும் என்னோட ப்ளானோட ஃபைனல் ஸ்டேஜ் வரலையே”

இதைச் சொல்லிவிட்டு புருவம் உயர்த்தியவனைக் கண்டு ஆயாசமடைந்தாள் அஸ்மிதா.

“இன்னும் என்னடா ப்ளான் பண்ணிருக்க? வேற கம்பெனி ஷேர்ஸ் வேணுமா? ஐ அம் சாரி! எனக்கு இந்த ரெண்டு கம்பெனி தவிர வேற எதுலயும் ஷேர்ஸ் இல்ல”

“நான் உன் கிட்ட இப்போ கேக்கவே இல்லையே!”

“என்ன கிண்டல் பண்ணுறியா? ஆர்.எஸ் கெமிக்கல் ஷேரை உங்கப்பாவுக்காக எழுதி வாங்குன… ஆர். எஸ் மினரல்ஸ் ஷேரை உனக்காக எழுதி வாங்குன… இதுக்கு மேல உனக்குக் குடுக்கிறதுக்கு என் கிட்ட எதுவும் இல்ல தேவ்”

அஸ்மிதாவின் கடைசி வார்த்தையில் ஜெயதேவ்வின் கண்கள் பளபளத்தன. அந்தப் பளபளப்பில் ஒரு கணம் திகைத்தாள் அஸ்மிதா. ஜெயதேவ் குறும்பாக அவளை நோக்கிக் குனிய அஸ்மிதா பின்னுக்குச் செல்ல ஓரளவுக்கு மேல் பின்னே செல்ல இயலாத அந்த சுழல் நாற்காலி கீழே சரிய ஆரம்பிக்கவும் ஜெயதேவ் நாற்காலியைப் பிடித்து நிறுத்தியவன் தன் அருகில் தெரிந்த அவளது எழில் வதனத்தில் மெய் மறந்தான்.

அஸ்மிதா விழிகள் விரிய அவனை நோக்கியவள் “என்ன பண்ணுற தேவ்? தள்ளிப் போ” என்று சத்தமே எழும்பாதக் குரலில் உரைக்க அவளின் உதட்டசைவில் இருந்து அதை அறிந்து கொண்டான் தேவ்.

“நான் ஒன்னுமே பண்ணலையே! உன் கிட்ட இன்னும் முழுசா நெருங்கலை அஸ்மி… அதுக்கு இன்னும் நேரம் வரலை”

அவனது குரலில் தெரிந்த ஏக்கம் அஸ்மிதாவுக்குள் மெலிதாக அதிர்ச்சியை உண்டாக்கியது. அதை மறைத்தபடி அவனைத் தன் கைகளால் தள்ளிவிட்டு எழுந்தவள் அவனைக் கண்டுகொள்ளாமல் செல்ல முயல ஜெயதேவ் அவளது கரம் பற்றியிழுத்து தனது அணைப்புக்குள் கொண்டுவந்தான்.

“எனக்கு குடுக்கிறதுக்கு உன் கிட்ட ஸ்பெஷலான ஒன்னு இருக்கு… அது என்ன தெரியுமா?” என்று கேட்டுவிட்டு அவளது பதிலுக்காக காத்திருக்க அஸ்மிதா பொருள் புரியாது விழித்தாள்.

“நீ என்னை பழைய மாதிரி ‘ஜெய்’னு கூப்பிடுற அந்த தருணம் தான் நீ எனக்கு குடுக்கப் போற ரொம்ப பெரிய கிப்ட் அஸ்மி” என்றவனின் வார்த்தைகளில் அஸ்மிதாவுக்குக் கண்கள் கரிக்கத் தொடங்கியது.

அவளுக்கும் அவனை யாரோ போல தேவ் என்று அழைத்து அன்னியப்படுத்திக் காட்ட ஒன்றும் ஆசையில்லையே! அவளது மனதில் இன்னுமே அவன் ஜெயதேவ்வாக தான் இருக்கிறான் என்பது தான் உண்மை.

அவளின் விழிகளில் நிறைந்த கண்ணீரின் அர்த்தம் உணர்ந்தவன் மென்மையாய் அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

“இன்னும் கொஞ்சம் நாள்ல எல்லாம் சரியாகிடும் அஸ்மி… நான் உன்னை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன்… அதுக்கான பனிஷ்மெண்ட் எனக்கும் கிடைக்கணும்ல… அதை நீ தான் குடுக்கணும்… சோ எப்போவுமே கெத்தா திமிரா இரு அஸ்மி! அதான் உனக்கு அழகு” என்று சொல்ல அவள் விழிகள் படபடக்க புன்னகைக்க ஆரம்பித்தாள்.

அந்தப் புன்னகையில் தான் எண்ணும் தருணம் வர இன்னும் அதிக நாட்கள் இல்லை என்ற நம்பிக்கை பிறந்தது ஜெயதேவ்வுக்கு.

ஆனால் அவ்வளவு எளிதில் அஸ்மிதாவின் காதல் அவனுக்குக் கிட்டினால் அதன் அருமை ஜெயதேவ்வுக்குப் புரியாது போய்விடும் என்ற விதியின் கணக்கின் முன் அவனது நாட்கணக்கு தோற்றுப் போய்விடும் என்பதை அவன் அப்போது அறியான். அதற்கு தடையாக இருப்பவர் இப்போது உச்சப்பட்ட காவலில் அவனது பெயரை வன்மத்துடன் உச்சரித்துக் கொண்டிருந்ததையும் அவன் அறியான்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛