🌞மதி 54🌛

நெல்லை மாவட்டம் கூடுதாழை பகுதியில் உள்ள மணல் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கடலில் கலப்பதால் கடல்நீர் இயல்பான நீலநிறத்திலிருந்து செந்நிறத்துக்கு மாறியதுதினகரன் செய்தி.

ஜெயதேவ் தன்னெதிரே நின்ற அஸ்மிதா திருதிருவென்று விழித்ததைப் பார்த்தபடி நின்றிருந்தவன் அவள் பதில் பேசாமல் இருக்கவும் “சோ மேடமோட கவலை இது தானா?” என்று கேட்டு புருவத்தை ஏற்றி இறக்கவும் வாழ்வில் முதல் முறையாக அஸ்மிதா பதில் சொல்லத் தெரியாது விழித்தாள்.

அவள் பதில் சொல்லாது நிற்கவும் தேவ்வின் உதட்டில் ஒரு நமட்டுச்சிரிப்பு பட்டா போட்டுக் குடியேற சிறிது நேரத்தில் அது கேலிச்சிரிப்பாக பதவி உயர்வு பெறவும் அந்த அறையின் சுவற்றில் பட்டு எதிரொலித்த அவனது சிரிப்புச்சத்தத்தில் அஸ்மிதா சுதாரித்துக் கொண்டு காது மடல்களைத் தேய்த்து விட்டுக்கொண்டாள்.

பின்னர் சமாளிக்கும் விதமாய் “ஹலோ ஹலோ! போதும்! ரொம்ப சிரிக்காத ஓகேவா… ஏதோ இஷியை கலாய்க்கணும்னு ஒரு ஃப்ளோல நாலு டயலாக் ரைமிங்கா பேசிட்டேன்… அதை வச்சு என்னை கலாய்ச்சு சந்தோசப்படுறியோ?” என்று அமர்த்தலான குரலில் மொழிய

ஜெயதேவ் தலையை இடவலமாக அசைத்து மறுத்தவன் “ஆனா நீ பேசுன டைமிங் தப்பும்மா” என்று சொல்லிவிட்டு மீண்டும் அவள் சொன்ன வசனத்தை எண்ணிப் பார்த்துவிட்டு நகைத்தபடியே லேப்டாப்பை தனது மேஜையில் வைத்தான்.

அஸ்மிதா இத்தோடு விட்டானே என்று நிம்மதியடைய மீண்டும் அவளிடம் வந்தவன் அவளை மேலும் கீழுமாகப் பார்க்க அந்தப் பார்வைக்கு அர்த்தம் புரியாமல் விழித்தவள் எரிச்சலுற்றவளாய் நகரப் போக அவளது கரம் பற்றி நிறுத்தியவன்

“ரொம்ப ஃபீல் பண்ணி பேசிட்டிருந்தியேனு லவ் பண்ண டிரை பண்ணுறேன்… நீ முகம் திருப்பிட்டுப் போனா என்ன அர்த்தம்?” என்று கேட்டு அவளைத் திகைக்க வைத்தான் ஜெயதேவ்.

அஸ்மிதா ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தவள் பின்னர் இவனாவது தன்னை காதலிப்பதாவது என்று தெளிந்தவளாய் “ரொம்ப டிரை பண்ணி இல்லாத இதயத்தைக் கஷ்டப்படுத்திக்காத ஜெ.. ப்ச்… தேவ்” என்று வழக்கம் போல ஜெய் என்ற அழைப்பை விழுங்கிவிட்டு தேவ் என்றே விளித்தாள்.

“இல்லாத இதயம்… ம்ம்ம்… அது கூட கரெக்டான வார்த்தை தான்… லீவ் தட்… ஆக்சுவலி நான் உன் கிட்ட சொல்ல வந்த விசயமே வேற” என்று தங்களின் காதல் பற்றிய வார்த்தைப்போருக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வேறு முக்கியமான விசயத்தைப் பேசுவதற்காகப் பீடிகை போட்டான் ஜெயதேவ்.

அஸ்மிதாவுக்கு வழக்கம் போல அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது விளங்கவில்லை. அவன் சொல்லட்டும் என்று காத்திருக்க

“ஏ.ஜி.எம்ல நீ கலந்துக்கணும்… அதுக்கான இன்வைட் உன்னோட மெயிலுக்கு வந்திருக்கும்… கரெக்ட் டைமுக்கு ரெடியா இரு” என்று செய்தியை மட்டும் மொட்டையாகக் கூற

“எக்ஸ்யூஸ் மீ! நான் ஏன் ஏ.ஜி.எம்மை அட்டெண்ட் பண்ணனும்? எனக்கும் ஆர்.எஸ் கெமிக்கலுக்கும் சம்பந்தமில்லைனு எப்போவோ சொல்லியாச்சு… என்னால அங்க வர முடியாது” என்று நிர்தாட்சணியமாக மறுத்துவிட்டு படுக்கையில் விழுந்தவள் உறங்க முற்பட

“நான் உன் கிட்ட நீ வருவியா மாட்டியானு கேக்கல அஸ்மி… வரணும்னு சொல்லுறேன்… உன்னை எப்பிடி கூட்டிட்டுப் போகணும்னு எனக்குத் தெரியும்… தேவையில்லாம பிடிவாதம் பிடிச்சு என்னை டென்சன் ஆக்காத” என்று ஆணையிடும் குரலில் கூறிவிட்டு அவனும் ஒரு புறம் படுத்துக்கொள்ள

அஸ்மிதா சட்டென்று எழுந்து அமர்ந்தவள் “நான் எதுக்கு அங்க வரணும்? எனக்கு ஏ.ஜி.எம் அட்டெண்ட் பண்ணுறதே பிடிக்காது… எல்லா வருசமும் அம்மா தான் எனக்கு பிராக்ஸியா போவாங்க” என்றாள் பிடிவாதக் குரலில்.

அவளது இந்தப் பதில் பொறுப்பற்றதாக ஜெயதேவ்வின் மனதில் படவும் “சந்திரசேகருக்கு அடுத்து அந்த கம்பெனியில அதிக ஷேர் உன் கிட்ட தான் இருக்கு…. அதை வச்சு உபயோகமா எவ்ளோ விசயங்கள் பண்ணலாம் தெரியுமா? இவ்ளோ நாள் அது உன் கிட்ட இருந்த்துல ஒரு பிரயோஜனமும் இல்லை” என்று கூற

“ஓஹோ! அதான் சார் ப்ளான் பண்ணி என் கிட்ட இருந்து அதை திருட்டுத் தனமா வாங்கிட்டிங்களோ?” என குத்தலாகக் கேட்டாள் அஸ்மிதா.

ஜெயதேவ் “அதைப் பத்தி நான் பேச விரும்பல… ஆனா உன் ஷேரை அப்பிடி வாங்குனதுக்கு பிராயசித்தமா தான் உன்னை அங்க கூப்பிடுறேன் அஸ்மி… எதுக்காகனு அங்க வந்தா உனக்குப் புரியும்” என மென்மையாக உரைக்க

அஸ்மிதாவோ “நீ இப்போ என்ன கால்குலேசன் போடுற தேவ்?” என்று நேரடியாக கேட்க ஜெயதேவ்வுக்கு ஆச்சரியம். அதே ஆச்சரியத்துடன் எழுந்து அமர்ந்தவன்

“நாட் பேட்! நான் ஏதோ கால்குலேட் பண்ணுறேனு இவ்ளோ சீக்கிரமா கண்டுபிடிச்சிட்டியே! ஆமா! நான் ஒரு கணக்கு போட்டு தான் உன்னை அங்க கூட்டிட்டுப் போகப்போறேன்… சோ குட் கேர்ளா நடந்துக்கோ” என்று சொல்லிவிட்டு அவள் கன்னத்தில் தட்டவும் அஸ்மிதா அமர்ந்தவாறு பின்னடைந்தவள் முகத்தைச் சுருக்கியபடி

“நீ ஏன் இப்பிடி இருக்க தேவ்? எனக்கு வர பிடிக்கலனு சொன்னா விட்டுடேன்” என்க

“உனக்கு இந்த வீட்டுக்கு வரக் கூடத் தான் பிடிக்கல… இவ்ளோ ஏன் நான் இந்த ரூம்ல இருக்கிறது கூட உனக்குக் கொஞ்சநாளா பிடிக்காம தான இருந்துச்சு… இது எல்லாமே எப்பிடி உனக்குப் பழகிப்போச்சோ அதே மாதிரி ஆபிஸ்கு வர்றதும் பழகிப்போயிடும்… பழகிக்கோ” என்று ஆணையிட்டவன் இதற்கு மேல் வாதிட விரும்பாமல் விளக்கை அணைத்துவிட்டு துயிலில் ஆழ முயன்றான்.

அஸ்மிதா அவனது பேச்சைக் கேட்டு ஆண்டு பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளலாமா வேண்டாமா என்று யோசித்தபடியே தலையணையில் தலைக்கு அடைக்கலம் தேடியவள் சிறிதுநேரத்தில் உறங்கியும் போனாள்.

மறுநாள் விடியல் வழக்கம் போல விடிய ஜெயதேவ் பரபரப்புடன் தயாரானவன் அஸ்மிதாவையும் அவசரப்படுத்த அவள் அவனை முறைத்தபடியே தயாரானாள்.

இருவரும் சேர்ந்து ஆர்.எஸ் கெமிக்கலின் தலைமை அலுவலகத்துக்கு வந்த போது அஸ்மிதாவுக்குச் சந்திரசேகரைக் கண்டதும் மந்தாகினியுடன் கண்டதும் வழக்கம் போல ஒரு அசவுகரியமான உணர்வு அவளுக்குள் எழுவதைத் தடுக்க முடியவில்லை. கூடவே வினாயகமூர்த்தியைக் காணும் போது வெறுப்பு எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. அதே நேரம் மந்தாகினி அஸ்மிதாவை நோக்கி ஒரு குறுஞ்சிரிப்பை வீச அதற்கு முன்பு போல வெறுப்பாய் பார்த்து வைக்காமல் பதிலுக்குப் புன்னகைக்கும் அளவுக்கு அஸ்மிதா முன்னேறியிருந்தாள்.

சந்திரசேகர் அஸ்மிதாவைக் கண்டதும் வழக்கமான வாஞ்சையுடன் “அஸ்மி! எப்பிடிடா இருக்க?” என்று ஒரு தந்தைக்குரிய கவலையுடன் கேட்க அதற்கு அவள் பதிலளிக்கும் முன்னரே ஜெயதேவ் முந்திக் கொண்டான்.

“அவளுக்கென்ன மிசஸ் ஜெயதேவ்வா சந்தோசமா இருக்கா ‘மாமா’… ஆனா அவளோட அப்பாக்கு தான் திடீர்னு இருபது வயசு அதிகமான மாதிரி முகம் சோர்ந்து போயிருக்கு” என்று மாமாவில் அழுத்தம் கொடுத்துக் கேலியாகப் பேசியவன் மந்தாகினியிடம் திரும்பி

“ஹாய் மாமியார் நம்பர் டூ! நீங்க ஒரு புருசருக்குச் சரியா சாப்பாடு போடுறதே இல்லனு நினைக்கிறேன்… இவ்ளோ டயர்டா தெரியுறாரு” என்று நக்கலாய் கேட்க அவனது பேச்சில் சந்திரசேகர் எரிச்சலுற்றது வெளிப்படையாகத் தெரிந்தது.

கடுப்புடன் அவனிடம் ஏதோ சொல்ல வந்தவரின் கண்கள் மகளின் கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு நின்றிருந்தவனின் கரத்தில் படிந்ததும் அவரது வாய் தானாகவே மௌனத்தை மொழியாக்கிக் கொண்டது. இது வரை எப்படியோ இப்போது ஜெயதேவ் தனது மருமகனாகி விட்டான்; இனி அவனிடம் கடுமை காட்டினால் அது அஸ்மிதாவின் வாழ்வில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்திவிடுமே என்று பெண்ணைப் பெற்ற தந்தையாய் அவர் சற்று நிதானித்தார்.

அவர் இனி தன்னிடம் கவனமாகத் தான் நடந்து கொள்வார் என்பதை முன்னரே கணக்கிட்டிருந்த ஜெயதேவ் அடுத்தக் காயை நகர்த்துவதற்காகத் தான் அஸ்மிதாவைக் கூடவே அழைத்து வந்தது. அவன் எப்படி சந்திரசேகரைப் புரிந்து வைத்திருந்தானோ அதே போல தான் அவரது மகள் ஜெயதேவைப் பற்றியும் அவனது கணக்கிடும் குணத்தைப் பற்றியும் அனுபவத்தில் கண்டும் ரிஷியின் வாய்மொழி வாயிலாகவும் தெரிந்து வைத்திருந்தாள்.

சோழியன் குடுமி சும்மா ஆடாதே என்று அன்றைய தினம் யோசித்தபடியே தான் அவனுடன் கிளம்பி வந்திருந்தாள். சந்திரசேகரைக் கண்டதும் அவன் பேசிய தொனி ஏதோ பெரிதாக அவன் திட்டம் தீட்டியிருப்பதை அஸ்மிதாவுக்கு உணர்த்திவிட்டது.

ஆண்டு பொதுக்கூட்டம் ஆரம்பித்தது. நிறுமத்தின் ஓராண்டு கால செயல்பாடுகள் மற்றும் நிதியறிக்கைகள் பங்குதாரர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதன் பின் நிறுமத்தின் தலைமையை பெரும்பான்மை பங்குதாரர் கைக்கு மாறும் சமயமும் வந்தது.

விஸ்வநாதனின் செயல்பாடுகள் ஆரம்பக்கால கட்டத்தில் நிறுமத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்ததால் அதைப் பயன்படுத்தியே ஜெயதேவ் மிகவும் எளிதாக பங்குதாரர்களால் தலைமைப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான். கூடவே சிலருக்குச் சமீபகாலமாக வினாயகமூர்த்தியின் தலையீடு பிடிக்காமல் போனதும் ஒரு காரணம்.

அதன் பின்னர் நிறுமத்தின் இயக்குநர்கள் சிலர் ஓய்வு பெறுவதால் அவர்களிடத்தில் மற்றவர்களை அமர்த்தும் நேரம். ஒவ்வொருவர் பெயராக முன்மொழியப்பட ஜெயதேவ் தன் தரப்பில் உச்சரித்தப் பெயர் ‘அஸ்மிதா ஜெயதேவ்’.

அதைக் கேட்டதும் சந்திரசேகரின் மனதில் நிறுமத்தின் தலைமை பறிபோனதால் உண்டான கசப்புத்தன்மை அகன்று தனக்குப் பதிலாகத் தன் மகள் அவனைக் கவனித்துக்கொள்வாள் என்ற நிம்மதி உண்டானது. அதோடு அவரும் மந்தாகினியும் இயக்குனராகத் தொடர்ந்தனர்.

அன்றைய ஆண்டுப்பொதுக்கூட்டத்தின் முடிவில் நிறுமத்தின் நிர்வாக இயக்குனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் ஜெயதேவ் போர்ட்டால் நியமிக்கப்பட்டான். அந்தப் போர்டில் அஸ்மிதா, சந்திரசேகர் மற்றும் மந்தாகினியும் அடக்கம்.

அஸ்மிதா அவனது இலட்சியம் நிறைவேறட்டும் என்று இதற்கு ஒத்துக்கொண்டாள் என்றால், சந்திரசேகரும் மந்தாகினியும் மருமகன் என்பதற்காக ஏற்றுக்கொண்டனர். ஏனைய பங்குதாரர்கள் அவனிடம் இருக்கும் பெரும்பான்மை பங்குகளை மனதில் வைத்து போர்டின் முடிவை ஏற்றுக்கொள்ள ஆண்டு பொதுக்கூட்டம் இனிதே நிறைவுற்றது.

கூட்டம் முடிவுற்றதும் ஜெயதேவ் சந்திரசேகரைக் கண்டவன் அவரது முகம் சோர்வுற்றிருப்பதைக் கண்டு உச்சுக்கொட்டியவாறு அவரருகில் சென்றவன்

“மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மிஸ்டர் சந்திரசேகர்… உங்களை இப்போ பார்க்கிறப்போ எப்பிடி இருக்கு தெரியுமா? ரொம்ப வருசத்துக்கு முன்னாடி என்னோட அப்பாவை நீங்களும் வினாயகமூர்த்தியும் ஷீப்பா ப்ளே பண்ணி ஏமாத்துனிங்களே, அப்போ அவரும் இப்பிடி தான் சோர்ந்து போய் நின்னாரு… உயிரா நினைச்ச ஃப்ரெண்ட் வெறும் ஷேருக்காகத் தன்னை ஏமாத்திட்டானேனு அவரு மனசளவுல நொறுங்கி போயிருந்தாரு… அந்த வலி இன்னைக்கு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்… புரியலைனா இனிமே நான் புரியவைப்பேன்… சொந்தக் கம்பெனியில உங்களை செல்லாக்காசாக்கி உக்கார வைக்கல என் பேர் ஜெயதேவ் இல்ல” என்று இத்தனை வருட பழிவெறியை வார்த்தைகளில் தெளித்து பேசினான் அவன்.

இவை அனைத்தையும் கேட்டுவிட்டு நிமிர்ந்தவருக்கு ஏதோ புரிவது போல இருந்தது.

அப்போது பின்னால் அஸ்மிதா நின்று கொண்டிருப்பதை கவனித்தார் சந்திரசேகர். அவர் ஏதோ சொல்ல வருவதற்குள் விறுவிறுவென்று ஜெயதேவ்விடம் வந்தவள் “அதான் பழி வாங்கி முடிச்சிட்டிங்களே சார்! இனிமேலும் இவரைப் பேசியே கஷ்டப்படுத்தணுமா?” என்று அவன் தந்தையிடம் பேசும் குத்தல்மொழிகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் கேட்டுவிட்டாள்.

ஜெயதேவ் புருவத்தை ஏற்றி இறக்கியவன் “என் ஒய்ஃபுக்கு அவளோட அப்பா மேல எவ்ளோ பாசம்! புல்லரிக்குது அஸ்மி… இத்தனை வருசமா இந்தப் பாசம் கோமால இருந்துச்சா? இல்ல உனக்கு அம்னீஷியாவா? திடுதிடுப்புனு ஒரேயடியா பாசமழையா பொழிஞ்சு தள்ளுறியே மை டியர் ஒய்ஃப்” என்று கேலி விரவியக்குரலில் கேட்டுவிட்டு ஏளனமாக நகைத்தவன் அங்கிருந்து அகன்றான்.

அவன் சென்றதும் அஸ்மிதா சிலை போல நிற்க சந்திரசேகர் மகளிடம் “இப்போவும் ஒன்னும் ஆகல அஸ்மி… உனக்கு இந்த தேவ் வேண்டாம்… அவனோட பிஹேவியருக்கு அவன் எத்தனையோ காரணம் சொல்லலாம்… ஆனா எந்தக் காரணமும் எனக்குத் தேவையில்ல… எனக்கு என் பொண்ணோட வாழ்க்கை தான் முக்கியம்” என்று சொல்லிவிட்டு அவளது சிகையை நடுங்கும் கரங்களால் வருடிக் கொடுத்தார்.

அஸ்மிதாவுக்கு நீண்டநாட்களுக்குப் பின்னர் தந்தையின் அன்புச்செய்கையில் கண்கள் ஈரமானாலும் நிதானமானக் குரலில்

“அடிக்கடி லைப் பார்ட்னரை மாத்துற பழக்கம் எனக்கு இல்ல… அதுக்காக நான் பத்தாம்பசலித்தனமா கணவனே கண் கண்ட தெய்வம்னு கிடக்கிற டைப்பும் இல்ல… என் வாழ்க்கைய நான் பார்த்துக்கிறேன்… யாரோட அட்வைசும் எனக்குத் தேவையில்ல” என்று மொழிந்துவிட்டு அங்கிருந்து விறுவிறுவென்று வெளியேறினாள்.

அஸ்மிதாவுக்கும் ஜெயதேவ்வுக்குமான புரிதல் இன்னுமே அவருக்குத் தெரியாது என்பதால் இவர்களின் வாக்குவாதம் அவரது கண்ணுக்குக் கருத்து வேறுபாடுள்ள தம்பதியினரின் விவாதமாகவே தோன்றியது.

அதே எண்ணத்துடன் சந்திரசேகர் அங்கே கிடந்த இருக்கையில் அமர்ந்தவர் மகள் தேவ்வுடன் தான் வாழ்வேன் என்று பிடிவாதம் பிடிப்பதை கண்ணுற்றவருக்கு அதற்கு மாறாக தேவ் அவளைத் தனக்கு எதிராக ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறானோ என்ற ஐயம் சிறிதும் குறையாமல் என்ன செய்து மகளின் வாழ்வைச் சீரமைப்பது என்பது புரியாது விழித்தார்.

இதை மந்தாகினியிடம் கூற அவரோ ஜெயதேவ்வுக்குப் புத்தி சொல்லி தெளியவைக்கும் திறமைப்படைத்தவர் விஸ்வநாதன் ஒருவரே என்று சொன்னவர் அவரிடம் பேசினால் அஸ்மிதாவின் வாழ்வு சீராக வாய்ப்புள்ளது என்று கணவருக்கு உபாயம் கூறினார். சந்திரசேகர் மந்தாகினியின் உபாயத்தைக் கேட்டவர் விஸ்வநாதனிடம் இது குறித்துப் பேச முடிவெடுத்தார்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛