🌊 அலை 35 🌊

எண்ணற்றப் பாடங்களை

எளிமையாய் கற்றுத் தரும்

குருதட்சணை வேண்டாத ஆசான்!

அந்நியர்களிடம் நம்மை

மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கும்

குறும்புக்காரக் குழந்தை!

இந்த வாழ்க்கைக்குத் தான்

எத்தனை முகங்கள்!

லவ்டேல்

சங்கவியும் யாழினியும் நாளைய தினம் வைஷாலியின் நிச்சயத்துக்கும் மறுநாள் திருமணத்துக்கும் உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். திருமணம் கோவையில் என்பதால் அனைவரையும் தங்கள் இல்லத்தில் வந்து தங்கிக் கொள்ளும்படி பார்வதி அழைத்திருந்தார்.

ரேவதி வேறு அழகம்மை, விசாலாட்சி, லோகநாயகியுடன் பேசி நாளாயிற்று என்று சொல்லிவிட்டார். எனவே பெரியவர்கள் அனைவரும் ரேவதியின் வீட்டுக்கும் இளையவர்கள் அனைவரும் பார்வதியின் இல்லத்துக்கும் செல்வதாக முடிவெடுத்துவிட்டனர்.

குழந்தைகள் சாய்சரண், ஆரத்யா, விக்னேஷ், கணேஷ் நால்வருமே தாத்தாக்கள் மற்றும் பாட்டிகளுடன் சென்றுவிடுவதாகச் சொல்லிவிட்டனர். அதோடு சரவணனும் கார்த்திக்கேயனும் நேரடியாகத் திருமணத்துக்கு வந்துவிடுவதாகச் சொல்லிவிட பிரபாவதியும் லீலாவதியும் கூட சிறிது நிம்மதியாக மூச்சுவிட்டனர்.

இவ்வாறிருக்க மதுரவாணியும் ஸ்ரீரஞ்சனியும் சுரத்தின்றி இருப்பதை அழகம்மை கவனித்துவிட்டார். மகனிடம் அதைச் சுட்டிக் காட்டியவர்

“உன் மகளுக்கும் மருமகளுக்கும் என்னாச்சுனு விசாரிய்யா! பிள்ளைங்க மூஞ்சில தெளுச்சியே இல்ல!” என்று சொல்லவும் ரத்தினவேல் பாண்டியன் இருவரையும் என்னவென்று கேட்க ஆரம்பித்தார்.

ஸ்ரீரஞ்சனி கண் கலங்கியவள் “வேற ஒன்னும் இல்ல மாமா! இன்னும் கொஞ்சநாள்ல எங்க கல்யாணத்துக்கும் இப்பிடி எல்லாரும் ஒன்னா இருப்போம்.. அப்புறம் நாங்க மட்டும் வேற வீட்டுக்குப் போயிடுவோம்ல… அதை நினைச்சு தான் எனக்கும் மதுவுக்கும் வருத்தம்! இல்லயா மது?” என்று அவளையும் துணைக்கு அழைக்க அவளும் தலையாட்டி வைத்தாள்.

கூடவே “பெத்தவங்கள கண்ணீர் விட வைச்ச பிள்ளைங்க நல்லாவே இருக்க மாட்டாங்கனு கேள்விப்பட்டிருக்கேன்பா… நானும் வீட்டை விட்டு வந்து உங்கள கஷ்டப்படுத்திருக்கேன்… என்னால நீங்க எல்லாரும் அப்போ எப்பிடி துடிச்சுப் போயிருப்பிங்க? எல்லாம் சேர்ந்து தான் எனக்கு இன்னைக்கு இப்பிடி ஒரு நிலமைப்பா” என்று வாய்விட்டுச் சொல்லிவிட்டுக் கண்ணீருடன் தந்தையை அணைத்துக் கொண்டாள்.

ஸ்ரீரஞ்சனிக்கு அவளை எப்படி தேற்றுவது என்று ஒருபுறம் கவலை என்றால் இப்போது அவள் சொல்லி வைத்த அனைத்தையும் சமாளிப்பது எப்படி என்று இன்னொரு புறம் கவலை!

ரத்தினவேல் பாண்டியன் மகளின் தலையை வருடிக் கொடுத்தவர் “நீ எதையோ நினைச்சு மனசு வருத்தப்படுறனு மட்டும் தெரியுதுல… ஆனா ஒன்னு! என் மக மனசறிஞ்சு தப்பு பண்ண மாட்டானு எனக்குத் தெரியும்… நீ வீட்டை விட்டு வந்ததால தான் இன்னைக்கு நானும் மாப்பிள்ளையும் மனசு மாறி எந்த வம்பு தும்புக்குப் போகாம இருக்கோம்… உன் அண்ணனுங்க மருமகளுங்க கூட நல்லபடியா காலம் தள்ளுறானுங்க… இதெல்லாம் யாராலத்தா? உன்னால தான! எந்திரி பாப்போம்… அழக் கூடாது… ரத்தினவேல் பாண்டியன் மக அழலாமா?” என்று மகளை தாஜா செய்தவர் அவள் முகம் தெளியவும் தான் அவர் நிம்மதியாய் உணர்ந்தார்.

“போங்கத்தா! ரெண்டு பேரும் இப்பிடி சிரிச்ச முகமா இருக்கணும்… இதுக்குத் தான நாங்க பாடு படுறோம்… போய் தூங்குங்க… நாளைக்கு விடியக்காலைல கிளம்பணும்ல.. போங்க… மருமகளே! மதுரா கால்ல அடிபட்டிருக்குல்ல, அதுக்கு மாத்திரை போடணும்ல… இந்தச் சின்னக்கழுதை மாத்திரை சாப்பிடாம கள்ளத்தனம் பண்ணுவா! நீ ரெண்டு அடி போட்டு முழுங்க வை” என்று அவர்களிடம் இலகுவாகப் பேசி அனுப்பி வைத்தவரின் மனம் நிம்மதியுறவில்லை.

உடனே அவர் அழைத்தது வருங்கால மருமகனுக்குத் தான்! அவன் எடுத்ததும் வழக்கம் போல அன்பும் அக்கறையுமாய் பேசினான். அவனுக்குக் கோபம் அவர் மகள் மீது தானே!

“என் மக அழுது நான் பாத்தது இல்ல தம்பி! இன்னைக்கு என்னமோ சொல்லி அழுறா… அவ எதையோ நினைச்சுக் கலங்கி போயிருக்கானு மட்டும் தெரியுது… உங்களுக்கும் அவளுக்கும் எதுவும் பிரச்சனையா? உங்க கிட்ட எதுவும் துடுக்குத்தனமா பேசிட்டாளா தம்பி?”

அவர் படபடக்கவும் மறுமுனையில் மதுசூதனனுக்குச் சங்கடமாகி விட்டது.

“எங்களுக்குள்ள ஒரு பிரச்சனையும் இல்ல மாமா! நீங்க மனசைப் போட்டுக் குழப்பிக்காதிங்க… அவ சின்னப்பொண்ணு தான! அவ சொன்னத பெருசா எடுத்துக்காம போய் நிம்மதியா தூங்குங்க… நான் இருக்கேன்” என்று வாசன் ஐ கேர் விளம்பரம் போல சொல்லி அவரைச் சமாதானம் செய்தான்.

ஆனால் அவன் மனதுக்குள்ளும் உறுத்தல் இருந்தது. சங்கரநாராயணனும் சரி; தனுஜாவும் சரி; தன் விசயத்தில் என்றுமே சரியான விதத்தில் நடந்து கொள்ளவில்லை. அப்படி இருக்கையில் தான் அவர்களை முழுமையாக நம்புவது தவறு என உணர்ந்தவன் பொய்யே சொன்னாலும் மதுரவாணியைத் தன்னால் வெறுக்கமுடியாது என்பதில் தெளிவாய் இருந்தான்.

அலுவலகத்தில் பேசிய அனைத்தும் அந்த நிமிடத்தில் எழுந்த கோபத்தில் வெளியிட்ட வார்த்தைகள் தானே தவிர அவனுக்கு மதுரவாணி மேல் எந்தக் கோபமும் இல்லை. தன்னிடம் இந்த விசயத்தை மறைத்துவிட்டாளே என்று வெறும் வருத்தம் மட்டுமே! அதையும் நாளைய தினம் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணமிட்டிருந்தான்.

அதோடு தன்னைக் காதலித்த பிறகு அவள் அடிக்கடி அழுகிறாள்; இதை அறிந்தவனின் மனம் அவனைக் குத்திக் காட்டியது. எனவே நாளையோடு இப்பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு தனுஜாவுக்குத் தன் வாழ்வில் நிரந்தரமாய் இடமில்லை என்ற விசயத்தையும் புரியவைத்துவிட வேண்டும் என்று எண்ணியவனாய் தனது அறையில் அமர்ந்திருந்தான்.

அதற்குள் மணப்பெண்ணான தங்கை எதற்கோ அழைத்து வைக்க “இதோ வர்றேன் வைஷு” என்று கீழே ஹாலுக்குச் சென்றவன் அங்கே குழுமியிருந்த உறவுக்காரப் பட்டாளங்களின் உரையாடலில் கலந்து கொண்டான்.

அதே நேரம் ஸ்ரீரஞ்சனியிடம் கத்திவிட்டோமே என்ற குற்றவுணர்ச்சியில் ஸ்ரீதரும் இரவுணவு தொண்டையில் அடைத்ததைப் போல உணர்ந்தான்.

ரேவதி அதைக் கவனித்துவிட்டு என்னவென வினவ “ஒன்னுமில்லமா! எனக்கு ரொம்ப குளோஸ் ஃப்ரெண்ட் ஒருத்தன் என் கிட்ட ஒரு பெரிய பொய்யைச் சொல்லிட்டான்… அதைக் கேட்டதுல இருந்து என்னால அவன் மேல கோவப்படாம இருக்க முடியலம்மா… அவனை நம்பி நான் இன்னொரு இடத்துல வாக்கு குடுத்துட்டேன்… அவன் என்னை இப்பிடி பொய் சொல்லி பைத்தியக்காரன் ஆக்கிட்டானேனு ஆத்திரமா வருதும்மா!” என்று சொன்ன ஸ்ரீதர் இன்னும் சாப்பாட்டைக் கொறித்துக் கொண்டிருக்கவே ரேவதி அவனது தட்டை வாங்கியவர் தோசை விள்ளலை சட்னியில் தோய்த்து அவனுக்கு நீட்டினார்.

அன்னையின் மனம் புண்படக்கூடாதென வாங்கிக் கொண்டவன் சில வினாடிகளில் இயல்பாகச் சாப்பிட ஆரம்பிக்கவும் ரேவதி மெதுவாய் அவனைச் சமாதானம் செய்தார்.

“உன் குளோஸ் ஃப்ரெண்டுனு சொல்லுற… அப்போ ஏன் நீ இவ்ளோ தூரம் யோசிக்கிற ஸ்ரீ? அவன் பொய் சொன்னதாவே இருக்கட்டும்… ஆனா அதுக்குனு நீ அவன் மேல கோவப்பட்டு அவனை உன்னை விட்டு தூரமா நிறுத்தி வச்சா உங்களோட நட்புக்கு நீ மரியாதை குடுக்கலனு தானே அர்த்தம்!”

ஸ்ரீதர் ஏறிட்டு நோக்க ரேவதி பொறுமையுடன்

“நிறை குறைகளைக் கடந்து எந்த உறவு அன்பை மட்டும் அடிப்படையா வச்சு வளருதோ அது தான் நிலைச்சு நிக்கும் ஸ்ரீ! சரி தப்பு பாத்து நம்ம ஒவ்வொருத்தரையா ஒதுக்குனா கடைசில யாருமே மிஞ்ச மாட்டாங்க… ஏன்னா மனுசங்க எல்லாருமே சின்ன சின்ன குத்தம் குறையோட பிறந்தவங்க தான்! இப்பிடி எல்லாரையும் ஒதுக்குனா நம்ம தனியாளா நின்னுடுவோம்டா… புரிஞ்சு நடந்துக்கோ” என்று சொல்லிவிட்டு அவன் சிகையைக் கோதிக் கொடுத்தவர் காலி தட்டுடன் சமையலறையை நோக்கி நடந்தார்.

அதன் பின்னர் அவனது மனம் அன்னையின் வார்த்தைகளையே அசை போட்டது.

தான் இன்று ஸ்ரீரஞ்சனியிடம் கோபம் கொண்டது நியாயம் தான்! அதில் அவனுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் அவனது வார்த்தைகள் அதிகப்படி என்பதுவும் மறுக்க முடியாத உண்மை அல்லவா!

தோழியைக் காக்க அன்று அவள் அப்படி சொல்லியிருக்கலாம்! ஆனால் அதற்காக தன்னை காதலிப்பதாகச் சொன்னதும் பொய்யா என்ற தனது கேள்வி தவறு தான் என்பதை உணர்ந்தான்.

ஸ்ரீரஞ்சனிக்கு அழைப்போமா என்று அவன் கரங்கள் போனை எடுக்கச் சென்று திடீரென்று நின்றது.

அவள் தூங்கிப் போயிருப்பாளோ என்ற எண்ணத்துடன் போனை வைத்தவன் நாளை பேசிக் கொள்ளலாம் என்ற சிந்தனையுடன் தானும் உறங்கச் சென்றான்.

ஆண்களின் மனம் இவ்வாறு அமைதி பெற்றுவிட பெண்கள் இருவரும் கொஞ்சம் தெளிவு பெற்றுவிட்டனர்.

மதுரவாணியைத் தேற்றிய ஸ்ரீரஞ்சனி இனி தேவையற்று எதையும் யோசிக்கவேண்டாமென சொல்ல அவளும்

“சரி தான் ரஞ்சி! நம்ம செஞ்சது சரினு சொல்ல வரல… ஆனா நமக்குக் கிடைச்ச திட்டு ரொம்பவே அதிகம்டி… போதும்! இனிமே எந்த ஏச்சுப்பேச்சையும் வாங்கிக் கட்டிக்க வேண்டாம்… இந்த இருபத்து மூனு வருசம் நம்ம தனியா தானே இருந்தோம்.. இனியும் இருப்போம்” என்று நிமிர்வாகச் சொல்லிவிட்டுத் தெளிந்த மனதுடன் நித்திரையில் ஆழ்ந்தாள்.

அவளின் எண்ணமே ஸ்ரீரஞ்சனிக்கும்! இப்போது சற்று நிம்மதியாக உணர்ந்தவள் நிம்மதியான மனதுடன் உறங்க தொடங்கினாள்.

மறுநாள் விடியலிலும் இவ்வாறு தெளிந்த மனதுடன் இருவரும் எழுந்து எப்போதும் போல இயல்பாகத் தயாராயினர். கீழே கோயம்புத்தூர் செல்வதற்கு பெரிய அமளிதுமளியே நடந்து கொண்டிருந்தது.

மதுரவாணி தந்தையிடம் “ஃபர்ஸ்ட் நீங்க எல்லாரும் ரஞ்சி கூட கார்ல போயிடுங்க… எங்கள அப்புறமா வந்து அவ அழைச்சிப்பா” என்று சொல்லும் போதே ஹாலுக்குள் யாரோ வரும் அரவம் கேட்க அங்கே அவள் திரும்பிப் பார்த்தாள்.

மதுசூதனனும் ஸ்ரீதரும் தான் வந்திருந்தனர். இருவரது முகமும் குழப்பமின்றி தெளிவாய் ஜொலித்தாலும் அதில் ஒரு ஓரமாய் தெரிந்த குற்றவுணர்ச்சி அவரவர் வருங்கால மனைவியரின் கண்ணுக்குத் தப்பவில்லை.

ஆனால் இருவரும் அதைக் கண்டுகொண்டதாய் காட்டிக் கொள்ளவில்லை.

மதுசூதனன் மெதுவாய் “அண்ணி! நீங்க எல்லாரும் ரெடியா?” என்று சங்கவியிடம் கேட்க அவள் தலையாட்டினாள்.

“அப்பா நீங்க எல்லாரும் இவங்க ரெண்டு பேரு கூடவும் கார்ல போங்க… மா! லக்கேஜ் எடுத்து வச்சிட்டியா? அழகியோட கால் உளைச்சலுக்குப் போடுற தைலம் உங்க கிட்ட தானே அத்தை இருக்கு? ஓகே! எல்லாம் பெர்பெக்டா இருக்கு! நீங்க கிளம்புங்க” என்று அவர்களை அவசரப்படுத்தவும் அழகம்மை மதுரவாணியை முறைத்தவர்

“ஏன் இப்பிடி கால்ல சுடுதண்ணி ஊத்துன மாதிரி குதிக்கிற? இப்போ தான் பிள்ளைங்க வந்துருக்குதுங்க… குடிக்கிறதுக்கு காபி, டீனு எதாச்சும் குடுக்காம வந்ததும் வாசப்படிய காட்டுனா என்னடி அர்த்தம்?” என்று எகிறத் தொடங்கினார்.

மதுசூதனன் அழகம்மையைப் பார்த்து முறுவலித்தவன் “சரியா சொன்னிங்க பாட்டி! ஆக்சுவலி எனக்கும் வயிறு பசிக்குது” என்று சொல்ல

மதுரவாணி அவன் மீதுண்டான கடுப்பை மறைத்தபடியே

“அழகி உங்களுக்காக அங்க ரேவதி ஆன்ட்டி விருந்தே சமைச்சு வச்சிருப்பாங்க… உங்க கூடவே சேர்ந்து இவங்களும் அங்க சாப்பிடட்டும்! ஃபங்கசனுக்குப் போக ரெடியாறப்போ நல்ல நேரத்துல போகணும்னு நினைப்பியா, அதை விட்டுட்டு எப்போ பாத்தாலும் சாப்பாடு சாப்பாடுனு… நீ எப்போ இப்பிடி தின்னியா மாறுன?” என்று அதட்டலோடு அவரையும் பெரியவர்களையும் விரட்டாத குறையாக மதுசூதனனின் காரில் அமர வைத்துக் கார் கதவைப் பூட்டினாள்.

அவர்கள் அமரவும் இரு ஆண்களையும் முறைத்து வைத்தவள் ஸ்ரீரஞ்சனியைக் கை காட்டிவிட்டு

“நேத்து நான் சொல்ல வர்றதை காது குடுத்துக் கேக்காம ஒருத்தன் பேசியே என்னைக் கொன்னுட்டான்… நீங்க ஒரு வார்த்தைல என் ஃப்ரெண்டோட காதலையே கேள்விக்குறி ஆக்கிட்டிங்க… ப்ச்… அதைப் பத்தி பேச நானோ அவளோ விரும்பல… இன்னும் பத்து மாசத்துல கல்யாண தேதி முடிவு பண்ணிருக்காங்கல்ல… அது நடக்கிறப்போ நடக்கட்டும்.. அது வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் உங்களோட திருமுகத்தை அடிக்கடி எங்க கிட்ட காட்ட வேண்டாம்… இப்போ கிளம்புங்க” என்று பொதுப்படையாக இருவருக்கும் பதிலளித்துவிட்டு அவர்கள் செல்லவேண்டிய காரில் அமர்ந்தாள்.

ஸ்ரீரஞ்சனியும் ஏதும் பேசாதவளாய் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவள் காரைக் கிளப்பிக் கொண்டு சென்றுவிடவே ஸ்ரீதர் செய்வதறியாது திகைத்து நின்றான்.

மதுசூதனன் அவன் தோளை ஆதரவாய் தட்டிக் கொடுத்தவன் காரை தான் ஓட்டுவதாகச் சொல்லிவிட்டான். அனைவரையும் ஸ்ரீதரின் இல்லத்தில் கொண்டு போய் சேர்த்தவன் கிளம்புவதற்கு முன்னர் ஸ்ரீதரிடம்

“வருத்தப்படாதிங்க பாஸ்! நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன்… அது படி பண்ணுனா ரஞ்சியோட கோவம் குறைஞ்சிடும்… இன் ஃபேக்ட் நானும் அதைத் தான் பண்ணப்போறேன்” என்று தான் செய்யப் போவதை விளக்கிவிட ஸ்ரீதரின் முகம் சுவிட்ச் போட்டாற் போல ஒளிர்ந்தது.

“பட் அங்க எல்லாரும் இருப்பாங்களே! சப்போஸ் நம்மள பாத்துட்டா என்ன பண்ணுறது?” என்று கேட்டவனிடம்

“ஜென்ட்ஸ் எல்லாருமே உங்க வீட்டுல தானய்யா இருக்காங்க? அங்க லேடிஸ் ஒன்லி… ஓ! உங்க மாமனார் இருப்பாருல்ல… அவரு தூங்கிடுவாரு பாஸ்… வீ கேன் டூ இட்… ரொம்ப யோசிக்காதிங்க” என்று சொன்ன மதுசூதனனுக்கும் உள்ளூற உதறல் தான்.

அன்றைய மாலை மண்டபத்தில் நிச்சயத்தின் போது மதுரவாணி முறைத்த போதும் அவன் அவ்வாறே உணர்ந்தான்.

மணப்பெண்ணின் வருங்கால அண்ணி என்ற முறையில் வைஷாலி கூடவே இருந்து அவளுக்கு அலங்காரத்தில் உதவியபடி இருந்தாள்.

 தங்கையைக் காண வந்த மதுசூதனன் வழக்கம் போல மதுரவாணியின் அழகில் மெய் மறந்து நிற்க ராகினி மற்றும் ஸ்ரீரஞ்சனியுடன் சேர்ந்து அழகுநிலையப்பெண்களிடம் வைஷாலியின் முக அலங்காரத்தில் சில திருத்தங்களைச் சொல்லி கொண்டிருந்த மதுரவாணியோ அவனைக் கண்டதும் கண்களால் எரிக்காத குறையாக முறைத்து வைத்தாள்.

வைஷாலி கேலியாக “ஹலோ மிஸ் செல்பி புள்ள! கண்ணாலயே என் அண்ணனை படம் பிடிச்சது போதும்! பாவம் நீ முறைக்கிறதா நினைச்சுப் பயந்துடப் போறான்” என்று சொல்ல அந்த அறைக்குள் சிரிப்பலை.

மதுரவாணி பெயருக்கு இளித்து வைத்தவள் வைஷாலி தயாரானதும் அவளுடன் சேர்ந்து வெளியேறிவிட்டாள்.

ஸ்ரீரஞ்சனியும் உறவினர்களுடன் அமர்ந்திருந்த ரேவதியிடம் சிரித்த முகமாய் பேசியவள் ஸ்ரீதர் என்ற ஒருவன் அங்கே இருப்பதாகவே காட்டிக் கொள்ளவில்லை.

அவன் பேச முயன்றாலும் அவனை அழகாய் தவிர்த்து கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிவிட்டு வைஷாலியின் அருகில் அமர்ந்திருந்த தோழியுடன் புகைப்படத்துக்குப் போஸ் கொடுக்கச் சென்றுவிட்டாள்.

இந்தப் பெண்களின் கண்ணாமூச்சி ஆட்டத்தை ராகினி கவனித்துவிட்டாள். நேரே சென்று சங்கவியிடமும் யாழினியிடமும் தெரிவித்தவள்

“இப்பிடியே போச்சுனா சாக்லேட் பாயை நான் கல்யாணம் பண்ணிப்பேன்… அவ கிட்ட சொல்லிப் புரியவைங்க” என்று அமர்த்தலாக மொழிய திடீரென யாரோ அவள் மீது மோதி நிலை தடுமாறச் செய்யவும் எரிச்சலுற்றாள்.

“அது யாருய்யா சரியான இடிமாடுக்குப் பிறந்தவனா இருப்பான் போல… இவ்ளோ பெரிய இடத்துல நடக்கிறதுக்கா இடமில்ல?” என்றபடி திரும்பியவள் அங்கே நின்றிருந்த கௌதமை பார்த்ததும் அமைதியானாள்.

 மதுசூதனனின் நண்பனாயிற்றே! மரியாதைக்குறைவாகப் பேசிவிட்டோமே என்று அசட்டுநகையை உதிர்த்தவள்

“சாரி சார்! நான் எருமை மாடு எதுவும் மண்டபத்துக்குள்ள நுழைஞ்சிடுச்சோனு நினைச்சுக் கத்திட்டேன்” என்று சமாளித்து வைக்க யாழினியும் சங்கவியும் தலையிலடித்துக் கொண்டனர்.

தங்கள் சகோதரிகளுக்கு ஆண்டவன் நாக்கை நீளமாக வைத்து விட்டார்; தங்களுக்கோ இதயத்தைப் பலகீனமாக வைத்துவிட்டார்! இவர்கள் அடிக்கும் லூட்டியில் கதி கலங்குவதில் அந்த இதயம் இன்னும் பலகீனமாகி விடும் போல!

இருவரும் அவளை முறைக்க கௌதமோ அவள் தன்னை ‘இடிமாடு’ என்று சொன்னதால் மனதுக்குள் கறுவிக் கொண்டவன்

“உங்களுக்கு மாடு பேசுற லாங்வேஜ்லாம் தெரிஞ்சிருக்கே…. ஹவ் இஸ் இட் பாசிபிள்? ஒருவேளை இனம் இனத்தோடு சேரும்னு சொல்லுவாங்களே! அந்த மாதிரியா?” என்று கேலி செய்துவிட்டுக் கிளம்ப ராகினி பல்லைக் கடித்தபடி நிற்க

“ஏய்! போதும்டி… ஏற்கெனவே அவங்க ரெண்டு பேரு பண்ணி வச்ச கூத்தால உண்டான குழப்பம் இப்போ தான் தீர்ந்திருக்கு… நீயும் உன் பங்குக்கு எதையும் பண்ணி வச்சிடாத ராசாத்தி” என்று யாழினி வேண்டிக்கொள்ள உதட்டைச் சுழித்து அழகு காட்டிவிட்டு அவளும் வைஷாலியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

இந்தக் கலவரங்களுக்கு இடையே நிச்சயத்தாம்பளங்கள் மாற்றப்பட்டு லக்னப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. அதன் பின்னர் திலீபும் வைஷாலியும் இன்றைய நாகரிகத்தின் படி மோதிரமும் மாற்றிக் கொண்டனர்.

இத்துணை நிகழ்வுகளிலும் மதுசூதனனும் ஸ்ரீதரும் தத்தம் காதலிகளின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கி முறைப்பை மட்டுமே பரிசாக வாங்கிக் கட்டிக் கொண்டனர்.

நிச்சயம் நல்லபடியாக முடிந்து மணப்பெண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்றாயிற்று!

மதுசூதனன் வீட்டில் சொல்லிக் கொண்டு நேரே சென்ற இடம் மருத்துவமனை தான்! சங்கரநாராயணனின் நலம் விசாரிக்கச் சென்றவன் அவன் வருவதை அறியாது தந்தையிடம் தனுஜா பேசுவதைக் கேட்டுவிட்டான்.

“மதுக்கு பொய் பேசுனா பிடிக்காதுப்பா… கண்டிப்பா அந்த மதுரவாணிக்கும் அவனுக்கும் இதால பிரச்சனை வரும்… அவங்க பிரேக்கப் பண்ணுவாங்க.. அந்த சான்சை நான் யூஸ் பண்ணிக்குவேன்பா… தேங்க்ஸ்… நீங்க மட்டும் எனக்காக யோசிச்சுப் பொய் சொல்லலனா இப்போவும் மது எனக்குக் கிடைச்சிருக்க மாட்டான்”

“இனிமேலும் நான் உனக்குக் கிடைக்க மாட்டேன் தனு.. பிகாஸ் நமக்குள்ள என்னைக்குமே லவ் இருந்தது இல்ல!” என்றபடி உள்ளே நுழைந்த மதுசூதனனை அவள் எதிர்பார்க்கவில்லை. சங்கரநாராயணனும் தான்!

அவள் சமாளிக்க முயலும் போதே கையுயர்த்தி தடுத்தவன் “இங்க பாருங்க சார்! நீங்க உங்க இஷ்டம் போல உங்களோட ஸ்டேட்டசுக்கு ஏத்த இடமா பாத்து தனுவுக்கு மேரேஜ் பண்ணி வைங்க… ஆனா அந்த அஜய் மாதிரி ஆளானு விசாரிச்சுப் பாத்துட்டு பண்ணுங்க… அப்புறம் தனு! நீ ஒரு விசயத்த புரிஞ்சுக்கோ! வாணிக்கும் எனக்கும் இடைல எத்தனை சண்டை வேணும்னாலும் வரலாம்…

ஆனா எங்களுக்குள்ள பிரிவும் வராது! மூனாவது மனுசங்களும் வர மாட்டாங்க… நான் வரவும் விட மாட்டேன்! ஏன்னா நான் அவளை என் உயிரை விட அதிகமா காதலிக்கிறேன்… அர்த்தம் புரியுதா? காதலிக்கிறேன்… சோ இனிமே சீப் ட்ரிக்ஸ் எதையும் யூஸ் பண்ணாம உன் வாழ்க்கையை நீ வாழு… குட் பை… டேக் கேர் சார்” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென வெளியேறிவிட்டான்.

******************

நிச்சயம் முடிந்த பின்னே உறவினர்கள் மட்டுமே மண்டபத்தில் இருக்க மதுரவாணியும் தங்கள் வீட்டுப்பெண்களை அழைத்துக் கொண்டு காரில் ஸ்ரீரஞ்சனியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

ஸ்ரீரஞ்சனி அவளை அழைத்துக் கொண்டு தனது அறைக்குச் சென்றவள் அன்றைய அலங்காரங்களைக் களைந்து இலகுவான இரவுடைக்கு மாறிவிட்டு

“மது! மானிங் ஃபோர் ஓ கிளாக்குக்கு அலாரம் வைடி… நான் தூங்கப்போறேன்” என்று சொல்லிவிட்டுப் படுத்தவள் நித்திரையில் ஆழ்ந்துவிட்டாள்.

அதன் பின்னர் பார்வதியுடன் சிறிது நேரம் அரட்டை அடித்துவிட்டு அனைவருமே உறக்கத்தால் பீடிக்கப்பட அந்த வீடு அமைதியில் ஆழ்ந்திருந்தது.

நள்ளிரவில் ஸ்ரீரஞ்சனியின் மொபைல் அடிக்கவும் உறக்கம் களைந்தவள் தொடுதிரையில் மின்னிய பெயரை பார்த்ததும் அழைப்பை ஏற்றவள்

“இந்நேரத்துல எதுக்கு கால் பண்ணிருக்கிங்க ஸ்ரீ?” என்று வினவ

“ஓ! என் நேம் ஸ்ரீங்கிறது கூட உனக்கு நியாபகம் இருக்கே… நாட் பேட்” என்று பொய்யாய் பாராட்டியவன் ஸ்ரீதர் தான்!

தொடர்ந்து “நான் உங்க வீட்டு காம்பவுண்ட்குள்ள தான் நிக்கிறேன்… கொஞ்சம் வெளிய வா! உன் கிட்டப் பேசணும்” என்று சொல்ல ஸ்ரீரஞ்சனிக்கு ஆச்சரியம்!

இந்நேரத்தில் இவனுடன் தான் பேசுவதை யாராவது பார்த்துவிட்டால் தன்னுடன் சேர்ந்து இவனது கௌரவத்துக்கும் அது இழுக்கு தானே!

“முடியாது! உங்களுக்கு அறிவுனு ஒன்னு இருந்துச்சுனா இப்போவே கிளம்பி வீட்டுக்குப் போங்க… டுமாரோ மண்டபத்துல வச்சு பேசிக்கலாம்”

“எப்பிடி? இன்னைக்கு முழுக்க என் கூட ஹைட் அண்ட் சீக் விளையாடுனியே! அப்பிடியா? சாரி ரஞ்சி! அந்த விளையாட்டு சின்னவயசுல இருந்தே எனக்குப் பிடிக்காது… நீ இப்போ வெளிய வந்து என்னை மீட் பண்ணலனா நான் இங்கயே தான் நிப்பேன்… அப்புறம் உன் இஷ்டம்” என்றவன் அவள் பேசுவதற்கு வாய்ப்பே தராமல் போனை வைத்துவிட ஸ்ரீரஞ்சனிக்குச் சுவரில் போய் முட்டிக் கொள்ளலாமா என்று கூட தோணிவிட்டது.

ஆனால் ஸ்ரீதரின் பிடிவாதம் பற்றி அறிந்திருந்ததால் வேறு வழியின்றி அவனைப் பார்க்க அவளது அறையிலிருந்து யாருக்கும் தெரியாமல் பூனை போல வெளியேறினாள் அவள்.

அலை வீசும்🌊🌊🌊