🌊 அலை 31 🌊

காதலை மட்டுமே

கண்ட உன் விழிகளில்

முதல் முறையாய்

விலகலைக் கண்டு

விக்கித்து நிற்கிறேன்!

ஏனோ இன்று புரிகிறது

உன் காதலின் ஆழம்!

“மா! நான் லவ்டேல் வரைக்கும் போயிட்டு வர்றேன்.. ரஞ்சனிக்குக் காயம் ஆறிடுச்சு… இருந்தாலும் ஒரு தடவை போய் பாத்துட்டு வந்துடுறேன்” என்றபடி கிளம்பிய மகனை மெச்சுதலாய் பார்த்தார் ரேவதி.

காரின் சாவியைச் சுற்றிக் கொண்டே உற்சாகமாய் சீட்டியடித்தபடியே கிளம்பிய மகனை மனம் நிறைந்த புன்னகையுடன் பார்த்த அந்த அன்னையின் உள்ளம் மகிழ்ச்சியில் நிரம்பி வழிந்தது.

அவரும் பார்வதியுமாய் தம் மக்களின் திருமணம் குறித்துப் பேசி முடித்துவிட்டனர். அதோடு அவர்களுக்குள் ஒரு மெல்லிய நேசம் துளிர் விடுவதை அந்த அன்னையர்கள் இருவரும் ஆனந்தத்துடன் ரசித்துக் கொண்டிருந்தனர் எனலாம்.

ஸ்ரீரஞ்சனிக்கு அடி பட்ட தினத்திலிருந்து அவளைத் தினமும் நேரில் சந்தித்து நலம் விசாரிப்பதை ஸ்ரீதர் வழக்கமாக்கி விட்டிருந்தான். அவளுக்கும் அவன் தினந்தோறும் தன்னைச் சந்தித்து நலம் விசாரிக்கும் தருணங்கள் மிகவும் பிடித்து விட்டது.

அவன் வரும் நேரத்துக்காக அவள் காத்திருந்தாள் எனலாம். ஒவ்வொரு நாளும் மலர்க்கொத்துடன் வரும் அவனது ஆர்வம் ததும்பிய முகத்தைக் காணும் ஆவல் அவளுக்குள்ளும் எழும். அவன் வரச் சற்று தாமதம் ஆனாலும் யோசனையுடன் உதடு கடித்தபடி வாயிலை நோக்குபவளை அவளது தங்கை கேலி செய்வாள்.

இவ்வாறிருக்க இன்றைய தினமும் அவனுக்காக காத்திருந்தாள் ஸ்ரீரஞ்சனி. அவளை அதிகநேரம் காத்திருக்க வைக்காமல் ஸ்ரீதரும் வந்துவிட்டான்.

ரோஜா பூங்கொத்தை அவளிடம் நீட்டியவனைப் புன்னகை ததும்பும் முகத்துடன் ஏறிட்டாள் அவள். அன்றைய தினம் கொடுத்த மலர்க்கொத்தில் இடம்பெற்ற பூக்களின் நிறம் சிவப்பு என்பதால் அவளுக்கு உள்ளுக்குள் குறுகுறுப்பு எழுந்தது.

“இன்னைக்கு என்ன ரெட் ரோஸ் குடுத்திருக்கிங்க சாக்லேட் பாய்? என்னமோ இடிக்குதே” என்று கலாய்த்த ராகினியை ஸ்ரீரஞ்சனி முறைத்து வைக்க ஸ்ரீதரின் கண்களோ அவள் மீதே நிலைத்திருந்தது.

அதைக் கவனித்தவளாய் அவர்களுக்கிடையே தொந்தரவாய் இருக்க வேண்டாமென ராகினி காபி போடும் சாக்கில் சமையலறை பக்கம் ஒதுங்கிவிட இருவரும் தனித்து விடப்பட்டனர்.

“இப்போ எப்பிடி இருக்கு ரஞ்சினி? பெயின் எதுவும் இருக்குதா? ஆர் யூ ஓகே?”

“ஐ அம் ஓகே! டெய்லியும் நீங்க எப்போ வருவிங்கனு நான் வெயிட் பண்ணுறேன் தெரியுமா? அதெல்லாம் விடுங்க ஸ்ரீ! ராகி சொன்ன மாதிரியே எதுக்கு ரெட் ரோஸ் குடுத்திங்க?”

“ரெட் ரோஸ் குடுத்தாலாச்சும் சிலருக்கு என் மனசுல உள்ளது புரியுதானு பாக்குறேன்… ஆனா அவங்க இப்போவும் ஏன் ரெட் ரோஸ் குடுத்தேனு கேள்வி தான் கேக்குறாங்க! கோயம்புத்தூர் பொண்ணுங்க எல்லாருமே இப்பிடி தானோ!” என்று குறும்பாய் கேட்டான் ஸ்ரீதர்.

“ஹான்! திருநெல்வேலி பசங்க எல்லாரும் ரோஸ் குடுத்தே குழப்புறவங்களா இருந்தா கோயம்புத்தூர் பொண்ணுங்க கேள்வி கேக்க தான் செய்வாங்க” என்றாள் அதே குறும்புடன் அவளும்.

அவளுடன் இப்படி பதிலுக்குப் பதில் பேசுவது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

அவனது விழிகளில் தினந்தோறும் அவள் கண்டுணர்ந்த ஆர்வம் இன்றைய தினம் அவன் கொண்டு வந்த சிவப்பு ரோஜாக்களால் பரிணாம வளர்ச்சி அடைந்ததாலோ என்னவோ அந்தப் பார்வையில் ஸ்ரீரஞ்சனியின் கன்னத்தில் நாணச்சிவப்பு ஏறியது.

அவன் அதை ரசிக்கும் போதே ராகினி காபி கோப்பையுடன் திரும்பினாள்.

“ஐம் ரியலி சாரி மிஸ்டர் சாக்லேட் பாய்! நான் லேட்டா வரணும்னு தான் நினைச்சேன்… பட் காபி ஒன்னும் பாயாசம் இல்லையே! எவ்ளோ இழுத்தடிச்சாலும் பத்து நிமிசத்துக்கு மேல காபி போடுற டைமை நீட்டிக்க முடியல”

இருவரும் தலையைக் குனிந்து நகைத்தபடி காபி கோப்பைகளை எடுத்துக் கொள்ளவும் அவள் படிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு மாடியறைக்குச் சென்றுவிட்டாள்.

அதன் பின்னர் குடித்தக் காபி கோப்பைகளை எடுத்துக் கொண்ட ஸ்ரீரஞ்சனியுடன் சமையலறைக்குள் நுழைந்தவனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி கோப்பைகளைக் கழுவ ஆரம்பித்தபடியே அவனுடன் பேச்சு கொடுத்தாள் அவள்.

“என்ன டி.சி.பி சார்? என் கிட்ட எதாச்சும் சொல்லணுமா?”

“ம்ம்.. யெஸ்… நிறைய பேசணும்… இந்த க்ளீனிங் ஒர்க்ஸ் எல்லாம் முடிஞ்சு ரிலாக்ஸ் ஆனதுக்கு அப்புறம் பேசலாமா?”

“ஓ! பேசலாமே” என்றவள் விறுவிறுவென கோப்பைகளையும் காபி போட்ட பாத்திரத்தையும் கழுவி கவிழ்த்து வைத்துவிட்டு அவனுடன் அங்கிருந்து வெளியேறினாள்.

இருவரும் வீட்டின் முன்னே இருந்த வராண்டாவில் கிடந்த சிறுமேஜையுடன் கூடிய நாற்காலிகளில் ஆளுக்கொன்றாய் இடம்பிடித்து அமர்ந்து கொண்டனர்.

சில நிமிடங்கள் மௌனத்தில் கழிய இருவரின் விழிகளும் பேசிக் கொண்டன அவர்களின் இதழ்களுக்குப் பதிலாக.

“இனிமே டெய்லி உன்னை மீட் பண்ண வர்றப்போ ரெட் ரோஸ் கொண்டு வரலாம்னு இருக்கேன்”

இதழ்க்கடையில் வெளிவரத் துடித்த புன்னகையை அடக்கிய வண்ணம் சொன்னவனை குறும்பாய் நோக்கினாள் ஸ்ரீரஞ்சனி.

“தாராளமா கொண்டு வாங்க டி.சி.பி சார்… எங்க வீட்டு பூஜை ரூமோட இண்டீரியருக்குச் அங்க இருக்குற சாமி போட்டோ எல்லாத்துக்கும் ரெட் ரோஸ் வச்சா அம்சமா அழகா இருக்கும்” என்று சொல்லிச் சிலாகிக்க ஸ்ரீதர் தலையில் அடித்துக் கொண்டான்.

“எதுக்கு சாமி போட்டோவோட நிறுத்திட்ட? உன்னோட கலருக்கு உன் காதுல அந்த ரெட் ரோசை வச்சா கூட நல்லா இருக்கும்… ஒரு பொக்கே பூவையும் வச்சாலும் ஓகே! இல்லனா அந்தப் பக்கம் ஒன்னு; இந்தப் பக்கம் ஒன்னுனு வச்சாலும் ஓகே!” என்று கடுப்புடன் உரைத்தவனைப் பார்த்து நமட்டுச்சிரிப்பு சிரித்துக் கொண்டாள் அவள்!

கூடவே “சரி சரி! கோவப்படாதிங்க… நீங்க டெய்லியும் ரெட் ரோஸ் பொக்கே வாங்கிட்டு வர்றதுல எனக்கு எந்த அப்ஜெக்சனும் இல்ல… இந்த மாதிரி பொக்கேயோட நீங்க வர்ற ஒவ்வொரு ஈவினிங்குக்காகவும் காத்திருக்கிறது எனக்குப் பிடிச்சிருக்கு… இன் ஃபேக்ட் இதை லைஃப் லாங் அனுபவிக்கணும்னு ஆசையா கூட இருக்கு” என்று பூடகமாய் தன் மனவுணர்வைச் சொன்னவளைக் குறுநகையுடன் எதிர்கொண்டவன்

“ஐ அம் ரெடி டு டூ தட்… டெய்லிக்கும் பொக்கே வாங்குறதுக்கான காசை நான் மானிங் டியூட்டிக்குக் கிளம்புறதுக்கு முன்னாடி நீ குடுத்துவிட்டுட்டேனா நோ ப்ராப்ளம்… இல்லனா நான் வாங்குற சம்பளம் உனக்கு பொக்கே வாங்குறதுக்கு மட்டும் தான் பத்தும்… டீல் ஓகேவா?” என்று சளைக்காமல் அவளது பாணியிலேயே கேட்க ஸ்ரீரஞ்சனி புருவம் உயர்த்தி மெச்சுதல் பார்வை பார்த்தாள்.

“நாட் ஓகே! லைப் பார்ட்னருக்கு பொக்கே வாங்கி தர்ற செலவைக் கூட நீங்க பண்ண மாட்டிங்களா டி.சி.பி சார்? சரியான கஞ்சூஸ்சா இருப்பிங்க போல! எனக்கு இப்பிடி எண்ணி எண்ணிச் செலவு பண்ணுறதுலாம் பிடிக்காது… சோ சீக்கிரமே உங்களை மாத்திக்கோங்க”

“இதுக்குப் பேரு கஞ்சத்தனம் இல்ல… இதைச் சிக்கனம்னு சொல்லுவாங்க மேடம்! வேணும்னா ஒன்னு பண்ணலாம்! உங்களோட சேலரிக்குப் பதிலா கவி மேடம் கிட்ட ஸ்பெஷல் பெர்மிசன் வாங்கிட்டு டெய்லி ஒரு பொக்கேவ வாங்கிக்கலாம்… இது சூப்பர் ஐடியால்ல?”

இருவரும் சிறுபிள்ளைத்தனமாய் உரையாடினாலும் ‘நீ தான் வருங்காலம்; அதை மாற்றிக் கொள்ளும் எண்ணம் எனக்கில்லை’ என்பதைத் தெள்ளத்தெளிவாய் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டனர்.

‘நான் உன்னைக் காதலிக்கிறேன்; ஐ லவ் யூ’ என்ற அலங்கார வார்த்தைகளால் தான் காதலைச் சொல்ல வேண்டும் என்று ஏதாவது கட்டாயம் இருக்கிறதா என்ன?

இது போன்ற சிறுபிள்ளைத்தனமான பேச்சுக்கள் கூட காதல் கொண்ட மனங்களின் அழகிய எண்ணப் பரிமாற்றம் தான்!

இந்த இரு ஜோடிகளுக்கிடையே புரிதலும் நேசமும் அழகாய் துளிர ஆரம்பிக்க மற்றொரு ஜோடியோ கருத்து வேறுபாட்டால் சற்று விலகி இருந்தனர்.

மதுசூதனனை மதுரவாணியின் “உன் லிமிட் என்னவோ அதுல இருந்துக்கோ” என்ற வார்த்தை மிகவும் காயப்படுத்தி விட்டது. தனது ஆசை, கனவுகள் எல்லாம் அவளாய் இருக்க அவளோ தன்னை எப்போதும் தள்ளி வைத்தே பார்க்கிறாளே என்ற ஆதங்கம் அவனுக்கு என்றைக்குமே உண்டு!

ஸ்ரீரஞ்சனிக்கு நடந்த சம்பவத்தால் அந்த ஆதங்கம் இன்னுமே அதிகரித்தது எனலாம்! அந்த நாளிலிருந்து பெரிதாய் மதுரவாணியிடம் பேசுவதில்லை அவன்! அன்னையும் சகோதரியும் கேட்டால் “இப்போவே பேசிட்டா மேரேஜுக்கு அப்புறம் பேச எதுவுமே இல்லாம போயிடும்” என்று சொல்லி சமாளித்தான்.

அதே நேரம் அவனது மனம் அவளது அருகாமையை நாடிய போதெல்லாம் “அவ உனக்குனு ஒரு லிமிட்டை ஃபிக்ஸ் பண்ணிவச்சிருக்கா… அத தாண்டி போய் அவ கிட்ட பேசியே ஆகணுமா? இன்னும் உன்னை அவ மனசுக்கு நெருக்கமானவனா நினைக்காதவ கிட்ட நீ மட்டும் உருகிறதால எதுவும் நடக்கப் போறதில்ல மது! ஸ்டே அவே ஃப்ரம் ஹெர்… மத்தபடி அன்போ பாசமோ காதலோ எதுவா இருந்தாலும் ஆப்டர் மேரேஜ் பாத்துக்கலாம்” என்று அவனது மனசாட்சி அவனைத் தடுத்து நிறுத்திவிடும்.

அதனால் தானோ என்னவோ கடந்த சில தினங்களில் வழக்கமாய் காலை மற்றும் இரவு நேரங்களில் தவறாது வந்து செல்லும் ‘குட் மானிங்’ ‘குட் நைட்’ எனும் மெசேஜ்கள் கூட இப்போதெல்லாம் மதுரவாணிக்கு வருவதில்லை.

அவளுக்கு அவனது இந்த திடீர் மாற்றமும் விலகலும் மனதுக்குப் பாரமாய் இருந்தது. ஆனால் தான் பேசிய வார்த்தைகளின் தீவிரம் அவனை அவ்வளவு பாதித்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது.

வழக்கம் போல அன்றைய மாலையில் அலுவலகத்தில் இருந்து ஸ்கூட்டியில் திரும்பியவள் எப்போதும் போல அவளது மசால் டீ மற்றும் கீரை வடையை உள்ளே தள்ளிவிட்டு ஸ்கூட்டியை உதைக்க அது கிளம்புவேனா என அடம்பிடித்தது.

அந்தத் தாத்தாவிடம் கேட்டு அவரது கடைக்கு ஒதுக்குப்புறத்தில் அவர்களின் சாமான்களைப் பூட்டி வைக்கும் அறையில் ஸ்கூட்டியை நிறுத்தியவள்

“நான் நாளைக்கு மெக்கானிக் கிட்ட சொல்லி எடுத்துக்கிறேன் தாத்தா” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குச் செல்ல பொடிநடையாக நடந்தாள்.

அன்றைய தினம் வருணபகவானுக்கு லவ்டேலில் ஸ்பெஷல் டியூட்டி போல! தனது மொத்த தண்ணீரையும் கொட்டித் தீர்க்கும் ஆர்வத்துடன் வானம் கருங்கடலாய் மாற மழைத்துளிகள் அம்மண்ணை நனைக்கத் தொடங்கியது.

முதல் துளி மண்ணில் விழுந்ததும் கிளர்ந்தெழும் மண் வாசம் நாசியைத் துளைக்க அதை அனுபவித்தபடி நடந்தாள் மதுரவாணி.

மழை எப்போதுமே அழகு தான்! பூமிக்கு இலவச வாட்டர் சர்வீஸ் செய்து சுத்தமாக்கி விட்டு அடுத்த சர்வீஸ் எப்போது என்றே சொல்லாமல் ஓடிவிடும் அதன் கள்ளத்தனம் கூட அழகு தான்!

அதை ரசித்தவளாய் ஹேண்ட்பேக் சகிதம் ஓட்டமும் நடையுமாய் மழை பெரிதாவதற்கு முன்னர் வீட்டுக்குச் சென்றுவிட வேண்டும் என்று வேகமாக நடந்தாள்.

அப்போது அவளைக் கடந்தது மதுசூதனனின் ரெனால்ட் க்விட். அந்தக் காரைக் கண்டதும் தன்னை அழைத்துச் செல்வான் என்று ஆவலுடன் நிற்கையிலேயே அந்தக் கார் அவளைக் கடந்து சென்றது.

அவன் நிறுத்தித் தன்னை அழைத்துச் செல்வான் என்ற எதிர்பார்ப்புடன் புன்னகை ததும்பும் முகத்துடன் நின்றவளுக்கு அவன் கண்டுகொள்ளாது சென்றது வழக்கமான கோபத்துக்குப் பதிலாக இனம்புரியா வலியை உண்டாக்கியது.

வலியின் அடுத்தக்கட்டம் கண்ணீர் தானே! விழிகள் கண்ணீரால் நிரம்பி தனது உபரிநீரைக் கன்னங்களில் வழியவிட அந்தப் பெண்ணின் அழுகை யாருக்கும் தெரிந்துவிடக் கூடாதென்ற வானத்தின் கரிசனம் காரணமாக மழை வேகமாக பொழியத் துவங்கியது.

மதுரவாணி கண்ணீருடன் நடக்கத் தொடங்கினாள். தான் பேசிய வார்த்தைகள் அதிகப்படி தான்! ஆனால் இவ்வாறு வெறுத்து ஒதுக்கும்படி தான் என்ன செய்துவிட்டோம்? எதற்காக கண் மண் தெரியாமல் காதலைப் பொழிய வேண்டும்? பின்னர் எதற்காக எப்படியோ போய் தொலை என்று விட்டேற்றியாய் நடந்து கொள்ள வேண்டும்?

எண்ணங்களின் சுமை மூளையில் ஏற ஏற வீட்டுக்கு வந்து சேருவதற்குள் அழுகையும் இந்த எண்ணச்சுமையும் சேர்ந்து அவளுக்குத் தலைவலியே வந்துவிட்டது.

வீட்டுக்குள் நனைந்த உடையுடன் அவள் நுழையும் போது சங்கவி யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தாள். அவள் வருவதைக் கண்டதும் “ஹான்! அவ வீட்டுக்கு வந்துட்டா… நீங்க வொரி பண்ணிக்காதிங்க… மழைல நனைஞ்சிட்டா” என்றவள் தங்கையிடம்

“மது! ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு? மூஞ்சிலாம் சிவந்துருக்கேடி! என்னாச்சு? ஆபிஸ்ல ஏதும் பிரச்சனையா?” என்று கேட்பது மறுமுனையில் பேசிக் கொண்டிருப்பவனின் செவியில் தெளிவாக விழுந்தது.

அதற்கு பதிலாக “இல்லக்கா! மழைல நனைஞ்சதுல ஜலதோசம் பிடிச்சிடுச்சுனு நினைக்கேன்” என்ற மதுரவாணியின் நமநமவென்ற குரலும் அவன் செவியை அடைந்தது.

“ஓகே அண்ணி! நீங்க வாணிய கவனிங்க… அவளோட குரல் சரியில்ல… என்ன பிரச்சனைனு பாருங்க” என்று சொல்லிவிட்டுப் போனை வைத்துவிட்டான் மதுசூதனன்.

அவனும் பாதையில் தன்னைக் கண்டதும் புன்னகையுடன் நின்றவளைப் பார்த்துவிட்டான். ஆனால் காரை நிறுத்தாது சென்றும் விட்டான். செல்லும் போதே பக்கவாட்டுக் கண்ணாடியில் மதுரவாணியின் முகத்தில் வேதனைக்கோடுகள் உண்டாவதைக் கவனித்துவிட்டான்.

எனவே தான் சங்கவிக்கு அழைத்து விசாரித்தான். இப்போதும் அவளது குரல் சரியில்லை தான்! ஆனால் தான் ஏதேனும் கேட்க போக அதற்கு உன் எல்லைக்குள் இரு என்ற பதில் இன்னொரு முறை மதுரவாணியிடம் இருந்து வருமானால் அவனால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாது.

அதனால் அமைதியாக காரைச் சாலையில் செலுத்த ஆரம்பித்தவன் வீடு போய் சேர்ந்தான்.

அதே நேரம் மதுரவாணியோ தமக்கையின் அறிவுரைக்கேற்ப வெந்நீரில் குளித்துவிட்டு அவள் போட்டுக் கொடுத்த துளசி கஷாயத்தை ஒரு சொட்டு கூட மிச்சம் வைக்காமல் அருந்தினாள்.

சிறிது நேரம் குட்டீசுடன் விளையாடியவள் யாழினி அவளது வீட்டுக்குக் கிளம்பவும் ராகினியுடன் சேர்ந்து ஸ்ரீரஞ்சனியை வம்பிழுக்க ஆரம்பித்தாள்.

கூடவே “என்ன வீட்டுல ரெட் ரோஸ் வாசம் கும்முனு வீசுது?” என்று ஸ்ரீரஞ்சனியைக் கேலி செய்தவள் அவளுக்கும் ஸ்ரீதருக்கும் நடந்த உரையாடலை ஸ்ரீரஞ்சனி விளக்கிய விதத்தில் அவளுக்காக மகிழ்ந்தாலும் திடீரென நினைவு மதுசூதனன் வசம் தாவ அமைதியானாள்.

தனக்கு மீண்டும் தலை வலிப்பதாய் சொன்னவள் தான் உறங்கச் செல்வதாய் சொல்லிவிட்டுத் தனது அறைக்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டாள்.

படுக்கையில் விழுந்தவளுக்கு மனம் ஏனோ வலித்தது. இப்போது கூட தனக்கு ஒரு முறை அழைத்து தன்னைப் பற்றி விசாரிக்கவில்லையே என்று மதுசூதனன் மீது உண்டான ஆதங்கம் அவளுக்கு அழுகையை வரவழைக்க விசும்பலோடு உறங்கிப் போனாள் அவள்.

அவள் சீக்கிரமே உறங்கிவிட்டதாலோ என்னவோ சிறிது நேரம் கழித்து பால்கனியில் யாரோ குதிப்பது போன்ற அரவம் கேட்டு நல்ல உறக்கத்தின் நடுவில் விழித்தாள்.

கண்ணைச் சுருக்கி மெதுவாய் படுக்கையிலிருந்து இறங்கினாள். அந்த அறையின் நடுவே நின்றவள் மரக்கதவின் நடுவே பதிக்கப்பட்ட கண்ணாடி வழியே வெளியே வேடிக்கை பார்த்தவள் யாரோ அங்கே நடமாடுவது தெரிந்து சில வினாடிகள் இதயம் துடிக்க மறந்தவளாய் அதிர்ந்தாள்.

ஆனால் பின்னர் சுதாரித்து யாரோ திருடன் தான் வந்திருக்க வேண்டுமென தீர்மானித்தவளய் தனது அறையிலிருந்த ஃப்ளவர் வாஷை எடுத்தவள் அதை முதுகுப் புறமாய் மறைத்தபடி பால்கனி கதவைத் திறந்தாள்.

அங்கே இருள் உருவமாய் நின்றவனாய் அவளைக் கண்டதும் அருகில் வர ஃப்ளவர் வாஷை ஆங்காரத்துடன் ஓங்கியவளின் கைகள் அவசரமாய் அவனால் சிறைப்பிடிக்கப்பட கோபத்தில் அவனது கால்களை உதைக்கச் சென்றவள் அவளது செவிமடலில் உரசிய உதடுகள் உச்சரித்த “வாணி நான் தான்! சத்தம் போடாத ப்ளீஸ்” என்ற வார்த்தையில் சிலையானாள்.

உருவம் புலப்படாத அந்த இருளில் இருவரது மூச்சுச்சத்தம் மட்டுமே அங்கே ஆட்சி செய்ய இத்தனை நாட்கள் தமக்குள் இருந்த ஒட்டாத்தன்மையை களைய முற்பட்டவர்களாய் நின்றிருந்தனர் மதுரவாணியும் மதுசூதனனும்.

அலை வீசும்🌊🌊🌊