🌊 அலை 3 🌊

தெளிவான குளத்தில் யாரோ

கல்லை விட்டெறிய வட்ட அலைகளாய்

எழும் உன் நினைவுகள்….

குளம் தெளிந்த பின்னும் அலை ஓயவில்லை!

மனம் தெளிந்த பின்னும்

உன் நினைவு அகலவில்லை!

மதுசூதனனின் தட்டில் இன்னும் இரண்டு இட்லிகளை வைத்துச் சாம்பாரை தாராளமாக ஊற்றினார் மைதிலி. அவர் இவ்வளவு அமைதியாக இருப்பது ஏதோ பெரிய வாக்குவாதம் ஆரம்பிக்கப் போவதற்கான அறிகுறி என முன்னரே கணித்ததாலோ என்னவோ ராமமூர்த்தியும் வைஷாலியும் அமைதியாக இட்லியில் கவனமாயினர்.

மைதிலி மகன் சாப்பிடுவதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவர் அவனது வாட்சில் பச்சைநிறத்தில் துணி ஒன்று சிக்கியிருப்பதைப் பார்த்துவிட்டு

“மது! உன் வாட்ச்ல என்னமோ சிக்கியிருக்குது பாரு… என்னடா அது?” என்று கேட்க மதுசூதனனின் புருவங்கள் யோசனையில் சுருங்கி விரிய அடுத்த நொடி அவனை இரயில் நிலையத்தில் இடித்துவிட்டு முகத்தைக் கூடப் பார்க்காது சாரி கேட்டுவிட்டு ஓடிய அந்தப் தாவணிப்பெண்ணின் நினைவில் அவன் இதழில் குறுஞ்சிரிப்பு மலர்ந்தது.

வெந்தய நிற பாவாடை, பச்சை நிற பட்டுத்தாவணியில் நீண்டப்பின்னலுடன் அவனை உரசிச் சென்றவளின் ஸ்பரிசம் ஜில்லென்று தோணவும் அவன் மனதில் நிறைந்திருவளின் கோபமுகம் மனக்கண்ணில் வலம் வர “சே! என்ன யோசிக்குற மது? நீ கனவுல கூட அவளைத் தவிர இன்னொரு பொண்ணை பத்தி யோசிக்கலாமா?” என்று தன்னைத் தானே மானசீகமாகக் கடிந்து கொண்டான்.

மைதிலியோ தான் கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்லாது ஒரு சில நிமிடங்களில் முகத்தில் நவரசத்தையும் காட்டிவிட்டுப் பின்னர் தலையில் அடித்துக் கொண்ட மகனது தோளைத் தட்டியவர் “என்னடா ஆச்சு? ஏதோ யோசிச்ச, சிரிச்ச… நீயே உன் தலைல அடிச்சிக்கிற… என்ன நடக்குதுடா மகனே?” என்று கேட்க அவனருகில் அமர்ந்து இவ்வளவு நேரம் இட்லியுடன் உறவாடிக் கொண்டிருந்த தந்தையும் தங்கையும் கூட இப்போது அவனைத் தான் நோட்டம் விட ஆரம்பித்தனர்.

“அது ஒன்னும் இல்லம்மா! ரயில்வே ஸ்டேசன்ல ஒரு பொண்ணு என்னைக் கிராஸ் பண்ணிப் போறப்ப அவளோட தாவணி வாட்ச்ல சிக்கிடுச்சு… அது தான்னு நினைக்கிறேன்” என சமாளிக்க முயன்றான்.

“இந்தக் காலத்துல தாவணி கட்டுற பொண்ணுங்களும் இருக்காங்களா?” என்று ஆச்சரியமாகக் கேட்டார் மைதிலி.

“மா! இப்போ டிசைனர் ஹாப் ஷேரீஸ் நிறைய வந்துடுச்சு… ஆனா நம்ம ஊரு பொண்ணுங்க அதை லெஹங்கா ஸ்டைல்ல சுத்திட்டுக் காமெடி பண்ணுதுங்க… ராஜி சித்தி வீட்டுக் கல்யாணத்துல சரண்யா அப்பிடி தானே சுத்துனா… நீ கூட கேலி பண்ணுனியே!” என்று அன்னைக்கு நினைவுபடுத்தினாள் வைஷாலி.

“ஆமா! அது என்ன கோலமோ? நம்ம பாரம்பரிய உடைய நம்மவங்க மாதிரி போட்டுக்கிட்டா தான் அழகு… எதுக்கெடுத்தாலும் வடக்கத்திக்காரங்களை காப்பி பண்ணுறதே வேலையா போச்சு” என்றார் மைதிலி கேலியாக.

அவருக்கு நாகரிக உடைகள் மீதோ, இக்காலப் பெண்களின் பழக்கவழக்கங்களின் மீதோ எந்த வருத்தமும் இல்லை. அவர் அதைத் தவறு என்று சொல்பவரும் அல்ல. ஆனால் நமது கலாச்சாரத்தை மறப்பதைத் தான் அவர் விரும்புவதில்லை. அதை அவரது கணவரும் மக்களும் நன்கு அறிவர். அதனால் தான் மதுசூதனனின் மனம் கவர்ந்தவளை அவருக்குப் பிடிக்காது போய் விட்டது என்பது அவரது கணவர் ராமமூர்த்தியின் எண்ணம்.

இந்த விசயத்தை இன்று வரை அறியாத மதுசூதனன் மெதுவாக அந்த இரயில்நிலைய தாவணிப்பெண்ணிடம் இருந்து மனதைத் திருப்பிக் கொண்டவன் ஊட்டிக்குச் செல்வதற்குத் தயாரானான்.

**********

லவ்டேல்….

ஆங்கிலேயர் காலத்திய கட்டிடங்களும், தேயிலைத்தோட்டங்களும் கொண்ட மலைச்சிகரங்களின் மடியில் அமைந்திருக்கும் நீலகிரி மாவட்டத்தின் ஒரு சிறிய நகரம். மக்கள் தொகை என்னவோ குறைவு தான்.

சுற்றுலாப்பயணிகள், தேனிலவுக்கு வரும் புதுமணத்தம்பதிகளுக்கென தனியார் ரிசார்ட்களும், காட்டேஜ்களும் நிறைந்த ஊர்.

அங்கே தான் வந்து இறங்கினாள் மதுரவாணி. முன்பு இங்கு அடிக்கடி வந்துள்ளாள். ஆனால் அப்போதெல்லாம் அவளுடன் அவளது குடும்பத்தினரும் சேர்ந்தே வருவது தான் வழக்கம். முதல்முறையாகத் தனியாக அங்கே வந்தவள் ஆட்டோவை மறித்து “ட்ரீம் வேலி டெய்சி ரெசிடென்சியல் கம்யூனிட்டிக்குப் போகணும்” என்று சொல்லி ஏறிக் கொண்டாள்.

சில நிமிடங்களில் ட்ரீம் வேலி என்று அழைக்கப்பட்ட மூன்று புறம் மலைச்சிகரங்களாலும் ஒரு புறம் தேயிலைத்தோட்டச்சரிவாலும் சூழப்பட்டப் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் ‘டெய்சி ரெசிடென்சியல் கம்யூனிட்டி’யின் பெரிய நுழைவுவாயிலின் முன்னே ஆட்டோ நின்றது. ஆட்டோக்காரருக்குப் பணம் கொடுத்துவிட்டு குடியிருப்பின் காவலாளியிடம் தான் காண வந்திருக்கும் குடும்பத்தினரைப் பற்றிச் சொல்ல அவரும் உள்ளே செல்ல அனுமதித்தார். அந்தக் நுழைவுவாயிலை அடுத்து அவர் தங்குவதற்காக கட்டப்பட்டிருந்த வீடு தேயிலைத் தோட்டத்தை ஒட்டி அமைந்திருந்தது.

தேயிலைத்தோட்டச் சரிவில் தான் அந்தக் குடியிருப்பின் வீடுகள் கட்டப்பட்டிருந்தன. சுற்றிலும் பச்சைப்பசேலென செழித்திருக்கும் தேயிலைச்செடிகளும் எதிரே மூன்று திக்கிலும் அரணாய் நிற்கும் மலையரசியும் அவளை வரவேற்பதை போல இருந்தது மதுரவாணிக்கு.

அவள் அந்த சரிவுக்கு மேலே உள்ள மேட்டில் இருந்து குடியிருப்பின் வீடுகள் இருக்கும் பகுதிக்குச் செல்ல அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகளில் இறங்கி சரிவில் நடக்கத் தொடங்கினாள். அந்தக் குடியிருப்பின் முதலாய் அமைந்திருந்த வீட்டின் கேட்டைத் திறந்தபடி அதனுள் நுழைந்தாள்.

நான்கு படுக்கையறைகளைக் கொண்ட பெரிய வீடு தான். வீட்டைச் சுற்றிலும் வைக்கப்பட்டிருந்த அழகான பூச்செடிகளுக்கு அரணாய் பெரிய காம்பவுண்ட் சுவர் வேறு. மலர்கள் நறுமணம் பரப்ப வீட்டின் கதவை அடைந்தாள் மதுரவாணி.

கதவை மூன்று முறை தட்டிவிட்டுக் காத்திருந்தவள் கதவு திறக்கப்படவும் ஆர்வமாய் நோக்கியவளைப் பார்த்ததும் கதவைத் திறந்தவள் தோளோடு அணைத்துக் கொண்டாள்.

“மது! என் செல்லமே! உள்ள வாடி…” என்று கொஞ்சியபடி வீட்டினுள் அழைத்துச் சென்றாள் மதுரவாணியின் ஒன்று விட்ட பெரியப்பா ஆறுமுக பாண்டியனின் மகளான சங்கவி. இவளை விட ஏழு வயது மூத்தவள். மதுரவாணி என்றால் அவளுக்குக் கொள்ளை இஷ்டம்.

அவளுடன் உள்ளே வந்த மதுரவாணியை அந்தப் பெரிய வீட்டின் நடுஹாலின் அலங்காரம் எப்போதும் போல ரசிக்கத் தூண்டியது. சுவரில் சங்கவியும் அவள் கணவன் கமலேஷும் திருமணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம், அங்கே கிடந்த மேஜை மீது வைக்கப்பட்டிருந்த அத்தம்பதியினரின் புத்திரி ஆரத்யா புன்னகை பூத்த முகத்தோடு நின்றிருந்த புகைப்படம் என என பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை அவளுக்கு.

அதைப் பார்த்தபடியே உள்ள வந்தவள் ஹால் சோபாவில் அமர்ந்திருந்த மற்றொருத்தியைக் கண்டதும் “யாழினிக்கா” என்று உற்சாகமாய் கூவிக் கொண்டே வந்து அவளது கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

அந்த யாழினியும் “ஏய் மதுகுட்டி! வாட் அ ப்ளசண்ட் சர்ப்ரைஸ்” என்று உற்சாகமாய் எழுந்தவள் அவளைக் கட்டிக் கொண்டாள். யாழினி வேறு யாருமல்ல! சங்கவியின் நாத்தனார் தான். இருவரும் நல்லத் தோழியர். அவர்களின் நட்பு பிரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே அண்ணன் வீடு வாங்கிய இடத்தில் தன் கணவனையும் வாங்கச் சொல்லி டெய்சியில் குடியேறியவள்.

தானும் கமலேஷும் வெளிநாட்டில் பணிபுரிவதால் இருவரது வீடும் ஒரே பகுதியில் இருப்பது தான் பெண்களுக்குப் பாதுகாப்பு என புரிந்ததால் அவள் கணவன் மகேஷும் யாழினியின் விருப்பத்துக்குச் சம்மதித்து இங்கே வீட்டை வாங்கி குடியேறிவிட்டான். இப்போது யாழினியும் அவர்களின் புத்திரன் சாய்சரணும் இங்கே தனித்திருக்கின்றனர் என்ற பயம் அவனுக்கு இல்லை.

சங்கவி கமலேஷின் திருமணத்திலேயே மதுரவாணியைச் சந்திருப்பதாலும், அக்கா வீட்டுக்கு அடிக்கடி பெற்றோருடன் வந்து சென்ற பழக்கத்தாலும் யாழினிக்கு மதுரவாணி நெருக்கமாகிவிட்டாள்.

அவளிடம் “இன்னும் கொஞ்சநாள்ல கல்யாணத்த வச்சிக்கிட்டு நீ தனியா ஏன் ஊட்டிக்கு வந்திருக்க? சித்தப்பா, கார்த்தினு யாரையாச்சும் கூட்டிட்டு வந்திருக்கலாமே” என்றவளிடம்

“நான் இங்க வர்றேனு சொல்லாம வந்துட்டேன்கா… அவங்க யாருக்குமே நான் இங்க வந்த்து தெரியாது” என்றாள் மதுரவாணி அலட்சியமாய்.

சங்கவியும் யாழினியும் புரியாது திருதிருவென விழித்தனர். இன்னும் சில நாட்களில் இவளது திருமணத்துக்கு நதியூர் செல்லவேண்டுமென புடவை நகை என ஷாப்பிங்கில் இறங்கியவர்களுக்கு அவளது திடீர் வருகை குழப்பத்தை உண்டாக்கியது. அதுவும் யாருக்கும் தெரியாது என்று சொன்னதும் குழப்பத்தின் உச்சக்கட்டத்துக்குச் சென்றுவிட்டனர் இருவரும்.

அவர்களது குழப்பத்தைப் புரிந்து கொண்ட மதுரவாணி சாவகாசமாய் “அக்கா நான் அப்பாக்குத் தெரியாம வீட்டை விட்டு ஓடிவந்துட்டேன்” என்று சொல்லிவிட்டு ரோலர் சூட்கேசுடன் நிற்க, அவளை அதிர்ச்சியாய் நோக்கினாள் சங்கவி. அவளுடன் இருந்த அவளின் தோழி யாழினியும் அவ்வாறே!

ஓடி வந்துவிட்டாளா என்ற அதிர்ச்சியில் உறைந்த இருவருக்கும் ரத்தினவேல் பாண்டியன் மற்றும் சங்கரபாண்டியனின் மீசை முறுக்கிய தோற்றமும், சரவணன் மற்றும் கார்த்திக்கேயனின் முன்கோபமும் நினைவுக்கு வர தூக்கி வாரிப் போட்டது இருவருக்கும்.

அதிலும் சங்கவி ஒரு படி மேலே போய் யாழினியிடம் “எனக்கு மயக்கம் வருது யாழி! என்னைக் கைத்தாங்கலா என் ரூமுக்குக் கூட்டிட்டுப் போடி” என்று தலையைப் பிடித்துக் கொண்டு சொல்ல

யாழியோ “உனக்கு மயக்கம் தான் வருது! எனக்கு ரத்தினவேல் மாமாவ நினைச்சா லைட்டா ஹார்ட் அட்டாக்கே வருது… முடிஞ்சா ஆம்புலன்சுக்குப் போன் பண்ணு சவி” என்று நெஞ்சை அழுத்திக் கொண்டு சோபாவில் அமர்ந்தாள்.

மதுரவாணி இருவரது பயத்தையும் கண்டு நகைத்தவள் “போதும்! ரெண்டு பேரும் சரியான ட்ராமா குயின்ஸ்… ஒருத்தருக்கு இன்னொருத்தர் சளைச்சவங்க இல்ல… ஆக்ட் பண்ணாம போய் எனக்கு ஒரு கப் காபி கொண்டு வாங்க மை டியர் அக்காஸ்” என்று செல்லம் கொஞ்ச இருவரும் அயர்ந்து போயினர்.

“அடியே…” என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவளைத் திட்ட வந்த சங்கவியின் குரல் “மது சித்தி” “அத்தை” என்ற சின்னஞ்சிறுவர்களின் உற்சாகக்குரலைக் கேட்டதும் தொண்டைக்குள்ளேயே ஜீவசமாதி ஆகிவிட்டது.

வந்தவர்கள் ஆரத்யாவும், சாய்சரணும். ஆரத்யாவுக்கு ஆறு வயது. சாய்சரண் அவளை விட மூன்று வருடங்கள் இளையவன். இருவருக்கும் மதுரவாணி என்றால் உயிர்.

அவளைக் கண்டதும் ஓடோடி வந்து அவள் கரத்தைப் பற்றிய ஆரத்யா “எங்களுக்கு அல்வா வாங்கிட்டு வந்தியா மது சித்தி?” என்று ஆர்வமாய் கேட்க அவள் சூட்கேசினுள் அலுமினியக்கவரில் அடைக்கலமாகி இருந்த அல்வாவை எடுத்து நீட்டினாள்.

யாழினியும் சங்கவியும் இன்னும் ஒரு மாதத்தில் திருமணத்தேதியை வைத்துக்கொண்டு இந்தப் பெண் என்ன காரியம் செய்திருக்கிறாள் என்ற அதிர்ச்சியோடு பார்க்க இப்போது அவள் எதுவுமே நடக்காதது போல அல்வா கவரைப் பிரிக்க உதவிக்கொண்டிருந்தாள்.

குழந்தைகள் அல்வா கிடைத்த திருப்தியில் மாடிக்கு ஓடிவிட சங்கவியும் யாழினியும் மதுரவாணியை முறைக்க ஆரம்பித்தனர்.

“விளையாடாத மது! இப்பிடி பண்ணுறதால கல்யாணம் நின்னுடுமா? அந்த மாப்பிள்ளைக்கு என்ன குறை? ஆளு பாக்க அம்சமா ஹீரோ மாதிரி இருக்காரு… போலீஸ் ஆபிசர் வேற… நாத்தனார் கொழுந்தன்னு ஒரு பிக்கல் பிடுங்கலும் இல்லாத குடும்பம்… ரேவதி அம்மா கூட ரொம்ப நல்ல மாதிரியானவங்க தான்… பின்ன ஏன் இப்பிடி சைல்டிஷா நடந்துக்கிற மது?”

யாழினியின் குரலில் இருந்த ஆதங்கம் மதுரவாணியின் மீது அவள் வைத்திருக்கும் அன்பின் அடையாளம் தான்! அவளைப் பொறுத்தவரை மதுரவாணி கொஞ்சம் குறும்புக்காரி! வாய்த்துடுக்கு அதிகம். பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் செயல்படுபவள் எந்தக் காரியத்தையும் செய்யும் முன்னர் யோசிக்கவே மாட்டாள். அவளுக்குப் பிடித்தால் செய்துவிடுவாள். ஆனால் இது வரை அவளது செயலால் மூன்றாவது நபர் யாரும் அவதியுற்றதில்லை.

ஆனால் இப்போது செய்திருக்கும் காரியமோ அவள் குடும்பத்தை மட்டுமன்றி அவளை மணக்கவிருந்தவனையும் சேர்த்தல்லா பாதிக்கும்! இதுவே யாழினியின் ஆதங்கத்துக்கான அடிப்படை. சங்கவியின் எண்ணப்போக்கு வேறு திக்கில் சென்று கொண்டிருந்தது.

அவளுக்கு இளம் வயதில் இருந்தே ரத்தினவேல் பாண்டியன் மீது ஒருவித பயம் கலந்த மரியாதை. அவர் அதட்டினால் என்ன ஏது என்று கேட்காது அமைதியாகி விடுவாள். கார்த்திக்கேயனும் சரவணனும் கூட அவளைப் பயந்தாங்கொள்ளி என கிண்டலடித்தது உண்டு.

அப்படி இருக்கையில் மதுரவாணி இங்கே இருப்பது மட்டும் ரத்தினவேல் பாண்டியனுக்குத் தெரியவந்தால் தன் கதி என்ன என்று யோசிக்கும் போதே அவளுக்கு மயக்கம் வந்தது.

இதற்கெல்லாம் காரணகர்த்தாவான மதுரவாணியோ யோசனையில் ஆழ்ந்தாள். அதற்கு காரணம் யாழினி கேட்ட கேள்வி தான்!

“உன் வீட்டுல ரெண்டு போலீஸ் ஆபிசர் இருக்காங்க… இந்நேரம் உன்னைத் தேடணும்னு அவங்க கிளம்பிருப்பாங்க மது… அதோட உன் போட்டோவை டிப்பார்ட்மெண்ட்ல குடுத்து தமிழ்நாடு முழுக்க தேடச் சொன்னா என்ன பண்ணுவ? எதையும் செய்யுறதுக்கு முன்னாடி யோசிக்கணும்டி”

மதுராவணி புருவம் சுழித்திருந்தவள் முகம் மலர “எனக்கு ஒரு ஐடியா… நீங்க சொல்லுற மாதிரி என்னோட போட்டோவ அனுப்பித் தேடச் சொல்லுறதுக்கு வாய்ப்பு இருக்கு… சோ நான் என்னோட கெட்டப்பை மாத்தலாம்னு இருக்கேன்… என்ன சொல்லுறிங்க?” என்று ஆர்வமாய் கேட்க சங்கவியும் யாழினியும் அவளைக் கொலைவெறியோடு நோக்கினர்.

அதைக் கண்டுகொள்ளாதவளாய் “யெஸ்! ஐ ஹேவ் டூ சேஞ்ச் மை அப்பியரன்ஸ்” என்று சொல்ல

“பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணப் போறியா?” என்று கேட்டனர் இருவரும் கோபமும் கேலியும் கலந்த குரலில்.

அவர்களை ஏளனமாய் பார்த்தவள் “சாரி சிஸ்டர்ஸ்! அந்தளவுக்கு யோசிக்க வேண்டிய அவசியம் இல்ல… நான் ஜஸ்ட் என்னோட ட்ரஸ்ஸிங் ஸ்டைல சேஞ்ச் பண்ணிட்டு ஹேர்கட் பண்ணிக்கலாம்னு இருக்கேன்” என்று சொல்லிவிட்டுத் தனது நீண்டப்பின்னலை எடுத்து முன்னே போட்டுவிட்டு அதைக் கழுத்தளவில் வைத்துக் காட்டவும் சங்கவிக்கு கடுப்பாகி விட்டது.

“முடில கைய வச்ச, முதல் டெட்பாடி நீ தான் மது…. சித்தி எவ்ளோ ஆசையா வளத்துவிட்ட முடி! உனக்குனு ஸ்பெஷலா எண்ணெய், ஹேர்வாஷ்னு பாத்துப் பாத்துச் செஞ்சு வளந்த முடி… தயவு பண்ணி வெட்டிடாதடி” என்று கோபமாய் இடையிட்ட சங்கவியின் குரல் கெஞ்சலாய் முடிய யாழினியோ வேறு விதமாய் மதுரவாணியைக் கலாய்த்தாள்.

“ஓல்ட் தமிழ் சினிமால காட்டுவாங்களே! மாறுவேசம்னா மரு வச்சுகிட்டு, பெரிய மீசைய முகத்துல ஒட்டிக்கிற மாதிரி! அப்பிடி தானே சொல்லுற? உன்னால மாறுவேசத்துக்கு உண்டான மரியாதையே போச்சு” என்றவளின் பேச்சையெல்லாம் பொருட்படுத்துபவள் அல்ல மதுரவாணி.

அவள் கூந்தலை வெட்டியே தீருவேன் என்று பிடிவாதம் பிடிக்க இதற்கு மேல் வாதிட திராணியற்று யாழினியும் சங்கவியும் ஒத்துக்கொண்டனர்.

“உனக்குக் கொஞ்சம் கூட பயமா இல்லையா மது? இந்த முடிவை எடுக்குறதுக்கு முன்னாடி நீ கொஞ்சமாச்சும் யோசிச்சியா?” என்று சங்கவி ஆற்றமாட்டாமல் கேட்க

“பெருசா ஒன்னும் யோசிக்கலக்கா! நம்ம ஊர்த்திருவிழால எல்லாரும் பிசியா பொங்கல் வச்சிட்டிருந்தாங்க… அப்போ என் போன்ல குரு மூவி சாங் ஓடுச்சு… அதுல ஐஸ்வர்யா ராய் லெட்டர் எழுதி வச்சிட்டு வீட்டை விட்டுக் கிளம்பிடுவாங்க… அப்போ உள்ளுக்குள்ள ஒரு ஸ்பார்க் வந்துச்சு… உடனே கிளம்பிட்டேன்” என்று கர்வமாய் உரைத்தவளைக் கண்டு வாயைப் பிளந்தனர் இரு தோழியரும்.

“ஒரு பாட்டு… ஒரே ஒரு பாட்டு… அதைக் கேட்டுட்டா வீட்டை விட்டு ஓடி வந்த?” என்று ஒரே குரலாய் கேட்டவர்களைப் பார்த்து இல்லையென தலையாட்டினாள்.

“யாராச்சும் ஒரே ஒரு புக்கை ரெஃபர் பண்ணிட்டு காலேஜ்ல எக்சாம் எழுதுவாங்களா? அதே போலத் தான்… நான் இந்த ஒரு பாட்டை மட்டும் பாத்துட்டு ஓடி வரல… இன்னும் நாலஞ்சு பாட்டை யூடியூப்ல பாத்துட்டு என்ன பண்ணுனா யாரு கண்ணுலயும் சிக்காம வீட்ட விட்டு ஓடிவர முடியும்னு யோசிச்சுத் தான் பண்ணுனேன்”

சங்கவிக்கு இன்னும் மனம் ஆறவில்லை. கிட்டத்தட்ட யாழினியின் மனநிலையும் அதுவே! மதுரவாணிக்குப் பார்த்த மாப்பிள்ளையை விட்டுவிட அவளுக்கு மனமில்லை. எவ்வளவு மரியாதையானவன்! கூடவே அன்பைத் தவிர வேறு ஒன்றையும் அறியாத அவன் தாயார்! இதெல்லாம் இந்தச் சிறுபெண்ணுக்கு ஏன் புரியவில்லை?

மதுரவாணியோ இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. சென்னைக்குச் செல்லும் வரை அவளுக்குத் தங்குவதற்கு இந்த வீடு சரியாக வரும். முதலில் ஒரு மொபைல் போனும் சிம் கார்டும் வேண்டும். கூடவே சில உடைகள் வாங்க வேண்டும். ஏனெனில் அவள் கொண்டு வந்ததில் ட்ரெண்டியாக இருப்பவை இரண்டு டாப்கள் மட்டுமே. அவளது சேமிப்புப்பணம் கைவசம் இருப்பதால் அவள் எதற்கும் கவலைப்படவில்லை.

இதையெல்லாம் யோசித்தவள் சங்கவியிடமும் யாழினியிடமும் ஒரு எச்சரிக்கை அறிவிப்பையும் கொடுத்தாள்.

“ரெண்டு பேரும் நல்லா கேட்டுக்கோங்க… கண்டிப்பா அப்பாவோ அண்ணனுங்களோ உங்களுக்குக் கால் பண்ணுவாங்க… அவங்க கிட்ட நான் இங்க இருக்கேனு சொன்னிங்கனா நான் இங்க இருந்து ஓடியெல்லாம் போக மாட்டேன்… டேரக்டா மேல போய் சேந்துடுவேன்… நான் செய்யாத எதையும் சொல்ல மாட்டேன்கா… அப்பிடி சொன்னா அதைச் செஞ்சிடுவேன்…. சோ நதியூர்ல இருக்கிற யாருக்கும் நான் இங்க இருக்கிறது தெரியக்கூடாது… சப்போஸ் அவங்களே என்னைத் தேடி இங்க வந்தா கூட நான் தப்பிச்சிடுவேன்”

கிட்டத்தட்ட மிரட்டிவிட்டுத் தனது ரோலிங் சூட்கேசை எடுத்துக்கொண்டு எப்போதும் அவள் இங்கே வந்தால் தங்கும் மாடியறையை நோக்கிச் செல்லத் தொடங்கினாள் மதுரவாணி.

அவளை எதுவும் சொல்ல முடியாது அதே சமயம் அவளது சிறுபிள்ளைத்தனமான பிடிவாதத்தை ஏற்றுக்கொள்ளவும் முடியாது இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்துப் போய் நின்றனர் சங்கவியும் யாழினியும்.

அலை வீசும்🌊🌊🌊