🌊 அலை 29 🌊

கடற்கரை மணலில் எழுதிய

பெயராய் அலை வந்ததும்

அழியக்  கூடியது அல்ல!

கல்வெட்டில் பதிக்கப்பட்ட

எழுத்தாய் காலம்

கடந்தும் நிற்கும் உன் மீது

நான் கொண்ட காதல்!

தன் முன்னே விரிந்திருந்த பசும்புல்வெளியும் எதிரே தூரத்தில் கம்பீரமாய் நின்றிருந்த மலைச்சிகரங்களும் அவற்றைத் தொட்டுத் தழுவிச் செல்லும் மஞ்சுமேகங்களுமாய் இயற்கை அன்னை தீட்டி வைத்திருந்த அந்த அழகிய காட்சியை பெஞ்சில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தாள் மதுரவாணி.

கோயம்புத்தூருக்கும் லவ்டேலுக்குமிடையே இருக்கும் மோட்டல் ஒன்றிலிருந்து சற்று தொலைவில் அமைந்திருந்த அந்த இடம் அவர்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமானது தானே!

மதுசூதனன் அவளருகில் அமர்ந்திருந்தவன் தொண்டையைச் செறுமவும் அவளது கவனம் அவன் புறம் திரும்ப மெதுவாய் பேச்சை ஆரம்பித்தான் அவன்.

“வாணி நான் உன்னை ஏன் இங்க கூட்டிட்டு வந்தேனு உனக்கு எதாவது ஐடியா இருக்குதா?”

அவள் இல்லையென தலையாட்டி மறுக்க அவளை அழைத்து வந்ததற்கான காரணத்தைச் சொல்ல ஆரம்பித்தான் மதுசூதனன்.

“உனக்கு என்னைப் பத்தி நிறைய குழப்பம் இருக்குல்ல வாணி? ஐ மீன் எனக்கும் தனுவுக்குமான ரிலேசன்ஷிப், எங்களோட பிரேக்கப், அதுக்கு அப்புறம் நான் உன் கிட்ட நடந்துகிட்ட முறை, இதோ இப்போ நடந்த என்கேஜ்மெண்ட்ல இருந்து இனிமே நடக்கப் போற கல்யாணம் வரைக்கும் நீ ஒவ்வொன்னையும் நினைச்சு ரொம்ப குழம்புறனு எனக்கும் தெரியும்… சோ உன்னோட குழப்பத்தைத் தீர்க்க வேண்டியது என்னோட கடமை”

அவன் நிறுத்தவும் கையசைத்து மறுத்த மதுரவாணி “லுக்! எனக்கு நீ சொல்லுற எதை நினைச்சும் குழப்பமில்ல! அதுலயும் உன்னோட ஃபர்ஸ்ட் லவ் ஸ்டோரி பத்தி எந்தக் குழப்பமும் இல்ல… எனக்கு அதைப் பத்தி தெரிஞ்சிக்க வேண்டிய அவசியம் இல்ல… என்னோட ஒரு கேள்விக்குப் பதில் சொல்லு! அது போதும்” என்று சொல்ல என்ன கேட்கப் போகிறாள் என்ற ஆர்வத்தில் அவளை நோக்கினான் அவன்.

“உன்னோட ஃபர்ஸ்ட் லவ்வர் அளவுக்கு நான் ப்ரிட்டியா இல்ல… அதோட நான் சராசரி பொண்ணு மாதிரி அச்சம், மடம், நாணம், பயிர்ப்புனு வளந்தவ இல்ல… கணவனே கண் கண்ட தெய்வம்னு சொல்லிட்டுப் புருசன் அடிச்சாலும் உதைச்சாலும் அவனை அட்ஜெஸ்ட் பண்ணிட்டுப் போற டைப்பும் இல்ல… சொல்லப் போனா என்னை மாதிரி போல்ட் அண்ட் ஸ்ட்ரெய்ட் ஃபார்வேர்ட் பொண்ணுங்கள பசங்களுக்குப் பிடிக்காது.

குழந்தைத்தனமா நடந்துக்கிற அல்லது குழந்தைத்தனமா நடிக்கிற பொண்ணுங்கள தானே நீங்க கியூட் டால், பேபி கேர்ள்னு சொல்லி சுத்திச் சுத்தி வருவிங்க! எதிர்த்துக் கேள்வி கேக்குற பொண்ணுங்கள எப்போவுமே ஆம்பளைங்களுக்குப் பிடிக்காதே! ஆனா நீ ஏன் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுல இவ்ளோ இன்ட்ரெஸ்ட் காட்டுற?” என்று தன் மனதிலிருந்த சந்தேகங்களைக் கொட்டிவிட்டு அவனது பதிலுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

மதுசூதனன் அவள் சொன்ன அனைத்தையும் ஒருவித பிரமிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தவன் பதில் சொல்லத் தயாரானான்.

“உன்னோட எல்லா கேள்விக்கும் ஆன்சர் பண்ணுறதுக்கு முன்னாடி நான் ஒரு விசயத்தைத் தெளிவா சொல்லிடுறேன்… இன் ஃபேக்ட் அது தான் உன்னோட கடைசி கேள்விக்குப் பதிலும் கூட… நான் ஏன் உன்னை மேரேஜ் பண்ணிக்கிறதுல இன்ட்ரெஸ்ட் காட்டுறேனு கேட்டல்ல, பிகாஸ் ஐ லவ் யூ”

அவன் சொன்ன கடைசி வார்த்தையில் விலுக்கென்று நிமிர்ந்தவளுக்கு அவன் கண்ணிலிருந்த காதல் அவளைக் கொஞ்சம் திகைக்க வைத்தது.

அந்தக் காதல் அவளை அமைதிப்படுத்தியது. மதுசூதனன் அவளது கரத்தைப் பற்றிக் கொள்ள அவள் விதிர்விதிர்த்து உருவிக் கொள்ள முயன்று முடியாது அமைதியானாள்.

“உன்னை ஃபர்ஸ்ட் டைம் இரயில்வே ஸ்டேசன்ல பாத்ததும் உன் மேல என்னை அறியாம ஒரு ஈர்ப்பு உண்டாச்சு… எத்தனை தடவை உன்னோட தெளிவில்லாத முகம் என் கனவுல வந்துட்டுப் போகும் தெரியுமா? ஃபர்ஸ்ட் டைம் நீ என்னோட தோளை உரசிட்டு அந்த ஹோட்டல்ல என் பக்கத்துல உக்காந்தியே அப்போ கூட நீ தான் அந்த ரயில்வே ஸ்டேசன் பொண்ணானு யோசிச்சு குழம்பிருக்கேன்… எல்லா பிரச்சனையும் நடந்து உன்னை  அதே தாவணில கோயில்ல வச்சு மீட் பண்ணுனப்போ தான் எனக்கு நீ தான் நான் மீட் பண்ணுன பொண்ணுனு தெரிய வந்துச்சு… அப்போவும் நீ தான் என் லைப் பார்ட்னர்னு யோசிச்சுப் பாக்கல… ஆனா நாளாக நாளாக நீ இல்லாம என் லைப் அர்த்தமில்லாம போயிரும்னு தோணுச்சு…

உன்னைச் சீண்டுனது, கிண்டல் பண்ணுனது, உன் அப்பா அம்மாவ வரவழைச்சு அவசரமா உனக்கும் எனக்கும் என்கேஜ்மெண்ட் பண்ணிக்கிட்டது இது எல்லாத்துக்கும் என்ன காரணம் தெரியுமா? இந்த நாடோடி ராணிய என் காதல் சாம்ராஜ்ஜியத்துக்கு மகாராணி ஆக்கணும்… அவளை திகட்ட திகட்ட காதலிக்கணும்… அவளை மாதிரியே சண்டிராணியா ஒரு பொண்ணு, என்னை மாதிரி கெத்தா ஒரு பையனைப் பெத்துக்கணும்… என்னோட ஒவ்வொரு மானிங்லயும் அவ என் கைக்குள்ள இருக்கணும்… இப்பிடி ஏகப்பட்ட காரணங்கள் இருக்கு… உன்னோட கடைசி கேள்விக்குப் பதில் சொல்லியாச்சு… இது போதுமா?” என்று அவன் குறும்பாய் கேட்க அவனது வார்த்தைகளில் வழிந்த காதலின் வீரியம் அவளைச் சிலையாக்கி இருந்தது.

இவ்வளவு தூரம் அவளை ஒருவன் காதலிக்கும் அளவுக்கு அவள் அவனைப் பாதித்திருக்கிறாளா என்ற ஆச்சரியமும் இதே காதலை அவனுக்குத் தன்னால் அளிக்க முடியுமா என்ற சந்தேகமுமே அதற்குக் காரணம்!  

மற்ற கேள்விகளுக்குப் பதில் என்ன என்று அவள் ஆவலாய் நோக்க அதைப் புரிந்து கொண்டவனாய் சாதாரணமாய் “நான் சராசரி ஆண் இல்ல… அதனால எனக்குச் சராசரியான பொண்ணு லைப் பார்ட்னரா வர்றதுல இஷ்டமில்ல” என்று சொல்லவும் விழி விரித்தாள் அவள்.

“இப்பிடி முட்டைக்கண்ண உருட்டி உருட்டி என்னை இப்பிடி ஆக்கிட்டியேடி” என்று செல்லமாய் சொன்னபடி அவளது முகத்தைத் தனது கைகளில் ஏந்தியவனது விழிகள் அவளது செவ்விதழ்களில் நிலைக்க

“என்னைக் கல்யாணம் பண்ணிட்டு எனக்கு ஒய்பா வர்ற பொண்ணு கூட தான் குளோசா தான் இருக்கணும்னு எனக்குனு ஒரு கொள்கைய வகுத்துக்கிட்டவன் நான்! என்னோட கொள்கைய உன்னால இப்போ மீறப் போறேன்… சாரி” என்று சொன்னபடி அவளின் இதழை நோக்கிக் குனிந்தவன் அவளது அதிர்ச்சி நிறைந்த விழிகளைக் கண்டதும் அவளது கன்னத்தில் தனது இதழ்களைப் பதித்தான்.

முதன்முதலில் ஒரு ஆண்மகனின் நெருக்கம் அவளுக்குள் பூகம்பத்தை உண்டாக்க கன்னத்தில் பதிந்த அவனது இதழ்களும் சற்று முன்னர் அவன் பேசிய வார்த்தைகளுமாய் சேர்ந்து அவளை இனம் புரியாத உணர்வில் ஆழ்த்த வழக்கமான பிடிவாதம், கோபம் அனைத்தும் அவனது இதழின் ஸ்பரிசத்தில் காணாமல் போய் அவனளித்த கன்னத்து முத்தத்தை ரசிக்கத் தொடங்கினாள் மதுரவாணி.

நொடிகள் நிமிடங்களாக அவளது கன்னத்திலிருந்து இதழை எடுக்க விரும்பாது வேறு வழியின்றி விலகியவன் அவளது முகத்தைத் தனது கரங்களில் ஏந்திக் கொண்டவனாய்

“இப்போவும் எப்போவும் சரி! எந்தக் காரணத்துக்காகவும் ஏன் எனக்காகவும் கூட நீ உன்னை மாத்திக்க வேண்டாம் வாணி! நீ நீயா இரு… உன்னோட கனவு, சுதந்திரம் எதையும் நீ என்னால இழக்க மாட்ட… ஐ ப்ராமிஸ்” என்று சொல்லவும் அவள் தலை தானாய் அசைந்தது.

அவளை எழுப்பி விட்ட மதுசூதனன் “வந்த வேலை முடிஞ்சுச்சு… போலாமா?” என்று குறும்புக்குரலில் கேட்க

“இன்னும் முடியல… நான் உன் கிட்ட மன்னிப்பு கேக்கணும்” என்று சொன்னவளைப் பார்த்துச் சிரித்தவன்

“நீ மன்னிப்பு கேக்க வேண்டிய அவசியம் இல்ல… பிகாஸ் நானும் பேசுனேன்… நீயும் பேசுன.. ரெண்டுக்கும் டேலி ஆயிடுச்சு… இனிமே நமக்குள்ள நோ மோர் சாரி… அதுக்குப் பதிலா இன்னும் நிறைய சண்டை போட்டுக்கலாம்” என்று சொன்னபடி அவளின் நெற்றியில் முட்டியவனை விலக்கி நிறுத்தினாள் மதுரவாணி.

“இது தான் சாக்குனு அட்வான்டேஜ் எடுத்துக்காத… நீ என் கிட்ட இருந்து தள்ளியே இரு! கல்யாணத்துக்கு முன்னாடி அப்பிடி இப்பிடி நடந்துக்கிறதுலாம் தப்பு” என்று பெரிய மனுஷியாய் சொன்னவளை ஒரு நிமிடம் உறுத்து விழித்தவனுக்குத் தான் நெருங்கிப் பழகாததால் தன்னைச் சந்தேகித்த தனுஜாவின் நினைவு ஒரு கணம் எழ அவளைப் பற்றி எண்ணாது தனது எதிர்காலம் இவள் தான் என்று நிச்சயிக்கப்பட்டவளுடன் தனது கரங்களைக் கோர்த்துக் கொண்டான்.

மதுரவாணி தனது சுயத்தன்மையை இழக்காமல் இவனுடன் வாழ முடியுமென்றால் ஏன் வாழ்ந்து பார்க்க கூடாது என்ற கோணத்தில் யோசிக்க ஆரம்பித்தவளாய் அவனது நீளவிரல்களுடன் அழகாய் பொருந்திக் கொண்ட தனது கைகளை நோக்கியபடி அவனுடன் நடக்க ஆரம்பித்தாள்.

அன்றைய தினம் கொடுத்த வாக்கை மதுசூதனன் பின்வரும் நாட்களில் கடைபிடித்தான் எனலாம்.

சொன்னபடியே வைஷாலியின் நிறுவனத்தின் ஊட்டி கிளையில் மதுரவாணிக்கு வேலை கிடைத்தது. வெகு உற்சாகத்துடன் இச்செய்தியைச் சகோதரிகளிடமும் தோழிகளிடமும் பகிர்ந்து கொண்டவள் பிறந்த வீட்டாருக்கும் வருங்கால புகுந்த வீட்டாருக்கும் போனில் தெரிவித்து விட்டாள்.

மதுசூதனனிடம் தெரிவித்த போது “ஃபர்ஸ்ட் மன்த் சேலரில உன்னோட ஃபேவரைட் தாத்தா டீக்கடைல மசாலா டீயும் கீரை வடையும் வாங்கிக் குடு… அது போதும் எனக்கு.. அந்த நாள்ல மழை பெஞ்சுதுன்னா இன்னும் நல்லா இருக்கும்” என்று குறும்பாய் உரைக்க

“வருணபகவான் என்ன உன்னோட கிளாஸ்மேட்டா? நீ நினைச்சதும் மழை வராது மகனே! நீ என்ன யோசிக்கிறேனு புரியுது… அதுக்குலாம் சான்சே இல்ல… நான் சொன்ன மாதிரி மேரேஜுக்கு முன்னாடி நீ என்னை விட்டு மூனடி தள்ளி தான் இருக்கணும்” என்று வழக்கம் போல மிரட்டிவிட்டுப் போனை வைத்தாள்.

பின்னர் ஸ்ரீதரிடமும் ரேவதியிடமும் தெரிவித்தவள் அவனிடம் “உங்களுக்கு என் மேல வருத்தம் ஒன்னுமில்லையே சார்? நான் நடந்துகிட்ட முறைக்கு உங்க கிட்ட மன்னிப்பு கேட்டிருக்கணும்… ஆனா கேக்கல! இப்போ கேக்குறேன்.. என்னை மன்னிச்சிடுங்க சார்! என்னைப் பத்தி யோசிச்ச அளவுக்கு நான் உங்க லைஃபை பத்தி யோசிக்கல! நான் ரொம்ப சுயநலமா நடந்துகிட்டேன் சார்… ஐ அம் ரியலி சாரி” என்று மனப்பூர்வமாய் மன்னிப்பு வேண்ட அவனும் அதை ஏற்றுக்கொண்டான்.

அவனும் மதுரவாணியுடன் கல்யாணக்கனவு ஏதும் காணவில்லையே! அவர்களது வெறும் ஏற்பாட்டுத்திருமணம் குறித்த பேச்சு தானே! அது மட்டுமன்றி அவனது அன்னையே அவளை மன்னித்துவிட்ட பின்னர் ஸ்ரீதர் மட்டும் முறுக்கிக் கொண்டு திரிவானா என்ன!

அவளை மன்னித்தவன் அவளுக்கு ஒரு நிபந்தனையும் வைத்தான்.

“நான் உன்னை மனசாற மன்னிக்கணும்னா நீ எனக்காக ஒரு காரியம் பண்ணனும் மது! செய்வியா?” என்று கேட்டவனிடம் அவன் என்ன சொன்னாலும் கேட்பதாக மதுரவாணி வாக்களிக்க

“உன்னோட ஃப்ரெண்ட் ரஞ்சனிய கொஞ்சநாள் கோயம்புத்தூர் பக்கம் வராம பாத்துக்கோ… அந்தப் பொண்ணுக்கு என்னோட டென்சன் புரியவே மாட்டேங்குது” என்றவன் ஸ்ரீவத்சனின் மிரட்டல் மற்றும் உணவு விடுதியில் நடந்த விசயங்களைச் சொல்லவும் மதுரவாணிக்குத் தோழியின் பாதுகாப்பு குறித்து கவலை உண்டானது.

அவன் எச்சரித்த விசயங்கள் அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டவள் ஸ்ரீரஞ்சனியிடம் கோயம்புத்தூருக்குச் செல்லக் கூடாதென கட்டளையே இட்டுவிட்டாள்.

“நீயும் அந்த டிசிபி மாதிரி பேசாத மது… அவர் கொஞ்சம் ஓவர் ரியாக்ட் பண்ணுறாருடி… யாரும் அப்பிடியெல்லாம் பழி வாங்க நினைக்க மாட்டாங்கடி”

“வாய மூடு ரஞ்சி! யாரையும் அண்டர் எஸ்டிமேட் பண்ணுறது நல்ல பழக்கம் இல்லடி… ஸ்ரீதர் சார் உன் மேல இருக்கிற அக்கறைல பேசுறாரு… எங்க தன்னால உன் உயிருக்கு ஆபத்து வந்துடுமோனு அவர் பதறுராறுடி… அதை புரிஞ்சுக்கோ”

“ஆமா! அந்தாளை நினைச்சா தான் எனக்கு குழப்பமா இருக்கு” என்று முணுமுணுத்தவளை ராகினியோடு சேர்ந்து சந்தேகப்பார்வை பார்த்தாள் மதுரவாணி.

“அது… அவரு ஏன் இவ்ளோ டென்சன் ஆகணும்னு குழப்பமா இருக்கு” என்று சமாளித்தவள் அவர்களிடம் எப்படி சொல்வாள் ஒவ்வொரு முறை ஸ்ரீதரைச் சந்திக்கும் போதும் அவனது அக்கறையில் அவளுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற அவனது பதற்றத்தில் மெதுமெதுவாய் அவள் இதயம் அவன் வசம் சென்று கொண்டிருக்கிறது என்பதை!

அதை மறைக்க எண்ணியவளிடம் ராகினி “எனக்கு அவரைப் பாக்குறப்போ அப்பிடியே அந்தக் கன்னத்தைப் பிடிச்சுக் கொஞ்சணும் போல இருக்கு ரஞ்சிக்கா! ஹவ் ஹாண்ட்சம்! மது அண்ணாவும் ஹான்ட்சம் தான்! ஆனா டிசிபி சார் ஒரு தனி அழகு… இன்னும் மூனு வருசத்துக்கு அவரு பேச்சிலராவே இருந்துட்டா அவரை நானே கல்யாணம் பண்ணிப்பேன்” என்று சொல்லி அவளை அதிர வைத்தாள்.

ஸ்ரீரஞ்சனி காதில் புகை வராதது ஒன்று தான் குறை! தங்கையின் தலையில் நங்கென்று கொட்டியவள்

“இனிமே இப்பிடி பேசுனேனு வையேன், அம்மா கிட்ட போட்டு குடுத்துடுவேன்… பதினெட்டு வயசுல இவ்ளோ வாயா உனக்கு? அவரு வயசு என்ன? உன் வயசு என்னடி?” என்று கடுகாய் பொரிய

“காதலுக்கு வயசு ஒரு தடையே இல்ல ரஞ்சிக்கா… மதுக்கா நீ மட்டும் ஏன் சைலண்டா இருக்க? சொல்லு” என்று மதுரவாணியைக் கூட்டு சேர்க்க முயல

“காதலா? அடியே இந்த வயசுல படிப்பு தான் முக்கியம்… இப்போ மனசை அலை பாய விடக்கூடாதுடி” என்று அறிவுரை சொன்ன மதுரவாணி விட்டால் ராகினியைக் கண்ணாலேயே எரித்துவிடுவது போல நின்று கொண்டிருந்த ஸ்ரீரஞ்சனியைச் சமாதானம் செய்ய முயன்றாள்.

அவளுக்கும் ஸ்ரீதரின் பேச்சில் இருந்த பதற்றம் ஒருவித சந்தேகத்தைக் கிளப்பி விட்டிருந்தது. அதற்கு உரமிடுவது போல இப்போது தோழியின் நடவடிக்கைகளும் அமைய அவர்களுக்குள் சத்தமில்லாமல் ஏதோ நடக்கிறது என்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது.

கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்து தானே ஆகவேண்டும் என எண்ணியவள் தோழியிடம் கோவை பக்கம் தலை வைத்துப் படுக்க கூடாதென ஆணையிட்டுவிட்டாள்.

ஸ்ரீரஞ்சனியும் மதுரவாணியின் கட்டளைக்குக் கீழ்படிந்தவள் சில நாட்களுக்கு அந்தப் பக்கம் செல்லாமல் தான் இருந்தாள். ஆனால் விதியின் விளையாட்டைச் சாதாரண மனிதர்களால் மாற்றி அமைக்க முடியாதல்லவா?

ஸ்ரீரஞ்சனியும் ஸ்ரீதரும் சேர வேண்டும் என்பது விதி! அதை நிறைவேற்ற நடந்த எண்ணற்ற விளையாட்டுகளில் அவர்கள் மனம் இடம் மாறாமல் இருப்பதனாலோ என்னவோ இப்போது விளையாடப் போகும் விளையாட்டில் விதி சற்று அதீத கவனத்துடன் திட்டம் தீட்டியது!

அதன் ஆரம்பம் எப்படி இருந்தாலும், முடிவு ஸ்ரீதர் மற்றும் ஸ்ரீரஞ்சனிக்கு இடையே ஒரு அழகிய உறவை மலர வைக்கும் என்பது விதியின் கணக்கு! விதியின் கணக்கு ஜெயிக்குமா? அல்லது விதியை மதியால் வெல்ல நினைக்கும் ஸ்ரீதரின் கணக்கு ஜெயிக்குமா?

அலை வீசும்🌊🌊🌊