🌊 அலை 24 🌊

காணும் யாவற்றிலும்

உன் பிம்பம்!

வீசும் காற்றுதனில்

உன் ஸ்பரிசம்!

விழி மூடும் தருணத்தில்

உன் நினைவு!

என்ன மாயம் தான்

செய்தாயோ என்னவனே!

.ஆர்.திருமண மஹால்…

கதிரவனின் பொற்கதிர்களால் குளித்த மாலைவேளை மங்கி இப்போது மெல்லிய கருநிறவண்ணம் பூசிய வானத்தின் அழகோடு அலங்கார விளக்குகளும் சேர்ந்து கொண்டு அந்த மண்டபத்தைச் சொர்க்கலோகமாய் மாற்றிக் காட்டிக் கொண்டிருந்தன.

இரு பெரும் நகை மாளிகை அதிபர்களின் புத்திரச்செல்வங்களின் நிச்சயதார்த்தம் அல்லவா! எங்கு நோக்கினும் செல்வ வளம் தெறிக்கும் தோற்றமும் விலையுயர்ந்த ஆடை அணிகலன்களுடனுமாய் விருந்தினர் நிறைந்திருக்க திருமண மண்டபத்தில் மகிழ்ச்சி கரை புரண்டோடியது.

தேவையே இல்லாமல் மணமகளின் அழைப்பு என்ற பெயரில் தனுஜாவின் வற்புறுத்தலால் சங்கவி மதுரவாணியை மதுசூதனனின் பாதுகாப்பில் விட்டவள் நிச்சயதார்த்தத்தை முடித்துவிட்டு வீடு திரும்புமாறு அன்புக்கட்டளையிட்டுச் சென்றுவிட்டாள்.

அவளும் வேறு வழியின்றி சங்கவி கொடுத்த ஆடைகளையும் எளிய அணிகலன்களையும் மதுசூதனனின் இல்லத்துக்குச் சென்று மாற்றிக் கொண்டு அவனுடனே திருமண மண்டபத்துக்கு வருகை தந்திருந்தாள்.

செல்லும் முன்னர் மைதிலி நெட்டி முறித்து திருஷ்டி கழித்து அனுப்பி வைத்ததில் அன்னையின் நினைவு வந்துவிட அதே யோசனையுடன் காரில் ஏறியவள் மண்டபத்திலும் அந்த மனநிலையுடனே அமர்ந்திருந்தாள்.

மதுசூதனன் ஓரிருமுறை வந்து அவளிடம் வளவளத்துவிட்டுச் சென்றதில் கொஞ்சம் இயல்புக்குத் திரும்பி நிச்சயநிகழ்வைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

தனுஜாவின் அப்பா சங்கரநாராயணன் அவரது நண்பரும் சம்பந்தியுமான ஸ்ரீவத்சனுடன் வாயெல்லாம் பல்லாக காட்சியளித்தவர் பட்டாடை பூண்டு வைரத்தால் இழைத்தச் சிலை போல தனுஜா வரவும் பெருமிதமாக மகளைப் பார்த்தார்.

ஒருவழியாக மகளுக்கு அவரது அந்தஸ்தில் உள்ள தகுதியான ஒருவனுடன் மணமாகப் போகும் சந்தோசம் அவரது உடலின் ஒவ்வொரு ஜீனிலும் சந்தோசத்துடன் கர்வத்தையும் புகுத்த திருமண ஏற்பாட்டை எடுத்திருந்த மதுசூதனனையும் அவனது நண்பர்கள் மற்றும் ஊழியர்களையும் அலட்சியத்துடன் ஒரு முறை பார்த்துவிட்டு நிச்சயத்தில் கவனமானார்.

ஸ்ரீவத்சன் மனைவியுடன் அமர்ந்திருக்க சங்கரநாராயணனும் செல்வநாயகியும் புன்னகை முகத்தினராய் மகளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.

மதுரவாணி இந்நிகழ்வுகளை யாருக்கோ வந்த விருந்து என வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க அவளருகே வந்து அமர்ந்தான் மதுசூதனன்.

இப்போதும் அவன் முகத்தில் வருத்தத்துக்கான அறிகுறியே இல்லை. அது தான் மதுரவாணியைத் திகைக்க வைத்தது. இப்படியும் ஒரு மனிதன் இருப்பானா என்ற ஆச்சரியம் அவளுக்கு. கூடவே சற்று முன்னர் யாரிடமோ போனில் பேசிவிட்டு வந்தவனிடம் ஏதோ ஒரு மாற்றம் தெரிந்தது.

அதைக் கண்டுகொள்ளாது “உன் எக்ஸ் லவ்வர் சரியான சைக்கோ… உனக்கு மனசுக்குக் கஷ்டமா இருக்கும்னு தெரிஞ்சும் இப்பிடி உன்னையே அவ கல்யாணத்துக்கு வேலை செய்ய வைக்கிறாளே! அவளைச் சொல்லி ஒரு தப்பும் இல்ல… நீ ஏன் இந்த டீலை ஒத்துக்கிட்ட? முடியாதுனு சொல்லிருக்கலாம்ல” என்று ஆற்றாமையுடன் கேட்டவளுக்கு முறுவலித்தபடியே

“ஏன் முடியாதுனு சொல்லணும்? இதால நம்ம கன்சர்ன் நேம் எலைட் க்ளாஸ் பீபிள் மத்தில பிரபலமாகும் வாணி… எனக்கு அது தான் முக்கியம்… ஐ அம் நாட் அ செண்டிமெண்ட் இடியட்… பட் உனக்கு இவ்ளோ வருத்தமா இருக்கிறதால ஒன்னு வேணும்னா செய்யலாம்… நம்ம மேரேஜோட முதல் இன்விடேசனை தனுஜாவுக்குக் குடுப்போம்… அதுவும் ஜோடியா போய் குடுப்போம்… டீல் ஓகேவா?” என்று கேட்க அவன் எண்ணியது போலவே மதுரவாணி அமைதியாகி விட்டாள்.

லக்ன பத்திரிக்கை வாசித்து முடிக்கும் தருவாயில் மண்டபத்துக்குள் சளசளப்பு கேட்க அவள் திரும்பிப் பார்க்கையில் அங்கே காவல்துறை அதிகாரிகள் வரவே மதுரவாணி தன்னிச்சையாகத் தலையைக் குனிந்து கொண்டாள். உள்ளுக்குள் திக்திக்கென்று இருக்க அவர்களின் ஷூ கால்கள் நகரும் திக்கையே அவளது விழிகள் வெறித்துப் பார்த்தது.

அவர்கள் அவள் இருக்கும் வரிசையைத் தாண்டிச் சென்ற பிறகு தலையுயர்த்தியவள் அவர்கள் வேறு யாரையோ தேடி வந்துள்ளதை உணர்ந்து நிம்மதியுற்றாள்.

அவர்கள் ஸ்ரீவத்சனிடம் சென்று தாங்கள் அஜய்யை கைது செய்ய வந்திருப்பதாகச் சொல்ல அவரது முகம் கோபத்தில் சிவந்தது. அவர் அந்த அதிகாரிகளுடன் வாதம் செய்ய அவர்களில் ஒருவர் போனை எடுத்தார்.

“சார் நாங்க எவ்ளோ கேட்டும் ஸ்ரீவத்சன் சார் அடம் பிடிக்கிறாரு… நீங்க வந்தா தான் அரெஸ்ட் பண்ண முடியும்னு நினைக்கேன்!”

“ஓகே சுதாகர்… அந்த ஹைகிளாஸ் கிரிமினலை அரெஸ்ட் பண்ண நானே தான் வரணும்னு அவனைப் பெத்தவரே ஆசைப்படுறப்போ நான் வராம இருக்க முடியுமா?” என்று சொல்லிவிட்டுப் போனை தனது சீருடையின் பாக்கெட்டில் வைத்தவன் வேறு யாருமல்ல, ஸ்ரீதரே தான்!

வழக்கமாக குற்றவாளியைக் கைது செய்ய இணை ஆணையர் வர வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஸ்ரீவத்சனின் செல்வாக்கு பற்றி அறிந்திருந்ததால் ஆணையர் அவனையே அனுப்பி வைத்திருந்தார். வேறு வழியின்றி அவனும் மண்டபத்தினுள் அடியெடுத்து வைத்தான்.

அவன் உள்ளே வரவும் மதுரவாணியின் கண்கள் விரிய அவனோ நேரே மேடையை நோக்கிச் சென்றான். மதுசூதனன் இவை அனைத்தையும் புருவச்சுழிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தானேயன்றி வேறு எதுவும் செய்ய அவன் தயாராய் இல்லை.

ஸ்ரீதர் அஜய்யைச் சுட்டிக்காட்டி “அக்யூஸ்டை அரெஸ்ட் பண்ணுறத யாராவது தடுத்திங்கனா எங்க கடமைய செய்யவிடாம தடுத்திங்கனு அவங்களையும் சேர்த்து அரெஸ்ட் பண்ண வேண்டியதா இருக்கும்… என்ன சுதாகர் வேடிக்கை பாக்குறிங்க? அரெஸ்ட் ஹிம்” என்று அழுத்தமாய் ஆணையிட அஜய் திமிறி எழுந்து அங்கிருந்து தப்பிக்க முயல அவனது பிடி ஸ்ரீதரிடம் மாட்டிக் கொண்டது.

வெறுமெனே அவன் பிடித்திருந்த விதத்திலேயே கரம் தனியாய் கழண்டுவிடும் போல வலிக்க முகம் சுளித்த அஜய் “என் லெவல் தெரியாம விளையாடுறிங்க டி.சி.பி சார்?” என்று அந்நேரத்திலும் திமிராய் மிரட்ட ஸ்ரீதர் சுதாகருக்குக் கண் காட்டினான்.

கூடவே “என்னடா உன்னோட லெவல்? லவ் பண்ணுன பொண்ணைக் கைவிட்ட அயோக்கியன், அவளை பிளான் பண்ணி மர்டர் பண்ணுன ஹை கிளாஸ் கிரிமினல் தானே! அக்யூஸ்டுக்கு இவ்ளோ மரியாதை அதிகம்” என்று உறுமியபடி சினந்த பார்வையுடன் அவன் நோக்கவும் அஜய் முகம் வெளிற வாயடைத்து நின்றான்.

சுதாகர் அவனது கையில் விலங்கை மாட்டவும் ஸ்ரீவத்சன் கோபாவேசத்துடன் ஸ்ரீதரை நெருங்கியவர் “என் பையனை என்னால ஜாமின்ல எடுக்க முடியும் டி.சி.பி சார்… அவனை நீங்க தரக்குறைவா நடத்துனதுக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும்” என்று கர்ஜிக்க

“ஜாமினா? அதுக்குலாம் வாய்ப்பே இல்ல மிஸ்டர் ஸ்ரீவத்சன்… உங்க மகனுக்கு எதிரா ஸ்ட்ராங்கான எவிடென்ஸ் இருக்கு… இவனுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என்னையே கொல்லுறதுக்கு ஆள் செட் பண்ணி அனுப்புவான்? இப்பிடி ஒரு கிரிமினலை பிள்ளையா பெத்துட்டு உங்களுக்கு இவ்ளோ பேச்சு ஆகாது… எதுவா இருந்தாலும் இவனை நாங்க கோர்ட்ல ப்ரொடியூஸ் பண்ணுவோம்… அப்போ பாத்துக்கோங்க… எழுதி வச்சுக்கோங்க உங்க மகனுக்கு ஜாமின் இந்த ஜென்மத்துல கிடைக்காது… ஏன்னா அவன் என்னைச் சீண்டியிருக்கான்” என்று பதிலுக்கு அழுத்தம் திருத்தமாய் பதிலளித்தவன் அஜய்யை கைது செய்து இழுத்துச் சென்றான்.

செல்லும் போதே சிலையாய் சமைந்து நின்ற மதுரவாணியையும் அவளருகில் தன்னைப் பார்த்துக் குறுநகை புரிந்த மதுசூதனனையும் பார்த்தவன் அவளைக் கண்ணால் சுட்டிக்காட்ட மதுசூதனனோ அவளுக்கு வேறு வேலை இல்லை என்றான் சைகைமொழியில். பின்னர் கையசைத்து விடைபெற்றவன் அஜய்யைக் கைவிலங்கோடு அழைத்துச் சென்றுவிட்டான்.

மொத்த திருமண மண்டபமும் இக்காட்சியை வேடிக்கை பார்க்க மேடையில் அலங்காரபூஷிதையாய் நின்று கொண்டிருந்த தனுஜாவின் முகம் பேயறைந்தாற் போல மாறிவிட்டிருந்தது.

அவளது தந்தையோ வாழ்க்கையில் இப்படி ஒரு தலைகுனிவைச் சந்தித்து பழக்கம் இல்லாததால் செய்வதறியாது திகைத்து நிற்க தாயார் வாயைப் பொத்திக் கொண்டு அழவே ஆரம்பித்துவிட்டார்.

தனுஜாவின் விழிகள் முன் வரிசையில் அமர்ந்திருந்த மதுரவாணியிடமும் மதுசூதனனிடமும் படிந்து மீள இவர்கள் முன்னிலையில் அவமானப்பட்டு விட்டோமே என்ற எண்ணத்தில் கண்ணீர் கரைபுரண்டு வர அங்கிருந்து மணப்பெண் அறையை நோக்கி ஓடினாள் அவள்.

அவள் பின்னே இத்தனை நாட்கள் அவளைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்த தோழியர் யாரும் ஓடவில்லை. ஏனெனில் அஜய்கும் தனுஜாவுக்கும் திருமணம் பேசியிருந்த சூழலில் அஜய் செய்த குற்றம் தனுஜாவுக்கும் தெரிந்திருக்கலாம்; இப்போது அவளுடன் சென்றால் எங்கே தாங்களும் அக்குற்றங்களுடன் தொடர்புடையவர்களாக கருதப்படுவோமோ என்ற பயம் அவர்களை நகர விடாது தடுத்தது.

மதுரவாணிக்கோ இத்தனை அவமானம் தனுஜாவுக்கு நேர தான் காரணமாகி விட்டோமோ என்ற குற்றவுணர்வு எழ அவள் ஓடிய திக்கை நோக்கிச் செல்ல முற்பட்டவளைக் கைப்பிடித்துத் தடுத்தான் மதுசூதனன்.

“எங்க போற வாணி?”

“நீ பாத்தல்ல, அந்தப் பொண்ணு அழுறா மது… பாவமா இருக்கு”

கையிலிருந்த குடையை அடுத்தவருக்குத் தாரை வார்த்துவிட்டு மழையில் நனைந்து சென்றவளின் இரக்கச்சுபாவத்தைக் கண்கூடாக அறிந்தவனாயிற்றே அவன்! ஆனால் அம்முதியவர்களும் தனுஜாவும் ஒன்றல்ல என்பதை இவளுக்குப் புரியவைத்தாக வேண்டும்!

“நீ இரக்கப்படுற அளவுக்கு ஒன்னும் நடக்கல… இதே அஜய்யைப் பத்தியும் அவளோட ஃப்ரெண்ட்ஸ் பத்தியும் நான் எத்தனை தடவை வார்ன் பண்ணிருப்பேன் தெரியுமா? அப்போ அவ என் பேச்சை கேக்கவேல்ல… இவ்ளோ ஏன் அவ என் கிட்ட மேரேஜ் ஆர்டர் குடுத்தது, உன்னை என்கேஜ்மெண்ட்ல கலந்துக்கணும்னு கட்டாயப்படுத்துனது எல்லாமே நம்மளை எரிச்சல்படுத்தி பாக்கத் தான் வாணி! விடு! அவளுக்கு அவளோட அப்பா அம்மா ஆறுதல் சொல்லுவாங்க”

அவனது பேச்சைக் கேட்கும் எண்ணம் அவளுக்கு இல்லை! அவன் கையை உதறியவள் செல்ல முற்பட

“வாணி அவளை விட முக்கியமான மனுசங்க நம்ம லைஃப்ல இருக்காங்க… சொன்னா கேளு… அவளை கன்சோல் பண்ணுறேனு போய் அசிங்கப்படாத” என்று இறுகிய குரலில் எச்சரித்தவனை சட்டை செய்யாது மதுரவாணி அங்கிருந்து நேரே மணமகள் அறையை நோக்கி சென்றாள்.

அங்கே தனுஜா மட்டும் அழுது கொண்டிருக்க உள்ளே வந்தவள் தொண்டையைச் செறும தனுஜா வேகமாக கண்ணீரும் கம்பலையுமாக எழுந்தவள்

“நான் எவ்ளோ கஷ்டப்படுறேனு பாத்து ரசிக்க வந்தியா? பாரு! என் வாழ்க்கை இன்னைக்கு எல்லார் முன்னாடியும் கேலிக்கூத்தா மாறிடுச்சு… இப்போ உனக்கு சந்தோசமா?” என்று அழுகையுடன் கேட்க

“இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லனு உனக்கு நல்லாவே தெரியும்… ஆனா நீ கோவத்துல பேசுற… உனக்கு என்னால சொல்ல முடிஞ்ச ஒரே விசயம் நானும் மதுவும் லவ் பண்ணல… அன்னைக்கு நடந்தது வெறும் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்… உனக்கு அது தெரிஞ்சிருந்தும் ஏன் நீ இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டனு எனக்குப் புரியல… நான் உன்னோட கஷ்டத்தை வேடிக்கை பாக்க வரல… நீ உன் கையில இருந்த வைரத்தை உன்னோட இன்செக்யூர் ஃபீலிங்கால இழந்துட்ட… இனியாச்சும் புரிஞ்சு நடந்துக்கோனு சொல்லிட்டுப் போகத் தான் வந்தேன்” என்று சொல்லிவிட்டு வெளியேற எத்தனித்தாள்.

அவள் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மையென தனுஜாவுக்கும் தெரியும். இனி என்ன செய்ய முடியும்? கண்ணீர் பெருக அவளது மூளை வேகமாக யோசித்தது.

உடனே மதுரவாணியின் கரத்தைப் பற்றியவள் “ப்ளீஸ்! மதுவ நான் பாக்கணும்… அவனை இங்க கூட்டிட்டு வா… நான் பண்ணுன எதையும் மனசுல வச்சுக்காம எனக்காக அவனை ஒரே ஒரு தடவை கூட்டிட்டு வா” என்று அழ ஆரம்பிக்கவும் அவள் பதறிப்போனாள்.

“அழாத ப்ளீஸ்! நான் அவனைக் கூட்டிட்டு வர்றேன்” என்று கிளம்பியவளை அறை வாயிலில் வழி மறித்தார் தனுஜாவின் தந்தை.

அவரைக் கண்டதும் தனுஜா விழிக்க மதுரவாணி வழக்கமான அலட்சியத்துடன் வெளியேற முயல அவளைத் தடுத்து நிறுத்தியது அவரது குரல்.

“கொஞ்சம் நில்லும்மா! அந்த மது இங்க வரக் கூடாது… அப்பிடி அவன் வந்தான்னா நான் பேச மாட்டேன்…” என்று மிரட்டியவரின் கையில் துப்பாக்கியைக் கண்டதும் தனுஜாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

ஆனால் மதுரவாணி இதற்கெல்லாம் அஞ்சுபவள் இல்லையே!

“பொம்மை துப்பாக்கி வச்சு மிரட்டுறத உங்க பொண்ணோட நிறுத்திக்கோங்க சார்… நான் சின்னவயசுல இருந்து இத பாத்து வளந்தவ தான்… இதுக்குலாம் நான் பயப்பட மாட்டேன்” என்றவளின் பதிலடியில் சற்று தயங்கியவர் துப்பாக்கியைத் தனது நெற்றிப்பொட்டில் வைத்தார்.

“அவனை ஏன் நான் கொல்லணும்? நானே செத்துப் போயிடுறேன்… என் அந்தஸ்துக்குக் குறைஞ்சவனை மருமகனா ஏத்துக்கிறதுக்குப் பதிலா நான் சந்தோசமா செத்துப் போவேன்” என்று சொன்னவரின் பிடிவாதக்குரலில் மதுரவாணி சற்று தளர்ந்து தான் போனாள்.

“சார் இந்த மாதிரிலாம் பண்ணாதிங்க ப்ளீஸ்”

“அப்போ அவனை இங்க இருந்து கூட்டிட்டுப் போயிடு… இந்த நிச்சயதார்த்தம் நின்னதை சாக்கா வச்சுக்கிட்டு என் பொண்ணை மறுபடியும் அவன் வலைல விழ வைக்க டிரை பண்ணுனான்னா நான் நிஜமாவே செத்துப் போயிடுவேன்”

சங்கரநாராயணனின் குரலில் இருந்த தீவிரம் மதுரவாணியைத் தயங்க வைத்தது. தனுஜாவின் கண்ணீரைக் கண்டு பாவப்பட்டு மதுசூதனனை அழைத்து வந்தால் இந்த மனிதர் சொன்னபடியே செய்துவிட்டால் என்ன செய்வது என்று புரியாதவளாய் வெளியேற எத்தனித்தவளை தனுஜாவின் இறைஞ்சும் விழிகள் கெஞ்சியது என்னவோ உண்மை!

ஆனால் அதைப் பார்த்தால் தேவையின்றி ஒரு மனித உயிர் பலியாகும்! எனவே வேகமாக மதுசூதனனிடம் வந்தவள்

“என்னை வீட்டுல விட்டுடு மது” என்று அவசரமாக உரைக்கவே அவனும் மறுபேச்சின்றி அவளுடன் காரில் ஏறிவிட்டான். காரில் ஏறியவன் ப்ளூ டூத்தைக் காதில் மாட்டிக் கொண்டபடியே நண்பர்களிடம் திருமண மண்டபத்தில் அனைத்தையும் ஒழுங்குப்படுத்திவிட்டு வரும்படி சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

மதுரவாணியோ இதை கவனியாதவளாய் தனுஜாவின் இறைஞ்சும் விழிகளின் நினைவிலேயே இருக்க மதுசூதனன் ஒரு கையால் ஸ்டீயரிங் வீலை பிடித்தபடி மற்றொரு கரத்தால் அவள் கன்னத்தைத் தட்டவும் திடுக்கிட்டுத் திரும்பினாள்.

அவளது முகவடிவை வட்டமிட்டுக் காட்டி “ஏன் இவ்ளோ சோகமா வர்ற? கொஞ்சம் சிரியேன்! எனக்குத் தெரிஞ்சு சிரிக்கிறதுக்கு டாக்ஸ் எதுவும் கட்ட வேண்டாம்” என்று கேலியாய் சொல்ல

“அது… இன்னைக்குத் தனுஜாவோட ரூம்ல….” என்று பேச ஆரம்பித்தவளின் இதழில் ஆட்காட்டிவிரலை வைத்து அமைதி என்று சைகை செய்தவன்

“உனக்கும் எனக்கும் இடைல தனுஜாங்கிற பேரோ அவளைப் பத்தின விசயங்களோ வர வேண்டிய அவசியம் இல்ல… நான் சொல்ல சொல்ல கேக்காம அவ கிட்ட போய் பேசுனியே! எடுத்ததும் உன்னைத் திட்டிருப்பாளே?” என்று கேட்டவன் அவளிடம் இருந்து பதில் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் மதுரவாணியோ “அவ உன் கிட்ட பேசணும்னு சொன்னாளே! ஆனா அத உன் கிட்ட சொன்னா நிஜமாவே அவங்கப்பா சூசைட் பண்ணிப்பாரோனு பயமா இருக்கு மது… நீ நினைக்கிற அளவுக்கு அவ மோசம் இல்ல” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். வெளிப்படையாகச் சொல்ல முடியாத தனது இயலாமையை எண்ணி அவள் வருந்த ஆரம்பித்தாள்.

மதுசூதனனோ தான் பேசியதில் அவள் வருத்தமுற்று விட்டாளோ என்று எண்ணியவனாய் பேசாது சாலையில் கண் பதித்தான்.

அதே நேரம் ஸ்ரீதர் கைது செய்து அழைத்துச் சென்ற அஜய்கு அங்கே கவனிப்பு நன்றாக இருக்கவே முதலில் திமிரில் துள்ளியவன் பின்னர் அடங்கிவிட்டான்.

ஆனால் வாயைத் திறக்க மாட்டேன் என அடம்பிடித்தவனை முறைத்த ஸ்ரீதர் “வாயைத் திறந்து பேசுனா உனக்கு நல்லது… நீ பேசாம அடம் பிடிச்சாலும் எனக்குக் கவலை இல்ல… உனக்கு எதிரா எல்லா எவிடென்சும் ஸ்ட்ராங்கா இருக்கு அஜய்… நீயா சொல்லிட்டா தண்டனையாச்சும் குறையும்” என்று இறுக்கமான குரலில் சொல்லிவிட்டு அகன்றான்.

தனது இருக்கைக்கு வந்தவனுக்கு எரிச்சல் மண்டியது. அப்போது தான் அவனது மொபைலின் ரிங்டோன் அவனை அழைத்தது. ரேவதி தான் அழைத்தார்.

போனை எடுத்துக் காதில் வைத்தவன் அன்னை சொன்ன தகவலில் எரிச்சல் எல்லாம் அடங்க நிம்மதி பெருமூச்சு விட்டான்.

“ஓகேம்மா! இப்போ தான் நிம்மதியா இருக்கு… நாளைக்கு எனக்கு ஆப் டியூட்டி தான்… கமிஷ்னரைப் பாத்துட்டுக் கிளம்புவோம்” என்று தாயாருக்கு உறுதி அளித்துவிட்டுப் போனை வைத்தவனின் மனம் நீண்டநாட்களுக்குப் பின்னர் அன்று தான் தெளிந்த குளம் போல ஆனது.

ஸ்ரீதர் மனம் நிம்மதியுற அதற்கு மாறாய் அலைபாயும் மனதுடன் டெய்சி ரெசிடென்சியல் கம்யூனிட்டியின் நுழைவுவாயிலில் இறங்கினாள் மதுரவாணி. மதுசூதனனிடம் கையாட்டிவிட்டு விடைபெற்றவள் தன் பின்னே அவனும் வரவும் “நானே போய்ப்பேன்! நீ எதுக்கு தேவை இல்லாம காரை விட்டு இறங்குற?” என்று கேட்டபடி சரிவுகளில் இறங்கத் தொடங்கினாள்.

இருளில் தேயிலைச்செடிகளினூடே எதுவோ நகர்வது போல தெரிய அதில் கண்ணைப் பதித்தவள் கால் இடறி விழப் போக அவளைத் தாங்கியவன் “இதுக்குத் தான் காரை விட்டு இறங்கி உன் கூட வர்றேன்” என்று சொல்லிவிட்டுப் புன்முறுவல் பூக்க அந்தக் குரலில் வழிந்த காதலா அல்லது அவனது குறும்புச்சிரிப்பா எது அவளை ஈர்க்கிறது என்று அவளுக்கே புரியவில்லை.

அவனது கரங்கள் அவளைச் சுற்றி வளைத்திருப்பதையும், அவனது நீண்டவிரல்களின் அழுத்தம் இடையில் பதிவதையும் உணர்ந்தாலும் என்ன செய்யவென்று அறியாதவளாய் அவனது விழிகளுடன் தனது விழிகளைக் கலந்தவளாய் அவள் கனவுலோகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கினாள்.

சுற்றிலும் தேயிலைச்செடிகள்; அவற்றைக் குளிப்பாட்டும் தண்மதியவளின் பால் ஒளி; சிறு குழந்தை பென்சிலால் தீட்டியது போல வரிவடிவமாய் மூன்று பக்கமும் சூழ்ந்திருக்கும் மலைச்சிகரங்கள்; மொத்த டெய்சி ரெசிடென்சியல் கம்யூனிட்டிக்கும் சென்ட்ரல் ஏசி போட்டது போல வீசிய இளங்குளிர் காற்று என அந்தச் சூழ்நிலை ஒன்று போதுமே, கியூபிட்டின் அம்பு இருவர் இதயத்தையும் தாக்குவதற்கு!

அப்போது சற்று வேகமாய் வீசிய சில்லென்ற காற்று மேனியைத் தழுவியதில் புல்லரித்த மதுரவாணியின் உடல் அவனது கரங்களில் நீ சரிந்திருக்கிறாய் என அவளுக்கு நினைவூட்ட அவள் வேகமாக அவனிடம் இருந்து விலகினாள்.

இவ்வளவு நேரம் நடந்த அனைத்தும் நிஜமா அல்லது தனக்கு நடக்கும் போதே கனவு காணும் வியாதி வந்துவிட்டதா என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள் அவள்.

அவளது முகமாற்றங்களை தன்னுடன் நடந்து வருபவன் கவனிக்கிறான் என்பதைக் கூட உணராதவளாய் சற்று முன்னர் தன்னைத் தாக்கிய இனிய அதிர்ச்சியை பற்றி யோசித்தபடி நடந்தாள்..

பின்னர் நினைவு வந்தவளாய் தன்னை விழாது தாங்கியதற்கு அவனிடம் “தேங்க்ஸ்” என்று முணுமுணுத்தபடி கடந்தவளுடன் தானும் நடந்தான் மதுசூதனன். அவனும் கிட்டத்தட்ட அவளது மனநிலையில் தான் இருந்தான். ஆனால் மதுரவாணியைப் போல அவன் குழம்பவில்லை. மாறாக குதூகலமாகவே உணர்ந்தான்.

அவனுடன் சேர்ந்து சங்கவியின் வீட்டு நுழைவுவாயிலைக் கடந்து வீட்டுக்குள் நுழைந்தவள் “அப்பிடியே உள்ள வந்து ஒரு கப் காபி குடிச்சுட்டுப் போ! இல்லனா எனக்கு விருந்தோம்பல்னா என்னனு தெரியலைனு அக்கா ஒரு மூச்சு டயலாக் பேசுவா” என்று சொன்ன விதத்தில் நமட்டுச்சிரிப்பு சிரித்தான் அவன்.

“நீ சொன்னாலும் சொல்லவே இல்லனாலும் நான் இன்னைக்கு இங்க வந்து தானே ஆகணும் வாணி… பிகாஸ் உனக்கு மாரல் சப்போர்ட்டுக்கு ஆள் வேணும்ல” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

இருவரும் ஹாலுக்குள் நுழைய மதுரவாணி அவனிடம் “நீ ஹால்ல இரு… நான் போய் காபி கொண்டு….” என்று படபடவென பேசியவள் அங்கே சோபாவில் அமர்ந்திருந்தவர்களைக் கண்டதும் பேச்சு நின்று போய் அதிர்ந்து நின்றாள்.

மதுசூதனன் அவர்களிடம் திரும்பியவன் “வணக்கம்! நான் தான் உங்களை வரச் சொன்ன மதுசூதனன்” என்று புன்னகை முகமாய் சொல்லவும் மதுரவாணி அதிர்ந்தாள். அதைக் கேட்ட அங்கு இருந்த ஆண்களில் பெரியவரின் முகம் மலர்ந்தது என்றால் இளையவர்களின் முகம் கடுகடுத்தது.

மதுரவாணியின் சகோதரி சங்கவி, யாழினி, ஸ்ரீரஞ்சனி, ராகினி என பெண்கள் அனைவரும் தலையைக் கவிழ்ந்தபடி அமர்ந்திருந்தனர்.

அவள் கலங்கிப் போன முகத்துடன் “அப்பா!” என்று அழுகை இழையோடிய குரலில் சொல்ல அந்த வார்த்தை முடியும் முன்னரே இத்தனை நாட்கள் பிரிந்திருந்த மகளை ஓடோடி வந்து அணைத்துக் கொண்டார் ரத்தினவேல் பாண்டியன்.

அலை வீசும்🌊🌊🌊