🌊 அலை 13 🌊

கனிவு சொட்டும் விழிகள்

கனலாய் மாறி எரிய

நாணத்தில் சிவக்கும் வதனம்

சினத்தில் செந்நிறம் கொள்ள

தேன்மதுரச் சொற்கள் சிந்தும் நாவு

தேளின் கொடுக்காய் கொட்ட

தீப்பிழம்பாய் குமுறும் என்னவளே!

உன் கோபம் தீர்க்கும்

வழியறியா உன்னவன் நான்!

மதுரவாணி செவி மடலைத் தேய்த்துவிட்டுக் கொண்டாள். ஆரத்யாவின் அழுகை மனிதச்செவியால் உணரக்கூடிய டெசிபலையும் தாண்டி ஒலிக்க அவளுக்கு வந்த கோபத்தில் மூன்றாவது கண்ணைத் திறந்து சுற்றியிருந்தவர்களை எரிக்காத குறை தான்!

ஆரத்யா அழுகையைப் பார்த்த சாய்சரண் தானும் அழத் தயாராகவே மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு பொறுமையை வரவழைத்துக் கொண்டாள் மதுரவாணி.

“சரி சரி! ரெண்டு பேரும் அழாதிங்க… உங்க மம்மிகளைக் கூட்டிட்டு வர்றேன்” என்று கடுப்புடன் முறைத்துவிட்டு ராகினியிடம் இவர்களைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு நகர்ந்தவள் விறுவிறுவென யாழினியும் சங்கவியும் மதுசூதனனுடன் பேசிக் கொண்டிருந்த மேஜையை நோக்கி நடந்தாள்.

அங்கே மூவரும் தீவிரக்குரலில் விவாதித்துக் கொண்டிருக்க மதுரவாணி மேஜையின் மீது கையை ஊன்றியவள் இரு பெண்களையும் நோட்டமிட்டுவிட்டு

“தாய்க்குலங்களே! நீங்க பெத்த சைத்தான் குட்டிகள் என் உசுரை வாங்கிட்டிருக்குதுங்க… வந்து என்னனு கேளுங்க” என்று முகத்தைச் சுருக்கியபடி சொல்ல யாழினியும் சங்கவியும் அவள் நின்று கொண்டிருக்கும் விதத்தைக் கண்ணால் காட்டி அவளது கரத்தைப் பற்றி இழுத்துக் காதுக்குள்

“ஏய்! கொஞ்சம் கூட மரியாதை இல்லாம இப்பிடி தான் நடந்துப்பியாடி? மது சார் நம்மள பத்தி என்ன நினைப்பாரு?” என முணுமுணுக்க

“அவன் என்ன நினைச்சா எனக்கு என்ன? ஒழுங்கா உங்க பிள்ளைங்களை சைலண்ட் ஆக்குங்க… ரஞ்சி ஐஸ் க்ரீம் ரோல் வாங்கிட்டு வர்றேனு ஒரேயடியா காணாம போயிட்டா… நானும் ராகியும் தலையைப் பிச்சுக்காத குறை தான்” என்று குறைபட்டவள் தனது பேச்சை மதுசூதனன் கவனிக்கிறான் என்பதை அறியவில்லை.

கூடவே “ஆமா! நீங்க இந்தியன் பி.எம், இவன் அமெரிக்கன் பிரசிடெண்ட் பாருங்க… வரலாற்று சிறப்பு வாய்ந்த உங்க சந்திப்புல நான் இடைல வந்தது எவ்ளோ பெரிய தப்பு!” என்று பொய்யாய் அதிசயித்ததைக் கண்டவன் இரு பெண்களிடமும்

“நீங்க போய் குழந்தைங்கள என்னனு பாருங்க மேம்… உங்க சிஸ்டர் இருக்காங்கல்ல, இவங்க கிட்ட நான் மத்த வேலை என்னனு நோட் பண்ணச் சொல்லிடுறேன்” என்று சொல்லவும் அவர்கள் பெருமூச்சு விட்டபடி தத்தம் பிள்ளைச்செல்வங்களைத் தேடிச் செல்ல அவர்கள் சென்றதும் மதுரவாணி அவன் எதிரே உள்ள நாற்காலியில் அமர்ந்து அவர்கள் வைத்துச் சென்ற டேபில் உள்ளதை வாசிக்க ஆரம்பித்தாள்.

அவனோ கையைக் கட்டிக் கொண்டு கடகடவென என்னென்ன மாதிரி அலங்காரங்களை மணப்பெண் விரும்புகிறாள் என்பதைச் சொல்லிக் கொண்டே போக மதுரவாணி அதைக் குறித்துக் கொண்டாள்.

எல்லாவற்றையும் எடுத்து முடித்ததும் அவளை வாசிக்கச் சொல்ல மதுரவாணி அவனைப் போல கடகடவென வாசித்துக் காட்டவும் நிறுத்து என சைகை காட்டியவன்

“என்ன நீ ஸ்கூல் கேர்ள் மாதிரி மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கிற? ஒரு சீனரிய உன் கிட்ட எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுறப்போ அதை மனக்கண்ணால ரசிச்சு சொல்லணுமே தவிர இப்பிடி மக்கப் பண்ணி ஒப்பிக்க கூடாது” என்று தலையிலடித்துக் கொண்டான்.

“இதுல ரசிக்க என்ன இருக்கு? அந்தப் பொண்ணும் மாப்பிள்ளையும் நடந்து போற வென்யூல க்ரீம் கலர் ஆர்கிட்டும் பேபி பிங் ரோஸும் வச்சு டெகரேட் பண்ணணும். அப்புறம் அவங்க உக்காந்து போஸ் குடுக்கப் போற இடத்தை ஒரு ஃப்ளவர் ரீத் மாதிரி டிசைன் பண்ணணும்… அதுல டெய்சியும் ரோசும் மிக்ஸ் ஆகியிருக்கணும்… அந்த ரீத் மரக்கிளைய வளைச்சு செஞ்ச மாதிரி இருக்கணும்… இவ்ளோ தானே! நீ சொன்ன பாயிண்ட்ஸ் எல்லாம் நான் நோட் பண்ணிட்டேன்… வேலைய வேலையா பாக்கணுமே தவிர அதுல ரசனைக்கு என்ன இடம்னு எனக்குப் புரியலப்பா” என்று மதுரவாணி தோளைக் குலுக்கிக் கொண்டாள் அசட்டையாக.

“இந்தப் பேச்செல்லாம் வக்கணையா பேசு… ஆனா அஞ்சு வயசு குழந்தைங்களைப் பாத்துக்க தெரியல”

“ஆமா! இவரு பத்துப்பிள்ளைய பெத்து சீரும் சிறப்புமா வளர்த்தவரு எனக்குப் பிள்ளைங்கள பாத்துக்கத் தெரியலனு சொல்ல வந்துட்டாரு… போடா!”

“உனக்குக் குழந்தைங்கள பாத்துக்க மட்டும் தான் தெரியாதுனு நினைச்சேன்… ஆனா பெரியவங்களுக்கு மரியாதை குடுக்கவும் தெரியாது போல”

“அஹான்! பெரியவங்களா? யாருங்க சார் அது?”

அவள் கைகளை புருவத்துக்கு நேராக குவித்துத் தேடுவது போல நடிக்க மதுசூதனன் கண்ணைச் சுருக்கி அவளைப் பார்த்தான்.

இருவரும் மாறி மாறி வாதிட அதே ரெஸ்ட்ராண்டின் மற்றொரு மூலையில் ஸ்ரீரஞ்சனி ஸ்ரீதரை எப்படி தடுப்பது என்று புரியாது விழித்துக் கொண்டிருந்தாள்.

அவனோ அவள் கண் முன்னே சொடக்கிட்டவன் “ஹலோ மேடம்! என்ன யோசனை? இப்போவே மதுராவும் அவளோட லவ்வரும் இருக்கிற டேபிளுக்கு என்னைக் கூட்டிட்டுப் போங்கனு சொன்னேன்… காது கேக்கலையா?” என்று கேட்கவும்

“இப்போ அவங்களை பாத்து என்ன பண்ண போறிங்க சார்? முதல்ல லவ்வர்சோட பிரைவசில நம்ம மூக்கை நுழைக்கிறது தப்பு” என்று படபடத்தாள்.

“பிரைவசி வேணும்னு நினைக்கிறவங்க ஏன் ரெஸ்ட்ராண்டுக்கு வரணும்?” என்று கேட்டவனை விழி விரித்துப் பார்த்த ஸ்ரீரஞ்சனி அவன் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் புரிந்தவளாய்

“ஐயோ! நீங்க நினைக்கிற பிரைவசி இல்ல… ஐ மீன்… அவங்க என்னமோ சீரியசா பேசிட்டிருப்பாங்க… நம்ம ஏன் கரடி மாதிரி போய் டிஸ்டர்ப் பண்ணணும் சார்?” என்று சமாளிக்க முயன்றாள்.

ஆனால் அவளது சமாதானங்கள் எதுவுமே ஸ்ரீதரிடம் எடுபடவில்லை. தான் மதுரவாணியைச் சந்தித்தே ஆகவேண்டுமென ஒற்றைக்காலில் நின்றவன் இந்த ரெஸ்ட்ராண்டில் அவளைத் தேடிக் கண்டுபிடிப்பது ஒன்றும் அவ்வளவு கடினம் இல்லை என சொல்லவும் ஸ்ரீரஞ்சனி திகைத்தாள்.

“என்ன சார் கொஞ்சம் கூட இங்கிதம் தெரியாதவரா இருக்கிங்க? இப்போ நீங்க போய் அவங்க கிட்ட என்ன பேச போறிங்க?”

“உன் ஃப்ரெண்ட் கிட்ட கொஞ்சம் கூட குடும்பத்தைப் பத்தி கவலைப்படாம எவனோ ஒருத்தனை நம்பி இவ்ளோ தூரம் வந்திருக்கியே; உனக்குப் புத்தி இருக்குதானு கேக்கணும்… அப்புறம் அவளோட ஆசைக்காதலன் கிட்ட ஏன்டா அவ தான் சின்னப்பொண்ணு; விவரம் புரியாம வீட்டை விட்டு ஓடிவந்தானா, நீ நல்லப்புத்தி சொல்லி அவ குடும்பத்தைக் கூப்பிட்டுப் பேசிருக்க வேண்டாமானு நல்லா நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேக்கணும்”

“க்கும்! அதுக்கு அவளுக்கு லவ்வர் இருக்கணும்… இப்போ திடீர் காதலனுக்கு நான் எங்கே போவேன்?” என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி புலம்பியவளிடம்

“என்னமோ லவ்வர், திடீர்ங்கிற வார்த்தைலாம் என் காதுல விழுந்துச்சே?”

சந்தேகமாய் நோக்கியவனை ஆயாசத்துடன் நோக்கியவள் “அது ஒன்னுமில்ல சார்! நீங்க இப்பிடி திடீர்னு அவ லவ்வர் முன்னாடி போய் நின்னா அவரு மதுவ தப்பா நினைக்க மாட்டாரா?” என்று கேட்டுச் சமாளிக்க முயல

“நான் மதுராவுக்குப் பாத்த மாப்பிள்ளைனு அவன் கிட்ட சொன்னா தானே பிரச்சனை… ஜஸ்ட் ஒரு வெல்விஷரா போய் பேசப் போறேன்… தட்ஸ் ஆல்” என்று தோளைக் குலுக்கியபடி அவன் அங்கிருந்து நகர்ந்து செல்லவும்

ஸ்ரீரஞ்சனி பல்லைக் கடித்தவள் கடுப்புடன் தன் கையிலிருந்த ஐஸ் க்ரீம் ரோல் அடங்கிய கிண்ணத்தை அவன் தலையில் போட்டுவிடலாமா என்று ஆத்திரத்துடன் கையை உயரத் தூக்கியவள் அவன் திடுமென திரும்பி அவளைப் பார்க்கவும் வெலவெலத்துப் போனவளாய் கையைச் சட்டென்று கீழே இறக்கினாள்.

 “நீங்க என் கூட வரலயா?” என்று கேட்டவனிடம் வெறுமெனே தலையசைத்தவள் மனதிற்குள் “ஐயோ பகவானே! இந்த ஆளுக்கு டிப்பார்ட்மெண்ட்ல இருந்து எதாச்சும் கால் வரக் கூடாதா?” என்று புலம்பியபடி அவனைத் தொடர்ந்தாள்.

ஸ்ரீதர் அவர்கள் இருக்கும் இடம் குறித்துக் கேட்க அவளோ “க்கும்! தெரிஞ்சா சொல்ல மாட்டேனாக்கும்! போடா வளந்து கெட்டவனே” என்று பொறுமித் தீர்த்தபடியே அவனைத் தொடர்ந்தாள்.

ஆனால் வெளிப்படையாகத் திட்ட முடியாதே!

அவனுடன் கால் போன போக்கில் நடந்தவள் ரெஸ்ட்ராண்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த மதுசூதனனையும் மதுரவாணியையும் பார்த்து கால்கள் ஸ்தம்பிக்க அங்கேயே நின்றுவிட்டாள். அவளுடன் வந்த ஸ்ரீதரும் அவர்களைக் கவனித்துவிட்டான். பின்னர் ஸ்ரீரஞ்சனியைச் செல்லலாம் என்பது போல பார்த்துவிட்டு அவர்களை நோக்கி முன்னேற அவளும் அவன் பின்னே வேகமாய் நடந்தாள்.

மதுரவாணியும் மதுசூதனனும் அவர்கள் தங்களை நோக்கி வருவதை அறியாது வாதிட்டுக் கொண்டிருக்க ஸ்ரீதர் அவர்கள் மேஜையை நெருங்கியிருந்தவன் “ஹாய் மதுரா” என்று சொல்லவும் மதுரவாணி அவனை விழி தட்டாமல் நோக்கியவள் பதறிப் போய் எழுந்து நிற்க மதுசூதனனோ இவ்வளவு நேரம் தன்னிடம் ஏட்டிக்குப் போட்டியாக வாயாடியவளுக்கு இப்போது என்னவாயிற்று என்பது போல் அவளையும் ஸ்ரீதரையும் மாறி மாறிப் பார்த்தான்.

மதுரவாணி அவனை தயக்கத்துடன் நோக்கியவள் “ஹாய் ஸ்ரீதர் சார்” என்று திக்கித் திணறிப் பேச அவனோ சாதாரணமாக “உன்னோட செலக்சன் சூப்பர்! கங்கிராஜுலேசன்” என்று சொல்ல அவளோ என்ன செலக்சன்? எதற்கு வாழ்த்துகிறான்? என்று புரியாமலே இளித்து வைத்தாள்.

மதுசூதனன் ஸ்ரீதரை மதுரவாணியின் உறவினன் என்று எண்ணியவன் அவனை நோக்கிப் புன்னகைக்க அவனிடம் கை குலுக்கியவன் “ஐ அம் ஸ்ரீதர்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள மதுசூதனனும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

மதுரவாணி ஸ்ரீதரை நோக்கிச் சிரமத்துடன் புன்னகைத்தவள் அவனிடம் தனியே பேச வேண்டுமென அழைக்க அவள் அவனுடன் அங்கிருந்து அகன்றான்.

அவர்கள் சென்றதும் ஸ்ரீரஞ்சனி தொப்பென்று இருக்கையில் அமர மதுசூதனன் அவளை ஆராய்ச்சிப்பார்வை பார்த்தவன் “ஆர் யூ ஓகே சிஸ்டர்?” என்று கேட்க

அவளோ “இல்ல ப்ரோ! ஐ அம் நாட் ஓகே… அந்த வளந்து கெட்ட மனுசன் என்ன பண்ணப் போறானோனு பயமா இருக்கு” என்று தோழியின் நிலையை எண்ணி வாய் விட்டே புலம்பினாள்.

ஸ்ரீதருடன் வந்த மதுரவாணிக்கு சகட்டுமேனிக்குத் திட்டுக்கள் விழுந்தது. பெற்றோர், சகோதரர்கள், பாட்டி, உறவினர்கள் என அனைவரும் அவளை எண்ணிப் பரிதவிக்க அவள் இங்கே இன்பமாய் நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறாள் என்று குற்றம் சாட்டினான்.

மதுரவாணி அவனது குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பொறுமையாய் கேட்டதற்கு ஒரே காரணம் தான்! இது வரை திருமணம் பிடிக்காது தான் அவள் ஓடிவந்தாள் என்றாலும் அதைச் சொல்லிக் காட்டாத ஸ்ரீதரின் பெருந்தன்மை அவளை அமைதி காக்க செய்தது.

எனவே அவனிடம் பொறுமையாகவே பேச ஆரம்பித்தாள்.

“எனக்கு எதுவுமே பிடிக்கல சார்… அதான் நான் ஓடிவந்துட்டேன்… இங்க என்னோட நியூ லைப் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. மனசுக்குப் பிடிச்ச மனுசங்க, அடிதடி எதுவும் இல்லாத அமைதியான வாழ்க்கைய நான் வாழுறேன் சார்! இந்த அமைதியான மட்டும் போதும்னு தோணுது”

மதுரவாணி சொன்னதை ஸ்ரீதர் வேறு அர்த்தத்தில் எடுத்துக் கொண்டான்.

“புது வாழ்க்கை உனக்கு சந்தோசத்தைக் குடுத்துச்சுனு உன் பேரண்ட்சை மறந்துடுவியா மதுரா? அவங்க கிட்ட இது தான் உனக்குப் பிடிச்ச வாழ்க்கைனு சொன்னா அவங்க வேண்டானு சொல்லவா போறாங்க?”

“அவங்க ஒத்துக்க மாட்டாங்க சார்! அவங்கனு இல்ல, எந்த அப்பா அம்மாவும் அவ்ளோ ஈசியா ஒத்துக்க மாட்டாங்க… அதுக்காக கொஞ்சம் கூட மனநிம்மதி இல்லாம என்னால வாழ முடியாது” என்றவள்

“சப்போஸ் நான் இங்க தான் இருக்கேனு நீங்க நதியூருக்குப் போன் பண்ணிச் சொன்னிங்கனா எப்பிடி நதியூர்ல இருந்து கிளம்புனேனோ அதே போல இங்க இருந்தும் யாரு கிட்டவும் சொல்லாம கிளம்பிடுவேன்” என பிடிவாதக்குரலில் சொல்ல ஸ்ரீதருக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

ஆனால் விசயம் அவ்வளவு தான் என்பது போல விறுவிறுவென நடந்தவள் அங்கிருந்து சென்றுவிட்டாள். ஸ்ரீதர் அவள் சொன்னதை செய்வாள் என்பதை அனுபவப்பூர்வமாய் அறிந்திருந்ததால் இவளை விட்டுப் பிடிக்கவேண்டுமென எண்ணியவனாய் அவள் பின்னே சென்றான்.

மதுரவாணி படபடத்த இதயத்துடன் அங்கே வந்தவள் ஸ்ரீரஞ்சனியை நோக்க அவளோ மதுரவாணியின் பின்னே வந்த ஸ்ரீதரைக் கண்டதும் பதறிப் போய் எழுந்தாள். மதுசூதனன் தன்னிடம் இவ்வளவு நேரம் புலம்பியவள் இப்போது பதறுவதைக் கண்டு கேள்வியாய் நோக்கினான்.

ஸ்ரீதர் அவர்கள் மூவரிடமும் பொத்தாம் பொதுவாய் “நீங்க பண்ணுறது எல்லாம் சரினு நினைக்காதிங்க… மத்தவங்களைப் பத்தியும் கொஞ்சம் யோசிங்க” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.

இரு பெண்களின் முகமும் அவன் சென்றதும் வெளிறிவிட மதுசூதனன் தானும் கிளம்ப எழுந்தான். இருவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டான்.

அவன் சென்றதும் ஸ்ரீரஞ்சனி நடந்த அனைத்தையும் மதுரவாணியிடம் விளக்க அவளோ

“ஏய்! என்னடி பண்ணி வச்சிருக்க? ஸ்ரீதர் சார் நான் லவ் பண்ணுறவனுக்காக வீட்டை விட்டு ஓடிவந்தேனு நினைச்சுத் தான் அவ்ளோ அட்வைஸ் பண்ணுனாரா? அப்போ அவரு என்னையும்… அந்த… அந்த மதுவையும்” என்று சொல்லிவிட்டு நிறுத்த

“அவரு உன்னையும் மது சாரையும் லவ்வர்ஸ்னு நினைக்கிறாரு… நான் சொன்னதை வச்சு அவரு அப்பிடி நினைச்சிட்டாருடி… இப்போ என்ன பண்ணுறது?” என்று கேட்க அப்போது யாரோ தங்களருகில் நிற்கும் அரவம் கேட்கவும் இருவரும் நிமிர்ந்தனர்.

அங்கே கண்ணில் தீயுடன் நின்றிருந்தவன் மதுசூதனன்!

ஸ்ரீரஞ்சனிக்கு இது அடுத்த அதிர்ச்சி! மதுரவாணி எதாவது பேசிச் சமாளிக்கலாம் என்று முன்வர அதற்குள் மதுசூதனன் வெடிக்க ஆரம்பித்தான்.

“என்ன பொண்ணுங்க நீங்க? இவ்ளோ ஈசியா பொய் சொல்லுறிங்களே உங்களுக்குக் கொஞ்சம் கூட உறுத்தலா இல்லையா? அப்போ மிஸ்டர் ஸ்ரீதர் சொல்லிட்டுப் போன அட்வைஸ் சரி தான்… எப்போவும் உங்களை பத்தி சுயநலமா யோசிக்காம அடுத்தவங்களைப் பத்தியும் யோசிக்கணும்னு தானே சொன்னாரு… அது உங்க ரெண்டு பேருக்கும் கரெக்டா சூட் ஆகுது… எல்லா பொண்ணுங்களுமே சுயநலவாதிகள் தான் போல.. தன்னோட சுயநலத்துக்காக மத்தவங்களை யூஸ் பண்ணிக்கிற புத்தி எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்கும்னு இன்னைக்குத் தெரிஞ்சிக்கிட்டேன்” என்று சொல்லவும் ஸ்ரீரஞ்சனியின் கண்ணில் கண்ணீர்க்குளம் கட்டிவிட்டது.

அவள் ஸ்ரீதரைத் தடுக்கச் சொன்ன பொய்யால் தேவையின்றி மதுரவாணிக்குத் தான் கெட்டப்பெயர் என்று எண்ணி அவள் வருந்த அவளின் கண்ணீரைக் கண்ட மதுரவாணியின் கோபம் முழுவதும் மதுசூதனன் மீது திரும்பியது.

“ஷட் அப்! நாங்க சுயநலவாதிங்களாவே இருந்துட்டுப் போறோம்… நீ ரொம்ப ஒழுங்கா? உன்னை உயிருக்கியிரா காதலிச்ச பொண்ணை ஒரு சின்ன விசயத்துக்காக பிரேக்கப் பண்ணிட்டு கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சியே இல்லாம ஜாலியா சுத்துற நீ எங்களைச் சுயநலவாதிங்கனு சொல்லுற! வாட் அ ஜோக்! நாங்க சுயநலவாதினா நீ ஒரு கல்நெஞ்சக்காரன்! நீனு இல்ல, மொத்த ஆம்பளைங்களும் லைப் பார்ட்னர் விசயத்துல கல்நெஞ்சக்காரங்க தான்”

அவனை எரிப்பது போல முறைத்துவிட்டு ஸ்ரீரஞ்சனியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள் மதுரவாணி. அவள் பேசிய வார்த்தைகளின் எதிரொளியாய் மதுசூதனன் இறுகிய முகத்துடன் அங்கேயே நின்றிருந்தான்.

சூழ்நிலை தான் மனிதர்களைச் சுயநலவாதிகளாகவும், பொய்யர்களாகவும் காட்டுகிறதே தவிர மனிதர்கள் எப்போதுமே தங்கள் இயல்பில் தான் இருக்கிறார்கள். இதை உணராமல் நான் நல்லவன் மற்றவர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்று தம்பட்டம் அடிக்கும் நபர்கள் இவ்வுலகில் ஏராளம்!

இசை ஒலிக்கும்🎵🎶🎵