🌊 அலை 12 🌊

இரும்பாய் இறுகியவன் உன்னால்

மெழுகாய் உருகுகிறேன்!

சுவாசிக்கும் காற்றில் தினசரி

உன் வாசம் தேடுகிறேன்!

கவனமாய் இருப்பவன் இடறி

உன் கன்னக்குழியில் வீழ்கிறேன்!

மதுசூதனனுடன் வீட்டுக்குள் நுழைந்த மதுரவாணியைச் சங்கவி திட்டித் தீர்க்க ஆரம்பித்தாள்.

யாழினி அவனை வரவேற்று அமர வைக்க மதுசூதனன் திட்டு வாங்கும் மதுரவாணியை நமட்டுச்சிரிப்புடன் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

“மழைல நனைஞ்சா ஒத்துக்காதுனு தெரிஞ்சும் இப்பிடி தொப்பலா நனைஞ்சுருக்கியேடி” என்று அவளைத் திட்டிக் கொண்டே டவலால் அவளது கூந்தலை துவட்ட ஆரம்பித்தாள் சங்கவி.

“ஆவ்! தலை வலிக்குதுக்கா.. மெதுவா துவட்டு” என்று குறை சொன்னவளுக்குத் தலையில் குட்டு வைக்கப்படவே அமைதியானாள்.

“எவ்ளோ நீள முடி… எல்லாம் போச்சு… இனிமே எந்தக் காலத்துல முடி அவ்ளோ நீளத்துக்கு வளருமோ? வயித்தெரிச்சலா இருக்குடி” என்று புலம்பியவளின் பேச்சில் துணுக்குற்றான் மதுசூதனன். சற்று முன்னர் ஏற்பட்ட மின்சாரம் பாய்ந்த அதிர்ச்சி ஒரு வேளை இவள் அவளாக இருப்பாளோ என்ற சந்தேகத்தை மீண்டும் அவனுள் எழுப்ப அதைச் சங்கவியிடம் நேரடியாகவே கேட்டுவிட்டான்.

“மேம்! இவங்களுக்கு நீளமான முடி இருந்துச்சா?” என்று கேட்டவனது  கண்கள் மதுரவாணியை ஆராய்ச்சியாய் நோக்க ஆரம்பித்தது.

ஆனால் சங்கவி பதில் சொல்லுவதற்கு முன்னே சுதாரித்துக் கொண்ட மதுரவாணி “ரொம்ப நாளுக்கு முன்னாடி நான் ஸ்கூல் படிக்கிறப்போ இருந்துச்சு… அதுக்கு அப்புறம் நான் வெட்டிட்டேன்… லாங் ஹேர் இருந்தா அடிக்கடி ஜலதோசம் பிடிச்சு காய்ச்சல் வந்துடுது… எதுக்குத் தொல்லைனு வெட்டிட்டேன்” என்று சரளமாய் ஒரு பொய்யை எடுத்துவிட அவனது சந்தேகம் அப்போதைக்கு அகன்றது. உள்ளுக்குள் சப்பென்ற உணர்வு.

ஏன் தனது மனது இப்படி அடிக்கடி அவளையும் இவளையும் ஒப்பிட்டுப் பார்க்கிறது என்ற குழப்பத்துடன் இருந்தவன் கையில் சூடான தேநீர் திணிக்கப்பட்டது.

மதுரவாணி உடை மாற்ற அவளது அறைக்குச் சென்றுவிட ராகினியும் அவள் பின்னே சென்றாள்.

“க்ஹூம்! அப்புறம் மதுக்கா…. மிஸ்டர் ஹேண்ட்சம் கூட கார்ல வந்து இறங்குற அளவுக்கு குளோஸ் ஆயிட்ட போல” என்று அவளைச் சீண்ட ஆரம்பிக்கவும் ஸ்ரீரஞ்சனியின் ஆயிரம் டிகிரி செல்சியஸ் பார்வை ராகினியை வறுத்தெடுக்க ஆரம்பித்தது

அவள் அதைக் கண்டுகொள்ளாமல் “அஹான்! ஆமா ரெண்டு பேரையும் ஃபெவி க்விக் போட்டு ஒட்டாத குறை தான்… அவ்ளோ குளோஸ்… போவியா?” என்று பதிலுக்குக் கேலி செய்துவிட்டு டிசர்ட்டை இழுத்துவிட்டுக் கொண்டாள்.

கூந்தல் ஈரம் இன்னும் உலரவில்லை. தலையைச் சிலுப்பிக் கொண்டவள் “அவன் ரொம்ப தெளிவா இருக்கான் ராகி! நீயோ நானோ நினைச்சா கூட அவனைக் குழப்ப முடியாது… அவனுக்குச் செண்டிமெண்டே இல்லடி… அந்தப் பொண்ணு இவனை பைத்தியக்காரத்தனமா காதலிச்சா… ஆனா இவன் ரொம்ப ஈசியா அவளை மறந்துட்டு மூவ் ஆன் ஆயிட்டான்… உண்மையா காதலிச்சா அவங்களோட ஸ்பெண்ட் பண்ணுன ஒவ்வொரு மொமண்டும் நியாபகம் இருக்கும்னு அடிக்கடி யாழிக்கா சொல்லிக் கேட்டுருக்கேன்… இவனுக்கு அப்பிடி ஒன்னுமே இல்லடி… ப்ச்… பத்தோட பதினொன்னா என் வாழ்க்கைல ஆண்துணை தேவை இல்லனு சொல்லுறதுக்கு எனக்கு இன்னொரு ரீசன் கிடைச்சிருக்கு…. அவ்ளோ தான்” என்றாள் விரக்தியான குரலில்.

ஸ்ரீரஞ்சனி அவளது கூந்தலைக் கலைத்துவிட்டவள் “எல்லா ஆம்பளைங்களும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க… எங்க ஊருல சொல்லுவாங்க, ஒரு ஆணோட கடைசி காதலா இருக்கிறதுக்கும் ஒரு பொண்ணோட முதல் காதலா இருக்கிறதுக்கும் குடுத்து வச்சிருக்கணுமாம்” என்று சொல்லவும்

“அது என்னடி அவங்களுக்கு மட்டும் கடைசி காதல்? அவங்களுக்கும் முதல் காதல்னு வைக்க வேண்டியது தானே.. இதுல கூட ஓரவஞ்சனை” என்று நொடித்துக் கொண்டாள் மதுரவாணி.

மூவரும் விவாதித்தபடி ஹாலுக்கு வந்த போது மதுசூதனன் அங்கில்லை. அவன் கிளம்பிவிட்டான் என்ற தகவல் மட்டும் யாழினியிடம் இருந்து கிடைத்தது.

அவன் சென்ற பின்னரும் “லைப்ல லவ், பிரேக்கப் இதுலாம் பாஸிங் கிளவுட்ஸ் மாதிரி… அதுலயே தேங்கி நின்னுட்டோம்னா வாழ்க்கை நாசமா போயிடும்… பீ பிராக்டிக்கல்” என்ற அவனது வார்த்தைகள் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டு தான் இருந்தது.

மதுரவாணிக்கு இன்று வரை யார் மீதும் காதல் வந்ததில்லை. ஆனால் அப்படி வந்தால் இவனைப் போல அதை இலகுவாக கையாள அவளால் முடியாது என்பது மட்டும் புரிந்தது.

மதுசூதனன் டெய்சி ரெசிடென்சியல் கம்யூனிட்டியிலிருந்து கிளம்பியவன் வீட்டுக்கு வரும் போது கோயம்புத்தூரே மழைநீரில் குளித்து புத்துணர்வோடு இருந்தது.

காரைப் பூட்டிவிட்டு வீட்டுக்குள் பிரவேசித்தவனது நாசி அவனது அம்மா செய்யும் பஜ்ஜியின் வாசனையை நுகர நேரே சமையலறைக்குள் நுழைந்தான்.

“வாவ்! உருளைக்கிழங்கு பஜ்ஜியா? செம வாசனைம்மா” என்று அன்னையைச் செல்லம் கொஞ்சிவிட்டு பஜ்ஜியைச் சாப்பிட ஆரம்பித்தான்.

மைதிலி “டேய் அதிகமா சாப்பிடாதடா… உனக்கு ஆயில் ஃபுட் ஒத்துக்காது” என்று அக்கறையாய் உரைக்க

“அதுல்லாம் ஒத்துக்கும்… நீங்க நான் பஜ்ஜி சாப்பிடுறதுக்கு இன்டேரக்டா ஒன் ஃபாட்டி ஃபோர் போடாதிங்க” என்று சொல்லவும் அவனது தோளில் செல்லமாய் அடித்தவர்

“உங்கப்பாவுக்கும் வைஷாலிக்கும் மிச்சம் வைடா செல்லமே! உங்கப்பாவாச்சும் போனா போகுதுனு விட்டுருவாரு… ஆனா உன் தொங்கச்சி இருக்காளே, என்னமோ அவளுக்குச் சேர வேண்டிய சொத்தை நீ ஏமாத்தி வாங்குன மாதிரி முப்பது பக்கத்துக்கு வசனம் பேசுவாடா” என்று மகளும் கணவரும் இல்லையென்ற தைரியத்தில் மகனிடம் அவர்களை கலாய்த்து வைத்தார்.

இது தான் சாக்கென்று அவனும் தந்தையையும் தங்கையையும் தாயுடன் சேர்ந்து கலாய்த்துச் சிரித்தான்.

மைதிலிக்குச் சில நாட்களாக மகன் மிகவும் மகிழ்ச்சியாக முக்கியமாக இயல்பான வாழ்க்கையை வாழ ஆரம்பித்த நிம்மதி மனதில் பரவியது.

முன்பெல்லாம் அலுவலகம் முடிந்து அவன் வருவதற்கு இரவு பத்து மணியைத் தாண்டி விடும். காரணம் கேட்டால்

“தனுவோட அப்பா எங்க லவ்வ ஒத்துக்கிட்டதுக்குக் காரணமே அவ என்னை டீப்பா லவ் பண்ணுறாங்கிறதுக்காக மட்டும் தான்… இருந்தாலும் அவரு என்னைப் பாக்குறப்போ அவரோட கண்ணுல ஒரு கேலி, நக்கல், அலட்சியம் தெரியுதும்மா… அவங்க ஸ்டேட்டஸ்ல நம்மள விட அதிகம்ல… அதனால அவருக்குக் கொஞ்சம் கர்வம்… அவரு முன்னாடி நான் ஜெயிச்சுக் காட்டணும்மா… நான் ஒன்னும் அந்த அஜய்ய விட கம்மியானவன் இல்லனு அவருக்கு நிரூபிச்சுக் காட்டணும்” என்று தீவிரக்குரலில் உரைப்பதோடு இரவு பகல் பார்க்காது திருமணம், வரவேற்பு, பிறந்தநாள் பார்ட்டி என ஒரு ஆர்டரையும் விடாது நண்பர்களுடன் பேயாய்  உழைப்பான்.

அப்போதெல்லாம் மைதிலிக்கு அவனது உடல்நலன் குறித்தக் கவலை அடிக்கடி எழும். மகன் கடினமாக உழைப்பதில் அவருக்கு மாற்றுக்கருத்து ஏதுமில்லை. ஆனால் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென உழைப்பது வேறு; மற்றவருக்கு நம்மை நிரூபித்துக் காட்டுவதற்காக உழைப்பது வேறு.

நாம் யாரென்று எதிராளிக்கு நிரூபிக்கத் தான் நாம் கடினமாக உழைக்கின்றோம் என்றால் வாழ்நாள் முழுவதும் அப்படி நிரூபணம் செய்வதிலேயே கழிந்துவிடும். அதில் நாம் நமது வாழ்க்கையின் பொன்னான தருணங்களை அனுபவிக்க தவறி விடுவோம். எல்லாம் முடிந்த பின்னர் நமக்கு வெறுமை மட்டுமே மிஞ்சும்.

எனவே தான் அடிக்கடி மகனிடம் “இந்த வயசுல தான் உழைக்க முடியும்… ஆனா யாரோ ஒருத்தருக்கு உன்னை நிரூபிக்கணும்னு சொல்லி உன் உடம்பை போட்டு வருத்திக்காதடா” என்று அக்கறையோடு அறிவுறுத்துவார்.

அவ்வாறு நாட்கள் கடந்த நிலையில் திடீரென ஒருநாள் மதுசூதனன் தனக்கும் தனுஜாவுக்கும் இடையே இனி எந்த உறவுமில்லை என்று திட்டவட்டமாகச் சொன்ன போது மெய்யாகவே அதிர்ந்து போனார்.

அதற்கு அவன் சொன்னக் காரணத்தைக் கேட்டதும் அப்படிப்பட்ட ஒருத்தியிடம் இருந்து மகன் தப்பித்தானே என்ற நிம்மதியும், இதற்கு அடிப்படை காரணமான அந்தக் குறும்புக்காரி யாரென்ற கேள்வியுமாய் அவரது மனம் சாந்தமடைந்தது.

அவன் பழையபடி வேலையை இலகுவாகச் செய்ய ஆரம்பிக்கவும் அவனுக்கும் கூட பெற்றோருடனும் உடன் பிறந்தவளுடனும் செலவளிக்க நிறைய நேரம் கிடைத்ததை மனதாற உணர்ந்தான். இந்த நேரங்களை எல்லாம் இத்தனை நாட்கள் இழந்திருக்கிறோமே என்ற ஆற்றாமை அவனுள் எழுந்ததும் உண்டு.

அதனால் தான் என்னவோ இப்போதெல்லாம் ஓய்வு நேரங்களை நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் செலவளிக்க ஆரம்பித்திருந்தான்.

இப்போது பஜ்ஜிக்கு அன்னையிடும் வாதிடுபவனோடு கூடவே ஏட்டிக்குப் போட்டியாய் பேசியபடி இருந்தார் மைதிலி. சிறிது நேரத்தில் தந்தையும் இளைய சகோதரியும் வந்துவிட வீடு களை கட்டியது.

**************

அன்றைய தினம் ஞாயிறு என்பதால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சங்கவியும் யாழினியும் கோயம்புத்தூருக்குச் செல்லலாம் என திட்டமிருந்தனர்.

மதுரவாணி பிடிவாதமாய் அவர்களுடன் வர மறுத்தவள் ஸ்ரீரஞ்சனியும் ராகினியும் சொன்னதால் வரச் சம்மதித்தாள்.

“ஷாப்பிங் மால், தியேட்டர், ஹோட்டல்… இந்த மூனும் ஊட்டிலயே இருக்குதே! இதுக்கு ஏன் கோயம்புத்தூர் வரைக்கும் போகணும்?” என்பது மதுரவாணியின் வாதம்.

ஆனால் தோழிகளின் வேண்டுகோளுக்கு முன்னே அந்த வாதம் எடுபடாது போகவே அவளும் அவர்களுடன் புறப்பட தயாரானாள்.

ஆரத்யாவும் அவளும் ஒரே நிறத்தில் லாங் ஸ்கர்ட் அணிந்து கொள்ள சாய்சரண் முகத்தைத் தூக்கவும் ஸ்ரீரஞ்சனி அக்கா மகனின் உடைக்கு பொருத்தமான இளம்பச்சை வண்ணத்தில் டாப் அணிந்தாள்.

“இப்போ ஹேப்பியா சாய் குட்டி?” என்று அவனைக் கொஞ்சியவள் யாழினியிடம் மறக்காமல் மதுசூதனன் சொன்ன நேரத்துக்கு வந்துவிடுவானா என பலமுறை கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டாள்.

ஏனெனில் தங்களின் வேண்டுகோளுக்காக வரும் மதுரவாணிக்குக் கோயம்புத்தூரில் ஏதேனும் சங்கடம் நேர்ந்து விடுமோ என்ற கலக்கம் அவளுக்கு.

யாழினியோ “மது சார் சொன்ன நேரத்துக்குக் கரெக்டா வந்துடுவாருடி… அவர் எப்போவுமே காக்க வச்சதில்ல.. இப்போ ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் பத்தி பேசணும்னு சொல்லித் தான் வரச் சொன்னாரு… கல்யாணப்பொண்ணு போட்டோ சூட் நட்த்துற ப்ளேஸ்ல ஆர்கிட் வச்சு டெகரேட் பண்ண்ணும்னு சொல்லிட்டாளாம்… அதான் எக்ஸ்ட்ரா சார்ஜ் ஆகுமேனு நம்ம கிட்ட டீடெயில் கேக்குறதுக்கு வரச் சொன்னாரு… அதோட குழந்தைங்கள வெளியே கூட்டிட்டுப் போய் நாளாச்சு… ஒரே கல்லுல ரெண்டு மாங்கா” என்று சொல்லிவிட ஸ்ரீரஞ்சனிக்கு நிம்மதி.

அனைவரும் புறப்பட்டுக் காரில் ஏறும் போது மதுரவாணிக்கு மனதுக்குள் ஏனோ ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருக்க ஸ்ரீரஞ்சனிக்கு உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு எழுந்து கொண்டே இருந்தது.

அதை எல்லாம் தூர ஒதுக்கிவிட்டு கோயம்புத்தூரை அடைந்தனர்.

காலை உணவை வீட்டிலேயே முடித்துவிட்டு வந்துவிட்டதால் அனைவரும் நகரின் பிரபலமான ஷாப்பிங் மாலுக்குச் சென்றனர். மதுசூதனன் அங்கிருந்த ரெஸ்ட்ராண்ட் ஒன்றில் யாழினியையும் சங்கவியையும் சந்திக்க வருவதாகச் சொன்னதால் அங்கே சென்றுவிட்டனர்.

யாழினியும் சங்கவியும் குழந்தைகளை மூவரிடமும் ஒப்படைத்தவர்கள் “அடம்பிடிக்காம சித்தி சொல்லுறத கேட்டுட்டு இருக்கணும்” என்று குழந்தைகளுக்கும் “ஓவரா ஸ்னாக்ஸ் ஐஸ் க்ரீம்னு வாங்கிக் குடுத்து எங்க பிள்ளைங்கள தின்னிமாடுகளா மாத்திறாதிங்கடி தங்கங்களே!” என்று தங்கைகளுக்கும் வேண்டுகோள் விடுத்துவிட்டு அவர்களைக் காத்திருக்கச் சொன்ன இடத்துக்குச் சென்றுவிட்டனர்.

அவர்கள் சென்றதும் குழந்தைகள் சென்ற முறை போல வேபர் வைத்த ஐஸ் க்ரீம் ரோல் கேட்க ராகினியும் ஸ்ரீரஞ்சனியும் என்னென்ன சுவைகளில் வேண்டுமென கேட்டுக் கொண்டு வாங்கி வர கிளம்பினர்.

கிளம்பும் போதே மதுரவாணி ஸ்ரீரஞ்சனியை எச்சரித்தாள்.

“ரஞ்சி! கூனிய கூடவே கூட்டிட்டுப் போற… கொஞ்சம் கவனமா இருடி… என்னைய அந்த வளந்து கெட்டவன் கிட்ட மாட்டிவிட்ட மாதிரி உன்னைய யாருகிட்டவும் மாட்டி விட்டுட போறா”

ராகினி கண்ணை உறுத்துவிழிக்க முயன்று தோற்றவள் “போக்கா நான் உன் கூட வரல” என்று சிணுங்கிவிட்டு அங்கேயே அமர்ந்து கொள்ள

“அம்மா தாயே! நீ நல்ல முடிவு எடுத்திருக்க… இது தான் நீ ரஞ்சிக்குப் பண்ணுன மிகப்பெரிய நன்மை… வருங்காலத்துல பிள்ளைக்குட்டியோட நல்லா இருப்ப” என்று மதுரவாணி இரு கைகளையும் உயரத் தூக்கி ஆசிர்வதிப்பது போல நடிக்க இருவரையும் பார்த்து நகைத்துவிட்டு ஸ்ரீரஞ்சனி ஐஸ் க்ரீம் ரோல் வாங்கச் சென்றாள்.

அவள் குழந்தைகள் கேட்ட நாலைந்து சுவைகளைக் குறிப்பிட்டு நிற்கும் போது தான் அவளது முதுகுக்குப் பின்னே யாரோ பளாரென அறையும் சத்தம் கேட்டது.

ஸ்ரீரஞ்சனி திடுக்கிட்டுத் திரும்பியவள் அங்கே ஒரு நெடுநெடுவென வளர்ந்தவன் பதினேழே வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞனை அறைந்து கொண்டிருந்தான்.

அந்த இளைஞன் பயந்து நடுங்கிக் கொண்டிருக்க அந்த உயரமானவனோ அவனது மற்றொரு கன்னத்திலும் அறைய ஸ்ரீரஞ்சனி பட்டப்பகலில் ஒரு பரிதாபமான ஜீவனை இப்படி அறைந்து தள்ளுகிறானே இராட்சசன் என மனதிற்குள் பொறுமியவள் பொறுக்க முடியாது அவர்களை நோக்கிச் சென்றாள்.

அந்த நெடியவன் மீண்டும் கை ஓங்க அவனது கையைப் பிடித்தவள் “ரவுடித்தனம் பண்ணுறதுக்கும் ஒரு அளவு இருக்கு மிஸ்டர்… எதுக்கு ஒரு சின்னப்பையனைப் போட்டு இப்பிடி அடிக்கிறிங்க?” என்று கோபமாய் கேட்டுவிட்டு அவனைப் பார்வையாலேயே எரிக்க அந்த நெடியவன் தனது கரத்தை மெல்ல இறக்கினான்.

அப்போது தான் ஸ்ரீரஞ்சனி அவனது முகத்தைக் கூர்ந்து கவனித்தாள். அதே கட்டுக்கோப்பான கேசம், கூரியவிழிகள், அழுத்தமான இதழ்கள், முகத்தில் மின்னும் கம்பீரம்! இவன் அவனே தான்!

தெரிந்ததும் அவன் கரத்தைச் சட்டென்று விடுவிக்க அவனோ தன்னிடம் இவ்வளவு நேரம் பெண்புலியாய் சீறியவள் இப்போது தவறு செய்து மாட்டிக் கொண்ட சிறுபிள்ளையாய் விழிப்பதைக் கண்டதும் அவளைக் கவனிக்க ஆரம்பித்தான்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்க அங்கே நின்ற இளம்வயது சர்வர் கீழே கிடந்த அந்நெடியவனது அடையாள அட்டையை எடுத்து நீட்டினான்.

அதில் இருந்த “ஸ்ரீதர் – இணை ஆணையர், குற்றப்பிரிவு” என்ற வார்த்தை ஒன்றே போதும், ஸ்ரீரஞ்சனியின் சப்தநாடிகளும் ஒடுங்கி தனது முட்டைக்கண்கள் விரிந்த நிலையில் இமை தட்டாது அவனை நோக்கினாள்.

ஸ்ரீதர் அவளை எங்கேயோ பார்த்த நினைவில் அடையாள அட்டையை வாங்கி வாலட்டில் பத்திரப்படுத்திக் கொண்டவன் தனது முக்கால் நீள டிசர்ட்டை முழங்கை வரை மடக்கிவிட்டபடியே

“ரவுடியிசத்துக்கும் தப்பைத் தட்டிக் கேக்குறதுக்கும் வித்தியாசம் தெரியாம வேலு நாச்சியார் மாதிரி வந்து நிக்க வேண்டியது! அப்புறம் நான் யார்னு தெரிஞ்சதும் மாட்டிக்கிட்டோமேனு முழிக்க வேண்டியது! ஏன் இந்த தேவை இல்லாத வேலை” என்று கேட்டபடி அவளைப் பார்க்க

“ஹலோ சார்! நான் ஒன்னும் நீங்க போலீஸ் ஆபிசர்னு தெரிஞ்சு ஷாக் ஆகல… ரவுடித்தனத்தைப் போலீஸே பண்ணுனாலும் அதுக்குப் பேரு ரவுடித்தனம் தான்… நான் ஷாக் ஆனதுக்குக் காரணமே வேற” என்று விளக்கமளித்தவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது.

அதே நேரம் ஸ்ரீதர் அவளைப் புருவம் தூக்கி ஒரு வியப்பு பார்வை பார்த்துவிட்டுத் தன்னிடம் அறை வாங்கியவனிடம்

“இனிமே ஹைகிளாஸ் திமிரைக் காட்டணுங்கிற எண்ணமே உனக்கு வரக் கூடாது… சர்வர்னா உன் இஷ்டத்துக்குக் கை நீட்டுவியா? முளைச்சு மூனு இலை விடல… அதுக்குள்ள சாருக்கு இவ்ளோ ஆட்டிட்டியூட்.. ம்ம்” என்று உறுமலோடு அவனுக்கு எச்சரிக்கை செய்துவிட்டு ஸ்ரீரஞ்சனியிடம்  திரும்பினான்.

“டோண்ட் டேக் மீ ராங்! நான் உங்கள எங்கயோ பாத்துருக்கேன்… இந்த முட்டைக்கண்ணு, ஸ்ட்ரெய்ட் ஹேர், ரவுண்ட் ஃபேஸ் இதெல்லாம் எங்கேயோ பாத்த நியாபகம்… ஆனா எங்கனு தான் தெரியல” என்று ஆட்காட்டிவிரலால் தனது நெற்றியைத் தடவிக் கொண்டான்.

ஸ்ரீரஞ்சனியோ இவனுக்குத் தான் யாரென நினைவு வரவே கூடாது என ஊரிலுள்ள அனைத்துத் தெய்வங்களுக்கும் வேண்டுதல் வைத்தாள். இவன் ஒருவேளை மதுரவாணியைப் பார்த்துவிட்டால் நதியூருக்குத் தகவல் கொடுத்துவிடுவானே! முதலில் இடத்தைக் காலி செய்வோம் என அங்கிருந்து மெதுவாக நழுவ முயன்றவளைக் கரம் பற்றி நிறுத்தினான் ஸ்ரீதர்.

“நீங்க மதுராவோட ரிலேட்டிவ் தானே?” என்று கேட்டவனை அதிர்ச்சியாய் நோக்கினாள் ஸ்ரீரஞ்சனி.

அவனோ அவளது புகைப்படங்களை ஏற்கெனவே மதுரவாணியின் வீட்டில் பார்த்திருந்ததால் அவள் மதுரவாணியின் உறவுப்பெண் என்பதில் அவனுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

ஆனால் அவனது சந்தேகமே தன்னை அடையாளம் கண்டுகொண்டதும் அவள் முகம் மாறிய விதம் தான். தன்னைக் கண்டு ஏன் அவள் பதற்றப்பட வேண்டுமென அவனது போலீஸ் மூளை சிந்திக்க ஆரம்பித்தக் கணம் ஸ்ரீரஞ்சனியின் மொபைலில் மதுரவாணியிடம் இருந்து அழைப்பு வந்தது.

தொடுதிரையில் ‘மது காலிங்’ என்று அவளது பெயரோடு சேர்த்து அவளது புகைப்படமும் வர ஸ்ரீதர் அவள் கையிலிருந்து மொபைலைப் பிடுங்கியவன் அழைப்பை ஏற்று லவுட் ஸ்பீக்கரில் போடவும் மதுரவாணி ஸ்ரீரஞ்சனி தான் என எண்ணிப் பேச ஆரம்பித்தாள்.

ஸ்ரீரஞ்சனி சத்தமாய் ஏதோ சொல்லப் போக ஸ்ரீதர் அவசரமாய் அவனது ஆள்காட்டிவிரலை அவளது உதட்டின் மீது வைத்து அமைதியாக இருக்குமாறு சைகை காட்ட அவள் அதிர்ச்சியில் சிலையாய் சமைந்துவிட்டாள்.

“ரஞ்சி எங்கடி போன? ரதி ஐஸ் க்ரீம் வேணும்னு அழ ஆரம்பிச்சிட்டாடி… நீ ஐஸ் க்ரீம் வாங்கப் போனியா? இல்ல நீயே ஐஸ் க்ரீம் ரோல் செய்யப் போனியா? எவ்ளோ நேரம் ஆகுது? சீக்கிரமா வாடி” என்று படபடத்துவிட்டுப் போனை வைக்கவும் ஸ்ரீதர் தனது விரலை அவளது உதட்டிலிருந்து எடுத்தவன் போனை அவளிடம் நீட்டினான்.

ஸ்ரீரஞ்சனி மலங்க மலங்க விழிக்கவும், தயாரான ஐஸ் க்ரீம் ரோலை வாங்கி அவள் கையில் திணித்தவன் “எனக்கு மதுரா கிட்ட பேசணும்” என்று இறுகிய குரலில் உரைக்கவும் தான் அவளுக்கு உணர்வு வந்தது.

இவனை எப்படியாவது தடுத்தாக வேண்டும். என்ன செய்யலாம் என யோசித்தவள் சட்டென்று வாயில் வந்த பொய்யைச் சொல்லி விட்டாள்.

“மது அவ லவ் பண்ணுற பையனோட பேசிட்டிருக்கா… இப்போ நம்ம போனா நல்லா இருக்காது”

அவள் சொல்லி முடிக்கவும் ஸ்ரீதரின் நெற்றியில் யோசனைக்கோடுகள்! மதுரவாணி வேறு ஒருவனைக் காதலிக்கிறாளா? அவனால் ஸ்ரீரஞ்சனியின் பேச்சை நம்பவும் முடியவில்லை; நம்பாமலும் இருக்க முடியவில்லை.

ஸ்ரீரஞ்சனியோ தான் சொன்ன பொய் அவனைத் திகைக்க வைத்ததை அறிந்தவள் அதே பொய்யை மீண்டும் சொன்னாள். அப்படியாவது அவன் மதுரவாணியைக் காண விரும்பாது இங்கிருந்து சென்றுவிட மாட்டானா என்ற நப்பாசை தான் அவளுக்கு! ஆனால் ஸ்ரீதர் மதுரவாணியையும் அவளது காதலனையும் நேரில் சந்திக்க வேண்டுமென சொல்ல ஸ்ரீரஞ்சனி என்ன செய்வது என்று தெரியாது என்று விழிக்க ஆரம்பித்தாள்.

பொய் என்பது சங்கிலித்தொடர் போன்றது. ஒரு பொய்யானது இன்னொரு பொய் தோன்ற காரணமாக அமையும். அடுத்தடுத்துத் தோன்றும் பொய்களால் உண்டாகும் இச்சங்கிலித்தொடரின் ஒரு கண்ணி விடுபட்டாலும் அதைச் சொன்னவரின் நிலை பரிதாபமாக மாறிவிடும் என்பதை அப்போது ஸ்ரீரஞ்சனி உணரவில்லை.

அலை வீசும்🌊🌊🌊