🌊அலை 1🌊

காற்றுக்கு வாசம் இல்லையாம்!

யார் சொன்னது? நான் சுவாசிக்கும்

சுதந்திரக்காற்றுக்குத் தனிவாசம் உள்ளதே!

நதியூர்

தரணி போற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருக்கும் திருவைகுண்டத்தை அடுத்த சிறு கிராமம். இன்னும் நகரத்தின் நாகரிகச்சாயம் பூசப்படாத ஊர். அழகிய தாமிரபரணி நதி ஊரைச் செழிப்பாக்கிக் கொண்டு பாய, வயல்வெளிகள், அழகிய ஓட்டுவீடுகள், ஆங்காங்கே ஆடுமாடுகளின் சத்தம் என கிராமத்தனம் அழகாய் மின்னும் அச்சிறுகிராமம் இன்றைய இரவு சீரியல் விளக்குகளின் வெளிச்சத்தில் ஜொலித்தது.

கூம்புவடிவ ஒலிபெருக்கிகளில் சீர்காழி கோவிந்தராஜன் தனது கணீர் குரலில் ‘வினாயகனே வினைத் தீர்ப்பவனே’ என இசைமழையைப் பொழிந்து கொண்டிருக்க ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. ஊரின் நடுநாயகமாய் இருக்கும் முத்தாரம்மன் கோவில் திருவிழா ஜெகஜோதியாக நடந்து கொண்டிருந்தது. கோயிலைச் சுற்றிலும் கடை கண்ணிகளில் மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது. குடை ராட்டினம், ஜவ்வு மிட்டாய் விற்கும் வியாபாரிகள், கவரிங் சாமான்கள் விற்கும் கடைகள் என திருவிழா களை கட்டி இருந்தது.

இளைஞர்கள் அனைவரும் தங்களின் சங்கங்களின் பெயர் பொறித்த டீசர்ட்டுகளை சீருடை போல அணிந்து இளைஞிகளைக் கவர முயன்று கொண்டிருந்தனர். இளைஞிகளோ அம்மாக்களுடன் சேர்ந்து பொங்கல் வைக்கிறேன் என்று பெயர் செய்து கொண்டு பொங்கல்பானையில் ஒரு கண்ணும் தங்களை நோக்கும் இளைஞர்களின் மீது மற்றொரு கண்ணுமாய் நின்றிருந்தனர்.

வயதானவர்கள் ‘எங்க காலத்துல எல்லாம்’ என்று பழம்புராணங்களைப் பாடிக் கொண்டிருக்க நடுத்தர வயதினர் பொங்கல் வைப்பதிலும் சாமியாடிகளிடம் குறி கேட்டு விபூதி வாங்குவதிலும் கண்ணாய் இருந்தனர். கோவிலின் ஒரு புறம் பலிக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆடுகள் அங்கே அடித்த மேளச்சத்தத்தில் மிரண்டு கத்திக் கொண்டிருந்தன. பொடியன்கள் ஓடிப்பிடித்து விளையாட பெரியவர்களோ “ஏலேய் பாத்து வெளையாடுங்கலே! ஆளுங்க நிக்கது கூடவா கண்ணுக்கு தெரியல?” என்று அதட்டிக் கொண்டிருந்தனர்.

இந்த திருவிழாவுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லையென்ற ரீதியில் அங்கே ஒரு ஜீவன் செல்போனும் கையுமாக அமர்ந்திருந்தது. வெந்தய வண்ணப்பாவாடை அடர்பச்சை நிற பட்டுத்தாவணி அணிந்து தனது நீண்ட ஜடைப்பின்னலை முன்னே வழியவிட்டபடி அதிலிருந்த மல்லிகைச்சரத்திலிருந்து ஒவ்வொரு மலராகப் பிய்த்து எறிந்து கொண்டிருந்தவளின் விழிகள் செல்பேசியின் தொடுதிரையில் ஓடிக்கொண்டிருந்த வீடியோவில் இலயித்திருந்தது.

அவளுக்குப் பிடித்த ஐஸ்வர்யா ராயின் பாடல் ஓடிக் கொண்டிருந்தது. குரு படத்தில் அவளுக்கு மிகவும் பிடித்த பாடல் அது. பாடலின் நடுவில் சில வரிகள் வரவே அவளது செவிகள் அதில் கவனமானது.

“யப்பா! நான் போறேன்… நாடே இப்ப விடுதலை ஆயிடுச்சு… உங்க மகளுக்கு மட்டும் அது இல்லயா? எனக்கு ஒரு துணை கிடச்சிருக்கு… நான் சந்தோசமா இருக்க என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க… உங்க அன்பு மக சுஜாதா”

ஐஸ்வர்யா ராய் கடிதம் எழுதிவைத்துவிட்டு வீட்டை விட்டுக் கிளம்பும் காட்சி அது. அதைப் பார்த்த போது உள்ளுக்குள் ஒரு சிறிய தீப்பொறி உண்டானது. அது பற்றி எரிந்து காட்டுத்தீயாய் மாறுவதற்குள் “ஏலா மதுரா!” என்று ஒரு மூதாட்டியின் குரல் அதில் பச்சைத்தண்ணீர் ஊற்றி அணைத்தது.

“இந்த அழகிக்கு வேற வேலையே இல்ல” என்று முணுமுணுத்தபடி எழுந்தவளின் நீண்ட ஜடைப்பின்னல் இடையைத் தாண்டி அழகாய் ஆடிக் கொண்டிருக்க அன்ன நடை பயின்று அவளை அழைத்த மூதாட்டியிடம் சென்று நின்றாள் இருபத்து மூன்று வயது மதுரவாணி. அந்த ஊரின் பெரியத்தலைக்கட்டான ரத்தினவேலுவுக்கும் அவரது சகதர்மிணி விசாலாட்சிக்கும் பிறந்த செல்ல மகள். இரண்டு மகன்களுக்குப் பின்னர் பிறந்த ஒற்றை பெண்பிள்ளை என வீட்டில் அவளுக்குச் செல்லம் அதிகம். அதனால் அவளது இரத்தத்தில் பிடிவாதத்துக்கான விகிதாச்சாரமும் அதிகம்.

கூடவே தந்தை ரத்திவேலுக்கு இருக்கும் அபரிமிதமான தைரியத்தையும் ஜீனில் கொண்டு பிறந்தவள். இந்தச் செல்லம், பிடிவாதம், தைரியம் எல்லாமுமாய் சேர்ந்து அவளை நிமிர்வான பெண்ணாக மாற்றியிருக்க “பொட்டைப்பிள்ளைக்கு இம்புட்டு ஆங்காரம் ஆகாதுடி” என்று அடிக்கடி அவளது தாயார் விசாலாட்சியிடம் வாங்கிக் கட்டிக் கொள்வாள்.

வர்ணிக்க அவசியமேதும் இல்லாத அழகி. என்ன உயரம் தான் கொஞ்சம் குறைவு. மாசு மருவற்ற களையான முகம். அதை இப்போதைக்கு அலட்சியத்துக்கு வாடகைக்கு விட்டிருந்தாள். அதற்கான காரணம் சமீபகாலத்தில் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் அந்த வீட்டின் இளவரசியை யோசனையில் ஆழ்த்தியிருந்தது.

அவளது யோசனையைக் கண்ணுற்றவாறே அவள் கரத்தைப் பற்றி இழுத்தார் அந்த அறுபது வயது மூதாட்டி அழகம்மை. உழைத்து உரமேறிய கரங்களின் ஸ்பரிசத்தில் அவளது முகத்தில் இருந்த அலட்சிய பாவம் விடைபெற்றது.

உண்மையான அக்கறையுடன் “என்ன அழகி? எதுக்கு கூப்பிட்ட?” என்றபடி அவர் அருகில் அமர்ந்தவளின் கையையும் கழுத்தையும் தடவிப்பார்த்தவர்

“ஏட்டி வளையலையும் ஆரத்தையும் பத்திரமா பாத்துக்க… காதுல தொங்கட்டான் இருக்கா? இல்ல தொலச்சிட்டியா?” என்று அவர் கேட்டதும் அனிச்சை செயலாக அவளது கரங்கள் காதிலிருக்கும் ஜிமிக்கியைத் தடவி மீண்டது.

“உன்னை அரவிந்துக்கு கூட்டிட்டுப் போய் உன் கண்ணை செக் பண்ணனும் அழகி… நான் யாரு? ரத்தினவேல் பாண்டியனோட மகள்… அவ்ளோ ஈசியா எதையும் தொலைக்க மாட்டேன்… அதுவும் எனக்குச் சொந்தமானத தொலைக்கவே மாட்டேன்” என்றவளின் குரலில் தந்தையின் பெயரைச் சொல்லும் போது அவ்வளவு கர்வம்.

அவளது கர்வம் பொங்கும் குரல் சத்தமாய் ஒலித்ததில் பொங்கல் பானைக்குத் தீயைத் தள்ளிக் கொண்டிருந்த அவளின் தாயார் விசாலாட்சி நிமிர்ந்து நோக்கினார். நடுத்தரவயது பெண்களுக்கே உரித்தான வயோதிகத்தின் சாயலும் இல்லாத இளமையின் துடிப்பும் இல்லாத அமைதியான களையான முகம். மஞ்சள் பூசி பளபளத்த முகம் அடுப்புக்கட்டிக்குள் எரிந்து கொண்டிருந்த பனையோலையின் நெருப்பு வெளிச்சத்தில் இன்னும் பளபளப்பாக ஜொலித்தது.

அவரது பார்வையே சத்தமாகப் பேசாதே என்ற எச்சரிக்கையை விடுக்க அதெற்கெல்லாம் அசருபவளா அவர் பெற்ற மகள்?

ஆனால் விசாலாட்சியின் அருகில் நின்ற அவரது இரு மருமகள்களும் கண்களால் அவளுக்குச் சைகை காட்ட அவள் புரியாது “என்னாச்சு மதினிகளே? கண்ணாலே ஜாடை காட்டுறிங்க?” என்று கேட்க அவளுக்குப் பின்னே நின்றிருந்தார் அவளது தாய்மாமன் சங்கரபாண்டியன். விசாலாட்சியின் உடன் பிறந்த சகோதரன். அவரது மகள்களான பிரபாவதி, லீலாவதியைத் தங்கையின் மகன்களுக்கு மணமுடித்துக் கொடுத்திருந்தார். அத்தோடு அவரும் ரத்திவேல் பாண்டியனும் நெருங்கிய உறவு. ஆம்! அழகம்மையின் அண்ணன் மகன் தான் சங்கரபாண்டியன். சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டதால் இரு குடும்பத்தினரும் இன்று வரை பிரியாது அதே ஒற்றுமையுடன் இருந்து வருகின்றனர்.  அவருக்கு ஒரே ஒரு குறை தான்.

பிரபாவதிக்கு ரத்தினவேலின் மூத்தமகன் சரவணனையும், லீலாவதிக்கு இளையமகன் கார்த்திகேயனையும் மணமுடித்து அழகு பார்த்தவருக்குத் தனக்கு ஒரு மகன் இல்லையே என்ற குறை மட்டும் தான். அப்படி இருந்திருந்தால் அவனுக்கும் மதுரவாணிக்கும் முடிச்சிட்டிருக்கலாமே என்ற எண்ணம் அவருக்கும் அவரது மனைவி லோகநாயகிக்கும்.

ஆனால் மதுரவாணிக்கு அப்படி எந்த மாமா மகனும் இல்லாதிருப்பது பெரும் மகிழ்ச்சி.  ஏனெனில் இந்த உலகில் அவள் பயப்படும் ஒரே ஆள் சங்கரபாண்டியன் மட்டும் தான். இப்போதும் தம்பதி சமேதராய் வந்து நின்றவரைக் கண்டு உள்ளுக்குள் கொஞ்சம் திகில் தான் அவளுக்கு.

அவளைப் பார்த்துப் புன்னகைத்த லோகநாயகி “நம்ம மதுராக்கு இப்பவே கல்யாணக்களை வந்துட்டுல்ல” என்று சொல்லி வெள்ளந்தியாய் சிரிக்க அங்கே அனைவரின் முகத்திலும் சந்தோசத்தின் சாயல், மதுரவாணியைத் தவிர. அவள் முகம் மாறி நிற்கும் போதே ஃபார்மல் உடையில் வந்து சேர்ந்தனர் அவளது உடன் பிறந்தவர்களான சரவணனும் கார்த்திக்கேயனும். இருவரும் காவல் துறையில் பணிபுரிபவர்கள். செய்யும் வேலைக்கான மிடுக்குடன் நின்ற இரு சகோதரர்களுக்கும் பெருமை பிடிபடவில்லை. ஏனெனில் வீட்டு மாப்பிள்ளையாக வரப் போகிறவன் அவர்களின் உயரதிகாரி அல்லவா!

கார்த்திக்கேயன் மதுரவாணியின் சிகையை வருடிக் கொடுத்தவன் “இன்னும் கொஞ்சநேரத்துல சாரும் அவரோட அம்மாவும் வந்துடுவாங்கடா மது” என்று சொல்ல வேறு வழியின்றி சிரித்துவைத்தாள். பாசத்துக்கும் செல்லத்துக்கும் குறைவில்லாத சகோதரப்பாசம் அவளுக்கு வாய்த்திருந்தது. கார்த்திக்கேயனும் சரி சரவணனும் சரி தங்கை காலால் இட்ட வேலையை தலையால் செய்து முடிப்பர். வீட்டின் ராஜகுமாரி மீது அவ்வளவு குருட்டுத்தனமான அன்பு இருவருக்கும். ஊருக்கே சிம்மச்சொப்பனமாக விளங்கும் ரத்தினவேல் பாண்டியனும் அவரது மகன்களும் மதுரவாணி விசயத்தில் மட்டும் மெழுகு போல உருகி விடுவர்.

“என்னய்யா கார்த்திக்கேயா உன் பெரிய ஆபிசரு எப்ப வருவாரு?” என்று தன் சிம்மக்குரலால் அங்கிருந்த அனைவரையும் திரும்பி பார்க்கவைத்தபடி வந்து கொண்டிருந்தார் ரத்தினவேல் பாண்டியன். தும்பைப்பூ நிறத்தில் வேஷ்டியும் சட்டையும் அணிந்து, ஒன்றிரண்டு வெள்ளிக்கம்பி நரைகளுடன் நெற்றியில் விபூதி துலங்க, கைகளால் மீசையை நீவியபடி வந்து சேர்ந்தார். கூடவே அவரது கையாளான வீரய்யன். அவருக்குச் சற்றும் குறையாத கம்பீரமான மனிதர். ரத்தினவேல் குடும்பத்துக்கு நீண்டநாள் விசுவாசியும் கூட.

ரத்தினவேல் வந்ததும் சங்கரபாண்டியன் அவரிடம் “அந்த ஹார்பர் பக்கத்துல உள்ள லேண்ட் மேட்டர் என்னாச்சு மாப்பிள்ள?” என்று வினவ இருவரும் மகன்களுடனும் வீரய்யனுடன் பெண்களின் காதில் தங்கள் பேச்சு விழாதவண்ணம் ஒதுங்கினர்.

அவர்களைப் பொறுத்தவரை தொழில்முறை பேச்சுக்களில் பெண்களுக்கு அனுமதி இல்லை. அதோடு இது அவர்களுக்குத் தெரிந்தால் பயப்படவும் கூடும். அப்படி என்ன வேலை? ரத்தினவேல் பாண்டியன், சங்கரபாண்டியன் இருவருக்கும் நதியூரிலும், திருவைகுண்டத்திலும் நல்ல செல்வாக்கு. அந்த இருபெரும் நிலச்சுவான்தாரர்களின் பெயர்கள் பெரும் பஞ்சாயத்துகளில் அடிக்கடி அடிபடும். சில நேரங்களில் பஞ்சாயத்து அடிதடியளவில் கூட முடியும். அவர்களுக்கு அரசியல் வட்டாரத்திலும் நல்ல செல்வாக்கு. எனவே எந்த வழக்கிலும் சிக்கியதில்லை. கூடவே மகன்களுக்கும் காவல் துறையில் வேலை. யார் கேட்க முடியும் அவர்களை?

அவர்களின் கட்டப்பஞ்சாயத்து விவகாரம் எல்லாம் மதுரவாணிக்குத் தெரிய வந்த போது அவள் பாளையங்கோட்டையில் விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்தாள். செய்தித்தாளில் வந்த செய்தியைக் கண்டு அதிர்ந்தவளுக்கு விடுமுறைக்கு வீட்டுக்கு வந்திருந்த போது “இதுலாம் எனக்கு முன்னாடியே தெரியும் மது… ஏதோ புதுசு போல கேக்குற?” என்று அதிர்ச்சி கொடுத்தார் அவளைப் பெற்ற தாயார்.

மதுரவாணி அதிர்ந்தவள் “தெரிஞ்சும் நீ சும்மா இருக்கியாம்மா? இந்த ரவுடித்தனத்தை மூட்டை கட்டி வைங்கனு அப்பா கிட்ட சொல்ல மாட்டியா நீ?” என்று கேட்டு வைக்க

“வீட்டு ஆம்பளைங்க விசயத்துல பொம்பளைங்க நம்ம என்ன பேச முடியும் மது? சொன்னா கேக்குற ஆளா உங்கப்பா?” என்றவருக்கும் வெளியே சென்ற கணவர் வீடு திரும்பும் வரை மனம் ஒரு நிலையில் இருக்காது. என்ன செய்ய? இதெல்லாம் தெரிந்து தானே அவருக்கு கழுத்தை நீட்டியிருந்தார்.

ஆனால் மதுரவாணியால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் தந்தையைக் காணும் போதெல்லாம் வணங்கும் கரங்கள் இது நாள் வரை மரியாதையில் வணங்குவதாகவே நினைத்தாள். ஆனால் அதற்கு காரணம் மரியாதை அல்ல, அது பயம் என்பது புரிந்த வயதில் அவளுக்கு ஆண்கள் அனைவருமே இப்படி தான் போல என்ற எண்ணம் உள்ளுக்குள் படிந்துவிட்டது. போதாக்குறைக்கு அண்ணன்கள் வேறு காவல்துறை ஆய்வாளர்கள்.

அவளது உலகில் அடிதடியும், மிரட்டலும் மட்டுமே இருக்க அந்த வீட்டின் இளவரசிக்கு இந்த வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டது. அதிலும் திருமணம் என்றால் வேம்பாய் கசந்தது. ஏனெனில் வரப் போகும் ஆண்மகனும் இப்படிப்பட்டவனாகத் தானே இருப்பான் என்ற எண்ணம் அவளுக்கு. அதே போல அண்ணன்களின் உயரதிகாரியின் அன்னை அவளைத் தன் மருமகளாக்க விரும்பியபோது வீட்டினர் பூரித்துப் போனாலும் அவளுக்கு அந்நிகழ்வில் விருப்பமில்லை.

தன் மறுப்பை எத்தனையோ விதங்களில் காட்டினாலும் அதற்கு யாரும் மதிப்பு தரவில்லை. அதே நேரம் அவளுக்கும் இந்த அடிதடி, ரகளை இது எதுவுமில்லாத அமைதியான ஒரு வாழ்க்கை மீது தான் நாட்டம் இருந்தது. அந்த வாழ்க்கையில் அவளுக்குத் துணை அவள் மட்டுமே. எந்த ஆண்மகனின் துணையும் அவளுக்குத் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தவள் அதற்கான மறைமுக ஏற்பாடாக அவளுடன் பொறியியல் முடித்து சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் நண்பனிடம் தனது சுயவிவரத்தை அளித்திருந்தாள்.

வேலை கிடைத்ததும் வீட்டை விட்டுப் பறந்துவிடவேண்டும். அடிதடி, சண்டை, இரத்தம் இது எதுவும் இல்லாத ஒரு இடம்; அங்கே அவள்; அவள் மட்டுமே. வேறு யாரும் தேவையில்லை.

இப்போதும் அதே சிந்தனையில் உழன்றவளின் கையில் இருந்த போனில் மீண்டும் ஐஸ்வர்யா ராய் பேசும் வசனங்கள் ஓட ஆரம்பித்தது. அப்போது பொறி தட்டவே சுற்றிலும் இருந்த குடும்பத்தினரையும் ஊர்க்காரர்களையும் பார்வையிடத் தொடங்கினாள். யாருடைய கவனமும் அவள் மீதில்லை என்பது உறுதியாகவும் மெதுவாக அங்கிருந்து நழுவத் தொடங்கினாள்.

அங்கே பொம்மைத் துப்பாக்கி வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் அண்ணன்களின் மகன்கள் விக்னேஷும் கணேஷும் இவளைப் பார்த்துவிடாது கவனமாய் ஒளிந்து ஒளிந்து யாருமறியா வண்ணம் கோவிலில் இருந்து வீட்டுக்கு வந்துவிட்டாள்.

ஒரு முறை தான் செய்வது சரியா என்று யோசித்தவளுக்கு எதற்கெடுதாலும் அடிதடியில் இறங்கும் தந்தை மற்றும் மாமாவின் நினைவும், அண்ணன்களின் முரட்டுச்சுபாவமுமே கண் முன் நிற்க விறுவிறுவென்று தனது அறைக்குள் நுழைந்தவள் தனது உடைமைகளை பேக்கில் அடுக்கத் தொடங்கினாள்.

அவளுக்கு கைச்செலவுக்கென தந்தையும் அண்ணன்களும் அளித்திருந்த பணம் அதிகம். அதைச் செலவு செய்யாது வைத்திருந்தவளுக்கு அதன் பயன் இப்போது புரிந்தது.

பேக்கைத் தூக்கிக் கொண்டவள் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாய் இருக்கும் புகைப்படத்தின் முன்னே நின்றாள்.

“நான் எனக்கான வாழ்க்கைய தேடிப் போறேன்… அமைதியான, அழகான வாழ்க்கை. அங்க எனக்குனு நான் மட்டும் தான்… வேற யாரோட துணையும் எனக்குத் தேவையில்ல… முக்கியமா ஒரு ஆம்பிள்ளையோட துணை எனக்குத் தேவையே இல்ல… என்னை மன்னிச்சிடுங்க… நான் இத சொன்னா நீங்க கண்டிப்பா ஒத்துக்க மாட்டிங்க… பொண்ணுனா என்னைக்கு இருந்தாலும் புருசன் வீட்டுக்குப் போய் தான் ஆகணும்னு சொல்லுவிங்க… ஆனா என்னால என் அம்மாவ மாதிரி காலையில வீட்ட விட்டு போற புருசன் எப்ப எப்பிடி திரும்புவாருனு தாலியை கையில பிடிச்சிட்டே இருக்கமுடியாது… நான் சுதந்திரமா வாழ ஆசைப்படுறேன்பா… உங்க மதுராவ மன்னிச்சிடுங்க… நான் போறேன்” என்று கனத்த இதயத்துடன் சொல்லிக் கொண்டவள் அடுத்தச் சில நிமிடங்களில் ஊர்க்காரர்களின் கண்ணிலும், வீட்டைச் சுற்றி எப்போதும் இருக்கும் அப்பாவின் ஆட்களின் கண்ணிலும் மண்ணைத் தூவி விட்டு திருநெல்வேலி சந்திப்புக்குச் செல்லும் பேருந்தில் ஏறிவிட்டாள்.

திருவிழா என்பதால் மொத்த கிராமமும் கோவிலில் குவிந்திருக்க மதுரவாணி வீட்டில் இருந்து கிளம்பியதையோ பேருந்து ஏறியதையோ கண்டுகொள்ள ஒரு ஈ காக்கா கூட அன்று தெருவில் இல்லை.

பேருந்தில் ஜன்னலோரம் அமர்ந்திருந்தவள் தாவணியால் தலையில் முக்காடிட்டிருந்தாள். நாளை முதல் அவள் வாழ்வில் யாரும் அவளைக் கட்டுப்படுத்த முடியாது. அவள் இனி சுதந்திரப்பறவை. எந்த ஆண் வேடனும் அவளை பிடிக்க முடியாது என்று மகிழ்ந்தபடி ஜன்னலோர குளிர்க்காற்றை ரசிக்கத் தொடங்கினாள். ஆனால் விதியோ மதுரவாணியின் வாழ்வில் நிறைய எதிர்பாரா திருப்பங்களை எழுதி வைத்து விட்டுக் காத்திருந்தது. இந்தத் துணிச்சல்காரியின் அடாவடித்தனத்தால் சிலரது வாழ்வில் உண்டாகப் போகும் குழப்பங்கள் மதுரவாணியின் வாழ்வையும் அசைத்துவிடுமா?

அலை வீசும்🌊🌊🌊