❣️அத்தியாயம் 27❣️

“குழந்தைங்க பேரண்ட்சை பார்த்து தான் ஒவ்வொரு விசயத்தையும் அட்மயர் பண்ணி கத்துப்பாங்க… நானும் என் பேரண்ட்ஸ் கிட்ட நிறைய விசயங்களை கத்துக்கிட்டேன்… அதுல முக்கியமானது எவ்ளோ மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் வந்தாலும் தனக்கு முக்கியமானவங்களோட கையை விட்டுடவே கூடாது… அந்த முக்கியமான நபர் ஃப்ரெண்ட், ரிலேட்டிவ், லவ்வர், ஒய்ப் யாரா வேணும்னாலும் இருக்கலாம்… நெக்ஸ்ட், நம்ம ஒருத்தவங்களை நேசிக்க ஆரம்பிச்சிட்டோம்னா அந்த நேசத்துல விலகல் மட்டும் வரவே கூடாது… நம்ம நேசிக்கிறவங்க மேல கோவப்படலாம்… சண்டை போடலாம்… அவங்க கிட்ட பத்து நாள் முகம் குடுத்து பேசாம கூட இருக்கலாம்… ஆனா அவங்க எனக்கு வேண்டாம்னு விலகி மட்டும் போகக்கூடாது… ஏன்னா சில உறவுகள் வாழ்க்கை முழுசுக்குமானது… அதை சின்ன சின்ன கருத்து வேறுபாடோ கோவமோ பிரிச்சிடக் கூடாது… ஃபைனலி, நம்ம நேசிக்கிறவங்களுக்காக மேக்சிமம் எவ்ளோ ரிஸ்க் வேணும்னாலும் எடுக்கலாம்… இந்த மூனு பாயிண்டும் யாருக்கு அப்ளிகபிள் ஆகுமோ இல்லையோ எனக்கும் ஜி.பிக்கும் கட்டாயம் அப்ளிகபிள் ஆகும்”

                                               -லாவாமேனின் தத்துவங்கள்…

அடுத்தடுத்த நாட்களில் யூனிகார்ன் குழுமம் எண்ணற்ற அதிரடி மாற்றங்களைச் சந்தித்தது.

யூனிடெக்கில் நிகழ்ந்த மோசடியால் அந்நிறுமத்தின் பங்குகளோடு ஒட்டுமொத்த யூனிகார்ன் குழுமத்தின் பங்குகளும் பங்குச்சந்தையில் பெரும் சரிவை சந்தித்தது.

இச்சரிவால் பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள், கடன் கொடுத்தவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.

மோசடி நிகழ்ந்த யூனிடெக் நிறுமத்தின் மேலாண்மை நிர்வாகமானது வினயன் மற்றும் சாணக்கியனின் தரப்பிலிருந்து பறிக்கப்பட்டு மத்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஒரு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

அக்குழுவுக்கு இருந்த முக்கிய கடமை யூனிடெக்கை குறிப்பிட்ட நாட்களுக்குள் வேறு நிறுமத்திற்கு விற்றாக வேண்டும் என்பதே. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற போதே காவல்துறை சாணக்கியனை கைது செய்தது.

சி.பி.ஐ விசாரணையில் சாணக்கியன் மோசடி செய்ய உதவியாக இருந்த டெக்கான் வாக்கர்ஸ் ஆடிட்டர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர்.

ஊடகங்களில் இம்மோசடியானது பரபரப்பாக பேசப்பட்டது. சாணக்கியனின் கைது யாருக்கு நன்மையாக முடிந்ததோ இல்லையோ வர்ஷாவின் தந்தை விக்னேஷிற்கு பெரும் நன்மையாக முடிந்தது.

அவர் மீது புனையப்பட்ட பொய் வழக்கானது கிட்டத்தட்ட ஒன்றுமில்லாமல் போகும் நிலையில் இருந்தது. வினயனின் கவனம் முழுவதும் இப்பிரச்சனையிலிருந்து எப்படி தானும் தனது மைந்தனும் வெளியே வருவது என்பதிலேயே இருந்தது.

மைதிலியோ கணவருக்கும் மகனுக்கும் நேர்ந்த இன்னலை சகிக்க முடியாதவராக உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைக் காணக் கூட வினயனுக்கோ சாணக்கியனுக்கோ அனுமதி கிடைக்கவில்லை.

பணத்தாலும் அதிகாரத்தாலும் எதையும் சாதிக்கலாமென்ற எண்ணம் கொண்ட உள்ளங்களுக்குக் காலம் தக்க பாடத்தைக் கற்றுக் கொடுத்துவிட்டது.

சிறைக்குள் அடைபட்டாலும் சாணக்கியனின் பிறவிக்குணம் மாறவில்லை. வெளியே வருவதற்கு சிறிய வாய்ப்பு கிடைத்தால் போதுமென காத்திருந்தான் அவன். அப்படி ஒரு வாய்ப்பு கிட்டினால் தனக்கு நேர்ந்த இந்நிலைக்குக் காரணமானவர்களுக்கு நரகம் என்றால் என்னவென்று பூமியிலேயே காட்டுவதற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தான்.

அவனால் இத்தனை நாட்கள் இடர்களை அனுபவித்த விக்னேஷின் குடும்பத்தினரோ மிகவும் மும்முரமாக விஷ்ணு மற்றும் ஷிவானியின் காதலைப் பற்றி விசாரித்துவிட்டு திருமணத்திற்கான ஏற்பாடுகளை எப்போது ஆரம்பிக்கலாம் என்ற விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

விக்னேஷ் தனது மகள் விசயத்தில் செய்த தவறை மகன் விசயத்தில் செய்யத் தயாராக இல்லை. முதலில் விஷ்ணுவும் ஷிவானியும் காதலிக்கிறார்களா என தீர விசாரித்துவிட்டு பின்னர் தான் திருமணத்திற்கான ஏற்பாடுகளை ஆரம்பிக்கலாம் என்ற முடிவுக்கே வந்தார்.

அவினாஷும் ரியாவும் கூட திருமணத்திற்கு சம்மதித்தனர், என்றாலும் வர்ஷாவையும் ஆதித்யாவையும் அவர்கள் மறந்துவிடவில்லை.

இதோ திருமணத்திற்கான ஏற்பாடுகளைப் பற்றி பேசும் போதே அவர்களைப் பற்றியும் ஆரம்பித்தனர்.

முதலில் ஆரம்பித்தது ரியா தான்.

“விச்சு, ஷிவா கல்யாணம் பத்தி எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்ல… ஆனா நம்ம ஆதியையும் வர்ஷாவையும் மறந்துட்டோம்… அவங்களும் ஒருத்தரை ஒருத்தர் டீப்பா லவ் பண்ணுறாங்க… சாணக்கியன் பிரச்சனைக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு பொய் சொன்னதை நம்ம நம்பிட்டோம்… ஆனா இப்ப தான் அவங்க கல்யாணம் பண்ணிக்கலனு தெளிவா தெரிஞ்சிடுச்சே… இனியும் வர்ஷாவும் அவனும் ஜெர்மனில ஒன்னா இருந்தா பவானி அன்னைக்குப் பேசுனதை கொஞ்சம் கொஞ்சமா மத்தவங்களும் பேச ஆரம்பிப்பாங்க… சோ வர்ஷாவை எவ்ளோ சீக்கிரம் இங்க வரவைக்குறோமோ அவ்ளோ சீக்கிரம் நம்ம பசங்களோட பேர் கெட்டுப் போகாம பார்த்துக்கலாம்… எனக்கு ஊர் உலகத்தைப் பத்தி கவலை இல்ல… பட் வருணோட ரிலேட்டிவ்ஸ் பத்தி கொஞ்சம் யோசிங்க”

அவர் முடித்த போதே கீதாவும் வருணும் யோசனையில் ஆழ்ந்தனர்.

அடுத்து தன் பங்குக்கு அவினாஷும் ஆரம்பித்தார்.

“விச்சு ஷிவாக்கு என்கேஜ்மெண்டுக்கு அவங்களை வர வைக்குறப்ப அவங்களுக்கும் நிச்சயம் பண்ணிடலாம் வருண்… கல்யாணத்தை அப்புறமா ஆதியோட ஸ்டடீஸ் முடிஞ்சதும் வச்சுக்கலாம்… என்ன சொல்லுற? விக்கி நீயும் உன்னோட ஒபீனியனை சொல்லுடா”

யோகாவும் விக்னேஷும் இந்த யோசனைக்கு எந்தக் கருத்தும் சொல்லவில்லை. நண்பர்கள் எதை முன்னெடுத்தாலும் அது சரியாகவே இருக்கும் என்று நம்பியதால் அவர்களுக்கும் இதில் சம்மதமே.

ஜெயசந்திரனுக்கோ மகிழ்ச்சி. விளையாட்டாக வர்ஷாவைத் திருமணம் செய்து கொள்கிறாயா என என்றோ ஒருநாள் ஆதித்யாவைக் கேட்டவருக்கு இப்போது மெய்யாகவே அவர்கள் வாழ்க்கையில் ஒன்று சேரப் போகிறார்கள் என்பதை அறிந்ததும் சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை.

அமைதியாக இருந்த கீதாவிடம் “என்ன யோசனை தாய்க்கிழவி? நீ மட்டும் லவ் பண்ணுனவரை கல்யாணம் பண்ணிக்கிட்டல்ல… உன் மகனுக்கு மட்டும் வேற ஒரு நியாயமா? ஒழுங்கா சம்மதம் சொல்லு… இல்லனா நானே அவங்களுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வச்சிடுவேன்” என்று மிரட்டினார் அவர்.

“ப்ச்! என் யோசனை அதில்ல ஜே.சி” என்று மறுத்த கீதா வருணை ஓரக்கண்ணால் பார்க்க

“ஏன் டாடிக்கு என்னவாம்?” என்றார் ஜெயசந்திரன்.

டாடி என்றதும் வருணின் கவனமும் ஜெயசந்திரனின் பக்கம் சென்றது.

கீதா தயக்கத்துடன் “வருணோட ரிலேட்டிவ்ஸ் யார் கூடவும் நல்ல உறவு இல்ல… நான் வேற பவானிய ஹாஸ்பிட்டல்ல வச்சு அறைஞ்சுட்டேன்… இப்ப ஆதிக்கும் வர்ஷுக்கும் கல்யாணம் பண்ணி வச்சா என்ன ஆகுனு யோசனையா இருக்கு” என்றார்.

வருண் மனைவியை ஆழ நோக்கியவர் தனது முடிவை அறிவித்தார்.

“என் மகனை பத்தி அவனோட நடத்தையை பத்தி தப்பா பேசுன யாரும் எனக்குத் தேவையில்ல… இந்த முடிவை ஏழு வருசத்துக்கு முன்னாடியே நான் எடுத்துட்டேன்… திடீர்னு பவானியும் அவ பொண்ணும் வந்து நின்னப்ப ரத்தபாசம் என் கண்ணை மறைச்சிடுச்சு… ஆனா அவ மறுபடியும் ஆதி வர்ஷாவை பத்தி தப்பா பேசுனாங்கனு கேள்விப்பட்டதும் மனசு விட்டுப் போச்சு…

நீ யாரை என்னோட சொந்தம்னு சொல்லுறியோ அவங்க நம்ம பையனை பத்தியும் அவ விரும்புற வர்ஷாவ பத்தியும் தப்பா பேசுனவங்க கீது… என் அப்பா அம்மா பத்தி சொல்லவே வேண்டாம்… பவானி பேச்சு தான் அவங்களுக்கு வேதவாக்கு… அவங்க மனசுல கீர்த்திக்கும் ஆதிக்கும் முடிச்சு போடணும்னு சின்ன வயசுல இருந்தே ஆசை இருக்கு… எப்பிடியும் வர்ஷாக்கும் ஆதிக்கும் கல்யாணம் நடந்தா அவங்கள்ல யாரும் சந்தோசமா வந்து வாழ்த்த மாட்டாங்க… குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லைங்கிறதுலாம் எனக்கு மட்டும் தான் பொருந்தும்… என் மகனுக்குப் பொருந்தாது… சோ அவங்களை பத்தி யோசிக்கிறதை விடு”

அவர் என்ன தான் கூறினாலும் யோகாவுக்கு மனம் தாங்கவில்லை.

“இல்ல வருண்… அவங்க பேரன் கல்யாணத்தைப் பார்க்கணும்னு ஆசைப்படுவாங்கல்ல”

“அப்ப அவங்க மனசுல வர்ஷா மேல இருக்குற வன்மத்தை மறந்துட்டு வரணும் யோகா… ஆல்ரெடி பவானியால ரெண்டு தடவை வர்ஷா அவமானப்பட்டுட்டா… என் மருமகளை அவமானப்படுத்துறவங்களும், அவங்களுக்குத் துணை போறவங்களும் யாரா இருந்தாலும் எனக்கு அவங்க தேவையில்ல… இத்தனை வருசம் அவங்களா எனக்குத் துணையா இருந்தாங்க? நீங்க, கீது, என் மகன் இவ்ளோ தான் என் உலகம்னு நான் ரொம்ப சந்தோசமா வாழ்ந்துட்டேன்… வன்மம் நிறைஞ்ச உறவுகளுக்கு என் உலகத்துல இடமில்ல யோகா… ரியா சொன்ன மாதிரி என்கேஜ்மெண்டை மட்டும் ரெண்டு ஜோடிக்கும் ஒன்னா பண்ணிடலாம். ஆதி ஸ்டடீஸ் முடிஞ்சு நல்ல ஜாப் கிடைச்சதும் அவங்களுக்கு மேரேஜ் பண்ணி வச்சிடலாம்”

இவர்களது பேச்சுவார்த்தையைப் பற்றி அறியாதவர்களாக இளையவர்கள் அவரவர் பணியிடங்களில் வேலையில் ஆழ்ந்திருந்தனர்.

ஆதித்யா அவனது கல்லூரி வகுப்பில் பிசியாக இருந்தான். அதற்கிடையே இரண்டு மூன்று முறைகள் மணிமாறனிடமிருந்து அவனது மொபைலுக்கு அழைப்புகள் வந்திருந்தது.

வகுப்பு முடிந்ததும் என்னவென அழைத்து விசாரித்தவனிடம் நடந்த அனைத்தையும் விலாவரியாக எடுத்துரைத்தான்.

“இப்ப உன்னோட புரொபசனுக்கு எதுவும் பாதிப்பா மாறன்?”

“இல்ல மச்சி… நேர்மையான மனுசங்க எல்லா இடத்துலையும் இருக்காங்க… சி.பி.ஐ விசாரிச்சப்ப நாங்க எங்களால முடிஞ்ச எவிடென்சை குடுத்துட்டு ஒதுங்கிட்டோம்… குறிப்பிட்ட சிலர் மட்டும் சி.பி,ஐயோட ஹிட் லிஸ்ட்ல இருக்காங்க… அவங்களோட புரொபசன் கேள்விக்குறி தான்”

“எதுக்கும் நீ கொஞ்சம் கவனமா இருடா… அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்க?”

“வேற இடத்துல ஜாப்கு ட்ரை பண்ணுறேன்டா… பட் டெக்கான் வாக்கர்சோட எம்ப்ளாயினு சொன்னாலே எல்லாரும் யோசிக்குறாங்கடா”

“என்னால தான் நீ கஷ்டப்படுறியோனு சங்கடமா இருக்கு மாறன்”

“ஏன்டா இப்பிடி பேசுற? நீ மட்டும் எனக்கு யோசனை சொல்லலைனா இந்நேரம் நான் சூசைட் பண்ணிருப்பேன்…. நீ குடுத்த தைரியமும் ஐடியாவும் தான் என்னை இன்னைக்கு நடமாட வச்சிருக்கு… சும்மா நீ சங்கடப்படாத”

“உனக்கு நல்ல ஜாப் கிடைக்குற வரைக்கும் இந்தச் சங்கடம் எனக்கு இருக்கும்டா…. நான் என் சைட்ல கண்டிப்பா உனக்கு ஏத்த ஜாப்கு ட்ரை பண்ணுறேன்”

நண்பனிடம் பேசிவிட்டு நூலகம் நோக்கி கிளம்பியவனின் மனமெங்கும் எப்படியாவது மணிமாறனுக்கு நல்ல வேலை கிடைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் தான்.

அதே நேரம் வர்ஷாவோ கபேயில் வேலை செய்தபடியே நிஷாவிடம் போனில் பேசிக்கொண்டிருந்தாள்.

மருத்துவக்கல்லூரி மாணவியான அவளுக்கு இருந்த மாபெரும் குறையே இப்போதெல்லாம் தந்தைக்குத் தன்னிடம் பேசக்கூட நேரமில்லை என்பதே.

“டாடி ரீசண்ட் டேய்ஸ்ல ஏதோ நியூ வென்ஸர்ல இறங்கியிருக்கார் போல… அவர் கவனம் முழுக்க அதுல இருக்கு… அம்மாவோட கவனம் அப்பா மேல இருக்கு… இதுல அவங்க ரெண்டு பேரும் என்னை மறந்துட்டாங்க வர்ஷ்”

“அஜி சித்தப்பா அப்பிடிலாம் பண்ண மாட்டாரே”

“அஹான்! நீ தான் உன் சித்தப்பாவ மெச்சிக்கணும்…. லாஸ்ட் ஒன் வீக்கா என் கூட போன்ல பேசக்கூட அவருக்கு டைம் இல்ல”

“அதுவும் நல்லது தான்… இல்லைனா நீ எனக்குக் கால் பண்ணிருக்க மாட்டல்ல… அப்பாவும் அம்மாவும் பேசலைனா தான் உனக்கு என் ஞாபகமே வருது”

வர்ஷா வைத்த குட்டில் அசடு வழிந்தாள் நிஷா. அவள் கூறுவதும் மெய் தான். அஜித் – அனுராதா தம்பதியினரின் ஒரே வாரிசான அவளுக்கு மருத்துவப்படிப்பே இலட்சியம்.

அவளின் தோழமை வட்டம் பெரியது தான் என்றாலும் தந்தை என்றால் அவளுக்கு உயிர். அவரிடம் பேசாமல் அவளுக்கு நாளே நகராது.

அஜித் சமீபத்தில் வேலையில் பிசியாகிவிட அவரால் மகளிடம் முன்பு போல பேச முடியவில்லை. அனுராதாவோ சதாசர்வகாலமும் தொழில் விசயமாக அலையும் கணவனை கவனிப்பாரா? அல்லது மருத்துவக்கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் மகளைக் கவனிப்பாரா?”

எனவே புலம்பலைக் கேட்க வாய்த்த அடிமையாக வர்ஷா சிக்கிக் கொள்ளவே ஆதங்கம் அனைத்தையும் கொட்டித் தீர்த்தாள் நிஷா.

“அப்பிடி என்ன நியூ டீல்?”

“இப்ப மீடியாவை புரட்டிப் போட்டுச்சே யூனிடெக் ஸ்காம்… அது ரிலேட்டடா வந்த டீல் தான்” என்றாள் நிஷா.

யூனிடெக் என்றதும் வர்ஷாவின் காதுகள் கூர்மையுற்றன.

“யூனிடெக்கா?”

“ஆமா வர்ஷ்… யூனிகார்ன் குரூப்போட கம்பெனி தானே அது… ரீசண்டா நடந்த பெரிய ஸ்காமால சென்ட்ரல் கவர்மெண்ட் கம்பெனிய டேக் ஓவர் பண்ணிட்டாங்க… அவங்க அப்பாயிண்ட் பண்ணுன போர்ட் ஆப் மெம்பர்ஸ் சீக்கிரமே யூனிடெக்கை வேற கம்பெனிக்கு வித்தே ஆகனுமாம்… டாடியோட கம்பெனியும் அந்த யூனிடெக்கை வாங்குறதுல பிசியா இருக்காங்க… அதுக்கான வேலையில தான் என்னை டாடி மறந்துட்டார்”

நிஷா பேசிக்கொண்டே போக வர்ஷாவின் மனமோ நிம்மதியில் திளைத்தது. தன்னையும் தனது குடும்பத்தையும் பாடாய்படுத்திய சாணக்கியனுக்கும் அவனது சாம்ராஜ்ஜியத்துக்கும் நேர்ந்த கதியை எண்ணி அவளுக்குச் சந்தோசம் தான்.

கெடுவான் கேடு நினைப்பான் என்பதற்கு உதாரணமாக மாறிப்போனவனின் மனம் இன்னும் வஞ்சத்தில் ஊறிக்கொண்டிருப்பதை அவள் அறிய மாட்டாள் அல்லவா!

ஆனால் மூடமதி கொண்ட மூர்க்கர்கள் தண்டனை காலத்தில் கூட வஞ்சத்தை விடமாட்டார்கள் என்பதற்கு சாணக்கியன் உதாரணம் என்பதை காலம் கூடிய விரைவில் அவளுக்குப் புரியவைக்கும்.