❣️அத்தியாயம் 25❣️

“கேர்ள்ஸ் அண்ட் விமன்ஸ் ஆர் ஆல்சோ ஹியூமன் பீயிங்ஸ்… ஆனா பெரும்பாலான ஆண்கள் அவங்களை சக ஜீவராசியா நினைக்குறதுக்குப் பதிலா தங்களோட ப்ராப்பர்ட்டியா நினைச்சுக்குறாங்க… இப்ப உயிரில்லாத ஒரு டேபிள் சேரை நம்ம எப்பிடி ட்ரீட் பண்ணுவோம்? நினைச்ச இடத்துக்கு இழுப்போம்… காலை தூக்கி போட்டுட்டு உக்காருவோம்… அது உடைஞ்சா கூட கவலைப்பட மாட்டோம்… பெண்கள் விசயத்துல பெரும்பாலான ஆண்களோட மனநிலை இது தான்… தனக்கு லைப் பார்ட்னரா வர்ற பொண்ணுக்கு ஃப்லீங்ஸ் இருக்கும்னு அவங்க யோசிக்கிறதே இல்ல… தான் இழுத்த இழுப்புக்கு அவங்க வரணும்னு எதிர்பார்ப்பாங்க… அப்பிடி வரலைனா வர வைக்குறதுக்கு சாம, தான, பேத, தண்ட முறைகள் எல்லாத்தையும் யூஸ் பண்ணுவாங்க… அவங்களோட முரட்டுத்தனத்தால அந்தப் பொண்ணோட மனசு உடைஞ்சு போறதை பத்தி அவங்க கவலைப்படுறதே இல்ல… எப்ப ஒரு பொண்ணை சகமனுசியா நினைச்சு அவளோட விருப்பத்தை ஒரு ஆண் மதிக்குறானோ அப்ப தான் அவன் மனுசன்ங்கிற கேட்டகரிக்குள்ளவே வருவான்… எவன் ஒருத்தன் பிசிக்கலாவும் மென்டலாவும் ஒரு பொண்ணை வற்புறுத்தி தன்னோட தேவைய தீர்த்துக்குறானோ அவனை நீங்க தாராளமா மிருக இனத்துல சேர்த்துக்கலாம்”

                                               -லாவாமேனின் தத்துவங்கள்…

யூனிகார்ன் குழுமத்தின் தலைமை அலுவலகம்…

நள்ளிரவில் இயக்குனர் குழுவிலுள்ளவர்களுக்கு வந்திருந்த மின்னஞ்சல் அங்கே பெரும் சூறாவளியை ஏற்படுத்தியிருந்தது. வினயனையும் சாணக்கியனையும் போர்ட் ஆப் டைரக்டர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்துக் கொண்டிருந்தனர்.

அனைவரும் மீட்டிங் ஹாலில் தத்தம் முன்னே வைக்கப்பட்டிருந்த ஒலிவாங்கியில் இன்னும் என்னென்ன குழப்படிகள் யூனிகார்னின் கணக்கு வழக்குகளில் செய்யப்பட்டிருக்கிறது என்று மாறி மாறி விளாசிக் கொண்டிருந்தனர்.

“வீ நீட் டு நோ வாட் இஸ் த ரியல் ஃபினான்ஷியல் கண்டிஷன் ஆப் யூனிடெக்… அதுக்கு முன்னாடி யூனிடெக்கையும் யூ.சி.டெக்கையும் மெர்ஜ் பண்ணுறதுங்கிற பேச்சுக்கே இடமில்ல”

“இந்த விசயம் வெளிய கசிய ஆரம்பிச்சுதுனா ஷேர் ஹோல்டர்ஸ் கேக்குற கேள்விக்கு போர்ட் தான் பதில் சொல்லணும்… ஆனா நீங்க போர்ட் கிட்டவே ஒரிஜினல் ஃபினான்ஷியல் ரிப்போர்ட்டை மறைச்சிருக்கீங்க… யூனிடெக்கோட சொத்து மதிப்பை அதிகமா காட்டி நீங்க ப்ரிப்பேர் பண்ண சொன்ன பேலன்ஸ் ஷீட்ல ஃபிக்சட் டெப்பாசிட்னு காட்டுன அமவுண்ட் எல்லாமே போலினு அந்த ஈமெயில் ஆதாரத்தோட சொல்லுது… அதுக்கு என்ன பதில் சொல்லப் போறிங்க?”

“இன்னைக்கு ஷேர் மார்க்கெட்ல யூனிடெக் ஷேரோட மதிப்பு எப்பவும் பீக்ல இருக்க காரணமே அதோட சொத்து மதிப்பு வருசாவருசம் அதிகரிச்சிட்டே போறதும் கம்பெனி நல்லா ஃபினான்ஷியல் கண்டிசன்ல இருக்குறதா நீங்க காட்டிக்கிட்டதும் தான்… ஆனா கம்பெனியோட ஒரிஜினல் சொத்துக்களோட மதிப்பு நீங்க காட்டுனதை விட ரெண்டு மடங்கு கம்மி… கிட்டத்தட்ட நாலாயிரம் கோடி ரூபாக்கு பொய் கணக்கு காட்டிருக்கீங்க… கம்பெனியோட அக்கவுண்ட்சை சொந்தமா ஈ.ஆர்.பி சாஃப்ட்வேர்ல ஸ்டோர் பண்ணி ஆடிட்டிங் கன்சர்னை உங்க கைக்குள்ள போட்டுக்கிட்டு இவ்ளோ பெரிய மோசடிய பண்ணிருக்கீங்க… இது எல்லாத்துக்கும் நீங்க என்ன பதில் சொல்லப் போறீங்க மிஸ்டர் சாணக்கியன்?”

சாணக்கியன் தனக்கு வந்த கோபத்தை அடக்க பெரும் பிரயத்தனப்பட வினயனோ எங்கே அவன் கோபப்பட்டு பிரச்சனையை இன்னும் பெரிதுபடுத்திவிடுவானோ என்று மனதிற்குள் பதறிக் கொண்டிருந்தார்.

மூன்றாண்டுகளாக வெகு சாமர்த்தியமாக கட்டிக் காத்த யூனிடெக் சாம்ராஜ்ஜியம் கண் முன்னே காணாமல் போய்விடுமோ என்ற பயம் தான் அவனது கோபத்திற்கு அடிப்படியே.

அவன் அமைதி காப்பதை போர்ட் ஆப் டைரக்டர்கள் வேறு விதமாக தான் எடுத்துக் கொண்டனர்.

சாணக்கியனுக்குச் சோதனை ஆரம்பித்ததே அவனது இயந்திர உதிரிபாக நிறுவனத்திலிருந்து தான். அதில் சில அரசியல் தலைகளும் தங்களது பணத்தை முதலீடு செய்திருந்தனர்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அனைத்து தொழில்களும் அடி வாங்கிவிட அதில் யூனிகார்ன் குழுமம் மட்டும் விதிவிலக்கா என்ன? அந்த அடியை முதலீடு செய்த அரசியல்வாதிகள் வாங்கிக்கொள்ள விரும்பாமல் தங்கள் முதலீட்டைத் திரும்ப கேட்க சாணக்கியனோ நிறுமத்தின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு என்ன செய்வதென அறியாது திகைத்தான்.

அச்சமயத்தில் தான் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தணிக்கை நிறுவனமான டெக்கான் வாக்கர்சின் உதவியோடு யூனிடெக்கின் சொத்துகளில் கை வைத்து அரசியல்வாதிகளின் பணத்தைத் திரும்ப அளித்தவன் பங்குதாரர்களுக்கும் போர்ட் ஆப் டைரக்டர்களுக்கும் சந்தேகம் வராமலிருக்க உண்மையான இலாபத்தையும் சொத்து மதிப்பையும் நிதியறிக்கையில் காட்டாது பொய்யாய் அதிகப்படுத்தி காட்ட வைத்தான்.

அதன் விளைவாக கடந்த மூன்றாண்டுகளாக யூனிடெக்கின் பங்கு விலை எப்போதும் ஏறுமுகமாக இருக்க தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்பதை பங்குதாரர்கள் அறிந்துகொள்ளவே இல்லை.

இதோ முந்தைய நாள் நள்ளிரவில் வந்த மின்னஞ்சல் அவர்களை உலுக்கி விட்டது.

இப்போது இயக்குனர்களை எவ்வாறு சமாளிப்பது என்று புரியாது தந்தையும் மகனும் திகைக்க அவர்களோ இவ்விசயத்தை செபியின் (SEBI – SECURITY EXCHANGE BOARD OF INDIA) காதுக்குக் கொண்டு போவது பற்றி பேச ஆரம்பித்தனர்.

டெக்கான் வாக்கர்சின் முக்கிய அதிகாரிகளிடமும் இது குறித்து விளக்கம் கேட்கப் போவதாக அந்தக் கூட்டத்தின் முடிவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டம் கலைய எப்போதும் எரிமலையாய் குமுறும் சாணக்கியன் சினத்தைக் காட்ட வழியறியாது கல்லாய் சமைந்து அமர்ந்திருந்தான்.

வினயனோ மைந்தனின் தலைக்கு மேல் கத்தி தொங்குவதை மானசீகமாக கண்டவர் எப்படியாவது டெக்கான் வாக்கர்சின் ஆடிட்டர்களை சரி கட்டும் முயற்சியில் இறங்க முடிவு செய்தார்.

அவர்கள் இருவருக்கும் இருக்கும் முக்கிய கேள்விகள் இரண்டு. அந்த மின்னஞ்சலை அனுப்பியது யார்? இத்தனை நாட்கள் வெளியே வராத இப்பிரச்சனை திடுதிடுப்பென வெடிக்க காரணம் யார்?

ஆனால் இதற்கெல்லாம் காரணமானவனோ வர்ஷாவோடு ப்ளாக் ஃபாரஸ்ட் பகுதிக்கு கேம்பிங் சென்றிருந்தான். அவளும் தானும் மட்டும் செல்லலாம் என்று திட்டம் போட்டவனுக்கு அவனது நண்பர்களின் வருகை அதிர்ச்சி என்றால் வர்ஷாவின் தோழி ரோமியின் வருகை பேரதிர்ச்சி.

“நம்ம ரெண்டு பேர் மட்டும் கொஞ்சம் டைம் பாஸ் பண்ணலாம்னு வந்தா நீ எல்லாரையும் இன்வைட் பண்ணி வச்சிருக்கியே ஜி.பி” என்று குறை கூறிய ஆதித்யாவை நமட்டுச்சிரிப்புடன் ஏறிட்டாள் வர்ஷா.

இருவரும் இரண்டு நாட்கள் கேம்பிங் அனுபவத்திற்காக ப்ளாக் ஃபாரஸ்ட் பகுதியிலிருக்கும் நேஷ்னல் பார்க்கின் அருகே இருக்கும் ஸ்க்வார்ஸ்வால்ட் கேம்பிங்கிற்கு வருவதாக திட்டமிட்ட அடுத்த நிமிடமே வர்ஷா ரோமியைத் தன்னோடு வரும்படி அழைத்திருந்தாள்.

கூடவே ஆதித்யாவின் தோழர்களுக்கும் அழைப்பு விடுத்தவள் அவ்விசயம் அவனது காதுக்குப் போகாமல் பார்த்துக் கொண்டாள். ஆதித்யாவும் அந்த கேம்பிங் பகுதியில் இருக்கும் ‘பால் (Paul)’ வகை டெண்ட் ஒன்றை தங்களுக்காக புக் செய்திருக்க அவனறியாவண்ணம் இன்னொரு டென்டை புக் செய்துவிட்டாள்.

அங்கே சென்று இறங்கிய போதே ரோமி ஓடி வந்து வர்ஷாவை அணைத்துக்கொள்ள ஆதித்யாவின் நண்பர்களான லியோ, ஜோனாஸ், கேதரின் மற்றும் லூயிஸ் உற்சாக கூச்சலுடன் அவனை நெருங்கினர்.

அவர்கள் அனைவரையும் கண்ட அதிர்ச்சியில் ஆதித்யா எப்படி எதிர்வினையாற்றுவது என்று புரியாமல் திகைக்க வர்ஷாவோ அவர்களை மனதாற வரவேற்றதோடு புக் செய்திருந்த இரண்டு டெண்ட்களில் ஒன்றில் கேதரின் மற்றும் ரோமியுடன் தான் தங்கி கொள்வதாகச் சொல்லி கிளம்பிவிட்டாள்.

ஆதித்யா தன்னைப் பரிதாபமாகப் பார்ப்பதை ஓரக்கண்ணால் பார்த்தபடி நகர்ந்தவள் அவனை அவனது நண்பர்கள் மூவரும் இழுத்துச் செல்வதை நமட்டுச்சிரிப்புடன் கவனித்துவிட்டு தங்களுக்கான டெண்டுக்குள் நுழைந்து கொண்டாள்.

குளியலறை வசதியோடு நான்கு பேர் தங்குமளவுக்கு பெரிதாக இருந்த அந்த டென்ட்டில் சமைத்துச் சாப்பிடுவதற்கு கிச்சன் பாக்சோடு சமைப்பதற்கு தேவையான அடிப்படை பொருட்கள் அடங்கிய கிச்சன் ஷெல்ஃப் அமைந்திருந்தது.

பெண்கள் மூவரும் டென்ட்டை சுற்றி பார்த்துவிட்டு தத்தம் உடைமைகளை அடுக்கி வைத்தனர். குளித்து உடை மாற்றிவிட்டு மொபைலை எடுத்துப் பார்க்க ஆரம்பித்த வர்ஷா யூடியூபில் செய்தி சேனல்களை வரிசையாக ஓடவிட்டாள்.

அதில் வந்த ஒரு செய்தியைப் பார்த்ததும் கண்கள் விரிய அமர்ந்து விட்டாள். ஏனெனில் அதில் படமாக வந்தவர்கள் சாணக்கியனும் வினயனும்.

சாணக்கியனின் பொறுப்பிலிருக்கும் யூனிடெக் நிறுமத்தில் நான்காயிரம் கோடி மதிப்பில் கணக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும் அந்த மோசடிக்கு அவர்களின் தணிக்கை நிறுவனமான டெக்கான் வாக்கர்ஸ் கூட்டாக இருந்ததாகவும் செய்தியறிவிப்பாளர் கூறினார்.

“தென்னிந்தியாவின் பிரபல நிறுமக்குழுமமான யூனிகார்னில் மோசடி நடந்ததா? விரிவான செய்திகளுக்கு எங்களுடன் இணைந்திருங்கள்”

அச்செய்தியைப் பார்த்ததும் வர்ஷா முதலில் திகைத்தாலும் பின்னர் அவள் மனதில் ஒருவித சந்தோசம் முகிழ்த்தது.

பொதுவாக அடுத்தவர் துயரில் சந்தோசம் கொள்வது அவளது வழக்கம் இல்லை. இயல்பிலேயே இரக்கச்சுபாவம் கொண்டவளைக் கூட இவ்வாறு அடுத்தவர் கஷ்டத்தில் மகிழ்ச்சியடைபவளாக மாற்றிவிட்டான் சாணக்கியன்.

அடுத்த நொடியே டெக்கான் வாக்கர்ஸ் என்ற பெயரில் நிதானித்தவள் ஆதித்யாவின் நண்பன் மணிமாறன் நினைவு வரவும் அவன் கூறிய கர்மா பற்றிய விளக்கம் கண் முன்னே வந்து சென்றது.

நம்மால் சாணக்கியனை எதுவும் செய்ய முடியாது என்று சொன்னவன், மணிமாறனோடு சேர்ந்து என்னவோ செய்கிறான் என்பதை மட்டும் கண்டுகொண்டவள் அதற்கு மேல் அவனிடம் எந்தச் செய்தியையும் கேட்கவில்லை.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் அவன் தான் நண்பனோடு சேர்ந்து ஏதோ செய்திருக்க வேண்டுமென ஊகித்தவள் அவனிடம் கேட்டு உறுதிபடுத்திக் கொள்வதற்காக அவனது டெண்டை நோக்கி சென்றாள்.

ஆதித்யாவின் நண்பர்கள் நால்வரும் வெளியே வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருக்க மடமடவென டெண்டுக்குள் புகுந்தவள் “ஆதி” என்று அழைத்தபடி வேகமாக முன்னேறியதில் அவன் மீது இடித்து கீழே விழப் போக அவளை பிடித்து நிறுத்தினான் ஆதித்யா.

தன்னைக் காத்தவனுக்கு நன்றி கூட கூறாது யூடியூபில் ஓடிக்கொண்டிருந்த செய்தியைக் காட்டியவள் “இது உன்னோட வேலை தானே?” என்று கேட்க ஆதித்யாவோ உதட்டைப் பிதுக்கி தனது ஆட்காட்டிவிரலால் மேல் நோக்கி காட்டினான். அதாவது எல்லாம் இறைவனின் செயலாம். அதை அப்படியே நம்ப வர்ஷாவின் மனம் ஒப்புக்கொள்ள வேண்டுமே!

வேகமாகத் தலையாட்டி மறுத்தவள் “நோ வே! நீயும் மாறனும் என்னமோ பண்ணிருக்கீங்க… சும்மா கடவுள் மேல பழிய போடாம அப்பிடி என்ன ஸ்மார்ட்டா பண்ணி அந்த வில்லனுக்குச் செக் வச்சிக்கீங்கனு சொல்லுடா” என்று ஆர்வமாக வினவினாள்.

ஆதித்யாவோ “நான் தான் முன்னாடியே சொன்னேனே… கர்மா இஸ் அ பூமராங்… அது தான் சாணக்கியனை இன்னைக்கு இவ்ளோ பெரிய ப்ராப்ளம்ல மாட்டி விட்டிருக்கு” என்றபடி வேறொரு டீசர்ட்டுக்கு மாறினான்.

“நானும் இல்லைனு சொல்லலையே… அந்த கர்மாவோட ஹியூமன் ஃபார்ம் நீ தான்னு சொல்லுறேன்… சும்மா கர்மா குருமானு கதை சொல்லாம நடந்ததை சொல்லு… என்னால கியூரியாசிட்டி தாங்க முடியலைடா” என்று வர்ஷா தூண்டி தூண்டி துருவ

“உனக்கு என் மேல எவ்ளோ நம்பிக்கை ஜி.பி! ஆனா பாரு, அதுக்காக நான் செய்யாத எதையும் செஞ்சதா என்னால சொல்ல முடியாது” என்று அடித்துப் பேசினான் ஆதித்யா.

உடனே வர்ஷாவின் முகம் வாடிவிட்டது.

“ச்சே! அவனை பழிவாங்க நீ தான் எதாச்சும் பண்ணிருப்பேனு எவ்ளோ ஆசையா ஓடிவந்தேன் தெரியுமா?”

“சப்போஸ் நான் தான் இதுக்கு மூலகாரணம்னு சொன்னா நீ என்ன பண்ணுவ?”

வாடிப்போன வர்ஷாவின் முகத்தில் சூரியனின் பிரகாசம்.

“ஃப்ரீபெர்க் திரும்புனதும் என் காசுல உனக்கு ட்ரீட் வைப்பேன்… ரீசண்டா நான் புதுசா கத்துக்கிட்ட கேக் வெரைட்டிய உனக்காக நானே செஞ்சு ஊட்டி விடுவேன்” என்றாள் அவள்.

“நீ அழுது அழுது ட்ரீட் வைக்கவும் வேண்டாம்… தீஞ்சு போன கேக்கை என் தலையில கட்டவும் வேண்டாம்… இண்ட்ரெஸ்டிங்கா ஏதாச்சும் குடுத்தா நான் என்ன பண்ணுனேன்னு சொல்லுறதுக்கு ஃபிப்டி பர்சென்டேஜ் வாய்ப்பிருக்கு” என்றவன் உதட்டைக் குவித்து தனது ஆட்காட்டி விரலால் தொட்டுக் காட்டினான்.

அப்படி என்றால் இவன் தான் சாணக்கியனின் இப்போதைய துயரமான நிலைக்குக் காரணமாக இருக்க வேண்டும். அதை வாயால் சொன்னால் என்னவாம்! கழுத்தைச் சுற்றி மூக்கால் தொடுவதையே வழக்கமாக வைத்திருக்கும் தனது காதலனின் குறும்புத்தனத்தை வழக்கம் போல ரசித்தவள் கூடவே அவன் காட்டிய சைகைக்கான அர்த்தமும் புரிந்தாலும் தன்னோடு விளையாடும் அவனுக்குச் சற்று போக்கு காட்ட எண்ணினாள்.

கண்களில் மையல் பொங்க அவனருகே வந்தவள் “இன்ட்ரெஸ்டிங்காவா? குடுத்துட்டா போச்சு” என்றபடி அவனது முகத்தை நெருங்க

“இரு இரு…. கண்ணை மூடிக்கிறேன்” என்றவன் மெய்யாகவே கண்களை மூடிக்கொண்டான்.

“ஏன்டா கண்ணை மூடுற?”

“என்ன தான் ஜெர்மனில கொஞ்சநாள் இருந்தாலும் நானும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு உள்ள ஒரு தமிழ்ப்பையன்மா… கொஞ்சம் வெக்கமா இருக்குல்ல”

“அஹான்! இப்ப குடுக்கப்போற விசயத்துல உன் வெக்கமெல்லாம் ஃப்ளைட் பிடிச்சு இந்தியாவுக்கே போயிடும் பாரேன்” என்றவள் அவனது கன்னத்தில் சற்று பலமாகவே அடித்து வைக்க

“அடியே” என்றபடி கண்களைத் திறந்தான் ஆதித்யா.

வர்ஷா அவன் கண்களைத் திறந்த அடுத்த நொடியில் அவனது முகத்தைத் தன்னருகே இழுத்து இதழோடு இதழ் பொருத்த அவள் ஆரம்பித்ததை இனிதே தொடர்ந்தான் ஆதித்யா. தங்களது மகிழ்ச்சிக்குத் தடையாக இருந்தவனின் வீழ்ச்சி ஆரம்பமான மகிழ்ச்சியை அந்தக் காதல் உள்ளங்கள் இதழ் முத்தம் வாயிலாக பரிமாறிக்கொண்டனர்.