❣️அத்தியாயம் 12❣️

“வேடன் விரிச்ச வலையில இருந்து தப்பிச்ச புறாவுக்கு எவ்ளோ நிம்மதி இருக்கும்? தப்பிப்போமானு இல்லையானு தவிச்சு, கால் விரல் எல்லாம் வலைக்குள்ள சிக்கி, வலிக்க வலிக்க இறக்கைய அடிச்சும் தப்பிச்சு பறக்க முடியாம மாட்டிக்கிட்டு தவிச்சப்ப ஒரு கார்டியன் ஏஞ்சல் வந்து வலைய பிய்ச்சு காப்பாத்தி வானத்துல பறக்க விட்டதும் அது சிறகடிச்சு பறக்கும் பாருங்க, அந்தச் சமயத்துல அந்தப் புறாக்கு வேடன் இருக்குற காட்டை விட்டு தப்பிச்சு ஓடணும்ங்கிறது மட்டும் தான் அதோட மைண்ட்ல இருக்கும்… அதே மைண்ட்செட் தான் இப்ப எனக்கும்… சாணக்கியன் என்னை சுத்தி போட்டு வச்சிருக்குற வியூகத்துல இருந்து தப்பிச்சு போகணும்னு மட்டும் தான் தோணுது… ஆனா எக்ஸ்ட்ராவா அவன் என் ஃபேமிலிய டிஸ்டர்ப் பண்ணுவானோங்கிற சின்ன பயமும் இருக்கு… அதுக்கும் விடிவுகாலமா வந்தவர் தான் அஜித் சித்தப்பா… அவர் இருக்குறதால இப்ப நான் என் ஃபேமிலிய பத்தி டென்சன் இல்லாம எஸ்கேப் ஆகிடலாம்”

                                   -கிளிசரின் பாட்டிலின் பொன்மொழிகள்….

வர்ஷா தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டாள். திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் சாணக்கியனே பார்த்துக் கொண்டான். வி.ஐ.பி இல்லத்திருமணம் என்பதால் அதற்கேற்றாற்போல தரம் இருக்க வேண்டுமென்பதால் தாங்களே திருமணத்தை நடத்திக் கொள்வதாகக் கூறியவனின் பேச்சில் மறைமுகமாக ஒளிந்திருந்தது என்னவோ உங்களால் என் தரத்திற்கு எதையும் செய்ய இயலாது என்பதே!

ஆனால் இதெல்லாம் விக்னேஷிற்கும் யோகாவிற்கும் புரியவேண்டுமே! அவர்கள் மகளின் நல்வாழ்க்கை குறித்த கனவுகளுடன் இருக்க அவர்களின் தோழமைகளும் தாங்கள் பார்த்து வளர்ந்த பெண் இனி அரசி போல வாழப் போகிறாள் என்று உற்சாகத்தில் திருமணம் சம்பந்தப்பட்ட வேலைகளை அவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

அதில் விதிவிலக்கானவர் ஜெயசந்திரன் மட்டுமே. அவருக்கு சாணக்கியனின் சுயரூபம் ஜெயஸ்ரீயால் ஏற்கெனவே தெரிந்துவிட்டதால் வர்ஷா மீது அவன் அக்கறை உள்ளதாக காட்டிக்கொண்டது அனைத்துமே ‘டாக்சிக் மஸ்குலானிட்டி’யாக மட்டுமே தோற்றமளித்தது அவருக்கு.

அவரோ அவரது தோழமைகளோ தங்கள் வாழ்க்கைத்துணைகளைக் கட்டுப்படுத்துபவர்கள் அல்ல. திருமணத்திற்கு பிறகு கீதாவும் யோகாவும் தங்களது வேலையைத் தொடர்வதாகச் சொன்ன போதும், ரியாவும் ஸ்ரீதேவியும் இல்லத்தரசிகளாக மாறி வேலையை விட்ட போதும் முடிவெடுப்பதற்கான சுதந்திரம் முழுவதும் பெண்மணிகள் வசம் தான் இருந்தது.

ஆனால் தங்களுக்கு பிந்தைய தலைமுறையைச் சேர்ந்தவனான சாணக்கியனோ வாழ்க்கைத்துணையை சக்கரவியூகத்தில் அடைத்தல்லவா வாழ எண்ணுகிறான்! இம்மாதிரி கட்டுப்பாடுகளால் காதல் முகிழ்க்காது, வெறுப்பு தான் கொளுந்து விட்டு எரியும் என்பதை அவனது மடத்தனமான மூளை புரிந்து கொள்வது கடினம் என்பதை சிற்சில நிகழ்வுகளில் கண்கூடாக பார்த்துவிட்டார் ஜெயசந்திரன்.

முதல் சம்பவம் புடவை எடுக்கும் போது நடந்தேறியது.

வர்ஷா தனக்குப் பிடித்ததை போல மென்மையான பட்டுகளை வாங்கலாம் என்று அவற்றை ஆசையாகத் தடவிக்கொடுக்க “ஹவ் இஸ் இட் ஏஞ்சல்?” என்ற கேள்வியோடு அவளுக்கென பிரத்தியேகமாக தங்க ஜரிகைகளுடன் நெய்ய சொன்ன பட்டுப்புடவையோடு வந்து நின்றான் சாணக்கியன்.

வர்ஷாவோடு இளையவர்கள் அனைவரும் திகைக்கும் போதே ஜெயசந்திரன் குறுக்கிட்டார்.

“இது ஹெவி வெயிட் சாம்பியன்ஸ் உடுத்துனா சரியா இருக்கும்… எங்க பொண்ணு வெயிட்டுக்கு இது ரொம்ப பாரமா இருக்குமேப்பா”

சாணக்கியன் வழக்கமான அலட்சியப்புன்னகையுடன் “இப்ப வர்ஷா பார்த்துட்டிருக்குற புடவை எல்லாம் எங்க ஸ்டாஃப்ஸ், சர்வெண்ட்ஸ் உடுத்துற ஸ்டாண்டர்ட்ல தான் இருக்கு… என் ஏஞ்சலுக்கு தங்கத்தையும் வைரத்தையும் வச்சு இழைக்கணும்னு ஆசைப்படுறேன்… என்ன சொல்லுறிங்க அங்கிள்?” என்று விக்னேஷையும் வருணையும் துணைக்கு அழைக்க அவர்களுக்கோ வாயெல்லாம் பல்.

ஆனால் எளிமைவிரும்பியான வர்ஷாவுக்கு அந்தப் புடவை சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதை பற்றி அவன் கவலைப்பட்டால் தானே!

ஆபரணங்கள் வாங்கும் போதும் இதே தான் நடந்தது. சாணக்கியன் வைரத்திலும் விலையுயர்ந்த ரத்தினங்களிலும் நகைகளை குவிக்க அதில் யோகாவுக்குப் பெருமை வேறு.

“எல்லாரும் மகளை பிரின்சஸா வளர்த்து கிங் மாதிரி ஒருத்தனுக்கு மேரேஜ் பண்ணி வச்சு அவ குயினாட்டம் வாழுறதை பாக்க தான் ஆசைப்படுவாங்க… அதே ஆசை தான் எனக்கும்… என் மகளுக்கு நிஜ ராஜாவே புருசனா வந்திருக்கான்”

ஜெயசந்திரனோ மனம் தாங்காது “நம்ம மாப்பிள்ளை கொஞ்சம் அதிகமா வர்ஷாவோட விருப்புவெறுப்புல தலையிடுறதா உனக்குத் தோணாலையாக்கா?” என்று கேட்க

“நம்ம ஜெனரேஷன் மாதிரி இப்ப உள்ள பசங்க இல்ல ஜே.சி… அவங்களுக்கு உரிமையுணர்வு அதிகமா இருக்கு” என்றார் ரியா.

கீதாவோ “ஐ திங் சோ… என்னோட லைஃப் பார்ட்னருக்கு எல்லாமே பெஸ்டா கிடைக்கணுங்கிற இண்ட்ரெஸ்ட் அவரோட கண்ணுல தெரியுது… கொஞ்சம் க்ளிங்கி டைப் தான்… ஆனா நம்ம பொண்ணுக்கு புருசனை முந்தானைல முடிஞ்சு வச்சுக்குற வேலை மிச்சம்” என்று கூறி விட யோகாவுக்கு எப்படியாவது சாணக்கியனின் பிடிவாதமும் ஆணவமும் கலந்த ஆதிக்க மனப்பான்மையை விளக்கிவிட எண்ணிய ஜெயசந்திரனின் எண்ணத்தில் ரியாவும் கீதாவும் இவ்வாறாக ஒரு லாரி மண்ணை அள்ளி கொட்டி மூடினார்கள்.

நிச்சயதார்த்தம் கோலாகலமாக அரங்கேற அன்று கூட ஆதித்யாவிடம் பொருமித் தீர்த்தார்.

“வர்ஷா கண்ணுல இருக்குற கலக்கம் யாருக்குமே புரியலையேடா”

“அவங்க கண்ணை தான் மாஸ்க் போட்டு ஒருத்தன் மறைச்சு வச்சிருக்கானே” இது ஆதித்யாவின் பதில்.

விஷ்ணு அதை கேட்டுவிட்டு “இவ்ளோ நாள் நம்ம கூடவே இருந்துட்டா… கல்யாணம்னு சொன்னதும் இயல்பா வர்ற கலக்கம் தான்” என்று காரணம் கூறினான்.

ஷிவானியோ அழகழகான உடைகளுடன் வர்ஷாவோடு சேர்ந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதில் ஆழ்ந்து போனாள்.

ஆனால் ஜெயஸ்ரீ மட்டும் ஜெயசந்திரன் ஆதித்யாவுடன் சேர்ந்து அஜித்தும் அனுராதாவும் எப்போது வருவார்கள் என்று காத்திருந்தாள்.

அவர்கள் வந்ததும் நிச்சயதார்த்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இந்த ஐவரணி மட்டும் தனியே ஒதுங்கி பேச ஆரம்பித்தனர்.

“எல்லா வேலையும் கரெக்டா நடக்குதுல்ல மாமா?” – ஆதித்யா.

“டோண்ட் ஒரி ஆதி… விசா கிடைச்சிடுச்சுல்ல, ஃப்ளைட் டிக்கெட்டும் புக் பண்ணியாச்சு… இவங்க அரேஞ்ச் பண்ணிருக்குற மண்டபத்தை அண்ணாவோட போய் பார்த்தப்பவே நம்ம ப்ளானுக்கு ஏத்த மாதிரி இடத்தையெல்லாம் மார்க் பண்ணிட்டு வந்துட்டேன்” என்றார் அஜித்.

“ஆனா கல்யாணத்தப்ப வர்ஷா கூட ஷிவானி இருப்பாளே” இது ஜெயஸ்ரீயின் கவலை.

“அதுக்கு நான் இருக்குறேன்… ஏதாவது பேசி அவளோட கவனத்தை திருப்பிடுறேன்” என்று அனுராதா உறுதியளித்தார்.

“லேடீசோட கவனத்தை அந்தப் பக்கம் வராம நான் பார்த்துக்குறேன்” என்று ஜெயசந்திரன் கூற ஆதித்யா நிம்மதி பெருமூச்சு விட்டான்.

“ஃபைனலி இந்தக் கல்யாணம் நின்னுடும்ங்கிற நம்பிக்கை வந்துடுச்சு எனக்கு… இந்தப் ப்ளான் சொதப்புச்சுனா ப்ளான் பி கூட இருக்கு”

அவன் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கையில் வருண் அதை கவனித்துவிட்டார். கூடவே நிச்சயம் நிகழும் போது மோதிரம் மாற்றும் நிகழ்வில் சாணக்கியன் வர்ஷாவின் கரத்தைப் பற்றிய போது ஆதித்யாவின் கரம் முஷ்டியாக இறுகுவதையும் கவனித்தார்.

ஆனால் அவர் காணத் தவறியது வர்ஷா உணர்ச்சியற்ற முகத்துடன் விரலை நீட்டும் காட்சியைத் தான். அவளது விரலுக்குள் மோதிரம் செல்லும் போதே கண்கள் ஆதித்யாவைத் தேடியது.

அலை பாய்ந்த கண்கள் ஐவரணியிடம் வந்த போது அவர்களின் ஆறுதல் பார்வையில் இளைப்பாற ஆதித்யாவோ நான் இருக்கிறேன் உனக்கு என சைகை காட்டினான். இது வர்ஷாவுக்கு ஆறுதலையும் வருணுக்குத் தலைவலியையும் கொடுத்தது.

என்ன நடக்கிறது இவர்கள் இருவருக்குள்ளும் என மண்டையை உடைத்துக் கொண்டார் அவர். யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் பயம்!

ஒரு பக்கம் பவானி கீர்த்தியையும் ஆதித்யாவையும் வாழ்க்கையில் இணைக்கும் முயற்சி குறித்த பேச்சை ஆரம்பித்திருக்க அது வேறு இதோடு கலந்து வருணை தொந்தரவு செய்தது.

ஆனால் அவரது மைந்தனோ கீழே நின்றபடி நிச்சயமேடையில் வர்ஷாவிடம் விரலை நீட்டிய சாணக்கியனை துவேசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் மோதிரம் போடத் தயங்கவும் “நீ தயங்குறதால மட்டும் ஆரம்பிச்ச எதுவும் பாஸ் ஆகி நிக்கப் போறதில்ல ஏஞ்சல்… கொஞ்சம் யோசி, இப்ப மட்டும் ரிங்கை போட்டுவிடலனா அங்கங்க நான் நிறுத்தி வச்சிருக்குற பவுன்சர்ஸ் பாடிகார்ட்ஸ் உன் ஃபேமிலி அண்ட் ஃப்ரெண்ட்ஷை ஒன்னுமில்லாம ஆக்குறது எனக்குக் கஷ்டமே இல்ல ஏஞ்சல்” என்று கூறுவது கூட அவனது உதட்டசைவை கவனித்தவனுக்குப் புரிந்தது.

ராஸ்கல்! மிரட்டியே காரியம் சாதிக்கப் பார்க்கிறாயா? இதற்காக நீ அனுபவிப்பாயடா என கறுவிக்கொண்டவன் அதற்கு வர்ஷா பகர்ந்த மறுமொழி என்னவென கவனித்தான்.

முகம் இறுக “யூ ஆர் அ மான்ஸ்டர்” என்று கூறியவள் மடமடவென மோதிரத்தை அவனது விரலில் கடனே என மாட்டிவிட்டு புகைப்படத்திற்காக புன்னகைத்தாள்.

எப்படியோ நிச்சயம் முடிந்து அனைவரும் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கியிருக்க வருண் மட்டும் ஐவரணியைத் தனியே அழைத்து என்ன திட்டமிடுகிறீர்கள் என வினவ ஜெயசந்திரன் சமாளிக்க முயன்றார்.

ஆனால் வருணின் கிடுக்கிடுப்பிடி கேள்விகளை ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் சமாளிக்க முடியாது விழித்தார். அப்போது ஆதித்யா தான் துணிச்சலாக பேசினான்.

“எங்களுக்கு இந்த மேரேஜ்ல இஷ்டமில்ல டாடி… இவன் ஹீரோ இல்ல, வில்லன்… கண்டினியூவா இவன் நம்ம எல்லாரையும் அவனோட ஸ்டாண்டர்ட் அண்ட் ஸ்டேட்டசை காட்டி இன்சல்ட் பண்ணுறது உங்களுக்குப் புரியலையா? இவன் கூட வர்ஷா எப்பிடி சந்தோசமா இருப்பா? இந்தக் கல்யாணம் நடக்குறதுக்கு நான் விடமாட்டேன்”

அடுத்த நொடி அவனது கன்னம் சுரீரென வலியெடுத்தது. மற்ற நால்வரும் பேச இயலாமல் சிலையாய் நிற்க வருணோ ருத்ராவதாரம் எடுக்காத குறையாக கோபாவேசத்துடன் ஆதித்யாவை அறைந்திருந்தார்.

“இனாஃப் ஆதி… அறிவு இருக்காடா உனக்கு? நிச்சயம் வரைக்கும் வந்த கல்யாணத்த நிறுத்துவேன்னு என் கிட்டவே சொல்லுற… பைத்தியமா பிடிச்சிருக்கு உனக்கு? அந்த மாப்பிள்ளை பையனுக்கு என்னடா குறை? கொஞ்சம் அதிகமா வர்ஷா மேல உரிமை எடுத்துக்குறான்… கல்யாணம் ஆகுற வரைக்கும் எல்லா ஆம்பளையோட மனநிலையும் இப்பிடி தான் இருக்கும்… மனசுக்குப் பிடிச்சவ தூரத்துல இருக்குறப்ப அவ என்னை மட்டுமே நினைக்கணும், என் கிட்ட மட்டுமே பேசணும், நான் சொல்லுறதை மட்டுமே கேக்கணும்னு ஒவ்வொரு ஆம்பளையும் நினைப்பான்டா… அதுக்கு உங்கப்பன் நானே விதிவிலக்கு இல்ல… கீதுக்கு எக்சாம் வந்தப்ப அவ என் கூட பேசலைங்கிற காரணமே எங்க பிரிவுக்குக் காரணம் ஆச்சு தெரியுமா? ஏன்னா அப்ப எனக்கு அவ மேல இருந்த பொசசிவ்னெஸ் அப்பிடி… அதை உரிமைவெறினு கூட வச்சுக்க… இது இயல்பானது… இதுக்காக கல்யாணத்த நிறுத்துவியா? முதல்ல வர்ஷா வாழ்க்கைய முடிவு பண்ணுற அதிகாரத்தை உனக்கு யாருடா குடுத்தது?

நல்லா கேட்டுக்க, உன்னை விட எனக்கு விக்கி முக்கியம்… நீங்கல்லா பிறக்குறதுக்கு முன்னாடியே உருவான ஃப்ரெண்ட்ஷிப் இது… அவனுக்கு ஒரு அவமானம்னா அது எனக்கும் அவமானம் தான்… இன்னொரு தடவை கல்யாணத்தை நிறுத்துவேன்னு சொன்னேனு வையேன், சொந்த மகன்னு கூட பாக்க மாட்டேன்! ஜாக்கிரதை!”

உறுமித் தீர்த்தவர் மற்ற நால்வரையும் எரிக்கும் பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தார்.

ஆதித்யா அறை வாங்கிய கன்னத்தோடு நிச்சயதார்த்தம் நடைபெற்ற மேடையை நோக்கினான்.

இந்த அறைக்காகவேனும் இத்திருமணத்தை நிறுத்தியே தீருவேன் என்ற பிடிவாதம் அவனுக்குள் தீப்பிடித்தது.

திருமணத்தன்று காலை வரை குடும்பத்தினரிடம் தங்களது பிடித்தமின்மையைக் காட்டிக்கொள்ளாது ஐவரும் திரைமறைவில் திட்டத்தைச் செயல்படுத்தினர்.

சரியாக முகூர்த்த நேரத்திற்கு முன்னர் வருண் வர்ஷாவுடன் மண்டபத்தை விட்டுக் கிளம்ப தயாராக அஜித்தோ சொன்னது போல தனது நம்பிக்கையான ஓட்டுனரிடம் அவர்களை விமானநிலையத்தில் சேர்ப்பிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.

அனுராதா சொன்னது போல ஷிவானியை அழைத்துக்கொண்டு அழகுக்கலை நிபுணருடன் ஜெயஸ்ரீ சென்றுவிட அவளோடு மணமகள் அறையை விட்டு வெளியேறிய வருண் இதோ ஜெர்மனி செல்வதற்கான விமானத்திலும் வர்ஷாவோடு ஏறிவிட்டான்.

திருமணத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் மணமகள் வர்ஷா அந்நாள் வரை அவளது நண்பனாக அறியப்பட்ட ஆதித்யாவோடு ஓடிப்போய் விட்டாள் என்றே எண்ணிக்கொள்ள வருணின் இதயத்தில் இடி விழுந்தது.

நண்பன் விக்னேஷும் யோகாவும் கண்ணீருடன் நிற்கும் காட்சியைக் கண்டவருக்கு மைந்தன் மீது வந்த கோபத்திற்கு அளவே இல்லை. ரியாவும் கீதாவும் என்னென்னவோ ஆறுதல் கூறியும் மைதிலியின் விஷ வார்த்தைகள் விக்னேஷையும் யோகாவையும் இன்னுமே தலை குனிய தான் வைத்தது.

“எங்களை மணமேடை வரைக்கும் அழைச்சிட்டு வந்து ஏமாத்துனதுக்காக உங்க குடும்பம் மேல மானநஷ்ட வழக்கு போடணும்… உங்களை கோர்ட்டுக்கு இழுத்து அசிங்கப்படுத்தலைனா என் பேர் மைதிலி இல்ல”

இப்போது அஜித்தும் அனுராதாவும் அவரது வாயை அடைக்க பரிந்து கொண்டு வந்தனர். அவினாஷும் நண்பனின் சார்பில் பேச வினயனும் மைதிலியும் கொதிக்கத் தான் செய்தனர்.

அனைத்தையும் கவனித்தபடி ஆதித்யாவின் திட்டம் எதையும் அறியாத சாணக்கியன் தனது முகத்தில் கரியைப் பூசிவிட்டுச் சென்றவர்களை சும்மாவிடப் போவதில்லை என மனதிற்குள் கறுவிக்கொண்டான்.

விக்னேஷோ மகளின் செய்கைக்காக வினயனிடம் மன்னிப்பு வேண்ட அவரோ தாம்தூமென குதிக்க ஆரம்பித்தார்.

“எங்க தகுதிக்குக் கொஞ்சம் கூட பொருத்தமில்லாத இடத்துல பொண்ணு எடுக்க நாங்க சம்மதிச்சதே என் மகன் சாணக்கியனுக்காக தான்… அவன் உங்க பொண்ணு மேல உயிரையே வச்சிருந்தான்… அவனை விட்டுட்டு இன்னும் படிப்பை கூட முடிக்காத உங்க ஃப்ரெண்ட் பையன் கூட அவ ஓடிருக்கா… அவ அவனைத் தான் லவ் பண்ணுறானா எதுக்கு எங்க சம்பந்தத்துக்கு நீங்க ஒத்துக்கிட்டிங்க?”

“எல்லாம் பணத்தாசை தான்… வசதியான வீட்டுச்சம்பந்தம் வந்ததும் வளைச்சுப் போட நினைச்சிருக்காங்க”

மைதிலி தனது பிடித்தமின்மையைத் தகுந்த நேரத்தில் காட்டிவிட பிரச்சனை வருண் குடும்பத்தின் புறம் திரும்பவும் விக்னேஷ் சுதாரித்தார்.

“நடந்தது என்னனு தெரியாம ரெண்டு பசங்க மேலயும் குத்தம் சொல்லாதிங்க வினயன் சார்”

அப்போது தான் சாணக்கியனின் உதவியாளன் மொபைலுடன் ஓடிவந்தான்.

அதை சாணக்கியனிடம் காட்டி “சார் மேடமும் அவங்க ஃப்ரெண்டும் ஏர்ப்போர்ட்ல இருக்காங்க பாருங்க” என்று காட்ட அதில் ஆதித்யாவின் வ்ளாக் வீடியோ ஓடிக்கொண்டிருந்தது.

“ஹாய் படீஸ்! இதோ என்னோட இந்தியன் ட்ரிப் முடிஞ்சாச்சு… இந்த ட்ரிப் வ்ளாக்ல உங்களுக்கு நான் ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்… அது என்னனா…” என்று நிறுத்திய ஆதித்யா அவளைத் தோளோடு அணைத்தவன் “யெஸ், இவங்க தான் அந்த சர்ப்ரைஸ்… மீட் மை ஒய்ப் மிசஸ் வர்ஷா ஆதித்யா” என்றான் புன்னகையோடு.

சாணக்கியனுக்குள் எரிமலை வெடித்தது. அடுத்த சில நிமிடங்களில் அவனோடு கரம் கோர்த்து விமானம் ஏறப்போகும் வர்ஷாவின் கழுத்தில் மாங்கல்யம் கோர்த்த மஞ்சள் கயிறு மின்னி அவனது கோபத்தை ஆயிரம் மடங்காக்கிவிட

“வாங்கப்பா போகலாம்… இவங்களை என்ன பண்ணணும்னு எனக்குத் தெரியும்” என்று கர்ஜித்துவிட்டு பெற்றோருடன் கிளம்பினான் அவன். வர்ஷா மற்றும் ஆதித்யாவின் குடும்பத்தினரோ ஸ்தம்பித்துப் போய் நிற்க அதே நேரம் வர்ஷாவும் ஆதித்யாவும் விமானத்தில் ஜெர்மனி நோக்கி பறந்து கொண்டிருந்தனர் நிம்மதியாக.