☔ மழை 42 ☔

லேண்ட்ஸ்கேப் போட்டோகிராபி- நீங்கள் போட்டோகிராபிக்கு புதியவர் எனில் இது தான் உங்களின் முதல் படி.
உங்கள் கேமராவின் செட்டிங்குகளை ஆராய்ந்து பழகி பார்க்க ஒரு நல்ல வாய்ப்பை அளிக்கிறது. சரியான லைட்டிங் கிடைக்கும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியிருப்பதால் உங்களுக்கு பொறுமையை கற்று தருகிறது, அதிகாலை அல்லது மாலை வேளைகள் இந்த வகை போட்டோகிராபிக்கு ஏற்றது. நீங்கள் லேண்ட் ஸ்கேப் எடுக்க ஊட்டி கொடைக்கானல் போன்ற எழில் மிகு இடங்களுக்கு தான் போக வேண்டும் என அவசியமில்லை. உங்கள் ஊரில் உங்களுக்கு பழக்கமான இடத்திலிருந்து நீங்கள் தொடங்கலாம்.

                                                                                            –By Irfan Malangusha in irfanclicks.com

ஜஸ்டிஷ் டுடே…

கான்பரஸ் ஹாலில் கூடியிருந்தனர் விஷ்ணுபிரகாஷும் அவனது குழுவினரும். அனைவரின் முகத்திலும் நிம்மதியும் நம்பிக்கையும் சுடர் விட்டது. முக்தி ஃபவுண்டேசன் பற்றிய அனைத்து தகவல்களும் இப்போது அவர்களின் விரல் நுனியில்.

யசோதராவையும் ரகுவையும் விஷ்ணுபிரகாஷ் பார்த்த பார்வையில் மெச்சுதல் இருந்தது. எத்தனை சவால்களைச் சமாளித்து அனைத்து காரியங்களையும் இரகசியமாகச் செய்து முடித்திருக்கின்றனர் என்ற பிரமிப்பு அவர்களது சக பணியாளர் நண்பர்களுக்கு.

இதில் சாருலதா இந்திரஜித்தின் உதவி தான் மிகப்பெரியது என்று யசோதராவும் ரகுவும் தங்களுக்குக் கிடைத்த பாராட்டை அவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

இனி கிடைத்த தகவல்களை தொகுத்து அதை ரிப்போர்ட்டாக்குவது, அதை நிகழ்ச்சிக்கு ஏற்ற ஸ்கிரிப்டாக மாற்றுவது எல்லாம் புரொடக்சன் குழுவினரும் எடிட்டிங் டீமும் சேர்ந்து செய்ய வேண்டிய வேலை.

தங்களது கடமையைச் செவ்வனே ஆற்றிவிட்ட யசோதராவும் ரகுவும் ஸ்ராவணி மற்றும் மேனகாவுடன் வழக்கமாக அவர்கள் அனைவரும் அரட்டை கச்சேரி நடத்தும் கஃபடேரியாவுக்குக் கிளம்பினர்.

ஆளுக்கொரு காபியை ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்தவர்கள் ரகுவின் முக்தி ஃபவுண்டேசன் அனுபவத்தைக் கேட்க அவனும் நகைச்சுவை ததும்ப கூற ஆரம்பித்தான்.

“டெய்லி மூனு மணி நேரம் யோகா ப்ராக்டிஷ்னு சொல்லுவாங்க… ஆனா அது எனக்கு ஸ்லீப்பிங் டைம்… அங்க போனதுல யோகா கத்துக்கிட்டேனோ இல்லையோ உக்காந்துட்டே தூங்குவது எப்படினு கத்துக்கிட்டேன்”

மூன்று பெண்களும் சிரிக்க காபியும் வந்து சேர்ந்தது. நால்வரும் கோப்பையை எடுத்துக்கொள்ள ஸ்ராவணி மட்டும் யோசனையில் மூழ்க ஆரம்பித்தாள். அவளை முழங்கையால் இடித்த மேனகா என்னவென வினவ

“எல்லாரும் அந்த ருத்ராஜி பண்ணுற தப்பை எக்போஸ் பண்ணுறதுக்கு எவ்ளோ ரிஸ்க் எடுக்குறோம்? ஆனா அபி ஏன் இந்த விசயத்துல இவ்ளோ அலட்சியமா இருக்குறான்னு எனக்குப் புரியல… ஹைகோர்ட்ல போட்ட கேஸை மதிக்கல… அப்பிடி என்ன அங்க போயே தீரணும்னு கட்டாயம்?” என வாய் விட்டுப் புலம்பினாள் அவள்.

யசோதராவுக்கு அவளது நிலமை புரிந்தது. அவளது கணவனும் ருத்ராஜியை கண்மூடித்தனமாக ஆதரிப்பவன் தானே! ரகு ஸ்ராவணிக்கு ஆறுதலாகப் பேசினான்.

“சீக்கிரமே அபி சாருக்கு எல்லாமே தெரியவரும் வனி… அப்புறம் அவரே அந்த முக்தி ஃபவுண்டேசன் மேல ஆக்சன் எடுக்க ஆர்டர் போடுவார்” என்றான்.

“இவ்ளோ நாளா கண்டுக்காதவன் இனிமே தான் ஆர்டர் போடப் போறானாக்கும்? எனக்கு நம்பிக்கை இல்ல ரகு… ஆனா ஒன்னு, முக்தி ஃபவுண்டேசன் பத்தி நம்ம பண்ணப் போற ரியாலிட்டி செக் ஷோக்கு என்ன எதிர்ப்பு வந்தாலும் கண்டுக்காம புரோகிராமை ஃபினிஷ் பண்ணிடனும்… இல்லனா நம்ம ஏதோ டி.ஆர்.பிக்காக கான்ட்ரோவெர்சியா புரோகிராம் பண்ணுறோம்னு அவங்க ஐ.டி டீம் ஃபேக் நியூஸ் பரப்பிடுவாங்க” என்றாள் ஸ்ராவணி.

அவள் கூறுவதிலும் அர்த்தமுள்ளது. இப்போதெல்லாம் அரசியல் பிரமுகர்களைப் பற்றியோ பிரபலங்களைப் பற்றியோ  ஏதேனும் சர்ச்சைக்குரிய உண்மைச்செய்திகள் வெளிவருமாயின் அச்செய்தியின் உண்மைத்தன்மையை நீர்க்கச் செய்ய அவர்களின் ஐ.டி டீமும், பி.ஆர் டீமும் சமூக வலைதளங்களில் தீயாய் வேலை செய்வது வாடிக்கை ஆகிவிட்டதே!

எனவே முக்தியைப் பற்றிய உண்மைகளை ஆதாரத்துடன் வெளிக்கொணரும் போது அதே குறுக்குவேலைகள் நடைபெற வாய்ப்புள்ளது. அதை எதிர்கொள்ள தங்கள் நிறுவனம் தயாராய் இருக்க வேண்டும் என்பதே ஸ்ராவணியின் கருத்து.

மற்ற மூவரும் இக்கருத்தில் அவளுடன் உடன்பட்டனர். எனவே அடுத்த சில நிமிடங்களில் விஷ்ணுபிரகாஷிடம் அதைப் பற்றி கூறியும் விட்டனர். அவனும் அதை மூளையின் ஒரு பகுதியில் போட்டுவைத்துக் கொண்டான்.

அதன் பின்னர் ஜஸ்டிஷ் டுடேவின் ரியாலிட்டி செக் நிகழ்ச்சிக்காக விஷ்ணுபிரகாஷும் அவனது குழுவினரும் தயாராயினர். தகவல்களை தொகுப்பது, அதை ஸ்கிரிப்டாக வடிவமைப்பது, கலந்துரையாடலுக்கு அழைக்க வேண்டிய முக்கிய நபர்களின் பட்டியல் தயாரிப்பது, விளம்பரதாரர்கள் பட்டியல் என அனைத்து வேலைகளும் சிறப்பாக ஆரம்பமானது.

***********

சவி வில்லா…

மதிய நேர வெயிலின் கடுமை என்னவென அறியாமல் காத்த கார் ஏ.சியின் தயவால் தப்பித்த சித்தார்த் அதை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு பங்களாவிற்குள் நுழைந்தான்.

சவிதாவும் நாராயணமூர்த்தியும் ஏதோ திரையுலக நிகழ்வுக்காக வெளியே சென்றிருக்க பணியாட்கள் மட்டும் அவரவர் வேலையைப் பார்த்தபடி இருந்தனர்.

சித்தார்த் தனது அறையை நோக்கி முன்னேறியவன் இந்திரஜித் எங்கேயோ கிளம்புவதைக் கவனித்து செல்பவனை வழிமறித்தான்.

“உன்னோட சர்க்யூட்ல அடுத்த ரேஸ் இன்னும் ஒரு மாசத்துல ஸ்டார்ட் ஆகப்போகுதுனு கேள்விப்பட்டேன்… நீ அதுக்கு பிசிக்கலாவும் மென்டலாவும் தயாராக வேண்டாமா ஜித்து?” என்றபடி தம்பியின் புஜத்தை அழுத்திக் கேட்டான் அவன்.

“ஐ அம் பிசிக்கலி ஃபிட் அண்ணா… பட் மெண்டலி கொஞ்சம் டிஸ்டர்பா இருக்குறது என்னவோ உண்மை… சீக்கிரம் அதையும் சரி பண்ணிடுவேன்” என்றான் இளையவன்.

சித்தார்த் கண்களைச் சுருக்கி இந்திரஜித்தை குறுகுறுவென பார்த்துவிட்டு “என்னடா காதல்ல விழுந்திட்டியா?” என்று கேட்க அவனோ பதிலளிக்காது சன்னமாய் புன்னகைத்தான்.

“சிரிக்காம பதிலை சொல்லுடா… யார் அந்தப் பொண்ணு?”

“அண்ணா இது லவ்வானு நான் இன்னும் கன்ஃபார்ம் பண்ணல… அதுக்குள்ள பொண்ணு பேரை சொல்லச் சொன்னா நியாயமா?”

“நீ உன்னோட மெண்டல் டிஸ்டர்பன்சுக்குக் காரணமான பொண்ணு யார்னு சொல்லு… உனக்கு வந்திருக்கிறது லவ்வா இல்லயானு நான் சொல்லுறேன்”

இந்திரஜித் ஒரு கணம் யோசித்தவன் “சாரு” என்றான் மென்மையாக. அந்தப் பெயரைக் கேட்டதும் சித்தார்த்தின் முகம் பளிச்சிட்டது. என்றாவது ஒரு நாள் இளைய சகோதரன் சாருலதாவைப் பற்றி தன்னிடம் பேசுவான் என்று அவன் எதிர்பார்த்தது தான்.

இந்திரஜித்தின் தோளில் கைபோட்டவன் “அப்போ டெஃபனைட்டா லவ் தான்… எனக்கு எப்பிடி தெரியும்னு கேக்காத… உன்னோட ஃப்ரெண்ட் சர்க்கிள்ல இருக்குற மத்த கேர்ள்ஸ் கூட நீ பழகுறதுக்கும் சாரு கூட பழகுறதுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியும் ஜித்து… ரொம்ப டைம் வேஸ்ட் பண்ணாத… உன் மனசுல இருக்குறத அவ கிட்ட சொல்லிடு… அவளுக்கு யோசிக்க டைம் குடு… நேரம் காலம் கூடி வந்தா தானா லவ் செட் ஆகப்போகுது” என்றான் சித்தார்த்.

இந்திரஜித்தோ தமையனை திகைப்புடன் பார்த்தவன் “நீங்க எப்போ இருந்து லவ் குருவா மாறுனீங்கண்ணா? நான் இங்க இல்லாதப்ப என்னமோ நடந்திருக்கு… உங்க பிஹேவியர் பழையபடி மாறுனதை நான் கவனிச்சேன்… என்ன நடந்துச்சு? உண்மைய சொல்லுங்க” என்றபடி அவனைப் போலவே குறுகுறுவென பார்த்தான்.

சித்தார்த் அவன் தோளிலிருந்து கையை எடுத்தவன் வெட்கச்சிரிப்புடன் சிகையைக் கோதிக்கொள்ளவும் இந்திரஜித்துக்கு ஏனோ யசோதரா நினைவுக்கு வந்தாள். இவ்வுலகில் சித்தார்த்தை வெட்கம் கொள்ள வைக்கும் வல்லமை அவள் ஒருத்திக்கு மட்டுமே உள்ளது என்பதை அறியாதவனா இந்திரஜித்!

“ஐயோ வெக்கப்படுறீங்களாண்ணா? இந்த ஒண்டர்புல்லான சீனை பாக்க அண்ணி இல்லாம போயிட்டாங்களே! போதும்ணா போதும்… விட்டா பெருவிரலால லேண்டைக் கீறி பூமாதேவிய கோவப்படுத்திடப் போறீங்க… எனக்கு லவ் செட் ஆகுதோ இல்லையோ உங்களோட லைஃப் பழையபடி ஸ்பைசியா மாறப்போகுதுனு தெரியுது… என்ஜாய்” என்று கேலி செய்தான் அவன்.

எது எப்படியோ விவாகரத்து வழக்கு ஒன்றுமில்லாமல் போனால் அதுவே இரு குடும்பத்தினருக்கும் அவர்களின் நண்பர்களுக்கும் மிகப்பெரிய நிம்மதி!

“சரிடா! இதான் சாக்குனு ஓவரா கலாய்க்காத… போய் சாரு கிட்ட உன்னோட மனசுல இருக்குறத தெளிவா சொல்லிடு… யூ நோ ஒன் திங்? நம்ம லவ் பண்ணுறவங்க நம்மளோட இருக்குறப்ப கிடைக்கிற பலமே தனி… உன்னோட லவ் ஓகே ஆகுறதுக்கு பெஸ்ட் ஆப் லக்” என்று வாழ்த்தி தம்பியை அனுப்பி வைத்தான் சித்தார்த்.

அவன் கிளம்பியதும் தனது அறைக்குள் நுழைந்த சித்தார்த் மொபைலும் கையுமாக கவுச்சில் அமர்ந்தான். மொபைலின் தொடுதிரையில் அவனும் யசோதராவும் சர்மிஷ்டாவை அணைத்தபடி இருக்கும் புகைப்படம் வால்பேப்பராக அவனைப் பார்த்து கண் சிமிட்டியது.

அதைக் கண்டதும் மனமோ யசோதராவை அழைத்துப் பேசேன் என்று அவனைத் தூண்டிவிட அவனும் மனம் சொல்வதைத் தட்டாத பிள்ளையாக மனைவியின் எண்ணுக்கு அழைத்தான்.

யசோதரா உணவு இடைவேளையில் இருந்தவள் சித்தார்த் அழைக்கவும் எடுக்கவா வேண்டாமா என யோசிக்க அவளுடன் அமர்ந்திருந்த அனைவரின் கவனமும் மொபைலில் படிந்தது.

ரகு ஒரு படி மேலே சென்று “யசோ உன் ஆத்துக்காரர் தான் கூப்பிடுறார்டி… என்னனு கேளு… இல்லனா மனுசன் இங்கயே வந்துடப் போறார்” என்று கிண்டல் செய்ய யசோதரா அவனை முறைத்தாள்.

அவனருகே அமர்ந்திருந்த அனுராதாவோ “இவனை அப்புறமா முறைக்கலாம்… முதல்ல உன் ஆள் கிட்ட பேசுடி… உனக்கு ஒன்னு தெரியுமா ரகு? இப்போலாம் யசோ ஆபிஸ்ல ரொம்ப நேரம் ஸ்பெண்ட் பண்ணுறதால சித்து சார் அவளை மிஸ் பண்ணுறார் போல… அடிக்கடி ஆபிஸ் ஹவர்ல கால் வருது” என்று கேலி கிண்டலில் கணவனுக்குத் தப்பாத மனைவி என நிரூபித்தாள்.

இதற்கு மேல் இருந்தால் இவர்களது கேலியைச் சமாளிக்க முடியாது என்பதால் அங்கிருந்து சற்று விலகி சென்று அழைப்பை ஏற்றாள் யசோதரா.

“என்னடா வேணும் உனக்கு? எதுக்கு அடிக்கடி கால் பண்ணுற?”

“ஒன்னுமில்ல யசோ… இப்போ ஷூட் முடிச்சு வீட்டுக்கு வந்தேன்… மொபைல் வால்பேப்பரை பாத்ததும் உன் ஞாபகம் வந்துடுச்சு… உடனே கால் பண்ணிட்டேன் செல்லக்குட்டி… இது லஞ்ச் ஹவர் தானே… சாப்பாட்டோட சேர்த்து என்னையும் கொஞ்சம் கவனிக்கலாமே”

சலுகையாய் ஒலித்த சித்தார்த்தின் குரலில் கடுப்புற்ற யசோதரா “இங்க பாரு, எனக்குத் தலைக்கு மேல வேலை இருக்கு… நீ ஹாயா கேமரா முன்னாடி கைய காலை ஆட்டி ஆக்ட் பண்ணிட்டு கேரவன்ல உக்காந்து ஜூஸ் குடிச்சிட்டு வந்து தெம்பா என்னை இரிட்டேட் பண்ணுற… எனக்கு வர்ற கடுப்புக்கு நான் மட்டும் நேர்ல வந்தேன்னு வையேன்” என்று குரலை உயர்த்த

“அந்த ரெயினி டே மாதிரி ஒரு ஸ்வீட் ஆக்சிடெண்ட் மறுபடியும் நடக்கும்… அதுக்கு நான் கேரண்டி” என்று குறும்பாய் இடைவெட்டியது சித்தார்த்தின் குரல்.

அவனது சங்கேத பேச்சில் திகைத்தவள் “உனக்கு வேற எண்ணமே இல்லயா? மூஞ்சியும் முகரைக்கட்டையும் பாரு… நான் வேற ஏதாச்சும் சொல்லுறதுக்குள்ள நீயே காலை கட் பண்ணிடு” என்று பொரிந்து தள்ளினாள்.

சித்தார்த் அதற்கெல்லாம் அசராது “கோச்சுக்காத செல்லக்குட்டி… என் நிலமை அப்பிடி… சரி அதை விடு… சர்மிக்குட்டிய பாக்குறதுக்கு நான் கமிங் சண்டே வருவேன்… அப்போ என் கண்ணுல படாம எஸ்கேப் ஆகாம பொறுப்பான பொண்டாட்டியா பாசமான அம்மாவா ஃப்ளாட்லயே இருக்கணும்” என்று அமர்த்தலாக ஆணையிட

“இல்லனா என்னடா பண்ணுவ?” என்று கேட்டாள் யசோதரா.

“சிம்பிள்… சர்மிக்குட்டிய என் கூடவே அழைச்சிட்டு வந்துடுவேன்… அப்புறம் நீ சண்டை போட்டாலும் கத்துனாலும் ஐ டோண்ட் கேர்… என்ன சொல்லுற?”

“ஓகே ஓகே! இருந்து தொலைக்கிறேன்”

“இப்பிடி வேண்டாவெறுப்பா இருந்தாலும் என் டாட்டரை தூக்கிட்டுப் போயிடுவேன்… சிரிச்ச முகமா இருக்கணும்”

ஏட்டிக்குப் போட்டியாய் விவாதங்களுடன் நடந்த பேச்சின் முடிவில் யசோதரா அயர்ந்து போனாள். அயர்ச்சியின் முடிவில் தலையில் அடித்துக்கொண்டவளின் இதழில் சிரிப்பு குமிழிட்டது.

அந்தச் சிரிப்பை மறைக்கவியலாத குரலுடன் “சரி! சிரிச்ச முகமா இருப்பேன்… இப்போ போனை வைக்கிறீயா ராசா? இல்லனா உன் புண்ணியத்தால நான் இன்னைக்கு பட்டினி கிடக்கணும்” என்றாள் அவள்.

“நீ தான் கேரண்டி குடுத்திட்டியே… அது போதும் எனக்கு… நல்லா சாப்பிட்டு தெம்பா வேலைய பாருங்க ரிப்போர்ட்டர் மேடம்… லவ் யூ” என்றபடி அழைப்பை முடித்தான் சித்தார்த்.

பேச்சின் இடையில் யசோதராவின் குரலில் குமிழிட்ட சிரிப்பைக் கண்டுகொண்டவனின் உள்ளம் குதூகலத்தில் மிதந்தது. தனக்கும் அவளுக்குமான இடைவெளி மெதுவாய் குறைவது போன்ற எண்ணம் அவனுக்கு!

அதே நேரம் சாப்பிட்டுக்கொண்டிருந்த யசோதராவின் முகத்தில் தெரிந்த புன்னகையை நோட்டமிட்ட ரகுவின் மனமோ இனி தோழியின் திருமண வாழ்க்கை தப்பித்துவிடும் என்று நிம்மதியுற்றது.

இது அனைத்திற்கும் ஆரம்பப்புள்ளியான சித்தார்த்தால் தூண்டிவிடப்பட்ட இந்திரஜித் சாருலதாவைக் காண அட்லாண்டிஸிற்கு காரில் சென்று கொண்டிருந்தான்.

மேகமலையிலிருந்து திரும்பி இரண்டு நாட்கள் ஓடிவிட்டது. இரு நாட்களாக சாருலதாவிடமிருந்து எந்த மொபைல் அழைப்புகளும் வரவில்லை. அதற்கு அவன் ஊகித்த காரணம் இது தான். விமானத்தில் சென்னைக்குத் திரும்பும் போது வேண்டுமென்று சாருலதாவை எரிச்சலூட்ட அவன் பிரியாவிடம் பேசியபடி பயணித்தது தான் இந்த இரண்டு நாட்களாக சாருலதா அவனை தவிர்ப்பதற்கு காரணாமாக இருக்க கூடும்.

அதன் விளைவாக எழுந்த தனது மனதின் அலைபாய்தலுக்கு அவளது குரல் கேளாமை தான் முக்கியக் காரணம் என்பதுவும் அவனது ஊகமே.

இன்னும் சில தினங்களில் ஃபார்முலா ரேஸ் ஆரம்பிக்கவிருக்கையில் அவனது மனமும் உடலும் கட்டுக்கோப்பாக இருந்தே ஆகவேண்டும். எனவே தான் சாருலதாவைக் காண கிளம்பினான்.

அதற்கிடையே சித்தார்த் வேறு காதல் என்ற வார்த்தையை போகிற போக்கில் இந்திரஜித்திடம் உதிர்த்துவிட முன்பு சாருலதாவின் குரலைக் கேட்டால் மட்டும் போதும் என்று எண்ணியிருந்தவன் இப்போதோ தன் மனதிலிருக்கும் உணர்வுகளை அவளிடம் கொட்டிவிட வேண்டும் என்று தீர்மானித்துவிட்டான்.

தனது பேச்சிற்கு சாருலதா எப்படி எதிர்வினையாற்றுவாள் என்பதை அவன் அறியான்! அவனது குறும்புச்செய்கைகளையும் ரசனைப்பார்வைகளையும் கோபம் கலந்த சிரிப்புடன் அவள் கடப்பதை அனேகமுறை கண்டிருந்த போதும் இந்திரஜித்தால் அவளது மனநிலையைக் கணிக்க முடியவில்லை.

இன்று அனைத்தையும் கேட்டுவிட வேண்டியது தான் என்று நினைத்தபடி காரின் ஸ்டீயரிங் வீலை வளைத்தவன் அட்லாண்டிஸை நோக்கி காரைச் செலுத்தினான்.

மழை வரும்☔☔☔