☔ மழை 38 ☔

இன்று இந்தியாவின் எல்லா மூலைகளிலும் ஆன்மீகவாதிகள் முளைத்துள்ளனர். அவர்களில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் உண்மையான ஆன்மீக அறிவுடன் மனிதக்குலத்தை வழிநடத்தவும் சகமனிதர்களுக்கு உதவவும் செய்கின்றனர். மிச்சமுள்ள பெரும்பான்மையானவர்கள் ஆஸ்ரமங்களில் ஆடம்பரவாழ்வு வாழ்ந்தபடி வெறும் கண்துடைப்பிற்காக சமூகநலப்பணிகளைச் செய்கின்றனர்.

         -எழுத்தாளர் மற்றும் முன்னாள் பேராசிரியர் மனோகர் பாட்டியா

முக்தி ஃபவுண்டேசன், மேகமலை…

சிக்ஷா தியான அறையின் நடுநாயகமாக அமர்ந்து யோகா பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார் முக்தியின் சிஷ்யர் ஒருவர்.

“ஹதயோகாவுக்கு உங்க உடலை தயார் படுத்துறதுக்கு தான் இந்த உபயோகாவ முதல்ல ஆரம்பிக்கிறோம்… இது உங்க உள்ள மூட்டுகள் நல்லபடி இயங்குறதுக்கு உதவும்”

ரகுவால் இந்த உபதேசங்களைக் கேட்கவே முடியவில்லை. போரடிப்பதன் விளைவால் இரு முறை கொட்டாவி வேற விட்டாயிற்று! ஆனால் யோகா செஷன் தான் முடிவேனா என அடம்பிடித்தது.

அவனருகே அமர்ந்து யோகாவில் மூழ்கியிருந்த இந்திரஜித்தை முறைத்தபடி மீண்டும் அவர்களிடமிருந்து சற்று தொலைவில் அமர்ந்திருந்த சிஷ்யரிடம் பார்வையைத் திருப்பினான்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீண்ட யோகா செஷன் ஒரு வழியாக முடிவடைய இருவரும் மற்ற நபர்களுடன் வெளியேறினர். வெளியே வந்த போது அந்த தியான ஹாலை சுற்றி இருந்த பசும்புல்வெளியின் ஒரு ஓரத்தில் வெளிநாட்டினர் அமர்ந்திருப்பதைக் கண்ணுற்றனர்.

அவர்களின் நடுநாயகமாக அமர்ந்திருந்தார் சர்வருத்ரானந்தா. அவர்களிடம் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தவரை ஒரு ஓரமாய் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாள் சாருலதா.

பிரியாவும் ஆகாஷும் எப்படி போஸ் கொடுக்க வேண்டுமென அங்கே அமர்ந்திருந்த வெளிநாட்டினரிடம் விவரித்துக் கொண்டிருந்தனர். புகைப்படத்தை பார்க்கும் போது இயல்பான உரையாடலாக இருக்கவேண்டுமே!

அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி நகர்ந்த இந்திரஜித் பிரியாவை நோக்கி புன்னகைக்க கேமராவைப் பிடித்திருந்த சாருலதாவின் காது மூக்கில் புகைமயம்! ஆனால் அடுத்த நொடியே பெருவிரலைக் காதிலும் சுண்டுவிரலை உதட்டருகிலும் நீட்டி மொபைலில் அழைக்கிறேன் என்று அவன் காட்டிய சைகையைப் புரிந்துகொண்டாள் சாருலதா.

பின்னர் ரகுவிடம் எதையோ சொன்னபடி வி.ஐ.பி ரிசார்ட்டை நோக்கி நகர்ந்தான் அவன். அவர்களது ரிசார்ட் பகுதிக்குள் வந்ததும் சுற்றும் முற்றும் கவனித்துவிட்டு பேசத் துவங்கினான்.

“லேன் ஹேக்கிங் தான் நம்மளோட அடுத்த ஸ்டெப்… அதை வச்சு எந்த ஹோஸ்ட் சிஸ்டம்ல லீகல் டாக்குமெண்ட்ஸ், டாக்ஸ் சம்பந்தப்பட்ட டாக்குமெண்ட்ஸ் இருக்கும்னு ஹேக் பண்ணிடலாம்… நீங்க அவங்களோட ஐ.டி டீமோட ஸ்ட்ரக்சரை கவனிங்க… இப்போவே வேலைய ஆரம்பிச்சிடுவோம்… இனிமே ஈவினிங் தானே யோகா செஷன்” என்று கூற ரகு தலையாட்டிவிட்டு அவனது அறைக்குள் நுழைந்தான்.

இந்திரஜித் தனது அறைக்குள் வந்தவன் மொபைலை எடுத்து சாருலதாவை அழைத்தான்.

அவள் அழைப்பை ஏற்றதும் “சாரு நான் சொல்லுறதை கவனமா கேளு… இன்னைக்கு நீ எடுத்த போட்டோசை எடிட் பண்ண ரவீந்திரன் சார் கிட்ட ருத்ராஜியோட லேப்டாப்ப கேக்கணும்” என்றான்.

சாருலதா குழப்பத்துடன் “என்னடா சொல்லுற? போட்டோ எடிட்டிங் வேலையெல்லாம் நான் சென்னைக்குப் போனதுக்கு அப்புறம் தான் பண்ணணும்… ருத்ராஜியோட லேப்டாப்ல நான் எதுக்கு ஒர்க் பண்ணணும்?” என்று வினவ

 “இன்னைக்கு எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு… அதுக்கு ருத்ராஜியோட லேப்டாப் லோக்கல் ஏரியா நெட்வொர்க்ல கனெக்ட் ஆகணும்… சோ உடனே ரவீந்திரன் சார் கிட்ட லேப்டாப்ப கேளு… நீ லேப்டாப் யூஸ் பண்ணுறப்ப மெயில் சர்வீஸை ஓப்பன் பண்ணு… மோஸ்ட்லி எல்லாரும் அதை லாகின்ல தான் வச்சிருப்பாங்க… அப்பிடி லாகின்ல இல்லனாலும் பரவால்ல… நீ ஜஸ்ட் அந்த மெயில் சர்வீசை ஓப்பன் பண்ணி வச்சா போதும்… நான் அதை லாகின் பண்ணி அந்த மெயில் அட்ரஸ்கு ஒரு ஈமெயிலை ஃபார்வேர்ட் பண்ணுவேன்… நீ ஜஸ்ட் அந்த மெயிலை ஓப்பன் பண்ணி அதுல இருக்குற லிங்கை கிளிக் பண்ணுனா போதும்… உன் கைக்கு லேப்டாப் வந்ததும் எனக்கு ஒரு மிஸ்ட் கால் மட்டும் குடு” என்றான் இந்திரஜித்.

“அடேய் இவ்ளோ பெரிய ஆசிரமத்துல அந்த ஒரு லேப்டாப் மட்டும் தான் இருக்குதா என்ன? சப்போஸ் அவர் குடுக்கலனா நான் என்ன பண்ணுறது?”

“அதை யோசிக்க மாட்டேனா நான்? இந்த ஆஸ்ரமத்துக்குள்ள மொபைல், லேப்டாப் யூஸ் பண்ணுறதுக்கு யாருக்கும் பெர்மிசன் கிடையாது… ஆபிஸ் ரூம்ல இருக்குற சிஸ்டம்ஸ், இன்னும் அந்த லேன்ல எத்தனை ஹோஸ்ட் சிஸ்டம்ஸ் இருக்குதோ எல்லாமே இன்னும் கொஞ்ச நேரத்துல ஒவ்வொன்னா வேலை செய்யுறத நிறுத்தும்… ஒரே ஒரு லேப்டாப்ப தவிர… அது தான் ருத்ராஜியோட லேப்டாப்” என்று விசமத்தனமாகக் கூறியவன் வீண் விவாதத்தில் நேரத்தைக் கடத்தாதே என்று அதிகாரமாக உரைத்துவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

சாருலதா அவனது அதிகாரத்தொனியில் எரிச்சலுற்றாலும் யசோதராவுக்கு அளித்த வாக்கிற்காக ரவீந்திரனிடம் சென்று தனது லேப்டாப் வேலை செய்வதில் பிரச்சனை உள்ளதால் அலுவலக கணினியைக் கொஞ்சம் பயன்படுத்திக் கொள்ளலாமா என்று வினவ அவரும் சம்மதித்து அவளையும் பிரியாவையும் அலுவலகம் அமைந்திருந்த பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

முக்தியில் இருந்த அனைத்து கட்டிடங்களும் பாரம்பரிய கட்டிக்கலையைப் பிரதிபலிக்க அலுவலகம் மட்டும் நவீன மோஸ்தரில் ஜொலித்தது. நிர்வாகப்பகுதி, கணக்குகளைக் கவனிக்கும் பகுதி என இரு பிரிவாக இரண்டு மாடிகளில் கம்பீரமாய் நின்ற கட்டிடத்தினுள் நுழைந்தனர் மூவரும்.

ருத்ராஜிக்கென இருந்த பிரத்தியேக அறையில் அவரது மேஜையில் வீற்றிருந்த கணினியின் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி விண்டோசை இயங்க வைத்த ரவீந்திரன் சாருலதாவை அமரும்படி வேண்டிக்கொண்டார்.

“சார் நீங்களும் இங்கயே இருங்க… எப்பிடியிருந்தாலும் நாங்க வெளியாட்கள்… எங்க மேல நம்பிக்கை இருந்தாலும் உங்க பார்வைக்கு மறைச்சு நாங்க எந்த வேலையையும் செய்ய விரும்பல” என்று சாருலதா இயம்பவும் புன்சிரிப்புடன் அவளெதிரே இருக்கையைப் போட்டு அமர்ந்தார் ரவீந்திரன்.

பிரியா அவளருகே அமர்ந்தவள் கணினியின் திரையை நோக்க அப்போது லோக்கல் ஏரியா நெட்வொர்க்கில் இணைந்தது கணினி. சாருலதா கையோடு கொண்டு வந்த அடாப்டரை சி.பி.யூவில் இணைத்துவிட்டு கணினியின் திரையை நோக்கினாள்.

அவளது அடாப்டரில் பொதிந்திருந்த மெமரி கார்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வரிசையாய் திரையில் விரிந்தன. பிரியா புரியாத புதிராய் சாருலதாவை ஏறிட்டவள் அவள் அடிக்கடி உலர்ந்த உதடுகளை ஈரப்படுத்துவதைக் கவனித்துவிட்டாள்.

பொதுவாக ஏதேனும் சிக்கலில் மாட்டியிருக்கும் போது தான் சாருலதா இவ்வாறான உடல்மொழியை வெளிப்படுத்துவாள். இப்போது அவளுக்கு என்ன சிக்கல் வந்துவிட்டது? இவ்வளவு நேரம் தன்னுடன் சேர்ந்து வெகு உற்சாகமாக ருத்ராஜி வெளிநாட்டினர் மத்தியில் ஆற்றிய உரையாடலைக் கேட்டபடி போட்டோஷூட் செய்தவளுக்கு திடீரென என்னவாயிற்று?

சாருலதா கணினி திரையை நோக்கிய அதே நேரம் ரகு அவனது மடிக்கணினியில் வேலையை ஆரம்பித்திருந்தான். முக்தியின் ஐ.டி.விங்காக செயல்படும் பகுதியிலுள்ள கணினிகளை ஹேக் செய்யும் வேலையில் மூழ்கியிருந்தான் அவன்.

அந்த லேனில் இணைந்திருந்த ஐ.டி.விங்கின் அனைத்து கணினிகளிலும் கீ-லாகர் என்ற மென்பொருளை செயல்பட வைத்தவன் இனி அந்தக் கணினிகளில் நடைபெறும் ஒவ்வொரு செயல்பாட்டையும் அந்த மென்பொருள் கண்காணித்துக் கொள்ளும் என்ற நிம்மதியுடன் வேலை முடிந்தது என இந்திரஜித்துக்கு தகவல் அனுப்பினான்.

இந்திரஜித்தின் மொபைல் ‘கிளிங்’ என்ற சத்தத்துடன் நோட்டிபிகேசன் வந்திருப்பதைக் காட்ட அவனோ ருத்ராஜியின் அலுவலகப்பகுதியிலுள்ள கணினிகளை ஹேக் செய்து கொண்டிருந்தான்.

அவன் முன்னிருந்த திரையில் விரிந்திருந்த அட்டவணையில் “ஹாஃப் ரூட்டிங், ஃபுல் ரூட்டிங்” என்று ஹேக்கிங்கின் நிலையோடு லேனில் இணைந்திருந்த ஹோஸ்ட் கணினிகளின் ஐ.பி முகவரிகளும் வரிசையாய் வந்தது.

சில நிமிடங்களில் அவை அனைத்தும் வழக்கமான வேகத்தைக் காட்டிலும் மெதுவாக இயங்கி வேலை நிறுத்தம் செய்ய ஆரம்பித்தன. அதில் சாருலதா உபயோகித்த கணினியும் ஒன்று.

அது வேலை செய்வதை நிறுத்தவும் சாருலதா ரவீந்திரனிடம் திரையைக் காட்டிவிட்டு “சார் முக்கியமான வேலை ஒன்னு இன்னைக்கு முடிச்சா தான் போட்டோஸ் திருப்திகரமா வரும்… ஆனா சிஸ்டம் ஒர்க் ஆகமாட்டேங்கிறது பாருங்க… என் லேப்டாப்பும் இப்பிடி பிரச்சனை பண்னுனதால தான் நான் உங்க கிட்ட ஹெல்ப் கேட்டேன்… இந்த சிஸ்டமும் இப்பிடி உக்காந்துடுச்சே” என்று கவலையோடு மொழிய பிரியாவின் முகம் யோசனையைப் பூசிக்கொண்டது.

ரவீந்திரன் உடனே அலுவலக வேலை நிமித்தம் பணியாளர்கள் உபயோகிக்கும் கணினிகளைப் பற்றி கூறிவிட்டு அவர்களது பணியிடம் நோக்கி அழைத்துச் சென்றார். அங்கேயோ எல்லா கணினிகளின் நிலையும் இது தான்.

ஒரே நேரத்தில் அனைத்து கணினிகளுக்கும் என்னவாயிற்று என்ற சந்தேகமும் சாருலதாவின் வேலை தடைபடுகிறதே என்ற கவலையும் சேர்ந்து அவரை ருத்ராஜியின் சொந்த உபயோகத்துக்கான மடிக்கணினியை சாருலதாவிடம் கொடுக்க வைத்தது.

அவளோ நண்பன் சொன்னதை நடத்திக் காட்டிவிட்டான் என்ற புளங்காகிதத்துடன் அந்த மடிக்கணினியை வாங்கிக்கொண்டு அதில் அடாப்டரை இணைத்தாள்.

பின்னர் ஏதோ சந்தேகம் போல காட்டிக்கொண்டு பிரியாவிடம் சம்பந்தமின்றி பேச ரவீந்திரனோ ஒரே நேரத்தில் கணினிகள் வேலைநிறுத்தம் செய்த கவலையை மொபைலில் தொழில்நுட்ப பிரிவினரிடம் கூறி உடனடியாக தீர்வு காணும்படி வேண்டிக்கொண்டிருந்தார்.

கிடைத்த இடைவெளியில் சாருலதா இந்திரஜித் கூறியவண்ணம் மின்னஞ்சல் சேவை பக்கத்தை உலவிப்பக்கத்தில் திறந்து வைத்துவிட்டு  இந்திரஜித்தை அழைக்க அவனோ அடுத்த நொடியே லேனில் நுழைந்த மடிக்கணினிக்குள் ஹேக்கிங் மூலம் நுழைந்தவன் அந்த மின்னஞ்சலுக்கு ஷேடோபேட் என்ற மென்பொருளைத் தரவிறக்கம் செய்யும் இணைப்பினை அனுப்பி வைத்தான்.

அந்த மென்பொருளானது தரவிறக்கம் செய்யப்பட்டு வேலை செய்ய ஆரம்பித்ததும் பேக்டோர் (back door) என்ற ஒன்றினை செயல்படுத்தும். அந்த பேக்டோரானது கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் கோப்புகளில் உள்ள தகவல்கள், கணினியின் பயனர் உபயோகிக்கும் கடவுச்சொற்கள், வங்கி பணப்பரிவர்த்தனைகளைக் கண்காணித்து அதை இயக்கும் நபருக்கு இந்தத் தகவல்கள் அனைத்தையும் FTP (File Transfer Protocol) மூலம் அனுப்பும்.

சாருலதா அந்த இணைப்பைச் சொடுக்கியதும் மென்பொருள் புயல்வேகத்தில் தரவிறக்கம் செய்யப்பட்டு வேலை செய்யவும் ஆரம்பித்தது. ஆனால் அவை எதுவும் ஆன்டி-வைரசின் கண்களுக்குப் புலப்படாது வேகமாக நடந்து முடிந்தது.

அதே நேரம் அலுவலகத்தின் இருபிரிவுகளிலும் இருந்த கணினிகள் மீண்டும் சாதாரணமாக வேலை செய்ய ஆரம்பித்தன.

வேலை முடிந்தது இந்திரஜித் சாருலதாவிற்கு மிஸ்ட் கால் அளிக்க அவள் புரிந்துகொண்டவளாக மடிக்கணினியை ரவீந்திரனிடம் ஒப்படைத்துவிட்டு பிரியாவுடன் அந்த அலுவலக அறையிலிருந்து வெளியேறினாள்.

 பிரியா அவளைச் சந்தேகத்துடன் நோக்குவதை அவள் அறிந்துகொள்ளாமல் இயல்பாக பேசிக்கொண்டே நடந்தாள். அதே கணம் வி.ஐ.பி ரிசார்ட்டில் இந்திரஜித் ரகுவையும் யசோதராவையும் கான்பரன்சில் இணைத்திருந்தான்.

“நான் ஐ.டி விங்ல இருக்குற சிஸ்டம்ஸ்ல கீ-லாகரை இன்ஸ்டால் பண்ணிட்டேன் யசோ.. இனிமே அவங்க பண்ணுற ஒவ்வொரு காரியமும் நமக்கு அப்டேட் ஆகிடும்… அவங்க வெப்சைட்ல வாங்குற புராடெக்ட்ஸ்கு ரிசீவ் பண்ணுர மனி எவ்ளோ பர்சென்டேஜ் சேல், எவ்ளோ பர்செண்டேஜ் டொனேசனா டிவைட் பண்ணுறாங்கனு தெரிஞ்சிடும்” என்றான் ரகு.

“அண்ணி நான் யூஸ் பண்ணுன பேக்டோர் டெக்னிக்ல அந்த சாப்ட்வேர் எல்லா டீடெய்ல்சையும் கலெக்ட் பண்ணி எனக்கு அனுப்பிடும்… சிஸ்டம்ல இருக்குற டாக்குமெண்ட்ஸ், சீக்ரெட் ஃபைல்ஸ் எல்லாமே இனிமே நம்ம கைக்கு சுலபமா வந்துடும்” இது இந்திரஜித்.

மறுமுனையில் இவர்களிடம் பேசிக்கொண்டே காரை தரிப்பிடத்தில் நிறுத்திய யசோதரா அவளுடன் வந்திருந்த மயூரியின் கவனத்தை ஈர்க்காதவாறு பேச்சை முடித்தாள்.

“என்னடி உம் மட்டும் கொட்டுற? அப்பிடி என்ன சீக்ரேட் பேசுற நீ?” என்று சந்தேகமாய் வினவிய மயூரியைச் சமாளித்தபடி மின் தூக்கியில் அவளுடன் சென்றவள் அவரது தளம் வந்ததும் ஃப்ளாட்டை நோக்கி நடைபோட்டாள்.

“சர்மி தனியா இருப்பா மய்யூ… இன்னைக்குக் கொஞ்சம் வேலை அதிகமாயிடுச்சு… ஹேமா கூட தான் இருப்பானு நினைக்கேன்” என்று பேசிக்கொண்டே வந்த யசோதரா அவளது ஃப்ளாட் கதவு திறந்திருக்கவும் அதிர்ச்சியில் அமைதியானாள்.

உள்ளே சர்மிஷ்டாவின் சிரிப்பொலி கேட்கவும் ஒருவேளை ஹேமலதாவும் அவளும் அரட்டை அடிக்கின்றனரோ என்ற ஐயத்துடன் சர்மிஷ்டாவின் அறையின் உள்ளே அடியெடுத்து வைத்தனர் யசோதராவும் மயூரியும்.

அங்கே சர்மிஷ்டாவுடன் சேர்ந்து அவளது டென்ட்டின் வாயிலில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தவன் சித்தார்த். அறை வாயிலில் நின்ற இரு பெண்களையும் பார்த்தவன் “ஹாய்” என்று புன்னகையுடன் கையைசைத்தான்.

மயூரி யசோதராவையும் அவனையும் மாறி மாறி பார்க்க சித்தார்த்தோ “ஏன் புரொபசர் மேடம் இப்பிடி முழிக்கிறீங்க? என் மகளை பாக்க நான் வரக்கூடாதா?” என்று கேட்க

“ஐயோ நான் அதுக்காக பாக்கல… நீங்க இன்னைக்கு வர்றீங்கனு இவ சொல்லல… அதான் கொஞ்சம் ஷாக் ஆயிட்டேன்” என்றாள் மயூரி.

“ஷாக்கை குறைச்சுக்கோங்க… அப்பிடியே மிசஸ் கௌதம் இன்னைக்கு ஈவினிங் அக்கிரொட்டினு ஒரு டிஷ் பண்ணிருக்காங்களாம்… அதை சாப்பிட்டுப் பாத்து எவ்ளோ மார்க்னு சொல்லுவீங்களாம்… ஷீ இஸ் வெயிட்டிங் ஃபார் யூ… அண்ட் என் செல்லப்பொண்ணையும் கூடவே கூட்டிட்டுப் போங்க… குழந்தைக்கு அந்த டிஷ் ரொம்ப பிடிக்கும்” என்று சொல்லி சர்மிஷ்டாவை அவளிடம் அனுப்பிவைத்தான்.

மயூரி இருவரையும் ஒரு மார்க்கமாகப் பார்த்துவிட்டு நகர யசோதரா அவனை முறைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள். சென்றவளைத் தொடர்ந்து பின்னே வந்தவன் அவளைப் போலவே அறைக்குள் நுழைய முற்பட யசோதரா கதவை மூட எத்தனித்தாள்.

அதற்குள் அவன் உள்ளே வந்துவிடவும் பற்களைக் கடித்தவள் “நீ அடங்கவே மாட்டியாடா? இப்போ எதுக்கு பின்னாடியே வந்த நீ? ஒழுங்கா வெளியே போ… எனக்கு இன்னைக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு… உன் கூட சண்டை போட எனக்கு நேரமில்ல” என்றாள்.

“நான் உன் கூட கொஞ்சநேரம் டைம் ஸ்பெண்ட் பண்ண தான் வந்தேன்… நீ இப்போலாம் சீக்கிரமா ஆபிஸ் போயிட்டு லேட்டா தான் வர்றனு சர்மி சொன்னா… எதுவும் நியூ ஆபரேசனா?”

அவன் சாதாரணமாகத் தான் கேட்டான். யசோதரா ஒரு நொடி அமைதியானவள் பின்னர் சுதாரித்து “அதை பத்தி உனக்கு என்ன கவலை? என் ஒர்க் விசயத்துல நீ தலையிடாத… ஒழுங்கா வெளிய போ” என்று சொன்னபடி அவனை வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி வைத்தாள்.

“ஷப்பா, இவன் வேற என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணுறான்பா… ஆல்ரெடி டெய்லி வீட்டுக்கும் பீச் ஹவுசுக்கும் இவன் கண்ணுல சிக்காம அலைஞ்சு திரிஞ்சு என் ஸ்டாமினாவே காலி ஆயிடுச்சு… இருக்குற பத்து பர்சண்டேஜையும் இவன் பேசியே காலி பண்ணிடுவான் போல”

புலம்பியபடியே முகம் கழுவி உடை மாற்றிவிட்டு வெளியே வந்தவள் இன்னும் வீட்டிற்கு கிளம்பாமல் அங்கே அமர்ந்திருந்த சித்தார்த்தைப் பார்த்ததும் அயர்ந்து போனாள்.

“இன்னும் நீ கிளம்பலயாடா? நெக்ஸ்ட் ஹியரிங்குக்கு முன்னாடி என் மனசை மாத்திடுவேன்னு சேலஞ்ச் பண்ணுனல்ல… உன் சேலஞ்சுக்காக நீ என்ன பண்ணுன? இப்பிடி மானிங்கும் ஈவினிங்கும் ஸ்டாக்கிங் பண்ணுனா ஒன்னும் மாறாது ஹீரோ”

“நான் ஒன்னும் உன்னை ஃபாலோ பண்ணலையே… ஜஸ்ட் என் பொண்டாட்டியும் பொண்ணும் எப்பிடி இருக்காங்கனு அக்கறையோட கண்காணிக்கிறேன்… இது என் கடமை… நீ ஏன் குதர்க்கமா நினைக்கிற?”

அவன் சொன்ன விதத்தில் நான் அப்படி தான் நினைக்கிறேனோ என்று ஒரு நொடியில் யசோதரா யோசித்துவிட்டாள்.

“நீ ஒழுங்கா தான் யோசிக்கிற யசோ… பட் இவன் உன்னைக் குழப்புறான்… இப்போ வரைக்கும் முக்திய பத்தி நான் யோசிக்கமாட்டேன்னு சொன்னானா இவன்?”

சரியான நேரத்தில் அவளது மனசாட்சி அறிவுறுத்தவும் சிலிர்த்துக் கொண்டவள் “நான் ஒன்னும் குதர்க்கமா நினைக்கல… நீ வந்து பாக்கலனாலும் என் பொண்ணை நான் கவனமா பாத்துப்பேன்” என்றாள் அமர்த்தலாக.

“எப்பிடி? ட்வென்ட்டி ஃபோர் ஹவர்சும் வேலை வேலைனு சுத்தி பொண்ணோட பொறுப்ப ஹேமா கிட்ட ஒப்படைச்சியே, அந்த மாதிரியா?” என்று வினவிய சித்தார்த் அவள் அமைதியுறவும் அவளிடம் மொபைலை நீட்டினான்.

அவள் புருவச்சுருக்கத்துடன் ஏறிட “வீடியோவ பாரு” என்று ஊக்கினான் சித்தார்த்.

யசோதரா அந்த வீடியோவை ஓடவிட்டாள். அதில் சித்தார்த்தும் யசோதராவும் குடும்பநல நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறியது பற்றி அவனிடம் வினா தொடுக்கப்பட்டது.

அதற்கு அவன் நண்பர்களின் விவாகரத்தைத் தடுக்கச் சென்றதாக சமாளித்து வைத்திருந்தான். அதை நெறியாளர் நம்பினது போல தெரியவில்லை. ஆனால் அந்த நேர்க்காணல் மட்டும் சமூக வலைதளங்களில் வலம் வர ஆரம்பித்தால் இந்த விவாகரத்து விவகாரம் கட்டாயம் வாசுதேவனையும் வைஷ்ணவியையும் சென்றடையும்.

அவள் செய்த புண்ணியம் இது வரை மயூரியோ அல்லது சித்தார்த்தின் பெற்றோரோ இதை பற்றி அவர்களிடம் மூச்சுவிடவில்லை. ஆனால் இது எத்தனை நாட்களுக்கு?

அதே கேள்வியுடன் சித்தார்த்தை நோக்கினாள் யசோதரா. அவனோ நிதானமாக தனது மொபைலை வாங்கிக் கொண்டான்.

“ப்ளீஸ்! கொஞ்சம் யோசி யசோ… இது நம்ம வாழ்க்கை” என்றவன் சிலையாய் சமைந்து நின்றவளை தன்னருகே இழுத்து அணைத்துக் கொண்டான்.

“ஐ மிஸ் யூ யசோ” என்று முணுமுணுத்துவிட்டு அவளை விலக்கி நிறுத்தியவன் “பை… டேக் கேர்… சர்மி கிட்ட சொல்லிட்டுக் கிளம்புறேன்” என்று அவளது கன்னத்தில் தட்டிவிட்டுக் கிளம்பினான்.

யசோதரா செல்பவனின் முதுகை பார்த்தபடி நின்றவள் சீக்கிரம் அவனுக்கு முக்தியின் உண்மை ரூபத்தை வெளிப்படுத்திவிட வேண்டும் என்று மனதிற்குள் உறுதியெடுத்துக் கொண்டாள்.

மழை வரும்☔☔☔