☔ மழை 37 ☔

கல்லா அரசனும் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனின் காலன் மிக நல்லன்
கல்லா அரசன் அறம் ஓரான்; கொல் என்பான்
நல்லாரைக் காலன் நணுகி நில்லானே.
(
திருமந்திரம் – 237)

நீதி நூல்களைக் கற்று உணராத அரசனும், உயிரைக் கவர்ந்துகொண்டு போகும் யமனும் சமமானவர்கள். ஆனால்அப்படிப்பட்ட அரசனைவிட, யமன் மிகவும் நல்லவன். ஏனென்றால், நீதி நூல்களைக் கல்லாத அரசன், அறியாமை காரணமாக, அறவழிப்படி ஆட்சி செய்ய மாட்டான். அறம் உடையவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று, அந்த யமன்கூட நினைக்க மாட்டான். அதனால், அறநூல்களைக் கல்லாத, உணராத அரசனைவிட, யமன் மிகவும் நல்லவன் என்பது கருத்து. முறையற்ற ஆட்சி நடத்தும் மன்னனின் நாட்டில் வாழ்வதைவிட, செத்துப் போய் யமலோகத்தை அடைவதே மேல் என்றும் கடுமையாகக் கண்டனத்தைப் பதிவு செய்கிறார் திருமூலர்.

இந்திரஜித் மேகமலையில் வந்திறங்கிய தினத்திலிருந்தே தனது வேலையை ஆரம்பித்துவிட்டான். வாழும் கலை பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றில் மூழ்கியவனைப் போலக் காட்டிக்கொண்டே அவனாலான வேலையை ரகசியமாகச் செய்யத் துவங்கினான்.

சாருலதா போட்டோஷூட்டுக்கு அழைத்தவர்களில் முக்கியமாக முக்தியின் சட்ட ரீதியான பிரச்சனைகளைச் சமாளிப்பவர், நிதிப்பொறுப்பைக் கவனிப்பவர், சமூக ஊடகங்களைக் கவனிக்கும் பொறுப்பாளர், ஐ.டி டீமின் பொறுப்பாளர் இவர்களை மட்டும் கவனிக்க ஆரம்பித்தான்.

இடையிடையே ரவீந்திரனிடம் ஆறுதலுக்காகப் பேசுவது போல முகுந்தின் இறப்பிற்கு நீதி வேண்டும் என்ற எண்ணத்தை அவருக்குள் வலுவாக்கினான். அதன் விளைவு எதேச்சையாகக் கேட்பது போல அவன் வினவிய சில கேள்விகளுக்கு யோசிக்காது பதிலளித்தார்.

அதன் விளைவு ருத்ராஜியின் நம்பகத்துக்குரிய மொபைல் எண்ணை அவரிடமிருந்து வாங்கிவிட்டான். அதை அவன் பெற்ற விதமே அலாதியானது.

ருத்ராஜியின் சொந்த உபயோகத்திற்கான மொபைல் எப்போதும் ரவீந்திரன் வசம் தான் இருக்கும். ஒரு நாள் நள்ளிரவில் அவரது அறைக்கதவைத் தட்டியவன் தனது தந்தையிடம் பேச வேண்டுமென கூற ரவீந்திரன் முதலில் யோசித்தார்.

ஆனால் இந்திரஜித்தோ தனது தந்தையின் மீது தான் கொண்டுள்ள பாசத்தை வைத்து ஏற்கெனவே ரவீந்திரன் மனதில் ஒரு இளக்கத்தை உண்டாக்கி இருந்தான். அன்று கெட்டக்கனவு கண்டு பயந்து விட்டதாகவும் அதனால் தந்தையிடம் பேசவேண்டுமென பதபதைப்புடன் பேசினான்.

உடனே ரவீந்திரன் உருகி ருத்ராஜியின் மொபைலை நீட்ட இந்திரஜித் முதலில் அழைத்தது சைலண்ட் மோடில் இருந்த அவனது மொபைலுக்குத் தான்.

ரவீந்திரன் உடனிருந்து கவனிக்கவும் “ரிங் போகுது எடுக்க மாட்றாரே” என்று கவலை போல காட்டிவிட்டு தனது எண்ணுக்கு அழைத்த ஹிஸ்டரியை அழித்துவிட்டு மெய்யாகவே நாராயணமூர்த்திக்கு அழைத்தான்.

அவரோ நள்ளிரவில் இளையபுத்திரன் அழைப்பான் என கனவா கண்டார்? அழைப்பை ஏற்காது நித்திரையில் ஆழ்ந்திருந்தவர் ஒரு கட்டத்தில் அவரது ரிங்டோன் செய்த கொடுமை தாளாது விழித்துக்கொண்டார்.

தொடுதிரையில் அறியாத எண் வரவும் எடுத்து ஹலோ என்றவர் இந்திரஜித்தின் டன் கணக்கில் பாசம் வழியும் குரலைக் கேட்டதும் கொஞ்சம் ஜெர்க் ஆனது என்னவோ உண்மை.

“என்னடா ஆச்சு இந்தப் பையனுக்கு? சித்து மாதிரி தானே இவனும் ஆல்கஹால்னா காத தூரம் ஓடுவான்… ஆனா இன்னைக்கு குடிச்சிருக்கான் போலயே” என்று கவலையுடன் எண்ணிக்கொண்டவர்

“டேய் கண்ணா எதுவா இருந்தாலும் காத்தால பேசிக்கலாம்… இப்போ போய் தூங்குடா… அப்பாக்கு ஒன்னுமில்ல” என்று கிண்டர் கார்டன் செல்லும் சிறுவனுக்குச் சொல்வது போல சமாதானம் சொல்லி அழைப்பைத் துண்டித்து விட்டார்.

இந்திரஜித் வேலை முடிந்த திருப்தியுடனும் ரவீந்திரனுக்கு தன் மீது ஐயம் வரவில்லை என்ற நிம்மதியுடனும் மொபைலை அவரிடம் நீட்டி நன்றி தெரிவித்தான். கூடவே நள்ளிரவில் தொந்தரவு செய்ததற்கு மன்னிப்பு கேட்டவன் அவரை உறங்குமாறு வேண்டிக்கொண்டு கிளம்பிவிட்டான்.

அன்று இரவே ரகுவிற்கு ருத்ராஜியின் எண்ணை அனுப்பியவன் “பீனிக்சுக்கு வேலை குடுத்துட்டுக் கிளம்புங்கண்ணா… கிளம்புறதுக்கு முன்னாடி அண்ணி கிட்ட டேட்டா ட்ரான்ஸ்மிஷன் பத்தி எக்ஸ்ப்ளெய்ன் பண்ணிடுங்க… எல்லா டேட்டாவும் டெர்மினலுக்கு வந்ததும் அதை அனலைஸ் பண்ணி அவுட்புட் எடுக்குறது பத்தியும் சொல்லிட்டிங்கனா ரியல் டைம் டேட்டாவ அவங்களால அவுட்புட்டா எடுத்துக்க முடியும்” என்று கூற

“யூ ஆர் ரைட் ஜித்து… நான் யசோ கிட்ட எல்லாத்தையும் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணிடுறேன்… டூ டேய்ஸ் அவளுக்கு ட்ரெய்னிங் குடுத்துட்டு நான் அங்க வர்றேன்… வந்ததும் அங்க இருக்குற சர்வர்சை ஒட்டுமொத்தமா கவனிச்சிடுவோம்” என்றான் ரகு.

சொன்னபடி இந்திரஜித்தின் தமையனுக்குச் சந்தேகம் வராதபடி சர்வர், டெர்மினல் என்ற தொழில்நுட்ப வார்த்தைகளை கூட்டி குறைத்து சொல்லி பீச் ஹவுசிற்குள் நுழைந்தான் ரகு.

அடுத்த சில மணி நேரங்களில் பீனிக்ஸ் மென்பொருளின் ஏஜெண்டானது ருத்ராஜியின் சொந்த உபயோகத்திற்கான மொபைலில் வாட்சப் செயலில் தகவலாக சென்று தானே இன்ஸ்டால் ஆகி யாருக்கும் தெரியாமல் அந்த மொபைலில் ஒளிந்து கொண்டது.

ரகு அந்த ஏஜெண்டிற்கு கட்டளைகளைப் பிறப்பிக்க ஆரம்பித்தான். Initial data extraction, Passive monitoring, Active collection என்ற மூன்று நிலைகளில் அந்த மொபைலில் தகவல்களைச் சேகரிக்கும்படி கட்டளையிட்டான்.

Initial data extraction மொபைலில் இது வரை வந்த அழைப்புகள், தொடர்பில் உள்ள எண்கள், புகைப்படங்கள், மின்னஞ்சல்கள், ப்ரவுசிங் ஹிஸ்டரி என்று தற்சமயம் சேமிக்கப்பட்ட தகவல்கள்.

Passive monitoring ஏஜெண்ட் இன்ஸ்டால் செய்யப்பட்ட பின்னர் இனிவரும் அழைப்புகள், மெசேஜ்கள், புகைப்படங்கள், மின்னஞ்சல்கள் போன்றவற்றை சேகரிக்கும் பணி.

Active collection என்பது மொபைலின் லொகேசனை ஜி.பி.எஸ் மூலம் கண்காணிப்பது, ஏற்கெனவே அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்பது, மொபைலின் மைக்ரோபோன் மூலம் சுற்றியுள்ள நபர்கள் பேசுவதை ரெக்கார்ட் செய்வது, புகைப்படம் எடுப்பது, ஸ்கிரீன் ஷாட் எடுப்பது போன்ற பணிகள்.

இவை அனைத்தையும் செய்யும்படி ஏஜெண்டிற்கு கட்டளையிட்டவன் இனி பீனிக்ஸ் அதன் வேலையைத் திறம்பட செய்யும் என்ற நம்பிக்கையுடன் யசோதராவை அழைத்து தகவலைத் தெரிவித்தான்.

“இனிமே ருத்ராஜி யார் கிட்ட பேசுறார், யாருக்கு மெயில் அனுப்புறார், யாருக்கும் தெரியாம ரகசியமா என்ன திட்டம் போடுறார்னு எல்லாத்தையும் பீனிக்ஸ் கண்காணிக்கும் யசோ… நீ பண்ண வேண்டியது ஒன்னே ஒன்னு தான்… ஏஜெண்ட் அந்த மொபைலை ஹேக் பண்ணி ஆபரேட்டர் டெர்மினலுக்கு அனுப்புற டேட்டாவோட அவுட்புட்டை எப்பிடி பீனிக்ஸ்ல இருந்து எடுக்குறதுங்கிறத கத்துக்கிறது மட்டும் தான்… நான் உனக்கு பீனிக்சை எப்பிடி லாகின் பண்ணணும், யூஸ் பண்ணணும், டேட்டா ட்ரான்ஸ்மிஷனைக் கண்காணிக்கணும்னு சொல்லித் தர்றேன்… நீ ஜஸ்ட் அவுட்புட் எடுக்குற வேலைய மட்டும் கவனி” என்றான் அவன்.

யசோதராவுக்குள் பரபரப்பு இழையோட ஆரம்பித்தது. தொடவே முடியாதென எண்ணியிருந்த நபரின் ஒவ்வொரு அசைவும் இனி அவர்களுக்கு அத்துப்படி ஆகப்போகிறது! ரகுவிடம் அந்த மென்பொருள் பற்றிய விவரங்களைக் கேட்டுக்கொண்டவள் ஹேக் செய்யப்பட்ட தகவல்களை எவ்வாறு அதிலிருந்து பெறுவது என்பது குறித்தும் கற்றுக்கொண்டாள்.

ரகு அவளுக்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கூறியவன் “நீ பீச் ஹவுசுக்குப் போய் டெர்மினலைக் கண்காணிச்சா சித்து சாருக்கு உன் மேல டவுட் வந்துடுமே… அவரை எப்பிடி சமாளிக்கப் போற?” என்று வினவ

“அவனைச் சமாளிக்கிறது எனக்கு ரொம்ப ஈசி… அவனை மாதிரியே எனக்கும் அந்த பீச் ஹவுஸ் தான் ரிலாக்சேசனுக்கான ப்ளேசா ஒரு காலத்துல இருந்துச்சு… என் கிட்ட அதோட கீ இருக்கு… சப்போஸ் நான் அங்க இருக்குற டைம்ல அவன் வந்தாலும் நான் மைண்ட் ரிலாக்ஸ் பண்ண வந்தேன்னு சொல்லிடுவேன்” என்று சாதாரணமாக உரைத்தாள் யசோதரா.

கூடவே “ஆல்ரெடி நம்ம நிறைய நாளை கடத்திட்டோம்… ருத்ராஜியோட மொபைல் நம்பர் நம்ம கைக்கு வர்றதுக்கு இவ்ளோ நாள் ஆயிடுச்சு, இனி அவர் டாக்குமெண்ட்சை ஸ்டோர் பண்ணி வச்சிருக்குற டிவைஸ் பத்தி தெரிஞ்சுக்கவும் அதை ஹேக் பண்ணவும் இன்னும் எவ்ளோ நாள் ஆகுமோ? அதுக்குள்ள இங்க இருக்குற குழப்பத்தையும் நான் சமாளிச்சாகணும்” என்று தனக்கும் சித்தார்த்துக்குமான விவாகரத்து வழக்கின் ஹியரிங்கை மறைமுகமாக குறிப்பிட்டாள்.

ரகு அவளை ஆதுரம் ததும்பும் விழிகளால் ஏறிட்டவன் “எல்லா குழப்பத்துக்கும் யசோ கிட்ட சொல்யூசன் இருக்கும்னு அனு சொல்லுவா… அப்பிடிப்பட்ட யசோவுக்கு என்ன குழப்பம்?” என்று வினவ யசோதரா தடுமாறினாள்.

அவளை கேள்வி கேட்டு சங்கடத்துக்குள்ளாக்க விரும்பாதவனாக மௌனமாக இருந்தவன் “உன் மனசை குழப்புறது என்னனு முதல்ல கண்டுபிடி… அதுக்கான சொல்யூசன் உன் கிட்ட தான் இருக்கும்… சப்போஸ் அந்த சொல்யூசன் இன்னொருத்தர் கிட்ட தான் இருக்குனா தி பால் இஸ் ஆன் யுவர் கோர்ட்னு அந்த இன்னொருத்தருக்குத் தெளிவா புரியவச்சிடு… அதை விட்டுட்டு நீ ஏன் குழம்புற?” என்று உபாயம் சொல்லிவிட யசோதராவின் மனக்குழப்பங்கள் மெதுவாய் அடங்கத் துவங்கியது.

இனி பீனிக்சையும் அவளது சொந்த வாழ்க்கையையும் யசோதரா பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் சென்னையிலிருந்து மேகமலைக்குக் கிளம்பினான் ரகு.

அவனது உபகரணங்களையும்  சாருலதா ஏற்கெனவே எடுத்து வந்திருக்க இந்திரஜித்திற்கு அடுத்த அறையில் அவனும் தங்கிக்கொண்டான். வழக்கமாக மாதவன் வந்தால் தங்கும் அறை அது தான்!

தனது நண்பர் என்று சொல்லி ரகுவை தனது அறைக்கு அடுத்த அறையில் தங்க வைத்தது இந்திரஜித் தான். இருவரும் மற்றவர் கண்களை உறுத்தாவிதத்தில் தங்கள் வேலையைத் துவங்கினர்.

அதே நேரம் ரகு சொன்ன கால இடைவெளியில் பீச் ஹவுசிற்கு சென்ற யசோதரா பீனிக்சை வந்தடையும் தகவல்களை தனது புலனாய்வுக்காக ஆவணப்படுத்த ஆரம்பித்தாள். அவள் அங்கே வருவதை காவலாளி மட்டுமே அறிவார்.

மற்ற பணியாளர்கள் யாரும் அறியாவண்ணம் வந்து சென்றவள் சித்தார்த்தின் கண்களில் சிக்கவே இல்லை. இவ்வாறு நாட்கள் கடக்க அவளுக்கும் சித்தார்த்துக்குமான விவாகரத்து வழக்கின் முதல் ஹியரிங்கும் வந்தது.

குடும்பநல நீதிமன்றங்கள் செயல்படும் விதம் மற்ற நீதிமன்றங்களில் இருந்து மாறுபடும். விவாகரத்து கோரும் தம்பதியினரின் வழக்கு எடுத்ததும் விசாரணைக்கு வருவதில்லை. முதலில் அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.

அந்த ஆலோசனைக்காக யசோதராவும் சித்தார்த்தும் நீதிமன்ற வளாகத்திலிருந்த குடும்ப நல ஆலோசனை அறையில் அமர்ந்திருந்தனர். ஆலோசகர் இருவரிடமும் விவாகரத்திற்கான காரணத்தைக் கேட்க நோட்டீஷில் குறிப்பிட்ட காரணத்தை அங்கேயும் கூறினாள் யசோதரா.

ஆலோசகர் சித்தார்த்தின் கருத்தை அறிய விழைந்தார். ஏனெனில் சமுதாயத்தில் பெரிய அந்தஸ்துடன் வலம் வரும் ஒரு தயாரிப்பாளரின் மகன், திரையுலகில் முக்கிய கதாநாயகனாக வலம் வருபவன் அத்துணை சுலபத்தில் அனைத்தையும் உதறிவிட்டு ஏதோ ஒரு ஆசிரமத்தில் குழந்தையுடன் சென்று தங்குகிறேன் என சொல்வதில்லையே!

சித்தார்த்தும் அந்நேரத்துக்காக தான் காத்திருந்தான் போல. ஆலோசகர் கேட்டதும் தன் மனதிலுள்ளதை கொட்டத் துவங்கிவிட்டான்.

“நான் அன்னைக்கு இருந்த நிலமை அப்பிடி சார்… என் முன்னாடி நின்னு அக்யூஸ்ட் ஒருத்தன் என் டாட்டரை கொன்னுடுவேன்னு சொல்லி சிரிச்சான்… எனக்கு அவனைப் பத்தி நல்லா தெரியும்… சொன்னதை செஞ்சிடுவான்னு பயந்து அன்னைக்கு நான் தவிச்ச தவிப்பு எனக்குத் தான் தெரியும் சார்… அப்போ எனக்கு இருந்த ஒரே வழி என் டாட்டரை அந்த ஆசிரமத்தோட கனெக்ட் ஆன ஸ்கூல்ல சேக்குறது மட்டும் தான்… ஏன்னா அங்க பேரண்ட்ஸ் குழந்தைகளைச் சந்திக்கக் கூட கெடுபிடி ஜாஸ்தி… அதனால தான் நான் முக்தி வித்யாலயாவ செலக்ட் பண்ணுனேன்… குழந்தைய அங்க அனுப்புறதுக்கு யசோ ஒத்துக்கல… அங்க குழந்தைய நல்லா கவனிக்க மாட்டாங்கனு அவ ஆர்கியூ பண்ணுனதால தான் நான் எல்லாத்தையும் விட்டுட்டு முக்தில போய் சேர்றேனு சொன்னேன்… நான் அப்பிடி சொன்னது என் டாட்டருக்காக தான்…. மத்தபடி எனக்கும் என் குடும்பம், ஒய்ப் மேல அக்கறை இருக்கு சார்”

அவனது நீண்ட விளக்கத்தைக் கேட்ட ஆலோசகர் யசோதராவை நோக்க அவளோ கைகளைக் கட்டியபடி அமர்ந்திருந்தாள். புருவங்கள் யோசனையில் வில்லாய் வளைய அவள் அமர்ந்திருந்த விதம் சித்தார்த்துக்கு நம்பிக்கை அளித்தது.

யசோதரா நேர்மையானவள்! தன் பக்கம்  உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்வாள் என்ற நம்பிக்கை அவனுள் எழுந்தது. ஆனால் யசோதரா முடிந்தவற்றை பற்றி யோசிக்கவில்லை! இனியும் முக்தி என்ற மாயையில் அவன் மூழ்கி காணாமல் போய்விடுவானோ என்ற அலைக்கழிப்பு அவளை இன்னும் அமைதி காக்க வைத்ததை சித்தார்த் அறியான்!

அவள் அவனது வாதத்தை ஏற்று மீண்டும் அவனுடன் வாழ விரும்பினால் பின்னாட்களில் முக்தியைக் காரணம் காட்டி அவமானப்படுத்தமாட்டான் என்பதற்கு என்ன நிச்சயம் என்பதே யசோதராவின் கேள்வி. அதை கேட்டும் விட்டாள் அவள்!

“இவர் மறுபடியும் ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி அந்த ஆசிரமத்துக்குப் போக ட்ரை பண்ணுனா எனக்குக் கோவம் வரும் சார்… கோவத்துல என்னென்னவோ பேசி கடைசில அவரும் நானும் எதிரெதிரா தான் நிப்போம்… அப்பிடி நடக்காதுங்கிறதுக்கு இவரால கேரண்டி குடுக்க முடியுமா?”

ஆலோசகரின் விழிகள் மீண்டும் சித்தார்த் பக்கம் சென்றது. அவன் தொண்டையைச் செருமிவிட்டு நிமிர்ந்தவன் தன்னை விட்டு சில அடி தொலைவிலிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த மனைவியை பரிதவிப்புடன் ஏறிட்டான்.

“எந்தத் தப்பையும் நான் ஒரு தடவைக்கு மேல செய்யமாட்டேன்னு ரொம்ப நம்புனேன்… ஆனா அதுல இருந்து நான் தவறிட்டேன் யசோ… இனிமே இந்தத் தப்பு நடக்காது… பிலீவ் மீ… அண்ட் கிவ் மீ அ சான்ஸ்… ஐ டோண்ட் வாண்ட் டூ லூஸ் யூ… ப்ளீஸ் ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் மீ யசோ”

வார்த்தைகளில் தொனித்த வருத்தமும் ஏக்கமும் ஒரு நிமிடம் யசோதராவின் இதயத்தை ஒரு நொடி நின்று இயங்கவைத்தது. அவன் இப்போது பொய் கூறவில்லை என்பது அவளுக்கு நிச்சயமானது. ஆனால் இது எத்தனை நாளைக்கு?

உடனே யசோதராவினுள் ஒரு வித ஏமாற்றம் சூழ்ந்தது. ஆலோசகர் மீண்டும் மீண்டும் திருமணம் உடைவதால் குழந்தைகள் எவ்விதத்தில் பாதிக்கப்படுகின்றனர் என்பதை இருவருக்கும் பொதுவான விளக்கமாய் அளித்தவர் யோசிப்பதற்கு கால அவகாசம் கொடுத்துவிட்டு அன்றைய கவுன்சலிங்கை முடித்துக் கொண்டார்.

இருவரும் ஆலோசனை அறையை விட்டு வெளியேறும் போது யசோதராவின் விழிகள் ஊடகத்தினர் யாரும் வந்திருப்பரோ என்று தயக்கத்துடன் சுழன்று மீண்டும் அவளருகே நடந்து வருபவனிடத்தில் தஞ்சமடைந்தது.

அவனோ எதைப் பற்றியும் கவலையின்றி கூலர்சை கண்களில் மாட்டிக்கொண்டு ஸ்டைலாக நடந்து சென்றான். கூலர்சில் ஒளிந்திருந்த விழிகள் ஓரப்பார்வையில் அவளது முகமாற்றத்தை அளவிட்டுக் கொண்டிருக்கிறது என்பதை யசோதராவால் கண்டுகொள்ள முடியவில்லை.

மனதில் பொருமித் தீர்த்தபடி நடந்தவள் திடீரென அவளது மெல்லிய கரத்தைப் பற்றிய அவனது கரத்தின் ஸ்பரிசத்தில் ப்ரேக் போட்டாற்போல் நின்றாள். சித்தார்த் அதைக் கண்டுகொள்ளாது வேகமாக நடந்தான். நடந்தான் என்பதை விட யசோதராவை இழுத்துச் சென்றான் என்று சொன்னால் நூறு சதவிகிதம் சரியாக இருக்கும்.

யசோதரா அவனிடமிருந்து கரத்தை உருவ முயன்றபடி அவன் இழுத்த இழுப்பிற்கு நடந்தவள்

“லீவ் மை ஹேண்ட் இடியட்… எல்லாரும் வேடிக்கை பாக்குறாங்க… இது உன்னோட யூனிட்டும் இல்ல, இங்க கேமராவும் இல்ல… இப்போ என் கையை விடலனா நான் பொல்லாதவளா மாறிடுவேன்டா” என்று பற்களைக் கடிக்க நீ எதையும் பேசிக்கொள் என்று கண்டுகொள்ளாமல் அவளை அழைத்துச் சென்றவன் தனது காரின் கதவைத் திறந்து அதனுள் அவளை அமர வைத்தான். இதிலும் திருத்தம், திணித்தான் என்பது பொருத்தம்.

யசோதராவோ அமர்ந்த வேகத்தில் கதவு அடைக்கப்பட மறுபக்க கதவைத் திறந்து அவளருகே அமர்ந்தவனை கொலைவெறியுடன் பார்த்து வைத்தாள்.

சாவகாசமாக கூலர்சை கழற்றி தனது ஷேர்ட்டின் நடுவே மாட்டிக்கொண்டவன்  உதடுகளில் புன்சிரிப்பு மின்ன கார்ச்சாவியைத் திருகினான்.

யசோதரா கார் கிளம்ப ஆயத்தமாவதை உணர்ந்து “என் கார் இங்க தான் நிக்குதுடா… அதை யார் எடுத்துட்டு வருவாங்க?” என்று பதற

“டோண்ட் ஒரி… அப்பாவோட ட்ரைவரை அனுப்பி உன் ஆபிஸ்ல விட சொல்லிட்டேன்… உன் கிட்ட பேசணும்னு தான் என்னோட அழைச்சிட்டுப் போறேன்.. உன் ஆபிஸ் போற வரைக்கும் நான் சொல்லப்போறதை கொஞ்சம் அமைதியா கேளு” என்று நிதானமாக உரைத்தவன் காரைக் கிளப்பினான்.

சாலையில் வேகமெடுத்த கார் ஜஸ்டிஷ் டுடேவை நோக்கி செல்ல சித்தார்த் தானெடுத்த முடிவை யசோதராவிடம் மறைக்காது உரைத்தான்.

“நீ இல்லாத இத்தனை நாள்ல நான் எல்லாத்தயும் இழந்துட்டேன் யசோ… என் சந்தோசம் மனநிம்மதி ரெண்டுமே நீயும் சர்மியும் தான்… நீங்க போறப்போ அந்த ரெண்டையும் என் கிட்ட இருந்து பிடுங்கிட்டுப் போயிட்டீங்க யசோ… நான் செஞ்சது பெரிய தப்பு… அதுக்காக நீ என்னை விட்டுப் பிரிஞ்ச நாள்ல இருந்து நான் அணு அணுவா சாகுறேன்டி… அது ஏன் உனக்குப் புரியல?”

யசோதரா அமைதி காத்தாள்! வெளிப்பார்வைக்கு அது வெறும் அமைதியாக இருக்கலாம். ஆனால் உண்மையில் அவள் அவனது வார்த்தைகளைப் பகுப்பாய்வு செய்து கொண்டிருந்தாள். வழக்கம் போல உள்ளத்தின் உணர்வை பிரதிபலிக்கும் வார்த்தைகள் தான். ஆனால் இந்த உணர்வுகள் நிரந்தரமாக இருக்கவேண்டுமே!

இன்று பிரிவு வேகத்தால் அவன் இவ்வாறு பேசலாம்! ஆனால் மீண்டும் இணைந்த பின்னர் பழைய அலட்சியம் திரும்பி வந்துவிட்டால் யசோதராவால் அதை தாங்கிக்கொள்ள முடியாது.

பலவித யோசனைக்குவியல்களுடன் ஜஸ்டிஷ் டுடேவும் வந்துவிட அதன் வளாகத்தினுள் நுழைந்து அரைவட்டமடித்து நின்றது சித்தார்த்தின் கார். இறங்க முயன்றவளை தடுத்தவன் “ஐ மிஸ் யூ யசோ” என்று மட்டும் சொல்லிவிட்டு எக்கி கதவைத் திறந்தான்.

அவனது குரலின் உருக்கம், அந்த நொடி நேர அருகாமை இரண்டும் சேர்ந்து யசோதராவிற்குள் உருப்பெற்றிருந்த பிரிவு என்ற கற்சிலைக்கு இளக்கத்தைக் கொண்டு வர முயல அதை வெளிக்காட்டிக்கொள்ளாது இறங்கியவள் அவனைத் திரும்பி பாராமல் வேகமாய் அலுவலகத்தினுள் சென்று மறைந்தாள்.

செல்பவளைப் பார்த்தபடி காரை எடுத்த சித்தார்த்தின் மனம் இம்முறை சோர்ந்து போகவில்லை. ஏனெனில் அவன் மனைவி சண்டையிடுவதை நிறுத்திவிட்டு யோசிக்க ஆரம்பித்துவிட்டாள்! இனி அவள் நியாயமாய் முடிவெடுப்பாள் என்ற நம்பிக்கையுடன் மாதவனின் இல்லத்தை நோக்கி காரைச் செலுத்தினான் சித்தார்த்.

மழை வரும்☔☔☔