☔ மழை 31 ☔

தனியார்மய–தாராளமயத்தால் ஆதாயமடைந்துள்ள நடுத்தர வர்க்கத்தினர், வேலைப்பளுவால் ஏற்படும் மன உளைச்சலுக்குத் தீர்வாக யோகாசனம், தியானம் முதலானவற்றால் அமைதியும் நிம்மதியும் கிடைக்கும் என்று நம்புகின்றனர். இத்தகைய சாமியார்களின் மையங்களில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்து, அவர்கள் யோகா, தியானம் கற்றுக் கொள்வதில் பெருமை அடைகின்றனர். முற்றும் துறந்த ஒரு சாமியாருக்கு எதற்காக இவ்வளவு பிரம்மாண்டமான சொத்துக்கள், இந்தச் சொத்துக்கள் எப்படி வந்தன என்று இயல்பாக எழும் கேள்விகூட இவர்களது மனதில் எழுவதில்லை. இத்தகைய சாமியார்கள் பள்ளிகள், கல்லூரிகள் கட்டி கட்டணக் கொள்ளை நடத்துவதைப் பற்றி இவர்கள் கேள்வி எழுப்புவதுமில்லை. மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை இத்தகைய சாமியார்கள் நடத்திக் கொண்டிருப்பது இந்த வர்க்கத்தினருக்கு முரண்பாடாகத் தெரியவில்லை. இந்துஸ்தான் லீவர் போன்ற ஏகபோக நிறுவனங்கள்தான் தொழில் செய்ய வேண்டுமா, சாமியார்கள் செய்யக் கூடாதா என்று அவர்களின் கார்ப்பரேட் வர்த்தகத்தை இவர்கள் அங்கீகரித்து ஆதரிக்கவே செய்கின்றனர்.

                                                                                         –வினவு தளத்தின் கட்டுரை, 30.09.2016

ஜஸ்டிஷ் டுடேவில் முக்தி ஃபவுண்டேசன் குறித்த புலனாய்வு போய் கொண்டிருக்க யசோதரா அதில் மூழ்கி தனது மனவருத்தத்தை தூர நிறுத்த முயன்று கொண்டிருந்தாள். கூடவே சர்மிஷ்டாவின் பாதுகாப்பிலும் ஒரு கண்ணை வைத்திருந்தாள்.

அதே நேரம் ரகு தொழில்நுட்ப ரீதியாகத் திரட்ட வேண்டிய தகவல்கள் அனைத்தையும் திரட்ட ஆரம்பித்திருந்தான். முக்தி ஃபவுண்டேசனின் வலைதளத்தை அலசி ஆராய்ந்தவன் தனக்குக் கிடைத்த தகவல்களை குழுவினரிடம் பகிர்ந்து கொள்ள அன்றைய மீட்டிங்கில் பேசிக்கொண்டிருந்தான்.

“அவங்களோட வெப்சைட்ஸ், சர்வர் மெயிண்டனன்ஸ், ஆப்ஸ் இது எல்லாத்தையும் கண்காணிக்க அவங்களே ஐ.டி டீம் வச்சிருக்காங்க… சைட் அண்ட் ஆப்ஸ் சம்பந்தப்பட்ட வேலைய அவங்களே முடிச்சிடுவாங்க… சோ நோ மோர் அவுட்சோர்ச்சிங்… அப்புறம் பி.ஆர் டீம்ல ரைட்டர்ஸ், கன்டெண்ட் கிரியேட்டர், ஸ்கிரிப்ட் ரைட்டர்சை வச்சிருக்காங்க… ருத்ராஜியோட ஸ்பீச்சும், சோஷியல் மீடியா போஸ்டும் ரொம்ப இண்டலெக்சுவலா இருக்கும்னு சொல்லுறாங்கள்ல, அதுக்குக் காரணம் இந்த ரைட்டர் க்ரூப்பா கூட இருக்கலாம்… இது வெறும் அஸெம்சன் மட்டுமே! தென் ஃபினான்ஸ், அட்மினிஸ்ட்ரேசன், கஸ்டமர் கேர்னு எல்லாத்துக்கும் தனித்தனி டிப்பார்ட்மெண்ட்ஸ் மேகமலை ஆஸ்ரமத்துக்குள்ளவே ரன் ஆகுது… லாஸ்ட் மன்த் அதுல வேகன்ஸி இருக்குனு சைட்ல அனவுன்ஸ் பண்ணிருக்காங்க பாருங்க… சோ இவங்க எந்த வேலைக்கும் வெளி நிறுவனங்களை எதிர்பாக்கல… எல்லா ஒர்க்கையும் பாக்க ஸ்டாஃப்ஸ் இருக்காங்க… இவங்களோட ஷாப்பிங் சைட்ல பர்சேஷ் பண்ணுனா பில் வருது… அதோட சேர்ந்து டொனேசன் ரெசிப்டும் வருது… அதாவது நம்ம கிட்ட விக்குற புராடெக்டோட பிரைஸ்ல ஒரு குறிப்பிட்ட பர்செண்டேஜை இவங்க டொனேசனா எடுத்துக்கிறாங்க… இப்போதைக்கு இதை மட்டும் தான் கண்டுபிடிக்க முடிஞ்சது சீஃப்”

அவன் பேசி முடிக்கவும் விஷ்ணுபிரகாஷ் யோசனையில் ஆழ்ந்தான். நாராயணனிடம் மெதுவான குரலில் ஏதோ முணுமுணுத்தவன் பின்னர் தொண்டையைச் செருமிக் கொண்டான்.

“முக்திக்கு எதிரா சிலர் கேஸ் ஃபைல் பண்ண ஆரம்பிச்சிட்டதால சர்வ ருத்ரானந்தா லீகலா தன்னோட பாதுகாப்புக்கான ஏற்பாட்டைச் செய்ய ஆரம்பிச்சிருக்கார்னு நம்பிக்கையான வட்டாரத்தில இருந்து நியூஸ் வந்திருக்கு… அதோட முன்ன மாதிரி இல்லாம இப்போ மேகமலை ஆஸ்ரமத்துல டிவோட்டிஸ், வாலண்டியர்ஸ்லாம் அதிகளவுல தங்கிருக்காங்க… ரகு சொல்லுற மாதிரி நேர்ல போய் அங்க விசிட் பண்ணுனாலும் கேமரா, மொபைல்லாம் கொண்டு போக அனுமதி இல்லயாம்…. சோ நம்ம கொஞ்சம் ரிஸ்க் எடுக்கணும்”

குழுவினர் அனைவரும் தலையை ஆட்டி அவன் சொன்ன அனைத்தையும் கேட்டுக்கொண்டனர். அத்துடன் மீட்டிங் முடிந்துவிட அனைவரும் கலைந்தனர்.

***********

“ஒய் டோண்ட் யூ பிலீவ் மீ? ஒரு தடவை நடந்த தப்பு இன்னொரு தடவை நடக்காது யசோ” உணர்ச்சிவசப்பட்டு வசனம் பேசியபடி எதிரே நின்ற கதாநாயகியை நோக்கினான் சித்தார்த்.

அவள் புரியாது விழிக்க “கட் கட்” என்று இடையிட்டது மாதவனின் குரல். கையில் மைக் சகிதம் வந்தவன் சித்தார்த்தைத் தனியே அழைத்துச் சென்றான்.

“சித்து இதோட ஆறு டேக் போயாச்சு… நீ ஒவ்வொரு தடவையும் யசோனு சொல்லுற… இன்னும் அதையே நினைச்சிட்டிருக்கியாடா சித்து? ஷூட் முடிச்சு போய் கேக்குறேன்னு தானே சொன்ன? உன்னால கான்சென்ட்ரேட் பண்ண முடியலனா நம்ம வேணும்னா நாளைக்கு இந்தச் சீனை ஷூட் பண்ணிக்கலாம்டா” என்றான் அவன்.

“நோ மேடி… என் ஒருத்தனுக்காக ஷெட்யூல்ல எந்த சேஞ்சும் வரவேண்டாம்டா… இன்னைக்கு ஷூட் பண்ணாத சீனை நாளைக்கு ஷூட் பண்ணுனா டெக்னீஷியனுக்குச் சிரமம்… புரொடியூசருக்கு இதால எக்ஸ்ட்ரா தலைவலி… இன்னைக்கே முடிச்சிடலாம்டா… ஒர்க் வேற, பெர்சனல் ஒரிஸ் வேற” என்று கூறிவிட்டு வெகு சிரமத்துடன் மனதை ஒருமுகப்படுத்தினான்.

சொன்னபடி அந்தக் காட்சியை நடித்தும் முடித்தான். அன்று வெளிப்புற படப்பிடிப்பு என்பதால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேரவனில் சென்று அமர்ந்தவன் தனது கோட்டில் மடித்து வைத்திருந்த காகிதத்தை எடுத்தான்.

இந்தக் காகிதம் தான் சித்தார்த்துக்கும் யசோதராவுக்கும் இடையிலான காதலையும் ஏழாண்டு திருமண பந்தத்தையும் முறிப்பதற்கான முதல் அறைகூவல்!

காலையில் அவனது மேலாளர் ஜெகன்மோகன் அதை அவனிடம் நீட்டிவிட்டு சென்றதும் வேறேதோ நோட்டீஷ் என்று அலட்சியப்படுத்திவிட்டான். படப்பிடிப்புக்குக் கிளம்பும் போது தான் உற்றுக் கவனித்து பழுப்பு வண்ண உறையைப் பிரித்துப் பார்த்தான்.

யசோதரா தனக்கும் அவனுக்குமான மணவாழ்க்கையை முறித்துக் கொள்ள விரும்புவதாக அனுப்பியிருந்த நோட்டீஷ் அது! படித்ததும் முதலில் முணுக்கென்று ஒரு வலி இதயத்தில் எடுத்தது. பின்னர் அந்த வலி பிரவாகம் போல ஒவ்வொரு சிரை தமனிக்குள்ளும் பரவ சொல்லவொண்ணா வலி என்ற வார்த்தையின் அர்த்தத்தை அன்று அனுபவரீதியாக அறிந்துகொண்டான் சித்தார்த்.

ஒரு கட்டத்தில் வேதனை மறைய கோபம் துளிர்த்தது. இது வரை எந்த முடிவையும் இருவரும் சேர்ந்தே எடுத்துப் பழகியிருக்க மணமுறிவு சம்பந்தப்பட்ட முடிவை மட்டும் அவள் தனியாக எடுப்பாளா என்ற கேள்வி அவனைக் கோபம் கொள்ள வைத்தது.

அவன் கோபமும் தவிப்புமாக அல்லாடிய போதே காவல்துறை ஆணையர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. ராகேஷ் ஏற்பாடு செய்திருந்த கூலிக்குக் கொலை செய்யும் ஆளை காவல்துறையினர் கைது செய்துவிட்டனர் என்ற தகவல் அவனை அடையவும் சித்தார்த் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

அவனது பயத்தின் அடிப்படையே இல்லையென்றால் அவன் ஏன் சர்மிஷ்டாவை முக்தி வித்யாலயாவிற்கு அனுப்ப போகிறான்? உடனே காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு விரைந்தவன் அந்நபருடன் கூட்டாளிகள் யாரும் உள்ளனரா என்று விசாரித்தான்.

ஏ.சி.பி ஒருவர் அந்நபருடன் சேர்த்து மொத்த கும்பலையும் கைது செய்துவிட்டாதாகக் கூறியவர் இனி அவர்களால் சித்தார்த்தின் குடும்பத்தினருக்கு எந்தப் பாதிப்பும் வராது என்று உறுதியளித்தப் பிறகு ஆசுவாசமடைந்தான் அவன்.

காவல்துறை ஆணையர் அலுவலகத்திலிருந்து வெளியே வரும் போது இனி யசோதராவை சமாதானம் செய்வது எளிது என்று அவனது மனம் கூறினாலும் மூளையோ வாய்ப்பில்லை ராஜா என்று கேலி செய்தது.

யசோதராவின் மனநிலை எவ்வாறிருக்கும் என்று யோசித்தபடி குழப்பமுற்று படப்பிடிப்பு தளத்தை அடைந்தவனுக்கு அன்றைய காட்சியில் மனம் இலயிக்கவில்லை. எப்படியோ வெகு சிரமத்துடன் நடித்து முடித்தான்.

இதோ இன்னும் சிலமணி நேரங்கள் தான்! அதன் பின்னர் எப்பாடுப்பட்டேனும் யசோதராவைச் சமாதானம் செய்துவிடலாம் என்ற நம்பிக்கை அவனுக்கு. அதனால் தானோ என்னவோ அந்த வக்கீல் நோட்டீஷை அவன் பெரிதுபடுத்தவில்லை.

தான் நடந்து கொண்ட விதமும், பேசிய வார்த்தைகளும் தவறு என்பதில் சித்தார்த்திற்கு மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரம் யசோதரா இம்முடிவை எடுக்குமாறு தூண்டியதும் தனது வார்த்தைகள் தான் என்பதில் அவனுக்கு மறுப்பில்லை.

இத்தனைக்கும் அடிப்படை சர்மிஷ்டாவை முக்தி வித்யாலயாவில் சேர்த்தால் தான் பாதுகாப்பு என்ற தனது பிடிவாதம் தான் என்பதை அவன் உணர்ந்திருந்தான். இப்போது தான் அதற்கு அவசியமே இல்லையே! இனி யசோதரா மனம் மாறி தங்கள் வீட்டிற்கு வருவதற்கு தடையேதும் இல்லை என்று கனவுக்கோட்டை கட்டினான் சித்தார்த்.

*************

லோட்டஸ் ரெசிடென்சி…

சாருலதாவும் இந்திரஜித்தும் ஒருவரையொருவர் முறைத்தபடி அமர்ந்திருக்க அவர்களுக்கு எதிர்புற இருக்கையில் கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள் யசோதரா. மூவரின் முன்பும் மூன்று கோப்பைகள் காபியுடன் வீற்றிருக்க அதன் நறுமணம் கூட அந்த இருவரின் முறைப்பைக் குறைக்கவில்லை.

இவர்கள் குடிக்கப்போவதில்லை என்று தெரிந்துகொண்ட யசோதரா தனது கோப்பையை எடுத்து ஒரு மிடறு காபியை அருந்தி தொண்டையை ஈரமாக்கிக் கொண்டாள்.

பின்னர் நிதானமாக அவர்களை ஏறிட்டவள் “புரொபசன் வேற, பக்தி வேறனு உன்னால உறுதியா இருக்க முடியுமா சாரு?” என்று வினவ சாருலதா வேகமாக மேலும் கீழுமாகத் தலையாட்டினாள்.

இந்திரஜித்தோ “இவளா? கிழிச்சா… அந்த ருத்ராஜிய பாத்துட்டா இவ அப்பிடியே பக்தி பரவசத்துல மூழ்கிடுவா அண்ணி… அவரோட மோட்டிவேஷனல் ஸ்பீச்சுக்கு அம்மணி ஃபேனாம்… கடுப்பா இருக்கு அண்ணி… அங்க தப்பு நடக்குதுனு தெரிஞ்சும் நல்ல ஆஃபர்னு சொல்லிட்டு அங்க போறதுலாம் எனக்குச் சரியா படல… அதை சொன்னதுக்கு என் புரொபசன்ல நான் என்னவும் பண்ணுவேன், உனக்கென்னனு சொன்னா… இப்போ நானும் அதையே தான் சொல்லுறேன், நான் பேசலனு இவ வருத்தப்பட்டா எனக்கென்ன?” என தன் பிடிவாதத்தில் இம்மியளவு கூட விட்டுக்கொடுக்காது முறுக்கினான்.

சாருலதா பரிதாபமாக முகத்தை வைத்துக்கொள்ளவே “நீங்கலாம் ரொம்ப பெரிய ஆளு… இனிமே உங்களுக்கு என்னோட ஃப்ரெண்ட்ஷிப் ஏன் தேவை சொல்லுங்க… உங்க புரொபசன், உங்க டிசிசன்… இனி எதுலயும் நான் தலையிட மாட்டேன்” என்று கறாராகக் கூறிவிட்டான்.

அவனது கறார் பேச்சில் முகம் மாறிய சாருலதா அவனது டீசர்ட்டின் கழுத்துப்பகுதியைப் பிடித்து தன்புறம் திருப்பினாள்.

“நீ எனக்கு வெறும் ஃப்ரெண்ட் மட்டும் தானாடா?”

கண்களில் கோபம் கொப்புளிக்கக் கேட்டவளுக்கு என்ன பதில் சொல்வது என புரியாது இந்திரஜித் விழிக்க யசோதராவோ இதென்ன கேள்வி என்பது போல சாருலதாவைப் பார்த்தாள்.

அவள் மீண்டும் இந்திரஜித்திடம் “நீ எனக்கு ஃப்ரெண்ட் மட்டும் தானானு கேட்டேன் ஜித்து” என்று கடினக்குரலில் வினவ அப்போது தான் தனது அண்ணன் மனைவி தங்களின் உரையாடலுக்கு ரெஃபரியாக இருக்கிறாள் என்பதே இந்திரஜித்திற்கு உறைத்தது.

வேகமாக தனது டீசர்ட்டின் கழுத்துப்பட்டியை சாருலதாவிடமிருந்து உருவியவன் “இல்ல” என்று கூறவும் யசோதரா திகைக்க சாருலதாவின் முகத்தில் இறுக்கம் மெதுமெதுவாய் தளரத் தொடங்கியது.

ஆனால் அவள் இயல்புக்குத் திரும்பும் முன்னரே “அதாவது இப்போ நீ என்னோட ஃப்ரெண்ட் இல்லனு சொன்னேன்… பிகாஸ் நீ பேசுன பேச்சு அப்பிடி… இனிமே நமக்குள்ள நோ மோர் ஃப்ரெண்ட்ஷிப்… உன் இஷ்டம் போல நீ என்ன வேணும்னாலும் பண்ணு.. எங்க வேணும்னாலும் போ… ஐ டோன்ட் கேர்… அண்ட் ஐ வோண்ட் கொஸ்டீன் யூ… இனாஃப்?” என்று இறுக்கமாக கூறியவன் அவ்வளவு தான் என்பது போல பேச்சை முடித்துக்கொண்டான்.

அவன் பேசி முடிக்கவும் பொலபொலவென சாருலதாவின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. யசோதரா என்னடா இது என்பது போல இந்திரஜித்தைப் பார்க்க அவனோ

“விடுங்கண்ணி… இவளுக்கு இதே வேலையா போச்சு… தன்னோட ஹார்ட் ஒர்க்கால கிடைச்ச அவார்டை கூட ருத்ராஜி அருளால கிடைச்சதுனு இவ சொன்னப்ப நான் திட்டுனேன்… அப்போ நீங்க எல்லாரும் என்னை சமாதானம் பண்ணுனீங்க… இன்னைக்கு நம்ம குடும்பம் ரெண்டா பிரிஞ்சு கிடக்கிறதுக்கு அவர் காரணமானு எனக்குத் தெரியாது… ஆனா அவங்க மேல வச்ச அலிகேசனை பொய்னு ப்ரூவ் பண்ணுற வரைக்கும் என் பார்வைல அவங்க தப்பு பண்ணுனவங்க தான்… இவ அவங்க ஆஃபரை ஏத்துக்கிட்டேன்னு சொன்னது கொஞ்சம் கூட சரினு படல அண்ணி… நான் அவளை கண்ட்ரோல் பண்ணுறேன்னு நினைக்கிறா… ஆனா என் ஃப்ரெண்ட் எதுலயும் மாட்டிக்கக் கூடாதுனு எனக்கு அக்கறை இருக்காதா? ஷீ டசிண்ட் அண்டர்ஸ்டாண்ட் மை வேர்ட்ஸ்… சோ ஐ டோண்ட் வாண்ட் டு இண்டர்ஃபியர் இன் ஹெர் பிசினஸ்” என்று பேச்சை முடித்துக்கொண்டான்.

இது இன்றோடு தீரும் பிரச்சனையில்லை என்று புரிந்தாலும் சாருலதாவைச் சமாதானம் செய்யவேண்டுமே! அப்போது தான் யசோதராவின் தலையில் மணி அடித்தது. கண்கள் பளிச்சிட இருவரையும் நோக்கியவள்

“நீங்க ரெண்டு பேரும் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா?” என்று கேட்கவும் சாருலதாவின் அழுகை நின்றது. இந்திரஜித் குழப்பத்துடன் யசோதராவைப் பார்த்தான்.

சாருலதா மூக்கை உறிஞ்சியவள் “நீங்க என்ன சொன்னாலும் நான் கேப்பேன்கா… சொல்லுங்க” என்றாள்.

உடனே “நானும் கேப்பேன் அண்ணி” என்றான் இந்திரஜித் வேகமாக.

உடனே தனது வலக்கரத்தை அவர்கள் முன்னே நீட்டினாள் யசோதரா. இருவரும் புரியாது விழிக்கவும்

“நம்ம மூனு பேரும் அவங்கவங்க புரொபசனை உயிரா நினைக்கிறவங்க… சோ உங்க புரொபசன் மேல ஆணையா நான் சொல்லப் போற விசயத்தையோ கேக்கப் போற உதவியையோ வெளிய சொல்ல மாட்டிங்கனு எனக்கு இப்போ ப்ராமிஸ் பண்ணுங்க” என்றாள் யசோதரா.

சாருலதா ஒரு நொடி விழிக்க இந்திரஜித் வேகமாக யசோதராவின் கரத்தில் தன் வலக்கரத்தை அடித்தான்.

“ப்ராமிஸ் அண்ணி… நீங்க சொல்லுற எதையும் நான் யார் கிட்டவும் ஷேர் பண்ண மாட்டேன்”

அடுத்த நொடி சாருலதாவும் வீம்பிற்காக வாக்களிக்க யசோதரா இருவரது கரத்தையும் பிடித்துக்கொண்டவள்

“ஜஸ்டிஷ் டுடேவோட ஸ்டிங்க் ஆபரேசனுக்கு உங்க உதவி எனக்குத் தேவை… ஐ மீன் எனக்கும் ரகுவுக்கும் தேவை” என்றாள் யசோதரா.

இருவரும் புரியாது விழிக்க அவள் தங்களது ஆபரேசன் குறித்து விளக்க ஆரம்பித்தாள்.

“மேகமலை ஆசிரமத்துல ஏகப்பட்ட அபிஷியல் ஒர்க்ஸ் அண்ட் டெக்னாலஜிக்கல் ஒர்க்ஸ் நடக்குது… அவங்க ஹில் ஏரியா கன்சர்வேசன் அத்தாரிட்டி (Hill Area Conservative Authority) கிட்ட அப்ரூவல் வாங்க அப்ளை பண்ணுன எவிடென்ஸ், அவங்க இது வரைக்கும் டொனேசன்ங்கிற போர்வைல கலெக்ட் பண்ணுன அமவுண்ட் பத்தின டாக்குமெண்ட்ஸ், அவங்க கலெக்ட் பண்ணுற மனிலாம் எங்க போகுதுங்கிற டீடெய்ல்ஸ் இது எல்லாமே எங்களுக்குத் தேவை… என்னால அந்த ஆசிரமத்துக்கு வரமுடியாது… ஏன்னா நான் அவங்க மேல கேஸ் போட்டு அதுல ஜெயிச்சவ… ஆனா சாருவோட ஒர்க்குக்காக அவளும், சித்துவோட தம்பிங்கிற போர்வைல நீயும் அங்க போகலாம்… உங்களை யாருமே சந்தேகப்பட மாட்டாங்க… உங்க கூட ரகுவும் வருவான்… அவனோட ஃபேஸ் மீடியா வட்டாரத்துல யாருக்கும் தெரியாது… சோ அவனை உன்னோட ஃப்ரெண்ட்னு சொல்லி கூட்டிட்டுப் போயிடலாம் ஜித்து”

சாருலதா கண்களை உருட்டி விழிக்க இந்திரஜித் அவளது செய்கையில் கடுப்புற்றான்.

“ருத்ராஜிக்கு எதிரா நான் எப்பிடி இதெல்லாம் பண்ணுறது?” என்று அவள் தயங்க

“அப்போ உனக்கே அந்த ருத்ராஜி தப்பு பண்ணுறார்னு தோணுது போல, அவரை மாட்டிவிட இஷ்டமில்லாம நழுவுற” என்றான் இந்திரஜித் எகத்தாளத்துடன்.

“அதுல்லாம் ஒன்னுமில்லயே! எனக்கு ருத்ராஜி மேல நம்பிக்கை இருக்கு” என்று அவள் ரோஷப்பட

“அப்போ அண்ணிக்கு ஹெல்ப் பண்ணுறது” என்று தெனாவட்டாக அவன் மொழிய முகத்தை திருப்பிக்கொண்ட சாருலதா யசோதராவிடம் திரும்பினாள்.

“உங்க ஸ்டிங்க் ஆபரேஷனுக்கு நானும் ஹெல்ப் பண்ணுறேன்கா… இத ருத்ராஜி மேல இருக்குற நம்பிக்கைகாக செய்யல… உங்க மேல இருக்குற அன்புக்காக செய்யுறேன்” என்று கூற யசோதரா இருவரையும் நன்றியுணர்ச்சியுடன் பார்த்து புன்னகைத்தாள்.

“சாரு எந்த டேட்ல அங்க வரணும்னு டீடெய்ல் கேட்டுக்கோ… ஜித்து நீயும் ரகுவும் கலந்து பேசி உங்க ப்ளானை டிசைன் பண்ணுங்க… அதுல சாருவயும் சேத்துக்கோங்க… முக்கியமான விசயம், சாரு ரகு ரெண்டு பேரோட பாதுகாப்புக்கும் நான் உன்னைத் தான் நம்புறேன்… ரகுவுக்கு ப்ரெயின் ஸ்ட்ராங், ஆனா ரெண்டு அடி அடிச்சா கவுந்து விழுந்துடுவான்… சாரு…” என்றவளின் பேச்சில் இடையிட்டாள் சாருலதா.

“நான் கராத்தேல ப்ளாக் பெல்ட் அக்கா… சோ எனக்குப் பாடிகார்ட் வேலை பாக்குற வேலை உங்க கொழுந்தனாருக்கு மிச்சம்” என்று கூறிவிட்டு உதட்டைச் சுழித்துக் கொண்டாள்.

அதற்கு இந்திரஜித் சூடாக பதிலளிக்க வந்த சமயத்தில் ஹாலிற்கு யாரோ வரும் சத்தம் கேட்டது. ஷூ கால்களின் அரவம் சமீபத்தில் கேட்கவும் யசோதராவின் புருவங்கள் யாராக இருக்கக்கூடுமென்ற கேள்வியில் முடிச்சிட்டுக் கொண்டன.

மூவரும் கேள்வியுடன் பார்க்கும் போது யசோதராவின் அலுவலக பயன்பாட்டிற்கான அறையின் வாயில் நிலையைத் தொட்டபடி நின்றிருந்தான் சித்தார்த்.

இந்திரஜித் தமையன் சமாதானம் பேசவந்திருப்பான் என்று எண்ணினான். சாருலதாவின் எண்ணமும் அதுவே. ஆனால் யசோதராவோ அவனது கையில் வைத்திருந்த நோட்டீஷைப் பார்த்துவிட்டாள். அவளை அறியாது மெதுவாய் வேதனை மூள யசோதராவின் கண்கள் பனிக்கத் துவங்கியது.

மழை வரும்☔☔☔