☔ மழை 11 ☔

“இந்தியர்களாகிய நாம் அற்புதங்களில் நம்பிக்கை உடையவர்கள். அத்துடன் நமது துன்பத்திலிருந்து ரட்சகர் ஒருவர் நம்மை விடுவிப்பார் என எண்ணுபவர்கள். இதுவே போலி மதகுருமார்கள் மற்றும் சாமியார்களிடம் நாம் ஏமாறுவதற்கு முதல் காரணமாக அமைகிறது”

       -பிரபீர் கோஷ், General Secretary of the Science and Rationalists’ Association of India.

ஆளுங்கட்சி மாநில தலைமை அலுவலகம், தி.நகர்…

மூன்று மாடிகளுடன் நின்றிருந்த அந்தக் கட்சி தலைமை அலுவலகம் அன்று பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தது. காரணம் அதன் கொள்கை பரப்பு செயலாளர் திடீரென கூட்டிய பொதுக்குழு கூட்டம். அதில் கலந்துகொள்ள மாவட்டளவில் உள்ள அரசியல் பிரமுகர்கள் அனைவரும் வருகை தந்திருந்தனர்.

பொதுக்குழு கூட்டப்படும் கான்பரன்ஸ் ஹால் அமைந்திருக்கும் தரை தளத்தில் தான் சலசலப்பு கேட்டது. ஏனெனில் அமைச்சர்கள் தவிர கட்சி பிரமுகர்கள் அனைவரும் அங்கே தான் குழுமியிருந்தனர். கூடவே சட்டமன்ற உறுப்பினர்களும்.

கட்சித்தலைவரின் அலுவலக அறை அமைந்திருக்கும் இரண்டாவது தளத்தில் குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்குமளவுக்கு நிசப்தம். அங்கே அரைவட்ட வடிவத்தில் அனைவரும் அமர்ந்திருக்க அவர்களுக்கு நடுநாயகமாக கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார் முதலமைச்சரான அறிவழகன். அவரருகே இருந்த கட்சித்தலைவரான பார்த்திபன் யோசனையில் சுருங்கிய நெற்றியுடன் முதலமைச்சரின் காதில் ஏதோ சொல்ல அவரும் அதை ஆமோதித்தார்.

“அபி தம்பியும் வந்துட்டா மீட்டிங்கை ஆரம்பிச்சிடலாம்… ஆனா ஜெயசந்திரனை என்ன பண்ணுறது பார்த்திபன் ஐயா?”

“கட்சி ரீதியா அபி என்ன முடிவு எடுத்தாலும் எனக்குச் சம்மதம் அறிவழகன்… ஆனா நீங்க சி.எம்… உங்களோட அதிகாரத்தை பயன்படுத்தி ஜெயசந்திரன் மேல ஆக்சன் எடுக்க விரும்புனா தலைமை அதுக்கு குறுக்க நிக்காது… அதுக்கு நான் கேரண்டி”

இந்த இருவரின் பேச்சிலும் இடம்பெற்ற ஜெயசந்திரனும் அவரது மகன் கிரிதரனும் மூன்றாவது தளத்தில் இருந்த அபிமன்யூவின் அலுவலக அறையில் அவன் முன்னே தலைகுனிந்து அமர்ந்திருந்தனர். செய்த காரியம் அப்படி!

அபிமன்யூ அவர்களை இறுக்கம் தெறிக்கும் விழிகளுடன் பார்த்துவிட்டு தன்னருகே அமர்ந்திருந்த நண்பன் அஸ்வினிடம் திரும்பினான்.

“மத்த மினிஸ்டர்ஸ் கிட்ட கேட்ட வரைக்கும் எல்லாமே சில்லறை பிரச்சனை தான் அச்சு… ஆனா இவர் பண்ணிருக்குற காரியம் தான் ஊழலா நம்ம முன்னாடி நின்னு மிரட்டுது… வில்லேஜ் பஞ்சாயத்துல ஆரம்பிச்சு கார்பரேசன் வரைக்கும் எல்லா இடத்துலயும் இருக்குற பழைய சோடியம் அண்ட் சோலார் லைட்ஸை எடுத்துட்டு எல்.ஈ.டி லைட் போடுறதுக்கும், அதுக்கு எர்த் வயர் கனெக்சனும் குடுக்குறதுக்கும் அலாட் பண்னுன பணத்துல கையை வச்சிருக்கார்… இதுக்கு இதோ இந்த மனுசனும் கூட்டு… இப்போ என்ன பண்ணுறதுடா?”

அஸ்வின் பேனாவினால் மேஜையில் தட்டியவன் திடீரென “அந்தப் பணம் இப்போ எங்க இருக்குது?” என்று வினவ

“அதுலாம் பினாமிங்க கிட்ட பத்திரமா இருக்கு லாயர் சார்” என்று கிரிதரனிடமிருந்து பதில் வந்தது.

“சோ இன்னும் கேஷா தான் வச்சிருக்கீங்க… எப்பிடிய்யா எவனோ ஒருத்தனை நம்பி இவ்ளோ பெரிய அமவுண்டை குடுத்து வைக்கிறீங்க?” நிஜமாகவே ஆச்சரியமாக இருந்தது அஸ்வினுக்கு.

“நான் அப்போவே நாலைஞ்சு காலேஜ், ஹாஸ்பிட்டல், ஹோட்டல்னு கட்டலாம்னு சொன்னேன் தம்பி… எங்க இவன் என் பேச்சைக் கேட்டான்?”

கடுப்புடன் கூறிய ஜெயசந்திரனை அபிமன்யூ சினம் பொங்கும் விழிகளால் எரிக்க ஆரம்பித்தான்.

“உங்களோட ஊழல் புராணத்தையும் இன்வெஸ்ட்மெண்ட் பாலிசியையும் கேக்குறதுக்காக உங்களை இங்க வரச் சொல்லல… அந்த விஜிலன்ஸ் ஆபிசர் கிட்ட நீங்க பேசுன டெலிபோன் டேப்ஸ் இப்போ சோசியல் மீடியால உலா வருது… இதால இப்போ கட்சி தலைமைக்குத் தான் கெட்டப்பேரு… இதுக்கு என்ன பதில் சொல்லப்போறீங்க?”

தந்தையும் மகனும் தலையைக் குனிந்துகொண்டனர். அஸ்வினும் அபிமன்யூவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

“அப்போ கட்சிபொதுக்குழுவுல உங்களை கட்சியை விட்டு நீக்கிடலாம்னு தீர்மானம் நிறைவேத்திடலாமா?”

எள்ளலுடன் வந்து விழுந்த கேள்வியில் இருவரும் திடுக்கிட்டு விழித்தனர். ஏதோ அவன் அநியாயமாக அவர்கள் இருவரையும் கட்சியை விட்டு நீக்கப்போவதை போல இருந்தது அவர்களின் இந்த அதிர்ச்சியான பார்வை.

“என்னய்யா பாக்குறீங்க? ஒன்னு நீங்க செஞ்ச ஊழலை சரிகட்ட எதாச்சும் வழி இருந்தா சொல்லுங்க… இல்லனா பதவிய ராஜினாமா பண்ணிட்டு கட்சியை விட்டு வெளியே போங்க… அப்போவும் சும்மா போகவிடமாட்டேன்… உங்களோட பழைய ஊழல் கணக்கு எல்லாம் என் கிட்ட பத்திரமா இருக்கு… உங்களால கட்சிக்கும் ஆட்சிக்கும் உண்டான களங்கத்துக்கு நஷ்டஈடை வாங்கிட்டு தான் இந்த கட்சி ஆபிசை விட்டு உங்களை வெளியே போகவே அலோ பண்ணுவேன்… ஆனா என்ன, அதுக்கப்புறம் கோர்ட், கேஸ்னு அலையணும்… உங்க பையனோட கம்பெனிஸ் எல்லாம் நஷ்டத்துல மூழ்கும்… அப்புறம் முன்னாள் அரசியல்வாதியா ஜெயில் கம்பியை எண்ண வேண்டியது தான்… வேலூரா பாளையங்கோட்டையானு சொல்லுங்க… எது வசதியோ அதை அலாட் பண்ணிடுவோம்”

எகத்தாளமும் எரிச்சலுமாக அவன் முழங்க ஜெயசந்திரன் நிலமையின் தீவிரத்தை உணர்ந்து கைகூப்பினார். அவரும் அவரது மகனும் அந்த டெலிபோன் உரையாடல் வெளியான பின்னரே இதற்கான தீர்வை கண்டுபிடித்துவிட்டனர்.

அந்தத் தீர்வுக்குரிய நபரும் அவர்களின் திட்டத்தை ஏற்றுக்கொண்டார். இன்று அவரைச் சந்திக்க ஏற்பாடு கூட செய்துவிட்டனர். அனைத்தும் அபிமன்யூவின் முதுகுக்குப் பின்னே நடந்த காரியங்கள் தான். ஆனால் இப்போது அந்நபரைப் பற்றிய விவரத்தை மறைத்தால் சீக்கிரமே அந்தத் தீர்வுக்குரிய நபரையும் அபிமன்யூ வளைத்துவிடுவான்.

இனியும் இவனிடம் மறைத்து பிரயோஜனமில்லை. இந்த எமகாதகன் மட்டும் அந்த நபரைச் சந்தித்தால் ஒரு பைசா கூட மிச்சமின்றி எடுத்துக்கொள்வான்!

“தம்பி முக்கியமான ஒரு ஆளை தான் நானும் இவனும் போய் மீட் பண்ணுனோம்… அவரும் நமக்கு உதவுறேன்னு சொல்லிருக்கார்… அவரை இன்னைக்கு நானும் இவனும் சந்திக்கப்போறோம்” என்று பவ்வியமாகக் கூறினார் அவர்.

“இவன் எதுக்கு உங்களோட வரணும்? நான் வர்றேன்… நான் அந்த சொல்யூசன் குடுக்கப்போற மனுசனைச் சந்திக்கணும்… சரி விடுங்க… அவர் கிட்ட நீங்க ஆல்ரெடி பேசிருப்பீங்க… என்ன டேர்ம்ஸ் பேசுனீங்க?”

ஜெயசந்திரன் தயக்கத்துடன் விழிக்கவும் “வேலூரா பாளையங்கோட்டையா?” என்று மீண்டும் அபிமன்யூ கேட்க அவரது தயக்கம் எல்லாம் பறந்தோடிவிட்டது.

அந்த மூன்றாம் நபரிடம் பேசிய விசயத்தைக் கொட்ட ஆரம்பித்தார்.

“அவங்களோட ஷேரிட்டபிள் ட்ரஸ்ட் தமிழ்நாடு அளவுல ரொம்ப ஃபேமசானது தம்பி… அவங்களோட டிரஸ்டுக்கு அந்தப் பணத்தை டொனேசனா குடுத்துட்டா அதை வச்சு அவங்க ஸ்டேட்ல முக்கியமான இடங்கள்ல புராஜக்ட் எடுத்துப் பண்ணுவாங்க… அந்த புராஜெக்டுக்கான கான்ட்ராக்டை எடுக்கப்போறது நம்ம கம்பெனிகள் தான்… அதாவது நம்ம பினாமிங்க நடத்துற கம்பெனிகளுக்குத் தான் அந்தக் கான்ட்ராக்ட் வரும்… கான்ட்ராக்ட் அமவுண்டா நம்ம பணத்தை நமக்கே திருப்பிக் குடுத்துடுவாங்க… இதுக்கான கமிஷனா அவங்க ட்வென்டி பர்சென்டேஜ் எடுத்துக்குவாங்க” என்றார் ஜெயசந்திரன்.

அபிமன்யூவும் அஸ்வினும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பார்த்துக்கொண்டனர்.

“எவ்ளோ அழகா காய் நகர்த்தி ப்ளாக் மனிய ஒயிட் மனி ஆக்குறாங்கள்ல அச்சு… இதுவும் நல்ல ஐடியா தான்” என்றான் அபிமன்யூ.

அதைக் கேட்ட அஸ்வின் நிதானமாக “ஸ்டேட் முழுக்க புராஜெக்ட் பண்ணுற அளவுக்குனா கண்டிப்பா பெரிய டிரஸ்டா தான் இருக்கணும்… அப்பிடி என்ன புராஜெக்ட்?” என்று வினவ

“தமிழ்நாடு முழுக்க முக்கியமான விவசாய மண்டலங்கள்ல இருக்குற செயற்கை உரத்தால வளமிழந்த விவசாய நிலத்தை மறுபடியும் வளமுள்ளதா மாத்துற புராஜெக்ட் தம்பி… எங்களோட ஆர்கானிக் உரம், ஆர்கானிக் பூச்சிக்கொல்லி தயாரிக்கிற கம்பெனிக்கு இந்தக் கான்ட்ராக்டை குடுத்துடுவாங்க” என்றார் பணிவுடன்.

அஸ்வினும் அபிமன்யூவும் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தனர். பின்னர் கண்களால் பேசிக்கொண்டனர். அஸ்வின் பேப்பரில் ‘ஒன் பை டூ’ என்று பேனாவால் எழுத அதை வைத்து அவன் சொல்லவருவதைப் புரிந்துகொண்டான் அபிமன்யூ.

தொண்டையைச் செருமியவன் “நீங்க நம்ம கட்சிக்கு நிறை பண்ணிருக்கீங்க ஜெயசந்திரன்… அதனால இந்த இக்கட்டுல இருந்து உங்கள காப்பாத்த வேண்டியது கட்சியோட கடமை… அதனால கட்சிலயும் சரி, வெளியவும் சரி உங்களுக்குப் பிரச்சனை வராம நான் பாத்துக்கறேன்… ஆனா அதுக்கான விலையை நீங்க குடுத்தாகணும்” என்று இடியை இறக்கினான் ஜெயசந்திரனின் தலையில்.

அவர் முகம் இருளடைந்தது. அவரது மகன் கிரிதரனின் முகமோ செத்துவிட்டது. அவன் சொன்ன விலை ஒரு வேளை சிறையாக இருந்தால் என்ன செய்வது? தந்தை மகன் இருவரும் ஒரே கோணத்தில் யோசித்து திகிலடைய அபிமன்யூவோ வெகு நிதானமாக அந்த விலை என்ன என்பதை தெரிவித்தான்.

“பெருசா ஒன்னுமில்ல… அந்த டிரஸ்ட்ல இருந்து உங்களுக்கு வரப்போற கான்ட்ராக்ட் அமவுண்ட்ல பாதி நம்ம கட்சிக்கு டொனேசனா வரணும்”

ஜெயசந்திரன் அதிர்ச்சியில் பேச்சிழந்தார். அவரது மகன் தான் சிலிர்த்துக்கொண்டு பேச ஆரம்பித்தான்.

“அந்தப் பணத்தை ஏன் கட்சிக்குக் குடுக்கணும்? இதுக்காக நானும் எங்கப்பாவும் எவ்ளோ ரிஸ்க் எடுத்திருக்கோம் தெரியுமா? கொஞ்சம் நியாயமா பேசுங்க தம்பி”

அபிமன்யூ நக்கலாகச் சிரித்தவன் “யோவ் இந்த நீதி நேர்மை நியாயம்லாம் உனக்கும் கிடையாது, எனக்கும் கிடையாது… தெரிஞ்சும் ஏன் கேக்குற? நீயும் உங்கப்பாவும் என்ன ரிஸ்க் எடுத்திங்க? கவர்மெண்ட் தெருவிளக்கு போட அலாட் பண்ணுன காசை அமுக்க பாத்தீங்க… அதையாச்சும் ஒழுங்கா பண்ணுனீங்களாய்யா? கட்சிக்கு ஏன் ஃபிப்டி பர்சென்டேஜ் கேக்குறேனு உனக்குத் தெரியாதா? உங்கப்பாவும் நீயும் களி திங்காம இருக்குறதுக்கு, உங்க பேராசையாலயும் முட்டாள்தனத்தாலயும் கட்சிக்கும் ஆட்சிக்கும் உண்டான களங்கத்த துடைக்கிறதுக்கு…

என்னமோ உழைச்சு சம்பாதிச்ச பணத்தை குடுக்குற மாதிரி ஓவரா சீன் போடுற? ஊரை அடிச்சு உலைல போட்டு சம்பாதிச்ச காசு தானே… உங்களுக்காக ரிஸ்க் எடுக்குற கட்சிக்குச் குடுத்தா ஒன்னும் குறைஞ்சு போகமாட்டீங்க… டீல் பேசி முடிச்சு செட்டில்மெண்ட் ஆனதும் டொனேசன் கட்சிக்கு வந்து சேரணும்… இல்லனா அப்பனும் மகனும் ஜெயிலுக்குப் போறதை யாராலயும் தடுக்க முடியாது” என்று மிரட்டிவிட்டு எழுந்தான்.

ஜெயசந்திரனால் இனி எதையும் யோசிக்கமுடியவில்லை. தலைக்கு மேல் வெள்ளம் போகிற சமயத்தில் ஜாண் போனால் என்ன, முழம் போனால் என்ன என்ற நிலை அவருடையது. எனவே வேறு வழியின்றி அபிமன்யூ விதித்த நிபந்தைக்கு ஒப்புக்கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு தளப்பட்டார் அவர்.

“என்னப்பா அவன் சொன்னதுக்கு இப்பிடி மண்டைய ஆட்டுறீங்க? அவனுக்கு எதுக்கு நம்ம பணத்த குடுக்கணும்?”

முரண்டு பிடித்த மகனை கோபம் கொப்புளிக்கும் விழிகளால் எரித்தார் ஜெயசந்திரன்.

“வாயை மூடுடா முட்டாள்… எவனோ ஒரு சாமியாரோட டிரஸ்டுக்கு இருபது பர்சென்டேஜ் அழப்போறோம்../ இது என்னை வளத்த கட்சி, என்னோட அரசியல் வாழ்க்கைக்கு பிள்ளையார்சுழி போட்ட கட்சிக்கு ஐம்பது பர்சென்டேஜ் குடுக்குறதுல எனக்கு எந்தக் கஷ்டமும் இல்ல… நீயும் நானும் இந்தக் கேஸ்ல சிக்காம தப்பிக்கணும்னா அதுக்குக் கட்சியோட தயவு வேணும்டா”

அதன் பின்னர் அவரது மகன் வாய் மூடி மௌனியானான். பின்னர் அபிமன்யூ சொன்னபடி அன்று மாலை அந்தத் தொண்டு நிறுவனத்தின் முக்கிய நபரைச் சந்திக்க அவனையும் அழைத்துச் செல்ல தந்தையும் மகனும் ஒப்புக்கொண்டனர்.

அவர்களை அழைத்துக்கொண்டு இரண்டாம் தளத்தில் இருக்கும் கட்சித்தலைவரின் அறையை நோக்கி அஸ்வினுடன் விரைந்தான் அபிமன்யூ.

அங்கே பார்த்திபனோ அறிவழகனோ அவனது பேச்சிற்கு மறுபேச்சு பேசவில்லை. மற்ற விசயங்களை வெளியிடாது வெறுமெனே ஜெயசந்திரன் தங்கள் கட்சியின் நீண்டகால உறுப்பினர் என்பதால் அவருக்குத் துணை நிற்கவேண்டியது தங்களின் கடமை என்று அபிமன்யூ கூறினான்.

“அந்த ஆடியோல பேசுனது ஜெயசந்திரன் இல்லனு நிரூபிக்கவேண்டியது அவரோட கடமை… ஆனா அவருக்கு நம்ம துணையா நிக்கணும்… சோ அவர் மேல கட்சி ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்கவேண்டாம்ங்கிறது என்னோட முடிவு”

அவனது முடிவுக்குப் பிறகு அங்கே வேறென்ன பேச்சு வரப்போகிறது? அதையே அறிவழகனும் பார்த்திபனும் ஏற்றுக்கொண்டனர். அதே முடிவு தான் கட்சி பொதுக்குழுக்கூட்டத்திலும் எடுக்கப்பட்டது.

பொதுக்குழுக்கூட்டம் முடிந்ததும் மாவட்டத்தலைகள் கலையவும் கட்சி அலுவலகத்தில் இருந்த தொலைகாட்சியில் ஓடும் செய்தியைக் கவனிக்க ஆரம்பித்தனர் மிச்சமிருந்த அனைவரும்.

“சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு துறை இணை ஆணையர் தயானந்திற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது”

செய்தியைக் கேட்டதும் ஏளனச்சிரிப்பொன்று அபிமன்யூவின் இதழில் குடியேறியது. அஸ்வின் அவன் தோளைத் தட்டிவிட்டு “நீ இதை தானே எதிர்பாத்த மச்சி?” என்று கேட்க அபிமன்யூ பதில் பேசாது குறுஞ்சிரிப்புடன் ஆட்காட்டிவிரலை மேல்நோக்கி காட்டி தோளை குலுக்கினான்.

அதே நேரம் அவனது மனைவி ஜஸ்டிஷ் டுடே அலுவலகத்தில் அதே செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளருகே நின்றிருந்த யசோதராவும் மேனகாவும் சோகமே உருவாக மாறிப்போயினர்.

“அவர் மேல தப்பு இருக்கலாம்… ஆனா அவர் லீக் பண்ணுன ஆடியோல பேசுனவங்க மட்டும் என்ன நல்லவங்களா? சை! இப்பிடி அடுத்தவங்க தப்பை வெளிய கொண்டுவர்ற எல்லாரையும் சட்டம் தண்டிச்சுதுனா மக்களுக்கு எப்பிடி நம்பிக்கை வரும்?”

மாறி மாறி பொறுமித் தீர்த்தனர் அவர்கள் இருவரும். ஆனால் அவர்களுக்கு நடுவே நின்றிருந்த ஸ்ராவணியோ அன்றொரு நாள் டில்லியில் அபிமன்வியூ பேசியதை இப்போது நியாபகப்படுத்திக் கொண்டாள்.

இதில் அவனது பங்கு கட்டாயம் இருக்கும்! ஆனால் ஏன் இப்படி செய்கிறாய் என்று அவளால் கேட்க இயலாது. அதனால் அமைதியாய் அன்றைய நாளை கடந்தாள் ஸ்ராவணி.

அதன் பின்னர் அவர்களுக்கான வேலைகள் வரிசை கட்டிக் காத்திருக்க மற்ற விசயங்களைப் பற்றி யோசிக்கவும் அவர்களுக்கு நேரமில்லாது போனது.

இவ்வாறு இருக்கையில் கௌதமும் ஹேமலதாவும் தங்கள் இல்லற வாழ்க்கையை இனிதே ஆரம்பித்து விட்டனர். ஹேமலதா கௌதமின் ஃப்ளாட்டிற்கு குடிபெயர்ந்துவிட சாந்தநாயகியோ சாருலதாவுடன் அவர்களின் ஃப்ளாட்டிற்கு சென்றுவிட்டார்.

அதே சமயம் மாதவனின் தந்தை ரங்கநாதனுடன் மயூரியின் பெற்றோர் திருமண விசயத்தைப் பேசி முடித்துவிட்டனர். அத்திருமணத்தை முடித்துவிட்டுத் தான் ரங்கநாதன் அமெரிக்கா திரும்பும் முடிவில் இருந்தார். எனவே அடுத்த மாதமே நாளும் குறிக்கப்பட்டது.

இதற்கிடையே சித்தார்த்தின் வெளிவரவிருக்கும் திரைப்படத்தின் ஆடியோ லாஞ்சும் முடிந்துவிட்டது. இனி படம் வெளிவருவது மட்டும் தான் பாக்கி. அது வரை படத்தின் மார்க்கெட்டிங்கிற்காக பல்வேறு தொலைகாட்சி நிகழ்வுகளில் பங்கேற்பது, பேட்டி கொடுப்பது என அவனது நாட்களும் காற்றினும் கடிதாய் கடந்தது. சாந்தகோபாலனின் தயாரிப்பில் மாதவனின் இயக்கத்தில் உருவாக்கும் புதிய திரைப்படத்திற்கான வேலைகள், அடுத்த படமாக ஒப்புக்கொண்ட ஆன்த்தாலஜி திரைப்படம் என தனது துறையில் மட்டும் கவனம் செலுத்திய சித்தார்த்தின் வாழ்வில் மீண்டும் முக்தி ஃபவுண்டேசன் எட்டிப் பார்த்தது, தமிழ்நாட்டின் முக்கியப்பகுதிகளில் ஆரம்பிக்கவிருக்கும் அதன் புதுமையான செயல்திட்டம் ஒன்றிற்கு விளம்பரத்தூதராக சித்தார்த் இருக்கவேண்டும் என்ற வேண்டுகோளுடன்!

மழை வரும்☔☔☔