வெளிச்சப்பூ 4

நேத்ரன் – வாசவியின் திடீர் திருமணம் முடிந்து ஒரு நாள் வெற்றிகரமாக கடந்திருந்தது.

அந்த காலை நேரமே ஈஸ்வரி நேத்ரன் வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தார். அதற்கு அவர் செய்த அலைப்பறையில் அவரின் மகளும் மருமகளும் ஏதோ பேச எத்தனிக்க, ஈஸ்வரியோ பனிப்பெண்ணிடம் கூறுவது போல, “நேத்ரன் வீட்டுக்கு வந்தாலும் வருவான். என் பேரனுக்கு பிடிச்ச டிஃபனா பார்த்து பண்ணி வை.” என்று சத்தமாக கூற, இருவரும் வந்த வேகத்தில் திரும்பி சென்றனர்.

அவற்றை எல்லாம் நாளிதழ் படிக்கும் சாக்கில் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள் வாசவி. இருப்பினும் எதுவும் பேசவில்லை.

அவளைக் கண்ட ஈஸ்வரி, “க்கும், ஏதாவது கேட்குறாளா பாரு. அப்படியே அவங்க தாத்தனாட்டாம் அத்தனை அழுத்தம்!” என்று முணுமுணுத்தவர், அவளருகே சென்று, “சவிம்மா, நீ இன்னும் கிளம்பலையா?” என்று ஆரம்பித்தார்.

அவள் புருவம் சுருக்கி பார்க்க, அதற்கான அர்த்தம் உணர்ந்தவராக, “உன் மாமியார் வீட்டுக்கு போகணும்ல. நேத்து அவங்க இல்லாமையே அவங்க பையன் கல்யாணம் நடந்துச்சு. என்ன இருந்தாலும், அவங்க மனசு கஷ்டப்படும்ல.” என்று அந்த திருமணத்திற்கான காரணமே தான் என்பதை மறந்தவராக பேசினார் ஈஸ்வரி.

“அதுக்கு நான் பண்ண முடியும்? யாரு அந்த கல்யாணத்துக்கு காரணமோ, அவங்க போய் மன்னிப்பு கேட்கட்டும்.” என்று பாட்டியை முறைத்துக் கொண்டே கூறினாள் வாசவி.

“சரி சரி, நான் தான் மன்னிப்பு கேட்கணும். ஆனா, நான் எப்படி தனியா போக. துணைக்கு நீயும் வாயேன்.” என்று அப்போதும் விடாமல் ஈஸ்வரி கூற, “திடீர் கல்யாணம், அதுக்கு திடீர் மாப்பிள்ளை எல்லாம் பிளான் பண்ண தெரியுதுல, தனியாவே போய் சமாளிச்சுட்டு வாங்க. எனக்கு வேலை இருக்கு.” என்று அங்கிருந்து தன்னறைக்கு சென்று விட்டாள்.

அவள் பின்னே, “சவி, கொஞ்சமாச்சும் உன் மாமியார் மாமனாருக்கு மரியாதை கொடு…” என்று ஈஸ்வரி கத்துவது அவளின் காதுகளில் விழத்தான் செய்தது.

அதற்கான பதிலாக பட்டென்று அறைக்கதவை மூடினாள் அவள்.

“எப்பா, இவளை மலையிறக்குறது கஷ்டம் போலயே!” என்று ஈஸ்வரி வாய்க்குள் முணுமுணுக்க, ‘நீதான ஒத்தக்கால்ல நிக்காத குறையா கல்யாணத்தை பண்ணி வச்ச, இப்போ அதுக்கு அனுபவிக்குற.’ என்று அவரின் மனம் குத்திக்காட்டியது.

அதைக் கண்டுகொள்ளாமல், “முதல்ல பேரன் வீட்டை சமாதானப்படுத்துவோம்.” என்று கிளம்பினார்.

*****

இரவில் நெடுநேரமாக கட்டிலில் உருண்டு கொண்டிருந்த நேத்ரனிற்கு உறக்கம் வருவேனா என்று அடம்பிடிக்க, நேரம் கடந்தே உறங்கினான். ஆயினும், எப்போதும் இல்லாத திருநாளாக, விரைவாகவே விழித்துவிட, மீனாட்சி கூட, “அடடா, கல்யாணம் முடிஞ்சதும் என் பையனுக்கு கூட பொறுப்பு வந்துடுச்சே!” என்று கேலி செய்தார்.

“ம்மா, காலைலேயே ஆரம்பிக்காத.” என்று உறக்கம் பறிபோன கடுப்பை அன்னையிடம் காட்டிவிட்டு, குளிக்கச் சென்றான்.

காலையில் எழுந்ததிலிருந்தே ஏதோவொரு பரபரப்பு அவனை தொற்றிக் கொள்ள, குளிர்ந்த நீரால் கூட அதை அடக்க முடியவில்லை.

அந்த இனிய பரபரப்பின் காரணம், முந்தைய தினம் மீனாட்சியுடனான அவன் உரையாடல் தான் என்று அவனிற்கு நன்கு விளங்கியது. என்னதான் மீனாட்சி கூறியது போல அவன் குற்றவுணர்வு கொள்ள தேவையில்லை என்பதை உணர்ந்திருந்தாலும், நிலையான முடிவை எடுக்க முடியாமல் தடுமாறினான்.

ஒருவழியாக நினைவு பயணத்தோடு சேர்த்து குளியலையும் முடித்து தலையை துவட்டிக் கொண்டே வெளியே வந்தான்.

நடுகூடத்தில் அமர்ந்திருந்த தந்தையை பார்த்தவன், ‘இந்நேரம் இவரு வாக்கிங் போயிட்டு பிரெண்ட்ஸ் கூட அரட்டை அடிச்சுட்டுல இருப்பாரு. இன்னைக்கு என்ன அதிசயமா வீட்டுல இருக்காரு?’ என்று யோசித்தான்.

அதற்கான விடையாய் வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. வாசலிற்கு அருகிலிருந்ததால் நேத்ரன் தான் கதவை திறந்தான்.

அங்கு தன் அக்மார்க் புன்னகையுடன் ஈஸ்வரி நின்றிருக்க, “கெழவி!” என்று பல்லைக் கடித்தான்.

அவனிற்கு எதிர்புறமிருந்த ஈஸ்வரியின் முகமும் லேசான அதிர்ச்சியை வெளிப்படுத்தியது. நேத்ரன் கதவை திறப்பான் என்று அவரும் எதிர்பார்த்திருக்கவில்லை போலும்!

உடனே சமாளிக்கும் விதமாக, லேசாக சிரித்து வைக்க, “இப்போ என்ன நடந்துச்சுன்னு இப்படி சிரிக்குறீங்க?” என்று நேத்ரன் அதே தொனியில் வினவ, “அது… அது… ஹான், நேத்ரா, இப்படியா ஒரு பொண்ணு முன்னாடி நிப்பாங்க?” என்று அவனிருந்த நிலையை சுட்டிக்காட்டி வெட்கப்படுவது போல நடித்தார்.

அத்தனைக்கும் அவன் ஒன்றும் முற்றிலுமாக கவர்ச்சிப்படம் காட்டிக் கொண்டிருக்கவில்லை தான். ஒரு பெர்முடாஸும், மேலே தோளை சுற்றி துண்டும் போட்டிருந்தான்.

இப்போது அவனோ, “கெழவி, என்னை கோபப்படுத்தாத.” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, வெளியே பேச்சு சத்தம் கேட்டு மீனாட்சியும் ஈஸ்வரமூர்த்தியும் வந்திருந்தனர்.

ஈஸ்வரியின் தோற்றத்தைக் கண்டே யாரென்று புரிந்து கொண்ட மீனாட்சி, குறுக்கே நிற்கும் மகனை லேசாக தள்ளிவிட்டு, “வாங்க வாங்க மா.” என்று வரவேற்பில் ஈடுபட்டார்.

மீனாட்சியிடம் சிரிப்பை பகிர்ந்து கொண்ட ஈஸ்வரியும் வழியில் நின்ற நேத்ரனை மிதப்பான பார்வை பார்த்துவிட்டு உள்ளே நுழைந்தார்.

‘திமிரை பார்த்தியா கெழவிக்கு! சொல்ல சொல்ல கேட்காம, நேத்து என்னை மாட்டிவிட்டதும் இல்லாம, இன்னைக்கு வீட்டுக்கே வந்துருக்கு. இனி என்ன செய்ய காத்திருக்கோ?’ என்று மனதிற்குள் புலம்பியபடி அவனும் உள்ளே சென்றான்.

மீனாட்சியும் ஈஸ்வரமூர்த்தியும் பாட்டியை வரவேற்று பொதுவான நலவிசாரிப்புகளை பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் உள்ளே நுழைந்த நேத்ரன் ஈஸ்வரியின் கேலிச்சிரிப்பில் அவசரமாக உள்ளே சென்று உடை மாற்றிவிட்டு வந்து அமர்ந்தான்.

“ஃபோன்ல சொன்ன மாதிரி, நேத்து நடந்த கல்யாணத்துக்கு முழு காரணமும் நான் தான். கோவில்ல என் பேத்தியோட கல்யாணம் பாதியில நின்னது மனசு சங்கடமா இருந்துச்சு. அதைக் காரணம் காட்டி தான் உங்க பையனை என் பேத்திக்கு தாலி கட்ட சொன்னேன். இது ஒருவகையில சுயநலம் தான். ஆனா, கண்ணு முன்னாடி இருக்க நல்ல குணமுள்ள பையனை விட மனசில்ல.” என்று வேகவேகமாக ஈஸ்வரி பேசினார்.

‘லாஸ்ட் லைன்ல கெழவி கவுத்துடுச்சு.’ என்று புலம்பினான் நேத்ரன்.

அவன் நினைத்தது போல, ஈஸ்வரி பேச ஆரம்பிக்கும்போது இறுக்கத்தில் இருந்த பெற்றவர்களின் முகம் அவர் முடிக்கும்போது சற்று இறுக்கத்தை தொலைத்திருந்தது. என்ன இருந்தாலும் மகனின் பெருமை கேட்கும்போது மனம் லேசாகும் தானே!

எனினும் தங்களின் கவலையையும் ஈஸ்வரிக்கு தெரிவிக்கும் விதமாக, “நீங்க சொல்றது புரியுது மா. ஆனாலும், ஒரே பையனோட கல்யாணம்… அதை பார்க்க எங்களுக்கு கொடுத்து வைக்கலன்னு நினைக்கும்போது தான் மனசு கஷ்டமா இருக்கு.” என்றார் மீனாட்சி.

ஈஸ்வரியோ ஒரு பெருமூச்சுடன், “நீங்க கவலைப்படாதீங்க, நல்ல நாளா பார்த்து, ஊர் முழுக்க கூப்பிட்டு, ஜாம்ஜாம்னு ஒரு ரிசப்ஷன் வச்சுடுவோம்.” என்று கூறும்போதே, அவரின் பேத்தி சம்மதிப்பாளா என்று சிந்திக்க துவங்கியது மனம்.

“அது மட்டும் போதாது மா. ஜோசியர் கிட்ட கலந்து பேசி, நல்ல முகூர்த்தம் பார்த்து, எங்க குடும்பம் உங்க குடும்பம் எல்லாரோட முன்னிலைல, என் பையன் உங்க பேத்தி கழுத்துல திரும்ப தாலி கட்டணும்.” என்றார் மீனாட்சி, சற்று அழுத்தமாகவே.

“திரும்ப தாலி கட்டணுமா?” என்று முணுமுணுத்த ஈஸ்வரியின் மனக்கண்ணில், ‘என்ன தான் நினைச்சுட்டு இருக்கீங்க?’ என்று வாசவி கத்துவது போலிருந்தது.

அவரின் முகபாவனை கண்ட நேத்ரனிற்கு, அத்தனை நேரமிருந்த கடுப்பு குறைந்து அவரை வம்பிழுக்க தோன்றியது.

அவர் அமர்ந்திருந்த ஒற்றை நீள்சாய்விருக்கையின் கைப்பிடியில் அமர்ந்தவன், “ஏன் பியூட்டி, நீங்க உங்க இஷ்டத்துக்கு ரிசப்ஷன், கல்யாணம்னு பிளான் பண்றீங்களே, இந்த விஷயம் பாஸுக்கு தெரியுமா?” என்று அவரின் பயத்தை அதிகரிக்க, மகன் ஆடும் திருவிளையாடல் உணர்ந்த தாயாக, “நேத்ரா, பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கணும்னு தெரியாதா? முதல்ல அங்கயிருந்து எழுந்து சோஃபால உட்காரு.” என்றார்.

அவனோ அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், ஈஸ்வரியை சுற்றி கைபோட்டபடி, “ம்மா, இது நம்ம பாட்டி மா. அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க.” என்றவன், ஈஸ்வரியின் காதருகே சென்று, “நேத்து மாதிரி, என்னை சோலோவா இனிமே மாட்டிவிட்டா, உங்க பேத்திக்கிட்ட இங்க பேசுனதை, இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பிட்டு போட்டு சொல்லிடுவேன் பார்த்துக்கோங்க.” என்று முணுமுணுத்துவிட்டு, “இல்ல பியூட்டி?” என்று சத்தமாக கேட்டான்.

அவனிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் மத்தியமாக தலையசைத்து வைத்தார் ஈஸ்வரி.

அவரைக் காப்பாற்றவே மீனாட்சி, “மருமக வரலையா?” என்று கேட்டு வைத்தார்.

வாசவியை அழைத்து வரமாட்டார் என்று தெரியும். இருப்பினும், மகனின் சேட்டையை தடுக்க ஏதாவது கேட்டாக வேண்டுமே!

“வாசவிக்கு ஏதோ முக்கியமான வேலையாம். அதான் வர முடியல.” என்று ஈஸ்வரி கூற, “க்கும், எனக்கு தெரியாம என்ன முக்கியமான வேலை. வரமுடியாதுன்னு சொல்லியிருப்பாங்க.” என்று முணுமுணுப்பாய் கவுண்டர் கொடுத்தான் நேத்ரன்.

அதைக் கண்டுகொள்ளாதவர், “அட மறந்தே போயிட்டேன் பாருங்க, இதோ வாசவியோட ஃபோட்டோ.” என்று அவரின் அலைபேசியிலிருந்த புகைப்படத்தை காட்டினார்.

அதை வாங்கிப் பார்த்த மீனாட்சி கணவரிடமும் மருமகளின் புகைப்படத்தைக் காட்டி, “நேத்ரன் ஏற்கனவே காட்டியிருக்கான் மா. அழகா இருக்கா மருமக.” என்று பாராட்டினார்.

‘க்கும், நேத்து வரை ‘அந்த பொண்ணு’, இன்னைக்கு மருமகளா? நல்ல முன்னேற்றம் அம்மோவ்!’ என்று அதற்கும் மனதிற்குள் குரல் கொடுத்தான் அவரின் மகன்.

அதன்பிறகு சில நிமிடங்கள் கலகலப்பாக செல்ல, அப்போது தான் ஈஸ்வரி எதையோ சொல்ல தயங்குவது தெரிந்தது. நேத்ரன் தாயிடம் கண்ணை காட்ட, அவரும் ஈஸ்வரியிடம் அதைப் பற்றி விசாரித்தார்.

“அது வந்து… என் பேத்தி பத்தி ஓரளவு உங்களுக்கு தெரியும்னு நினைக்குறேன். கொஞ்சம் முசுடு. ஆனா ரொம்ப நல்லவ. நம்ம மேல மலையளவு பாசம் வச்சுருப்பா. ஆனா, அதை வெளிக்காட்டிக்க மாட்டா. படபடன்னு மனசுல பட்டதை பேசிடுவா. உள்ளுக்குள்ள ஒன்னு வச்சுட்டு வெளிய வேற பேசுற ஆள் கிடையாது. மொத்தத்துல, அவ பார்க்க திமிரா தெரிவா. ஆனா, அதுக்கு பின்னாடி அவ அனுபவிச்ச வலியும் வேதனையும் அதிகம்.” என்று நிறுத்தினார் ஈஸ்வரி.

இவையெல்லாம் நேத்ரனும் அறிந்ததே. இந்த ஆறு மாத காலங்களில் அதை நேரடியாக பார்த்தவனாகிற்றே. அதனால் அவன் அமைதியாக இருக்க, மீண்டும் பேச ஆரம்பித்தார் ஈஸ்வரி.

“அவ அப்பா அம்மா…” என்று ஆரம்பிக்கும்போதே, “பாட்டி, அதெல்லாம் சொல்ல வேண்டாம். அவங்க பாஸ்ட் எங்களுக்கு தெரியணும்னு அவசியம் இல்ல. அவங்களா விருப்பப்பட்டா சொல்லட்டும்.” என்று நேத்ரன் கூறினான்.

அவன் சட்டென்று இவ்வாறு கூறிவிட, “நேத்ரா, என்ன டா இது? அவங்க தான் ஏதோ சொல்ல வராங்கள.” என்று மீனாட்சி அதட்ட, “ம்மா, அவங்க பாஸ்ட் பத்தி யாருக்கிட்டயும் ஷேர் பண்ணிக்க விரும்ப மாட்டாங்க மா. அதனால கூட யாரும் தன்னைப் பார்த்து பரிதாபப்பட கூடாதுன்னு நினைப்பாங்க. இப்போ நமக்கு அவங்க பாஸ்ட் தெரிஞ்சு, நாளைக்கு அவங்களை பார்க்கும்போது உங்க பார்வையில லேசான பரிதாபம் தெரிஞ்சா கூட அவங்க காயப்படுவாங்க. சோ நமக்கு எதுவும் தெரிய வேண்டாம். அவங்களா சொல்றப்போ சொல்லட்டும்.” என்றுவிட்டான்.

மகனின் அக்கறையான பேச்சில் மனம் மகிழந்தாலும், “இருந்தாலும் என்னன்னு தெரிஞ்சுகிட்டா, மருமகளை அதிலிருந்து வெளிக்கொண்டு வர முயற்சிக்கலாம்ல.” என்று அவன் அன்னை கூற, “மீனாட்சி, அவன் தான் இவ்ளோ தூரம் சொல்றான்ல, விடு.” என்றார் ஈஸ்வரமூர்த்தி.

அதன்பின்னர் அவர் வாய் திறக்கவில்லை.

மூவரின் பேச்சைக் கேட்ட ஈஸ்வரிக்கு மகிழ்ச்சியில் கண்கள் பனித்தன.

‘சவிம்மா, இப்படி ஒரு குடும்பம் கிடைக்க தான் இவ்ளோ துன்பம் அனுபவிச்சுருக்க போல டா. இனி, உன் வாழ்க்கை நந்தவனமா மாறிட போகுது பாரு.’ என்று தனக்குள் கூறிக் கொண்டார்.

அதையே வெளியிலும் கூற, அவர் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார் என்பதை உணர்ந்த நேத்ரனோ ஏதோ பேசி சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான்.

பின்னர், அவர்களின் பேச்சு கல்யாணத்தை நோக்கி திரும்ப, அதற்குள் நேத்ரன் அலுவலகத்திற்கு செல்ல ஆயத்தமானான்.

“அப்போ சரி மீனாட்சி, நேத்ரனோட ஜாதகத்தை கொடுங்க. எங்க குடும்ப ஜோசியர் கிட்ட இன்னைக்கே காட்டிடுறேன்.” என்றார் ஈஸ்வரி.

மீனாட்சியும் அதை எடுக்கவேண்டி நேத்ரனின் அறைக்குள் நுழைய, அவனும் யோசனையுடனே அன்னையை பின்தொடர்ந்தான்.

“ம்மா, இப்போ எதுக்கு ஜாதகம் பார்த்துக்கிட்டு? அதான் கல்யாணமே முடிஞ்சுடுச்சே!” என்று நேத்ரன் கூற, “என்னடா சொல்ற? பொருத்தம் பார்க்கணும்ல?” என்று இழுத்தார் மீனாட்சி.

“ம்மா, இப்போ எங்க ரெண்டு பேரோட ஜாதகம் பொருந்தலைன்னா…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவன் வாயிலடித்த மீனாட்சி, “ஆரம்பிக்கும்போதே அச்சாணியமா பேசாத டா.” என்றார்.

“ப்ச் ம்மா, ஒரு பேச்சுக்கு தான் சொல்றேன். சப்போஸ் பொருந்தலைன்னா என்ன பண்ணுவ? அது எல்லாருக்கும் சங்கடம் தரும். சோ, இந்த ஜாதகம் பார்க்குறதெல்லாம் விடுங்க. கல்யாண தேதியை மட்டும் ஜோசியர் கிட்ட குறிச்சுக் கொடுக்க சொல்லுங்க.” என்றான்.

அதையே அவரின் கணவரும் கூற, அது ஈஸ்வரியிடமும் கூறப்பட்டது.

வந்த வேலை முடிந்த மகிழ்வுடன் ஈஸ்வரி கிளம்ப எத்தனிக்க, “அம்மா, டிஃபன் ரெடியாகிடுச்சு. சாப்பிட்டுட்டு போங்க.” என்று மீனாட்சி கூற, “தலைக்கு மேல வேலை இருக்கு மீனாட்சி. நீங்க பாருங்க. நான் கிளம்புறேன்.” என்று குதூகலமாக அவர் கிளம்பினார்.

அவரின் பின்னே நேத்ரனும், “ம்மா, எனக்கும் லேட்டாச்சு. நானும் கிளம்புறேன்.” என்று கத்தியபடி ஓடிவிட்டான்.

“இந்த பையன் ஒருநாளாச்சும் காலைல சாப்பிடுறானா பாருங்க.” என்று கணவரிடம் மீனாட்சி அலுத்துக் கொள்ள, அவரோ சிரித்துக் கொண்டே, “இங்க இல்லைன்னா என்ன, புகுந்த வீட்டுல சாப்பிட போறான். நீ போய் எனக்கு எடுத்து வை.” என்றார்.

அவர் கூறியது போல வேலைக்கு செல்ல வேண்டும் என்று அடம்பிடித்த நேத்ரனை, “உன் பொண்டாட்டியே அங்க தான் இருக்கா. இனிமே, ரெண்டு பேரும் ஜோடியா தான் ஆஃபிஸ் போகணும்.” என்று கூறி வம்படியாக தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் ஈஸ்வரி.

இங்கு இவர்கள் நால்வரும் திருமணத்தை நடத்த திட்டம் தீட்ட, அங்கு அவளோ விவாகரத்துக்கான திட்டத்தை தீட்டிக் கொண்டிருந்தாள்.

பூ பூக்கும்…