வெளிச்சப்பூ 1

கதிரவன் தன் பணியை துவங்கி சில மணி நேரம் ஆகியிருக்க, ‘கௌசல்யா சுப்ரஜா’ என்று சுப்ரபாதம் ஒலிக்க வேண்டிய நேரத்தில், அதற்கு பதிலாக சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது அவ்வீட்டு தலைவரின் குரல். பின்னே அடுத்த அறையில் இருப்பவனிற்கு கேட்க வேண்டுமே!

“இன்னைக்காவது உன் பிள்ளை நல்ல பதிலா சொல்வானான்னு கேட்டு சொல்லு.” என்றவரின் பாவனையோ கடுகை போட்டால் பொரிந்து விடும் அளவிற்கு இருந்தது.

“ம்மா, எத்தனை முறை சொல்றது. அவரு தங்கச்சி பொண்ணை என் வைஃபா… உஃப் சொல்றதுக்கே வியர்ட்டா இருக்கு மா. எனக்கும் அவளுக்கும் செட்டாகாதுன்னு சொல்லு உன் ஆத்துக்காரர் கிட்ட. ச்சே, எப்போ பார்த்தாலும் தாய்மாமாவாவே யோசிக்க வேண்டியது.” என்றவன் இறுதி வாக்கியத்தை மட்டும் முணுமுணுத்துக் கொண்டான்.

“ஓஹ், அப்படி என்ன பெரிய ஆஃபிசர் உன் பிள்ளை? இவனே எடுபிடியா இருக்கான். இவனையும் நம்பி பொண்ணு கொடுக்குறாங்கன்னா அது என் மேல இருக்க மரியாதையால தான். சொல்லி வை உன் பிள்ளைக்கிட்ட.” என்று சற்று கோபமாகவே தந்தை கூற, அதைக் கேட்ட மகனிற்கும் எப்போதும் வராத கோபம் வந்து தொலைத்தது.

“அப்படி யாரையும் எனக்கு பொண்ணு கொடுக்க காத்திருக்க சொல்லல. அவங்களை வேற நல்ல போஸ்டிங்ல இருக்க மாப்பிள்ளையா பார்த்துக்க சொல்லுங்க.” என்று கத்தினான்.

அத்தனை நேரம் தந்தைக்கும் மகனிற்கும் இடையே இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்த அன்னையோ, தன் வார்த்தைக்கு சிறிதளவாவது மரியாதை கொடுக்கும் மகனிடம், “டேய் அமைதியா இரேன்.” என்றவர் கண்களிலும் அதே பாவனையைக் காட்டி கெஞ்சினார்.

“ப்ச், பின்ன என்ன? நான் செட்டாகாதுன்னு சொல்லிட்டு இருக்கேன். திரும்ப திரும்ப அதே பல்லவியை பாடினா, நான் என்ன தான் செய்ய? நீங்க உங்க இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டு போயிடுவீங்க. வாழ்க்கை முழுக்க நாங்க தான வாழனும். நான் ஒன்னும் படிப்பு விஷயத்துலயோ, ஸ்டேட்டஸ் வச்சோ எங்களுக்கு செட்டாகாதுன்னு சொல்லல. நான் எவ்ளோ ஜாலி டைப்பா இருக்கேன். ஆனா, அவ ஒரு வார்த்தை பேசுறதுக்கே காசு கேட்பா போல. அதுவுமில்லாம எப்போ பார்த்தாலும், கப்பல் கவுந்து போன மாதிரி உம்முன்னு இருக்கா. நீங்களே சொல்லுங்க எங்களுக்கு எப்படி செட்டாகும்? சொன்னா புரிஞ்சுக்கவே மாட்டாரா உன் புருஷர்? தாய்மாமான்னு சொல்லிட்டு இருக்காரே, அந்த மருமகளோட வாழ்க்கையும் இதுல அடங்கியிருக்குன்னு தெரியலையாமா அவருக்கு?’ என்றான்.

“என் மருமகளையே வேண்டாம்னு சொல்றானே, இவனுக்கு எல்லாம் பொண்ணு கிடைக்குறது கஷ்டம்னு சொல்லிடு. அப்படியே கிடைச்சாலும் இவனே செட்டாகாதுன்னு சொல்லிடுவான். ஆமா, என் மருமகளை சின்ன வயசுலயிருந்து தெரியும். அதனால, அவளோட சுபாவம் இதுன்னு உன் மகனுக்கு தெரிஞ்சுருக்கு. ஆனா, வெளிய பொண்ணு எடுத்தா, செட்டாகுமா இல்லையான்னு எப்படி கண்டுபிடிப்பாராம் உன் பையன்?” என்றார் தந்தை.

‘மருமகளின் வாழ்க்கை’ என்ற பதம் அவரின் முடிவிலிருந்து பின்வாங்க வைத்திருக்க வேண்டும். அதை மற்ற இருவரும் புரிந்தும் கொண்டனர்.

அதனால் சற்று இலகுவாகிய மகனோ, “ஹும், கஷ்டமான விஷயம் தான். ஒரு ஆறு மாசம் பழகி பார்த்துட்டா செட்டாகுமா இல்லையான்னு தெரிஞ்சுடும்ல.” என்றான்.

அதைக் கேட்ட தந்தைக்கு திக்கென்று இருக்க, மகனின் முகபாவனையை பார்த்து அவன் விளையாடுகிறான் என்பதை புரிந்து கொண்ட தாய்க்கு அந்தளவிற்கு அதிர்ச்சி இல்லை.

“என்ன விளையாடுறானா உன் மகன். இப்படி ஒரு நினைப்பிருந்தா இப்போவே அழிச்சுட சொல்லு. பழகி பார்த்து முடிவு பண்ணுவானாம்ல.” என்றவருக்கு பதட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் வெளியே சென்று விட்டார்.

அவரின் செயலை கதவிடுக்கின் வழியே பார்த்த மகனிற்கோ சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. அவன் சிரிக்க, அதை ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்தார் அவனின் அன்னை.

இப்போது அவர்களை பற்றிய அறிமுகத்தை பார்த்து விடுவோம். மூன்றே நபர்களை கொண்ட அந்த சிறிய குடும்பத்திற்கு தலைவராக, மீனாட்சியின் கணவராக இருப்பவர் ஈஸ்வரமூர்த்தி. பெயரில் மீனாட்சியை கொண்டிருந்தாலும், அவ்வீட்டில் ஆட்சி அமைத்தது என்னவோ ஈஸ்வரன் தான். எனினும், மீனாட்சியின் பொறுமையாலும், பாசத்தாலும் தான் அந்த குடும்பம் சிறப்பாக இயங்குகிறது என்று கூறினால், அது மிகையாகாது.

இவர்கள் இருவரின் தவப்புதல்வன் தான் நம் நாயகன் நேத்ரன். பெயரின் காரணமாக காந்தக்கண்களை பெற்றானா, இல்லை அழகிய கண்கள் கொண்டதால் இப்பெயரை பெற்றானா என்பது அக்குடும்பத்திற்கே வெளிச்சம்!

தன் படிப்பை முடித்துவிட்டு தற்போது அசுர வளர்ச்சியை கொண்டிருக்கும் நிறுவனமான ‘ஏ.வி என்டர்ப்ரைசஸ்’ஸின் தலைவருக்கு முதன்மை உதவியாளராக பணிபுரிகிறான்.

என்னதான் உதவியாளர் என்றாலும் வளர்ந்து வரும் நிறுவனத்தில் பணிபுரிவதால் அது அவனிற்கு நல்ல அனுபவத்தை வழங்கியிருந்தது. மேலும், எந்த வேலையும் கீழானது அல்ல என்பது அவனின் கோட்பாடு. இதன் காரணமாகவே, சற்று முன்னர் அவன் தந்தை பேசியபோது அவன் கோபப்பட்டது.

நேத்ரனின் சிரிப்பைக் கண்ட மீனாட்சி, ஆதுரத்துடன் அவன் முடியை கோதிவிட்டு, “டேய், என் அண்ணா பொண்ணு பெங்களூருல வேலை பார்த்துட்டு இருக்கா. அவளுக்கும் மாப்பிள்ளை பார்க்குறாங்களாம்.” என்று இழுத்தார்.

அதில் சட்டென்று சிரிப்பு தடைபட, “அம்மோவ், ஏன் இப்படி மேட்ரிமோனி சைட்டுக்குள்ள நுழைஞ்ச மாதிரி வரிசையா பொண்ணுங்க டீடெயில்ஸா சொல்லிட்டு இருக்க? ம்மா, எனக்கு சொந்தத்துல கல்யாணம் பண்ற ஐடியாவே இல்ல. அது உன் சொந்தமா இருந்தாலும் சரி, அவரு சொந்தமா இருந்தாலும் சரி.” என்று கறாராக கூறினான்.

“ப்ச் ஏன் டா? நீ கேள்விப்பட்டது இல்லயா? தெரியாத தேவதையை விட தெரிஞ்ச பேயை கல்யாணம் பண்ணிக்கலாம் டா.” என்று அவர் சிரியாமல் கூற, “ஓஹ், அப்போ குடும்பமா என்னை பேய்க்கு குடும்பஸ்தனாக்க பார்க்குறீங்களா?” என்றான் மகன்.

அவனின் பேச்சில் அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த சிரிப்பை வெளிப்படுத்தி விட, தாயும் மகனும் அந்த நொடியை மகிழ்ச்சியாக கழித்தனர்.

அந்த மகிழ்ச்சியை குழைக்கவென்றே அவனின் அலைபேசி சத்தம் எழுப்ப, யாரென்று பார்த்தவன் தன் அன்னையிடம், “இதோ அடுத்த உம்மன்னாமூஞ்சி கால் பண்ணியாச்சு.” என்றான்.

அவன் அன்னையோ, அவன் அலைபேசியில் சேமித்து வைத்திருந்த ‘பேய்’ என்ற பெயரையும், அந்த அழைப்பிற்கான சொந்தக்காரியின் புகைப்படத்தை பார்த்தும், “ஏன் டா நேத்ரா இப்படி சொல்ற? இந்த பிள்ளை எவ்ளோ அம்சமா அழகா இருக்கு.” என்றார்.

“க்கும், அழகு எப்பவுமே ஆபத்து தான் அம்மோவ். இது நாள் வரை நைட் உன்கிட்ட என் பாஸ், அந்த லேடி ஹிட்லரை பத்தி புலம்பிட்டே இருப்பேனே, அவங்க தான் இவங்க.” என்று உண்மையைக் கூற, மோவாயில் கைவைத்து கேட்ட மீனாட்சியோ, “அந்த பொண்ணா டா இந்த பொண்ணு. ஃபோட்டோல பார்க்க என்னமோ அடக்கமா தான் தெரியுது. ஹும், ஆனா, இந்த பொண்ணுக்கு அந்த திமிரு இருந்தா இன்னும் அழகு தான் டா இவனே.” என்றார்.

“எம்மா மங்கையர் குல மாணிக்கம், உன்னை பேச விட்டா நீ பேசிட்டே இருப்ப. ஆனா, கால் பண்ற என் பாஸ் அதுவரை வெயிட் பண்ண மாட்டாங்க. நீ சீக்கிரம் போய் எல்லாம் பேக் பண்ணி ரெடி பண்ணு. அநேகமா லேட்டானதுக்கு திட்டத்தான் இந்த ஃபோன் கால்னு நினைக்குறேன்.” என்ற நேத்ரன் தாயை தன் அறையிலிருந்து அனுப்பிவிட்டு, வெகு நேரமாக ஒலித்துக் கொண்டிருந்த அழைப்பை ஏற்றான்.

மறுமுனையிலிருந்து பேசும் முன்பே, “மேம், நான் எப்போவோ கிளம்பிட்டேன். ஆனா என் நேரம் டிராஃபிக்ல மாட்டிக்கிட்டேன். இதோ இன்னும் ஃபைவ் மினிட்ஸ்ல, ஷார்ப்பா நைனுக்கு வந்துடுவேன்.” என்று கடிகாரத்தை பார்த்துக் கொண்டே, அரை மணி நேர பயணத்தை ஐந்து நிமிடங்களாக திரித்து கூறிக் கொண்டிருந்தான், உள்ளுக்குள் பயத்துடன் தான்!

“ப்ச், முதல்ல யாரு பேசுறாங்கன்னு தெரிஞ்சுட்டு பேசுங்க.” என்று எதிர்பக்கமிருந்து குரல் வர, “அட பூரி நீயா?” என்று ஆசுவாசப்பட்டான் நேத்ரன்.

“ஹலோ, இன்னொரு முறை பூரின்னு கூப்பிட்டீங்க அவ்ளோ தான். கால் மீ பூரணி.” என்று அந்த ’பூரி’ எனப்பட்டவள் கத்த, ‘என்கிட்டயே சவுண்ட் விடுறியா?’ என்று நினைத்த நேத்ரனோ பொறுமையாக, “எதுக்கு இப்போ கால் பண்ணீங்க மிஸ். பூரணி? அதுவும் மேம் நம்பர்ல இருந்து!” என்று வினவினான்.

பூரணிக்கோ, ‘இவன் இப்படி உடனே சரண்டராகுற டைப் இல்லையே.’ என்ற யோசனை உதித்தாலும், சொல்லப்போகும் விஷயத்தின் வீரியத்தில் அதை பெரிதாக எண்ணவில்லை.

“அது நேத்ரன்…” என்று ஏதோ கூற வந்தவளை இடைமறித்தவன், “ஹலோ மிஸ். அசிஸ்டண்ட், கால் மீ சார், நேத்ரன் சார்.” என்றான்.

அதைக் கேட்ட பூரணியோ பல்லைக் கடித்து, “இது இப்போ ரொம்ப முக்கியம்!” என்று முனகினாள்.

அவள் முகம் போகும் போக்கை மனக்கண்ணில் பார்த்து ரசித்தவனாக, “சரி சரி டைம் வேஸ்ட் பண்ணாம விஷயத்துக்கு வாங்க பூ…ர…ணி, ஏன்னா டைம் வேஸ்ட் பண்றது எனக்கு பிடிக்காது.” என்றவனிற்கு முகம் முழுவதும் சிரிப்பு தான்!

அவனை எதுவும் சொல்ல முடியாத கடுப்பில், “மேமுக்கு இன்னைக்கு கல்யாணம். சோ, ஷார்ப் அட் நைன் தேர்ட்டிக்கு வழக்கம் போல கோவிலுக்கு வந்துடுங்க சா…ர்.” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டாள்.

அழைப்பு துண்டிக்கப்பட்ட சத்தம் கேட்டதும், “ச்சே வச்சுட்டாளே. ஆமா, நடக்காத கல்யாணத்துக்கு எதுக்கு இவ்ளோ செலவு? அது சரி, அவங்க காசு, அவங்க செலவு பண்றாங்க. நமக்கு என்ன வந்துச்சு?” என்று தானே கேள்வியும் பதிலுமாக தனியே பேசிக் கொண்டிருக்க, மீனாட்சி தான் அவனை வித்தியாசமாக பார்த்தார்.

அதையெல்லாம் கண்டுகொள்ளாதவனாக, கண்டுகொள்ள நேரமில்லாதவனாக கிளம்பிவிட்டான் நேத்ரன்.

*****

போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்து ஊர்ந்து வாகனத்தை செலுத்தி ஒருவழியாக ஒன்பது முப்பத்தைந்து மணிக்கு கோவிலிற்குள் வந்து சேர்ந்தான் நேத்ரன்.

ஒருவித படபடப்புடனேயே உள்ளே வந்தவனிற்கு, அங்கு பூரணி மட்டும் நின்றிருப்பதைக் கண்டதும் தான் மூச்சே சரியாக விட முடிந்தது. பின்னே, ஐந்து நிமிடங்கள் தாமதமாக வந்ததற்கு அவன் பாஸிடம் அன்றைய நாள் முழுவதும் திட்டு வாங்க வேண்டியதிருக்குமே!

“என்ன பூ…ர…ணி, மேம் இன்னும் வரலையா?” என்று மூச்சு வாங்கிக் கொண்டே நேத்ரன் வினவ, அதுவரை அவன் வராத கடுப்பில் இருந்தவள், பார்வையை வேறுபுறம் திருப்ப, அங்கு பார்த்த காட்சியில் தேகம் விறைபுற நின்றாள்.

அவளின் திடீர் மாற்றத்தில் நேத்ரனும் பின்னே திரும்பி பார்க்க, அங்கு வந்து கொண்டிருந்தாள் இருவரின் பாஸான வாசவி.

அவள் கட்டியிருந்த ஒற்றை மடிப்பு பனாரஸ் பட்டை தவிர, வேறு எந்த அலங்காரங்களும் இன்றி தன் திருமணத்திற்கு வந்திருந்தாள் அந்த இளம் தொழிலதிபர்!

“ஹ்ம்ம், அவங்கவங்க கல்யாணத்துக்கு எவ்ளோவோ செலவு பண்றாங்க. நம்ம மேம் மேக்கப்புக்கு கூட எந்த செலவும் பண்ணல. ஒரு சேரியும், ஃப்ரீ ஹேரும் தான் இந்த கல்யாணத்துக்கான அவங்க மொத்த மேக்கப்.” என்று நேத்ரன் மெல்லிய குரலில் கூற, “நீங்க இப்படி ஃபீல் பண்றதா மேம்கிட்ட சொல்லவா?” என்றாள் பூரணி.

“எம்மா தாயே, நான் சும்மா ஒரு ஃப்லோல சொன்னேன். உடனே, போட்டுக் கொடுத்துடாத.” என்று நேத்ரன் கைகூப்பி வேண்ட, சரியாக அதே சமயம் இருவரின் முன்பும் நின்றிருந்தாள் வாசவி.

அதை இருவருமே எதிர்பார்க்கவில்லை. ‘அங்க தான வந்துட்டு இருந்தாங்க. அதுக்குள்ள எப்படி இங்க வந்துட்டாங்க?’ என்பதே இருவரின் மனக்குரலாக இருந்தது.

வாசவியோ வாயை திறந்து எதுவும் பேசவில்லை. ஆனால், அவள் கண்ணசைவிலேயே மற்ற இருவரும் தங்கள் சிந்தனையிலிருந்து விடைபெற்றவர்களாக, அவளின் கேள்வி என்னவாக இருக்கும் என்பதை யூகித்து அதற்கான விடைகளை கூற ஆரம்பித்தனர். ஆறு மாத பயிற்சி ஆகிற்றே!

“மேம்…” என்று பேச வந்த பூரணியை முந்திக் கொண்டு, “பாஸ், கோவில்ல எல்லா அரேஞ்சமெண்ட்ஸும் பக்காவா பண்ணியாச்சு. இன்னைக்கு மார்னிங் ஜி.கே குரூப்ஸோட இருந்த மீட்டிங்கை நாளைக்கு போஸ்ட்போன் பண்ணியாச்சு. ஈவினிங் நம்ம ஓர்க்கர்ஸோட இருக்க இன்டர்னல் மீட்டிங்கை…” என்று ஒப்பித்துக் கொண்டிருந்தவனை ஒற்றை கையசைவில் தடுத்து நிறுத்திய வாசவி, “நோ நீட் டூ சேஞ் தி ஈவினிங் ஸ்கெட்யூல்.” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அவள் சென்றதும் நீண்ட பெருமூச்சு விட்டவனை பொசுக்கி விடுபவள் போல பார்த்தாள் பூரணி.

அதை ஓரக்கண்ணில் பார்த்த நேத்ரனோ இதழோர சிரிப்புடன், “எங்கயோ கருகுற வாடை அடிக்குதே.” என்க, “இதெல்லாம் சுத்தமா நல்லா இல்ல நேத்ரன். நான் கஷ்டப்பட்டு செஞ்ச அரேஞ்மெண்ட்ஸை நீங்க பண்ணதா மேம்கிட்ட சொல்றீங்க.” என்று சிணுங்க, “நீ பண்ணா என்ன, நான் பண்ணா என்ன. எல்லாமே ஒன்னு தான பூரி?” என்றான் நேத்ரன்.

அப்போது பின்னிலிருந்து, “டேய், அந்த பொண்ணுகிட்ட என்ன டா வம்பு பண்ணிட்டு இருக்க?” என்ற குரல் ஒலிக்க, “அட நம்ம பாட்டி.” என்றவாறே திரும்பினான் நேத்ரன்.

அங்கு பட்டுப்புடவை, நகைகள் சகிதம் கம்பீரமாக நின்றிருந்தார் காளீஸ்வரி, வாசவியின் பாட்டி.

“யாரைப் பார்த்து டா பாட்டின்னு சொல்ற? நான் அறுபது வயசுலயும் பியூட்டி டா.” என்றார் காளீஸ்வரி.

“முதல்ல வயசே தப்பு. இதுல பியூட்டியாம். எல்லாம் காலக்கொடுமை!” என்று முணுமுணுத்தவன், “சரிங்க ஈஸ் பியூட்டி, என்ன இந்த பக்கம்?” என்றான்.

“என் பேத்தி கல்யாணத்துக்கு நான் இல்லாமையா?” என்று அவர் தன் புடவையை நீவி விட, “கல்யாணம் நடந்தா தான?” என்று நக்கலாக கேட்டான் நேத்ரன்.

“வாயில அடி வாயில அடி. எப்போ பார்த்தாலும் முடியாது நடக்காதுன்னே சொல்லிட்டு இருக்க.” என்று நேத்ரனை பார்த்து திட்டியவர், பூரணியிடம் திரும்பி, “இவனையெல்லாம் எப்படி தான் கூட வச்சு வேலை பார்க்குறீங்க?” என்றார்.

பூரணிக்கு வாசவியைக் கண்டு எத்தனை நடுக்கமோ, அதேயளவு பயம் காளீஸ்வரியிடமும் உண்டு. இத்தனை நேரம் மற்ற இருவரின் உரையாடல்களை பயத்துடனே கவனித்தவள், சட்டென்று ஈஸ்வரி அவளிடம் பேசவும் பதட்டத்தில் அங்கிருந்து ஓடியே விட்டாள்.

“இப்போ எதுக்கு இந்த பொண்ணு என்னைப் பார்த்து பயந்து ஓடுது? அவ்ளோ டெரர்ராவா இருக்கேன்?” என்று ஈஸ்வரி வினவ, “எல்லாரும் என்னை மாதிரியே இருக்க முடியுமா? சரி சொல்லுங்க, நீங்களும் ஒவ்வொரு முறையும் உங்க பேத்தி கல்யாணத்தை பார்க்க கோவிலுக்கு வரீங்க, உங்க பேத்தியும் எல்லா முறையும் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடுறாங்க. இன்னும் எவ்ளோ நாள் இப்படியே கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்கப் போறீங்க?” என்றான் நேத்ரன்.

அதற்கு ஈஸ்வரியோ, “இந்த முறை கண்டிப்பா கல்யாணம் நடந்தே ஆகும்.” என்று கண்களில் ஒளியுடன் நேத்ரனை பார்த்து கூற, “ஹ்ம்ம், நல்லபடியா நடந்தா சரிதான்.” என்று கூறிவிட்டு நேத்ரனும் உள்ளே சென்று விட்டான்.

*****

இங்கு நேத்ரன் – ஈஸ்வரி உரையாடல் நடந்து கொண்டிருந்த அதே சமயம், சற்று தள்ளி நின்றிருந்த வாசவிக்கு தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வர, புருவச்சுருக்கத்துடன் அதை ஏற்றாள்.

எவ்வித முகவுரையும் இல்லாமல், “மேடம், உங்க கல்யாணத்தை உடனே நிறுத்திடுங்க. அந்த ராகேஷ் ஒரு ஃபிராடு. நிறைய பொண்ணுங்களை கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்லி ஏமாத்தியிருக்கான். உங்க நல்லதுக்காக தான் சொல்றேன். உடனே கல்யாணத்தை நிறுத்திடுங்க.” என்றதுடன் அழைப்பும் துண்டிக்கப்பட்டது.

அதைக் கேட்டவளின் முகமோ எவ்வித மாறுபடும் இல்லாமல் இருந்தாலும், இதழோரம் கேலிச் சிரிப்பு உதயமானதோ என்ற எண்ணம் அவளை உற்று நோக்குபவர்களுக்கே உண்டாகும்.

அவ்விதத்தில் நேத்ரனிற்கு அப்படி தோன்றத்தான் செய்தது. அதை அவளிடம் கேட்கவா முடியும் என்று அமைதியாக இருந்து விட்டான்.

*****

அரை மணி நேரம் கடக்க, மாப்பிள்ளை வீட்டிலிருந்து எந்த தகவலும் வரவில்லை என்று ஈஸ்வரி நேத்ரனை படுத்திக் கொண்டிருக்க, வாசவியோ எவ்வித பதட்டமும் இல்லாமல் தன் அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஹே பியூட்டி, அவன் வரலைன்னா நான் என்ன பண்ணுவேன். லூசுப்பய போனையும் அட்டெண்ட் பண்ண மாட்டிங்குறான்.” என்று நேத்ரன் ஒரு கையில் அலைபேசியை வைத்துக் கொண்டு சலித்துக் கொள்ளும்போதே, அங்கு பரபரப்பாக வந்து சேர்ந்தனர் மாப்பிள்ளையின் பெற்றோர்.

நேராக வாசவியிடம் சென்றவர்கள், “உன் வேலை தான இது? முன்னாடியே உன்னைப் பத்தி கேள்விப்பட்டப்போவே இந்த கல்யாண ஏற்பாட்டை நிறுத்தியிருக்கணும். பெரிய இடம்னு நம்பி ஏமாந்துட்டேன். ஏய், ஒழுங்கா என் பையன் எங்கன்னு சொல்லிடு. இல்ல நடக்குறதே வேற.” என்று ராகேஷின் தந்தை அதட்ட, அதற்கு அவன் தாயும் ஒத்து ஊதினார்.

அதை ஏதோ தொலைக்காட்சி நிகழ்ச்சி போல மற்ற மூவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

“ஷ், கோவிலுக்கு வந்துட்டு எதுக்கு இப்படி கத்திட்டு இருக்கீங்க மிஸ்டர். சிதம்பரம்? உங்க பையன் காணோம்னா போய் தேடுங்க. அதை விட்டுட்டு தேவையில்லாம என்கிட்ட வந்து கத்திட்டு இருக்கீங்க. இன்னொரு விஷயம், இந்த கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சது நீங்க தான்னு மறந்துட்டீங்க போல. ஹ்ம்ம், நிறைய வார்த்தைகளை வேற விட்டுட்டீங்க. ஏதோ பையனை காணாம விரக்தியில பேசுனதா நினைச்சு அதை மறந்துடலாம். ஆனா, இனிமே பேசும்போது கவனமா இருங்க. ஒத்த வார்த்தை எப்படி வேணும்னாலும் வாழ்க்கையை புரட்டி போட்டுடும்.” என்று அத்தனை நேரம் பேசாமல் இருந்ததற்கு சேர்த்து வைத்து பேசினாள் வாசவி.

“நீயெல்லாம் ஒரு பொண்ணா? உனக்கு இவ்ளோ திமிரு ஆகாது.” என்று ராகேஷின் தாய் திட்ட, “அதையே உங்களை பார்த்து கேட்க ரொம்ப நேரமாகாது. உங்க பையனோட லட்சணம் தெரிஞ்சதுக்கு அப்பறம் கூட, அந்த பொறுக்கிக்கு கல்யாணம் பண்ண பொண்ணு தேடியிருக்கீங்க. அதுவும் என் வீட்டுக்கு வந்து… ப்ச், ஆமா நான் தான் உங்க கேடுகெட்ட பையனை கடத்தி வச்சிருக்கேன். அதுக்கு என்ன இப்போ? முதல்ல,  ஒருநாள்ல விட்டுடலாம்னு தான் நினைச்சேன். ஆனா, என்ன பண்ண, நீங்க ரொம்ப பேசிட்டீங்களே. சோ, உங்களால முடிஞ்சா உங்க பையனை தேடி கண்டுபிடிச்சுக்கோங்க.” என்று நிமிர்வாக கூறினாள் வாசவி.

அவளை நோக்கி மேலும் சில சாபங்களை அள்ளி வழங்கிவிட்டு அங்கிருந்து சென்றனர் ராகேஷின் பெற்றோர்.

அவர்கள் சென்றதும் தன் அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்தாள்.

“ம்ம்ம், அவன் கண்டிஷன் என்ன?”

“….”

“ஓகே பி கேர்ஃபுல். நம்ம பிளான்ல ஒரு சின்ன சேஞ். நான் சொல்றப்போ அவனை விட்டா போதும்.”

“….”

“ஹ்ம்ம், என்னமோ உத்தம பிள்ளையை பெத்து வச்சுருக்க மாதிரி சாபம் கொடுத்துட்டு போறாங்க. சரி, அப்பப்போ அப்டேட்ஸ் கொடுத்துட்டே இரு. பை.”

பேசிவிட்டு வாசவி அலைபேசியை அணைக்க, அவளின் பாட்டியோ, “என்ன வாசவி இதெல்லாம்?” என்றார்.

“ஏன் உங்களுக்கு தெரியலையா? ஐ மீன் இங்க நடந்தது புரியலையா என்ன?” என்று ஒருமாதிரியான குரலில் வினவினாள் வாசவி.

பாட்டியும் பேத்தியும் கண்களாலேயே ஏதோ பேசிக்கொள்ள, வழக்கம்போல ஒன்றும் புரியாமல் நின்றிருந்தனர் நேத்ரனும் பூரணியும்.

ஒரு பெருமூச்சுடன், “சரி, இங்க வந்த வேலை முடிஞ்சுதுல, வாங்க போலாம்.” என்று வாசவி கூற, “இல்ல வாசவி. இன்னைக்கு உனக்கு கல்யாணம் கண்டிப்பா நடந்தே ஆகணும்.” என்று அவளிற்கு மேல் பிடிவாதமாக இருந்தார் ஈஸ்வரி.

வாசவி புருவம் சுருக்க, நேத்ரனோ அப்போது தான் சுயத்தை அடைந்தவனாக, “ஹே பியூட்டி, கல்யாணம்னா பொண்ணு மட்டும் போதாது. மாப்பிள்ளையும் வேணும்.” என்று தேவையில்லாமல் ஆஜரானான்.

எப்போதும் இப்படி அதிகப்பிரசங்கித்தனமாக நடந்து கொள்ளும்போது பார்வையாலேயே மிரட்டும் வாசவி கூட, தன் பாட்டியின் பிடிவாதத்தில், தன் மிரட்டலை மறந்து தான் விட்டாள் போலும்.

“மாப்பிள்ளை எல்லாம் ரெடி தான்.” என்று விஷம சிரிப்புடன் ஈஸ்வரி கூற, நேத்ரனோ, ‘இந்த பாட்டியோட டோனே வில்லங்கமா இருக்கே!’ என்று குழம்பினான்.

வாசவியும் கூட ஈஸ்வரியை புருவம் சுருக்கி பார்க்க, “நான் பார்க்குற மாப்பிள்ளையை, நான் சொல்ற தேதியில கல்யாணம் பண்றதா வாக்கு கொடுத்துருக்க சவி. அதை நீ மறக்கலன்னு நம்புறேன்.” என்று மிரட்டல் போலவே ஈஸ்வரி கூற, வாசவியோ இறுகிப் போனாள்.

‘இங்க பார்றா, நம்ம ஹிட்லரையே மிரட்டுது இந்த பாட்டி. ஃபேமிலியே ஹிட்லர் ஃபேமிலி போல. யாரு அந்த இன்ஸ்டன்ட் மாப்பிள்ளையோ தெரியல. பாவம் அந்த பையன்!’ என்று சற்று நேரத்தில் நடக்கப்போவதை அறியாமல் வருந்தினான் நேத்ரன்.

அங்கு அனைவரும் குழப்ப மனநிலையிலேயே இருக்க, அவர்களை கருவறைக்கு அழைத்துச் சென்றார் ஈஸ்வரி.

கடவுளை நோக்கி கைகூப்பியபடி நின்றிருந்த நேத்ரனிற்கு அருகில் வந்த ஈஸ்வரி, “இந்த தாலியை வாசவி கழுத்துல கட்டு.” என்றார்.

முதலில் யாரிடமோ கூறுகிறார் என்று சாதாரணமாக நின்றிருந்தவனை உசுப்பிய ஈஸ்வரி, மீண்டும் அவன் காதருகே, “நேத்ரா, இதை அவ கழுத்துல கட்டு.” என்று ஆணையிட, அவனோ இருக்கும் இடம் மறந்து, “என்ன!?” என்று கத்தியிருந்தான்.

பூ பூக்கும்…