வஞ்சிக்கொடியின் வசீகரனே – 8

அத்தியாயம் – 8

காஞ்சிபுரம் வீட்டில் இருந்த ராகவ்வின் அறை கட்டிலில் லேசாக மலர்கள் தூவி அலங்கரிக்கப்பட்டிருந்தது.

சில பழங்கள் மட்டும் ஒரு தட்டில் இருக்க, சம்பிரதாயம் என்று ஒரு டம்ளர் பால் சம்பூர்ணாவின் கையில் கொடுத்து விட்டிருந்தார்கள்.

பூர்ணா அறைக்குள் நுழைந்த மறுகணம் கட்டிலில் அமர்ந்திருந்த ராகவ் வேகமாக அவளை வரவேற்றுக் கொண்டே வந்த வேகத்தைப் பார்த்து வேகமாகப் பின்னடைய அவள் நினைக்க, அதற்கு முன் அவனே விலகி ‘கீழேயா, பால்கனியில் படுக்கப் போகிறாயா?’ என்று அவன் கேட்ட கேள்வியில் முதலில் அதிர்ந்து விழித்தவள், பின்பு முறைத்தாள்.

“முறைக்காம சீக்கிரம் சொல்லு சம்மூ…” என்று வேறு அவசரப்படுத்தினான்.

“நான் ஏன் கீழேயும், பால்கனிலேயும் படுக்கணும்?” என்று முறைத்துக் கொண்டே கேட்டாள்.

“ஏன்னா நீ என் மேல கோபமா இருக்கச் சம்மூ… மறந்துட்டீயா?”

“ஆமா கோபமாத்தான் இருக்கேன். அதுக்கென்ன இப்போ?”

“கோபமா இருந்தா புதுப் பொண்ணு ஒன்னு கீழே படுத்துப்பா. இல்லனா வேற அட்டாச் ரூம்ல படுத்துப்பானு நிறையப் படத்தில் பார்த்துருக்கேன். இங்கே அட்டாச் ரூம் இல்லை. அதான் பால்கனியில் படுத்துக்கிறியானு கேட்டேன்…” என்றவன் குரல் தீவிரமாகவே வந்தது.

‘விட்டா இவன் இந்த ரூமுக்கு வெளியே போய்ப் படுனு சொல்லுவான் போல…’ என்று எரிச்சலுடன் நினைத்தவள், “நீங்க வேணும்னா கீழேயோ, பால்கனிலயோ படுங்க. எனக்குக் கட்டிலில் படுத்துத் தான் பழக்கம்…” என்றவள் கட்டிலை நோக்கி நடந்தாள்.

அவளை முந்தி கொண்டு கட்டிலுக்குச் சென்ற ராகவ், “ரொம்ப நல்லதா போயிருச்சு. வா… வா… வந்து படு…” என்று சொன்னவன் கட்டிலில் ஏறி உட்புறமாகத் தள்ளி அமர்ந்து கொண்டு அவள் படுப்பதற்கான இடத்தைத் தட்டிக் காட்டினான்.

அவன் கட்டிலுக்கு அழைத்த வேகத்தைப் பார்த்து மிரண்டு விழித்தாள்.

பால் டம்ளரை பக்கத்தில் இருந்த மேஜையின் மீதி வைத்தவள் “என்னதிது? நான் தான் கட்டிலில் படுப்பேன்னு சொன்னேன்னே… என்னால கீழே எல்லாம் படுக்க முடியாது. நீங்க கீழே போய்ப் படுங்க…” என்றாள்.

“நான் கீழே படுக்கணும்னா அப்போ நீயும் கீழே படுக்கணும் பரவாயில்லையா…?” என்று கேட்டான்.

‘என்ன சொல்கிறான் இவன்? மாத்தி மாத்தி பேசிக்கிட்டு இருக்கான். நான் தான் என்னால கீழே படுக்க முடியாதுனு சொன்னேன்னே. அப்படியும் இப்படிக் கேட்டா என்ன அர்த்தம்? புரிந்து தான் பேசுகிறானா?’ என்பது போல் அவனைப் பார்த்து வைத்தாள்.

அவளின் பார்வையைப் புரிந்து கொண்டது போல, “நான் புரிஞ்சு தான் பேசுறேன் சம்மூ. நீ தான் நான் சொன்னதை மறந்துட்ட. கோபத்தில் கூட நமக்கு இடையில் இடைவெளி வரக்கூடாதுனு சொன்னேன்னா இல்லையா? நீ எங்க படுக்கப் போறனு முடிவெடுத்தா அதுக்குத் தகுந்த மாதிரி நம்ம இரண்டு பேருக்கும் படுக்கை விரிக்கலாம்னு தான் உன்கிட்ட கேட்டேன். நீ எங்க படுகிறாயோ அங்கேயே எனக்கும் உன் பக்கத்தில் படுக்க ஏற்பாடு பண்ணனுமேனு தான் கேட்டேன். ஆனா நீ ரொம்ப நல்லவ சம்மூ. உன் புருஷனுக்கு வேலை வைக்காம கட்டிலிலேயே படுத்துக்கிறனு சொல்லிட. வா… வந்து படுத்துக்கோ…” என்று பாசமாக அழைத்தான்.

‘அடப்பாவி! எங்க படுத்தாலும் நீயும் கூடப் படுக்கிறதுக்கு நான் ஏன்டா கீழே படுக்கணும்?’ என்பது போல வாயை பிளந்து பார்த்தவள் ‘இவன் இன்னைக்கு முதலிரவு கொண்டாடாம விடமாட்டான் போலயே. இவன்கிட்ட இருந்து எப்படித் தப்பிக்கிறது?’ என்று முழித்துக் கொண்டே நகத்தை யோசனையுடன் கடித்தாள்.

“நகத்தைக் கடிக்காதே சம்மூ. கெட்டப் பழக்கம்! அந்தப் பால் டம்ளரை எடு. நான் குடிச்சுறேன். உனக்குத் தான் பால் பிடிக்காதுல…” என்று சொல்லிக் கொண்டே கட்டிலில் சாய்ந்து வசதியாக அமர்ந்து கொண்டான்.

பால் டம்ளரை எடுத்துக் கொடுத்தவள், “உங்களுக்கு எப்படித் தெரியும் எனக்குப் பால் பிடிக்காதுன்னு?” என்று கேட்டாள்.

“அதான் பால், பழம் கொடுக்குற சடங்கில் பார்த்தேனே. நான் குடிச்சுட்டு கொடுத்ததைக் குடிக்கற மாதிரி பாவ்லா காட்டிட்டு திரும்ப என்கிட்டயே கொடுத்த. அதை வச்சு தான்…” என்று சொல்லிவிட்டு பாலை வாங்கிக் குடித்தவன், “உனக்கு ஒரு விஷயம் பிடிக்கலைனா பிடிக்கலைனு சொல்லிரு சம்மூ. நானும் புரிஞ்சுப்பேன். அப்பா, அம்மாவும் புரிஞ்சுப்பாங்க…” என்று அவளின் முகத்தை ஊடுருவி பார்த்துச் சொன்னான்.

அவனே அப்படிச் சொன்னதில் முகம் மலர்ந்தவள் “எனக்கு… எனக்கு… இது…” என்று சொல்லிக் கொண்டே கட்டிலை கையைக் காட்டினாள்.

‘அவன் பாலுக்குச் சொன்னதைத் தான் படுக்கைக்குச் சொன்னால் அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ?’ என்று சிறு தயக்கம் உண்டாகத் திணறிக் கொண்டே சொல்ல முயன்றாள்.

“என்ன கட்டில் வேண்டாமா? அப்போ கீழே இரண்டு பேருக்கும் பாய் விரிக்கட்டா?” என்று புரியாதவன் போல் முகத்தை அழுத்தமாகவே வைத்துக் கொண்டு கேட்டான்.

“ப்ச்ச்… அதில்லை…” என்று கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து அவனிடம் எப்படிச் சொல்வது என்பது போலத் தயங்கினாள்.

பின்பு தைரியத்தை வரவைத்துக் கொண்டு “இன்னைக்கு…” என்று அவள் ஆரம்பிக்க… “இன்னைக்கு ரொம்ப அலுப்பா இருக்கு சம்மூ. எதுவா இருந்தாலும் காலையில் பேசலாம். படு… படுத்து தூங்கு…” என்ற ராகவ் அப்படியே படுக்கையில் சாய்ந்தான்.

‘என்ன… தூங்கவா சொன்னான்…?’ என்பது போல வியந்து கணவனைப் பார்த்தாள்.

படுத்த படியே மனைவியின் கண்களைச் சந்தித்தவன் “தூங்கத்தான் சொன்னேன். தூங்கு…” என்று அழுத்தமாகச் சொன்னவன், படுக்கையில் இருந்த அவளின் கையைப் பிடித்து இழுக்க, படுக்கையில் பாதியும், கணவனின் மீது மீதியுமாகச் சாய்ந்தாள்.

அதில் அவனின் மேலேயே விழுந்தது போல் இருக்க, கூச்சத்துடன் விலக முயன்றாள்.

அதற்குள் அவனே விலக்கி அருகில் இருந்த தலையணையில் அவளைப் படுக்க வைத்து, மனைவியை ஒட்டிக் கொண்டு படுத்துக் கொண்டான்.

‘இப்படி ஒட்டிப் படுத்துக்கொண்டு தூங்க போகின்றானாமா?’ அவளுக்கு அருகில் உணர்ந்த கணவனின் ஸ்பரிசத்தில் மூச்சடைத்தது.

அவன் தூங்கி விடுவான் என்பதில் சிறிதும் நம்பிக்கை இல்லை. நடுவில் தலையணையை வைத்து விடலாமா? என்று அவளின் யோசனை ஓடியது.

கண்ணை மூடிக் கொண்டு அவஸ்தையுடன் படுத்திருந்த மனைவியை மெல்ல திரும்பி பார்த்தான்.

“தூக்கம் வரலைனா இன்றைய நாளை கொண்டாடிருவோமா சம்மூ?” ரகசிய குரலில் கேட்டான்.

“இல்லை… இல்லை… எனக்குத் தூக்கம் வந்துருச்சு…” என்று கண்களை இன்னும் இறுக மூடிக் கொண்டாள்.

அவளின் வேகத்தில் சிரிப்பு வர, சத்தமில்லாமல் சிரித்தவன் தானும் கண்களை மூடிக் கொண்டான்.

பொய் தூக்கம் என்று கண்களை மூடியிருந்த பூர்ணா அசதியில் விரைவிலேயே உறங்கி விட, சிறிது நேரத்திற்குப் பிறகு கண்களைத் திறந்த ராகவ், தலையைக் கையில் தாங்கி மனைவியின் பக்கம் திரும்பி படுத்து அவளின் முகத்தைப் பார்த்தான்.

“அப்படி என்னடி உன்னோட குழப்பம்? வாயை திறந்து தான் சொல்லேன்னு உன்னைப் போட்டு உலுக்கணும் போல இருக்குடி பொண்டாட்டி. ஆனா இனி நான் கேட்க மாட்டேன். நீயே தான் இனி சொல்லணும். இது வீம்பு இல்லை. நம்பிக்கை பொறுத்த விஷயம். கல்யாணத்துக்கு முன்னாடி கேட்டப்பயே நீ சொல்லியிருந்தா உன் குழப்பத்தை எல்லாம் போக்கிட்டுத் திருப்தியா கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சேன்.

ஆனா அப்போவே சொல்லாம விட்டதே உனக்கு என் மேலே நம்பிக்கை வராததால் தானே? உனக்கு நம்பிக்கை வரட்டும்னு தான் அப்பயே பொண்டாட்டி, பொண்டாட்டினு கூப்பிட்டு நம்ம இரண்டு பேருக்கும் நடுவில் என்ன உறவுன்னு உனக்கு வலியுறுத்த நினைச்சேன். ஆனா அதைச் சாதாரணமா நீ எடுத்துக்கிட்ட. அப்போ நம்பிக்கை வரலைனாலும் பரவாயில்ல. ஏன்னா அப்போ நான் உனக்கு மூணாவது மனுஷனா தெரிஞ்சேன். ஆனா இப்போ அப்படியில்லை. நம்ம இரண்டு பேரும் கணவன், மனைவி! இனிமேல் உன் கணவன் மேல நம்பிக்கை வச்சு உன்னைச் சார்ந்த விஷயத்தை என்கிட்ட நீயா சொல்லணும்னு என் மனசு எதிர் பார்க்குது…” என்று அவளைப் பார்த்து மனதிற்குள் பேசிக் கொண்டவன் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான்.

“நான் தொட்டா நீ உருகிவிடுவனு தெரிஞ்சும் உன்னை விட்டு விலகி இருக்குறதுக்குக் காரணம் என் மேல உனக்கு நம்பிக்கை வரட்டும்னு தான். எனக்கு உன் உடல் மட்டும் வேண்டாம். என் மேல் நம்பிக்கை வைக்கும் உன் உள்ளமும் வேணும். அதை நீ தரும் நாளுக்காகக் காத்திருக்கேன்டா சம்மூ…” என்றவன் அவளின் முகத்தை மறைத்த முடி கற்றைகளை ஒற்றைக் விரலால் விலக்கினான்.

மேலும் மனைவியின் முகத்தை வருட துடித்த கைகளை அடக்கியவன், “மனசுக்கு பிடிச்ச மனைவியை உரிமை இருந்தும் தொடாமல் இருப்பது பெரும் வலிடா… இந்த வலியை நீ போக்கும் நாளுக்காக இனி தினம் தினம் காத்திருப்பேன்…” என்று சொல்லி விட்டு அவளின் முகத்தைப் பார்த்தபடி படுத்திருந்தான்.

தன்னால் அவனை உறக்கம் தழுவிய போது வெகு நேரம் ஆகியிருந்தது.

அதிகாலை ஐந்து மணிக்கு உறக்கம் கலைந்து எழுந்த பூர்ணா தன் அருகில் வித்தியாசத்தை உணர்ந்து பட்டெனக் கண்களைத் திறந்து பார்த்தாள்.

அவளைப் பார்த்த வண்ணம் அசந்து உறங்கிக் கொண்டிருந்த கணவனைப் பார்த்து வேகமாக எழுந்து அமர்ந்தாள்.

அருகருகே படுத்திருந்தும் அவளின் மேல் கைகளைக் கூடப் போடாமல் உறங்கிக் கொண்டிருந்தவனை அதிசயமாகப் பார்த்தாள்.

நிச்சயம் முடிந்த பின் அவளின் அலங்காரத்தை ரசித்துப் பார்த்துவிட்டு “நாளைக்கு வரைக்கும் நல்ல பிள்ளையாய் இருக்கணும்னு நினைச்சுருந்தேன். ஆனா இன்னைக்கே என்னைக் கெட்டப் பையனா ஆக்கிவிட்டுருவ போல இருக்கே…” என்று தாபத்துடன் முணுமுணுத்து விட்டு கண்களாலேயே களீபரம் செய்தவன், நேற்று இரவு முழு உரிமை இருந்தும் கண்ணியம் காத்திருக்கிறான்.

‘ஏன்? எப்படி அவனால் தள்ளியிருக்க முடிந்தது?’ என்று குழப்பத்துடன் யோசித்தாள்.

“அவ்வளவு நல்லவனா நீ?” என்பது போலக் கணவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘அவ்வளவு நல்லவனா இருக்கப் போய்த் தான் புது இடம்னு கொஞ்சம் கூட உறுத்தல் இல்லாம, அவனின் அருகாமையில் அசவுகரியத்தைக் கூட உணராமல் நிம்மதியா தூங்கியிருக்க…’ என்று மனம் அவளுக்கு எடுத்துக் கொடுத்தது.

“உண்மைதான்! அவனின் அருகில் படுத்தும் புதுமையை உணராமல் உறங்கியிருக்கிறாள் என்றால் அவனின் கண்ணியத்தால் தான் சாத்தியம் ஆகியிருக்கிறது” என்று நினைத்துக் கொண்ட பூர்ணா கணவனின் முகத்தை ஆழ்ந்து பார்த்தாள்.

தூங்கும் போது இன்னும் அவனின் முகத்தில் வசீகரம் கூடியிருந்தது போல் இருந்தது.

அவளை முதல் முதலாக ஈர்த்த முக அழகு!

‘உனக்கு வெள்ளாவியில் வெந்தவன்னு நான் பேர் வைத்ததில் தப்பே இல்லைடா. அப்படியே வெளுத்துப் போய்த் தான் இருக்க…’ என்று நினைத்துக் கொண்டாள்.

அதுவும் அந்த வெள்ளை போலான முகத்தில் கருப்பாக இருந்த மீசை அவனுக்குக் கூடுதல் அழகை கொடுத்தது.

தனி அழகை கொடுத்த அவனின் மீசையைப் பிடித்து இழுக்க வேண்டும் போல் அவளின் கைகள் பரபரத்தது.

‘க்கும்… சும்மா இருக்குறவனையும் நீயே தூண்டி விட வேண்டியது. அப்புறம் அவன் எதுவும் செய்தா மட்டும் முறைச்சு பார்க்க வேண்டியது. கையையும், காலையும் வச்சுக்கிட்டு சும்மா இரு. இல்லனா, நைட் கொண்டாடாம விட்ட பர்ஸ்ட் நைட்டை இப்போ கொண்டாடிட போறான்’ என்று மனம் எச்சரிக்க, அவனின் மீசையை இழுக்க நீண்ட கையைத் தன் பக்கமே இழுத்துக் கொண்டாள்.

அடுத்து அவளின் கண்கள் அவனின் உதட்டின் மீது பதிந்தது.

அவனின் உதட்டையே சில நொடிகள் உற்று நோக்கியவள், பின்பு ஏதோ யோசித்தது போலப் பட்டென எழுந்து படுக்கையை விட்டு கீழே இறங்கினாள்.

அறையை முழுவதும் நோட்டம் விட்டவள் அங்கே இருந்த மேஜையின் அருகே சென்று ஏதோ தேடினாள்.

அவள் தேடியது கிடைக்காமல் போக, வேற எங்கே தேடலாம் என்று அறையைக் கண்களால் அலசினாள்.

சுவற்றோடு சேர்ந்து ஒரு அலமாரி தெரிய அதை நோக்கி நடந்தாள்.

அவள் அலமாரியில் கைவைத்த அடுத்த நிமிடம் “என்ன சம்மூ… என்ன தேடுற?” என்று கேட்ட கணவனின் குரலில் பூர்ணாவிற்குத் தூக்கி வாரிப் போட்டது.