வஞ்சிக்கொடியின் வசீகரனே – 7

அத்தியாயம் – 7

தன் மார்பின் மீது தவழ்ந்த மங்கள நாணை பார்த்து மனதில் ஏற்பட்ட புது உணர்வுடன் தலை நிமிர்ந்த சம்பூர்ணா, மெதுவாகத் தலையைச் சாய்த்து தன் மணவாளனை பார்த்தாள்.

அதே நேரம் ராகவ்வும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் தன்னைப் பார்த்ததும், பல் வரிசை தெரிய சிரித்தவன், அவளின் புறம் லேசாகக் குனிந்து “நீ என் பொண்டாட்டி ஆகிட்ட பொண்டாட்டி…” எனக் காதின் ஓரம் கிசுகிசுத்தான்.

“இப்போ என்ன நீ என் புருஷன் ஆகிட்ட புருஷானு சொல்லணுமா? முடியாது போடா…” பதிலுக்கு உதடுகளை அதிகம் அசைக்காமல் முணுமுணுத்தாள்.

“நீ அதை எல்லாம் சொல்ல வேண்டாம். நேத்து மாதிரி ஒரு முறை சிரியேன். அந்தச் சிரிப்பை நான் பார்க்கணும்…” என்றான்.

அவன் அப்படிக் கேட்டதும் அதுவரை இருந்த இலகுத்தன்மை மறைந்து மனதில் கடுப்பு உருவானது.

‘மவனே! உன்னை…’ என்று கடுப்புடன் அவனை முறைக்க அவளின் கண்கள் பரபரத்தன. இருக்கும் சூழல் உணர்ந்து அடக்கி கொண்டாள்.

நேற்று அவன் சொன்ன வார்த்தையைக் கேட்ட பிறகும் அவனின் முன் சிரிக்க அவளுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கின்றது?

நேற்று மோதிரம் மாற்றி முடித்ததும், இருவரையும் ஜோடியாக நிற்க வைத்துப் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தார்கள். கூடவே உறவினர்களும் வரிசையாக வந்து புகைப்படம் எடுக்க ஆரம்பிக்க, இருவரின் நேரமும் சிறிது நேரத்திற்குப் பரபரப்பாகச் சென்று கொண்டிருந்தது.

இருவருக்கும் சிறிது இடைவெளி கிடைக்க, அந்த நேரத்தில் அவளின் புறம் குனிந்தவன், “உனக்குச் சிரிச்சா கன்னத்தில் ஓட்டை விழும்னு இத்தனை நாளும் எனக்குத் தெரியாம போயிருச்சே சம்மூ…” என்று சொன்னவனை அதிர்ந்து பார்த்தாள் பூர்ணா.

‘என்னது ஓட்டையா?’ என்று திடுக்கிட்டவள் தன் கன்னத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டாள்.

“ம்ம்… இந்தக் கன்னத்தில் இல்லை. அந்தக் கன்னத்தில் மட்டும் தான் ஓட்டை விழுது. இரண்டு கன்னத்துலயும் ஓட்டை விழுந்தா இன்னும் நல்லா இருக்கும்…” என்று சொல்லி பெருமூச்சு விட்டான்.

‘அடப்பாவி! கன்னத்தில் குழி விழுவதை இப்படி ஓட்டை விழுதுனு சொன்னவன் நீயா தான்டா இருப்ப. ஓட்டைனு சொல்லி என் சிரிப்பில் ஓட்டை போட்ட உன் முன்னால் இனி சிரிக்க மாட்டேன் போடா…’ என்று நினைத்துக்கொண்டவள், அதன் பிறகு அவன் கேட்டும் சிரிக்க மறுத்துவிட்டாள்.

இப்போதும் சிரிக்கச் சொல்லி கேட்டவனை அவளுக்கு முறைக்கத் தோன்றாமல் கொஞ்சவா தோன்றும்?

திருமணச் சடங்குகள் முடிந்து, உறவினர்களும் புகைப்படம் எடுக்க வர, அளவாகச் சிரித்து அவர்களின் வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டவர்கள், நண்பர்களின் கூட்டம் வர இருவரின் முகத்திலும் சிரிப்பு அதிகமானது.

அவளின் நண்பர்கள் வந்த போது மிகுந்த உற்சாகத்துடன் இருந்த பூர்ணா, அவனின் நண்பர்கள் வந்த போது முகத்தை லேசாகச் சுருக்கினாள்.

அதைக் கவனித்து விட்ட ராகவ்வின் முகம் யோசனைக்குத் தாவியது.

இரவும் அவனின் நண்பர்கள் வந்து நின்றபோதும் முகத்தைச் சுருக்கினாள்.

இரவு அதை ஏதோ அசவுகரியம் என்று சாதாரணமாக எடுத்துக் கொண்ட ராகவ்விற்கு இப்போதும் அப்படி எடுத்துக் கொள்ள முடியாமல் ஏதோ முரண்டியது.

தன் நண்பர்களைப் பார்த்தான். அனைவரும் எந்த வேறுபாடும் இல்லாமல் உற்சாகத்துடன் இருந்தார்கள்.

அதுவும் குறிப்பிட்டு தன்னுடன் பேருந்தில் வந்த நண்பர்களைப் பார்த்து மட்டுமே அவளின் முகம் மாறுவதைப் புரிந்து கொண்டவன் குழப்பத்தில் ஆழ்ந்தான்.

நேற்று மண்டபத்தின் உள்ளே அவள் நுழைந்த போதும் அந்த நண்பர்கள் நால்வரும் அவனின் அருகில் தான் நின்றிருந்தார்கள்.

‘அப்போ இவங்களைப் பார்த்துட்டு தான் முகத்தை அப்படி வச்சுக்கிட்டு போனாளா? ஏன்? இவனுங்க மேல அவளுக்கு அப்படி என்ன கோபம்? நல்ல பசங்களாச்சே…’ என்று யோசனையுடன் நின்றிருந்தவன் தோளில் ஒரு நண்பன் கை போட்டுப் புகைப்படத்திற்கு நிற்கவும், அவனின் தொடுகையில் யோசனையைக் கை விட்டுப் புகைப்படத்திற்குப் புன்னகைத்தான்.

அவர்கள் சென்ற பிறகு மெல்ல திரும்பி பூர்ணாவின் முகத்தை ஆராய்ந்தான்.

அவளின் முகம் மீண்டும் சுருக்கம் போய்ப் புன்னகையுடன் இருந்தது.

தனியாக அவளிடம் என்ன பிரச்சனை என்று கேட்டு விட வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

மதிய உணவிற்குப் பிறகு புதுமணத் தம்பதிகள் காஞ்சிபுரம் செல்வதாக இருந்தது.

உறவினர்களின் வசதிக்காகத் திருமணத்தைச் சென்னையில் வைத்தவர்கள், முடிந்ததும் மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் முறைப்படி காஞ்சிபுரம் கிளம்பினார்கள்.

பூர்ணாவும், ராகவ்வும் மட்டும் தனியாக வர ஒரு கார் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, ராகவ்வின் பெற்றோருடன், பூர்ணாவின் நெருங்கிய உறவினராக ஒரு தம்பதியினரும், ராகவ்வின் சில நெருங்கிய உறவுகளும் வேறொரு வேனில் வர ஏற்பாடாகியிருந்தது.

“நல்ல பொண்ணுன்னு பேர் எடுக்கணும் சம்பூர்ணா. நீயும் சந்தோஷமா இருந்து உன் வீட்டு ஆளுங்களையும் சந்தோஷமா வச்சுக்கணும்…” என்று சொன்ன தந்தையைப் பார்த்து வேகமாக “சரிப்பா…” என்று தலையை ஆட்டினாள் பூர்ணா.

அவள் தலையாட்டிய வேகத்தைப் பார்த்து அவர்கள் பேசிக் கொள்ளத் தனிமை கொடுத்துவிட்டு சிறிது தள்ளி நண்பனுடன் நின்றிருந்த ராகவ் அவளை அதிசயமாகப் பார்த்தான்.

தந்தையின் முன் அவ்வளவு பவ்யத்துடன் நின்றிருந்தாள் சம்பூர்ணா.

‘அடக்கத்திற்கு டெபனிஷன் சம்பூர்ணானு எப்போ பெயர் மாத்தினாங்க?’ என்பது போல் பார்த்து வைத்தான் ராகவ்.

“அப்பா சொன்ன மாதிரி நடந்துக்கணும் பூர்ணா…” என்றதோடு சகுந்தலா முடித்துக் கொண்டார்.

அதன் பிறகு சடகோபன் தான் அவளுக்குச் சில விவரங்களை எடுத்து சொல்லிக் கொண்டிருந்தார்.

“காஞ்சிபுரத்தில் இரண்டு நாளும், நம்ம வீட்டில் இரண்டு நாளும் இருந்துட்டு ஐஞ்சாவது நாள் மாப்பிள்ளையோட அப்பார்ட்மெண்ட்க்கு போயிருவீங்க சம்பூர்ணா. அப்புறம் அங்கிருந்து வேலைக்குப் போறதுக்கான டீடைல்ஸ் எல்லாம் மாப்பிள்ளைகிட்ட கேட்டுக்கோ. அதுக்கு முன்னாடி இன்னைக்கு ஆர்ட்டர் வந்த விஷயத்தை மாப்பிள்ளைகிட்ட சொல்லிட்டியா?” என்று கேட்டார்.

“இல்லப்பா… இனி தான் சொல்லணும்…” என்று இழுத்தபடி சொன்னாள்.

“உன்னைச் சார்ந்த எந்த விஷயத்தையும் இனி மாப்பிள்ளைகிட்ட சொல்ல தயங்க கூடாது… தாமதமும் பண்ண கூடாதுமா. உடனே சொல்லிடு…” என்றார் கண்டிப்புடன்.

“ஹ்ம்ம்… காரில் போகும் போது சொல்லிடுறேன் பா…” என்றாள் மெல்லிய குரலில்.

“சரிம்மா கிளம்புங்க… வீட்டுக்குப் போனதும் ஒரு போன் மட்டும் போட்டு விடு…” என்று அவர் பேச்சை முடித்துக் கொண்டு தள்ளி நின்ற ராகவ்விடம் பேசினார்.

“அப்போ நாங்க கிளம்புறோம் மாமா, அத்தை…” என இருவரிடமும் சொல்லிக்கொள்ள, “போயிட்டு வாங்க மாப்பிள்ளை…” என்றனர்.

இருவரும் காரில் ஏறி அரைமணிநேரம் கடந்த பிறகும் இருவருக்கும் இடையே அமைதி நிலவியது.

காரில் ஏறியதில் இருந்து ஏதோ யோசனையுடன் வந்தவளை ராகவ்வும் எதுவும் சீண்டாமல் வந்தான்.

அவளாக எப்போது தான் பேசுவாள் என்று பார்ப்போம் என்று நினைத்துக் கொண்டான்.

அவளின் தந்தை வேலையைப் பற்றிச் சொன்னது அறையும் குறையுமாகக் காதில் விழுந்திருந்தது.

அதைப்பற்றி ஏதாவது சொல்வாளா என்பது போல ஒரு முறை அவளைத் திரும்பி பார்த்தான்.

அவள் ஜன்னல் வழியாக வெளியே வெறித்தபடி யோசனையாக வரவும், “ம்கூம்… இது ஆகுறது இல்லை. இவளை விட்டா காஞ்சிபுரம் போற வரை இப்படியே தான் வருவா போல… ராகவா உன்னோட ராகத்தைக் கேட்காம உன் பொண்டாட்டி சந்தோஷமா வர்றா… இது நல்லதுக்கில்லை. ஆரம்பி உன் ராகத்தை…” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன், ஜன்னலை ஒட்டிக்கொண்டு அமர்ந்திருந்தவளை விட்டால் வெளியே தள்ளி விடுபவன் போல இடித்துக் கொண்டு அமர்ந்தான்.

அவன் இடித்ததில் கதவில் பல்லி போல ஒட்டிக் கொண்டு அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.

அடுத்து வேகமாக அவளின் பார்வை முன்னால் இருந்த ஓட்டுனரிடம் சென்றது.

அவர் சாலையில் கவனமாக இருந்ததைப் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டவள், “என்ன செய்றீங்க? தள்ளி உட்காருங்க…” என்று மெல்லிய குரலில் எரிச்சலுடன் சொன்னாள்.

“உன்னில் பாதியடி நான்… நீ என்னனா நமக்குள் பாதி இடம் விட்டுருக்க? அதான் உன்னை என்னில் பாதியா ஆக்கிக்கிட்டேன்…” என்றவன் இன்னும் இடித்துக் கொண்டு அமர்ந்தான்.

“இதுக்கு மேல இடிச்சா நான் காருக்கு வெளியே தான் போய் விழுவேன். தள்ளி உட்காருங்க…” பல்லை கடித்துக் கொண்டு சொன்னாள்.

“அச்சோ! வெளியே விழுந்துருவீயா?” என்று பயந்த குரலில் சொன்னவன் காரின் இருக்கைக்கும் அவளின் முதுகிற்கும் இருந்த சிறு இடைவெளியில் கையை நுழைத்தவன் அவளின் இடையைப் பற்றித் தன்னுடன் அழுத்திக் கொண்டான்.

அவன் இடையைப் பிடித்த வேகத்தில் “ஆவ்…” என்று மெல்லிய குரலில் சப்தம் எழுப்பியவள் கண்களைப் பெரியதாக விரித்து அவனைப் பார்த்தாள்.

அவள் அப்படிப் பார்த்ததைக் கண்டு கொள்ளாமல் மும்முரமாக ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான்.

“என்ன… என்னதிது…?” என்று தந்தியடிக்கக் கேட்டவள், அவன் வேடிக்கை பார்ப்பதை பார்த்து “அப்படி என்னத்தை வேடிக்கை பார்க்கிறீங்க? கையை எடுங்க…” என்று சொல்லிக்கொண்டே இடுப்பில் இருந்த அவனின் கையைத் தட்டி விட முயன்றாள்.

அதில் இன்னும் அழுத்தி பிடித்தவன் “ஷ்ஷ்… அமைதியா இரு… என் பொண்டாட்டி வெளியே பார்த்து என்னவோ ரசிச்சுட்டு வந்தா. அது என்னன்னு நானும் பார்க்கணும்…” என்றவன் வெளியே பார்த்தான்.

“ரசிச்சுக்கிட்டா?” என்று நினைத்தவள் வெளியே இருந்த சூழ்நிலையைப் பார்த்தாள்.

இன்னும் சென்னைக்குள் தான் வாகனம் சென்று கொண்டிருந்தால் வாகன இரைச்சல்களும், புகையும், சாலை நெரிசலும் தான் வெளியே தெரிந்தது.

இதில் என்னத்தை அவள் ரசித்தாளாம்? என்று மூக்கு விடைக்க நினைத்தவள், “நான் ஒன்னையும் ரசிக்கலை. கையை எடுங்க…” என்றாள் அழுத்தமாக.

அவன் ஒட்டிக் கொண்டு அமர்ந்திருப்பதும், இடுப்பை அவன் அழுத்தியதில் உண்டான குறுகுறுப்பும், அவளை ஏதோ செய்தது.

புதிதாக உணரும் ஆண் மகனின் ஸ்பரிசம்! கணவனே ஆனாலும் புதியவன் தான் அல்லவோ?

உடையவனாலும், இன்னும் முழுதாக உடையவன் ஆகாதவன்.

முதல் முறையாக வரைமுறை தாண்டிய நெருக்கம், பிடிப்பு!

ஒரு வயதிற்கு மேல் தந்தை கூடத் தொடாமல் தான் பேசும் வளர்ப்பு முறையில் வளர்ந்தவள்.

வேலை இடத்தில் ஆண்களுடன் பேசினாலும் கைக் குலுக்கல் தாண்டி இருந்ததில்லை.

கணவனின் முதல் முறையான அதிக நெருக்கத்தை உணர்ந்தவளுக்கு உள்ளுக்குள் ஏதேதோ செய்தது.

அதைச் சிறிதும் காட்டி கொள்ளாமலேயே அவனிடம் எரிச்சலுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

உள்ளுக்குள் நடக்கும் பிரளயத்தைக் காட்டி கொள்ளாமல் அப்படிப் பேசுவது கூட அவளுக்குப் போராட்டம் தருவதாக இருந்தது.

‘நீ கிசுகிசுப்பா பேசினாலே நான் கிறங்கி போவேன். இதில் இப்படி வேற பண்ணினா நான் ஒரேயடியா பிளாட் ஆக்கிருவேனே? அப்புறம் உன் மேல இருக்குற கோபம் எனக்குப் போயிருச்சுனா?’ என்று நினைத்தவள் அவனை விலக்க வைக்க, “ப்ளீஸ், கையை எடுங்க…” என்றாள் கெஞ்சலான குரலில்.

அவள் வலுக்கட்டாயமாகப் பிரிக்க முயன்ற போது பிடித்து இன்னும் இறுக்கியவன், இப்போது அவளின் கெஞ்சலில் தன் கையை இலகுவாக்கினான்.

ஆனால் அடுத்த நொடி இன்னும் அழுத்தி பிடித்துத் தான் சிறிது நகர்ந்து கொண்டே அவளையும் தன் பக்கம் நகர்த்தி அமர வைத்து விட்டு, தன் கையை எடுத்துக் கொண்டான்.

இப்போது இருவரும் இருக்கையின் நடுவில் அமர்ந்திருந்தனர்.

அவன் அப்படி இழுத்து பிடித்து அமர வைத்ததில் முழுதாக அவன் அணைத்தது போல இருக்க, அவளின் மேனியே ஜில்லிட்டுப் போனது போல் இருந்தது.

கணவன் கையை எடுத்ததும், நிம்மதி வருவதற்குப் பதில் ஏதோ இழந்ததைப் போல உணர்ந்தாள்.

‘என்னடி இப்படினா அப்படிங்கிற… அப்படினா இப்படிங்கிற? ஏதாவது ஒரு நிலையில் தான் நில்லேன்…’ வெகு நேரத்திற்குப் பிறகு வெளியே வந்த மனம் கொட்டு வைத்தது.

“ப்ச்ச்… என் மன சஞ்சலம் மட்டும் போயிருச்சுனா நான் ஏன் இப்படி அல்லாட போறேன்? என்னை இப்படி அல்லாட வைக்கிறதே அவன் தானே…” என்று நினைத்தவளுக்கு மறைந்து இருந்த கோபம் திரும்ப எட்டிப் பார்த்தது.

அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், “என்ன விஷயம் சம்மூ? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்டான்.

“ஒன்னும் இல்லை…” அவனிடம் சொல்ல பிடிக்காமல் முகத்தைத் திருப்பினாள்.

“சரிதான்… நான் கையை எடுத்தது தான் கோபம் போல…” என்று அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டு கண்ணில் குறும்புடன் அவளைப் பார்த்தவன், மீண்டும் இருக்கைக்கிடையில் கையை நுழைத்தான்.

“இல்லையில்லை அதெல்லாம் இல்லை…” என்று மெல்லிய குரலில் அலறியவள், “எனக்கு அசதியா இருக்கு. நான் கொஞ்ச நேரம் தூங்குறேன்…” என்றவள் அவனை விட்டு சிறிது நகர்ந்து அமர்ந்து இருக்கையில் தலையைச் சாய்க்க போனாள்.

“நோ சம்மூ… இனி நமக்கிடையே கோபத்தில் கூட இடைவெளி வரக் கூடாது…” என்று வேகமாக இந்த முறை அவளின் தோளை பிடித்துத் தன் பக்கம் இழுத்தான்.

‘அதுக்காக ஓட்டிகிட்டே வா இருக்க முடியும்?’

“ஒட்டிக்கிட்டு மட்டும் இல்லை. கட்டிக்கிட்டே கூடச் சண்டை போடலாம்…” அவளின் மனதை அறிந்தது போல, காதின் ஓரம் கிசுகிசுத்தான்.

‘க்கும்… இவன் ஒரு மார்க்கமாத்தான் இருக்கான்…’ என்று நினைத்தவள் “நான் தூங்கிட்டேன்…” என்று சொல்லிக்கொண்டே இருக்கையில் தலையைச் சாய்த்துக் கண்களை மூடிக்கொண்டாள்.

அவளுக்கு முதல் நாளே வம்பு வளர்க்க விருப்பமில்லை.

‘நீ வம்பு வளர்த்துட்டாலும்… எப்படியும் அவன் தான் வஞ்சனையில்லாமல் வசியம் பண்ணுவான்…’ என்று மனது இடிந்துரைத்தது.

கண்ணை மூடியிருந்தாலும் அவளுக்குத் தூக்கம் வரவில்லை. இப்போதே இப்படி ஒட்டிக் கொள்ள நினைப்பவன் இரவில்? என்ற கேள்வி எழுந்து அவளைத் துரத்தியது.

அவனின் மீது இன்னும் இருக்கும் மனஸ்தாபத்துடன் வாழ்க்கையைத் தொடங்க அவளுக்கு விருப்பமில்லை. எப்படியாவது அவனிடம் பேசி சிறிது நாட்களைத் தள்ளிப் போட நினைத்தாள்.

ஆனால் அது முடியுமா என்று தான் அவளுக்குப் பயமாக இருந்தது.

அவனிடம் மயங்கும் மனதிற்குத் தன்னால் கடிவாளம் போட முடியாத நிலையில், அது சாத்தியம் தானா? என்ற கேள்வியுடன் கண்களை மூடியிருந்தாள்.

அவளின் கண்ணின் கருமணிகள் அங்கேயும் இங்கேயும் ஓடுவதைப் பார்த்தாலும் அதற்கு மேல் அவளைச் சீண்டும் எண்ணம் இல்லாமல் அமைதியாகவே வந்தான் ராகவ்.

மாலையளவில் காஞ்சிபுரத்தில் இருந்த ராகவ்வின் வீட்டை அடைந்து அங்கே செய்ய வேண்டிய சடங்குகள் முடிந்து, இரவு தனிமையில் இருவரும் விடப்பட்ட போது, இவனை எப்படிப் பேசி சமாளிக்க என்ற எண்ணத்துடன் பூர்ணா அந்த அறைக்குள் நுழைய, “வா… வா… சம்மூ…” என்று ஆர்ப்பாட்டமாக வரவேற்றான் ராகவ்.

‘அய்யோ! இவன் பேசவே விடாம மேல பாய்ஞ்சுருவான் போலயே…’ என்று பூர்ணா மிரட்சியுடன் பார்க்க,

அவளை அணைப்பது போல் வந்த ராகவ், பின்பு விலகி “அப்புறம் சொல்லு… சொல்லு… எங்கே படுக்கப் போற? தரையிலா? பால்கனிலையா? என் ரூமில் சோஃபா எல்லாம் இல்லை. நீ இந்த இரண்டு இடத்தையும் தான் சூஸ் பண்ண முடியும்…” என்று அதிரடியாக ஆரம்பித்தவனை ‘இவனா கோபத்தில் கூட விலகி இருக்க முடியாதுனு சொன்னவன்…’ என்பது போல் அதிர்ந்து பார்த்தாள் சம்பூர்ணா.