வஞ்சிக்கொடியின் வசீகரனே – 3

அத்தியாயம் – 3

சம்பூர்ணா அதிகமான எரிச்சலில் இருந்தாள். உள்ளுக்குள் கனன்ற எரிச்சலை வெளிப்படையாகக் காட்ட முடியாமல் அதை மறைக்கப் போராடி கொண்டும் இருந்தாள்.

அவனிடம் தனியாகப் பேச வேண்டும் என்றதில் எரிச்சல் உண்டாகியிருந்தது.

அறைக்குள் நுழைந்தவுடன் தன்னையே துளைக்கும் அவன் பார்வை உணர்ந்து அவனைப் பார்க்க கூடப் பிடிக்காமல் திரும்பி நின்றிருந்தாள்.

அவன் ‘சம்பூர்ணா ராகவேந்திரன்’ என்று ரசித்துச் சொன்ன பிறகு தான் அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

ஆனால் தங்கள் இருவர் பெயரையும் இணைத்துச் சொன்னது பிடிக்காமல் போன கோபத்துடன் பார்த்தவள் அவனின் பார்வையைக் கண்டு வாயடைத்துப் போனாள்.

கண்கள் இரண்டிலும் காதல் நிறைந்திருக்க, கைகளைக் கட்டிக் கொண்டு ஒரு காலை சுவற்றில் பின் பக்கமாக மடக்கி வைத்து, இன்னொரு காலை தரையில் ஊன்றி அவன் நின்றிருந்த கோலம் அவளை ஏதோ மந்திர ஜாலம் செய்யப் பார்க்க, சட்டென்று தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“சோ… ஓடி ஒளிஞ்சிக்கிட்டா உன்னைக் கண்டு பிடிக்க முடியாதுனு நினைச்சுக்கிட்டயா?” என்று நிதானமாகக் கேட்டான்.

“ஹலோ! யார் நீங்க? உங்களைப் பார்த்து நான் ஏன் ஓடி ஒளியணும்?” என்று பட்டென்று அவனின் புறம் திரும்பி கேட்டாள்.

“நான் யாருனு உனக்கு நிஜமாவே தெரியாது?” அவள் கண்களைப் பார்த்து கூர்மையுடன் கேட்டான்.

“தெரியாது…” அவனின் கண்களைச் சந்திக்காமல் வேகமாக மறுத்தாள்.

“என் கண்ணைப் பார்த்துப் பதில் சொல்லு சம்பூர்ணா…”

“நீங்க யாரு, எவருனே எனக்குத் தெரியாது. உங்க கண்ணைப் பார்த்து நான் ஏன் பேசணும்?”

“நம்ம மேல தப்பு இல்லைனா அறிமுகம் இல்லாத நபரின் கண்ணைப் பார்த்து கூடத் தாராளமா பேசலாம் சம்பூர்ணா. நான் உனக்குத் தெரியாத நபர் கூட இல்லை. அப்படி இருக்கும் போது என் கண்ணைப் பார்த்து உன்னால பேச முடியலைனா? அப்போ உன் மேல் தான் ஏதோ தப்பு இருக்கு…”

“யாரு? என் மேல தப்பிருக்கா? நான் எந்தத் தப்பும் செய்யலை. உங்களை யாருனு எனக்குத் தெரியாது…” என்று அவனின் கண்களைப் பார்த்து சொன்னவள் தலையைச் சிலுப்பி அவனைப் போலவே கைகளைக் கட்டிக் கொண்டு நின்றவள் கண்ணில் திமிர் இருந்தது.

அவள் தெரியாது என்று சொன்னதைப் பொருட்படுத்தாமல் அவள் நின்ற தோரணையை ரசித்துப் பார்த்தவன் “சும்மா சொல்ல கூடாது சுடிதாரை விடச் சேலை உனக்குச் செம்ம கச்சிதமா அழகா இருக்கு…” ரசனையுடன் சொன்னான்.

அவன் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கவில்லை என்றாலும் ஏற்கனவே நேராக இருந்த உடையை இன்னும் நன்றாக இழுத்து விட்டு கொண்டாள்.

“அட! என்னமா நீ? நீ மட்டும் என்னை விடாம சைட் அடிக்கலாம். நான் மட்டும் உன்னைச் சைட் அடிக்கக் கூடாதா? எந்த ஊர் நியாயம் இது?” அவள் உடையைச் சரி செய்த வேகத்தைப் பார்த்து கண்களால் சிரித்துக் கொண்டே சொன்னான்.

அவன் சொல்லிக் காட்டியதில் கன்ற ஆரம்பித்த முகத்தை அவனுக்குக் காட்டாமல் மறைத்தவள் “யார் உங்களைச் சைட் அடிச்சா? யாரையும் நான் ஒன்னும் சைட் அடிக்கலை…” என்று அலட்சியத்துடன் சொன்னாள்.

“நீ வேற யாரையும் சைட் அடிச்சியா இல்லையானு எனக்குத் தெரியாது. ஆனா என்னை நீ சைட் அடிச்ச. அதையும் நான் பார்த்துட்டேன். நான் பார்த்துட்டேன்னு உனக்கும் தெரியும். மறந்துடுச்சுனா ஞாபகப்படுத்தவா?” என்று புருவத்தைத் தூக்கி கேட்டுக் கண்ணடித்தான்.

அவன் மீண்டும் கண்ணடித்ததில் இம்முறை அசராமல் அவனைப் பார்த்து வைத்தாள்.

அவளின் அந்தப் பார்வையை வியந்து பார்த்தவன் “என்ன வாயை குருவி குஞ்சு போலத் திறப்பியே அப்படித் திறக்கலை?” என்று ரசனையுடன் கேட்டான்.

அவனின் கேள்வியில் உதடுகளை இன்னும் அழுத்தமாக மூடிக் கொண்டாள்.

தளர்வாக இல்லாமல் முயன்று இதழ்களை இறுக்கி வைத்திருந்தவளை பார்த்து, “உன்கிட்ட எனக்குப் பிடிச்சதே நீ அதிர்ச்சியில் ‘ஆ’ன்னு வாயை திறந்து பார்க்கிறது தான். அதையே இப்படி உதட்டை இறுக்கி மூடி மறைக்கிறயே, இது நியாயமா?” என்று கேட்டான்.

அவனுக்குப் பிடிக்கும் என்று சொன்னதற்காகவே இனி செய்யவே கூடாது என்ற முடிவிற்கே வந்து விட்டாள் சம்பூர்ணா.

அவளின் முகத்தில் இருந்த தீவிரத்தைப் பார்த்து “என்ன இவன் சொன்னதுக்காகவே இனி செய்யக் கூடாதுனு முடிவு பண்ணிட்ட போல…” கேலியாகக் கேட்டான்.

தான் மனதில் நினைத்ததை அவன் அப்படியே சொல்லவும் ‘இவன் எப்படிக் கண்டுபிடித்தான்?’ என்ற திகைப்பில் அவள் எடுத்து வைத்திருந்த முடிவை மறந்து அவளின் இதழ்கள் பிரிந்து குருவி குஞ்சை போலத் திறக்க முயன்றது.

ஆனால் கடைசி நொடியில் வேகமாகக் கீழ் உதட்டை பற்களால் கடித்து நிறுத்தினாள்.

“ஆஹா! நீ குருவி குஞ்சு போல வாயை திறக்கிறதை விட அந்த அழகான முத்துப் பற்கள் பதிந்த உன் இதழ்களைப் பார்க்க கிக்கா இருக்கே…” என்று கிறங்கி போனவன் போலச் சொன்னான்.

அவன் சொன்ன நொடியில் இதழ்களைப் பற்களில் இருந்து விடுவித்து விட்டு ‘இன்னும் இங்கே இருந்தால் இவன் பேசியே நம்மை மயக்கி விடுவான் போலவே’ என்று பயந்தவள் “வெளியே போகலாம்…” என்றாள்.

“நான் பேச வந்ததை இன்னும் பேசவே இல்லையே… அதுக்குள்ள வெளியேவா?” என்று வெளியே நோக்கி நடந்தவளை நிறுத்தினான்.

“உங்களுக்குப் பேச ஒன்னும் இருக்குற மாதிரி தெரியலையே… தேவையில்லாததைப் பேசி நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க…” என்று சிடுசிடுத்தாள்.

“தேவையில்லாததா? என் வொய்ப்போட அழகை ரசிச்சு பேசிட்டு இருக்கேன். அது தேவையில்லாததா? ரொம்ப ரொம்ப முக்கியமானதுமா…”

“யாருக்கு யார் வொய்ப்? எனக்கு உங்களைப் பிடிக்கலை. நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். நீங்க தான் மாப்பிள்ளையா வரப்போறீங்கனு தெரிஞ்சிருந்தா இப்படிக் கிளம்பி இருந்திருக்கவே மாட்டேன்…” என்றாள் வெறுப்புடன்.

அவளின் வெறுப்பான முகத்தை யோசனையுடன் பார்த்தான் ராகவ்.

ஆனாலும் சில நொடிகளில் அதை ஒதுக்கி தள்ளியவன் சுவற்றில் சாய்ந்து நின்றிருந்தவன் அவளை நோக்கி நகர்ந்து கொண்டே மீசையை நீவி விட்டுக் கூர்மையாக அவளைப் பார்த்து “உன் சொற்கள் தான் வெறுப்பைக் காட்டுது. உன் கண்ணு என் மீதான விருப்பத்தைக் காட்டுது. என் மேல விருப்பம் இருந்தும் ஏதோ ஒரு காரணத்திற்காக நீ என் மேல கோபமா இருக்கனு புரியுது. ஆனா அது என்ன கோபம்னு தெரியலை. என்மேல அப்படி என்ன கோபம்? எதுக்குப் பஸ்ஸில் வருவதை நிறுத்தின? நான் எதுவும் தப்பு செய்ததா எனக்கு ஞாபகம் இல்லை. ஆனா நான் ஏதோ செய்துட்டதா நீ நினைக்கிற. அப்படி எனக்கே தெரியாம என்ன செய்தேன்?” என்று கேட்டான்.

தன் மனதை கண்டு கொண்டானே என்பது போல் அதிர்ந்தவள், அடுத்தடுத்த அவனின் கேள்வியில் மனதை இறுக்கி பிடித்து வைத்து அவனை முறைத்துப் பார்த்தாள்.

அவளின் முறைப்பை கண்டு கொள்ளாமல் “ம்ம்… சொல்லு…” என்று ஊக்கினான்.

“முதலில் தள்ளி அங்கே நின்னே பேசுங்க. பேசிக்கிட்டே இங்க பக்கத்தில் ஏன் வர்றீங்க?” அவனை மேலும் நடக்க விடாமல் நிற்க வைத்தவள், “என் வாய் சொல்வதைத் தான் என் கண்ணும் சொல்லுது. எனக்கு உங்களைப் பிடிக்கல. உங்களுடன் என் கல்யாணம் நடக்காது. அவ்வளவு தான் சொல்ல முடியும். வேற எந்தக் கேள்விக்கும் என்னால் பதில் சொல்ல முடியாது…” என்றாள் விறைப்பாக.

“பொய்! என்னைப் பிடிக்காதுனு பொய் சொல்ற…”

“எனக்குப் பொய் சொல்ல தெரியாது…” என்றாள் வீம்பாக.

அவள் சொன்னதைக் கேட்டுச் சத்தமாகச் சிரித்தான். அவன் சத்தம் வெளியே கேட்டு விடப் போகிறது என்று நினைத்து “ஸ்ஸ்ஸ்…ஸ்ஸ்ஸ்… சத்தம் போடாதீங்க…” என்று அவனை அடக்கினாள்.

கதவு லேசாகத் திறந்து இருந்ததால் மெல்லிய குரலில் தான் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அதனால் தான் இப்போது அவன் சத்தமாகச் சிரிக்கவும் அடக்கினாள்.

அவனுக்கும் அது புரிய சத்தத்தைக் குறைத்து மென்னகை புரிந்தவன் “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னைப் பார்த்ததே இல்லைனு பொய் சொன்னது நீ தானே? பார்க்காதவன் மேல உனக்குக் கோபமும் வந்திருக்கு. அந்தக் கோபத்தை என்கிட்ட மறைக்கவும் தோன்றி இருக்கு. அப்போ இதுக்குப் பேரு பொய் சொல்றது இல்லையா?” என்று கேலியாகக் கேட்டான்.

அவனின் கேலியில் சுறுசுறுவெனப் பூர்ணாவின் கோபம் ஏறியது.

‘இன்னும் சிறிது நேரம் இவனிடம் பேசிக் கொண்டிருந்தால் கிண்டலாலேயே நம்மைக் கிளறி சுண்டல் ஆகிருவான் இவன்’ என்று உள்ளுக்குள் கடுகடுத்தவள், அதற்கு மேலும் அங்கே நிற்காமல் ஒன்றும் பேசாமல் வாயிலை நோக்கி நடந்தாள்.

“ஹேய்! என்ன, பேசிட்டு இருக்கும் போதே போற?” என்று அவளைத் தடுத்து நிறுத்த கையைக் குறுக்கே நீட்டினான்.

அவனின் நீட்டிய கையைப் பொருட்படுத்தாமல் அந்தக் கையைத் தாண்டி நடந்தவள் “நான் பேச வேண்டியதை எங்க அப்பாகிட்ட பேசிக்கிறேன். உங்களைப் பிடிக்கலைனு என் அப்பாகிட்ட சொன்னா போதும். மிச்சத்தை அவரே பார்த்துப்பார். உங்ககிட்ட வெட்டியா பேச எனக்குப் பிடிக்கலை…” என்றவள் வாயிலை நோக்கி நடந்து கொண்டே இருந்தாள்.

“என் கேள்விக்குப் பதில் சொல்ல முடியலன்னு சொல்லு…” என்றவன் அவள் நிற்காமல் நடக்கவும், அவளை விட வேகமாகக் கால்களை எட்டி போட்டு நடந்தவன், அவளுக்கு முன் அறையை விட்டு வெளியே சென்று, அவள் தன் தந்தையிடம் பேச வாயை திறக்கும் முன், “அப்பா எனக்கு இந்தக் கல்யாணத்தில் சம்மதம். பொண்ணுகிட்ட கேட்டேன். அவங்களும் என்னைப் பிடிச்சுருக்குனு சொல்லிட்டாங்க. இனி மேற்கொண்டு ஆக வேண்டியதை நீங்க பேசுங்க…” என்று அவளைப் பேச விடாமல் வாயை அடைக்க வைத்தான் ராகவேந்திரன்.

பேச திறந்த வாய் திறந்த படி இருக்க, கண்கள் தெறிக்க, முகத்தில் கோபம் கொப்பளிக்க அவனைப் பார்த்தாள் சம்பூர்ணா.

ஆனாலும் அவன் சொன்னதைப் பொய்யாக்கி விட வேண்டும் என்ற வீம்பு எழ, “அப்பா…” என்றழைத்து தன் விருப்பமின்மையைச் சொல்ல போனாள்.

ஆனால் அதற்குள் “எனக்குத் தெரியும் மாப்பிள்ளை. என் பொண்ணுக்கு உங்களைப் பிடிக்கும்னு. என் பொண்ணு விருப்பம் எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியாதா?” என்று தனக்குப் பின்னால் நின்றிருந்த தன் மகளைப் பெருமையாகப் பார்த்தார் சடகோபன்.

அவரின் பார்வையில் பூர்ணா சொல்ல வந்தது அவளின் வாயிற்குள்ளேயே அடங்கிப் போனது.

அவள் வாயை மூடி கொள்ளவும் யாரும் பார்க்காத வண்ணம் ரகசியமாக அவளைப் பார்த்துக் கண்ணடித்தான் ராகவ்.

‘அடியே! இவன் கண்ணடிச்சே உன்னைக் கவுக்கப் பார்க்கிறான். உசாரா இருந்துக்கோ…’ என்று அமைதியாக அவர்கள் இருவரும் பேசும் வரை ஒதுங்கி இருந்து வேடிக்கைப் பார்த்த அவளின் மனசாட்சி நடக்க இருந்த விபரீதத்தைத் தடுக்க, கத்தி கூப்பாடு போட்டு அழைத்தது.

அதன் குரல் காதிலேயே விழாதது போலக் கடுப்புடன் அவனுக்குச் சவால் விட்டுக் கொண்டிருந்தாள் சம்பூர்ணா.

அவனை வெறுப்பாகப் பார்த்தவள், “மவனே! எனக்குப் பிடிக்கலைனு சொல்லியும், என்னை நீயே உன் வாழ்க்கையில் வழிய இழுத்து விட்டுக்குறல? இரு! ஏன்டா இவளை கல்யாணம் பண்ணிகிட்டோம்னு ஒவ்வொரு நாளும் கதற விடுறேன்…” என்று கண்களால் சேதி சொன்னவளைப் பார்த்து,

“மவளே! என்னையவே பார்த்து சவாலா விடுற? உன் மங்கம்மா சபதத்தை வைத்து நான் மங்காத்தா ஆடலை என் பேரு ராகவேந்திரன் இல்லைடி என் பொண்டாட்டி…” என்று பதிலுக்குச் சவால் விட்டான்.

‘போச்சுடா! இனி இதுங்க இரண்டும் சேர்ந்து என்னவெல்லாம் ஆட்டம் ஆடப் போகுங்களோ? இவ ஒருத்தி ஆடினாலே தாங்காது. இனி இவனும் சேர்ந்துட்டானா? ஆண்டவா இதுங்க இரண்டுக்கிட்ட இருந்தும் என்னைக் காப்பாத்து…’ என்று மனசாட்சியையே புலம்ப வைத்த பெருமையை வாங்கிக் கட்டிக் கொண்டு ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு சவாலில் சாகசம் படைத்துக் கொண்டிருந்தனர்.

அந்நொடியில் இருந்து வஞ்சிக்கொடியும்(சம்பூர்ணாவும்), வசீகரனும்(ராகவேந்திரனும்)திருமணம் எனும் யுத்தகளத்தில் குதிக்கத் தயாரானார்கள்.