வஞ்சிக்கொடியின் வசீகரனே – 23

அத்தியாயம் – 23

“ஆரம்பத்தில் தோற்றத்தை பார்த்து வசீகரானு பேர் வச்சேன். ஆனா இப்போ உங்க ஒவ்வொரு செயலும் என்னை வசீகரிச்சதால், வசீகரா தான் உங்களுக்குப் பொருத்தமான பேருனு முடிவே பண்ணிட்டேன்…” என்றாள் சம்பூர்ணா.

“அப்படி என்னமா நான் வசீகரிச்சேன்?” என்று புருவத்தை உயர்த்தி வியப்பாகக் கேட்டான் ராகவ்.

“பீரியட்ஸ் அப்போ பார்த்துப் பார்த்துக் கவனிச்சுக்கிட்டீங்களே… அதில் எனக்கு உங்களை ரொம்பவே பிடிச்சது…”

“நான் உன் காலை பிடிச்சதும் கவுந்துட்டியாக்கும்?” என்று கேலியாகக் கேட்டான்.

“இல்லை, என் மனசை தொட்டதும் மயங்கிட்டேன்…” என்றாள் நெகிழ்வான குரலில்.

“அப்போ பொண்ணுங்க காலை பிடிச்சா மயங்கிருவாங்களா?” நக்கலாகத் திருப்பிக் கேட்டான்.

“பொண்ணுங்களை மயக்க காலை பிடிக்கணும்னு அவசியம் இல்லை. மனதை பிடிக்கணும். ஆனா அப்பப்போ காலையும் கூடப் பிடிக்கலாம் தப்பில்லை…” என்றாள் கிண்டலாக.

“ஆஹா! சரிதான்டி, அப்பப்போ காலை பிடின்னு சொல்லாம சொல்லிட்ட… காலைத்தானே பிடிச்சுடலாம். அது கூட வேற எதையும் கூடப் பிடிச்சா ஒன்னும் சொல்ல கூடாது… அன்னைக்கு இடுப்பை பிடிச்ச மாதிரி…” என்றான் மயக்கமான குரலில்.

அவன் சொன்ன விதத்தில் அவளுக்குக் கூச்சம் வர, “என்ன வெட்கமாக்கும்?” என்று கேலி செய்து சிரித்தான்.

“ச்சு… பேசாம இருங்க…” என்று அவனை அடக்கியவள், “அதுக்குப் பிறகு எனக்குப் பிடிச்ச ட்ரஸ் போட்டுக்கலாம்னு சொன்னது. என்னை என் விருப்பம் போல இருக்க விட்டது எல்லாமே பிடிச்சிருந்தது. முகத்தில் கொப்பளம் வந்ததும், எனக்காக நீங்க பதறியது. அம்மாகிட்ட எனக்காக நியாயம் கேட்டது. அம்மாவையும், அப்பாவையும் நான் சரியா புரிஞ்சுக்கலைனு நீங்க புரிஞ்சுக்கிட்டு அதை எனக்கு எடுத்து சொன்னதுனு எல்லாமே என் மனசை தொட்டது தான். அப்புறம் அன்னைக்கு வேலை விஷயம் என்கிட்ட ஏன் சொல்லைனு கோபப்பட்டாலும், அப்பா முன்னாடி காட்டிக் கொடுக்காம இருந்தது…” என்று அவள் அடுக்கி கொண்டே போக,

“ஏன் உன் அப்பாவுக்கு அப்படித் தெரிஞ்சாலும் உன்னை என்ன பண்ணிடுவார்னு அந்தப் பயம் பயந்த?” என்று கேட்டான்.

“அப்பா பேச மாட்டார்…”

“என்னது பேச மாட்டாரா?”

“ஹ்ம்ம்… ஆமா, நான் தப்பு பண்ணினா அப்பா எனக்குக் கொடுக்குற தண்டனை அது. தப்புக்கு ஏத்த மாதிரி தண்டனை. சின்னத் தப்புனா ஒரு நாள், அதை விடப் பெரிய தப்புனா இரண்டு நாள் இப்படித் தண்டனை கிடைக்கும்…” என்று வருத்தமாக முகத்தைச் சுருக்கி கொண்டு சொன்னாள்.

“நீ தான் உங்க அப்பாவை வில்லன் போலப் பார்ப்பீயே? அப்புறம் உன் அப்பா பேசலைனா உனக்குக் கொண்டாட்டம் தானே?” என்று கேட்டான்.

“ம்கூம்… அப்பா பேசலைனா எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும். திரும்ப அவர் பேசுற வரை எதையோ இழந்தது போல இருக்கும். அதுக்காகவே முடிஞ்ச வரை தப்பு பண்ண மாட்டேன். அப்படிப் பண்ணினாலும் அப்பாவுக்குத் தெரியாம பார்த்துப்பேன். இப்போ மேக்கப் போட்டு அதை அப்பாக்கு தெரியவிடாம பண்ணிட்டது மாதிரி…” என்றாள்.

“ஓ…! உன்னோட செயல் எல்லாம் கொஞ்சம் விசித்திரமா தான் இருக்கு. அப்பாவோட கண்டிப்பு பிடிக்காதது போல நடந்துகிட்டாலும், அவரின் கண்டிப்புக்கு மரியாதை கொடுத்து வளர்ந்திருக்க. உன் விருப்பம் போல இருக்கவும் நினைச்சுருக்க அதுதான். அவர் உனக்கு நல்லதுனு செய்ததை எல்லாம் உன்னை அடக்கும் முறையா நீ நினைச்சுக்கிட்டனு புரியுது.

அதே நேரம் உன் அப்பாவுக்கு உன் மனசில் பெரிய இடம் கொடுத்து வச்சிருக்க. பொண்ணுங்களுக்கு அப்பானா ரொம்பப் பிடிக்கும்னு சொல்லுவாங்க. அதை நிறையப் பேர் வெளிபடையா காட்டுவாங்க. நீ வெளியே காட்டிக்கலையே தவிர அவரை உனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு. அந்தப் பிடித்தம் தான் அவரைப் போலவே எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத மாப்பிள்ளை வேணும்னு நினைக்க வச்சுருக்கு. அப்படிக் கிடைக்காத கோபத்தைத் தான் நீ இத்தனை நாளும் என்கிட்டே காட்டியிருக்க.

என்கிட்ட இருக்குற கெட்ட பழக்கம் பிடிக்கலைனாலும் என் மேல உனக்குக் கொஞ்சூண்டு லவ் வந்ததால் என்னை விட்டுட கூடாதுனு கல்யாணம் பண்ணிக்கிட்ட. இவனைப் பின்னாடி திருத்திலாம்னு தைரியத்தில். என்ன சரியா சொல்லிட்டேனா?” என்று அவளின் மனநிலையைச் சரியாகப் புரிந்து கொண்டு கேட்டான்.

“ஆமாம்…” என்றதுடன் வேகமாகத் தலையையும் அசைத்தாள்.

“அது எல்லாம் ஓகே, ஆனா குடிகாரன்னு நினைச்சு என் மேல தான சம்மூ உனக்குக் கோபம் வரணும். அதென்ன எந்த நேரமும் என் ஃபிரண்ட்ஸை வில்லன்களைப் பார்க்கிறது மாதிரி பார்த்து வச்ச?”

“என்னைப் பொறுத்த வரை அவங்க வில்லனுங்க தான்!”

“அவனுங்க உன்னை என்னடி பண்ணினானுங்க?”

“என்னை ஒன்னும் பண்ணலை. அவங்க தானே உங்களைக் குடிக்க வைக்கிறாங்க. அதான் அவங்க மேல கோபம். அவங்க கூட உங்களைச் சேர விடக் கூடாதுனே நம்ம கல்யாண தேதி நிச்சயம் ஆனதும் உங்க ஆபிஸ்ல வேலைக்கு எழுதிப் போட்டேன் தெரியுமா?”

“அடியேய்! நீ என்ன அவனுங்க என் பக்கத்தில் உட்கார்ந்து ஊத்தி கொடுத்ததையா பார்த்த? இவ பெரிய இவ… எங்க ஃப்ரண்ட்ஸிப்பை பிரிக்க வந்தாளாம். அப்படியே நல்லா வருது வாயில…” என்றான் கடுப்புடன்.

“என்ன வருது வாந்தியா? அப்படியே இருந்தாலும் என்னைத்தான் நீங்க வாந்தி எடுக்க வைக்கணும்… உல்டாவா எல்லாம் பண்ண கூடாது…” என்றாள் நக்கலுடன்.

“என்னடி இது? இத்தனை நாளும் நான் பக்கத்தில் வந்தாலே கிறக்கமா பம்மிக்கிட்டு அமுக்குனி மாதிரி இருந்தியேடி?” மனைவியின் பரிமாணத்தில் அதிர்ந்தது போல் கேட்டான்.

“அதெல்லாம் அப்படித்தான்! எந்த இடத்தில் எப்படி இருக்கணுமோ அப்படி இருந்துப்பேன்…” என்றாள் கெத்தாக.

“எப்படி இருப்ப?” என்றவன் மனைவியை மேலும் கீழும் பார்த்து வைத்தான்.

“என்ன பார்வை?”

“நீ எந்த அர்த்தத்தில் சொல்றன்னு பார்க்கிறேன்…”

“நான் சிங்கிள் மீனிங்ல சொன்னா அதை எதுக்கு மிங்கிள் மீனிங்ல யோசிக்கிறீங்க?”

“நானும் சிங்கிள் மீனிங்ல தான்மா யோசிச்சேன். அதுக்கு நீ மிங்கிள் மீனிங் போட்டா நான் பொறுப்பில்லை…” என்றான் தோளை குலுக்கி கொண்டு.

‘பார்த்த பார்வையில் பல மீனிங் காட்டிட்டு சிங்கிள் மீனிங்ல சொன்னானாம்ல…’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே கணவனை ஒரு மார்க்கமாகப் பார்த்து வைத்தாள்.

“என்ன பார்வை?”

“போதும் நமக்குச் சிங்கிள் மீனிங்கும் வேண்டாம் மிங்கிள் மீனிங்கும் வேண்டாம். அப்புறம் சென்சார் போர்டு தூக்கிட்டு வந்து நம்ம இரண்டு பேருக்கு நடுவுல வைக்க வேண்டியது இருக்கும்…” என்றாள்.

“சரி போர்டை தூக்கி உடைப்பில் போடு! இப்போ பாதியில் நின்ன பேச்சை முடி. அவனுங்களுக்கு நான் ஊத்தி கொடுத்து கெடுத்திருக்கலாம்ல? அதை ஏன் அப்படி யோசிக்காம அவனுங்க என்னைக் கெடுத்துட்டதா நினைச்ச? அதென்னடி செய்றது ஒரு கேடி பயலா இருந்தாலும், கூட இருக்குறவனை எல்லாம் கோர்த்து விட்டு அவனுங்களைக் கண்ணாலேயே எரிச்சுக்கிட்டு திரியுற பழக்கம்?”

“ஃப்ரண்ட்ஸ்னு கூட இருந்தாலே அப்படித்தான். அவங்க ஏன் உங்களைத் திருத்தலை?”

“என்னைத் திருத்துறதுக்கு என்னை என்ன பென்சில் வச்சா எழுதி வச்சுருக்கு? திருத்த போறாளாம் திருத்த! நான் திருந்தணும்னா நானே தான் திருந்தணும்… அடுத்தவங்க சொல்லி தான் திருந்தணும்னா அப்போ எனக்கு யோசிக்கக் கூடச் சொந்த புத்தி இல்லைனு அர்த்தம்!

நான் குடிக்கிறேன்னு கோபம்னா அதை நீ என் மேல மட்டும் தான் காட்டணும். ஒருவேளை அவனுங்க ஊத்தி கொடுத்தாலும் அதை வேணாம்னு சொல்லாத உன் புருஷனை தான் சொல்லணும்… என் ஃபிரண்ட்ஸா இருந்தாலும் நான் செய்ற தப்புக்கு அவனுங்களைக் குறை சொல்லக்கூடாது…” என்றான் கண்டிப்புடன்.

“ஃபிரண்ட்ஸை சொன்னதும் உங்களுக்கு என்ன இவ்வளவு கோபம் வருது?”

“பின்ன? நீ என்ன சாதாரணமாவா பிகேவ் பண்ணின? அவனுங்களைப் பார்க்கும் போதெல்லாம் தீ பந்தத்தைக் கண்ணில் கட்டியது போல இல்லை அலைஞ்ச? உன் புருஷன் தப்பு செய்தால் அவனைக் குறை சொல்லத்தானே உனக்கு ரைட்ஸ் இருக்கு?”

“ஃபிரண்ட்ஸ்னா கூட இருக்குற நண்பன் தப்பு பண்ணினா அதைத் திருத்தணும் தானே? அதை விட்டு அவன் கூடச் சேர்ந்து அவங்களும் கூத்தடிப்பாங்களா? அப்படியிருக்கிறது தப்பு இல்லையா?”

“முதலில் ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோ சம்மூ… இந்த உலகில் எல்லாருமே தனித் தனி மனுஷங்க தான். ஒவ்வொருத்தர் சிந்தனையும் செயலும் வேற வேற மாதிரி இருக்கும். அப்படி இருக்கும் போது ஒருத்தர் செய்ற தப்புக்கு இன்னொருத்தனை காரணகர்த்தா ஆக்க கூடாது. ஒருத்தன் நல்லதோ கெட்டதோ எது செய்தாலும் அதுக்கு அவன் தான் பொறுப்பு! அதைவிட்டு அவனை ஏன் இப்படி ஆக விட்டனு அடுத்தவனைக் குறை சொல்ல கூடாது…” என்றான்.

“ம்ம்… புரியுது. சரி விடுங்க… நான் தான் கொஞ்சம் அதிகப்பிரசங்கி தனமா கோபப்பட்டுட்டேன். உங்க ஃபிரண்ட்ஸ் மேல கோபப்பட்டது தப்பு தான்…” என்று உடனே தழைந்து போனாள் சம்பூர்ணா.

“ஓகே, இப்போ விஷயத்துக்கு வருவோம். உனக்கு என்னைப் பிடிச்சுருக்கு. ஆனா இன்னும் நீ என்னைக் குடிகாரன்னு தானே நினைச்சுட்டு இருக்க. அப்புறம் எப்படி என்கிட்ட இன்னைக்கு அவ்வளவு நெருங்கி வந்த? குடிகாரன் கூடக் குடும்பம் நடத்த தயார் ஆகிட்டியா? இந்தக் குடிகாரனை திருத்தவெல்லாம் முயற்சி பண்ணலையா?” என்று ஒரு மாதிரியான குரலில் கேட்டான்.

“குடிகாரனை எல்லாம் பின்னாடி மெதுவா திருத்திக்கலாம். முதலில் குடும்பத்தை ஆரம்பிக்கிற வேலையைப் பார்ப்போம்னு நினைச்சேன்.

அதோட இத்தனை நாள் உங்களைப் பார்த்ததை வச்சு உங்களுக்குக் குடிக்கிற பழக்கமே இல்லையோனு சந்தேகமா இருக்கு…” என்று இழுத்து அவனைக் கூர்மையாகப் பார்த்தாள்.

“அப்படியா? அதெல்லாம் இல்லை. நான் சரியான முடா குடியன்! நாளைக்கு வீக் எண்ட் தானே… நீயே வந்து பார்! என்னைப்பத்தி புரியும். இப்போ படுத்து தூங்கு. குடிகாரனை திருத்தின பிறகு குடும்பம் நடத்துற வேலையைப் பார்க்கலாம்…” என்றவன் என்றுமில்லாமல் மனைவியை விட்டு சிறிது விலகியே படுத்தான்.

கணவனைச் சிறிது நேரம் அமைதியாகப் பார்த்தவள் “அதுயென்ன மறுநாள் வரை? இப்பவே கூட நீங்க எவ்வளவு பெரிய குடிகாரன்னு எனக்குக் காட்டலாமே?” என்று புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.

அவளின் கேள்வியில் படுக்கையில் இருந்து வேகமாக எழுந்து அமர்ந்தான் ராகவ்.

“இப்பவேவா…?” மனைவியைச் சந்தேகமாகப் பார்த்துக் கொண்டே வார்த்தையை இழுத்தான்.

“ஆமா இந்த நிமிஷமே…” அழுத்தி சொல்லி உறுதிப் படுத்தினாள்.

“ஒரு முடிவோட தான் இருக்கப் போலயே? ஒரு மார்க்கமா பார்க்கிற… ஒரு மார்க்கமா பேசுற… என்ன விஷயம்? இன்னைக்கு உன்கிட்ட என்னமோ வித்தியாசம் இருக்கே?” என்று கேட்டவன், அவளை ஆராய்ச்சியாகப் பார்த்தான்.

“அதுவா…? நான் புருஷனுக்கு ஏத்த பொண்டாட்டியா மாறிட்டேன். அது தான்…” என்றாள் கோணலான நக்கல் சிரிப்புடன்.

“ஏதோ பொடி வச்சு பேசுற மாதிரி இருக்கே…?” சந்தேகத்துடன் கேட்டான்.

“ச்சேச்சே… பொடி எல்லாம் இல்லை. குடியை வச்சு பேசுறேன். இப்போ இங்கே நீங்க உங்க மொடா குடியை காட்ட போறீங்களா இல்லையா?” ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றாள்.

“இந்த நேரம் ட்ரிங்ஸ்க்கு நான் எங்கடி போவேன்? பேசாம படுத்து தூங்கு… நாளைக்கு நல்லாவே என் குடியை காட்டுறேன்…” என்றான்.

“ட்ரிங்க்ஸ் எங்க இருக்குனு தெரியும்… நான் போய் எடுத்துட்டு வர்றேன்…” என்று படுக்கையை விட்டு எழுந்த மனைவியை இப்போது திருட்டு முழியுடன் பார்த்தான் ராகவ்.

‘இந்த ரகசிய ராங்கி அவ ரகசியத்தை எல்லாம் உடைச்சது பத்தாதுனு என் ரகசியத்தையும் உடைக்கப் போறாளா? நாளைக்கு நான் என்ன செய்யப் போறேன்னு ஸ்மெல் பண்ணிட்டாளோ?’ என்ற யோசனையுடன் அலமாரியை திறந்த மனைவியையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“ம்ம் இந்தாங்க… குடிங்க…!” என்று அவள் எடுத்து வந்து நீட்டிய மது பாட்டிலையும், மனைவியின் முகத்தையும் மாறி மாறி பார்த்தான் ராகவ்.

அவளின் முகத்தில் இருந்து எந்த விதமான உணர்வையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் அவளுக்கு ஏதோ உண்மை தெரிந்து விட்டது என்பது மட்டும் அவனுக்கு நன்றாகப் புரிந்தது. அவளாக என்ன தான் செய்கிறாள் என்று பார்ப்போம் என்று நினைத்தவன், அவளுக்கு ஏற்றவாறே பேசி வைத்தான்.

“நிஜமாத்தான் குடிக்கச் சொல்றீயா?”

“நிஜமாத்தான் சொல்றேன்…” என்று சொல்லிக் கொண்டே டம்ளரை எடுத்து வந்தாள்.

அவளின் கையில் இரண்டு டம்ளர் இருப்பதைக் கண்டு “எதுக்கு இரண்டு டம்ளர்?” யோசனையுடன் கேட்டான்.

“குடிகாரன் கூடச் சேர்ந்து நானும் குடிகாரி ஆகலாம்னு இருக்கேன்… சரி… சரி… நேரம் ஆகுது. ஊத்துங்க…”

“ஏய்! என்னடி…?”

“என்ன என்னடி? என்னைக் குடிக்கக் கூடாதுனு எனக்கு அட்வைஸ் பண்ண போறீங்களா? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னவோ சொன்னீங்களே? ஒவ்வொருத்தருக்கும் தனித் தனிச் சிந்தனை இருக்கு. குடிக்கக் கூடாதுனு அவங்கவங்களே நினைச்சுக்கணும். அடுத்தவங்க சொல்லி திருந்த கூடாதுனு? இப்போ எனக்குத் திருந்துற ஐடியாவெல்லம் இல்லை. குடிக்குற ஐடியா தான் இருக்கு. ஊத்துங்க…” என்ற மனைவி அசந்து போய்ப் பார்த்தான் ராகவ்.

‘கொழுப்பு தான்டி உனக்கு நான் போட்ட பிட்டை, எனக்கே திருப்பிப் போடுறீயா? கோபம்னா அதை என் மேல தான் காட்டணும். என் ஃபிரண்ட்ஸ்ங்க மேல காட்ட கூடாதுனு சொல்றதுக்காக நான் சொன்னதை அப்படியே எனக்கு மாத்திட்டாளே? இந்தக் கம்பளிப் பூச்சிக்கு பயந்தவ எப்போ இருந்து இவ்வளவு உஷாரானாள்…?’ என்பது போல் மனைவியை விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன? ஊத்த சொல்லி எவ்வளவு நேரம் ஆச்சு? இன்னும் ஊத்தாம என்ன செய்றீங்க? கொடுங்க நானே ஊத்திக்கிறேன்…” என்று அலட்டலாகச் சொன்னவள் இரண்டு டம்ளர்களிலும் ஊற்றி விட்டு ஒரு டம்ளரை கணவன் பக்கம் நகர்த்தி விட்டு இன்னொரு டம்ளரை எடுத்து டபக்கென்று தன் வாயில் ஊற்றிக் கொண்டாள் சம்பூர்ணா.