வஞ்சிக்கொடியின் வசீகரனே – 21

அத்தியாயம் – 21

கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து “ஐயோ…!” என்று கத்திய மனைவியின் கத்தலில் அடித்துப் பிடித்து எழுந்தான் ராகவ்.

சத்தம் வந்ததே தவிர அறை முழுவதும் இருட்டுப் பரவியிருக்க, விளக்கை போட்டவன் மனைவியைத் தேடினான்.

குளியலறை கதவின் வழியே வெளிச்சம் கசிந்ததைக் கண்டவன், “ஹேய்! சம்மூ என்ன? என்னாச்சு? எதுக்குக் கத்தின? கதவை திற…” என்று கதவை படபடவென்று பதட்டத்துடன் தட்டினான்.

அடுத்த நிமிடம் வேகமாகக் கதவை திறந்து வெளியே வந்த பூர்ணா “வசீ…” என்று கூவினாள்.

மனைவி கத்தியதை விட அவளின் முகத்தைப் பார்த்து தான் அதிகமாகப் பயந்து போனான் ராகவ்.

“ஏய்…! என்ன சம்மூ இது? முகம் ஏன் இப்படி இருக்கு?” நேற்று கேலியாகக் கேட்டதை இன்று பயந்து போய்க் கேட்டான்.

“தெரியலை வசீ…குளிக்கிறதுக்கு முன்னாடி கண்ணாடியை பார்த்தால் இப்படி இருக்கு…” என்றவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிய ஆரம்பித்தது.

“சரி… சரி… அழாதே…!” என அவன் தேற்ற, பயத்தில் இருந்தவள் அப்படியே அவனின் தோளின் மீது சாய்ந்து கொண்டாள்.

ராகவ்வும் மனைவியின் தோளின் மீது இதமாகக் கையைப் போட்டு அணைத்துக் கொண்டான்.

“பயமா இருக்கு வசீ…” என்று தன்னை அறியாமலேயே வசீ என்று அழைத்துக் கொண்டிருந்தாள்.

“பயப்படாதே…! இங்கே வந்து உட்கார்! என்னனு பார்ப்போம்…” என்றவன் படுக்கையில் அமரவைத்துப் பார்த்தான்.

முகம் முழுவதும் சிறு சிறு கொப்பளங்களாக இருந்தன.

“உனக்கு இதுக்கு முன்னாடி இப்படி வந்திருக்கா சம்மூ?”

“இல்ல… வந்த மாதிரி ஞாபகம் இல்ல…” கலங்கிய குரலில் சொன்னாள்.

“ஓ…! ஒருவேளை அம்மை போட்டுருக்குமோ?”

“தெரியலையே…”

“எனக்கு என்னமோ அப்படித்தான் தெரியுது. நான் அத்தை கிட்ட பேசுறேன். நீ குளிக்கப் போக வேணாம். அப்படியே படு. நான் அத்தையை வர வைக்க ஏற்பாடு பண்றேன்…” என்றவன் அவளைப் படுக்க வைத்து விட்டு கைபேசியை எடுத்து சகுந்தலாவிற்கு அழைத்தான்.

அப்போது காலை ஐந்தரை மணி தான் ஆகியிருந்தது.

“ஹலோ, மாப்பிள்ளை என்னாச்சு? என்ன இந்த நேரம்?” என்று அந்தப் பக்கம் இவன் ஹலோ சொல்லும் முன் பதறி போய்க் கேட்டார் சகுந்தலா.

கைபேசியில் இந்த நேரம் அவனின் பெயரை பார்த்ததும் பதறியிருப்பார் என்று புரிந்தது.

“அத்தை… அத்தை… ரிலாக்ஸ்… பதட்டப்படாதீங்க… மாமா எங்கே? பக்கத்தில் இருக்காரா?” என்று கேட்டான்.

“இல்லைங்களே மாப்பிள்ளை. நேத்து நைட் அவரோட பிரண்ட் ஒருத்தருக்கு ரொம்ப முடியலைன்னு தகவல் தெரிஞ்சது. அதான் ஒரு எட்டுப் போய்ப் பார்த்துட்டு வர்றேன்னு மதுரைக்கு இப்போ ஐஞ்சு மணிக்கு தான் கிளம்பினார். நான் அப்புறமா பூர்ணாவுக்குத் தகவல் சொல்லுவோம்னு நினைச்சேன். அவ எங்க மாப்பிள்ளை?”

“அவளுக்குத் தான் அத்தை கொஞ்சம் உடம்புக்கு முடியலை. அதான் உங்களைக் கூப்பிட்டுக்கிட்டு மாமாவை வர சொல்லுவோம்னு நினைச்சேன்…”

“அச்சோ! அவளுக்கு என்ன மாப்பிள்ளை? என்னாச்சு?” என்று பதறினார் சகுந்தலா.

“பதறாதீங்க அத்தை. அவளுக்கு அம்மை போல இருக்கு. முகம் எல்லாம் சின்னச் சின்னப் புள்ளி மாதிரி கொப்பளமா இருக்கு. அம்மையானு எனக்கும் சரியா தெரியலை…” என்றான்.

“அம்மையா? நான் உடனே கிளம்பி வர்றேன் மாப்பிள்ளை…”

“தனியாவா? தனியா எப்படி வருவீங்க அத்தை…?” எனச் சொல்லி ஒரு நொடி யோசித்தவன், “சரி அத்தை, நீங்க வந்தா தான் சரியா இருக்கும் போல. நான் ஓலாவில் டாக்சி புக் பண்றேன். கிளம்பி வாங்க…” என்றான்.

“சரிங்க மாப்பிள்ளை…” என்ற சகுந்தலாவும் உடனே கிளம்பத் தயாரானார்.

அவரிடம் பேசிவிட்டு ஓலாவில் வாடகை காருக்கு சொல்லி விட்டு மனைவியிடம் வந்தான்.

கணவன் அருகில் வந்ததும் அவனின் கையை இறுக பிடித்துக் கொண்டாள் பூர்ணா.

கை இறுக்கமே அவளின் பயத்தைக் காட்ட, “பயப்படாதே சம்மூ. அத்தை கொஞ்ச நேரத்தில் வந்துருவாங்க. அவங்க பார்த்துட்டு என்ன சொல்றாங்கனு பார்ப்போம். அப்புறம் ஹாஸ்பிட்டல் போகலாம்…” என்றான்.

சரியெனத் தலையசைத்தவள் கண்ணை மூடினாள்.

அவளின் தலையை இதமாக வருடி விட்டவன், “இடுப்பில் எப்படி இருக்கு சம்மூ? இன்னும் அரிப்பு இருக்கா…?” என்று கேட்டான்.

“ஆமா அரிப்பு இருக்கு. நீங்க கொடுத்த களிம்பை குளிச்சுட்டு போடுவோம்னு நினைச்சேன்…”

“அத்தை வந்த பிறகு அப்புறமா குளிக்கலாம். இப்போ நானே களிம்பை போட்டு விடுறேன்…” என்றவன், இரவு போலவே மருந்தை போட்டு விட்டான்.

சிவந்தது சிறிது கூடக் குறையாமல் இருப்பதை வருத்தத்துடன் பார்த்தான்.

சகுந்தலா வந்து சேர்ந்து அவரும் மகளின் முகத்தைப் பார்த்து அதிர்ந்தார்.

“என்னடி பூர்ணா? என்னாச்சு? என்ன செய்து வச்ச? புதுசா முகத்தில் எதுவும் செய்தீயா?” என்று அவளின் முகத்தைப் பார்த்த சில நொடியிலேயே அதட்டி கேட்டார் சகுந்தலா.

அன்னையின் அதட்டலில் பூர்ணா அரண்டு விழிக்க, “என்ன அத்தை அவளுக்கே உடம்பு சரியில்லை. அவளை எதுக்கு அதட்டுறீங்க?” என மனைவிக்குப் பரிந்து வந்தான் ராகவ்.

“இது அம்மை இல்லை மாப்பிள்ளை. இவதான் முகத்தில் என்னவோ செய்திருக்கா. அதான் இப்படி…” என்று மருமகனிடம் சொல்லிவிட்டு, “என்னடி செய்து வச்சே?” என்று மீண்டும் மகளை அதட்டினார்.

நேத்து முக அலங்காரம் செய்தது தான் காரணமோ? என்று நினைத்து பயந்த பூர்ணா, மெதுவான குரலில் தான் மேக்கப் செய்து கொண்டதை சொன்னாள்.

“என்னடி பண்ணி வச்சுருக்க? உனக்குத் தான் அது சேராது. போட கூடாதுனு சொல்லியிருக்கேன்ல? அப்புறமும் ஏன்டி செஞ்ச?”

“என்ன அத்தை சொல்றீங்க? இவளுக்கு மேக்கப் சேராதா?”

“ஆமா மாப்பிள்ளை… இவளுக்கு ஏதாவது முகத்தில் கிரீம் தடவினா கூடச் சேராது. அதனால் தான் இவளை எதுவும் போட விட மாட்டோம். உங்க கல்யாணத்துக்குக் கூட ஒன்னும் போட விடலையே நான். இப்போ எதுக்கு இப்படி மேக்கப் போட்டுக் கொப்பளம் வர வச்சுருக்கா?”

“மேக்கப் போட்டா சேராதுனு உனக்குத் தெரியாதா பூர்ணா?” இப்போது மனைவியைக் கூர்ந்து பார்த்து கேட்டான் ராகவ்.

கணவனின் பூர்ணாவிலேயே அவனின் கோபத்தை உணர்ந்தவள், “அம்மா சின்ன வயசில் இருந்தே போடாதே உனக்குச் சேராதுனு சொல்லியே என்னை எதுவும் போட விட்டதில்லை. கிரீம் எதுவும் வாங்க விட்டதும் இல்லை. சேராதுனு சொல்லுவாங்களே தவிர என்ன சேராதுனு சொன்னது இல்லை. அவங்களுக்கு மேக்கப் போட பிடிக்காததை அப்படிச் சொல்றாங்கனு நினைச்சுக்கிட்டேன். அவங்க பேச்சை மீறி மேக்கப் போட்டா திட்டுவாங்களோனு பயந்து இதுவரை போட்டது இல்லை…” என்றாள் மெல்லிய தயக்கமான குரலில்.

“எனக்குப் பிடிக்காதுன்னு நீயா நினைச்சுக்கிட்டயாக்கும்? உனக்குச் சேராதுனு சும்மா ஒன்னும் சொல்லலை. ரொம்பச் சின்ன வயதில் ஒரு கல்யாண வீட்டுக்கு போனப்ப அங்க ஏதோ கிரீம் கிடைச்சதுனு நீயா முகத்தில் போட்டு மறுநாள் இப்படித்தான் கொப்பளம் வந்து ஹாஸ்பிட்டலுக்குத் தூக்கிட்டு ஓடினோம். திரும்ப உனக்கு முகம் சரியாகப் பத்து நாளைக்கு மேல ஆச்சு. அதிலிருந்து ஒன்னும் நாங்க போட விட்டதில்லை. அதை அடக்கு முறையா நீ நினைச்சிக்கிட்டயாக்கும்…?” என்று கோபமாகவே கேட்டார்.

அவள் அடக்கு முறையாகத்தானே நினைத்தாள் என்பதால் பதில் சொல்லாமல் மௌனமானாள்.

“இதுக்கு ஹாஸ்பிட்டல் தான் போகணும் மாப்பிள்ளை. ஸ்கின் டாக்டர்கிட்ட காட்டினா தான் சரியாகும்…” என்று சகுந்தலா சொல்ல, “போகலாம் அத்தை….” என்றவன் ஏதோ யோசித்து விட்டு, “இவளுக்கு மாடர்ன் ட்ரஸும் சேராதா அத்தை?” என்று கேட்டான்.

“என்ன மாப்பிள்ளை அது வேற வாங்கிப் போட்டாளா?”

“இல்லை அத்தை நான் தான் வாங்கிக் கொடுத்து போட சொன்னேன்…”

“ஓ…! அப்போ உடம்பையும் புண்ணாக்கி வச்சுட்டாளா?” என்று அதிர்ந்து கேட்டார்.

“ஹ்ம்ம்… நேத்து தான் ஆசையா போட சொன்னேன். அரிக்குதுனு சொறிஞ்சு புண்ணாக்கி வச்சுருக்கா… ஸாரி அத்தை! எனக்குத் தெரியாது. இல்லனா வாங்கிக் கொடுத்திருக்க மாட்டேன்…” என்று ராகவ் வருத்தமான குரலில் சொல்ல, சகுந்தலா மகளை முறைத்தார்.

“சின்னப் பிள்ளைல டைட்டா ட்ரஸ் போட்டா கூட அதை வேண்டவே வேண்டாம்னு சொல்லி அழுது அடம்பிடிப்பாள். அப்படியும் கட்டாயப்படுத்தி எதுவும் போட்டு விட்டா அரிக்குதுனு சொறிஞ்சு வைச்சே புண்ணாக்கி வச்சுருவா. அதுல இருந்து அவளுக்கு இலகுவா இருக்குறதை தான் வாங்கிக் கொடுப்போம். மாடர்ன் ட்ரஸ் எல்லாம் ஓரளவு டைட்டா தானே இருக்கும்? அதனால் அதை நான் வாங்கிக் கொடுப்பதை விட்டுட்டேன். ஆனா சேராதுன்னு உங்களுக்குத் தான் தெரியாது. இவளுக்குத் தெரியும் தானே மாப்பிள்ளை…” என்று மகளைக் கூர்ந்து பார்த்து கேட்டார்.

பூர்ணா தப்புச் செய்து விட்டு தவிக்கும் குழந்தையாகத் தலையைக் கவிழ்ந்து கொண்டு நின்றாள்.

“தப்பு உங்க பேர்லயும் இருக்கு அத்தை. இதையும் அவளுக்குச் சேராதுனு சொல்லி கண்ட்ரோல் பண்றது போல நடந்திருப்பீங்க. இவளும் பெத்தவங்க நம்மை இப்படி ட்ரஸ் எல்லாம் போட கூடாதுனு கட்டுப்பாடு போட்டு வச்சுருக்காங்கனு நினைச்சுருப்பா. அவளுக்கு நீங்க தெளிவா எடுத்துச் சொல்லியிருக்கணும். அதைச் செய்யாமல் விட்டது உங்க தப்பு அத்தை…” என்று மனைவிக்குப் பரிந்து மாமியாரை சாடினான் ராகவ்.

“அப்படி எடுத்து சொல்ல வேண்டிய அவசியமே வந்தது இல்லையே மாப்பிள்ளை. நாங்க ஒரு விஷயம் செய்யாதேனு சொன்னா சரின்னு கேட்டுக்குவா. அதுக்குப் பிறகு அதைப் பத்தி கேட்க கூட மாட்டா. ஆனா எங்ககிட்ட சரின்னு சொல்லிட்டு அவளுக்குள்ள நாங்க கட்டுப்பாடு போடுறோம்னு நினைச்சுட்டா போல…” என்றார் வருந்தமாக.

‘தப்பு உன் பக்கமும் இருக்கு’ என்பது போல மனைவியை இப்போது முறைத்தான் ராகவ்.

அன்னையின் பேச்சில் தான் சம்பூர்ணாவிற்குத் தன் தவறு புரிந்தது.

அவள் எப்போதும் அப்படித்தான்! ஒற்றைப் பிள்ளையாக வளர்ந்தவள்.

ராகவ்வும் ஒற்றைப் பிள்ளை தான் என்றாலும் அவனின் அன்னையும், தந்தையும் அவனிடம் நண்பர்கள் போல் பழகியவர்கள்.

சிறுவயதில் இருந்து அவனுக்குத் தேவையானதை வெளிப்படையாகப் பேசி பெற்றோரிடம் பெற்றுக்கொள்ளும் மனோபாவத்தில் வளர்ந்தவன் அவன்.

ஆனால் சம்பூர்ணாவின் வீட்டில் அப்படியில்லை.

சடகோபன் பாசத்தைக் கூடக் கட்டுப்பாடாய் காட்டத் தெரிந்தவர். அன்றும், இன்றும், என்றும் பல பெற்றோர்கள் அப்படி உண்டு.

பாசம் கடலளவு இருந்தாலும், தங்களின் கண்டிப்பில் தான் பிள்ளைகள் கண்ணியமாக வளர்வார்கள் என்ற அபிப்பிராயம் பலருக்குண்டு.

அதே தான் சம்பூர்ணா விஷயத்திலும் நடந்தது.

வெளிப்படையாகச் சம்பூர்ணாவும், அவளின் பெற்றோரும் பேசிக் கொள்ளாமல் போனதில், அவர்கள் அவளின் நல்லதுக்கென்று சாதாரணமாக ஒதுக்கியதை எல்லாம் அதனைத் தனக்கு விதித்த கட்டுப்பாடாக எடுத்துக் கொண்டாள் சம்பூர்ணா.

சில பெற்றவர்கள் பிள்ளைகளுக்குச் சமமாகப் பேசுவது இல்லை. அப்படிப் பேசாமல் போகும் போது பிள்ளைகள் தாங்கள் மனம் விட்டு பேச நண்பர்களைப் பிடித்துக் கொள்வதுண்டு.

ஆனால் பூர்ணா பிடித்ததோ அவளின் மனதை! தனக்கும் மனதிற்கும் நண்பர்களுடன் உரையாடுவது போல் பேச்சு வைத்துக் கொண்டாள்.

அதுவே அவளுக்கு உயிர்ப்பான விஷயமாகத் தெரிந்ததும் உண்மை.

மனமே அவளுக்கு ஒரு தோழியானது.

அன்னை தனக்குச் சேராது என்றதை ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்டிருந்தால் அவர்களே அவளுக்கான காரணத்தைச் சொல்லியிருப்பார்கள்.

அப்படிக் கேட்காமல் போனது தன் தவறு என்று இப்போது புரிய வருத்தத்துடன் அன்னையைப் பார்த்தாள்.

மகள் தங்களைத் தவறாக நினைத்து விட்டாள் என்பதைப் பொறுக்க முடியாமல் தன் மனதில் உள்ளதை எல்லாம் கொட்ட ஆரம்பித்தார் சகுந்தலா.

“இவ அப்பா கொஞ்சம் கண்டிப்பு தான் மாப்பிள்ளை. ஆனா இவ மேல அவருக்குப் பாசம் அதிகம். அதையும் கூட அவருக்கு வெளிப்படையா காட்ட தெரியாது. இவளுக்கு அவர் செய்றது எல்லாம் வெளியில் இருந்து பார்க்க கட்டுப்பாடு போலத்தான் இருக்கும். ஆனா சின்னதா இவளுக்காக என்ன செய்தாலும், அதில் இவளுக்கான நல்லது இருந்தால் தான் அதைச் செய்வார்.

காலையில் சீக்கிரம் எழுந்து பழகினால் அன்னைக்கு நாளே சுறுசுறுப்பா இருக்கும். அந்த நேரத்தில் எழுந்திருக்கிறது உடலுக்கும், மனதிற்கும் நல்லதுன்னு சின்னப் பிள்ளையில் இருந்தே அந்தப் பழக்கத்தைப் பழகி விட்டார்.

படிப்பை எல்லாம் முடிச்ச பிறகு இவ பார்க்கிற வேலைக்கு வெளிநாட்டுக்கு போற மாதிரி கூட இருக்கும். அங்க எல்லாம் நம்ம வேலையெல்லாம் நம்மளே தான் செய்யணும். அதனால எல்லா வீட்டு வேலையும் பழகி விட்டுருனு சொல்லிட்டார்.

பின்னாடி அவ சமையல் தெரியலை. வீட்டு வேலை பார்க்க தெரியலைன்னு சின்னதா கூடக் கஷ்டப்பட்டுட கூடாதுனு பார்த்து பார்த்துச் செய்தார். என்னையும் செய்து கொடுக்க வச்சார்.

அவர் செய்றது எல்லாமே சரியா இருக்கும். அதுனாலே நானும் அவர் பேச்சை தட்டுவது இல்லை. பொண்ணைத் தனி அறையில் வளர விடுறது நல்லது தான். ஆனா தனியா விட்டாலும் அவ அப்படியே தனிமையை உணர்ந்திட கூடாது. பெத்தவங்களும் அவளுக்கு ஆதரவா அவளைச் சுத்தி தான் இருக்கோம்னு காட்ட அடிக்கடி நானோ, அவரோ அவளை ரொம்பத் தனிமையை உணர விடாம அவ அறை பக்கம் எட்டி பார்ப்போம்.

அந்தப் பழக்கத்தில் இப்போ கூட மகளைக் கட்டி கொடுத்ததை அப்பப்போ மறந்துட்டு அறை பக்கம் எட்டி பார்த்துட்டு, நம்ம பூர்ணாவை தான் கட்டி கொடுத்துட்டோமே அதை மறந்து போறேன் பாருனு கொஞ்ச நேரம் ஒரு மாதிரி உட்கார்ந்து இருப்பார். அப்புறம் மகளுக்குப் போன் போட்டு பேசிட்டு தான் மத்த வேலையைப் பார்க்க ஆரம்பிப்பார். அதையும் இவ அப்போ நாங்க கண்ட்ரோல் பண்றதா தான் நினைச்சுட்டு இருக்காளா?” என்று கேட்டார்.

அதையும் அவள் அப்படித்தான் நினைத்தாள் என்பதால் வருத்தத்தில் முகம் சுருங்கி போக, “அம்மா, சாரிமா! எனக்கு அப்பா பேச்சை மீறிச் செய்ய விருப்பம் இருந்தது இல்லை. ஆனா நீங்க என்னை ரொம்பக் கண்ட்ரோல் பண்றீங்கனு நினைச்சு. என் ஆசைன்னு சிலதை செய்தால் தான் என்னனு நினைப்பேன். அதையும் ரொம்ப ஆசை இருந்தால் தான்மா செய்வேன். செய்து பார்த்தால் தான் என்னனு ஆர்வம்!

நீங்க எனக்குச் சேராதுன்னு சொன்னதை என்னை விடாம தடுக்கிறதுக்காகச் சொல்றீங்கனு நானே நினைச்சுக்கிட்டேன். சாரிமா! உண்மையிலேயே எனக்கு டைட்டா ட்ரஸ் பண்றதும், மேக்கப் போடுவதும் சேராதுன்னு எனக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா போட்டுருக்கவே மாட்டேன். சாரிமா… அப்பாவும், நீங்களும் கொஞ்சம் கண்டிப்பா இருந்ததை நானே தப்பா நினைச்சுக்கிட்டேன்…” என்று மன்னிப்பு கேட்டாள் சம்பூர்ணா.

“எங்களைப் போலச் சில பெத்தவங்க அப்படித் தான் பூர்ணா பாசத்தைக் கூடக் கண்டிப்பா தான் காட்டுவாங்க. அந்தக் கண்டிப்பிலும் பாசம் தான் ஒளிஞ்சிருக்குமே தவிரக் கண்டிப்பா அது பிள்ளைகளுக்குக் கெடுதல் பண்றது இருக்காது. சரி விடு! மாடர்ன் ட்ரஸ் போட ஆசை பட்டால் தாராளமா போடு. ஆனா அந்த ட்ரஸை ரொம்ப டைட்டா இறுக்கி பிடிச்சுக்கிட்டு போடதே! உடனே சொறிஞ்சு வச்சு புண்ணாக்கி வச்சுருவ. அதில் மட்டும் கவனமா இரு. கண்ணியமா தெரியுற எந்த உடைக்கும் நானோ உன் அப்பாவோ தடை சொல்ல மாட்டோம்.

மேக்கப் ஆசை நிறைவேறாது. நீ என்ன மேக்கப் போட்டாலும் இந்தக் கொப்பளம் வரும். ஸ்கின் டாக்டரே அதைச் சொல்லியிருக்கார். அதனால அதில் ரொம்பக் கவனமா இரு…!” என்று சமாதானத்துடனேயே சொன்னார் சகுந்தலா.

“சரிமா! சாரிமா உங்களைத் தப்பா புரிஞ்சிக்கிட்டதுக்கு ரொம்பச் சாரி…” என்று அன்னையிடம் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டாள் பூர்ணா.

“சரி, சரி விடு… சாரி கேட்டதை என்னோட நிறுத்திக்கோ அப்பாகிட்ட இதையெல்லாம் சொல்லிட்டு இருக்காதே! அந்த மனுஷன் உன் மேலே உயிரையே வச்சுருக்கார். நீ தப்பா நினைச்சனு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவார். இப்போ கொஞ்ச நேரத்தில் எப்படியும் போன் போடுவார். கொப்பளம் வந்ததை எல்லாம் எதையும் சொல்லாதே! உனக்கு உடம்பு முடியலைன்னு சொன்னா தாங்க மாட்டார்…” என்றார் சகுந்தலா.

சரி என்று பூர்ணா கேட்டுக் கொள்ள, தாயையும், மகளையும் பேச விட்டு, அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ராகவ்.

அவர்களாக மனம் விட்டு பேசி தெளிவதே நல்லது என்று நினைத்தவன் அவர்களின் பேச்சில் குறுக்கிடவே இல்லை.

ஒன்பது மணி அளவில் மருத்துவமனைக்கு மனைவியை அழைத்துச் சென்று வந்தான். சகுந்தலாவும் அன்று மாலை வரை மகளுடனேயே இருந்தார். சடகோபனிடம் விஷயத்தைச் சொல்லாமல் மகளைப் பார்க்க வந்ததாக மட்டும் சொல்லி சமாளித்து வைத்தார்.

அவர் திரும்பி நள்ளிரவில் வருவதாக இருந்ததால், அன்று மாலை தன் இல்லத்தை நோக்கி சென்றார்.

அவர் சென்றதும், “நீ வீட்டில் கட்டுப்பாடுன்னு சொல்லும் போதெல்லாம் நினைச்சுருகேன் சம்மூ. நம்ம மாமனாரும், மாமியாரும் ஷாப்ட்டா தானே தெரியுறாங்க. அப்புறம் ஏன் அப்படிச் சொல்றனு நினைச்சுருகேன். அவங்க ஒரு விஷயம் வேண்டாம்னு சொல்லும் போது அவங்களுக்குத் தெரியாம அப்புறம் செய்துக்கலாம்னு இல்லாம உடனே நீ நேரடியா ஏன் அப்படிச் சொல்றாங்கனு பேசியிருந்தால் இவ்வளவு பிரச்சனையே இல்லை…” என்றான்.

“ம்ம்… சரிதான்! என் மேலே தான் ரொம்பத் தப்பு இருக்கு. யோசிச்சு பார்த்தால் எனக்கு நானே ஒரு வட்டத்தைப் போட்டுக்கிட்டு இருந்திருக்கேன்னு புரியுது. அப்பா, அம்மா முன்னாடி எதிர்த்துக் கேள்வி கேட்குறதானு தயக்கம். தயங்காம உரிமையா கேட்டு இருந்திருக்கலாம். இப்போ பார்த்த உங்களுக்கே அவங்க குணம் பிடிபட்டிருக்கு. ஆனா இத்தனை வருஷமா அவங்க நல்லதுக்குச் சொன்னதை எல்லாம் நான் வேறு கோணத்தில் பார்த்திருக்கிறேன். அது தான் வருத்தமா இருக்கு…” என்றாள்.

“கூடவே இருக்குறவங்களை விட, தள்ளி இருந்து பார்ப்பவர்கள் கண்களுக்குச் சில, பல வித்தியாசம் பிடிபடும் சம்மூ. அது தான் காரணம். நீ கவலைப்படாதே, விடு…!” என்று மனைவியைத் தேற்றினான்.

அதன் பிறகும் பெற்றோரை தான் தவறாக நினைத்ததைப் பூர்ணா வருந்தி பேச, “போதும்டி பொண்டாட்டி… சும்மா புலம்பாதே… எல்லாரும் எல்லா விஷயத்தையும் ஒரே கோணத்தில், சரியான பாதையில் மட்டும் பார்க்க மாட்டாங்க. ஆளுக்கு ஒரு கோணம், ஆளுக்கு ஒரு எண்ணம் இருக்கத்தான் செய்யும். இனியாவது அவங்க கிட்ட தள்ளி நிக்காம தயங்காமல் பேசு…” என்றான்.

“சரி…” என்று அவள் தலையை அசைக்க… அவளின் தலையில் கைவைத்து ஆட்டியவன் “யார் கண்டா? பிற்காலத்தில் நம்ம பிள்ளை கூட உன்னை மாதிரி நம்மளை தப்பா நினைக்கலாம். அப்படி நினைப்பு வராமல் சரியா வளர்க்க வேண்டியது நம்ம பொறுப்பு…” என்றவன் மனைவியின் முகத்தை ஆர்வமாகப் பார்த்தான்.

அவன் பிள்ளை என்றதும் சிவந்து போன அவளின் முகம் அவனை ஆர்வமாகப் பார்க்க வைத்துக் கொண்டிருந்தது.

ஆர்வம் சில நொடிகளில் குறும்பாக மாற, “சம்மூ எனக்கு ஒரு சந்தேகம்…” என்று இழுத்தான்.

‘என்ன?’ என்பது போல அவள் நிமிர்ந்து பார்க்க, “முகம் சிவந்தா குழந்தை பிறக்குமா…?” என்று கேட்டவனின் கண்ணில் குறும்பு கொப்பளித்து வழிந்து கொண்டிருந்தது.

அவனின் கேள்வியில் விலுக்கெனத் தலையை நிமிர்த்தியவள் “என்னது…?” என்று வேகமாகக் கேட்க,

“முகம் சிவந்தா குழந்தை பிறக்குமானு கேட்டேன்….” என்றான் கேலியாக.

அவனின் கேலியில் மீண்டும் முகம் சிவந்து போனது பூர்ணாவிற்கு.

இம்முறை சிவந்ததோ கோபத்தில்…!

“கேள்வியைப் பாரு… கேள்வியை…” என்றவள் அவனை அடிக்கக் கையை ஓங்கினாள்.

அவளின் கையை லாவகமாகப் பிடித்தவன், “கேள்வி கேட்டா பதில் சொல்லணும். இப்படி அடிக்கப் பாயக்கூடாது…” சிரித்தபடியே சொன்னவனை, இப்போது முறைத்துப் பார்த்தாள் பூர்ணா.

“நீ முறைச்சா இதுக்கும் ஒரு கேள்வி கேட்டு வைப்பேன்…” என்றான் கிண்டலாக.

அவன் சொன்ன விதமே இடக்கு மடக்காகத் தான் கேட்பான் என்பதை அவளுக்குப் புரிய வைத்து விட, “வாலு… வாலு… சரியான வாலு நீங்க…” தன் கையை அவனிடம் இருந்து விடுவித்துக் கொண்டு செல்லமாக அவனின் முதுகில் ஒரு அடி போட்டாள்.

“ஹேய்! வலிக்குதுடி…” என்று வேண்டுமென்றே கத்தியவன், “காலையில் வசீயா இருந்தேன். இப்போ வாலு ஆகிட்டேனா? அதென்னடி நேரத்துக்குத் தகுந்த மாதிரி எனக்கு ஒரு பேர் வைக்கிற?” என்று கேட்டான்.

“ஹான்… நேரத்துக்குத் தகுந்த மாதிரி என்ன நிமிஷத்துக்குத் தகுந்த மாதிரி கூடப் பேர் வைப்பேன் வெள்ளாவியில் வெந்தவனே…” இத்தனை நாளும் மனதிற்குள் அவனுக்கு வைத்திருந்த பெயரை சொல்லியே விட்டிருந்தாள்.

“என்னது? வெள்ளாவியில் வெந்தவனா?” முகத்தைக் கோணலாக வைத்துக் கொண்டு கேட்டான்.

“யெஸ்… யெஸ்…” அவனின் முகம் போன போக்கை பார்த்துச் சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“என்னதிது இப்படி ஒரு பேரு? இதுக்கும் எதுவும் காரணம் வச்சுருப்பியே?” என்று கேட்டவனைப் பார்த்து ‘ஆமாம்’ என்று வேகமாகத் தலையை ஆட்டினாள்.

“அப்போ இதுக்கும் இப்போ காரணம் என்னனு சொல்ல மாட்டேன்னு அடம் பிடிப்பியே…” என்று அவளை அறிந்தவனாகக் கேட்க, அதற்கும் ‘ஆமாம்’ என்று மீண்டும் தலையை, தலையை ஆட்டினாள்.

“நீ சொல்லவே வேண்டாம் போடி…” அவன் வேண்டுமென்றே கோபம் போலச் சொல்ல, “சொல்லவே மாட்டேன் போடா…” என்று வழக்கம் போல அவளும் சொல்ல, அதில் இரண்டு பேருக்குமே சட்டென்று சிரிப்பு வந்தது.

காலையிலிருந்து இருந்த வருத்தம் எல்லாம் மறைய இருவரும் மனம் விட்டு சிரித்தனர்.

சிறிது நேரத்தில் இருவருக்கும் மனம் லேசாக இருக்க, “சரி வா! முகத்திலும், இடுப்பிலும் டாக்டர் கொடுத்த மருந்தை போட்டு விடுறேன்… வந்து படு…” என்று அழைத்தான் ராகவ்.

அன்று மட்டுமில்லாமல் அடுத்து வந்த நாட்களிலும் மனைவியைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டான் ராகவ்.

பூர்ணாவின் முகத்தில் இருந்த கொப்பளங்கள் சரியாகப் பத்து நாட்களுக்கு மேல் ஆகியன.

அந்தப் பத்து நாட்களில் கணவன் மனைவி இருவருக்குள்ளும், உடல்களை விட உள்ளங்கள் உரசிக் கொண்டதில் இன்னும் நெருக்கமாக உணர்ந்தனர்.

பூர்ணாவின் கோபம் எங்கே சென்றது என்று தேடும் அளவிற்குக் கணவனின் அருகாமையைத் தேட ஆரம்பித்தாள்.

ராகவ் மனைவியிடம் வழக்கம் போலச் சீண்டி கொண்டும், அவளின் உடல்நிலையைக் கவனித்துக் கொண்டும் இருந்தாலும், அதற்கு மேல் தங்கள் நெருக்கத்தை அதிகரிக்காமல் இருந்தான்.

அவன் அப்படி இருப்பதைப் பூர்ணா தவிப்புடன் கேள்வியாகப் பார்க்க ஆரம்பித்திருந்தாள். மனைவியின் பார்வையையும் அவளின் எதிர்பார்ப்பையும் கண்டும் காணாமல் விலகி இருந்தான் ராகவ்.

‘ஏன் அப்படி இருக்கிறான்? தான் அவனை விலக்கி வைத்திருப்பதால், தானே அடியெடுத்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறானோ?’ என்று நினைத்தவள் தன் விலகலை தானே விலக்கி வைக்க முடிவு செய்து அன்று இரவு கணவனை அதிகமாக நெருங்கி படுத்தாள் பூர்ணா.

பூர்ணா கணவனை நெருங்க ராகவ்வோ விலகினான்!