வஞ்சிக்கொடியின் வசீகரனே – 2

அத்தியாயம் – 2

சடகோபன் ராணுவத்தில் பணிபுரிபவர் இல்லையென்றாலும், வீட்டில் அவர் நடந்து கொள்ளும் முறைக்கு ‘மிலிட்டரி தர்பார்!’ என்று தான் பெயர் வைத்திருந்தாள் அவரின் மகள் சம்பூர்ணா.

வங்கி மேலாளராக இருப்பவர் எதிலும் ஒரு கட்டுக்கோப்பை எதிர்பார்ப்பார். வீட்டில் அவருடைய கட்டுப்பாடுகள் அதிகம்!

காலை ஐந்து மணிக்கு பூஜை அறையில் இருக்க வேண்டும். பூஜை முடிந்ததும் சகுந்தலா சமையல் வேலை செய்யச் சென்றால், சம்பூர்ணா படிக்கச் செல்ல வேண்டும். இப்போது படிப்பை முடித்து விட்டதால் அன்னையுடன் அவளும் உதவ வேண்டும்.

உடை சேலை, சல்வார், இரவில் இரவு உடை என்று இவைகளை மட்டுமே அணிய வேண்டும். போன் அளவோடு உபயோகிக்க வேண்டும். பொழுதுபோக்க ஓவியம் வரைந்து கொள்ளலாம். பாட்டுக் கேட்கலாம். தொலைக்காட்சியில் அனாவசியமான நிகழ்ச்சிகள் பார்க்க அனுமதியில்லை என்று தொடரும் பட்டியல் கொஞ்சம் நீளம் தான்…!

இவை எல்லாம் சம்பூர்ணாவை அடக்கி வைப்பவை. கட்டுப்பாடுகள் விதிக்க, விதிக்க அதை மீறிக் கொண்டு வர ஆசை கொண்டாள்.

மகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று மனைவிக்கும் அறிவுரையும் உண்டு. அதன் படி மனைவியும், மகளும் நடந்தே ஆகவேண்டியது கட்டாயம். அவரின் அந்தக் கட்டாயமே சம்பூர்ணாவை மீற சொன்னது.

அவரின் கண் பார்வையில் இருக்கும் வரை அவர் சொல்வதற்கு எல்லாம் நல்ல பிள்ளையாக நடந்து கொள்பவள், அவரின் கண் மறைந்ததும் தான் எப்படி எல்லாம் இருக்க ஆசைப்படுவாளோ அப்படி எல்லாம் இருந்து கொள்வாள். அதற்காக அவளின் ஆசைகள் வரம்பை மீறியும் இருந்ததில்லை.

அவளின் செயலில் விளையாட்டுத்தனங்கள் இருக்குமே தவிர விபரீதங்கள் இதுவரை இருந்ததில்லை.

அவளின் சின்னச் சின்ன ஆசைகளையும் தந்தை முடக்குவதாக நினைத்தவள் அந்த ஆசைகளைத் தானே நிறைவேற்றிக் கொள்ள முனைந்தாள்.

அதன் விளைவே ஆட்டமும், பாட்டும், சேட்டையும். இன்னும் சில விஷயங்கள் செய்ய ஆசைகள் இருந்தும், இவ்வீட்டில் இருக்கும் வரை அதைச் செய்ய முடியாது என்பதால் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கக் காத்திருந்தாள்.

அதனால் தான் தந்தையின் மூலம் தனக்குக் கிடைத்த கட்டுப்பாடுகள் வரப்போகும் கணவரிடமும் கிடைக்கக் கூடாது எனக் கடவுளுக்குக் கட்டளையிட்டு வேண்டிக் கொண்டாள்.

காலை உணவு முடிந்ததும் மீண்டும் சேலையை அணிந்து மாப்பிள்ளை வீட்டாரை ஒருவித ஆர்வத்துடன் எதிர்பார்த்துத் தயாராகிக் கொண்டிருந்தாள் சம்பூர்ணா.

அன்று விடுமுறை தினம் என்பதால் தான் அன்றைய நாளில் பெண் பார்க்கும் படலத்தை ஏற்பாடு செய்திருந்தார் சடகோபன்.

சரியாகக் காலை பத்து மணியளவில் வந்திறங்கிய மாப்பிள்ளை வீட்டாரை ஆரவாரத்துடன் வரவேற்றுக் கொண்டிருந்தார் சடகோபன்.

அவர்கள் வந்தது தெரிந்ததும் சம்பூர்ணாவின் மனம் படபடவென்று அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.

‘கடவுளே! உங்ககிட்ட நான் கேட்டதை மறக்காம செய்துடுங்க…’ என்று அந்தப் படபடப்பிலும் அவசரமாகக் கடவுளுக்குக் கட்டளையிட மறக்கவில்லை அவள்.

சிறிது நேரத்தில் பரபரப்புடன் வந்த சகுந்தலா “பூர்ணா வா, அப்பா உன்னைக் கூட்டிட்டு வர சொன்னார்…” என்று அழைத்தார்.

அவர் அழைத்ததும் வேகமாகத் துடித்த இதயத் துடிப்பை மட்டுப்படுத்த நெஞ்சில் கைவைத்து அழுத்தியவள், “யார் யாருமா வந்திருக்காங்க? நிறையப் பேர் வந்திருக்காங்களா?” என்று கேட்டாள்.

“மாப்பிள்ளை, மாப்பிள்ளையோட அம்மா, அப்பா மூனு பேரு மட்டும் தான் வந்திருக்காங்க. வேற யாரும் வரலை. பதட்டப்படாம வா…” என்று அவளை அழைத்து வந்தவர் தயாராக வைத்திருந்த பழச்சாற்றைக் கையில் கொடுத்தார்.

“என்னம்மா என்கிட்ட கொடுக்குறீங்க? நீங்களே கொடுத்திருக்க வேண்டியது தானே?” என்று கேட்டவளை முறைத்தவர்,

“எல்லாம் முறைப்படி செய்யணும் பூர்ணா. அதான் மரியாதை. வாய் பேசாம ஒழுங்கா வா…” என்று அதட்டிய படியே அவளை அழைத்துப் போனார்.

வரவேற்பறைக்குள் நுழைந்ததுமே தன்னைத் துளைக்கும் பார்வைகளை உணர்ந்து லேசாக நிமிர்ந்த தலையுடன் வந்துகொண்டிருந்தவள் வேகமாகத் தலையைக் குனிந்து கொண்டாள்.

‘அட! அட! என்ன அடக்கம்? என்ன ஒடுக்கம்? நீ ஒரு வாலு இல்லாத குரங்குனு எனக்கு மட்டும் தானே தெரியும். இன்னும் கொஞ்சம் தலையைக் குனிஞ்சுக்கோ தாயி. இல்லனா உன்னை அடங்காத பொண்ணுனு சொல்லிட போறாங்க’ என்று மனம் அவளுக்குள் இருந்து கேலி செய்து கொண்டிருந்தது.

‘ஷ்ஷ்… நீ அடங்கு! இப்போ நான் ரொம்பக் குட் கேர்ள்! நீ ஏதாவது பேசி என்னைப் பேட் கேர்ள் ஆக்கிடாதே’ என்று மனதை அடக்கினாள்.

“என் பொண்ணை நல்லா அடக்க ஒடுக்கமா வளர்த்திருக்கேன். இவளால் இதுவரை எங்களுக்கு ஒரு பிரச்சனையும் வந்ததில்லை…” என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார் சடகோபன்.

“அதான் பார்த்தாலே தெரியுதே, பொண்ணு குனிஞ்ச தலை நிமிராமல் வர்றாளே…” என்று சொன்ன குரலை கேட்டு ஓரக்கண்ணால் பார்த்தாள் சம்பூர்ணா. மாப்பிள்ளையின் அன்னை போலும், கொஞ்சம் பெரிய உருவமாகத் தெரிந்தார்.

‘யாரு நீ அடக்க ஒடுக்கமான பொண்ணு? இதைக் கேட்க எனக்குச் சிப்பு சிப்பா வருதே! நீ சரியான ஒண்ணா நம்பர் கேடினு உங்க அப்பாவுக்குத் தெரியலை. ஒரு நாளைக்கு உன் குட்டு உடையப்போகுது. அப்போ நீ அசட்டு வழிய நிற்க போற’ அந்த நேரத்திலும் மனம் அவளைத் துரத்த “அடங்க மாட்டியா நீ?” என்று முகத்தில் கொஞ்சமும் மாற்றம் இல்லாமல் உள்ளுக்குள் கடுகடுத்தாள்.

“வாமா, எல்லாருக்கும் ஜூஸ் கொடு…!” அவளின் தந்தை சொல்ல, முகத்தில் மென்மையையும், உதட்டில் சிறு புன்னகையையும் கொண்டு வந்தவள் சோஃபாவில் அமர்ந்திருந்தவர்கள் முன் சென்று நின்று குளிர்பானத்தை நீட்டிவிட்டு முகத்தை நிமிர்த்திப் பார்த்து “எடுத்துக்கோங்க…” என்றாள்.

“நன்றிமா…” என்று சொல்லி எடுத்துக் கொண்ட மாப்பிள்ளையின் தந்தை அகத்தியன் கருமையான நிறத்தில் கட்டுக்கோப்பான உடற்கட்டுடன் இருந்தார்.

அவரைப் பார்த்துச் சிநேகமாகச் சிரித்தவள் நகர்ந்து அருகில் இருந்தவருக்கு நீட்ட “எப்படிம்மா இப்படிச் சிலிம்மா கட்டுக்கோப்பா இருக்க? எனக்கும் அந்த ரகசியத்தைச் சொல்லேன். நானும் ட்ரை பண்றேன்…” என்று மெல்லிய குரலில் கேட்ட மாப்பிள்ளையின் அம்மா நளினா சிவந்த நிறம் என்று நிர்ணயம் செய்ய முடியாமல் வெள்ளை என்றும் சொல்ல முடியாமல் இரண்டுக்கும் நடுநிலையான நிறத்தில் இருந்தார்.

அவரின் கேள்விக்கு விரிந்த சிரிப்பை தந்தாள்.

“மாப்பிள்ளைக்குக் கொடுமா…” என்ற தந்தையின் குரலில் நகர்ந்து சென்றவள் தயக்கத்துடன் மெல்ல முகத்தை நிமிர்த்தி அவனின் முகம் பார்த்தாள்.

பார்த்த அடுத்த நொடி அவளின் கைகளில் இருந்த தட்டு தடுமாறியது. அவளின் கை தட்டை தவற விடும்முன் தட்டுக்கு கீழே ஒரு கையைக் கொடுத்து தாங்கியவன் இன்னொரு கையில் டம்ளரை எடுத்துக் கொண்டே செய்த செய்கையில் “ஆ…!” என்று வாயை பிளந்தாள்.

அவளின் அதிர்ச்சியை ரசித்துக் கொண்டே முதலில் அவசரமாகச் செய்ததை மீண்டும் நிதானமாகச் செய்தான்.

ஒரு கண்ணை மட்டும் மூடி மற்றொரு கண்ணை அரைக் கண்ணாக விரித்து அவன் கண் அடித்ததில் மேலும் அதிர்ந்து ‘அடேய்…! வெள்ளாவியில் வெந்தவனே! நீயா மாப்பிள்ளை?’ என்று உள்ளுக்குள் அதிர்ந்த படி கண்ணை விரித்துத் தன் திகைப்பைக் காட்டினாள்.

‘என்னை எப்போ பார்த்தாலும் வாயை பிளக்க வைக்கிறதே வேலையா வச்சுருக்கானே இவன்’ என்று கடுகடுத்துக் கொண்டிருந்தாள்.

‘நானே தான்!’ என்பது போல அவனின் அக்மார்க் வசீகரப் புன்னகையைச் சிந்தினான் அவன்.

‘பெரிய புன்னகை மன்னன்னு நினைப்பு. இதுல பார்க்கிறப்ப எல்லாம் ஒத்தை கண்ணோட பிறந்தவனாட்டம் கண்ணு அடிச்சுக்கிட்டே திரியுற. ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் அந்தக் கண்ணை நோண்டி கையில் கொடுக்கப் போறேன் பாரு…’ என்று அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்து கண்களால் மிரட்டினாள்.

‘அட! அதுக்குள்ள தெளிஞ்சிட்டியா? உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியாது கண்ணு’ அவளின் மிரட்டலை கண்டு கொண்டது போலப் பதிலுக்குப் பார்த்து வைத்தான்

‘பண்றேனா இல்லையானு பார்!’

‘ஓவர் காண்பிடன்ஸ் செல்லம்’

‘போடா டேய்…!’ உதட்டை இழுத்துப் பழிப்பு காட்டினாள்.

“இங்கே வந்து உட்கார் பூர்ணா…” அவர்களுக்குள் கண்களால் நடந்த போர் பற்றி அறியாமலேயே அந்தப் போரை மேலும் வளர்க்க விடாமல் அவளை அழைத்தார் சடகோபன்.

தந்தையின் அருகில் இருந்த இன்னொரு இருக்கையில் அமர்ந்தவள் மீண்டும் அவனைப் பார்க்கும் திராணியின்றித் தன் மடியில் வைத்திருந்த கையை ஆராய்ச்சி பண்ணுவது போல் ஒரு கையால் இன்னொரு கையை நீவி விட்டுப் பிடித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வெளியே முகத்தில் எதுவும் தெரியவில்லை என்றாலும், அவளின் மனதிற்குள் பல யோசனைகள் ஓடிக் கொண்டிருந்தது.

‘இவன் எப்படி மாப்பிள்ளையாக வந்தான்? வந்தது மட்டும் இல்லாமல் எப்போதும் அவன் செய்யும் பொறுக்கித்தனமான கண் அடிக்கும் வேலையை நடுவீட்டில் மாப்பிள்ளை என்ற பெயரில் இங்கேயே வந்து செய்கிறான்’

அவனின் நிறத்தை குறித்து அவளுக்கு இருந்த கேள்விக்கான விடை இன்று தெரிந்து விட்டது.

அவனின் தந்தையின் முகம் தமிழகத்தைச் சேர்ந்தது என்று பறைசாற்றியது என்றால், அன்னையின் முகம் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று பறைசாற்றியது.

அளவான உடற்கட்டில் தந்தையைப் போன்றும், நிறத்தில் அன்னையைக் கொண்டும் இருந்தான் அவன்.

அவன் மேல் அதீத கோபத்தில் இருந்தாள் அவள்.

அவனை இனி தன் வாழ்நாளில் பார்க்க நேர கூடாது என்று கடவுளிடம் முன்பு வேண்டுதலும் வைத்திருந்தாள்.

அவள் வேண்டுதல் வைக்கும் அழகு தான் தெரியுமே?

அவள் கட்டளையிட்ட அழகில் காண்டான கடவுள் அவளின் காலை வாரியிருந்தார்.

அவளுக்கென்றே எழுதி வைத்திருந்தவனை இனி பார்க்கவே கூடாது என்று வேண்டுதல் வைத்தால் அந்த வேண்டுதலை அவரும் தான் எப்படி நிறைவேற்றுவார்?

அது புரியாமல் ‘கடவுளே…!’ என்று மனதிற்குள் பல்லை கடித்தாள்.

‘உன் பல்லு நொறுங்கி துள் பக்கோடா மாதிரி உதிர்ந்தாலும் என் முடிவில் மாற்றம் இல்லை மகளே!’ என்று அவளின் அவனை விட வசீகரப் புன்னகை சிந்திய கடவுளை நேரில் கண்டிருந்தால் சம்பூர்ணாவிற்கு ருத்ர தாண்டவமும் ஆட வரும் என்பதை அறிந்திருப்போம்.

யோசனையில் கையைப் பிசைந்து கொண்டிருந்தவளை சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

அகத்தியனும், சடகோபனும் பேசிக் கொண்டிருக்க, “எங்க பையன் பொண்ணுகிட்ட கொஞ்சம் தனியா பேசணுமாம்…” என்று இருவரின் பேச்சிலும் இடை புகுந்தார் நளினா.

“மாம்… நான் எங்கே பேசணும்னு சொன்னேன்?” என மகன் அன்னையின் காதோரம் முணுமுணுத்தான்.

“பொண்ணுக்கு உன் கூடப் பேசணும் போலருக்குடா. அங்கே பார்! கையைப் போட்டு டென்ஷனா பிசைஞ்சு கிட்டயே உன்னை ஓரப்பார்வை பார்க்கிறாள்…” என்றார் சம்பூர்ணாவின் நடவடிக்கையைக் கவனித்தவர்.

‘நான் எப்படி மாப்பிள்ளையா வந்தேன்னு யோசனையில் அப்படி இருக்காள். அது புரியாம அம்மா வேற…’ அவளை அறிந்து கொண்டது போல நினைத்துக் கொண்டான்.

“பிள்ளைகளும் அவங்க சம்மதம் சொல்றதுக்கு முன்னாடி பேசி ஒரு முடிவுக்கு வரட்டுமே…” என்று அகத்தியனும் சொல்ல, “சரிங்க பேசட்டும்…” என்று சிறிது யோசனைக்குப் பிறகு சொன்ன சடகோபன் “இங்கே கீழே உள்ள அறைக்குப் போய்ப் பேசுங்க…” என்று மகளைப் பார்த்து சொன்னார்.

மகன் எழுவதற்கு முன் வேகமாக அவனின் புறம் குனிந்த நளினா “அப்படியே பொண்ணு கிட்ட அவள் ஒல்லியா இருக்க என்ன டிப்ஸ் ஃபாலோ பண்றாள்னு கேட்டுட்டு வாடா…” என்று கிசுகிசுத்தார்.

‘அச்சோ! அம்மாவே…’ என்பது போலப் பார்த்து வைத்தான் மகன்.

“மாம், என்னதிது? பொண்ணு பார்க்க வந்தோமா? சிலிம்மாக டிப்ஸ் கேட்க வந்தோமா? இப்போ அதுவா முக்கியம்?” என்று கடுப்புடன் கேட்டான்.

“எனக்கு அது தான்டா முக்கியம். இப்போ எதுக்கு நீ பொண்ணு கூடத் தனியா பேச ஏற்பாடு செய்தேன்னு நினைச்ச? பொண்ணு கையைப் பிசைஞ்சதை எனக்குச் சாதகமாக்கி இந்த டிப்ஸ் தெரிஞ்சுக்கத் தான். சம்மந்தி வீட்டு ஆளுங்க முன்னாடி நான் டிப்ஸ் கேட்டுட்டு இருக்க முடியாது. இப்போ நீ போய்க் கேட்டு வந்தா உங்க கல்யாணத்துக்கு முன்னாடி கொஞ்சமாச்சும் உடம்பை குறைப்பேன்…” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டு முறைத்தவன் “இதுக்குத் தான் என்னைப் பேச அனுப்புறீங்கனா நான் போக மாட்டேன் மாம்…” என்றான் கடுப்புடன்.

“சும்மா போடா மகனே! பொண்ணு ஏற்கனவே நீ பார்த்த பொண்ணு தானே? இப்போ நீ பொண்ணு கிட்ட கடலை போடுறது முக்கியம் இல்லை. பார்! இங்க இருக்குறதுலயே நான் தான் தடியா இருக்கேன். நானும் உடம்பை குறைக்கணும்கிற ஆசையில் தானே கேட்குறேன். உன் அம்மாவுக்கு இது கூடச் செய்ய மாட்டியா?” என்று கெஞ்சலாகக் கேட்டார்.

மகனுக்குப் பொண்ணு பார்க்க வந்ததையே மறந்தவறாகப் பேசியவரை பார்த்து மகனின் கடுப்பு கூடிக் கொண்டே போனது.

அம்மாவும், மகனும் ரகசியம் பேசவும் சுற்றியிருப்பவர்கள் ‘என்ன?’ என்பது போலப் பார்க்க ஆரம்பித்து விட, அதற்கு மேல் பேச்சை வளர்க்க விரும்பாதவன் “சரி மாம், கேட்டுட்டு வர்றேன்…” என்று பல்லை கடித்துக் கொண்டு சொன்னவன் வேகமாக எழுந்து கொண்டான்.

விட்டால் இன்னும் பேசி ‘பெண்ணிடம் டிப்ஸ் என்னென்ன இருக்கிறது எனப் பட்டியல் போட்டு எழுதி வாங்கிக் கொண்டு வா’ என்று சொன்னாலும் சொல்வார் என்று பயந்தவன் எழுந்து ‘இவனிடம் எல்லாம் பேச வேண்டுமா?’ என்பது போலப் பார்த்துக் கொண்டிருந்த சம்பூர்ணாவை ‘வர்றியா?’ என்பது போலப் பார்த்து வைத்தான்.

“கூட்டிட்டு போமா…” என்று மீண்டும் சடகோபன் சொல்ல வேறு வழியில்லாமல் முன்னே நடந்தாள் சம்பூர்ணா.

அவளின் பின் நடந்தவன் அவள் உள்ளே சென்ற அறைக்குள் தானும் சென்றவன் கதவை பாதி மட்டும் திறந்து வைத்துவிட்டு அருகில் இருந்த சுவரில் சாய்ந்து நின்று கைகளைக் கட்டிக்கொண்டு நின்றான்.

அவனின் முகத்தைப் பார்க்க பிடிக்காமல் அங்கிருந்த மேஜையின் மீது சாய்ந்து நின்று முகத்தை வேறு பக்கம் திருப்பியிருந்தவளை பார்த்து அவனின் அதரங்களில் புன்னகை அரும்பியது.

நொடிகள் கடந்த பிறகும் அவள் திரும்பாமல் இருக்க “சம்பூர்ணா ராகவேந்திரன்! ஹ்ம்ம்… சொல்லும் போதே கிக்கா தான் இருக்கு…” என்று இருவரின் பெயரையும் அழுத்தமாகச் சேர்த்து உச்சரித்து ரசித்துச் சொன்னவனின் குரலை கேட்டு கோபத்துடன் திரும்பினாள் வருங்காலச் சம்பூர்ணா ராகவேந்திரன்!