வஞ்சிக்கொடியின் வசீகரனே – 13

அத்தியாயம் – 13

சம்பூர்ணா காஃபியை எடுத்துக் கொண்டு மீண்டும் அறைக்குள் வந்த போது கட்டில் முழுவதும் தான் பார்த்த காகிதங்களைப் பரப்பி வைத்துக் கொண்டு, அதன் முன் அமர்ந்திருந்தான் ராகவேந்திரன்.

அவனின் கண்கள் வியப்புடன் ஜொலித்துக் கொண்டிருந்தன.

அதைக் கண்டவள் ஒரு நொடி அதிர்ந்து, பின் தெளிந்து காஃபியை அங்கிருந்த மேஜையின் மீது வைத்து விட்டு, “இதை எல்லாம் ஏன் வெளியில் எடுத்தீங்க?” எனக் கேட்டுக் கொண்டே காகிதங்களை மீண்டும் அடுக்கி வைக்க ஆரம்பித்தாள்.

“சம்மூ நீ பேஷன் டிசைனருக்குப் படிச்சிருக்கீயா?” என்று கேட்டு ஒரு காகிதத்தை எடுத்துப் பார்த்தான்.

“ப்ச்ச்… அதைக் கொடுங்க…” என அதையும் வாங்கி அடுக்கியவள் “அதெல்லாம் எதுவும் படிக்கலை…” என்றாள்.

“அப்புறம் எப்படி விதவிதமா ட்ரெஸ் டிசைன்ஸ் வரைஞ்சு வச்சுருக்க? இது எல்லாமே நீ வரைஞ்சது தானே? வேற யாரும் வரைஞ்சதா?” என யோசனையுடன் கேட்டான்.

“நான் வரைஞ்சது தான்…” என்றவள் மீண்டும் அந்தக் காகிதங்களை மேஜை ட்ராயரில் வைத்து சாவியால் பூட்டினாள்.

சாவியை மறக்காமல் தன் கைப்பையில் வேறு போட்டுக் கொண்டாள்.

“என்ன செய்ற சம்மூ? நீ வரைஞ்சுது ஒவ்வொண்ணும் அவ்வளவு அழகா இருக்கு. அதை ஏன் இப்படி மறைச்சு வைக்கிற. இல்லை… மறைச்சு வைக்கலை… ஒளிச்சு வச்சுக்கிட்டு இருக்க. என்ன இதெல்லாம்?” என்று கேட்டான்.

“அதைத் தெரிஞ்சு வச்சுக்கிட்டு நீங்க என்ன செய்யப் போறீங்க? விடுங்க…” என்று அலட்சியமாகச் சொன்னவள் காஃபியை எடுத்து நீட்டினாள்.

அவளின் குரலில் தான் அலட்சியம் தெரிந்ததே ஒழிய, முகம் சோர்வுடன் தெரிந்தது.

அதைக் கண்டவன் யோசனையுடன் மனைவியின் முகத்தை ஆராய்ந்தான்.

“காஃபி என்ன என் முகத்துலயா இருக்கு? எடுத்துக் குடிங்க ஆறிடும்…” இன்னும் காஃபி கப்பை கையில் வாங்காமல் தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனை அதட்டினாள்.

கப்பை கையில் எடுத்தவன் “இந்த வீட்டில் உனக்கு என்ன பிரச்சனை சம்மூ?” நீ சொல்லியே ஆக வேண்டும் என்பது போல் அழுத்தத்துடன் கேட்டான்.

“இந்த வீட்டில் எனக்கு என்ன பிரச்சனை? ஒரு பிரச்சனையும் இல்லையே…” என்று வேகமாக மட்டுமில்லாமல் உறுதியாகவே மறுத்தாள்.

“அப்படியா? ஆனா நீ சொல்வது நம்புற மாதிரி இல்லையே… எந்தப் பிரச்சனையும் இல்லைனா இப்படிப் பூட்டி வைக்க வேண்டிய அவசியம்தான் என்ன?”

அவனின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் அமைதியாகவே நின்றாள்.

“சொல்லு சம்மூ‌…” அழுத்தம் கூடியது.

“எனக்கு மாடர்ன் ட்ரெஸ்னா பிடிக்கும்…”

“அதான் நீ வரைஞ்ச டிராயிங்கே சொல்லுதே… எல்லாமே அழகான மாடர்ன் ட்ரெஸ் மாடல் தானே… அதில் என்ன பிரச்சனை?”

“ஆனா அப்பாவுக்குப் பிடிக்காது…”

“போட போறது நீ தானே? உன் அப்பாவா போட போறார்?”

“என்ன நக்கலா?”

“இல்லை விக்கலு…”

“நக்கலு, விக்கலு எல்லாம் பழைய ரைமிங்… புதுசா ஏதாவது சொல்லுங்க…” என்றாள் கிண்டலுடன்.

“புது ரைமிங் எல்லாம் புருஷனும், பொண்டாட்டியுமா பொறுமையா ஒரு நாள் ஜோடி போட்டு கண்டு பிடிக்கலாம். இப்போ விஷயத்துக்கு வா…” என்றான்.

‘அப்பயும் புது ரைமிங்கை தான் ஜோடி போட்டு கண்டு பிடிப்பீங்களாடா?’ என்று மனம் வேறு ஒரு பக்கம் உறுத்து விழித்தது.

“இனியும் என்ன விஷயம் இருக்கு? இதான் விஷயம்! அப்பாவுக்குப் பிடிக்காது… அதனால் போட மாட்டேன்… போட தானே முடியாது. வரையலாமே? அதனால் எனக்குப் பிடிச்ச டிசைன் எல்லாம் வரைஞ்சு வச்சுக்குவேன்…” என்று சொன்ன மனைவியை யோசனையுடன் பார்த்தான் ராகவ்.

“நீ வரைஞ்சது எல்லாமே மாடர்னா இருந்தாலும் பார்க்க டீசண்டா, நல்ல லுக் கொடுக்குற ட்ரெஸ் தானே… அதைப் போடுவதில் என்ன தப்பு?” என்று கேட்டான்.

“ப்ச்ச்… எப்படி இருந்தா என்ன? அது போட கூடாதுனு வீட்டில் சொல்லிட்டாங்க அவ்வளவு தான். என் ஆசையை இப்படி நிறைவேத்திக்குவேன்…”

“மாமா மேல அவ்வளவு பயமா?”

“அதை ஏன் பயம்னு சொல்லணும்? மரியாதைனு சொல்லலாம்…”

“ஓகோ…!” என்றவன் அதன் பிறகு எதுவும் கேட்கவில்லை.

“அந்தப் பேப்பர்ஸ் எல்லாம் நாளைக்கு நம்ம வீட்டுக்குக் கொண்டு போகப் பேக் பண்ணி இருக்குற உன் பேக்குக்குள்ள வச்சுடு…” என்று மட்டும் சொன்னான்.

அவளும் அந்த எண்ணத்தில் தான் இருந்ததால் ‘சரி’ என்பது போல் தலையை மட்டும் அசைத்தாள்.

அன்றைய பொழுது விருந்தில் கழிந்து கொண்டிருந்தது.

மதிய விருந்தை முடித்து விட்டு அறைக்கு வந்ததும் அங்கிருந்த ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தாள் சம்பூர்ணா.

ராகவ்விற்குக் காலையில் விரைவில் எழுந்தது உறக்கத்தை வரவைத்துக் கொண்டிருந்தது.

ஆனாலும் தன்னைக் கண்டு கொள்ளாமல் புத்தகத்துடன் உறவாடி கொண்டிருக்கும் மனைவியைச் சீண்டும் எண்ணம் வர, தன் உறக்கத்தைக் கை விட்டவன், குறும்புடன் அவளைப் பார்த்து, “அதெப்படி சம்மூ உங்க குடும்பத்துக்கே பொருந்துற மாதிரி பொருத்தமா உங்க மூணு பேருக்கும் பேர் அமைஞ்சிருக்கு…” என்று கேட்டான்.

“குடும்பத்துக்கே பொருத்தமான பேரா? என்ன சொல்றீங்க?” புத்தகத்திலிருந்து தலையை நிமிர்த்திக் கேட்டவள், பின்பு “எங்க மூணு பேருக்கும் ‘ச’னு பேர் ஆரம்பிக்கிறதை சொல்றீங்களா?” என்று கேட்டாள்.

“ம்கூம்… அதில்லை…” என்றவன் கண்ணில் குறும்பு கூடிப் போனது.

“பின்ன…?”

“உங்க அம்மா தலை, உங்க அப்பா சடை, நீ சாம்பு… உங்க குடும்பமே தலையை மையமா வைச்சு ஒற்றுமையா இருக்கே அதைச் சொன்னேன்…” என்று சொல்லி விட்டுக் கேலியாக உதட்டை சுழித்தான்.

“என்ன உளறுரீங்க… தலை, சடை, ஷாம்புனு?” அவன் சொல்ல வருவது புரியாமல் குழப்பத்துடனே கேட்டாள்.

“உங்க அம்மா பேரு சகுந்தலா(லை)வில் வர்ற தலை… உங்க அப்பா பேரு சட(டை)கோபன்ல வர்ற சடை, உன்னோட பேரு ச(சா)ம்பூர்ணால வர்ற சாம்பூ…” என்று அவன் நீட்டி முழங்கி விளக்கம் சொல்ல, அதைக் கேட்டவளோ….

“என்னது…?” என்று கண்களை உருட்டிக் கொண்டு உக்கிரமாக முறைத்தாள்.

“அதான்மா தலை, சடை, சாம்பூ… எப்படி இருக்கு என் கண்டுபிடிப்பு?” அவள் என்னவோ ‘என்னது?’ என்று மீண்டும் விளக்கம் கேட்டது போலத் திரும்பவும் சொல்லிவிட்டு, தன் கண்டுபிடிப்பை பற்றிக் கேட்டு தன் சட்டையின் கழுத்துப் பட்டையைப் பெருமையாகத் தூக்கி வேறு விட்டுக் கொண்டான்.

ஏற்கனவே கணவனின் விளக்கத்தில் வெகுண்டு போயிருந்தவள், அவனின் பெருமையில் சீரும் பெண் வேங்கையென நின்றிருந்தாள்.

பூர்ணாவின் நெஞ்சுக்கூடு வேகமாக ஏறி, இறங்கி அவளின் கோபத்தின் அளவை காட்டிக் கொண்டிருந்தது.

அவளின் கோபத்தைக் கண்டாலும் பொருட்படுத்தாமல், “உன்னையே நான் முதலில் ஷாம்புனு கூப்பிடணும்னு தான் நினைச்சு வச்சுருந்தேன். ஆனா நீ வேற என் மேல ஏற்கனவே எதுக்குக் கோபம்னே தெரியாம ஒரு கோபத்தை வேற பிடிச்சு வச்சுருக்கியா? இதில் நான் வேற ஷாம்புனு கூப்பிட்டு கூடக் கொஞ்சம் கோபத்தை ஏன் ஏத்தி விடுவானேன்னு தான் ஷாம்புல இருந்து சம்மூக்கு மாறிட்டேன். ஆனா சம்மூ விட ஷாம்பு தான் எனக்குப் பிடிச்ச பேரு தெரியுமா?” என்று சொன்னவன் ஷாம்பு என்று அழைக்க முடியாததை நினைத்து பெருமூச்சு ஒன்றை வேறு இழுத்து விட்டான்.

“யோவ்! என்ன கொழுப்பா?” ஆத்திரம் குறையாமல் கத்தினாள் பூர்ணா.

“கொழுப்பு இல்லமா… ரசிப்பு…! எவ்வளவு ரசிச்சு பேரு வச்சுருக்கேன்…” என்று அலட்டிக் கொள்ளாமல் சொன்னான்.

“எங்க குடும்பத்துக்கே பட்டப் பேரு வச்சுட்டு அதை ரசிச்சு சொன்னேன்னு வேற சொல்றீயா?” கோபத்துடன் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க கேள்வி கேட்டாள் பூர்ணா.

“இது உன் குடும்பம் மட்டுமில்ல என் குடும்பமும் தான்…” என்று சொல்லிக் கொண்டே வந்தவன் “ஹேய்! வெய்ட்… வெயிட்… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன சொன்ன?” என்று பரபரப்பாகக் கேட்டான்.

“ஏன்? என்ன சொன்னேன்?” தன் கோபத்தைப் பொருட்படுத்தாமல் தேவையில்லாமல் வேறு ஏதோ கேள்வி கேட்கிறானே என்ற கடுப்புடன் முகத்தைச் சுளித்தாள்.

“என்னவோ சொல்லித் திட்டுனீயே…” இன்னும் பரபரப்பு குறையாமலேயே கேட்டான்.

“யோவ்! என்ன பேச்சை மாத்த பார்க்கிறாயா?” என்று எரிச்சலுடன் கேட்டாள்.

“ஹேய்! இதான்… இதான்…” என்று அளவில்லாமல் ஆர்ப்பரித்தான்.

“ப்ச்ச்…!” கணவனின் செய்கையில் எரிச்சல் போய், அந்த இடத்தில் சலிப்பு ஆட்கொள்ள ஆரம்பித்தது.

‘ஆஹா! இவளோட கோபத்தையும் கோலப்பொடி போலத் தூள் தூளாக ஆக்கிவிடுவான் போலயே…’ என்று மனம் ‌ என்னதான் நடக்கப்போகிறது என்பது போல இருவரையும் சுவாரசியமாக வேடிக்கை பார்த்தது.

“நீ அதிர்ச்சியில் ‘ஆ’ னு குருவிக் குஞ்சு போல வாயைத் திறக்கிறது தான் ரொம்பக் கிக்கா இருக்கும்னு இத்தனை நாளும் நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா நீ ‘யோவ்’னு சொல்றது அதைவிடக் கிக்கா இருக்கே…” என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்தவனாகச் சொன்னான்.

‘யோவ்னு கோபத்தில் திட்டினா அதையும் அவனுக்குச் சாதகமாக எடுத்துக்கிறானே? இவனை எல்லாம் எந்த மியூசியத்திலிருந்து கொண்டு வந்து ஊருக்குள்ள உலாவ விட்டிருப்பாங்க…?’ என்று கோபத்துடன் நினைத்துக்கொண்ட சம்பூர்ணா அவனை அடிக்க ஏதாவது கிடைக்கிறதா என்று பார்க்க கண்களை உருட்டித் தேடினாள்.

கைக்கு இசைவாகத் தலையணை மட்டுமே அப்போது அருகில் இருக்க, அதை எடுத்து அவனை அடிக்கக் கையை ஓங்கினாள்.

அவள் கையை ஓங்கிய நிமிடத்தில் தலையணை கீழே விழுந்து கிடக்க, அவளின் கையும், மேனியும் ராகவ்வின் மேல் விழுந்திருந்தது.

மனைவியின் ஓங்கிய கையை இழுத்துத் தன்னைச் சுற்றி போட்டுக் கொண்டவன், அவளின் மேனியை தனது இறுகிய அணைப்பிற்குள் கொண்டு வந்திருந்தான்.

“ஏய்! விடுங்க… விடு…” என்று பூர்ணா வேகமாக அவனிடமிருந்து விடுபட முயன்று கொண்டிருந்தாள்.

ஆனால் அவளின் முயற்சியை முறியடித்தவன், அவள் மேலும் பேச வழியில்லாமல் அவளின் உதடுகளுக்குப் பூட்டு இட்டிருந்தான்.

மனைவியின் உதடுகளுக்குத் தண்டனை கொடுத்துக் கொண்டிருந்தானா? இல்லை பரிசு கொடுத்துக் கொண்டிருந்தானா? என்று புரியாத வகையில் அவளின் இதழ்களுக்கு இம்சை கொடுத்துக் கொண்டிருந்தான்.

நேற்று போல் அவனின் முத்தத்தில் மயங்காமல், தொடர்ந்து விடுபடவே முயற்சி எடுத்துக் கொண்டு இருந்தாள் சம்பூர்ணா.

அதை உணர்ந்து கொண்டவன் அவளைத் தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தினான்.

அவன் பிரித்ததும் கனல் கண்களால் கணவனை எரிக்க ஆரம்பித்தாள் பூர்ணா.

“நீ வேஸ்ட்டுடா ராகவ்! ஒரு முத்தம் கூட உனக்கு ஒழுங்கா கொடுக்கத் தெரியுதா? நேத்து நீ முத்தம் கொடுத்ததும் உன் பொண்டாட்டி எப்படிக் கரைந்து போனாள்? ஆனா இப்ப பாரு உன்னையவே கரைக்கிறது போலக் கனலா பார்த்துக்கிட்டு இருக்காள். முத்தம் கொடுக்கிறதில் இன்னும் உனக்குப் பயிற்சி வேணும் ராகவ்…” என்று அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டான்.

‘டேய்! நீ பார்த்த வேலைக்குக் கனலா பார்க்காம, காவியமாவா பார்த்து வைப்பாங்க…?’ மனம் அவனின் குமட்டிலேயே இடிக்கக் காத்திருந்தது.

“என்ன கொழுப்பு கூடிப் போயிருச்சா‌…?”

“ஆமாடி பொண்டாட்டி.‌.. இனிமேல் நீ தானே எனக்குச் சோறாக்கி போட போற… அதுதான் கொழுப்பு இப்பவே கூடிப் போயிருச்சு…” என்றாள் கேலியாக.

“சும்மா சொல்ல கூடாது. படிச்ச விஷயம் உண்மைனு இப்போ ஃப்ரூப் ஆகிருச்சு…” என்றான்.

“நீங்க என்ன ஒரு நிலையில் இருக்க மாட்டீங்களா? நிமிஷத்துக்கு நிமிஷம் பேச்சும், செயலும் மாறிக்கிட்டே இருக்கு. கொஞ்ச நேரத்துக்கு முன்னால எந்த மியூசியத்திலிருந்து வந்தீங்களோனு நினைச்சேன். ஆனா நீங்க மியூசியத்தில் இருந்து வரல. காட்டிலிருந்து வந்த வாலில்லாத குரங்குன்னு இப்போ கன்ஃபார்ம் ஆயிருச்சு…” என்றால் எரிச்சல் மண்டிய குரலில்.

“ஆமாடி பொண்டாட்டி குரங்கு… நான் வால் இல்லாத குரங்கு…. நீ வால் உள்ள குரங்கு…” என்றவன் அவளின் சேலை முந்தானையை எடுத்து வால் போல் ஆட்டி காட்டினான்.

அவனின் கையிலிருந்த தன் சேலை முந்தானையைப் பிடித்து இழுத்து அவளின் இடுப்பில் சொருகிக் கொண்டு இரண்டு பக்கமும் இடுப்பில் கையை வைத்து “அஷ்… புஷ்…” என்று பெரிதாக மூச்சு வாங்கினாள்.

“நல்லாவே ரயில் வண்டி விடுற டி பொண்டாட்டி… ஒவ்வொரு விஷயத்துக்கும் என்னை மாறி மாறி தாவ வைக்கிறது நீதான். நான் நேரான வழியில் தான் போய்க்கிட்டு இருக்கேன். நீ முதலில் உன் ரயில் இன்ஜினை நிறுத்து…” என்று சொல்லிவிட்டு “நான் படிச்ச விஷயம் என்ன ஃப்ரூப் ஆச்சுன்னு சொல்ல விடுடி பொண்டாட்டி…” என்றான்.

“அப்படி என்னத்தைப் படிச்சு தொலைச்சீங்கனு முதலில் சொல்லித் தொலைங்க…”

“பொண்டாட்டியை வம்புக்கு இழுக்கணும்னா அவங்க பிறந்த வீட்டை பத்தி ஒரு பிட்டை போட்டாலே போதும்னு படிச்சேன். அது பொய் இல்லை உண்மைன்னு இன்னைக்குக் கன்ஃபார்ம் ஆகிருச்சு…” என்றவன் கண்ணைச் சிமிட்டினான்.

“என்னை வம்புக்கு இழுக்க… ம்ம்ம்… என்னை வம்பு இழுக்க என்னவெல்லம் பேசுது இந்த வாய்…” என்று கேட்டுக் கொண்டே கையால் மாறி மாறி அவனின் உடம்பில் அடிக்க ஆரம்பித்தாள்.

சிறிது நேரம் கடந்த பிறகு தான் தன் அடியை எல்லாம் அமைதியாக வாங்கிக் கொண்டு நிற்கிறான் என்று அவளுக்குப் புரிந்தது.

‘என்னடா இது… இவ்வளவு அமைதியா அடி வாங்குறான்? என்ன விஷயம்?’ என்பது போலச் சந்தேகத்துடன் கணவனைப் பார்த்தாள் ‌

அவள் நிறுத்தியதும் குறும்புடன் மனைவியைப் பார்த்தவன் அவளின் சந்தேகப் பார்வையைக் கண்டு “பிராக்டிகல் மா பிராக்டிகல்… நான் புது மாப்பிள்ளை இல்லையா… அதுதான் பொண்டாட்டி கிட்ட அடி வாங்குவது எப்படி? திட்டு வாங்குவது எப்படி? அவளைக் கோபப்படுத்துவது எப்படின்னு பிராக்டிகல் பண்ணிக்கிட்டு இருக்கேன்…” என்று விளையாட்டாகச் சொன்னவன், “புது மாப்பிள்ளையா லட்சணமா செய்ய வேண்டிய இன்னும் ஒரே ஒரு பிராக்டிகல் தான் பாக்கியிருக்கு. அதையும் செய்து பார்த்து விடுவோமா?” என்று ஒரு விதமான கிறக்கமான குரலில் கேட்டான்.

அவனின் குரலில் தெரிந்த கிறக்கமே அது என்ன பிராக்டிகல் என்பதைப் பறைசாற்ற, தயக்கத்துடன் கணவனின் அருகில் இருந்து பின்வாங்கினாள் சம்பூர்ணா.

பின் வாங்கியவளின் கைப்பற்றியவன் “நீ என்ன சம்மூ சொல்ற? ஓகேவா? அதுவும் நமக்கு மார்ட்டனி ஷோ தான் சரியா வரும் போல…” என்றான் நேற்றும், இன்றும் மதிய நேரங்களில் முத்தமிட்டதை மனதில் வைத்து.

தன் கையை வேகமாக விடுவித்துக் கொண்டு “ஹான்…! அம்மா கூப்பிடுற‌ மாதிரி இருக்கு. நான் போய் என்னனு கேட்டுட்டு வந்துடுறேன்‌…” என்று வாய்க்கு வந்ததை உளறி விட்டு கீழே சிட்டாகப் பறந்தாள்.

தன்னை விட்டு ஓடும் மனைவியைப் பார்த்து ஏக்கமான பெருமூச்சு ஒன்றையே ராகவ்வால் விட முடிந்தது.

விருந்தும் விளையாட்டுமாகத் தம்பதிகளின் அன்றைய பொழுது ஓடிவிட, இரவு உணவு நேரத்தில் ராகவ்வின் பெற்றோரும் வந்து சேர்ந்தனர்.

மறுநாள் சம்பூர்ணா முதல் முதலாகத் தங்கள் சென்னை வீட்டிற்கு வருவதால் அவளை வரவேற்க வந்திருந்தனர்.

அவர்கள் வந்த பிறகு நேரமும் விரைந்து ஓட, மறுநாள் காலையில் ராகவ்வின் வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தாள் சம்பூர்ணா.

மாலை வரை இருவரின் பெற்றோரும் புதுமணத் தம்பதியினருடன் நேரத்தைப் போக்கினர்.

இடையில் அவர்கள் தேன்நிலவு செல்வதைப் பற்றிப் பேச்சு வர, “நானும், சம்மூவும் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு போகலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்…” என்று சொல்லி பெரியவர்களைச் சமாளித்து வைத்தான் ராகவ்.

‘ஹனிமூன் போனா பொண்டாட்டியை சுத்தி பார்க்கணும். சும்மாவே என் பொண்டாட்டி என்னைச் சுத்தலில் விட்டுக் கொண்டு இருக்காள். இந்த லட்சணத்தில் ஹனிமூனுக்குப் போய் என்ன செய்யப் போறேன்?’ என்று அவனுக்குள் புலம்பலாகச் சொல்லிக் கொண்டது அவனைச் சுற்றியிருந்தவர்களுக்குத் தெரியாமல் போனது.

தேன்நிலவு செல்லாததால் அவர்களுக்குத் தனிமை கொடுக்க எண்ணி மாலையே பெற்றவர்கள் கிளம்பி விட்டார்கள்.

ராகவ்வின் பெற்றோர் அன்றே காஞ்சிபுரத்திற்குக் கிளம்பி சென்றனர்.

அவர்கள் சென்றதும் இரவு உணவை முடித்துக் கொண்டு பூர்ணா அறைக்குள் தன் உடைகளை அலமாரியில் அடுக்கி வைத்துக் கொண்டிருக்க, ராகவ் வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்து அலைபேசியில் அவனின் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தான்.

தொடர்ந்த சில நிமிடங்களுக்குப் பின் கேட்ட உரையாடல் அறைக்குள் இருந்த சம்பூர்ணாவின் காதில் விழ, அவளின் காதில் இருந்து புகை வர ஆரம்பித்தது.

அவனின் உரையாடல் பூர்ணாவை உச்சத்தில் ஏற வைக்க, துணிகளை வேகமாக அள்ளி அலமாரிக்குள் அடைத்து விட்டுப் படுக்கையில் சென்று கோபத்துடன் அமர்ந்தாள்.

சிறிது நேரம் கழித்து நண்பர்களுடனான உரையாடலை முடித்து விட்டு அறைக்குள் வந்த ராகவ் மனைவியின் கோபத்தைப் பற்றி அறியாமல் அவளின் அருகில் வந்து தோளில் கைவைத்து “என்ன சம்மூ வேலை முடிஞ்சிருச்சுனா படுக்க வேண்டியது தானே… ஏன் உட்கார்ந்து இருக்க…?” என்று கேட்டான்.

கோபத்தில் கொதித்துப் போயிருந்தவள் “ப்ச்ச்… என்னைத் தொட்டு பேசாதே! எனக்குக் கம்பளிப்பூச்சி ஊர்வது போல அருவருப்பா இருக்கு…” என்று தன் தோளில் இருந்த கணவனின் கையைத் தட்டி விட்டு ஆத்திரத்துடன் சொன்னாள் பூர்ணா.

அவளின் கோபத்தில் அயர்ந்து மனைவியைப் பார்த்தான் ராகவ்.