வஞ்சிக்கொடியின் வசீகரனே – 12

அத்தியாயம் – 12

இறுக்கமான அணைப்பு!

மனைவியின் அதிகாரம் என்ற வார்த்தையில் அடிப்பட்டுப் போனவன், தான் வாங்கிய அடிக்கு ஒத்தடமாக மனைவியையே மருந்தாக்க முயன்றான் ராகவ்.

சம்பூர்ணாவோ அவனின் திடீர் அணைப்பில் முதலில் அரண்டு தான் போனாள்.

அவனின் அணைப்பில் இருந்து விடுவித்துக் கொள்ளச் சொல்லி மனம் ஒரு பக்கம் முரண்டு பிடிக்க, மனதை கட்டுப்படுத்திக் கணவனின் கையணைப்பில் கட்டுண்டு போனாள்.

உடல்களுக்குள் இறுக்கம் கூடக் கூட மனதின் இளக்கமும் கூடிக் கொண்டே போனது.

மனைவியின் இளக்கத்தை உணர்ந்த ராகவ், அவளின் தோளில் பதித்திருந்த தன் முகத்தை நிமிர்த்தி அவளின் முகத்தைப் பார்த்தான்.

கண்களை இறுக மூடி மோனநிலையில் இருந்தவளைப் பார்த்தவனின் உதட்டில் புன்சிரிப்பு தவழ ஆரம்பித்தது.

“சம்மூ…” கிசுகிசுப்பாக அழைத்தான்.

“ம்ம்ம்…” மோனநிலையில் இருந்தவளுக்கு உம் என்பதும் உரிமையாகவே வந்தது.

“கண்ணைத் திற…!”

“ம்கூம்…”

“நம்ம இரண்டு பேருக்கும் சண்டை சம்மூ, அது ஞாபகம் இருக்கா?” எனக் குறும்புடன் கேட்டான்.

அக்கேள்வில் விழுக்கென்று விழிகளை விரிய திறந்தாள் சம்பூர்ணா.

‘அடேய்! சண்டையை மறந்து உன்கிட்ட சரண்டர் ஆகியிருந்தவளை சாமியாட வைக்கப் பார்க்கிறாயே இது நியாயமாடா? ம்கூம்…! நீயெல்லாம் சாமியாராகத் தான் லாயிக்கு. சாமியாரா போக வேண்டியவனை எல்லாம் சம்சாரியா ஆக்கிவிட்டு நம்மள சாவடிக்கிறாங்களே ஆண்டவா…’ மனசாட்சியின் குமுறல் குதித்துக் கொண்டு வெளியே வந்தது.

அவன் அணைத்ததும் நெகிழ்ந்து விட்டேனே எனத் தவித்தபடி வேகமாகக் கணவனை விட்டு விலக நினைக்க, அவளை விட வேகமாகத் தன்னை விட்டு விலக விடாமல் செய்திருந்தான் ராகவ்.

மீண்டும் இறுகிய அணைப்பிற்குள் ஆட்பட்டிருந்தாள்.

ஆனால் இந்த முறை அணைப்பு உடல்களுக்குள் இல்லாமல் உதடுகளுக்குள் நடந்து கொண்டிருந்தது.

பூர்ணாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிய திறந்த படி இருக்க, ராகவ்வின் விழிகளோ மனைவியின் விரிந்த விழிகளை ரசனையுடன் ரசித்துக் கொண்டிருந்தன.

இருவரின் கண்களும் காதல் மொழி பேசிக் கொண்டிருக்க, இணைந்திருந்த இதழ்களோ சிருங்கார நாதம் பாடிக் கொண்டிருந்தது.

இதழ் முத்தத்தில் மூழ்கி முத்தெடுத்து விட்டு தன் அதரங்களைப் பிரித்துக் கொண்ட ராகவ், “ஹ்ம்ம்… அன்னியோன்யத்தை அதிகரிக்க இன்னைக்கு இது போதும்…” என்றுவிட்டு வழக்கமான தன் கண் சிமிட்டலை காட்டினான்.

அவனின் செய்கையில் வெட்கம் வந்து பூர்ணாவை வெட்கி போக வைத்தது.

இதழ் முத்தத்தில் இளகி போன தன்னை நினைத்தே சங்கடமாக உணர்ந்தாள்.

அவனை விலக்கி வைக்க நினைத்து விட்டு அதைச் செயல்படுத்த கூட முடியாமல் போனதை நினைத்து தன் மீதே கோபமும் வந்து தொலைத்தது.

‘ஆமா… அவன் தொட்டதும் உருக வேண்டியது. அப்புறம் அவன் தொட்டுட்டானேனு நினைச்சு உன் மனசையே உருக்கிக்க வேண்டியது. உன்னை மொத்தமா அள்ளிக்காம முத்தத்தோட விட்டுட்டானேனு சந்தோஷப்பட்டுக்கோ…’என்று அவளின் மனமே அவளுக்குச் சமாதானம் சொல்ல அதில் சிறிது சமாதானம் அடைத்தவள், கணவனின் முகத்தை நிமிர்ந்து கூடப் பார்க்காமல், படுக்கையில் சென்று படுத்துக் கொண்டாள்.

அவள் அருகில் சென்று படுத்தவன், “மொத்தமா அள்ளிக்கணும்னு எனக்கும் ஆசையாத்தான் இருக்கு. ஆனா…” என்று அவளுக்கும் கேட்கும் வண்ணம் சொல்லியவன் ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டு “ப்ச்ச்… ப்ச்ச்…” எனச் சலித்துக் கொண்டான்.

அவனின் சலிப்பை கேட்டவளுக்கு ஏதோ ஒன்று மனதை போட்டு அழுத்தியது போல் இருந்தது.

அவள் அவகாசம் வேண்டும் என்று கேட்காமலேயே அவகாசம் தந்து கொண்டிருக்கும் கணவனை நினைத்து வியப்பு ஏற்பட்டது.

ரொம்ப நல்லவன் தானோ? நான் தான் புரிந்து கொள்ளாமல் அவனைத் தேவையில்லாமல் விலக்கி வைக்கிறேனோ என்று கூடத் தோன்றியது.

ஆனால் அப்படித் தோன்றும் போதும் மனதின் ஓரம் முணுக் முணுக்கென்று குடையும் விஷயம் அவளை விட்டு விலக மறுக்கையில் அதற்கு மேல் அடுத்தக் கட்டத்தை நெருங்கவும் பயமாக இருந்தது.

அவன் மீது தனக்கு இருக்கும் மனப் பிணக்கம் விலகாமல் உடலில் மட்டும் இணக்கம் உண்டாக்க வேண்டாம் என்ற உறுதி உள்ளுக்குள் உறுதியாகியிருந்தது.

அந்த உறுதி அவன் தொட்டால் உருகி விடும் என்று அவளுக்கே தெரிந்தும் இருந்தது. அதனாலேயே அவளின் பயம் அதிகரிக்கவும் செய்தது.

ஏதேதோ யோசித்தபடி படுக்கையில் பிரண்டு பிரண்டு படுத்த மனைவியைப் பார்த்த ராகவ் அவளைத் தன் கைவளைவிற்குள் இழுத்தான்.

மேலும் அவனிடம் இளகி விடாமல் இருக்கக் கணவனின் கைப்பிடியில் இருந்து விலக முயற்சி செய்தாள் பூர்ணா.

அவளின் முயற்சியை இன்னும் இறுக்கி பிடித்து முறியடித்தவன், இன்னொரு கையால் மனைவியின் புருவத்தை நீவி விட்டுக் கொண்டே “ஏதாவது நினைச்சு மனசை போட்டு உழட்டிக்கிட்டே இல்லாம கொஞ்ச நேரம் அமைதியா தூங்கு சம்மூ. அப்போ தான் ஈவ்னிங் வெளியே போறப்போ ஃப்ரஷ்ஸா இருக்கும்…” என்றான்.

கணவனின் கையணைப்பில் அடங்கி இருந்ததில் இருந்த இதமும், அவன் புருவங்களை நீவி விட்டதிலும் ஒருவித அமைதியை உணர்ந்த சம்பூர்ணா மெல்ல உறக்கத்தின் பிடிக்குச் சென்றாள்.

அவள் உறக்கத்தைத் தழுவும் வரை தன் உறக்கத்தைத் துறந்த ராகவ் பின்பு தானும் உறக்கத்தில் ஆழ்ந்தான்.

அதன் பிறகு மாலை எழுந்து வெளியே சென்று விட்டு வந்தவர்கள் இரவு உணவையும் முடித்து விட்டுப் படுக்கையில் விழுந்தனர்.

படுக்கையில் விழுந்த நிமிடத்தில் இருந்து ராகவ்வின் முகம் யோசனையைத் தத்தெடுத்துக் கொண்டிருந்தது.

அதைக் கவனித்த சம்பூர்ணா ‘இவருக்கு என்ன ஆச்சு? காலையிலிருந்து அப்பப்ப இப்படி யோசனைக்குப் போகிறார்’ என்பது போல அவனின் முகத்தை அடிக்கடி ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் பார்ப்பதை உணர்ந்தாலும் கண்டு கொள்ளாமல் தன் யோசனையை விட்டு வெளியே வராமல் அதிலேயே உழன்றான்.

அவனைத் தொடர்ந்து அப்படிப் பார்க்க முடியாத பூர்ணா “என்னாச்சு? ஏன் எப்படியோ இருக்கீங்க?” என மெல்ல கேட்டாள்.

“ம்ம்…‌ என்ன?” அவளின் கேள்வியில் தலையை உலுக்கிக் கொண்டு திரும்பி மனைவியைப் பார்த்தான்.

“ஏன் எப்படியோ இருக்கீங்கன்னு கேட்டேன்…”

“காலையில் என்ன செய்றதுன்னு யோசிக்கிறேன்…” என்றவனைப் புரியாமல் பார்த்தாள்.

“ஏன்? என்ன செய்யப் போறீங்க?”

“என் மாமனார் கிட்ட நல்ல மருமகன்னு எப்படிப் பெயர் வாங்குறதுன்னு யோசிக்கிறேன்…”

“நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல. அப்பாகிட்ட ஏற்கனவே உங்களுக்கு நல்ல பெயர் தானே இருக்கு? இன்னும் என்ன புதுசா வாங்க போறீங்க?” எனக் குழப்பத்துடன் கேட்டாள்.

“ப்ச்ச்… அது வேற… இது வேற…” என்றான் சலிப்புடன்.

“எதுக்கு இம்புட்டு சலிப்பு?”

“பின்ன இல்லையா? காலையில் ஐஞ்சு மணிக்கு எழுந்திருக்கிறது எவ்வளவு கஷ்டமான விஷயம்னு தெரியுமா?” என்று முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு சொன்னான்.

கணவனின் முகம் போன போக்கைப் பார்த்துச் சட்டெனச் சிரித்து விட்டாள் சம்பூர்ணா.

“நான் எவ்வளவு கவலையா இருக்கேன். அது உனக்குச் சிரிப்பா இருக்கா?” எனச் சிறிது கோபமாகவே கேட்டான்.

அதில் பூர்ணா இன்னும் அதிகமாகச் சிரித்தாள்.

“நீ ஏன் சிரிக்க மாட்ட? காலையில் சீக்கிரமாவே எழுந்து அம்மாகிட்ட நல்ல பெயர் வாங்கிட்ட. அது போல நானும் வாங்க வேண்டாமா?” முகத்தைச் சுளித்துக் கொண்டு கேட்டான்.

“ஹா… ஹா…!” கணவனின் முகம் போன போக்கை கண்டு சத்தமாக நகைத்தாள் பூர்ணா.

‘இவன் விளையாட்டு பிள்ளையா? விபரீத பிள்ளையானு அடிக்கடி என்னை நினைக்க வைக்கிறானே…’ என்று நினைத்துக் கொண்டே அவளின் சிரிப்புத் தொடர்ந்தது.

“இதைத் தான் காரில் வரும் போதும் யோசிச்சுக்கிட்டே வந்தீங்களா?” என்று விவரம் தெரிந்து கொள்ளக் கேட்டாள்.

“ஆமா… வேற என்ன யோசிக்கப் போறேன்? நானெல்லாம் எட்டு மணிக்கு எழுந்திருக்கிறதே பெரிய விஷயம். இந்த லட்சணத்தில் உங்க வீட்டில் ஐஞ்சு மணிக்கே பூஜை ரூம்ல இருக்கணும்னு ரூல்ஸ் எல்லாம் இருக்குனு சொல்ற. நான் இந்த வீட்டுக்கு புதுசா வந்த மருமகன். ஃபர்ஸ்ட் இம்ப்ரஸன் பெஸ்ட் இம்ப்ரஸன் இல்லையா? என் மாமனார்கிட்ட நல்ல பேர் வாங்கினா தானே அது நல்ல மருமகனுக்கு அழகு…”

“ஹா… ஹா… ஹா…! ஒரு புதுப் பொண்ணு சொல்ல வேண்டிய டைலாக் எல்லாம் நீங்க சொல்றீங்க…”

“புதுப் பொண்ணு தான் சொல்லணும்னு சட்டமா என்ன? புது மாப்பிள்ளையும் சொல்லலாம். சரி, அதை விடு…! நீ எப்படித் தினமும் அவ்வளவு சீக்கிரம் எழுந்திருப்ப? அலாரம் வைப்பியா?”

“ம்கூம்… சின்ன வயசில் இருந்தே பழகின பழக்கம். அலாரம் இல்லாமே எழுந்திருவேன்…” என்று சொன்னவளுக்குச் சற்று பெருமையாகவே இருந்தது.

பூர்ணாவும் இவ்வளவு சீக்கிரம் எழ வைக்கிறார்களே என்று புலம்பியது உண்டு.

ஆனால் இன்று கணவன் அதைத் தன்னால் முடியாத காரியமாகப் பேச, தன்னால் முடிகிறதே என்று பெருமையாக நினைத்துக் கொண்டாள்.

‘காலையில் அவன் யோசித்ததைப் பார்த்து கப்பல் அளவுக்கு நான் நினைச்சா இவன் என்னடானா காலையில் விழிக்கிறதைப் பத்தி யோசிச்சுக்கிட்டு இருக்கான்.

என்ன டிசைன்டா உன் டிசைன்? நேரத்துக்கு ஒரு பரிமாணம் காட்டுற. காலையில் யோசனையாயிருந்தான். மத்தியானம் ஃபீல்லிங்கா பேசினான். அப்புறம் ரொமான்ஸ் பண்ணினான். இப்போ சின்னக் குழந்தை போலக் கவலைப்படுகிறான்.

உன்னைப் பற்றி நான் புரிஞ்சிக்கவே பிஹெச்டி படிச்சுட்டு வரணும் போல இருக்கே புருஷா…’ என்று தனக்குள்ளே புலம்பிக் கொண்டும் இருந்தாள்.

‘நீ பிஹெச்டி படிச்சுட்டு வந்தாலும் இவனைப் புரிஞ்சிக்கிறது உனக்குக் கஷ்டம் தான் போல இருக்கு பூர்ணா…’ என்று மனம் வேறு ஒரு பக்கம் அவளைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது.

‘அலாரம் அடிச்சாலும் அதை அடிச்சு ஆஃப் பண்ணிட்டு தூங்குற ஆளாச்சே நான்’ என்று மீண்டும் யோசனைக்குள் போனான் ராகவ்.

“உங்களை அப்பா ஒன்னும் சொல்ல மாட்டார். நீங்க வழக்கம் போல எழுந்திருங்க. இப்போ அமைதியா தூங்குங்க…” கணவனின் குழப்ப முகத்தைப் பார்த்துச் சமாதானமாகச் சொன்னாள் சம்பூர்ணா.

“ம்ம்… ம்ம்…” என்று முனங்கியவன் எதற்கும் இருக்கட்டும் என்று தன் கைபேசியில் அலாரம் வைத்து விட்டே படுக்கையில் சாய்ந்தான்.

காலை ஐந்து மணி…

சம்பூர்ணா குளித்து விட்டு வந்த பிறகும் உறங்கி கொண்டிருந்தான் ராகவ்.

தூங்கும் முன் அவன் செய்த அலுசாட்டியங்களை நினைத்துப் பார்த்த பூர்ணாவிற்குப் புன்னகை அரும்பியது.

அவள் குளியலறைக்குள் இருந்த போது அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்திற்கும் எழாமல் இன்னும் உறங்கி கொண்டிருந்த கணவனைத் தானே எழுப்பலாமா என்று யோசித்தாள்.

ஆனால் அவன் அயர்ந்து தூங்குவதைப் பார்த்து அந்த எண்ணத்தைக் கைவிட்டவள் தான் மட்டும் கீழே இறங்கிச் சென்றாள்.

பூஜை அறையில் தாய், தந்தையுடன் வழக்கம்போலச் சேர்ந்து கொண்டவள் தந்தை பூஜை செய்ய ஆரம்பிக்கவும் கண்களை இறுக மூடி அமைதியாக நின்றாள்.

சிறிது நேரம் கடந்த பிறகு தீபாதாரனையைத் தந்தை காட்ட, தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

அடுத்துத் தந்தையின் கைகள் தன் அருகில் செல்வதைப் பார்த்து யோசனையுடன் நிமிர்ந்து பார்த்தாள்.

ராகவ் தான் நின்றிருந்தான். தலையிலிருந்து ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது.

‘அதுக்குள்ள எழுந்து குளித்துவிட்டு வந்து விட்டானா?’ என்பதுபோல் ஆச்சரியமாகக் கணவனைப் பார்த்தாள்.

அவன் அவளைக் கண்டுகொள்ளாமல் தீபத்தை ஒற்றி எடுத்தவன் பயபக்தியாய் கண்களை மூடி நின்றான்.

அவன் கண் திறந்ததும் “காலையில் முதல் முறையா நம்ம வீட்டில் தம்பதிகளாக ரெண்டு பேரும் பூஜை அறைக்கு வந்ததில் ரொம்பச் சந்தோசமா இருக்கு மாப்பிள்ளை…” என்று திருப்தியுடன் சொன்னார் சடகோபன்.

“இனி நானும் இந்த வீட்டு பிள்ளை தானே மாமா. அதான் சரியா வந்துட்டேன்…” என்றான் மயக்கும் புன்னகையுடன்.

‘க்கும்… என்னை மயக்குறது பத்தாதுனு என் அப்பாவையும் மயக்கிருவான் போல…’ உள்ளுக்குள் நொடித்துக் கொண்டாள் பூர்ணா

சடகோபன் மயங்கித்தான் போனாரோ? மருமகனின் பேச்சில் நெகிழ்ந்து போய் நின்றிருந்தார்.

“என்ன மாப்பிள்ளை தலையைத் துவட்டாமயே வந்துட்டீங்களா? ஈரம் சொட்டுது பாருங்க. மாப்பிள்ளையைக் கவனிக்காம என்ன செய்ற பூர்ணா? போ… போய்த் துண்டு எடுத்து கொடு…” மருமகனை கவனித்துவிட்டு மகளை விரட்டினார் சகுந்தலா.

அன்னையின் சொல்லுக்குப் பணிந்து துவாலையை எடுக்க ஓடினாள் பூர்ணா.

“போங்க மாப்பிள்ளை. போய்த் தலையைத் துவட்டுங்க. பூர்ணா வந்ததும் அவகிட்ட காஃபி கொடுத்து அனுப்புறேன்…” என்றார் சகுந்தலா.

“சரி அத்தை…” என்றவன் மனைவியின் பின் சென்றான்.

மேலே அறைக்கு வந்ததும் மனைவி நீட்டிய துவாலையை வாங்கித் தலையைத் துவட்டியவனை ஆராய்ச்சி பார்வை பார்த்தாள் பூர்ணா.

அவளின் பார்வையைக் கண்டு ‘என்ன?’ என்பது போலப் புருவத்தை உயர்த்திக் கேட்டான்.

“எப்படிச் சரியான நேரத்துக்கு எழுந்தீங்க? நான் கீழே போகும் போது தூங்கிக்கிட்டு தானே இருந்தீங்க?” என்று கேட்டாள்.

“நீ குளிக்கப் போனதுமே நான் எழுந்துட்டேன். நீ குளித்துவிட்டு வரும்போது நான் சும்மா கண்ணை மூடி தான் படுத்திருந்தேன்…”

“ஓ! அலாரம் அடித்ததில் எழுந்தீங்களா?” என்று கேட்டாள்.

“இல்ல… அதுக்கு முன்னாடியே எழுந்துட்டேன்…”

“எப்படி அப்படி?” அத்தனை புலம்பல் புலம்பியவன் எப்படிச் சரியாக எழுந்தான் என்று அவளின் ஆச்சர்யம் கூடிக்கொண்டே போனது.

“ஒரு விஷயம் செய்தே ஆகணும்னு நம்ம மனசுக்குள்ள தொடர்ந்து நினைச்சுக்கிட்டே இருந்தா, அதை அந்த நேரத்தில் சரியா செய்வோம்னு கேள்விப்பட்டு இருக்கேன்.

நேத்துக் காலையில் இருந்து ஐஞ்சு மணிக்கு எழுந்திருக்கணும்னு எனக்குள் தொடர்ந்து நினைச்சுக்கிட்டே இருந்தேன். பரவாயில்லை அந்த டெக்னிக் நல்லாத்தான் வேலை செய்யுது. சரியா அஞ்சு மணிக்கு எழுந்துட்டேன்…” என்றான் பெருமையாக.

அவன் சொன்ன விஷயத்தைக் கேட்டவளுக்கு வியப்பாகவே இருந்தது‌.

“சரிதான்… நீங்க நினைச்ச மாதிரியே நல்ல மாப்பிள்ளைனு பெயர் வாங்கிட்டீங்க…” என்று சொன்னவள் “நான் போய்க் காஃபி வாங்கிட்டு வர்றேன்…” என்று விட்டு கீழே இறங்கிச் சென்றாள்.

அவள் சென்றதும் அறையை நோட்டமிட்ட ராகவ் அங்கிருந்த மேஜையின் அருகே சென்றான்.

அப்போது மேஜை டிராயரில் இருந்து ஒரு காகிதம் லேசாக வெளியே நீட்டி இருந்ததைப் பார்த்து என்ன பேப்பர் என்று தெரிந்து கொள்ள நன்றாக மேஜை டிராயரைத் திறந்து பார்த்தான்.

உள்ளே நிறையக் காகிதங்கள் சில அடிக்கி வைத்து இருந்ததைப் பார்த்து அதிலிருந்து காகிதம் ஒன்றை எடுத்துப் பார்த்தவனின் விழிகள் “அட…!” என ஆச்சரியத்துடன் விரிந்தன.