வஞ்சிக்கொடியின் வசீகரனே – 1

அத்தியாயம் – 1

அதிகாலை மணி ஐந்து என அந்த வீட்டுக் கடிகாரத்தில் இருந்த குயில் கூவி அழைக்க, அதனுடன் சேர்ந்து அந்த வீட்டின் பூஜை அறையிலும் மணியோசை சத்தமாக ஒலித்தது.

அந்த மணியைக் கையில் வைத்து ஆட்டிக் கொண்டே கண்களை மூடிக்கொண்டு வாயில் ஸ்லோகத்தைப் பக்தியுடன் முணுமுணுத்துக் கொண்டிருந்த அந்தப் பூஞ்சிலை அன்று தான் தன் இருபத்தி நான்காம் வயதில் அடியெடுத்து வைத்திருந்தாள்.

அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து சுத்தமாகக் குளித்து, புது உடையாகச் சந்தன நிறத்தில் சேலை அணிந்து, நெற்றியில் குங்குமத்தை பொட்டு போலச் சிறியதாக வைத்து, அதற்குக் கீழ் ஒரு சிறிய ஒட்டுப் பொட்டை வைத்து, தலைக்குக் குளித்திருந்ததால் முடியை தளர்வாக விட்டு கிளிப் போட்டு, பார்க்கவே பக்தி நிறைந்தவளாக மங்களகரமாக இருந்தாள்.

அவளின் எதிரே சூடத்தைச் சாமி படத்திற்குக் காட்டிவிட்டு அவளின் புறம் நீட்டிய அவளின் தந்தை சடகோபன் “தீபம் ஒத்திக்கோ சம்பூர்ணா. அப்படியே இன்னைக்கு போல எப்பவும் மங்களகரமா இருக்கணும்னு வேண்டிக்கமா. அதோட இன்னைக்கு நடக்கப் போகும் உன் விசேஷமும் நல்ல படியா நடக்கட்டும்னு வேண்டிக்கோ…” என்றார்.

“ஹ்ம்ம்… சரிபா…!” என்று நல்ல பிள்ளையாகத் தலையை ஆட்டிய சம்பூர்ணா அவர் சொன்னதை அனைத்தையும் செய்தாள். ஆனால் அது அவர் சொன்னதற்கு நேர்மாறாக இருந்ததை அவளும், அவள் வேண்டிய கடவுளும் மட்டுமே அறிந்த ஒன்று.

அடுத்து தன் மனைவியின் புறம் திரும்பியவர், “சகுந்தலா நீயும் எடுத்துக்க. அப்படியே நம்ம பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கணும்னு வேண்டிக்கிட்டு, உன் வேலையை ஆரம்பி. ஒன்பது மணிக்குள்ள எல்லா வேலைகளையும் முடிச்சுட்டு ரெடியா இரு…” என்றார்.

“சரிங்க…” என்ற சகுந்தலா கணவன் பேச்சுத் தட்டாத மனைவியாக அவர் சொன்னதை எல்லாம் செய்தார்.

சகுந்தலா அங்கிருந்து செல்லவும், மீண்டும் மகளின் புறம் திரும்பிய சடகோபன், “சம்பூர்ணா, நீ போய் ஏழு மணிவரை ரெஸ்ட் எடு. இன்னைக்கு ஒரு நாளைக்குத் தான் இந்த ரெஸ்ட். அதுவும் உன் முகம் இன்னைக்குப் பளிச்சுன்னு இருக்கணும்னு தான். நாளையில் இருந்து வழக்கம் போல உன் வேலைகளைச் செய்யணும்…” என்று சிறிது கண்டிப்புடன் சொன்னார்.

“சரிப்பா…” என்ற சம்பூர்ணா கையில் இருந்த மணியை அங்கே வைத்து விட்டு, எங்கே வேகமாக நடந்தால் பூமி அதிர்ந்து விடுமோ என்பது போல, ஒவ்வொரு அடியையும் மெல்ல எடுத்து வைத்து, மாடியில் இருந்த தன் அறைக்குச் சென்றாள்.

அறைக்குள் சென்று கதவை அடைத்துவிட்டு சுடிதாருக்கு மாறிவிட்டு அறைக்கதவை சிறிது திறந்து வைத்தாள்.

உடை மாற்றும் நேரம், தூங்கும் நேரம் தவிரத் தேவையில்லாமல் கதவை தாழ் போட கூடாது என்பது அந்த வீட்டில் எழுத படாத விதி.

பெற்றோர் கீழே தானே இருக்கின்றார்கள். அவர்களுக்குத் தெரியாது என்று நினைத்து கதவை பூட்ட முடியாது. ஏனெனில் சடகோபனோ, சகுந்தலாவோ மேலே வந்து அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று ஒரு முறையாவது வந்து பார்த்து விட்டுச் செல்வார்கள்.

இப்பொழுது, அது தான் சடகோபன் ஓய்வு எடுக்கச் சொன்னாரே? தூங்க கதவை சாற்றிவிடலாமே எனத் தோன்றுகிறதா?

ம்கூம்! அது தான் நடக்காது. சடகோபன் பகலில் எடுக்கச் சொல்லும் ஓய்வுக்கு அர்த்தமே வேறு.

என்ன அது? என்று தெரிந்து கொள்ள ஆர்வம் தலை தூக்குக்கின்றதா? இதோ அதைச் சம்பூர்ணாவின் அறையைப் பார்த்தே தெரிந்து கொள்வோம்.

அறைக்கதவை லேசாகத் திறந்து வைத்து விட்டு உள்ளே சென்று, அங்கிருந்த மேஜையின் முன் அமர்ந்த சம்பூர்ணா, ஒரு காகிதத்தையும், பென்சிலையும் எடுத்துக் கொண்டு மெதுவாக விரலை அசைத்து பென்சிலால் வரைய ஆரம்பித்தாள்.

நேரம் செல்ல, செல்ல அந்தக் காகிதம் முழுவதுமே அவளின் கைவண்ணத்தால் நிறைந்ததும், அடுத்தக் காகிதத்தைக் கையில் எடுத்துக் கொண்டிருந்த போது, அறைக்கு வெளியே நிழல் தெரிய, மெல்ல திரும்பி பார்த்தாள். அங்கே சடகோபன் நின்றிருந்தார். பின்பு சில நொடிகளிலேயே நகர்ந்து அங்கிருந்து சென்று விட்டார்.

அவர் சென்றதும் கையை நெட்டி முறித்து, ஒரு பெருமூச்சை வெளியிட்டவள், மீண்டும் வரைய ஆரம்பித்தாள்.

பின்பு அதையும் முடித்துவிட்டு, ஒரு காகிதத்தை மேஜையின் மீது வைத்தவள், இன்னொரு காகிதத்தை மேஜை ட்ராயரை திறந்து அதில் வைத்து மூடினாள். அதன் சாவியை எடுத்து பத்திரப்படுத்தி விட்டு அமைதியாக அமர்ந்தாள்.

சாவி வைத்து பூட்டி வைக்கும் அளவிற்கு அந்த ஓவியத்தில் அப்படி என்ன வரைந்திருப்பாள்? இதற்கான பதில் வேறு ஒருவர் அதைப் பார்க்கும் போது நாமும் பார்த்து தெரிந்து கொள்வோம்.

அடுத்து வீட்டு ஒலிபெருக்கியில் மெல்லிசை பாடல்களை ஒலிக்க விட்டு அதில் லயித்துக் கொண்டே, இருக்கையின் பின்னால் தலையைச் சாய்த்துக் கண்களை மூடி அமர்ந்தாள்.

இதோ இது தான் அந்த வீட்டில் ஓய்வு எடுக்கும் முறை. அதிக அலட்டல் இல்லாத வேலையாக இல்லாமல் ஓய்வாக அமர்ந்து, படம் வரைவதோ, புத்தகம் படிப்பதோ, பாட்டு கேட்பதோ செய்ய வேண்டும்.

அதைச் சடகோபன் தான் மகளுக்குப் பழக்கி விட்டார். சம்பூர்ணாவும் அதைக் கடை பிடித்தாள்.

எதுவரை? அவரின் கவனம் தன் மேல் இருக்கும் வரை!

ஆம்! இப்போது நீங்கள் பார்த்த சம்பூர்ணா வேறு. இனி மேல் நீங்கள் பார்க்க போகும் சம்பூர்ணா வேறு.

நேரம் சென்றது. வாசலில் “சார், பேப்பர்…” எனும் சத்தமும், அதைத் தொடர்ந்து சடகோபன் வெளியே சென்று பேப்பரை எடுத்துக் கொண்டு மீண்டும் கதவை மூடும் சத்தமும் கேட்ட நிமிடத்தில் இங்கே சம்பூர்ணா பரபரப்பானாள்.

இன்னும் அரைமணி நேரத்திற்குத் தந்தை செய்தித்தாளை விட்டு தலையை நிமிர்த்த மாட்டார். அன்னை சமையலறையை விட்டு வர மாட்டார் என நன்றாக அறிந்தவள் ஆகிற்றே!

அவ்வளவு நேரம் போட்டிருந்த அமைதியின் திருவுருவம் என்னும் முகமுடியை கழற்றினாள். வீட்டு ஒலிபெருக்கியில் ஒலித்த மெல்லிசையை இன்னும் சத்தத்தைச் சிறிது கூட்டினாள்.

தன் சல்வாரின் துப்பட்டாவை எடுத்து இடுப்பை சுற்றி இறுக கட்டினாள்.

தன் கைபேசியில் இயர் ஃபோனை மாட்டி அதைத் தன் காதில் பொருத்தினாள்.

கைபேசியில் தொடுதிரையைத் தேய்த்து சில நொடிகள் நோண்டியவள் ஒலிக்க விட்ட பாடலில் அவளின் முகம் இதுவரை இல்லாத அளவில் பிரகாசமாக ஒளிர்ந்தது.

காதில் கேட்ட பாடலுக்கு ஏற்ப அவளின் வாயும் முணுமுணுக்க ஆரம்பித்தது.

ஹே! என் கோலி சோடாவே
என் கறிக்கொழம்பே
உன் குட்டி பப்பி நான்
டேக் மீ… டேக் மீ…

ஹே! என் சிலுக்குச் சட்ட
நீ வெயிட்டு கட்ட
லவ் சொட்ட சொட்ட
டாக் மீ… டாக் மீ…

ஏய்! மை டியர் மச்சான்
நீ மனசு வெச்சா
நம்ம ஒரசிக்கலாம்
நெஞ்சு ஜிகு ஜிகு ஜா

எனப் பாடிக் கொண்டே மெல்ல உடலை வளைக்க ஆரம்பித்தாள். நொடிகள் ஓட, ஓட அவளின் நடனத்தின் வேகமும் கூடியது.

அந்தப் பாடலுக்கு ஆடிய சாய் பல்லவியே இந்தச் சம்பூர்ணாவின் நடனத்தைக் கண்டு வாயை பிளந்து பார்த்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

கதவின் மறைவில் நின்று பாடலுக்கு ஏற்ற வகையில் புதிய ஸ்டெப் போட்டுத் தனக்குத் தோன்றிய படியெல்லாம் உடலை வளைத்து ஆட ஆரம்பித்தாள்.

அவளின் நடனத்தை நடன இயக்குனர் பார்த்திருந்தால் “கிழி கிழினு கிழிச்சுட்ட…” என்று பாராட்டியிருப்பார்.

நடிகை எழுந்து வந்து “உங்க டான்ஸ் பார்த்து எனக்கும் உங்க கூட ஆட ஆசை வந்துடுச்சு. நாம இரண்டு பேரும் சேர்ந்து ஒரு ஸ்டெப் போடலாமா?” என்று கேட்டுப்பார்.

அப்படித்தான் இருந்தது அவளின் ஆட்டம்!

தொடர்ந்த நிமிடங்கள் அடுத்தடுத்து குத்துப் பாடல்களாகக் காதில் ஒலித்துக் கொண்டிருக்க, சம்பூர்ணாவின் உடலோ பாடலுக்கு ஏற்ப வளைந்து நெளிந்து ஆடிக்கொண்டிருந்தது.

‘இவளா சிறிது நேரத்திற்கு முன் பக்தி பழமாகக் காட்சி தந்தாள்?’ எனப் பார்ப்பவர்கள் அதிரும் வண்ணம் இருந்த அவளின் ஆட்டத்தைப் பார்த்திருந்தால் இந்நேரம் பெற்றவர்கள் மயக்கம் போட்டு விழுந்திருப்பார்கள்.

அரைமணி நேரம் தன் மனம் போன போக்கில் ஆடியவள், மணியைப் பார்த்துவிட்டு ஸ்விட்ச் போட்டது போல ஆட்டத்தை நிறுத்தினாள்.

காதில் மாட்டியிருந்த இயர் ஃபோனை வேகமாகக் கழற்றி போட்டாள். கைபேசியை அலமாரியில் வைத்தாள். துப்பட்டாவை கழற்றி அதற்குரிய வேலையைச் செய்யத் தன் இருபக்க தோளிலும் அழகாக மடித்துப் போட்டுக் கொண்டாள்.

நல்ல பிள்ளையாக இருக்கையில் வந்து அமர்ந்தவள் “அப்பாடா தினமும் காலையில் இப்படி ஒரு குத்தாட்டம் போட்டா தான் அன்னைக்கு நாளே நல்லா இருக்கு. அதை விட்டு மனுஷியை நிம்மதியா தூங்க விடாம நடுச்சாமம் நாலரை மணிக்கே எழுப்பி விட்டு, சாமியாரிணி வேஷம் போட வச்சு, தினமும் இப்படி என்னைச் சித்திரவதை பண்ற குடும்பத்தில் என்னைப் பிறக்க வச்சுட்டியே கடவுளே! இது உனக்கே நல்லா இருக்கா?

பாரு! நல்லா பாரு! என் கண்ணு எப்படிச் சிவந்திருக்கு பாரு! எல்லாம் எதனால? உன்னால் தான் கடவுளே! நீ தானே என்னை இந்த வீட்டில் பிறக்க வச்ச! உன்னால் தான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன்…” என ஆடி களைத்ததில் மூச்சு வாங்க கண்ணாடியைப் பார்த்துப் பேசினாள்.

‘அடியே! தினமும் கண்ணாடி முன்னாடி உன் கண்ணைக் காட்டி கடவுளை திட்டுறியே? அவர் என்ன அங்க உட்கார்ந்தா உன்னைப் பார்த்துக்கிட்டு இருக்கார்?’ மனம் அவளைக் கேலி செய்ய,

“கடவுள் தூணுலயும் இருப்பார். துரும்புலயும் இருப்பார்னு தானே சொல்லுவாங்க. துரும்புலேயே இருப்பவர் இவ்வளவு பெரிய கண்ணாடியில் இருக்க மாட்டாரா? இதுக்குள்ள உட்கார்ந்து நான் பேசுறதை எல்லாம் கேட்டுகிட்டு தான் இருப்பார்…” என உதட்டை சுழித்துக் காட்டியவள்,

“உனக்கு என் கஷ்டம் என்ன தெரியும்? மிங்கிள் ஆகி என் மிஸ்டர் கூட ஆட வேண்டிய வயசில், சிங்கிளா சிங்கி அடிக்கிறது போலத் தனியா ஆடிக்கிட்டு இருக்கேன்…” என்று பெருமூச்சு விட்டு மனதிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தாள்.

‘அதான் உன்னை மிங்கிளாக்க ஆளை ரெடி பண்ணியாச்சே… இன்னும் கொஞ்ச நாளில் நீயும் உன் மிஸ்டர் கூட டான்ஸ் ஆடலாம்…’

“ப்ச்ச்… அது தான் என் பயமே. வர போறவன் எப்படி ஆளுன்னு முழுசா தெரியலை. ஒருவேளை அவனும் எங்க அப்பா மாதிரி ஸ்ரிக்ட் ஆபிஸரா இருந்தா என்ன பண்ணுவேன்?” என்று கவலையாகக் கேட்டாள்.

‘என்ன செய்ய முடியும்? கல்யாணத்துக்கு முன்னாடி இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன் உன் அப்பாவுக்குத் தெரியாம ஆடியது போலக் கல்யாணத்துக்கு அப்புறமும் உன் மிஸ்டருக்கு தெரியாம ஆட வேண்டியது தான்…’ என்று சொல்லி கேலி செய்தது மனம்.

அந்தக் கேலியை பொறுக்க முடியாமல் “அஸ்… புஸ்…” என்று வேகமாக மூச்சை இழுத்து விட்டு காண்டானவள், “அப்படி மட்டும் ஒரு ஆள் வரட்டும். அவனை ஓட ஓட விரட்டுறேன். என் அப்பாவுக்குத் தான் நான் பயந்தவ. எனக்கு வர போறவனுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். அவன் முன்னாடியே ஆடி, நான் இப்படித் தான்டா ஆடுவேன்னு கெத்தா சொல்லுவேன்…” எனச் சிலிர்த்துக் கொண்டு தலையைச் சிலுப்பினாள்.

மேலும் ஏதோ கேலி செய்ய ஆரம்பித்த மனதை விரட்டி அடித்தவள் இப்போது மீண்டும் கண்ணாடியைப் பார்த்துக் கடவுளிடம் பேச ஆரம்பித்தாள்.

“இங்க பாருங்க கடவுளே! இப்படி மிலிட்டரி தர்பார் நடத்துற அப்பாவை எனக்குக் கொடுத்துட்டீங்கனு ஏற்கனவே நான் உங்க மேல செம்ம காண்டுல இருக்கேன். எனக்கு வர்ற புருஷனையும் என் அப்பா போல ஸ்ரிக்ட் ஆபிசரா கொடுத்துறாதீங்கன்னு உங்ககிட்ட ரொம்ப நாளா வேண்டிக்கிட்டு இருக்கேன். இன்னைக்குக் காலையில் கூட நான் உங்ககிட்ட அதைத்தான் கேட்டேன்.

பிறந்தநாள் அதுவுமா இந்தச் சின்னப் பிள்ளை ஆசைப்பட்டுக் கேட்டுருக்கேன். அதைத் தட்டாம கொடுக்க வேண்டியது உங்க பொறுப்பு. உங்க பொறுப்பைத் தட்டி கழிக்க மாட்டீங்கனு நினைக்கிறேன். இன்னைக்கு என்னைப் பொண்ணு பார்க்க வர போற மாப்பிள்ளையை நான் கேட்ட மாதிரி கொடுக்க வேண்டியது உங்க கடமை. உங்க கடமையை சரியா செய்வீங்க தானே?” எனக் கடவுளிடம் அடங்கிக் கேட்காமல் அதிகாரமாகக் கேட்டாள்.

‘உன்னைப் படைச்ச என்னையே நீ அதிகாரம் பண்றியா? இரு! இரு! உனக்குப் பிடிக்காத மாப்பிள்ளையைக் கொடுத்து உன்னை அவன் மூலமே ஆட்டி வைக்கிறேன்’ எனக் கடவுள் நினைத்துக் கொண்டாரோ?

பத்து மணியளவில் அவளைப் பெண் பார்க்க வந்தவனைப் பார்த்து “அடேய்…! வெள்ளாவியில் வெந்தவனே! நீயா மாப்பிள்ளை?” என அவனை அதிர்ந்து பார்த்தாள் சம்பூர்ணா.

என் ஆட்டம் ஆரம்பம் என்பது போல அவளுடன் விளையாட தயாரானார் கடவுள்!