முன்பே காணாதது ஏனடா(டி) – 48

மறுநாள் சிவா கூறியது போல் தன் தாய் தந்தையுடன் குமரன் வீட்டிற்கு வந்துவிட்டான்.

சுஜிக்கு தகவல் எதுவும் சொல்லவில்லை திடீரென புடவை மாற்றி தயாராக கூற காரணம் கேட்க பெண் பார்க்கும் படலம் பற்றி கூறினர்.

அவளும் சரியென கூறி புடவையை மாற்றினாள். எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சிவாவின் முகமும் நினைவில் வரவில்லை. அவன்மீது துளியும் அபிப்ராயம் இன்றி இருந்தாள்.

வெளியே  அவள் தன்னை கண்டதும் ஷாக் ஆவாள் என எதிர்பார்த்தான் சிவா. எதிர்பார்த்தது போல் அவனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தாள் ஆனால் அடுத்த நொடி அந்த உணர்வை மாற்றிக் கொண்டாள்.

சுஜியை பார்த்ததும் சிவாவின் பெற்றோருக்கு பிடித்துவிட்டது. மேற்கொண்டு திருமணத்தை பற்றி பேச முற்படும் பொழுது அவர்களின் சம்பாசனையை இடை நிறுத்தினாள் சுஜி.

“எனக்கு பெரியவங்க எடுக்குற முடிவுல இஷ்டம் தான்! ஆனால் உடனே கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்ல. அண்ணன் இப்போ பெரிய கம்பனிய ரன் பண்ணி வளர்ந்துட்டான். இப்போ பணத்துக்கு பிரச்சனை இல்லைனாலும் சின்ன வயசுல இருந்து என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என்னோட சம்பாத்திய பணத்துல செலவு பண்ணனும்னு ஆசை. அதனால நான் கொஞ்ச காலம் வேலைக்கு போக ஆசைபடுறேன். மாரி சுந்தரி பொண்ணா அவங்களுக்கு செலவு பண்ணனும்”

அவளது குரலில் ஒரு அழுத்தம் இருந்தது. சிவாவின் பெற்றோர் முகத்தில் புன்னகை ஒன்று அரும்பியது.

“எங்களுக்கு முழு சம்மதம் உடனே கல்யாணம் பண்ணப்போறது இல்லமா! அவனுக்கு அமெரிக்கா போக சான்ஸ் கெடச்சுருக்கு. போறதுக்கு முன்னாடி பேசி முடிக்கனும்னு அவசரபட்டான். அதனால தான் இப்போ பேச வந்தது. அவன் திரும்பி வந்த பிறகு தான் கல்யாணம் அதுவரைக்கும் நீ உன்னோட அப்பா அம்மாக்காக உழைக்கலாம். சந்தோஷமா!” என்றாள் சிவாவின் தாய்.

அவர்களது கூற்றில் சுஜியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. சிவாவை புடித்ததோ இல்லையோ என அவளுக்கு தெரியவில்லை ஆனால் அவனது தாயை பிடித்துவிட்டது.

“அப்புறம் என்ன பொண்ணு சிரிச்சுடுசே!” என சிவாவின் தந்தை கூறினார். மாரி சுந்தரி தம்பதியரும் முழு மனதுடன் அவர்களது சம்மந்தத்தை ஏற்றனர்.

சுந்தரி, “சுஜி போய் பூஜை அறையில இருந்து குங்குமம் எடுத்துட்டு வா”

தலை அசைத்தவள் எடுத்து வந்து சிவாவின் தாய்க்கு கொடுத்தாள். அவரும் குங்குமத்தை எடுத்து சுஜியின் நெற்றியில் இட்டார்.

சிவா,”அத்தை பொண்ணுக்கிட்ட தனியா பேசனும் அனுமதி கிடைக்குமா?”

சுந்தரி சின்னதாக சிரித்து சுஜியை பார்த்து தலை அசைத்தார். சுஜி அவரது தலை அசைப்பிற்கு பொருள் புரிந்து கொண்டு சிவாவை அழைத்துக் கொண்டு தோட்டத்தின் புறம் சென்றாள்.

செல்லும் இருவரையும் இல்லை இல்லை சிவாவை மட்டும் பார்த்த குமரன் ‘யார் சாமி இவன் எங்க இருந்து வந்தான்’ என்பது போல் பாவனை காட்டினான்.

சிவா, “சுஜி சொல்லு உனக்கு இப்போ கூட என்மேல எந்த எண்ணமும் வரலையா!”

அவனை நிமிர்ந்து பார்த்தவள் இல்லை என தலை ஆட்டினாள்.

வெளியே சிரித்தபடி இருந்தாலும் உள்ளுக்குள் உடைந்து போனான் சிவா.

“சுஜி இவ்வளவு நாளா விளையாட்டு தனமா எல்லாத்தையும் செய்துட்டேன். இப்போ கல்யாண பேச்சு வார்த்தை கூட வந்துருச்சு. வேற வழி இல்லாம அங்க ஒகே சொல்லிட்டு வந்தியா பிளீஸ் அப்படி இருந்தால் இதை இப்படியே நிறுத்திடலாம்”

“சிவா எப்படி உங்களுக்கு சொல்லி புரிய வைக்க. எனக்கு உங்க மேல எந்த அபிப்ராயமும் இல்லை தான் ஆனால் உங்களை வேண்டாம்னு சொல்லவும் எனக்கு எந்த காரணமும் இல்லை”

“புரியுதுங்க ஒரு விஷயம் மட்டும் கிளாரிஃபை பண்ணிடுங்க. எந்த விதத்திலும் உங்கள இந்த கல்யாணத்துக்கு நான் கட்டாயப்படுத்துற மாதிரி தோணுதா!”

“எனக்கு எது வேணும் வேணாம்னு என்னால முடிவு பண்ண முடியும் சிவா. என்னை கட்டாயபடுத்த முடியாது”

“அப்பாடி! இப்பதாங்க நிம்மதியா இருக்கு. சரி வாங்க போகலாம்”

இருவரும் வீட்டிற்குள் வந்ததும் சிறிது நேரத்தில் சிவாவின் குடும்பம் புறப்பட தயாரானது.

சுஜியின் பெற்றோர் வந்தர்வர்களை வாசல் வரை சென்று வழி அனுப்பினர். அப்பொழுது குமரனை தனியே அழைத்துச் சென்றான் சிவா.

“மிஸ்டர் குமரன் மையூக்கு என்னாச்சு. வேலையவிட்டு நின்னுட்டால் பேச கூடாதுனு இருக்கா என்ன? நான் அவள் மேல செம்ம கோபத்துல இருக்கேன். சொல்லிடுங்க அவக்கிட்ட. அவளா பேசுற வரைக்கும் நான் பேச மாட்டேனு”

“ஆ… அது… சொல்றேன் ஆனால் அவள் எப்போ வேலையவிட்டு நின்னா?”

குமரனை குழப்பமாக ஏறிட்டான் சிவா. தம்பதிகள் இடையே ஏதோ பூசல் என்பதை நொடியில் புரிந்து கொண்டான்.

அவள் கல்யாணம் நிச்சயம் ஆனதும் வேலையவிட்டு நின்னுட்டா!

குமரனுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. வேலையைவிட்டு நின்றுவிட்டவள் வேலையை காரணம்காட்டி தன்னைவிட்டு நீங்கியதன் காரணம் என்னவாக இருக்கும்.

அவளது முன்னாள் காதலா! அதனால் தான் விட்டுச்சென்றாளா! என பலவாறு யோசித்தான்.

குமரன் என சிவா அவனை உழுக்கிய பிறகு நிகழ்உலகம் வந்தான்.

“நான் போய்டுவரேன்”

“எப்போ அமெரிக்கா கிளம்புறீங்க சிவா?”

“இன்னும் இரண்டு நாள் கழிச்சு”

“சரி சிவா முடிஞ்சா உங்களை செண்டாஃப் பண்ண மைத்ரிய கூட்டிட்டு வரேன்”

சரி என்பதாக தலை அசைத்தவன் பெற்றோருடன் மதுரை நோக்கி பயணமானான்.

…..

அன்னபுறத்தில் திருவிழா ஆரம்பம் ஆகி இருந்தது. செழியனின் குடும்பம் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தது.

மகிழ்ச்சி இல்லாமல் எப்படி இருக்கும் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு குடும்பம் மொத்தமும் ஒற்றுமையாக கொண்டாடும் திருவிழா ஆயிற்றே.

பெண்கள் ஒருபுறம் பொங்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது தான் அந்த கூட்டத்தில் இணைந்தாள் தங்கம்.

‘செழியனை சிறுவயதில் இருந்து விரும்பியவள் ஆயிற்றே இவள்’ என நர்மதா அடுப்பில் ஒரு கண்ணும் அவள் மேல் ஒரு கண்ணுமாக இருந்தாள்.

“ஏய் மொழி வாழ்த்துக்கள்டி அம்மா ஆக போறதா கேள்விபட்டேன்”

“நன்றி தங்கம்”

“எல்லாருக்கும் உன்னை மாதிரி தாயாகுற பாக்கியம் அமைஞ்சுருமா! அடுத்தவங்களோட வாழ்க்கைய பறிச்ச சிலருக்கு இந்தமாதிரி கொடுப்பனை அமையாம இருக்குறத பார்க்கும் போது தான் கடவுள் இருக்காருனு நம்பிக்கை வருதுடி”  என்று கூறி அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.

அவள் சாடமாடையாக நர்மதாவை தான் பேசி செல்கிறாள் என அங்கிருப்பவர்கள் அனைவருக்கும் புரிந்தது.

நர்மதாவிற்கு நொடியில் கண்கள் கலங்கிவிட்டது.

தொடரும்…