முன்பே காணாதது ஏனடா(டி) – 46

ஒரு வாரம் கடந்த நிலையில் குமரனின் குடும்பம் மொத்தமும் திருச்சி வந்து சேர்ந்தனர்.

காவேரி பாயும் அழகிய நகரமான திருச்சி குமரனின் குடும்பத்தார் அனைவருக்கும் பிடித்து போனது.

திருமணத்திற்கு வந்திருந்த சுமியும் சென்னை சென்றுவிட்டாள். புறப்படும் முன் ஒருமுறை மைத்ரியிடம் அவள் எடுத்த முடிவை மாற்றுமாறு பரிந்துரைக்கவும் மறக்கவில்லை.

குமரன் புதுவீட்டிற்கு குடிபோகும் விஷயத்தை அனைவரிடமும் சொல்லிவிட்டான்.

சொந்த வீட்டில் வாழ போகிறோம் என்ற எண்ணமே அவர்களுக்கு தித்திப்பாக இருந்தது.

வீட்டின் வடிவமைப்பை கண்டு பிரம்மித்து போயினர் இளசுகள்.

இளம் தம்பதிகள் இருவரால் பூஜை அறையில் விளக்கு ஏற்றப்பட்டது. சுந்தரி தன் கரங்களால் பால் காய்ச்சி அனைவருக்கும் கொடுத்தார்.

புது வீட்டில் ஒரு வார காலம் அனைவருக்கும் நன்றாக சென்றது .

மதுரையில் உள்ள கிளை இதற்குமுன் பார்த்துக்கொண்ட நம்பகமான ஒருவரால் இயங்கியது. திருச்சி கிளையை குமரன் பார்த்துக் கொண்டான்.

ஒருநாள் இரவு அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்திக் கொண்டிருந்தனர்,

சுஜி, “அண்ணி திரும்ப எப்போ வருவீங்க?”

மைத்ரி, “ஒன் மன்த்குள்ள வர முயற்சி பண்றேன் சுஜி”

“ஒன் மன்த்தா ஐயோ அவ்வளவு நாள் நீங்க இல்லாம ரொம்ப எம்டியா பீல் ஆகும் அண்ணி. கொஞ்சம் சீக்கிரம் வர முயற்சி பண்ணுங்களேன் பிளீஸ்”

“சரி சுஜி உனக்காக முயற்சி பண்றேன்”

கார்த்தி, “திங்க்ஸ் எல்லாம் எடுத்து வச்சுடியா அண்ணி”

“ஆ….. பேக் பண்ணிட்டேன்”

குமரனுக்கு மற்றவர்கள் பேசுவது எதுவும் புரியவில்லை மொழி தெரியா படத்தை பார்ப்பது போல் அனைவர் முகத்தையும் மாறி மாறி பார்த்தான். இருவருக்கும் இடையே ஆன சண்டை இன்னும் தீரவில்லை. 

உணவை முடித்துவிட்டு அறையில் மனைவிக்காக காத்திருந்தான் குமரன். வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு அறைக்குள் வந்த மைத்ரி அமைதியாக படுத்துக்கொண்டாள்.

அவளையே பார்த்து இருந்த குமரன் “மைத்ரி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான். 

வெறுமனே கண்களை மூடி இருந்தவள் அவனை ஏறிட்டு பார்த்தாள் .

“நாளைக்கு எங்கையோ போறத வெளிய பேசிக்கிட்டிங்களே! எங்க போற?” 

“சென்னை” 

“எதுக்கு?”

“ஆபீஸ் விஷயமா”

“எவ்ளோ நாள் ஆகும் திரும்பி வர?”

“தெரியல”

“தெரியலான என்ன அர்த்தம்?”

” தெரியலனு அர்த்தம்”

மனைவியின் பதிலில் கோபம் வந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டவன் “உங்கிட்ட இன்னும் ஒரு விஷயம் பேசணும்” என்றான்.

“ம்” என்றவள் குப்புற படுத்துகொண்டாள் 

“மைத்ரி என்ன பார்த்து பதில் பேசு வெறும் ஒரு வார்த்தையில் பதில் சொல்ற!  ஏன் என்னோட முகத்தை பார்க்க மாட்டேங்குற. நான் கல்யாணத்துக்கு முன்ன என் வாழ்க்கையில இருந்த காதல் பத்தி உங்கிட்ட மறைச்சது தப்பு தான். சாரி என்ன பாரு” என அவள் முகம் நிமிர்த்தினான்

அவளின் கண்ணீர் கோடுகள் தாடையை தாண்டி பயணித்தது. பதறி போனான் குமரன்.

“மைத்து என்னாச்சு? ஏன் அழற? என்னடா” என பரிவாக கேட்க அவனது கேள்விக்கு பதில் அளிக்காமல் அவன் கைகளில் இருந்து விடுபடவே போராடினாள்.

அதில் சினம் எழுந்தவன் “இப்போ என்ன தான் பிரச்சனை உனக்கு. ஏன் என்னோட நிம்மதிய கெடுக்குற. நான் தான் மன்னிப்பு கேட்குறேனே! பிறகு என்ன?” என்று கத்தினான்.

ஆனால் அவளது கோபத்தை சரிகட்டுவதற்கு தேவை அவனது மன்னிப்பு அல்ல அவனது காதல் தான் என புரியாமல் போனான்.

“நிம்மதிய கெடுக்குறனா சரி அப்போ பிரிஞ்சுடலாம். தனியா நீங்க சந்தோஷமா இருங்க. அத்தை மாமா கட்டாயப்படுத்துனதால தான கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. ஒன்னும் பிரச்சினை இல்ல பிரிஞ்சுடலாம்” என்றாள் விரக்தியான குரலில்.

பிரிந்துவிடலாம் என்ற சொல்லில் கண் மண் தெரியாமல் கோபம் கொண்ட குமரன் அவளது கைகளை அழுத்தி தன் புறம் திருப்பினான்.

“ஆமா என் அப்பா அம்மா கேட்டதால தான் உன்ன கல்யாணம் பண்ண சம்மதிச்சேன். நீயும் தான என் அப்பா அம்மா கேட்டதுனால சம்மதிச்ச!  பெருசா பேசுற யாருக்கு தெரியும் கல்யாணத்துக்கு முன்னாடி உனக்கு காதல் இல்லாமலா இருக்கும்” என்றான் கடைசி வரிகளை மட்டும் முணுமுணுப்பாக

ஆனால் அவை மைத்ரியின் காதில் தெளிவாக கேட்டுவிட  “ஆமா கல்யாணத்துக்கு முன்ன ஒருத்தர காதலிச்சேன். அவர் மேல நான் வச்ச காதல் தான் இப்போ நான் அழுக காரணம் போதுமா!” என்றவள் தன் பயண பையில் இருந்த டைரியை தூக்கி அவன் புறம் வீசினாள்.

சிலையாக அமர்ந்து இருந்த குமரன் தன் மீது விழுந்த டைரியை கண் சிமிட்டாது பார்த்தான். அவன் காதுகளில் மைத்ரி சென்ன ‘ஆமா கல்யாணத்துக்கு முன்ன ஒருத்தர காதலிச்சேன்’ என்ற வார்த்தைகளே கேட்டுக் கொண்டிருந்தது.

மனைவியின் மனதில் தன்னை தவிர மற்றொருவன் இருக்கிறான் என தெரிந்த அவன் புழுவாய் துடித்தான்.

“இந்த டைரி முழுக்க என் மனசு முழுக்க என் அழகன் நிறஞ்சு இருக்காரு. அவரு மேல இருக்குற காதல் தான் உங்களோட இந்த செயல ஏத்துக்க மறுக்குது” என்றவள் படுக்கையில் விழுந்து கண் மூடினாள்.

மூடிய கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தோட அப்படியே உறங்கியும் போனாள்.

டைரியை வெறிக்க பார்த்து இருந்த குமரனால் அவள் கூறிய வார்த்தைகளை ஏற்க முடியவில்லை.

தனக்கு முன்னாள் காதல் இருந்தது அது தற்பொழுது இறந்த காலம் மறந்துவிடு மன்னித்து விடு என மனைவியிடம் சொல்லியவனால் மனைவிக்கு முன்னாள் காதல் இருப்பதை ஏற்கமுடியவில்லை.

டைரியை பார்க்க பார்க்க கோபமாக வந்தது. வேகமாக அறையைவிட்டு வெளியேறி மாடிக்கு சென்றான்.

சற்றுநேரம் நிலவை வெறித்தவன் மீண்டும் கீழிறங்கி வந்தான். மனைவியை முறைத்தபடி சோபாவில் படுத்தான். எவ்வளவு முயன்றும் உறக்கம் மட்டும் வரவே இல்லை.

நேரம் நடு இரவை தாண்டி சென்றிருக்க இதற்கா மேல் வீம்பு கூடாது என முடிவு செய்தவன் மைத்ரியின் அருகில் சென்று படுத்துக்கொண்டான்.

இல்லாளை அணைக்க இடையே கிடந்த டைரி தடையாக இருந்தது. வெறுப்போடு அதை எடுத்து அருகில் இருந்த மேசையை திறந்து அதனுள் வைத்தான்.

பின் மனைவியை அணைத்தபடி கண்களை மூடினான்.உறக்கம் தானாக வந்தது. நிம்மதி இருந்தால் தானே உறக்கம் வரும். அவனது நிம்மதி எல்லாம் தற்போது மனைவியின் அருகாமையே.

இரவில் தாமதமாக உறங்கியதால் காலை நேரம் சூரிய ஒளி முகத்தில்பட்டு கூசிய பிறகு எழுந்தான் குமரன்.

சுற்றும் முற்றும் பார்க்க அறையே வெறிச்சோடி இருந்தது. மனைவி இருப்பதற்கான அறிகுறியே இல்லை.

வெளியே வந்தான் மாரி கூடத்தில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரது அருகில் சென்று அமர்ந்தவன் “மைத்ரி” என அழைக்க மாரி மகனை திரும்பி பார்த்தார்.

சமையல் அறையில் இருந்து வெளியே வந்த சுந்தரி  “சென்னைக்கு போனவள இங்க இருந்து கூப்பிட்டா எப்படி வருவா?” என்றார்

சொல்லாமல் கொல்லாமல் சென்றுவிட்டாளா? என அதிர்ந்தான் குமரன்.

தொடரும்…