முன்பே காணாதது ஏனடா(டி) – 45

மஞ்சுளாவின் வாய்மொழியை கேட்ட நர்மதா பதில் ஏதும் கூறாமல் தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

அவளது தலை மறைந்ததும் தன் அண்ணியை கடிந்து கொண்டாள் மொழி.

“என்ன எண்ணி! எதுக்காக நர்மதா அண்ணிக்கிட்ட எல்லாத்தையும் சொன்னீங்க. அண்ணனே தன்னோட காதல் பத்தி எதுவும் சொல்லவே இல்ல, நாம சொன்னது சரியா இருக்குமா?”

“எல்லாம் சரியா வரும். நீயே யோசி மொழி, இன்னும் எத்தனை நாள் இவங்க இப்படி தனிதனியா இருப்பாங்க? பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு.”

“எனக்கும் கஷ்டமா தான் இருக்கு. சரி அண்ணி அங்க என் புருஷன் என்ன எதிர்பார்த்து காத்திருப்பாரு”.

“ம்…  அப்படி எல்லாம் இல்ல, செழியன் சுதாகரன் என் புருஷன் மூனு பேரும் வெளியே எங்கையோ போனாங்க.”

“சரி அண்ணி அவங்க எங்கையும் போயிட்டு போறாங்க. வாங்க, நாம உள்ள போகலாம்” என வேகமாக எழுந்து சென்றாள்.

அவள் பின்னோடு துரத்தி வந்த மஞ்சுளா “ஏய்…  மெதுவா நட மொழி! இந்த சமயம் இவ்வளவு வேகமா நடக்க கூடாது”

“சாரி அண்ணி ஏதோ நியாபகத்துல நடந்துட்டேன். இனி கவனமா இருக்கேன்”

“சரி வா…”

நர்மதா வெகு நேரமாக எதையோ தீவிரமாக யோசித்தாள். அடிக்கொரு முறை கணவன் அறைக்கு வருகிறானா என பார்த்தபடி அமர்ந்து இருந்தாள்.

குமரன் வீட்டில் அனைவரும் மொட்டை மாடியில் உறங்குவதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர்.

புதுமண தம்பதிகள் இருவருக்கும் தனிமை தர வேண்டி அனைவரும் மாடிக்கு வந்துவிட்டனர்.

மாரியும் கார்த்தியும் ஒருபுறமும் சுந்தரி சுஜி சுமி மூவரும் ஒரு புறமும் படுத்துக் கொண்டனர்.

அனைவரையும் சுற்றி கட்டபட்டிருந்தது கொசுவலை. மாறி மாறி கதை பேசியபடி உறங்கி போயினர்.

இங்கே அறைக்குள் குமரனும் மைத்ரியும் ஆளுக்கு ஒருபுறம் முகத்தை திருப்பியபடி கட்டிலில் அமர்ந்து இருந்தனர்.

நர்மதா, “நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலையே குமரன்”

“நான் இந்த கேள்விக்கான பதில் ஏற்கனவே சொல்லி இருக்கேன் மைத்ரி”

“ஓ…  அப்போ நீங்க உண்மை மட்டும் தான் பேசுறீங்க!” என அவள் நக்கலாக கேட்க அவள்புறம் திரும்பிய குமரன் “உனக்கு என்ன தெரியனும்? நேரடியா கேளு மைத்ரி. எதுக்கு மூனாவது ஆள்கிட்ட பேசுற மாதிரி பேசுற!?”

“நான் பேசுறது மூனாவது மனுசன்கிட்ட பேசுற மாதிரி இருக்குனா, நீங்க நடந்துக்குறது மட்டும் எப்படி இருக்கு?”

“எனக்கு புரியல மைத்ரி!”

“உங்களுக்கு கல்யாணத்துக்கு முன்ன காதல் இருக்கானு கேட்குறேன்?”

அவள் கேள்வியில் அவன் அதிர்ச்சி எல்லாம் ஆகவில்லை. அறைக்குள் நுழைந்ததும் அவனிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வியே அது தான்.

இப்பொழுதும் அதையே தான் கேட்கிறாள்.  இல்லை என்று மறுத்து பார்த்தான். அவள் மீண்டும் மீண்டும் கேட்க சற்று தயங்கியவன் ஆம் என ஒத்துக் கொண்டான்.

அவ்வளவு தான் அதன் பிறகு உன்னிடம் பேச எதுவும் இல்லை என்பது போல் அவனுக்கு முதுகு காண்பித்து படுத்துக் கொண்டாள்.

தலையை கைகளில் தாங்கிய குமரன் வெகுவாக மனம் உடைந்து போனான். இதற்கு முன்பெல்லாம் மைத்ரியின் இந்த கேள்விக்கு இல்லை என சொன்னதற்கு காரணம் இருந்தது.

தன்னுடையது ஒருதலை காதல். தன் காதல் தான் காதலித்த பெண்ணிற்கு கூட தெரியாதிருக்க அதை பற்றி பேசி என்ன ஆகிவிடப் போகிறது. அதையும் மீறி பேசினால் நர்மதாவிற்கு ஏதேனும் பிரச்சனை வந்துவிட்டால் என்ன செய்வது!” என எண்ணி அதை முற்றிலுமாக மறுத்தான்.

வெகுநேரமாக அமர்ந்து இருந்த குமரன் மெல்ல தன் மனையாளை திரும்பி பார்த்தான்.

திருமணம் ஆன முதல் நாளே தன் மணவாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட வேண்டுமா?  என வருந்தினான்.

பெருமூச்சுவிட்டபடியே மைத்ரியின் அருகே வந்து படுத்தவன் பின்புறமாக அவளை கட்டிக் கொண்டபடி படுத்துக்கொண்டான்.

அதை உணர்ந்தவள் அவன் கைகளை தட்டிவிட மீண்டும் அணைத்துக் கொண்டான். அடுத்த அரை மணி நேரமும் இதுவே தொடர சோர்ந்து போனவள் அமைதியாக தூங்கினாள். உதட்டின் உள் சிரித்தவன் தானும் உறங்க ஆரம்பித்தான்.

நர்மதா அறையில் இருந்த ஜன்னலின் வழியே வானத்தை வெறித்து பார்த்தபடி இருந்தாள்.

அறைக்குள் வந்த செழியன் அவள் அருகில் வந்து நின்றான். தன் கையில் வைத்திருந்த ரோஜாவை அவளது பின்னல்களுக்கு இடையே சூட்டினான்.

எப்பொழும் இப்படியே தங்களுக்கு சொந்தமான தோட்டத்தின் பக்கம் சென்றால் நர்மதாவிற்கு மலர்கள் பறித்து வருவது வழக்கம்.

அதை அவன் தான் சூட்ட வேண்டும். அப்பொழுது தான் மகிழ்ச்சி. அது அவளது  வழக்கம்.

செழியனின் செயலில் சுயம் மீண்டவள் மெல்ல அவன் புறம் திரும்பி மென்புன்னகை சிந்தினாள்.

“என்னாச்சு என் அம்முவுக்கு? ரொம்ப டல்லா தெரியுறாங்க!”

தலையை இடம் வலமாக ஆட்டியவள் அவனது மார் சாய்ந்து கொண்டாள்.

அவனது தலையை மெல்ல தடவிக்கொடுத்தவன் தன் கைகளில் அவளை ஏந்திக் கொண்டான்.

மெல்ல நடந்து சென்று பஞ்சனையில் அவளை அமர்த்தியவன் தானும் அருகில் அமர்ந்து சுவரில் சாய்ந்து கொண்டான். அவளது கைகளை பற்றி இழுத்து தன் மாரில் போட்டுத் தட்டிக் கொடுக்க மெல்ல கண் அயர்ந்தாள் நர்மதா.

மறுநாள் காலை

காபி கோபைகளுடன் மாடி ஏறினாள் மைத்ரி. அனைவரும் இளஞ்சூரியனின் சூட்டில் இதமாக படுத்துகிடந்தனர்.

அனைவரையும் எழுப்பி பருக காப்பியை கொடுத்தவள் தானும் ஒரு கோப்பை எடுத்து அருந்தினாள்.

மாடி ஏறி வந்த குமரன் தனக்கு ஒரு கோப்பை எடுக்க முனைய அனைத்தும் காலியாகி இருந்தது.

மனைவியவள் வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறாள் என புரிந்து கொண்டு அவள் அருகில் சென்று அவளது கோப்பையை கைபற்றினான்.

குடும்பத்தார் முன்னிலையில் தங்களது தகராறை வெளிபடுத்த விரும்பாத மைத்ரி அமைதியாகி போனாள்.

பிறகு அன்றைக்கு நடக்க இருக்கும் அலுவலக நண்பர்களுக்காக ரிசப்சன் ஏற்பாடாகியது.

சுமியை மற்றவர்களிடம் இருந்து தனியே அழைத்து வந்த மைத்ரி தானும் அவளுடன் ஒரு மாத காலம் சென்னை வருவதற்கு ஆக வேண்டிய காரியத்தை பார்க்க கூறினாள்.

“ஏன்டி இப்படி சொல்ற?  இப்போ தான் கல்யாணம் ஆகி இருக்கு. இந்த நேரம் போய் எல்லாரையும் பிரிஞ்சு வரேனு சொல்ற. பைத்தியமா நீ!?”

“ஏய் அப்படி இல்லடி. அவருக்கு வேலை அதிகம். எப்படியும் அவரு திருச்சி போயிடுவாரு. அதுவும் இல்லாம நான் அங்க வர வேண்டிய வேலை இருக்கு பிளீஸ்டி புரிஞ்சுகோடி”

“இப்போ தான் உன் காதல் கை சேர்ந்து இருக்கு இந்த நேரத்துல பிரயனும்னு சொல்ற எனக்கு ஒன்னும் புரியல. சரி நீ ஏதாவது காரணம் இல்லாம சொல்லமாட்ட நான் முயற்சி பண்றேன்.”

மைத்ரியின் அழகன் தான் குமரன் என்பதை அறிந்து இருந்தாள் சுமி. அதனால் தான் தற்போது மறுப்பு தெரிவிக்கிறாள். ஆனால் அவளது மறுப்பு மைத்ரியால் சிதைந்தது.

“ரொம்ப தாங்க்ஸ்டி” என்ற மைத்ரி அவளை கட்டிக் கொண்டாள்.

தொடரும்…