முன்பே காணாதது ஏனடா(டி) – 44

மறுநாள் காலை குமரன் குடும்பத்தார் அனைவரும் மதுரையில் அமைந்திருக்கும் பூங்கா முருகன் கோவிலில் கூடினர்.

அங்கே தான் குமரன் மைத்ரி திருமணம் நடைபெற உள்ளது.

மைத்ரியின் தோழி சுமியும் குமரனின் தோழி தாராவும் திருமணத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இவர்கள் மட்டும் என அளவான சொந்தங்களுடன் திருமணம் இனிதே நடைபெற்றது.

மைத்ரி குமரனின் கைகளால் திருமாங்கல்யம் பெற்று முகம் முழுவதும் புன்னகையுடன் நின்றிருந்தாள்.

சந்தோஷத்தில் மைத்ரியின் கண்கள் கலங்கிவிட்டது. குடும்பம் மொத்தமும் ஆனந்தத்தில் திளைத்தது.

தம்பதிகள் இருவரும் முருகனை மனதார வேண்டி கொண்டனர்.

“என்னோட அழகனே எனக்கு புருஷனா கொடுத்ததுக்கு நன்றி முருகா” என மைத்ரியும் “என்னையும் என் குடும்பததையும் நேசிக்குற பொண்ணை என் வாழ்க்கை துணையா கொடுத்ததுக்கு நன்றி முருகா” என குமரனும் மனதார அறுபடை வீடு கொண்ட வேலவனுக்கு நன்றி செலுத்தினர்.

அடுத்ததாக தம்பதிகள் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு சம்பிரதாயங்கள் அனைத்தும் முறையாக செய்யப்பட்டது.

மறுநாள் குமரனின் அலுவலக நண்பர்களுக்கும் மைத்ரியின் அலுவலக நண்பர்களுக்கும் பொதுவாக ரிசப்சன் வைப்பதாக முடிவாகியது.

சடங்குகள் அனைத்தும் முடிவு பெற குடும்பம் மொத்தமும் அக்காடா என கூடத்தில் அமர்ந்துவிட்டனர்.

சுஜி அனைவருக்கும் டீ போட்டு கொண்டு வருவதாக கூறி சமையல் அறை சென்றாள். அவள் பின்னோடு சென்ற கார்த்தியின் வேஷ்டயை பிடித்து இழுத்தாள் சுமி.

“ஐயையோ..” என அலறினான் கார்த்தி.

சுமி, “என்னாச்சுடா?”

“அக்கா பேயே! முதல் முறையா வேஷ்டி கட்டி இருக்கேன் இப்படி இழுக்குற கையோட வந்துட போகுது”

“சீ…  எருமை பயந்தே போனேன்டா நீ கத்துனது” என கூறி பெரிய மூச்சை இழுத்துவிட்டவள் “வரும்போது எனக்கு கொஞ்சம் தண்ணீ கொண்டு வா அதுக்கு தான் கூப்பிட்டேன்” என்றாள்.

அவளை பார்த்து உதட்டை சுழித்துவிட்டு அடுக்களை சென்றான் கார்த்தி.

பாலை அடுப்பில் வைத்துவிட்டு கண்ணீர்விட்டு கொண்டிருந்தாள் சுஜி. உள்ளே வந்த கார்த்தி உடன் பிறந்தவளின் கண்ணீரை கண்டு பதறி போனான்.

“ஏய் சுஜி என்னாச்சு எதுக்கு அழுவுற?”

“இல்லடா ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதான் அழுகை வருது.”

அவன் சிறு புன்னகையுடன் அவளது தலையில் தட்டினான்.

“பயந்தே போனேன் எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு”

இங்கே வெளியே சமயலறையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த சுமியை கண்ட மைத்ரி “அவன் இப்போதைக்கு வெளிய வரமாட்டான். பாசமலருக்கு உதவி பண்ணிக் கொடுத்துட்டு இருப்பான்.”

“அதுவேறையா நடக்க முடியல டையர்டா இருக்குனு இவங்கிட்ட தண்ணி கேட்டேன்ல என்ன சொல்லனும்” என புலம்பியபடி எழுந்து கொள்ள முனைய “இருடி நான் போய் கொண்டுவாரேன்” என கூறி அடுக்களை நோக்கி சென்றாள்.

செல்ஃபில் இருந்து தம்ளரை எடுத்து பிளேட்டில் அடுக்கியபடி இருந்த கார்த்திக்கிடம் பேசியபடியே டீயில் சிறிதளவு இஞ்சியை தட்டிப் போட்டாள் சுஜி.

“ரொம்ப பயந்து போய் இருந்தேன் கார்த்தி. அண்ணே அந்த பொண்ண நினைச்சுக்கிட்டே தன்னோட வாழ்க்கைய கெடுத்துக்குமோனு”

“ம்… நானும் பயந்தேன். அப்பாக்கு ஆக்சிடண்ட் ஆச்சுல அன்னைக்கு காலையில தான் அந்த பொண்ணுக்கிட்ட லவ் சொல்ல போறேனு எங்கிட்ட சொல்லிட்டு போச்சு. ஆனால் அதுக்குள்ள என்னென்னவோ ஆகிடுச்சு”

“சரிடா முடஞ்சு போனத பத்தி பேச வேண்டாம். மைத்ரி அண்ணிக்கு தெரிஞ்சா கஷ்டபடுவாங்க”

“ஆமாடி நான் ஒரு லூசு நீ கேட்டதும் எல்லாத்தையும் என்னை மறந்து உளறிட்டுட்டு இருக்கேன்” என கூறி தலையில் அடித்துக் கொண்டான்.

வாசலில் நின்று இருந்த மைத்ரி அனைத்தையும் கேட்டுவிட்டாள். அப்படியென்றால் குமரன் தன்னை கட்டாயத்தின் பெயரில் தான் மனம் முடித்துக் கொண்டாரா ஒவ்வொரு முறையும் அவர் தன்னைவிட்டு விலகி சென்றதற்கு இதுதான் காரணமா? என்று தானாகவே ஒன்றை புரிந்து கொண்டு கண்ணீருடன் அருகில் இருந்த அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.

கூடத்தை தாண்டி தான் அறை இருந்தது. பேச்சு சுவாரசியத்தில் யாரும் மைத்ரி சென்றதை கவனிக்கவில்லை.

அறைக்குள் சென்றவள் ஒரு மூச்சு அழுதுவிட்டு வெளியே வந்தாள். அனைவரின் முகத்தையும் பார்த்து தன் கஷ்டத்தை முகத்தில் தெரியாதவாறு மறைத்தபடி வந்து அமர்ந்தாள்.

அனைவரும் தேநீர் பருகி கொண்டிருந்தனர்.

சுமி, “ஏன்டி  தண்ணி வாங்கிட்டு வரேனு போன எங்கடி போன?”

“வாஷ் ரூம் போனேன்”

“ஓ..  சரி சரி” என்ற சுமி அமைதியாகிவிட்டாள்.

…….

அன்னபுறத்தில் சில தினங்களில் திருவிழா ஏற்பாடுகள் துவங்க இருந்தது.

செழியன் வீட்டில் அனைவரும் கூடத்தில் அமர்ந்து அதை பற்றி பேசியபடி ஹரியுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது உள்ளே நுழைந்தனர் சுதாகரன் மொழி தம்பதியினர்.

“அடடே வாங்க மாப்பிள்ளை” என சந்திரன் வேகமாக வரவேற்றார். என்னதான் ஒரே ஊரில் இருந்தாலும் மாப்பிள்ளைக்கு உண்டான மரியாதை மாமியார் வீட்டில் எப்பொழுதும் கிடைத்தபடி தான் இருக்கும்.

மற்றவர்களும் புன்னகையுடன் அவர்களை ஏறிட்டனர்.

பதில் புன்னகையை வழங்கியவாறு உள்ளே நுழைந்த இருவரும் மஞ்சுளாவின் அருகில் அமர்ந்து கொண்டனர்.

இருவரும் மாறி மாறி தங்களுக்குள் பார்த்துக் கொண்டு கண்களால் சண்டையிட்டு கொண்டிருந்தனர்.

அதனை கவனித்த ரத்தினம் “என்ன இரண்டு பேரு கண்ணாலே ஏதோ பேசிக்கிறீங்க. எங்ககிட்ட எதுவும் சொல்லனுமா? எதுக்கு தயக்கபடுறீங்க என்னனு சொல்லுங்க”

“அது…  வந்து பெரியப்பா” என இழுத்த மொழி “நம்ம வீட்டுக்கு ஹரி கூட விளையாட இன்னொரு பாப்பா வர போறாங்க”

அனைவரும் மகிழச்சியுடன் மொழி அருகில் வந்து வாழ்த்து கூறினர்.

மஞ்சுளா மொழியை கட்டி அணைத்து முத்தமிட்டவள் “இங்க பாரு மொழி உனக்கு பொண்ணு பிறந்த எம்புளளைக்கு தான் கட்டிக் கொடுக்கனும்”

அனைவரும் மஞ்சுவின் கூற்றில் புன்னகைக்க மகா மட்டும் “மஞ்சு” என அதட்டினாள்.

“ஒருமுறை நம்ம குடும்பம்பட்ட கஷ்டம் போதாதா புள்ளைங்க வளர்ந்து அவங்களுக்கு என்ன விருப்பமோ அதுபடியே நடந்துப்போம் புரியுதா?”

“சரி சின்ன அத்தை”

நர்மதா குழப்பத்துடன் மொழியிடம் அதுபற்றி கேட்டாள். பிறகு சொல்வதாக சைகை காட்டிய மொழி அதன் பின் அமைதியாகிவிட்டாள்.

குடும்பம் மொத்தமும் கோவில் சென்று வந்தனர். அனைவரும் அவரவர் அறைக்கு சென்று ஓய்வெடுக்க மொழியை அழைத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் உள்ள மரத்தடியில் அமர்ந்த நர்மதா, மகா சொன்ன விஷயத்தை பற்றி கேட்டாள்.

அண்ணன் வாயால் தெரிந்துகொண்டால் நன்றாக இருக்கும் என எண்ணிய மொழி அமைதிகாக்க அவர்களின் பின்னோடு வந்த மஞ்சு அனைத்தையும் நர்மதாவிடம் சொல்லிவிட்டாள்.

தொடரும்…