முன்பே காணாதது ஏனடா(டி) – 43

குமரன் திருச்சி சென்று இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டது.

புதிதாக தொடங்கிய கிளை நல்ல முறையில் இயங்கி பல புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெற்றன. தொழிலும் நன்றாக வளர்ச்சி அடைந்தது.

தினமும் குடும்பத்தாரிடம் போனில் பேசுவதும் வேலைகளை பார்ப்பதும் என தன் வாழ்வின் அடுத்த இலக்கை நோக்கி ஓடி கொண்டிருந்தான்.

புதிதாக தொடங்கபட்ட பெயிண்ட் கம்பெனிக்கான ஆட் சூட்டிங் அவனது கம்பெனியில் நடந்து கொண்டிருந்தது. அதற்கு அவனே நேரடியாக செல்ல வேண்டிய கட்டாயம்.

ஒரு சிறு பெண்ணை விளையாட்டாக துரத்திக் கொண்டு வீடு முழுவதும் சுற்றி வருவார் உறவினர் ஒருவர். அப்படி துரத்தி வரும்பொழுது வீட்டிற்கான பெயிண்டிங் ஒர்க்கை பார்த்து ஆச்சரியப்படுவது போல் உருவாக்கபட வேண்டும் இதுவே அந்த ஆட்.

பெயிண்டிங் ஓர்க் உடன் வீட்டின் கட்டமைப்பும் அழகாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என எண்ணியே ஒரு வீட்டை ஒப்பந்தம் செய்தான். அங்கு தான் தற்பொழுது ஏதோ பிரச்சனை.

குமரன் ஆட் சூட்டிங் நடக்கும் அந்த வீட்டின் உள் சென்றான். அவனின் உதவியாள் வேகமாக ஓடிவந்தான்.

“சார் திடீர்னு ஓனர் பர்மிஷன் கேன்சல் பண்ணனும்னு சொல்றாரு”

“ஏன் என்னாச்சு?”

“வீட்டை விற்க பேறதா சொன்னாரு”

“சரி நான் பார்த்துக்கிறேன்” என்றவன் உரிமையாளரை சந்திக்க சென்றான்.

பெரும்பாலும் ஆட் சூட்டிங் செட்டு போட்டு எடுக்கப்படும் இல்லையென்றால் சம்மந்தப்பட்ட நிறுவனத்தில் சூட்டிங் எடுப்பதற்கு ஒப்பந்தம் செய்வார்கள்.

சிலநேரம் இதுபோல் மூன்றாவது தரப்பு தளங்களையும் உபயோகிப்பர்.

கார்டனில் இருந்த உரிமையாளரின் அருகே சென்றான் குமரன்.

“சார்”

“அடடே குமரன் நானே உங்கள பார்க்க வரலாம்னு நினைச்சேன்”

“என்னாச்சு சார் நீங்க எல்லாரையும் பேக் பண்ண சொல்லிட்டதா சொன்னாங்க”

“குமரன் வெரி சாரி ஒப்பந்த தேதி முடிஞ்சது. ஏற்கனவே வீட்ட விக்குற பிளான்ல தான் இருந்தேன். நீங்க வந்து கேட்கவும் சரி பையர் கிடைக்குற வரைக்கும் ஆட் எடுத்துக்க சொல்லி கொடுத்தேன். இப்போ உங்களுக்கு கொடுத்த டைம் கூட முடிஞ்சதே குமரா.”

“சாரி சார் தப்பு எங்க பேர்ல தான் ஒப்பந்த நாள்விட அதிகம் டைம் எடுத்துக்கிட்டோம் இப்போ பினிஷிங் வோர்க் போய்டு இருக்கு ஒரு வாரம் டைம் கொடுத்தால் நல்லா இருக்கும்.”

“வெரி சாரி குமரன் என்னோட சூழ்நிலை அப்படி புரிஞ்சுக்கோங்க”

“ஓகே சார்” என்றவன் திரும்பி செல்லும் போது தான் ஒரு எண்ணம் உருவானது நாமே ஏன் இந்த வீட்டை வாங்க கூடாது என்று முதல் முறை இந்த வீட்டை பார்க்க வரும் போதே குமரனுக்கு வீடு பிடித்து போனது அதில் தன் குடும்பத்தாருடன் இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் இயல்பாகவே தோன்றியது புன்னகையுடன் திரும்பி “சார் நானே இந்த வீட்டை வாங்கிக்கலாமா!”

“நிச்சயமா. ரொம்ப சந்தோசம் குமரன்”

அதன் பிறகு அவனது ஆட் சூட்டிங் நல்லபடியாக நடக்க வீட்டிற்கான பத்திர பதிவும் மறுபுறம் நன்றாக நடந்தது . குடும்பத்தார் யாரிடமும் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனந்த அதிர்ச்சி கொடுக்கலாம் என எண்ணி இருந்தான் ஆனால் அவனது குடும்பத்தார் அவனுக்கு ஒரு அதிர்ச்சியை வைத்து இருந்தனர்.

குளித்து முடித்து கண்ணாடி முன் நின்று இருந்தான் செழியன் அவன் பின்னோடு வந்து கட்டி கொண்டாள் நர்மதா.

“ஏய் அழுக்கு பொண்ணு தள்ளி போ நான் குளிச்சுட்டேன்”

“அழுக்கு பொண்ணா ஹலோ நாங்க எல்லாம் அஞ்சு மணிக்கே குளிச்சுட்டோம்” 

“பாருடா என் பொண்டாட்டி இவ்ளோ சீக்கிரம் எழுந்துகிட்டாங்களா!”

“ரொம்ப கிண்டல் பண்ணாதீங்க” என சிணுங்கியவள் அவனது தோளை சுரண்டினாள் 

“என்ன அம்மு” என்றான் பரிவாக

“அந்த குட்டி ரூம்குள்ள என்ன இருக்கு?” என  அவர்களது அறையின் ஓரத்தில் இருந்த சிறிய அறை போன்ற அமைப்பை  கை நீட்டி சுட்டி காண்பித்தாள்.

“நம்ம கல்யாணம் ஆன நாள் இருந்து பாக்குறேன் அது பூட்டியே இருக்கு சொல்லுங்கபா. என்ன இருக்கு அதுக்குள்ள?” 

“அத சொல்லறத்துக்கு இன்னும்  சரியான நேரம் வரல அம்மு”

“போயா யோவ்” என்றவள் அறையை விட்டு வெளியேறி விட்டாள்.

ஒரு அழகிய மாலை நேரம் குமரன் தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான் வீட்டின் வாயிலில் கட்டப்பட்டு இருந்த தோரணம் அவனது புருவ மத்தியில் முடுச்சுகளை ஏற்படுத்தியது 

உள்ளே நுழைந்தவன் “அம்மா” என்று கத்தினான் 

“வா பா இந்த பூவ அங்க மேல கொஞ்சம் கட்டு”

“அம்மா இங்க என்ன நடக்குது?”

“அது எல்லாம் வந்த உடனே சொல்லணுமா நான் சொன்ன வேலைய முதல செய்” என்றவர் வெளியே சென்று விட்டார் 

என்ன ஏது என்று தெரியாவிடினும் தாயின் சொற்களை ஏற்று அவர் சொன்ன வேலையை செய்தான். 

சமையல் அறையில் இருந்து வந்த சுஜி “வா அண்ணா இந்தா டீ எடுத்துக்கோ நான் வெளிய வேலை பார்க்குறவங்களுக்கு போய் கொடுத்துட்டு வரேன்”

“ஏய் சுஜி இங்க என்ன நடக்குது?”

“கல்யாண ஏற்பாடு”

“கல்யாண ஏற்பாடா யாருக்கு?”

“உனக்கு தான் அண்ணா”

அறையில் இருந்து வெளியே வந்த கார்த்திக் சுஜியின் தலையில் கொட்டி “எருமை அதுக்குள்ள ஒளறிட்டையா” என்றவன் தமையனின் புறம் பார்த்தான்.

அதிர்ச்சி குறையாமல் அவர்களை பார்த்து நின்ற குமரன் தாயை திட்டுவதற்காக வெளியே வந்தான்.

“அம்மா எங்கிட்ட எதுவும் கேட்காம கல்யாண ஏற்பாடு பண்றீங்க ஏன் இவ்வளவு அவசரம்”

“அவசரமா டேய் உனக்கு வயசு ஏறிட்டே போகுதுடா. இப்போ கல்யாணம் பண்ணாம வேற எப்போ பண்ண போற”

“இல்லைமா அதுவந்து…” என்று அவன் தயங்கி தலை குனிய தனக்கு பின் கேட்ட ஹாரன் சவுண்டில் திரும்பினான்.

மாரி ஸ்கூட்டி ஓட்ட அவர் பின் அமர்ந்து வந்தாள் மைத்ரி. வண்டியை நிறுத்திவிட்டு இருவரும் இவர்கள் புறம் வந்தனர்.

தந்தையை ஆச்சரியமாக பார்த்த குமரன் “அப்பா உங்களால ஸ்டிக் இல்லாம நடக்க முடியுதா. யாருமே எங்கிட்ட சொல்லவே இல்ல”

“உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தான் சொல்லல” என்றான் கார்த்தி.

சுந்தரி, “அப்பா எழுந்து நடமாடின பிறகு தான் உன் கல்யாணம்னு நீ நினைச்சே அதுபடி தான் இப்பயும் நடக்குது சந்தோஷமா”

கண்ணீருடன் தந்தையை அனைத்துக் கொண்டான் குமரன்.

“சரி நடக்குறீங்க ஓகே. உடனே இரண்டு பேரும் வெளிய சுத்தனுமா?”

“டேய் மைத்ரிக்கு பார்லர் போகனும்னு சொன்னாள் அதான் போயிட்டு வந்தோம்”

அவன் மைத்ரியின் புறம் அவளை திட்டுவதற்காக திரும்ப அவனை பார்த்து ஒற்றை கண்ணை சிமிட்டினாள். சட்டென்று முகம் சிவக்க பார்வையை மாற்றிக் கொண்டான் குமரன்.

தொடரும்…