முன்பே காணாதது ஏனடா(டி) – 41

செழியன் நர்மதாவை உடன் அழைத்து செல்ல முடியாது என்று கூறவும் பெண்ணை பெற்றோர் கலக்கம் உற்றனர்.

“மாப்பிள்ளை என்னாச்சு அவள் எதாவது தப்பு பண்ணிடாளா”

“இல்லை அத்தை அது எனக்கு கொஞ்சம் வெளியூர் போற வேலை இருக்கு. அவளுக்கும் உங்கள மிஸ் பண்ற மாதிரி ஃபீல் இருக்கு. அதனால தான் சொன்னேன் வேற எதுவும் இல்ல”

“இல்ல மாப்பிள்ளை மறுவீட்டுக்கு வந்துட்டு நீங்க மட்டும் திரும்பி போனால் அக்கம் பக்கத்துல தப்பா பேசுவாங்க அதான்”

மாமானாரின் பதிலுக்கு மறுமொழி கூற வந்தவனை தடுத்தது நர்மதாவின் குரல்.

“அப்பா…  அதான் சொல்றாரே நான் இரண்டு நாள் இங்க இருக்கேன் அவர் ஊருக்கு புறப்படட்டும்” என்றவள் கீழே இருந்த அவனது பையை எடுத்து கையில் கொடுத்து போயிட்டு வாங்க என்பது போல் பார்த்தாள்.

ஆனால் அந்த பார்வையில் போயிட்டு வாங்க என்ற செய்தியை தாண்டி வேறு ஒன்றும் இருந்தது போல் தெரிந்தது. ஆனால் அவனால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை.

மாமனார் மாமியாரிடம் சொல்லிவிட்டு புறப்பட்டான். செல்லும் மருமகனையும் மகளையும் மாறி மாறி புரியாமல் பார்த்து நின்றனர் ராஜாராம் கண்மணி தம்பதியினர்.

வீட்டை திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றான் செழியன். அவன் வாசலை தாண்டியதும் அவன் பின் சென்றார் ராஜாராம்.

அவன் சென்ற திசையை வெறித்துப் பார்த்த நர்மதா தன் அறைக்கு சென்று அடைந்து கொண்டாள்.

குமரனின் வீட்டில் அனைவரும் கூடத்தில் கூடி இருந்தனர். குமரன் முகத்தை உம்மென்று அமர்ந்து இருந்தான்.

மாரி”சரிபா குமரா விடு கொஞ்ச நாள் தான சட்டுன்னு ஓடிடும்”

“இல்லப்பா இதுவரைக்கும் நான் உங்களவிட்டுட்டு இருந்ததே இல்ல. இப்போ திடீர்னு போகனும்னா எப்படி?”

சுஜி, “சின்ன புள்ளையா அண்ணா நீ இதுக்கு போய் கண் கலங்கிட்டு இருக்க. உன்னோட கனவு இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா நிறைவேறிட்டு இருக்கு”

கார்த்தி, “ஆமா அண்ணா நீ போய் அங்க இருக்குற வேலைய பாரு. நிரந்தரமா திருச்சியில இருக்க போறது இல்லையே. அந்த பிரான்ஞ்சுக்கு நல்ல ஆள் நியமிச்ச பிறகு திரும்ப வந்துட போற”

சுந்தரி, “டேய் குமரா பாரு சின்ன பிள்ளைங்கள் அதுங்களே எவ்வளவு பக்குவமா பேசுது நீ என்னடானா”

மாரி,”சரி சரி உடனே எம்புள்ளைய குறை சொல்லாத குமரா போ… போய் தேவையானது எல்லாம் பேக் பண்ணு”

“சரிபா..”  என்றவன் சோக முகத்துடன் அறைக்கு சென்று தனது துணிகளை எடுத்து வைக்க ஆரம்பித்தான்.

திருச்சியில் புதிதாக துவங்கப்பட்ட கிளையில் லீட் செய்வதற்கு ஆட்கள் கிடைக்காததால் குமரனே சென்றாக வேண்டிய சூழல். ஏற்கனவே அங்கே தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்தாயிற்று. உடனே புறப்பட வேண்டிய கட்டாயம்.

எப்படியும் இரண்டு மூன்று மாதங்களுக்கு அங்கிருந்து வர இயலாது. அதுவே அவனை வெகுவாக வாட்டியது. இதுநாள் வரை அவன் குடும்பத்தாரை விடுத்து இத்தனை நாட்கள் தூரம் இருந்தது இல்லை.

சுந்தரி குமரனுக்கான உணவை தயார் செய்தார். கார்த்தி தந்தையின் கால்களுக்கு ஜெல் தடவி விட்டுக் கொண்டிருந்தான்.

சுஜி தாயாருக்கு உதவிகள் செய்து கொண்டிருந்தாள். மைத்ரி குமரனின் அறைக்கு சென்றாள்.

அவன் அனைத்தையும் எடுத்து வைத்து வெளியே செல்ல முனைந்தான். மைத்ரியின் வருகையை கண்டவன் தலை குனிந்து நின்றுவிட்டான்.

அருகில் வந்தவள் எதுவும் பேசாமல் அவனை அணைத்துக் கொண்டாள். குமரனின் இதயம் படுவேகமாக துடிக்க கண்களை அழுந்த மூடித் திறந்தவன் இதற்கு மேல் தாங்காது என அவளை இறுக அணைத்து கொண்டான்.

எத்தனை நேரங்கள் அப்படியே இருந்தார்களோ தெரியாது. கார்த்திக் தந்தையின் அறையில் இருந்து இவ்விடம் வர இருவரது அணைத்தபடி இருந்த நிலையை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்தவன் மறுநிமிடம் புன்னகைத்தான்.

அண்ணன் அண்ணியை தொந்தரவு செய்யாமல் வெளியே சென்றுவிட்டான். அவனுக்கு இப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது. அண்ணனின் முதல் காதல் விவகாரம் பற்றி அறிந்தவன் ஆயிற்றே. அது தோல்வியை தழுவியதும் அண்ணன் வாழ்வை எண்ணி அனுதினமும் கலக்கம் அடைந்தான். ஆனால் இன்று அவன் கண்ட காட்சியில் அனைத்தும் சரி ஆனதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தான்.

குமரனும் மைத்ரியும் தங்களது இணையின் அருகாமையில் சுற்றம் மறந்தனர். சில நிமிடங்களுக்கு பிறகு மெல்ல ஒருவரை ஒருவர் விலகி நின்றனர்.

தரை பார்த்த படி இருந்த மைத்ரியின் முகத்தை தன் கரங்களால் தன்னை நோக்கி நிமிர்த்தினான்.

கண்ணீர் கன்னத்தை இறங்கியபடி இருந்தது. மெல்ல அவளது கண்ணீரை துடைத்தவன் அவளது கண்களின் மேல் தன் முதல் முத்தத்தை பதித்தான்.

அவனை பொறுத்தவரை அது முதல் முத்தம் தான். ஆனால் மைத்ரிக்கு மட்டுமே தெரியும் அவனது முதல் முத்தம் இது அல்ல ரயில்வே ஸ்டேஷனில் கொடுத்த கழுத்து முத்தமே முதல் என்று.

“அப்பா அம்மாவ பார்த்துக்கோ. தினமும் கால் பண்ணு மைத்ரி”

ம்…. என்றவள் அழுகை வெடிக்க மீண்டும் அவனை அணைத்துக் கொண்டாள்.

ஒருவழியாக அவளை சமாதானம் செய்தவன் வெளியே வந்தான். இந்த பிரிதல் தங்கள் இருவரது இடையில் இருந்த பூசலை சரிசெய்துவிட்டதே என எண்ணி ஒருவகையில் சந்தோஷம் அடைந்தான்.

உணவை உண்டு முடித்தவன் தாய் தந்தையரிடம் இருந்தும் சுஜி மைத்ரியிடம் இருந்தும் விடைபெற்றுக் கொண்டு தம்பியுடன் இரயில்வே ஸ்டேஷன் சென்றான்.

“ரொம்ப சந்தோஷம் அண்ணா”

“டேய் நான் போறது உனக்கு சந்தோஷமாவா இருக்கு.”

“அண்ணா நான் மைத்ரிய நீ ஏத்துக்கிட்டத பத்தி பேசுறேன். எங்க நீ அந்த பொண்ண நினச்சு வாழ்க்கைய பாழாக்கிடுவியோனு பயந்து போய் இருந்தேன்”

“ம்…  சரி எப்படி சொல்ற நான் மைத்ரிய ஏத்துக்கிட்டேனு”

“ம்…  அதான் ரூம் கதவை சாத்தாம ஷோ காமிச்சிங்களே” என அவனை நக்கல் செய்தான்.

தம்பியின் சீண்டலில் குமரனின் கன்னம் இரண்டும் சூடெறியது.

“அண்ணா வெட்கபடுறியா…  ஐயோ…. செம..”

“டேய் போடா” என அவனது தோள்பட்டையை பிடித்து தள்ளினான்.

பிறகு டிரெயின் புறப்படும் நேரம் வந்ததும் அங்கிருந்து புறப்பட்டான் கார்த்தி.

அன்னபுறம் வந்து சேர்ந்தான் செழியன். நர்மதாவை பற்றி கேட்ட குடும்பத்தாரிடம் ஏதேதோ காரணங்களை சொல்லி சமாளித்து தன் அறைக்குள் வந்து கதவடைத்துக் கொண்டான்.

தன் பேக்கில் இருந்து புறப்படும் போது எடுத்து வைத்த அவளின் சேலை ஒன்றை வெளியே எடுத்தான்.

அதை தலையணையின் மேல் வைத்தவன் அதன் மீதே தலை சாய்த்தான்.

தொடரும்…