முன்பே காணாதது ஏனடா(டி) – 40

வாசல் புறம் கேட்ட வண்டியின் சத்தத்தில் திரும்பினான் குமரன்.

மைத்ரி தான் வந்திருந்தாள். வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியவள் குனிந்து கண்ணாடியில் தன் முகத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டாள்.

தலையை இடமும் வலமுமாக ஆட்டியவள் முன் உச்சி கூந்தலை சரி செய்தாள். அவள் செய்வதை ரசித்து பார்த்துக் கொண்டிருந்த குமரனுக்கு தான் தங்கையிடம் பேச வந்த வார்த்தையே மறந்துவிட்டது.

அவளது பார்வை வீட்டின் புறம் திரும்பவும் உடனே தன் பார்வையை திருப்பிக் கொண்டான்.

ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக் கெண்டே வீட்டின் உள் வந்தவள் தன்னுடைய காலணியை கலட்டும் பொழுது தான்  தன்னவனின் காலணிகள் அங்கு இருப்பதை கண்டாள்.

வேகமாக தலையை மட்டும் ஏட்டி வெளியே பார்க்க. சுவரின் ஒரு ஓரத்தில் குமரனின் வண்டி நிற்பதை கவனித்தாள்.

தலையில் அடித்துக் கொண்டவள் உடையை நன்றாக சீர் செய்து கொண்டு மீண்டும் ஒருமுறை தலையை கையாலே நன்றாக வாரிக் கொண்டு வீட்டின் உள் நுழைந்தாள்.

அவளது செய்கை குமரனுக்கு சிரிப்பு தான் வந்தது. அதை வெளியில் காட்டாமல் மறைக்க பெரும் பாடுபட்டான்.

அவள் உள்ளே நுழைந்து அவனை கண்டுகொள்ளாமல் தன் அறையை நோக்கி சென்றாள்.

இவன் “மைத்ரி” என அழைக்க திரும்பியவள் கொடுத்த முகபாவம் அவனுக்கு மேலும் சிரிப்பை கொடுத்தது.

அவன் வந்ததே தெரியாதது போல் ஒரு பாவனையை கொடுத்தாள்.

“என்ன சீக்கிரமா வந்துட்டீங்க” என முறைப்புடன் கேட்டாள்.

‘ஓ…  கோபமா இருங்கங்களாம் ம்…  இருக்கட்டும இருக்கட்டும்’ என கூறிக்கொண்டது குமரனின் மனம்.

“உட்காரு கொஞ்சம் உங்கிட்ட பேசனும்”

“இரண்டு நிமிசம் போய் பிரஸ் ஆகிட்டு வரேன்” என்றவள் அவன் சரி என்று சொல்லும் முன்பே தன் அறைக்கு சென்று மறைந்தாள்.

அவள் சென்ற திசையை பார்த்து சிரித்துக் கொண்டான் குமரன்.

கையில் டீ டம்ளர்களை ஏந்தி வந்த சுஜி “என்ன அண்ணா தனியா சிரிக்குற” என அண்ணி சென்றிருக்கும் தங்களது அறையை பார்த்தபடி கேட்டாள்.

“அது…  ஒன்னுமில்லை”

“சரி இந்த டீ எடுத்துக்கோ”

அவன் ஒரு கிளாஸை எடுக்க பார்க்க “அண்ணா அதை எடுக்காத!”

“ஏன்?”

“அது காபி, அண்ணிக்கு”

“ம்..” என அவளை கேள்வியாக பார்க்க “அது அண்ணிக்கு காபி ரொம்ப புடிக்கும் அதான். அண்ணி வண்டியோட ஹாரன் சவுண்டு கேட்டுச்சு அதுனால அவங்களுக்கும் சேர்த்தே போட்டு கொண்டு வந்தேன்.”

இருவரும் தங்களுக்கான டீயை குடித்துக் கொண்டிருக்க அறையில் இருந்து வெளிவந்தாள் மைத்ரி.

சிறிதாக அலங்காரம் செய்து இருப்பாள் போல கலைந்திருந்த கேசமும் சோர்ந்து இருந்த முகமும் பளிச்சென இருந்தது.

ஏன் இப்பொழுது அலங்காரம் என கேட்டால் தனது வழக்கமான மாலை நேர செயல்பாடு என்பாள்

காபி குவளையை எடுத்துக் கொண்டே “என்ன பேசனும்” என கேட்டாள்.

தங்கையின் முன் சொல்ல தயக்கமாக இருந்தது. அண்ணன் தன்னை பார்ப்பதும் தயங்குவதுமாக இருப்பதை கண்ட சுஜி தான் இருவருக்கும் இடைஞ்சலாக இருக்கின்றோமோ என எண்ணி எழுந்து செல்ல முனைந்தாள்.

குமரன், “சுஜி எங்க போற உட்காரு”

“இல்ல அண்ணா நீங்க இரண்டு பேரும் என் முன்னாடி ஏதோ பேச தயங்குறீங்க அதான்”

“அப்படி எதுவும் இல்லை இரண்டு பேரும் பேசிட்டு இருங்க நான் இப்போ வந்துடுறேன்”  என்று கூறி தன் தந்தை இருக்கும் அறைக்கு விரைந்தான். அறையில் கண்கள் மூடி படுத்து இருந்தார் மாரி.

“அப்பா… அப்பா…” என மென்மையான குரலில் அவரை எழுப்ப கண்களை திறந்து மகனை பார்த்தார்.

“என்ன குமரா சீக்கிரம் வந்துட்டியா!”

“ம்..  கால் இப்பவும் வலிக்குதாபா… “

“இல்லையா வலி எதுவும் இல்லை. டாக்டர் தான் ரெஸ்ட் அது இதுனு சொல்லி என்ன நகர கூடாதுனு சொல்லிட்டாரு. ஒரே இடத்திலேயே இருக்க அலுப்பா இருக்கு சரி தூங்கலாம்னு கண்ணை மூடி படுத்து இருந்தேன் எப்ப தூங்கினேன்னு தெரியல”

“சரிபா. அப்.. பா அ.. து உங்ககிட்ட ஒரு விஷயம் பேசனும்”

“என்ன விஷயம் குமரா”

“அப்பா..  இன்னைக்கு கோவில் போனப்போ…” என்று இழுத்தவன் சிவா தன்னை பார்த்து பேசியதை பற்றி கூறினான்.

அவன் சொன்னதை அமைதியாக கேட்டவர்” சரிபா அந்த பையன பத்தி விசாரி. உடனே இதைபத்தி சுஜிக்கிட்ட பேச வேண்டாம் கொஞ்சம் பொறுமையா இருப்போம்”

“சரி.. பா.. நீங்க தூங்குங்க.. ” என்றவன் வெளியே வந்து இருவருக்கும் இடையில் அமர்ந்தான்.

அதன்பின் பொதுவான விஷயங்கள் பேச நேரம் கடந்தது. மைத்ரி தான் தன்னிடம் என்ன பேச எண்ணினார் என யோசித்து குழம்பினாள்.

………

அதிகாலை நேரம் எழுந்து தன் அறையில் இருந்து வெளியே வந்தான் செழியன்.

சமையல் அறையில் சத்தம் கேட்டது. அத்தை சமைக்கிறார் போலும் என எண்ணியவன் வெளியே செல்ல துளசி கோலம் இட்டுக் கொண்டிருந்தாள்.

“அட.. அட..  துளசி இவ்வளவு நல்ல கோலம் போடத் தெரியுமா!”

கோலத்தில் இருந்து கவனம் கலைந்தவள் நிமிர்ந்து அவன் முகம் நோக்கினாள்.

“தாங்க்ஸ் மாமா. என்ன சீக்கிரம் எழுந்துட்டீங்க?”

“தூக்கம் வரல துளசி. ஊர்ல இந்த டைம் வயலுக்கு போயிடுவேன்”

“பழக்கம் டக்குனு மாறாதுல மாமா. ஆனாலும் நீங்க இப்போ விருந்துக்கு வந்து இருக்கீங்க நல்ல தூங்கி எழுந்து ரெஸ்ட் எடுத்து ராஜா மாதிரி இருக்கனும்”

“அட… போமா துளசி. எனக்கு தூக்கமே வரல. ஆமாம் எங்க உனக்கு முன்ன பிறந்த கவிதாவ காணோம்”

“அவள் எழுந்துக்க நேரம் ஆகும் மாமா சரி வாங்க உள்ள போலாம்” என அவனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

சுஜியிடம் இனிமேல் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன் என கூறிய சிவா அதன் பிறகு அவளை சந்திக்கவே இல்லை. இதோ நான்கு நாட்கள் கடந்துவிட்டது தான் சொன்ன சொல்லை காப்பாற்றினான்.

சுஜிக்கும் நிம்மதியாக இருந்தது. தன்னால் தன் குடும்பத்தில் பிரச்சனை உண்டாகிவிடுமோ என பயந்தவள் இப்பொழுது தான் சுதந்திர காற்றை சுவாசித்த சுகம் கண்டாள்.

வீட்டிற்கு சோகமாக திரும்பிய குமரன் சொன்ன செய்தியில் குடும்பம் மொத்தமும் அதிர்ச்சி அடைந்தனர். அனைவரின் முகத்திலும் வருத்தத்தின் சாயல் ஒட்டிக்கொண்டது.

இங்கே செழியனும் ஊருக்கு புறப்பட கிளம்பினான்.

அத்தை மாமாவின் முன் சென்று நின்ற செழியன் நர்மதாவை என்னால ஊருக்கு அழைத்துச் செல்ல முடியாது அவள் உங்களுடன் இங்கே இருக்கட்டும் என்றான்.

மறுவீட்டு விருந்துக்கு வந்த மாப்பிள்ளை மகளை அழைத்துச் செல்ல முடியாது என்று கூறவும் பெற்றவர்கள் இருவரும் கலவரத்துடன் மருமகன் முகத்தை பார்த்தனர்.

தொடரும்…