முன்பே காணாதது ஏனடா(டி) – 33

அலுவலகம் வந்த குமரனுக்கு இன்னமும் கோபம் குறையவில்லை. சிடுசிடுவென அமர்ந்து இருந்தான்.

அவன் இதுவரை இதுபோல் இருந்தது இல்லை. எப்பொழுதும் அலுவல் வேலையில் சிரித்த முகமாக தான் வலம் வருவான்.

தாராவிடம் இருந்து அலுவலகம் இவன் பெயருக்கு மாறிவிட்டது. சிலர் இதனை எண்ணி மகிழ்ச்சியுற்றாளும் சிலர் பொறாமைபடுவதும் மனதின் உள் பொறுமி கொள்வதுமாக இருந்தார்.

அதையும் மனதோடு தான் செய்ய முடியும் அதிகபட்சம் ஒரு குழுவை உருவாக்கி தங்களுக்குள் புறனி பேசமுடியும். இதனைவிடுத்து வேறு என்ன அவர்களால் முடியும்?

குமரனுக்கு இவற்றை எல்லாம் கவனித்தாலும்  கருத்தில் கொள்வதில்லை. அனைவரிடமும் சிரித்த முகமாக கடந்துவிடுவான்.

அப்படிபட்டவன் இன்று கடுகடுவென இருக்க அனைவர் மனதிலும் கிளிபிடித்தது.

‘மையூவா… மையூ…  அதான் மைத்ரினு பேரு வச்சு இருக்குல அப்புறம் என்ன மையூயூயூ…..’ என்று சிவாவை எண்ணி கடுப்பானான்.

அவனுக்கு எதற்காக தான் கோபம் கொள்கிறோம் என்றே தெரியவில்லை. அன்று முழுவதும் அனைவரிடமும் சிடுசிடுவென பேசினான்.

மாலை அவளை அழைப்பதற்காக அவளது அலுவலகம் நோக்கி சென்றான். வாசலில் அவன் அவளுக்காக காத்திருக்க வெகுநேரம் சென்றே வந்தாள்.

மாலை நேரம் ஆகிவிட்டதால் காலையில் சீவிய பின்னல் சிறிதாக கலைந்தும் சூடிய மல்லிகை வாடியும் இருந்தது. ஆனால் அதுவும் அவளுக்கு அழகு தான்.  தன்னை மறந்து ரசித்தான்.

அவள் இவன் அருகில் நெருங்கி வந்து “சாரிங்க…  கொஞ்சம் லேட்டாகிருச்சு…”

அவளது குரலில் நிகழ் உலகிற்கு மீண்டவன் “பரவா இல்ல” என்றான்.

அவனது இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்ததும் வண்டியை ஸ்டார்ட் செய்ய மீண்டும் அவனை கோபத்தின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது அக்குரல்

“மையூ…’ என்று கத்தியபடி ஓடிவந்தான் சிவா. “மையூ…  இந்தா உன்னோட லன்ச் பாக்ஸ். ஃபுட் ரொம்ப நல்லா இருந்தது சொல்லிடு… “

“ம்… ” என அவனை நக்கலாக பார்த்தவள் “சொல்லிடுறேன்……”

“ஏய்..  அது… வந்து..”

‘டேய் ஓவரா வலியாத! புரியுது நாளைக்கு உனக்கும் சேர்த்தே கொண்டுவரேன்.”

“மையூனா மையூ தான்” என அவளது கன்னம் பற்றி ஆட்டியவன் “தாங்கஸ்” என கூறி ஓடிவிட்டான்.

இன்றைய நாளில் அவள் சிவாவுடன் பழகியதில் குறுகிய மணி நேரத்திலே நெருக்கம் ஆகிவிட்டனர். அவனை உடன்பிறவா சகோதரனாக எண்ண ஆரம்பித்துவிட்டாள்.

அவன் அங்கிருந்து சென்றதும் குமரனை நோக்கி “போலாம்” என்றாள். கடுப்பில் இருந்தவன் வண்டியை வேகமாக இயக்கினான்.

சேலை அணிந்த அவளால் அவன் வேகத்தை சமாளித்து ஒருபுறம் அமர்ந்து வரமுடியவில்லை. பயம் கொண்டவள் வண்டியில் இருந்த கைகளை எடுத்து அவனது தோள்களை அழுந்த பற்றிக் கொண்டாள்.

“ஏங்க கொஞ்சம் மெதுவா போங்க எதுக்கு இவ்வளவு அவசரம்.”

சைட் மிரரில் அவளது பயந்த முகத்தை பார்த்தவன் வேகத்தை குறைத்தான். அப்பொழுது தான் ஆசுவாசம் அடைந்தாள். மெல்ல அவனை பற்றி இருந்த கைகளை விலக்கி கொண்டாள்.

இருவரும் வீடு வந்து சேர்ந்துவிட்டனர். மைத்ரி வேகமாக உள்ளே சென்றுவிட குமரன் பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே வந்தான்.

அறைக்கு சென்றவன் தொடர்ந்து இருந்த அலுவலக வேலையை பார்க்க ஆரம்பித்தான். கார்த்தி தரையில் அமர்ந்து புத்தகங்களை விரித்துவைத்து எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

அவன் என்ன யோசித்து கொண்டிருப்பான்? நமக்கு எதற்கு அவையெல்லாம். அவனே சரியான புத்தக புழு அவன் மனதை நாம் ஏன் கிளர  ஆனால் அவன் மனதையும் கிளர ஒருத்தி இருக்கிறாள். அவள் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்.

இரவு உணவிற்காக அனைவரும் அமர்ந்திருந்தனர். வழக்கம் போல் பதார்த்தங்களை மைத்ரியும் சுஜியும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.

அனைவரது தட்டிலும் உணவு பரிமாறபடவும் மைத்ரியும் அமர்ந்துவிட்டாள். சுஜி இன்னும் ஒரு செம்பில் தண்ணீர் எடுத்து வர அடுக்களைக்கு சென்றாள்.

அப்பொழுது அறையில் இருந்த மைத்ரியின் போன் ஒலிக்க மைத்ரி உணவில் கைவைத்துவிட்டதால் சுஜி சென்று எடுத்தாள்.

“யாரு சுஜி…. “

“அண்ணி பேரு சிவானு போட்டு இருக்கு…”

உடனே அவள் குமரனின் முகம் பார்க்க அவன் முகம் கோபத்தில் சிவந்தது.

“அப்புறமா பேசுறேனு சொல்லி கட் பண்ணிரு சுஜி..”

“சரி அண்ணி” என்றவள் அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

“ஹலோ…  மையூ காலையில எத்தனை மணிக்கு வரனும்”

“அது…  அண்ணி அப்புறம் பேசுறேனு சொன்னாங்க”

“ஓ…  ஒகே ஒகே நீங்க?”

“நான் அவங்க நாத்தனார்”

“சரிங்க நான் அப்புறமா டெக்ஸ் பண்ணி கேட்டுக்கிறேன்” என்று உரைத்து வைத்துவிட்டான்.

அவள் தொடர்ந்து ஒரு வாரம் குமரனுடன் வரவும் அலுவலகத்தில் அனைவரும் கேள்வி எழுப்பினர்.

அவள் தனது வருங்கால கணவர் என சொல்லி இருந்தாள். சிவாவுக்கும் அது தெரியும் என்பதால் நாத்தனார் என்று கூறியதற்கு அதிர்ச்சியோ யோசனையோ இல்லாமல் அழைப்பை துண்டித்து கொண்டான். 

இவளும் வெளியே வந்து அனைவருடன் அமர்ந்துவிட்டாள்.

குமரனது பார்வை அடிக்கொரு முறை மைத்ரியை தொட்டுச் சென்றது.

மதிய நேரம் மீன் எடுத்து இருந்தார் சுந்தரி. மாரிக்கும் குமரனுக்கும் மீன் என்றால் கொள்ளை பிரியம். அதனால் மீன் எடுத்து சமைத்து இருந்தார்.

மாரி இப்பொழுது எழுந்து நடமாட ஆரம்பித்து இருந்தார். அனைவருடன் அவரும் ஹாலிற்கு வந்து இப்பொழுதெல்லாம் உண்ண ஆரம்பித்தார்.

மாரி மீன் முட்களை நீக்கி குமரன் தட்டில் வைத்தார். குமரனுக்கு மீன் பிடிக்கும் என்பதால் எப்பொழுதும் அவர் தன் கையால் கொடுத்து பழகிவிட்டார்.

மற்றவர்தளுக்கு இது பழக்கம் என்பதால் தங்களது உணவில் கவனம் ஆனார்கள்.  ஆனால் மைத்ரிக்கு மாரியின் அன்பை குமரன் பங்கு போடுவதில் சிறிதளவு கோபம் வந்தது. இதில் வன்மம் எல்லாம் இல்லை. ஆரோக்கியமான கோபமே.

“மாமா…  எனக்கும் மீன் பிடிக்கும். அவருக்கு மட்டும் கொடுக்குறீங்க” என கோபித்து கொண்டவள் குமரனின் தட்டில் இருந்த துண்டுகளை எடுத்து உண்டாள்.

குமரனுக்கு ஏனோ அதுவரை இருந்த கோபம் மட்டுபட்டது. ஆனால் மறுநாள் காலை மைத்ரியின் செயல் அவள் மீது மேலும் கோபத்தை தூண்டியது.

தொடரும்…