முன்பே காணாதது ஏனடா(டி) – 29

நர்மதா அறைக்குள் நுழைந்தவுடன் ஆவலாக எழுந்து அமர்ந்தான் செழியன். அவளை அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தவன் தானும் அருகில் அமர்ந்து கொண்டான்.

நர்மதா என அவளது கைகளை பற்ற நடுநடுங்கி போனாள். பயத்தில் உள்ளங்கை முழுவதும் வேர்த்துக் கொட்டியது. உதடு தந்தியடிக்க அவனை மிரட்சியுடன் பார்த்தாள்.

அவளது பயம் அவனை கொல்லாமல் கொன்றது.

“ஏய்…  நர்மதா பயப்படாத. ஒன்னும் இல்ல. எங்கிட்ட என்ன பயம்” என அவன் அருகில் வர இவள் மிரண்டு பின் வாங்கினாள்.

“என்னாச்சு நர்மதா?” என அவளது கையை பற்ற முயன்றவனின் கைகளை தட்டிவிட்டவள் மயங்கி சரிந்தாள்.

அவள் மயக்கம் அடைந்ததும் வெகுவாக பயந்து போனான். வெளியே சென்று உதவிக்கு ஆட்களை கூட தற்பொழுது அழைத்து வர முடியாது என்பதை புரிந்துக் கொண்டு அவளது மயக்கம் தெளிய வைப்பதற்கான வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

அறையின் மேசையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் ஜக்கை எடுத்தான். அதில் இருந்த நீரை அவள் முகத்தில் தெளிக்க மெல்ல கருவிழி அசைத்து எழுந்தவள் மீண்டும் பயத்தில் பின்னோடு நகர்ந்தாள்.

இயற்கையில் நர்மதா இப்படி குணம் உடையவள் அல்ல. ஏன் குமரனுக்கு நர்மதாவின் மீது காதல் வந்தது கூட அவளது வீரத்தில் தானே.

ஆனால் தற்போது என்ன ஆனது அவளுக்கு என்று அவளுக்கே தெரியாத போது நாம் எப்படி புரிந்து கொள்ள முடியும்.

செழியன் தான் மிகவும் நொறுங்கி போனான். ஒரு பெண்ணிற்கு ஒரு ஆணிடம் வர வேண்டிய முதல் உணர்வு பாதுகாப்பு. ஆனால் அவள் தன்னிடம் அதை உணராமல் போனாளே என்று வருத்தம் கொண்டான்.

அவளது பயந்த விழிகளை பார்த்து கொண்டே நர்மதா பயப்படாத என்று இரண்டு வார்த்தை சொல்வதற்குள் தொண்டையில் முள் சிக்கியது போல் வலித்தது.

அவள் ஓரளவு சூழ்நிலையை புரிந்து கொண்டு இயல்பு நிலைக்கு திரும்பிய பின் அவனை பார்த்து சாரி என்றாள்.

“ஏய்…  பரவா இல்ல. நீ உன்னோட வீட்டுல எப்படி இருந்தியோ அது போலவே இரு.  பயப்படாம தூங்கு நான் இங்க கீழ படுத்துக்கிறேன். “

“மன்னிச்சுருங்க…  நான் அ.. து… “

“இல்ல நர்மதா நான் தப்பா எடுத்துக்கல நீ மேல தூங்கு” என்றவன் தரையில் படுக்கை விரித்து படுத்துக்கொண்டான்.

நர்மதாவிற்கு குற்றவுணர்வாக இருந்தது. தன்னை தானே கடிந்து கொண்டாள். இப்படி மயங்கிவிட்டாயே பாவம் இதுவரை என்னிடம் தேவைக்கு மீறி அதிகபட்சம் பேசக்கூட மாட்டார். என்னுடைய நிலை அவரை எந்த அளவு பாதித்ததோ தெரியவில்லை என்ற குற்றவுணர்வில் அவனை பார்த்துக் கொண்டு விடியவிடிய தூங்காமல் இருந்தாள்.

நர்மதாவிற்கு முதுகு காட்டிப்படுத்திருந்த செழியனின் மனம் மூமையாய் அழுதது. இந்த நாளை வரவேற்க எவ்வளவு கனவுகள் கண்டு இருப்பான்.

தன் காதலியுடன் தனிமையில் இருக்கும் முதல் தருணம். மனம் விட்டு பேசுவதற்கும் தன் காதலை சொல்வதற்கும் ஒரு நூறு ஒத்திகை பார்த்து காத்திருந்தான்.

இந்த நாளை தங்களது வாழ்நாளில் எப்பொழுதும் மறக்க கூடாது. அதை அப்படியே நினைவில் வைக்கும்படி பொக்கிஷ தருணமாக மாற்ற வேண்டும் என்று கனவு கண்டான்.

இன்று நடந்தவைகளும் நினைவில் இருக்கும் ஆனால் உணர்வுகள் வேறு அல்லவா.

ஒருநிலையில் செழியன் கண் அயர்ந்துவிட அவனை பார்த்துக் கொண்டிருந்த நர்மதாவும் கட்டிலில் இருந்து இறங்கி தரையில் அவனிடம் இருந்து சற்று தொலைவில் படுத்துக் கொண்டாள்.

தரை சில்லென இருக்க அவளுக்கு நடுக்கம் கண்டது. ஆனால் அவளுள் இருந்த குற்ற உணர்வு அதனை பெரிதுபடுத்தவில்லை.

பொழுது விடிந்து கண் விழித்தான் செழியன். தன் கண் முன்னே உடலை குறுக்கி படுத்து இருந்தாள். உடல் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது.

அந்நிலையில் அவளை பார்த்தவனுக்கு முதலில் கோபம் தான் வந்தது. தன்னை சமன்படுத்திக் கொண்டு அவளை தூக்க முனைந்தவன் ஒரு நிமிடம் தயங்கி நின்றான்.

பெரிய மூச்சொன்றை இழுத்துவிட்டு தன் கைகளில் அவளை ஏந்தினான். படுக்கையில் கிடத்திய பின் அவளது நெற்றியை தொட்டு பார்க்க அனலாக கொதித்தது.

கண்களில் திரண்ட கண்ணீரோடு அவளது நெற்றியில் முத்தம் இட்டான்.  முதல் முத்தம் அதை இப்படி ஒரு தருணத்தில் தான் தர வேண்டுமா என்று கவலை கொண்டான்.

அறையில் இருந்து வெளியேறியவன் வழக்கம் போல் தன் தேவையை கூறுவதற்காகவே அவ்வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்த வள்ளியின் முன் சென்று நின்றான்.

“டேய் என்னடா இது குளிக்காம இங்க வரை வந்து இருக்க” என்று அவனது முகத்தை கவனியாமல் கிண்டல் செய்ய

“பெரியம்மா நர்மதாக்கு நேத்துல இருந்து உடம்பு சரியில்லை. தூங்கி எந்திருச்சா சரி ஆகிரும்னு நினைச்சேன்.  ஆனா எழுந்து பார்க்கும் போது ரொம்ப காய்ச்சல் அடிக்குது என்னனு வந்து பாருங்க “

வள்ளி விரைந்து சென்று பார்த்தார். இரவு அவர்கள் செய்துவிட்ட அலங்காரம் கலையாமல் உறங்கி கொண்டிருந்த நர்மதாவை பார்த்தவர் மகன் புறம் திரும்பினார்.

அவன் முகத்தில் கவலை திரண்டு நிற்க எதுவும் கூறமுடியாமல் அவள் அணிந்திருந்த நகைகளை கலட்டினார்.

பின் உடை மாற்ற முயல செழியன் அறையைவிட்டு வெளியேறிவிட்டான்.

அடுத்த இரண்டு நாட்களும் அவளது நாட்கள் காய்ச்சலில் கழிய செழியன் கண்ணும் கருத்துமாய் பார்த்துக் கொண்டான்.

அவளுக்கான பணிவிடைகள் அனைத்தும் அவனே செய்தான். செய்யும் போது பயமும் கொண்டான்.  எங்கே மீண்டும் அவள் தன்னை கண்டு பயம் கொள்வாளோ தன்னை தவறாக எண்ணுவாளோ என ஒவ்வொன்றையும் நிதானமாக கையாண்டான்.

குமரனின் வீடு

இரவு பன்னிரண்டு மணி இருக்கும் ஹால் லைட் எறிந்து கொண்டிருந்தது. தண்ணீர் குடிக்க எழுந்து வந்த மைத்ரி கூடத்தில் பார்வையை செலுத்த ஒரு புறம் குமரன் மடிக்கணினியை வைத்து வேலை செய்து கொண்டிருந்தான்.

மறுபுறம் கார்த்தி புத்தகங்களை கையில் வைத்து தூக்கத்தில் இருந்து வெளிவர போராடிக் கொண்டிருந்தான்.

இவள் அமைதியாக சமையல் அறைக்கு சென்று நீரை கொதிக்க வைத்தாள்.  பின் அதில் டீ தூளை கொட்டி நன்றாக கொதிக்கவும் வடிகட்டி சிறிது வெல்லம் சேர்த்து இரண்டு கப்பில் ஊற்றினாள்.

ஒன்றை எடுத்து வந்து குமரனுக்கு வைக்க நிமிர்ந்து பார்த்தவன் சிரித்த முகத்துடன் எடுத்துக் கொண்டான்.

மற்றொன்றை எடுத்துக் கொண்டு கார்த்தி அருகில் சென்றவள் அவனது புறங்கையில் டீ கப்பை வைக்க சூட்டில் ஆ…  என்று கத்தியபடியே நிமிர்ந்து அமர்ந்தான்.

“இந்தா கார்த்தி பிளாக் டீ… “

“அத குடுக்க இப்படி தான் சூடு வைப்பியா..”

“சூடு வச்சதுனால தான இப்போ எழுந்த ஒழுங்கா படி”

“சீ…  போ… “

சரி என அவள் எழ “ஏய் உட்காரு என்ன போ சொன்னா போறேன்ற”

“லூசு… லூசு…  போக சொன்ன போக தான வேணும்”

“அப்படி எல்லாம் இல்ல இங்க வா வந்து உட்காரு” என நின்றிருந்தவளை தன் அருகில் அமர்த்திக் கொண்டவன் “நான் டீ குடுச்சு முடிக்குற வரை ஏதாவது இன்ட்ரெஸ்ட்டா பேசு” என்றான்.

அதில் கமுக்கமாக சிரித்தவள் குமரனின் புறம் திரும்பி ஏங்க… நீங்க லவ் பண்ணி இருக்கீங்களா…  என கேட்டாள்.

கார்த்திக்கு வாயில் வைத்திருந்த காபி சுட்டுவிட்டது. அதிர்ச்சியுடன் அண்ணனை பார்க்க அவன் பதில் சொல்ல முடியாமல் திண்டாடினான்.

தொடரும்…