முன்பே காணாதது ஏனடா(டி)-22

மருத்துவமனையின் வெளிபுறம் அமைந்திருந்த கல் பலகையில் அமர்ந்து இருந்தான் குமரன்.

கண்களில் வலி நிறைந்து இருந்தது. ஒரு நாளில் தன் வாழ்க்கையே மாறி போனதே என வருந்தினான்.

கடின முயற்சியால் கண்ணீர் கசியாமல் பார்த்துக் கொண்டான். அமைதியாக அமர்ந்து சுட்டெரிக்கும் சூரியனை வெறித்துக் கொண்டிருந்தான்.

சற்று முன்பு தான் தந்தைக்கான அறுவை சிகிச்சை முடிந்து அறைக்கு மாற்றி இருந்தனர்.  மயக்கத்தில் இருப்பதால் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

காலையில் இருந்து உணவு உண்ணாமல் இருக்கும் தங்கைக்கும் தாயுக்கும் உணவு வாங்கி கொடுத்தவன் இங்கு வந்து அமர்ந்து கொண்டான்.

அவன் அருகில் வந்து அமர்ந்தான் கார்த்தி

“அண்ணா…” என்று அவனை அழைக்க தம்பியின் முகம் நோக்கியவன் மீண்டும் திரும்பி சூரியனை வெறிக்க ஆரம்பித்தான். கண்கள் கூசியது எரிச்சல் கூட ஏற்பட ஆரம்பித்தது.

அவனது முகத்தை தன் கைகளால் பற்றிய கார்த்தி அவனது தலையை கீழே திருப்பி பார்வையை மாற்றிவிட்டான்.

கண் பார்வையில் எதுவும் புலப்படவில்லை. எல்லாம் இருட்டாக தெரிந்தது. தன் வாழ்க்கையும் கூட அப்படி தான் இருக்கிறதோ என்று எண்ணிக் கொண்டான்.

“எதுக்கு அண்ணா அப்பா கேட்டப்போ மறுப்பு சொல்லல.. “

“எப்படி சொல்ல சொல்ற கார்த்தி. என்னால அவரு தப்பு செஞ்சதா தலை குனியறத பார்க்க முடியாது.”

“நாளைக்கு உன்னோட காதல் விஷயம் தெரிஞ்சா ரொம்ப பீல் பண்ணுவாரு. “

“அது எப்பவும் அப்பாவுக்கு தெரிய கூடாது. நான் சொல்ல மாட்டேன் நீயும் சொல்லக் கூடாது. “

“சரி சொல்லல ஆனா உன்னால உன்னோட காதல மறந்துட்டு மைத்ரியோட வாழ முடியுமா சொல்லு.”

“எனக்கு தெரியல ஆனா காலம் தான் எல்லாத்துக்கும் பதில் சொல்லும். நீ என்ன பத்தி கவலைபடாத நான் நர்மதாவ ம.. ற.. ந்து.. ருவேன்” என்று தொண்டை அடைக்க சொன்னான்.

“அண்ணா” என்று அவனை அணைத்துக் கொள்ள தம்பி அவனை கட்டிக் கொண்டவன் சற்று நேரத்தில் சகஜமானான்.

“சரி கார்த்தி நான் ஆபிஸ் வரை போய் வந்துடுறேன் பார்த்துக்க.. “என்று கூறி மருத்துவமனையின் வாயிற்கதவை நோக்கி சென்றான்.

அவன் சென்றதும் தந்தை இருக்கும் அறைக்கு செல்லலாம் என எண்ணி திரும்ப தன் பின்னே கண்ணீருடன் நின்று கொண்டிருந்த சுஜியை பார்த்து துணுக்குற்றவன் “என்ன ஆச்சு சுஜி”என பதறி அவளின் தோளை பற்றினான்.

அவனது கைகளை எடுத்து விட்டவள் அவனது தோள் சாய்ந்து “நமக்கு மட்டும் ஏன் கார்த்தி இப்படி நடக்குது அண்ணா பாவம்….  எவ்ளோ கஷ்டபடுது.”

“எனக்கு என்ன சொல்றதுனு தெரியல சுஜி “

“எனக்கு நம்பிக்கை இருக்கு மைத்ரி ரொம்ப நல்லவங்க அவங்க அண்ணாவ நல்லபடியா பாத்துப்பாங்க” என்று கூறி அழுதாள்.

……

ஒரு வாரம் கடந்திருந்த நிலையில் அன்று தான் அலுவலகம் திரும்பி இருந்தாள் தாரா.

அலுவலகம் வந்தவளிடம் குமரனை பற்றி விசாரிக்க கடந்த இரண்டு வாரமாக அவன் வாழ்வில் நடந்த விஷயங்களை கேள்விபட்டு கவலை அடைந்தாள்.

குமரனின் வருகைக்காக காத்திருந்தவள் அவன் வந்ததும் விரைந்து சென்று அவனை கட்டிக் கொண்டாள்.

அவனும் புன்சிரிப்புடன் அவளை அணைத்துக் கொண்டான். சில நொடிகளில் அவனை விட்டு பிரிந்தவள் “அப்பா இப்போ எப்படி இருக்காருடா சாரிடா எனக்கு தெரியாது.”

“பரவா இல்ல தாரா. அப்பா இப்போ நல்ல இருக்காரு. இன்னைக்கு தான் டிஸ்சார்ஜ் பண்ணுனோம் வீட்டுல விட்டுட்டு வர லேட் ஆகிருச்சு.”

“ம்…”  என்று யோசனையில் ஆழ்ந்தவளை பார்த்தவன் “என்னாச்சு தாரா என்ன யோசிக்குற. ” என்றான்.

“லாஸ்டா பண்ணுன நம்ம பிராஜக்ட் சக்சஸ் ஆகிருச்சுடா. நல்ல வரவேற்புனு சொல்லி அந்த கம்பனியோட எம்டி பாராட்டுனாரு. நான் எல்லாத்துக்கும் காரணம் நீ தானு சொல்லிட்டேன். இன்னைக்கு உன்ன மீட் பண்ண வர சொன்னாரு. அதான் டிரிப்ப பாதியிலே விட்டுட்டு வந்துட்டேன்.”

“சரி வா போலாம்”

“அது இல்லடா உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே.  நான் அவங்ககிட்ட மீட்டிங் ஓகே சொன்ன அப்போ அப்பாவோட ஆக்சிடன்ட் பத்தி தெரியாது”

“ஒன்னும் பிரச்சினை இல்ல ஐ ஆம் ஓகே” என்றான். 

“சாரிடா நீயே மன கஷ்டத்துல இருக்கும் போது   இந்த மீட்டிங் அரேஜ் பண்ண வேண்டிய நிலம வந்துருச்சு. “

“தாரா பிரபஷ்னல் லைப் வேற பெர்ஷனல் லைப் வேற. மீட்டிங் எப்போ?”

“இன்னைக்கு மதியம் மீட்டிங் வித் லன்ச்.”

“ஓகே” என்றவன் தன் இருக்கையில் சென்று அமர்ந்தான்.  மீட்டிங் அட்டன் செய்வது எல்லாம் ஓகே. ஆனால் அங்கே நர்மதா இருப்பாளே அவளை எப்படி எதிர் கொள்வது என பயந்தான்.

…..

கண்மணி, “நர்மதா…  நர்மதா… “

“என்னமா” என சோர்வுடன் அறையில் இருந்து வெளிவந்து கேட்டாள் நர்மதா.

“இந்த இதுல இருக்குற இன்விடேஷன் உன்னோட பிரண்ட்ஸ்கும் அப்றம் உங்க எம்டிக்கும் எடுத்துட்டு போ. “

மௌனமாக அதை பெற்று கொண்டவள் தன் அறைக்கு திரும்பி செல்ல முனைய

“இப்போவே போய் கொடுத்துட்டு வந்துரு. அப்படியே உன்னோட செட்டில்மெண்ட் பேலன்ஸ் கொஞ்சம் இருக்குல அதையும் வாங்கிட்டு வந்துரு.”

மனதில் பாரம் ஏற அலுவலகத்திற்கு கிளம்பினாள் நர்மதா.

இதோ ஆட்டோவில் வந்து அலுவலகம் முன்பும் இறங்கிவிட்டாள். பொதுவாக அவள் ஆட்டோவில் வருவது இல்லை எப்பொழுதும் பேருந்து பயணம் தான். ஆனால் இன்று அப்பாவின் வற்புறுத்தலில் வந்துவிட்டாள்.

அலுவலகத்தை பார்த்ததும் குமரின் நினைவுகள் வர ஆரம்பித்தது. பல மாதங்கள் வேலை பார்த்த அலுவலகம் ஆனாலும் சில நாட்களேனும் அங்கே குமரனுடன் பழகும் சந்தர்பத்தை இந்த அலுவலகம் தானே ஏற்படுத்தி தந்தது.

நினைவுகளால் அலைபாயும் மனதை ஒருநிலை படுத்தியவள் அலுவலகத்தின் உள் சென்றாள்.

தன் நெருங்கி தோழிகளுக்கு பத்திரிக்கையை கொடுத்தவள் எம்டி அறைக்கு சென்று அவருக்கும் கொடுத்தாள்.

அவர் வாழ்த்து கூறி விட்டு தனது பிஎ வை அழைத்து செட்டில்மெண்டை கொடுத்தனுப்புமாறு கூறினார்.

நர்மதாவும் நன்றி கூறிவிட்டு பணத்தை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்தாள்.

அவள் வீட்டில் நுழைந்த சமயம் குமரன் அவர்கள் இருவரும் சேர்ந்து பணி புரிந்த அந்த அலுவலகத்தின் உள் நுழைந்தான்.

எம்டி அறைக்கு செல்லும் வழியில் நர்மதாவின் இருக்கையை பார்க்க கூடாது என மனதை கட்டுபடுத்திக் கொண்டே சென்றான்.

ஆனால் அவனது கட்டுப்பாட்டையும் மீறி மூளை அவனுக்கு கட்டளையிட அவளது இருக்கையை நோக்கினான்.

அவ்விடம் காலியாக இருந்தது. புருவ முடிச்சுகளுடன் எம்டியின் அறையின் உள் தாராவை தொடர்ந்து அவனும் நுழைந்தான்.

தொடரும்…