முன்பே காணாதது ஏனடா(டி) – 14

அலுவலகத்தில் தனது இருக்கையில் அமர்ந்து இருந்த மைத்ரியின் மனம் நிலையில்லாமல் தவித்தது. விரைவாக ஓய்வறைக்கு சென்று வந்தவள் கைபேசியை எடுத்து மாரியின் எண்களை அழுத்தி காதில் வைத்தாள் 

எதிர் புறம் அழைப்பு ஏற்கப்பட்டதும் சுற்றி வளைத்து பேசாமல் “அன்கிள் எனக்கு உங்க பையன கல்யாணம் பண்ண சம்மதம்” என்று உரைத்தாள் .

மாரி மிகவும் சந்தோசம் அடைந்தார். “ரொம்ப சந்தோசம் மா நீ மதியம் வருவேல அப்போ சுந்தரியை எம்புள்ள போட்டோவ கொண்டு வர சொல்றேன் மதியம் வருவேலடா” 

“இல்லை அங்கிள் கொஞ்சம் வேலை” 

“அது எல்லாம் எனக்கு தெரியாது நீ வர அவ்ளோதான்” என்றவர் அழைப்பை துண்டித்தார் .

அவளும் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி “சரி” என்றாள்.

………..

காலையில் அலுவலகம் வந்ததில் இருந்து  நர்மதாவும் குமரனும் ஒருவரை ஒருவர் பார்த்த படியே இருந்தனர்.

இருவர் கண்களுக்கும் தங்களது காதலர்கள் அழகாக தெரிந்தனர். அது இரவெல்லாம் செய்த அவர்களின்  தேடுதலின் வெளிப்பாடா அல்லது மனதில் உள்ளதை சொல்ல போகிறோம் என்ற எதிர்பார்ப்பினாலா என்று தெரியவில்லை. அது அவர்களுக்கே வெளிச்சம்.

குமரன், “நர்மதா இந்த டிரஸ் உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு…”

“உங்களுக்கும்….  டிரஸ் நல்லா இருக்கு….”

“நான் சொன்னேன்றதுக்காக சொல்றீங்களா…”

“ஐயோ….  இல்லிங்க நிஜமாவே நல்லா இருக்கு… “

“தாங்க்ஸ்…”

“நானும்…. “

“நீங்களும்….”

“அது தாங்க்ஸ்னு சொன்னேங்க” என்றவள் சற்று தள்ளி இருந்த உடன் பணி புரியும் ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டே ஓடிவிட்டாள்.

இவனும் அவள் சென்ற திசையை பார்த்து சிரித்துக் கொண்டான்.

…….

கோவிலின் பின்புறம் இருந்த மரத்தின் பின்பக்கம் மொழிக்காக காத்திருந்தான் சுதாகரன்.

சிரித்த முகமாக  வந்தவள் குங்குமத்தை எடுத்து அவன் நெற்றியில் இட முயற்ச்சிக்க உயர்ந்து இருந்த அவளது கைகளை தட்டிவிட்டான்.

“என்னாச்சு சுதா…. “

“எத்தனை தடவ சொல்றது என்ன சுதானு கூப்பிடாதனு… “

“என்ன பண்றது எனக்கு கரன விட இந்த சுதாவத்தான் ரொம்ப பிடிக்குது” என அவனின் நெஞ்சில் தன் சுட்டு விரலால் தொட்ட படி சொன்னாள்.

அவனுக்குமே அவள் சுதா என்று கூப்பிடுவது தான் பிடிக்கும். மனதுள் அதனை ரசித்து வெளியே பிடிக்காதது போல் நடிப்பான். அது அவளுக்கும் நன்கு தெரியும்.

அதனால் அவன் கூறுவதை பெரிது படுத்தாமல் மீண்டும் தன் கையில் வைத்திருந்த குங்குமத்தை அவன் நெற்றியில் இட்டாள்.

இம்முறை மறுக்கவில்லை அவன் அமைதியாக நின்றான். 

பின் மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்.

“உங்க வீட்டுல உனக்கு மாப்பிள்ளை பாக்குறாங்களா…”

“ம்….  தெரியும் அந்த காசி பையன் உங்க ரெண்டு பேர்கிட்டையும் பேசுறத பார்த்தேன்.  அப்றம் அவங்கிட்ட விசாரிச்சதுல தெரிஞ்சது.”

“ஓ…. அப்போ எல்லாம் தெரிஞ்சு இருந்தும் அமைதியா இருக்க. என்னடி கலட்டி விட பாக்குறியா…”

“ஓ….  நிஜமாவே அப்படி ஒரு ஆப்ஷன் இருக்கா..  சூப்பர் அப்ப உன்ன கலட்டி விட்டுறேன்” என விளையாட்டாக கூற

அதை புரிந்து கொள்ளாத சுதாகரன் “சரி… அப்போ உங்க அப்பா சொல்றவனையே கட்டிக்க…” என்று தள்ளிவிட கீழே விழுந்து விட்டாள்.

அதில் அதிர்ந்து அவனை பார்க்க அவனோ அலச்சியமாக நின்றிருந்தான்.

இவளும் எழுந்து தன் உடையில் ஒட்டிய மண்ணை தட்டிவிட்டு அவன் அருகில் நெருங்கி அணைத்துக் கொண்டாள்.

ஆனால் அவன் அணைக்கவில்லை முகம் இறுகிய படியே இருந்தான்.

“நான் அமைதியா இருக்க காரணம் எனக்கு கால்யாணம்னு ஒன்னு நடந்த அது உங்கூட மட்டும் தான்ற தைரியத்துல தான்.”

அதில் அவன் மனம் குளிர்ந்து போக அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

நர்மதாவின் மூளையோ ‘அவன் உன்ன தள்ளிவிடுறான் உனக்கு கோபம் வரல’ என்று கூற

மனமோ, ‘இவ பல முறை அடிச்சு அவனுக்கு ரத்த காயமே வந்துருக்கு அவன் என்ன கோபமாபடுறான்’ என்று சண்டையிட்டது.

இவர்கள் இருவரது செயலும் சொல்லும் மஞ்சுளாவின் கண்களில் பட்டுவிட இறுகிய முகத்துடன் வீட்டிற்கு சென்றாள்.

………

தன் மகனின் நல் வாழ்விற்காக கோயிலே கதி என்று இருந்த சுந்தரியின் கவனத்தை ஈர்த்தது கைபேசியின்  சத்தம்

அழைப்பை ஏற்று காதில் வைத்தவருக்கு மாரியால் நல்ல விஷயம் பகிரப்பட்டது.

அவரிடம் பேசிவிட்டு கடவுளுக்கு நன்றி தெரிவித்து விட்டு விரைந்து வீட்டிற்கு சென்று குமரனின் புகைபடம் ஒன்றையும்  உணவையும் எடுத்துக் கொண்டு கணவர் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றார்.

………

மதிய இடைவேளைக்கு இன்னும் சிறிது நிமிடங்களே இருக்க குமரனும் நர்மதாவும் படபடப்புடன் அந்த நிமிடத்தை எதிர் நோக்கி காத்திருந்தனர்.

அலுவலகத்தில் இருந்து கிளம்பிய மைத்ரிக்கு சுமியிடம் இருந்து அழைப்பு வந்தது.

“சொல்லு சுமி”

“என்ன முடிவு பண்ணிருக்க மைத்ரி”

“அவரோட பையனையே கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு சொல்லிட்டேன்.”

“அப்போ உன்னோட லவ்…”

“என்னோட ஒருத்தி சந்தோஷத்துக்காக அவங்க ரெண்டு போரோட சந்தோஷத்தை கலைக்க விருப்பமில்லை.”

“ம்….. நீ என்ன முடிவு எடுத்தாலும் நான் உனக்கு உறுதுணையா இருப்பேன். மதுரை ஏர்போர்ட் வந்துட்டேன். எங்க வரனும்னு சொல்லு”

“காய்கறி மார்க்கெட் ….” என்று கூறி அதனுடைய முகவரியை சொன்னவள் “வந்துரு” என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள்.

……..

வாசலில் குரல் கேட்கவும் வெளியே வந்து பார்த்தார் மகா.

கதிர் நின்றிருந்தான். அதிசயமாக பார்த்து நின்ற மகாவின் நினைவை கலைக்கும் விதமாக அவன் பின்னிருந்து வந்தாள் மஞ்சு.

“அத்தை உள்ள போய் பேசலாமா…”

வாசலில் நிற்க வைத்து மற்றவர்களுக்கு தன் குடும்ப விசயத்தை காட்சி பொருளாக்க விரும்பாதவர் உள்ளே அழைத்துச் சென்றார்.

ஐந்து நிமிடங்கள் அமைதியாகவே கலிந்தது. கதிர் வந்ததில் இருந்து மகாவின் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்கவில்லை. அதில் மிகவும் கவலையுற்றார் மகா.

“அத்தை  நாங்க ஒரு முக்கியமான விஷயம் பேச வந்துருக்கோம்.”

மகா கதிரை நோக்க அதை உணர்ந்து கொண்ட அவனோ மனைவியை பார்த்து “சீக்கிரம் அவங்களுக்கு சொல்லு மஞ்சு வீட்டுக்கு போகலாம்” என்றான்.

……..

குமரனும் நர்மதாவும் அலுவலகத்தின் அருகில் இருந்த உணவகத்தில் அமர்ந்து இருந்தனர்.

உணவுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு இருவரும் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியமால் முளித்துக் கொண்டிருந்தனர்.

……

“டேய் மாரி….” என்ற முதலாளியின் குரலுக்கு அவர் முன் சென்று நின்றார் மாரிமுத்து.

“ஐயா…. “

“சாப்பிட கிளம்பிட்டையா… “

“இனிமே தாங்க கிளம்பனும் சொல்லுங்க ஐயா…”

“அது ஒன்னும் இல்லடா புதுசா வந்த லோடு மூட்டைய இறக்கனும்…”

“ஆரம்பிச்சா அரைமணி நேரத்தில முடிச்சுரலாம் ஐயா….  நான் இறக்கி வச்சுட்டு போறேங்க….”

“நல்லதா போச்சுடா…  முடிச்சுட்டு அதுக்கு தனியா காசு வாங்கிக்க”

“சரிங்க ஐயா…” என்று கூறியவர் வேலையை கவனிக்க சென்றுவிட்டார்.

மைத்ரியின் பதில் அவரை உற்சாக மூட்டியதால் தற்போது செய்ய போகும் வேலை அவருக்கு மலைப்பாக தெரியவில்லை.

மூடைகளை இறக்கி கொண்டிருந்தார். இன்னும் சில மூட்டைகள் மீதம் இருக்க அதை இறக்கும் பணியில் இருந்தார்.

அப்பொழுது சரியாக அவ்விடத்தில் வந்து சேர்ந்தனர் மைத்ரி, சுமி மற்றும் சுந்தரி.

அப்பொழுது தான் அந்த சம்பவம் நடந்தது.  மாரி இறக்கி கொண்டிருந்த லோடு வண்டியின் முன் புறம் நிறுத்த முயன்ற மற்றொரு வண்டி அந்த வண்டியின் மேல் மோதியது.

லோடை முதுகில் சுமந்து கொண்டிருந்த மாரி பேலன்ஸ் செய்ய முடியாமல் தடுமாறினார். அதனை பார்த்து அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர் மைத்ரியும் சுந்தரியும்.

அவருக்கு வெகு அருகில் இருந்த மைத்ரி விரைந்து சென்று அவரை பிடித்து இழுக்க முயற்ச்சிக்க அவளோடு சேர்த்து அவரையும் இடித்தது வண்டி.

இடித்த வேகத்தில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழ மூட்டைகள் இருவர் மீதும் விழுந்தது. சுற்றி இருந்தோர் விரைந்து அவ்விடம் நோக்கி ஓட மூட்டைகளின் அடியில் இருந்து குருதியானது அவர்கள் காலடியை வந்து சேர்ந்தது.

தொடரும்…