மீட்டாத வீணை தருகின்ற ராகம் – 21

யுகி, “யாழு…  நா சொல்றத கேளு”

நிலா, “என்ன கேக்கனும் அதா உங்க புத்தி தெரிஞ்சுருச்சே”

யுகி, “நீயா ஒன்ன புரிஞ்சுக்கிட்டு நீயா ஒன்ன பேசாத என்னையும் பேச விடு”

நிலா, “ஓ….  பேசனுமா…. சரி பேசுங்க…”
என்று கைகளை கட்டிக் கொண்டு திமிராக நின்றாள்.

யுகி, “எனக்கு நீ ருத்ராகூட பழகுறது பிடிக்கல” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சலிப்பாக முகத்தை வேறுபுறம் திருப்பினான்.

அவளது செயலில் அவனுக்கும் கோபம் வந்துவிட்டது.
“முழுசா கேளு யாழு… ” என்று பல்லை கடித்து கொண்டு கூறினான்.

மறுபடியும் அவள் அவள் முகத்தை திருப்பவும் கத்திவிட்டான். அவ்வளவு நேரம் பொறுத்துக் கொண்டவன்

“ஏனா…  நா உன்ன காதலிக்கிறேன்.” என்று கத்தினான்.

அவ்வளவு தான் கட்டியிருந்த கைகள் தானாக கீழிறங்கியது.  அவள் அதிர்ச்சிக்கு காரணம் உண்டு. ஏனென்றால் அவன் சமிபமாகத் தான் தன்னை விரும்புகிறான் என்று அவள் நினைத்திருக்க அவனோ இக்காட்டிற்கு வந்த முதல் நாளே என்பது போல் கூறுகிறானே.  முதல் நாள் தானே ருத்ரனிடம் பேச கூடாது என்றான் அப்படி என்றால் அதற்கு அர்த்தம் அப்பொழுதே என்னை விரும்பினானா என்று ஆச்சரியப்பட்டாள்.  அதிர்ச்சியில் சிலையாகி போனாள்.

யுக்தயன் காதலை தெரிவித்துவிட்டு மேலும் ஏதோ கூறிக் கொண்டிருக்க அவள் காதில் எங்கே அவையெல்லாம் விழுந்தது.

அவளது தோளை பற்றி இழுத்தவன் “பதில் சொல்லு யாழு..”

“எ..ன். ன” கனவில் இருந்து வெளிவந்தவள் போல் புரியாமல் பார்த்தாள்.

யுகி, “ம்ப்ச்…  ஒரு வேளை வேற யாராவது ஒரு பொண்ணு எங்கிட்ட குளோஸ்ஸா பழகுனா உன்னால அத ஏத்துக்க முடியுமா”

தன்னிச்சையாக அவளது தலை இடவலமாக ஆடியது

யுகி, “என்னோட நிலையும் கூட அதுதா உன்ன காதலிக்க ஆரம்பிச்ச தருணத்துல நீ என்ன விட்டு விலகிபோன… அப்போ
நா எவ்ளோ துடுச்சுப் போனேன் தெரியுமா”

“ஐ லவ் யூ யாழு… ” என்று கூறி அவளை இறுக அணைத்து கொண்டவன் தன் பேச்சை தொடர்ந்தான்.  “நா உன்ன எப்பவுமே சந்தேகப்பட மாட்டேன். ஆனா அப்போ நா ரொம்ப பயந்து போயிட்டேன் நீ என்ன விட்டு போய்டுவியோனு இப்பக் கூட அன்னைக்கு இருந்த மனநிலைய எப்படி உனக்கு புரிய வைக்கனு கூட எனக்கு தெரியல….”

அவனிடம் இருந்து விலகியவள் அவன் முகம் நோக்கினாள்.  மிகவும் பதட்டமாக காணப்பட்டான்.  கண்களில் காதலுக்கும் ஏக்கமும் தவிப்பும் போட்டிபோட்டுக் கொண்டிருந்தது.

மெதுவாக அவன் இதழின் அருகில் நெருங்கியவள் அழுந்த முத்தமிட்டு கட்டிக் கொண்டாள் அவனை.

அந்த முத்தமே தன்னை தன் மனைவி புரிந்துக் கொண்டாள் என்பதை அவனுக்கு உணர்த்தியது.

முத்தத்தில் வெகுநேரம் திளைத்தவர்கள் பின் விலகி ஒருவர் முகம் ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

நிலா, “சாரி மாமா  சடனா நீங்க அப்படி சொல்லவும் கோபம் வந்துருச்சு. ரியலி சாரி உங்கள புரிஞ்சுக்காம பேசிட்டேன்.”

“பரவா இல்ல யாழு… ” என்றவன் அவள் கன்னங்களை தன் கைகளில் தாங்கியவன்  “என்ன பிரச்சனை வந்தாலும் என்ன தண்டனை கொடுக்க நினச்சாலும் எம்பக்கத்துல இருந்தே கொடு என்ன விட்டு பிரிஞ்சு மட்டும் போயிடாத. பிளீஸ்டி என்னால அத தாங்க முடியாது.”

நிலா, “சாரிங்க உங்கள விட்டு எங்க போகப்போறேன் உங்க கூடதா எப்பவும் இருப்பேன்.”

………

நிலா கண்களில் நீருடன் ருத்ரனை கட்டிப்பிடித்து அழுது கொண்டிருந்தாள். அவனது கண்கள் கூட கலங்கிவிட்டது.

ருத்ரா, “அழாத நிலாமா அண்ணனுக்கு கஷ்டமா இருக்குடா”

நிலாவும் யுகியும் கிளம்புவதற்கான நேரம் வந்துவிட்டது. சிறிது கால பழக்கத்திலே அவர்களில் ஒருவராக மாறி போயினர்.

யுகியின் கால்களை சுரண்டிய பொன்னியை தூக்கி வைத்தவன் “என்னடா” என்று வினவ

பொன்னி, “சித்தப்பா அடுத்து எப்ப வருவீங்க”

யுகி, “வரேன்டா தங்கம் அடிக்கடி உங்கள வந்து பார்த்துட்டு போறேன்.”

குழலியும் நிலாவும் அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டனர்.  ருத்ராவின் அருகில் வந்த யுக்தயனை இறுக அணைத்துக் கொண்ட ருத்ரா “நீ என்னோட நல்ல தோழன் உன்ன மறக்கவே மாட்டேன் யுகி”

யுகி, “உன்னோட கல்யாணத்துக்கு என்ன கண்டிப்பா கூப்பிடு” என்று தன் கையில் இருந்த அவனது கார்டை கொடுத்தவன்

யுகி, “இத கொண்டு போய் காப்பகத்துல இருக்குறவங்க கிட்ட கொடுத்தேனா அவங்க எனக்கு போன் பண்ணுவாங்க நாம பேசிக்கலாம்.”

யுகி, “சின்னரசு ஐயா ருத்ரா கல்யாணத்துக்கு நீங்க எனக்கு கால் பண்ணுங்க”

சின்னரசு, “சரி தம்பி நிச்சயமா போன் பண்றேன்.”

காப்பகத்தில் இருந்தவர்  இரண்டு நாட்கள் முன்பே வந்துவிட்டார் அவர்கள் இருவரையும் அழைத்துச் செல்ல.

பின் அனைவரிடமும் பிரியா விடை பெற்றுக் கிளம்பினர்.  கிராமத்தைவிட்டு செல்லும் வரையிலும் இருவரும் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றனர்.

சின்னரசு அவர்கள் இருவரையும் காப்பகத்திற்கு ஒருவழியாக அழைத்து வந்துவிட்டார்.

இருவரும் முன்பு தங்கியிருந்த அறையிலே இப்பொழுதும் தங்கினர்.

நிலா, “ரொம்ப கஷ்டமா இருக்கு மாமா”

யுகி, “எனக்கும் கஷ்டமாதா இருக்கு யாழு” என்று தன் மொபைலில்  இருந்த அவர்கள் நால்வரின் புகைபடத்தை பார்த்தான்.

நிலா, “மாமா இந்த போட்டோவ பிரேம் பண்ணி சின்னரசு ஐயாக்கிட்ட கொடுத்துட்டு போவோம். அவரு அண்ணாகிட்ட கொடுத்துருவாரு.”

யுகி, “சரிடா கொடுத்துட்டு போவோம்.”

நிலா, “ம்…”

யுகி, “சரி நீ கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்கோ “

நிலா, “ம்…  மாமா அடுத்து எங்க போக போறோம் “

“அடுத்து…. ” அதற்குள் அவனது கைபேசி ஒலித்தது.  எடுத்துப் பார்க்க பல தவறிய அழைப்புகள். காட்டினுள் இருந்ததால் சிக்னல் கிடைக்கவில்லை அதனால் ஒரு வார காலமாக வந்திருந்த அழைப்புகளை ஏற்க முடியவில்லை அவனால்

அவனது தாய் கண்மணி தான் அழைத்திருந்தார்.

யுகி, “ஹலோ அம்மா.. “

கண்மணி, “எங்கடா இருக்க”

யுகி, “சத்தியமங்கலம் “

கண்மணி, “ஓ…  உடனே கிளம்பி வீட்டுக்கு வாங்க ரெண்டு பேரும். “

யுகி, “ஆனா அம்மா..  எங்களுக்கு..  வேற இடம் போகனும் நிறைய வேலை இருக்கு.”

கண்மணி, “அதெல்லாம் எனக்குத் தெரியாது நீ வரப் போறிய இல்லையா” என்று கத்தினார்.

தாயின் குரல் மாற்றம் அவனை யோசிக்க வைத்தது.

யுகி, “வரோம் மா… “

நிலா, “என்னாச்சுங்க”

யுகி, “அம்மாதா  உடனே கிளம்பி வர சொல்றாங்க “

நிலா, “அத்தையா…  எனக்கு நிறைய கால்பண்ணி இருக்காங்க பாருங்க” என்று அவளது மொபைலை காட்டினாள்.

“என்னாச்சு மாமா என்னவா இருக்கும்”

யுகி, “ஒன்னும் இல்ல யாழு  கொஞ்ச நாளா  நாம போன் பண்ணலைல அதா பயந்து போயிருப்பாங்க வேற ஒன்னும் இருக்காது நீ பயப்படாத”

ம்..  என்றவள் அவனை அணைத்துக் கொண்டாள்.  அவளுக்கு தைரியம் சொன்னவனின் மனதோ ஏதோ தவறாக நடக்கப் போவது போல் தோன்றிக் கொண்டே இருந்தது.

பின் இருவரும் கிளம்பி வீட்டிற்கு சென்றனர். இரவு போல் தான் வீட்டிற்கு சென்று சேர்ந்தனர்.

உள்ளே நுழைந்தவர்கள் கண்ணில்பட்டனர் ஹாலில் கோபத்துடன் அமர்ந்திருக்கும் அவர்களது பெற்றோர் நால்வரும்.

“என்னாச்சும்மா” என்று கேட்டவனின் காலுக்கு அடியில் வந்து விழுந்தது ஒரு பத்திரம்

குனிந்து அதை எடுத்தான் அது அவர்களது திருமண ஒப்பந்த பத்திரம். 

தொடரும்…..