40 – மின்னல் பூவே (Final)

அத்தியாயம் – 40

அவன் வந்த வேகத்தில் அடிக்கத்தான் போகிறான் என்று நினைத்தவள் தன்னிச்சையாக ஓர் எட்டுப் பின்னால் நகர்ந்தாள்.

ஆனால் அவளை விட வேகமாக முன்னேறியவன் அடுத்த நொடி அவளை இழுத்து இறுக அணைத்திருந்தான்.

மிக மிக இறுக்கமாக அணைத்திருந்தான்.

எலும்புகள் நொறுங்கி விடுமோ என்று நினைக்கும் வண்ணம் அவனின் அணைப்பு இறுகிக் கொண்டே போனது.

“முகில், என்னப்பா? என்னாச்சு?” என்று அவனின் அணைப்பில் அடங்கிக் கொண்டே கேட்டாள்.

“கொஞ்ச நேரத்தில் செத்துட்டேன்…” என்றவன் இன்னும் இறுக்கமாக அவளை அணைக்க,

“ச்சே! என்ன வார்த்தை சொல்றீங்க…” என்றவள், அடுத்த நொடி “ஆ…” என்று வலியில் முனகினாள்.

“என்ன? என்னாச்சு உதிமா?” என்று பதட்டத்துடன் அவளை விட்டு விலகி பரிதவிப்புடன் கேட்டவன் கண்களால் அவளை ஆராய்ந்தான்.

அவள் தோள்பட்டையைத் தடவிக் கொடுத்துக் கொள்வதைக் கண்டு, “அங்கே என்ன?” என்றவன் வேகமாக அவள் அணிந்திருந்த இரவு உடை சட்டையைத் தோள் வழியாக லேசாக விலக்கினான்.

“ஹேய், என்ன செய்றீங்க?” என்று உத்ரா கூச்சத்துடன் பின்னால் நகர,

“இப்போ நீ இப்படிக் காட்டலைனா, நான் இப்படிப் பார்ப்பேன்…” என்றவன் அவளின் இடையில் கைவைத்து சட்டையைக் கழற்றி விடுவதாக ஜாடை காட்டினான்.

அவனைப் பொய்யாக முறைத்தவள், “இப்படியே பாருங்க…” என்று தோள் வழியாக லேசாகச் சட்டையை விலக்கி காட்ட, அவளின் தோள் மூட்டில் நன்றாகச் சிவந்திருப்பதைக் கண்டான்.

“என்ன உதிமா, இப்படிச் சிவந்திருக்கு?” என்று பதறியவன், “இங்கே வா…” என அவளை அழைத்துச் சென்று கட்டிலில் அமர வைத்தான்.

“சட்டையை இன்னும் நல்லா விலக்கு. நான் தைலம் தேய்த்து விடுறேன்…” என்றவன் தைலத்தை எடுத்து வந்து சிவந்திருந்த இடத்தில் அழுத்தி தேய்த்து விட்டான்.

அவன் கை வைத்துத் தேய்த்ததும் பயங்கரமாக வலிக்க ஆரம்பிக்க, பற்களைக் கடித்துக் கொண்டு வலியைப் பொறுத்துக் கொள்ள முயன்றாள்.

அவளின் முகத்தில் வலியைக் கண்டவன், “முன்னாடியே சொல்லியிருந்தால் ஹாஸ்பிடல் போயிருக்கலாமே உதிமா. ஏன் சொல்லலை?” என்று கேட்டான்.

“அப்போ லேசாத்தான் வலிச்சது முகில். இப்போ நீங்க தொட்டதும் தான் ரொம்ப வலிக்குது. அதோட நீங்க வேற முகத்தை இறுக்கமா வச்சுட்டு இருந்தீங்களா?

என் மேல் தான் கோபமா இருக்கீங்களோன்னு நினைச்சு எனக்கு வலி கூட ஞாபகம் வரலை. ஏன் முகில் நான் காரணம் சொன்ன பிறகும் அப்படி இருந்தீங்க?” என்று கேட்டாள்.

“கண்டிப்பா நீ சண்டை போட்டதற்காக நான் கோபமாக இருக்கலை உதிமா…” என்றவன், அவளின் முகத்தைத் தீர்க்கமாகப் பார்த்தான்.

அதில் நிம்மதியுடன் புன்னகைத்த உத்ரா, “அப்புறம் எதுக்கு?” என்று கேட்டாள்.

“ஒரு வாரத்திற்குப் பிறகு உன்னைப் பார்க்க போறேன்னு ஆசை ஆசையா வந்தேன். ஆனா நீ வீட்டுக்கு வரவே இல்லை. போன் போட்டாலும் எடுக்கலை.

புவனாகிட்ட விசாரித்துச் சரிதா நம்பர் வாங்கி அதுக்குப் போன் போட்டாலும் அதே ஏமாற்றம் தான். டிராவல்ஸில் விசாரித்தால் ஆக்ஸிடெண்ட்டா இருக்குமோனு நினைக்கிறோம்னு சொல்லவும் என் உயிரே ஆடிப் போயிருச்சு உதிமா.

இதுக்கு முன்னாடி நான் உன்னைக் காதலிக்கிறேனா இல்லையான்னு நீ தான் எனக்கு விளக்கம் சொல்லியிருக்க.

ஆனா இப்போ நானே மனப்பூர்வமா காதல்னா என்னன்னு புரிந்து கொண்டேன் உதிமா.

உனக்கு ஏதோன்னு தோன்றிய போதே என் உயிரே போயிட்ட மாதிரி எனக்குள்ள ஒரு துடிப்பு வந்தது உதிமா.

நீ இல்லைனா இந்த உலகத்தில் நானும் இல்லைனு அந்த நேரம் எனக்குத் தோன்றியது. நீ எனக்கு வேணும், நான் உயிர் வாழ! உன் உயிராய் நான் வாழ நீ எனக்கு வேணும்னு அப்போ தோணுச்சுடா.

உனக்கு ஒன்னும் ஆகாது. நீ நல்லபடியா என்கிட்ட வந்து சேர்ந்திடுவன்னு நான் எத்தனை முறை ஜெபம் போலச் சொன்னேன்னு எனக்கே தெரியாது.

அந்தத் தவிப்பு, துடிப்பு, தேடல், வலி எல்லாமே நீ தான் என் உயிர்நாடின்னு எனக்குப் புரிய வச்சது உதிமா.

காதலை விளக்கம் சொல்லி புரிந்து கொள்வதை விட, நாமே விளங்கி புரிந்து கொள்ளும் போது ஒரு பரவசம் வருமே? அந்தப் பரவசத்தை நான் இப்போ இந்த நொடி உணர்கிறேன் உதிமா…” என்று உணர்வு பூர்வமாகச் சொன்னவன் கைகள் உணர்ச்சி வேகத்தில் லேசாக நடுங்கின.

தன் தோளில் இருந்த அவனின் கையின் நடுக்கத்தை உணர்ந்தவள், அவனை இன்னும் நெருங்கி அமர்ந்தாள்.

அவனின் கைகளைப் பிடித்துத் தன் கைகளுக்குள் பொதித்துக் கொண்டாள்.

அவளின் இதமான பிடி அவனின் நடுக்கத்தைச் சிறிது சிறிதாகக் குறைத்தது.

“வாழ்க்கையில் நான் மிக மிகச் சந்தோஷமா இருந்த தருணம் எதுன்னு கேட்டால் நான் இந்த நொடியைத் தான் சொல்வேன் முகில்…”

“காதலித்தால் மட்டும் போதாது முகில். காதலிக்கப் படவும் செய்யணும். உங்க காதல் என் காதலை முழுமையடையச் செய்திருக்கு முகில்…” என்று உத்ராவும் தன் உணர்வுகளை வெளிப்படுத்தியவள் காதலுடன் கணவனை நெருங்கினாள்.

அவனின் கழுத்தைச் சுற்றி கையைப் போட்டு அவன் முகத்தை அருகில் இழுத்தவள் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் தன் இதழ்களை அவனின் அதரங்களில் அழுத்தமாகப் பதித்தாள்.

அவளாகத் தான் கேட்காமல் கொடுக்கும் இதழ் அணைப்பு, முகிலை உணர்ச்சிக் குவியலில் மூழ்கடித்தது.

இதழ்கள் முட்டி மோதி தங்கள் காதலுக்கு அச்சாரமிட்டுக் கொண்டன.

உத்ரா இதழ்களை ஒரு கட்டத்தில் விலக்கி கொள்ள முயல, அவளைக் காணாமல் தான் தவித்த தவிப்பை அவளுக்கு உணர்த்துவது போல, அவளின் இதழ்களை விடாமல் தன் உணர்வுகளை அவளின் உதடுகளில் கொட்டினான்.

இருவரும் நிகழ்வுக்கு வந்து இயல்புக்கு வர வெகுநேரம் பிடித்தது.

கணவனின் தோளில் நிம்மதியுடன் சாய்ந்து கொண்ட உத்ரா, “உங்க முகம் இறுக்கமாக இருக்கவும் இன்னும் நான் சண்டை போடுவதை வெறுக்கிறீர்களோன்னு நினைச்சுட்டேன் முகில்…” என்றாள்.

அவளின் தோளை சுற்றிக் கையைப் போட்டு இதமாக அணைத்துக் கொண்டவன், “இல்லை உதிமா, நீ காரணம் இல்லாம யார் கூடவும் சண்டை போடுவது இல்லைன்னு நான் எப்பவோ புரிந்து கொண்டேன்.

“உன்னோட சண்டை எப்பவும் காரணக் காரியத்துக்காக மட்டும் தான் இருக்கும். இன்னைக்கு மாதிரி சூழ்நிலையில் எல்லாம் சண்டை போடாம கையைக் கட்டி வேடிக்கை பார்த்துட்டு இருந்தால் புழுவை விட மோசமான பிறவிகள் ஆகிப் போவோம்.

“நியாயமான கோபம் எல்லா மனுஷனுக்கும் தேவையான ஒன்னு. மனசு நிறையக் கோபம் இருந்தாலும் சிலர் என்னைப் போல எதுக்கு வம்புனு விலகிப் போவோம். உன்னைப் போலப் சிலர் தைரியமா தவறை தட்டிக் கேட்கிறீங்க.

உன்னோட தைரியம் நிச்சயம் வேணும் டா. இன்னைக்கு இருந்த சூழ்நிலைக்கு உன்னோட அந்தத் தைரியம் தான் உன்னை என்கிட்ட பத்திரமா திரும்பக் கொண்டு வந்து சேர்த்திருக்கு.

உன்னோட அந்தத் தைரியத்தை நான் திமிர், சண்டைக்காரின்னு முன்னாடி பளித்ததை நினைச்சு இப்போ எனக்கு வெட்கமா இருக்கு.

“இப்ப எனக்கு இந்த உத்ராவை தான் ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு. நீ நீயாக இருக்கும் இந்த உத்ராவை ரொம்ப ரொம்ப விரும்புறேன்…” என்று முகில்வண்ணன் சொன்ன நொடியில் மீண்டும் தன் இதழ்களை அவனின் இதழ்களில் பதித்தாள் உத்ரா.

‘என்னை அப்படியே விரும்பும் என் கணவன்’ என்ற உணர்வு அவளை மனம் நெகிழ வைத்தது.

“அன்னைக்கு நீங்க என்னை மன்னிச்சுட்டியான்னு கேட்டதுக்குப் பதில் நான் இப்ப சொல்றேன் முகில். உங்க தவறை நீங்க என்னைக்கு முழுமையாக உணர்ந்து மன்னிப்பு கேட்டீங்களோ அப்பவே உங்க தவறு மன்னிக்கப்பட்டு விட்டது முகில்…” என்றாள்.

“இதைச் சொல்ல உனக்கு இத்தனை நாள் ஆச்சா?” என்று கேட்டவன் அவளின் கன்னத்தில் வலிக்காமல் கடித்தான்.

“ஹாஹா… மன்னிப்பு கேட்டதும் இந்தா வச்சுக்கோன்னு கொடுத்தால் அதன் மதிப்புத் தெரியாது முகில். அப்பப்போ இப்படித்தான் சுத்தலில் விடணும்…” என்று குறும்பாகச் சொல்லி சிரித்தாள்.

“நீ ரொம்ப நல்லவள் தான் போ…” என்று அவன் சீண்டலாகச் சொல்ல,

“இல்லையா பின்ன?” என்று புருவத்தை உயர்த்தி, உதட்டை சுளித்துக் கேட்டாள்.

“ரொம்ப ரொம்ப நல்லவள் தான்!” என்றவன், அவளின் இதழ்களை மென்மையாகத் தடவி, “உனக்கு ஒரு விஷயம் தெரியுமா உதிமா? நம்ம கல்யாணத்துக்குப் பிறகு இந்த இதழ்கள் என்னை ரொம்பக் கவர்ந்து இழுத்தது. அதுக்குப் பிறகு தான் நாம கணவன், மனைவி தானே சேர்ந்து வாழ்ந்தால் என்னன்னு தோன்றித்தான் அன்னைக்கு உன் பக்கத்தில் வந்தேன்.

ஆனால் கணவன், மனைவியாகவே இருந்தாலும் சில உணர்வுகள் இருவருக்குமே தனித்தனியானது. ஒருவர் உணர்வை அடுத்தவர் உணர்ந்து அதன் படி இணைந்து வாழ்வது தான் உண்மையான தாம்பத்தியம்னு எனக்குப் புரிய வைத்தது உன் காதல் தான் உதிமா.

வெறும் உடலால் வாழாமல் உள்ளத்தால் இணைந்து வாழும் போது அந்தத் தாம்பத்திய வாழ்க்கைக்குத் தித்திப்பு அதிகம் தான் உதிமா…” என்றான்.

அவனின் புரிதலும் உத்ராவிற்குத் தித்திப்பாக இருந்தது.

“விவரமாகப் பேசக் கத்துக்கிட்டீங்க முகில்…” என்றாள் உத்ரா.

“பின்ன உத்ராவோட ஹஸ்பென்ட்னா சும்மாவா?” என்று பெருமையாகச் சொன்னான் முகில்வண்ணன்.

“அதுவும் இந்த மின்னலுக்கு ஏத்த இடியாக நானும் இருக்க வேண்டாமா என்ன?” என்று கேலியாகக் கேட்டான்.

“என்ன, நான் மின்னலா?” என்று உத்ரா கண்களை உருட்டிக் கொண்டு கேட்க,

“ஆமா, மின்னல் மட்டும் இல்லை, நீ ‘மின்னல் பூ’. கோபத்தில் கொதிக்கும் போது மின்னல்! என்னைக் காதலிப்பதில் பூ போல மென்மை! என்ன மின்னல் பூவே சரி தானே?” என்று அவளிடமே சிரிப்புடன் கேட்டான்.

“இந்த உத்ராவோட ஹஸ்பென்ட் நீங்க சொன்னால் சரியாகத்தான் இருக்கும் முகில்…” என்று அவளும் அவனின் சிரிப்பில் இணைந்து கொண்டாள்.

இருவரின் சிரிப்பும் இணைந்து இன்ப ஒலியாக அறை முழுவதும் நிறைந்து ஒலித்தது.

அவர்களின் வாழ்க்கையில் அந்த இன்ப ஒலி எப்போதும் இணைந்திருக்கும் என்பதை அவர்களின் மலர்ந்த முகமே எடுத்துரைத்தது.

சுபம்