மயிலாப்பூரு மயிலே… ஒரு இறகு போடம்மா! 7.2

அத்தியாயம் – 7.2

கதிர் ‘என்ன செய்யலாம்?’ யோசித்தவாரு கட்டிலில் அமர்ந்திருந்தான்.

அவளை அன்று ரோட்டில் பார்த்த பேசிய பின், பார்வை தூரத்தில் இருந்து கொண்டே தொடர்கிறது. கோபமாக இருந்தாலும் அவளிடம் பேச கொள்ளை ஆசைக் கொண்டான்.

இப்போது வெற்றி, தேன்மொழி ரகசிய காதலை நினைத்தால் அத்தனை ஆச்சர்யமாக இருந்தது.

‘எப்படி கட்டப்பா? உன்னால் இதெப்படி முடிகிறது?’ என பல்வால் தேவன் கட்டப்பா விசுவாசத்தை கண்டு ஆச்சர்யம் கொண்டது போல, அவர்கள் வருடங்களாக பேசாமல் காதலிப்பதில் வியந்தான்.

ரோட்டில் பேசியது சிலருக்குத் தெரிந்து, “என் காதுக்கு கூட வந்துச்சுடா. கவனம்.” என பிரபா எச்சரிக்க, அவன் கூறியதை கேட்டு அதிர்ந்து போனான்.

“ஏன்டா ஒரு பத்து நிமிசம் கூட பேசல. அதுக்குள்ளவா பரவியிருச்சு? ஊருல ஒருத்தனுக்கும் வேல இல்ல போல. அடுத்தவன் என்ன பண்றானு நோட்டம் விடறாதுலையே குறியா இருக்கானுங்க.” எனக் கடுப்பாக கூறியவன், எதற்கு பிரச்சனை என அதன் பிறகு அவளை நேராக சந்திக்கவில்லை.

‘யார் வாய்க்கும் அவலாக வேண்டாம்.’ என நினைத்தான்.

அவள் மேல் உள்ள கோபம், வருத்தம் போய்விட்டதா என்று கேட்டால் இல்லையென்றுதான் சொல்லுவான்.

அந்த கோபம் கொஞ்சம் அதிகப்டியோ… சிறுபெண் தானே அவள் எனத் தோன்றினாலும் எளிதாக அதை விட முடியவில்லை.

அதற்காக அவளை விட்டுக் கொடுக்க முடியாதே? எனவே எப்படியோ கல்யாணம் செய்து கொண்டு பிறகு சண்டை போட்டுக் கொள்வோம் என முடிவெடுத்தான்.

மறுபடியும் பிரச்சனையை கிளப்புவார்களோ என்ற எண்ணம் இப்படியான யோசனைகளை தோற்றுவித்தது.

ஒரே பிரச்சனை… அவள் டிகிரி கூட முடிக்காத சின்ன பெண். லாஸ்ட் இயர் ஸ்டுடென்ட்தான்.

காதலிக்கும் போதும் உறுத்திய விஷயம். அப்போது கல்யாணம் ஆக வருஷம் இருக்கே என சமாதானம் சொல்லிக் கொண்டான்.

இப்போது என்ன சமாதானம் செய்ய? அவனுக்கு பிடிபடவில்லை.

ஒன்று அவர்கள் ( வெற்றி, தேன்) திருமணம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தாங்கள் செய்ய வேண்டும். ஒரு பிரச்சனையாவது முடியும்.

அவர்கள் முடிவு அவன் கையில் இல்லை அல்லவா?எனவே அவன் காதலுக்கு இதுதான் வழி போல என நினைத்தான்.

ஊர் வந்ததிலிருந்தும் சரி, கிளம்பிப் போகும் முன்னமும் சரி அவனுடன் தேன்மொழிக்கு திருமணம் என்ற பேச்சு அவனுக்கு துளியும் பிடிக்கவில்லை. அத்தனை சங்கடம் அவனுக்குள். அவளுக்கும் இஷ்டம் இருக்காது.

பின் ஏன் இப்படி என்ற ஆத்திரமே அன்றைய பேச்சுக்கு வித்திட்டது.

மேலும் மறுபடி வேறு பேச்சைக் கூட எடுத்தாலும் எடுப்பார்கள்.

இந்த பேச்சு வார்த்தையெல்லாம் கமுக்கமாக நடப்பவை.அதுவும் தேன்மொழியிடம் கூட அத்தனை இருக்காது. அவனை மட்டுமே படுத்தினர்.

வெளியே தெரிய ஆரம்பித்தால் வர வேண்டிய ஆள் தானாய் வந்து சேர்வார்.

அதுவும் அவன் மறுப்பிற்குப் பின் சுந்தரத்தின் ஈகோ தூண்டப்பட்டு ‘உன்னை விட நல்ல பையன பாத்து பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியும்.’ யோசனை வந்திருக்கும் என சரியாக யூகித்தான்.

அவனுக்கு அத்தனை பொறுமை என்றுமே இல்லையே.

‘யார பத்தியும் யோசிக்காம கோவத்துல பிரச்சனைய இழுத்து விட்டுறோம்னு சொன்னது உண்மைதான் போல.’ கொஞ்சம் குற்றவுணர்வாக இருந்தது.

தன் கல்யாணத்தை விட, அவர்கள் கல்யாணம் இதற்கு நல்ல தீர்வு என புரிந்தும், எப்படி நடத்த என்றுதான் தெரியவில்லை.

தேன்மொழியிடம் பேச வேண்டும் என முடிவெடுத்தவன், கையை தலைக்கு பின்னே வைத்தவாறு கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தான்.

அவனை அழைக்கும் மற்றும் கதவு தட்டும் ஓசை கேட்டது.

“ம்மா… வாங்க.” என, ஒரு லேசான புன்னகையோடு உள்ளே வந்தார்.

“ஏன் ம்மா கதவலாம் தட்டிகிட்டு?”

“எதும் வேலையா இருப்பயோ என்னவோனு தான் ய்யா.” என அவனருகே வந்து உட்கார, அவர் முகத்தை வைத்தே ஏதோ பேச நினைத்து வந்துள்ளாரென புரிந்து கொண்டான்.

அவனுக்கு எதிரே பேசாமல் இருந்தால் சரி என நினைத்தவன், என்ன விஷயம் என்பது போல பார்த்தான்.

“ஊருல பேசிக்கறதுலாம் உண்மையா ய்யா?” என தயங்கியவாரேதான் கேட்டார்.

மகன் மனதில் பல விஷயங்களை போட்டுக் ஓடிக்கொண்டிருக்கிறான் என நன்றாக புரிந்தது. அவன் விருப்பமும்!

அதை ஏனோ அவரால் குறை கூற முடியவில்லை.

அதேபோல மீண்டும் அவனுக்கு பிடிக்காதது எதும் நடந்து வெளியே சென்று விடுவானோ என பயந்தார்.

அவரை பொறுத்தவரை ஒரு வருடம் முன் இதே கல்யாண பேச்சு பிடிக்காமலே வெளியூர் பறந்து விட்டான்.

ஊருக்குள்ளே சுற்றி கொண்டிருப்பவன்… திடீரென வெளியே சென்று விட, அந்த பிரிவு அவருக்கு உவப்பானதாக இல்லை. அவன் இங்கு வந்த சில நாட்களுக்கு உணர்ச்சியின் பிடியிலேயே இருந்தார்.

எனவே மீண்டும் அவனை வெளியே செல்லும்படி விட்டுவிடக்கூடாது என நினைத்தவர், அவரவர் கோபம், விருப்பத்துக்கு இடையே அவர்கள் வாழ்வு போல், மகன் வாழ்வு பாழாகக் கூடாது என்றே அவன் மனதை அவன் வாயலேயே அறிந்து கொள்ள பேச வந்தார்.

“ஊருல அப்படி என்னம்மா பேசிக்கறாங்க?” ஒன்றும் அறியாதது போலவே கேட்டான்.

சிரித்தவர், “நீ அந்த புவனா பொண்ண கல்யாணம் பண்ண ஆச படுறேன்னுதான் பேசிக்கறாங்க.” என்றார்.

நொடிகள் இடைவெளியில், “என் ஆச தப்பாம்மா? நீங்க எதும் நெனச்சுக்கலையே?” தவிப்பான குரலில் கேள்வி வந்தது.

மற்றவர் மனம் பற்றி அவனுக்கு துளியும் அக்கறை இல்லை. ஆனால் அன்னை அங்கு… அந்த வீட்டில் பெண் எடுப்பதை எப்படி நினைப்பார்? என என்றுமே ஒரு கவலை இருந்தது. அதற்காக அதை மாற்றிக் கொள்ள நினைக்கவில்லை. கவலை மாத்திரமே!

அவரோ இலகுவாக, “இதுல என்ன தப்பிருக்கு தம்பி. நான்லாம் தப்பா நினைக்கல. புடிச்சவ மேல தான ஆசப்பட முடியும்.” என்றுவிட்டார்.

அதில் ஏக மகிழ்ச்சியடைந்தவன், அவரைக் கட்டிக் கொண்டான். இந்த வீட்டில் தன்னை புரிந்து கொண்ட ஒரு ஜீவன் என்ற ஆறுதல்.

அவன் முதுகை நீவிக் கொடுத்தவர், “நெறய பிரச்சனை வருலாம் ய்யா.”

“…”

“அந்த புள்ளய எந்த சூழ்நிலையிலையும் விட்றாத.” ஒரு மாதிரி குரலில் சொன்னார்.

“உங்க அப்பாவும், மாமாவும் அப்படி தான் குதிப்பாங்க. மத்தவங்க மனச பத்தி என்னைக்கு யோசிச்சாங்க?கல்யாணம் பண்ணி அவள நம்ம வீட்டுக்கு மருமவளா கூட்டிட்டு வா. ஆனா வெற்றிக்கு முன்ன கல்யாணம்…” தயக்கமாக நிறுத்தினார்.

அணைப்பிலிருந்து விலகி அவரை கனிவாக பார்த்தான்.

பின், “நானும் அதுக்குத்தான் ம்மா பாக்குறேன்.” என்றவன் வெற்றி மனதைக் கூற, இதை மீனாட்சி எதிர்பார்க்கவில்லை.

பயங்கர அதிர்ச்சி! ஏனோ ஒரு கோடுக்கு பக்கத்தில் பெரிய கோடு போட்டது போல, மகன் காதல் விவகாரம் கொஞ்சம் சிறிய பிரச்சனையாகிவிட்டது.

அவர் அண்ணன் ஆத்திரம் பற்றி அறிந்தவராதலால் தன் பயத்தை மகனிடம் சொல்ல, அவனும், “அதுலாம் அவர் பாத்துக்குவாரு. நானும் இருக்கேன்.” என ஆறுதல் கூறினான்.

மேலும் சில நிமிடங்கள் பேசியபின் வெளியே சென்ற மாணிக்கம் வந்துவிட்ட அரவம் கேட்க, சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

தொடரும்…