மயிலாப்பூரு மயிலே… ஒரு இறகு போடம்மா! 7.1

அத்தியாயம் – 7.1

கார்மேகங்கள் காட்சித் தர, இடியோசைக்கு முன், சிறு குழந்தையின் கிறுக்கலாய் வானில் சில நொடிகள் தோன்றும் பளிச்சென்ற மின்னல்கள், தூரலாய் ஆரம்பித்த மழை என பொழுது ரம்மியமாக இருந்தது.

திறந்திருந்த கதவின் வழியே மழையை பார்த்தவளுக்கு, நினைவுகள் சில எட்டி பார்த்தன.

வழக்கமாக அவர்கள் சந்தித்துக் கொள்ளும் மரத்தடியில் கதிர் காத்திருக்க, அவளை இன்னும் காணவில்லை.

ஏமாற்றமாக இருந்தாலும், முன்பு பெய்த மழை இப்போதும் தொடர்வது போல இருந்ததால் வெளியே அனுப்பியிருக்க மாட்டார்களென கிளம்ப எத்தனிக்க, ஆள் வரும் அரவம் உணர்ந்து யாரென பார்த்தான்.

புவனாவேதான். அவனைக் கண்டதும் பளிச்சென ஒரு புன்னகையை சிந்த, பதிலுக்கு வசீகரமாக புன்னகைத்தான்.

அத்தனை நேரம் சேற்றில் வழுக்கி விழாமல் வந்தவளால், அந்த புன்னகையில் விழாமல் இருக்க முடியவில்லை. ஆனாலும் தன்னை மீட்டவாரு அவனருகே வந்தாள்.

அவள் வந்தது மகிழ்ச்சியாக இருந்தபோதும், ‘மழ வரும்போல இருக்கு, தனியாக வந்துருக்காளே.’ என கடிய, முகத்தை பாவம் போல வைத்துக் கொண்டாள்.

அதனால், “எங்க உன் பிரண்ட்ஸ்?” குறும்பாக கேட்டு பேச்சை மாற்றினான்.

என்னதான் அவனை பார்க்க சிறுவர்களுடன் விளையாடுகிறேன் என அங்கு வந்தாலும், கொஞ்ச நேரத்தில் உண்மையிலேயே விளையாட்டில் மூழ்கிவிடுவாள்.

கண்ணாமூச்சி, ஐந்தாங் கல், பல்லாங்குழி, நொண்டி, கில்லி தாண்டு, ஏழு கல், கிரிக்கெட் என விளையாட்டின் பட்டியல் நீளும்.

பார்ப்பவர் அவள் குணமறிந்து அவள் இதற்குதான் வருகிறாள் போல எனக்கூட நினைப்பார்.

பொதுவாகவே அந்த திட்டில் யாரேனும் உட்கார்வது வழக்கம்தான். எனவே அத்தனை வெளிப்படையாக அவர்கள் சந்திப்பை சந்தேகிக்க இயலாது.

இவனுக்கு தன்னுடன் பேசாமல் விளையாட்டிலேயே இருக்கிறாளே என கடுப்பானாலும், அதையும் ரசிக்கவே செய்வான்.

அப்படியிருக்க பவி மற்றும் நண்டு சிண்டுகள் இல்லாமல் அவள் என்றும் வந்ததில்லை. இன்றே அவளை இங்கு தனியே காண்கிறான்.

அவன் கேள்விக்கு, “அவங்களாம் மழை பெய்ய போகுதுனு வரல.”

“அப்பறோம் நீ மட்டும் ஏன் வந்த? உனக்கு மட்டும் வெயிலடிக்குதா?”

அவன் நக்கலில் கடுப்பானவளுக்கு, “நான்…” என ஆரம்பித்தாலும் என்ன பதில் சொல்ல தெரியவில்லை.

அவனை பார்க்க வந்தேன் என்றா கூறமுடியும்?

“இனிமே இப்படி தனியா வராத. சேஃப்டி முக்கியம்.” என்றான் கண்டிப்பான குரலில் அக்கறையாக.

“அதான் நீங்க இருக்கீங்களே. அப்பறோம் என் சேஃப்டிக்கு என்ன குறைச்சல்?” இயல்பாகவே கேட்டாள்.

“ம்ஹூம்.” என்றவனுக்குத் அவள் சொன்னதில் அத்தனை சந்தோஷம்; கொஞ்சம் கர்வமாக கூட உணர்ந்தான்.

அவன் பாவனைகளை குறுகுறுவென பார்த்தவள், ‘ஓவரா பீல்லாகுறார் போலயே! பேசி நார்மல்லாக்கு.’ தனக்குத் தானே சொல்லிக்கொண்டு,

“உங்க கிட்ட ஒன்னு கேட்ட தப்பா நெனச்சிக்க மாட்டிங்களே?” என,

‘அப்படி என்ன கேக்க போறா? பீடிகைலாம் பலமா இருக்கு.’ யோசித்தவன்,

“கேளேன்.” என்றான்.

“உங்க வீட்ல உங்களுக்கு துணி எடுத்து கொடுப்பாங்களா? மாட்டாங்களா?” என்ன கேள்வி இது என்பது போல பார்க்க,

“இல்ல நீங்க வேலைக்கு போறதில்லல அப்போ வீட்ல தான…” என படபடவென சொல்ல ஆரம்பித்தவள், அவன் முறைப்பில் நிறுத்த,

“வெட்டியா சுத்தறேன்னு குத்தி காட்ற?” ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டே கேட்டான்.

“ச்சே ச்சே… அப்டிலாம் இல்ல. நான் கேக்க வந்ததே வேற. நீங்க கோச்சிக்கறீங்க. நான் சொல்லல.”முறுக்கிக் கொண்டாள்.

“சரி சரி கேக்க வந்தத கேளு.”

“அதான் பிரஸ்டிஜ்ஜ டேமேஜ் பண்ணிட்டியே.” என முனகியவன் ‘இதுக்காகவே சீக்கிரம் வேலைக்கு போகணும்.’ என நினைத்தவாறே சமாதானம் சொன்னதும்,

“அதான் ஏற்கனவே கேட்டுட்டேனே அதுக்கு பதில் சொன்னாதான அடுத்த கேள்வி கேக்க முடியும்.” என,

“சொத்துல எனக்கும் பங்கு உண்டு. அதுலதான நான் செலவு பண்றேன்.” சமாளித்தான்.

‘ம்ம்க்கும்.’ என மனதுக்குள் நொடித்தாலும், வெளியே காட்டிக்கொள்ளாமல்,

“அப்பறோம் போட்ட சட்டையையே மாத்தி மாத்தி போடறீங்க?” என, அவன் முறைத்து பார்க்கவும் உடனே சமாளிப்பாக புன்னகைத்தாள்.

ஆனாலும் விடாமல், “அப்படி என்னதான் இந்த கருப்பு சட்டையில இருக்கு? இதே மாறி எப்பவும் போடறீங்க? கடவுள் நம்பிக்கை இல்லையா?” தன் நீண்ட நாள் சந்தேகத்தை கேட்டாள்.

“ஓஹ்… கருப்பு சட்டைனதும் அப்படி வர?” லேசாக சிரித்தவன்,

“கடவுள் நம்பிக்கைலாம் உண்டு. அப்படி இதுல என்ன இருக்குனா… என்ன சொல்ல? புடிக்கும் அவ்ளோதான். ஏன் நல்லாலையா?” குனிந்து தன்னை ஆராய்ந்தவாறே கேட்டான்.

‘அட்டகாசமா இருக்கு.’ உள்ளுக்குள் சொல்லிக்கொண்டவள்,

பரவலாம் என்பது போல சைகை செய்ய, போலியாக முறைத்தான்.

…..

“ஏன்டி புவனா…” என்ற உலுக்களில், நினைவிலிருந்து நிகழ்வுக்கு வந்தவள்,

“என்னடி?” என்றாள் எரிச்சலாக. அத்தனை இனிமையான நினைப்பை கலைத்து விட்டதால் வந்த எரிச்சல். ஆனாலும் உடனே தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்.

“இந்த கண்ணன பாரேன்.” எனவும், எட்டிப் பார்க்க, ஆசிரியர் கூறுவதை கவனமாக கேட்டுக்கொண்டு நோட்டில் குறித்துக் கொண்டிருந்தான்.

“என்ன அவனுக்கு?” புரியாமல் கேட்டாள்.

“அவனால எப்படிடி இப்படி தூங்காம கவனிக்க முடியுது? எனக்கு சாப்டு தூக்கமா வருது.” என பாவமாக சொல்ல,

“அவன் படிக்கற பையன்டி… அதுலாம் பழக்கம் அவனுக்கு.”

வகுப்பாசிரியர் மும்முறமாக பாடம் எடுத்துகொண்டிருக்க, சிலரைத் தவிர அனைவரும் தாலாட்டுக் கேட்பது போல் தூங்கி வழிந்தனர்.

சாப்பிட்ட பின் வரும் பீரியடில் நடத்தும் பாடம் தாலாட்டாக மாறுவதன் மாயம் என்னவோ?

அதுவே பவியின் புலம்பலுக்கு காரணம்.

அப்போது அவர்கள் குரல் கேட்ட பிருந்தா மிஸ் இருவரையும் எழ சொன்னார்.

‘போச்சு… பேசறத பாத்துட்டாங்க.’ என பவ்வியமாக எழுந்து நின்றனர்.

“என்ன பேசினீங்க?” என்ற கேள்வியில், அதை எங்கனம் கூற? எனவே, “ஒன்னும் இல்ல மேம்.” என்றனர் கோரசாக.

“அப்போ ரெண்டு பேரும் பேசவே இல்லை?

“இல்ல மேம் லெசன்தான் கவனிச்சிட்டு இருந்தோம்.” கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக சொல்ல…

நம்பாமல் பார்த்தவர், போர்ட்டில் இருப்பதைக் காட்டி விளக்கம் கேட்டார்.

பதில் என்ற பெயரில் இவர்களும் உளறிக் கொட்டினர்.

மற்ற மாணவர்கள் அனைவரும் அவர்கள் பதிலில் சிரிக்க, ஆசியர்தான் காண்டாகிப் போனார்.

இத்தனை நேரம் கஷ்டப்பட்டு நடத்தியதில் ஒன்றையும் உருப்படியாக சொல்லவில்லையே!

“அவுட்.” என கத்த, விட்டால் போதுமென வெளியே ஓடிவிட்டனர்.

வெளியே வந்ததும், பவி புவனாவிடம், “மேம் கிரிக்கெட் ஃபேன் போல. அவுட்னு என்னாமா சவுண்ட் விடுறாங்க. ஆனா இங்க தான் மேட்ச்சே நடக்கலையே?” என கிண்டல் பேச, பக்கென சிரித்துவிட்டாள்.

“வெளியவும் பேசினீங்கனா அப்டியே போய் பிரின்சிபால்ல பாத்துட்டு வரணும்.” என்ற அவர் கோபக்குரலில், முடிந்த அளவு சிரிப்பை கட்டுப்படுத்தியவாரு சுற்றிலும் வேடிக்கை பார்த்துக்கொண்டு அதன்பின் அமைதியாக நின்றனர்.

தன்னை சுற்றி நடக்கும் பிரச்சனை எதும் பெரிதாக தெரியாமல் புவனா நாட்கள் இயல்பாகதான் சென்றது. ஒன்றில் தான் சோகம்.

ஆனால் திருவிழா சமயம் ஒரு விஷயத்தில் எத்தனை காண்டாக போகிறோமென அவள் அப்போது அறியவில்லை.