மயிலாப்பூரு மயிலே… ஒரு இறகு போடம்மா! 5

அத்தியாயம் – 5

மதிய உணவிற்க்கு வீட்டுக்கு வந்த வெற்றி கை கால்களை கழுவிவிட்டு ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்திருக்க,

“அப்பு.” என்ற அழைப்பில்,

“சொல்லுங்க பாட்டி.” என திரும்பினான்.

பாட்டி… வெற்றிக்கு எல்லாமே அவர்தானே. பாசத்தை விவரம் தெரிந்து உணர்ந்தது அவரிடமே. அவன் ஏங்கிய அனைத்து பாசமும் கிடைத்ததோ இல்லையோ… பாசத்திற்கே ஏங்கி நிற்காமல் இருக்குமாறு அன்பாக பார்த்துக் கொண்டார் அவனையும், புவனாவையும். அவளோ அவன் வளர்த்த குட்டிப்பெண்.

பாட்டி, வெற்றி, புவனா என ஒரு அழகிய சிறு குடும்பம். அதில் மேலும் இரு நபர்கள் இணைய நடக்க இருக்கும் பிரச்சனைகள் என்னென்னவோ?

அவன் கைகளில் ஒரு கவரை திணிக்க, அதனுள் இருப்பதை எடுத்துப் பார்த்தான்.

நீட்டாக டிரஸ் செய்து போஸ் கொடுத்துக் கொண்டிருந்த பல இளைஞர்களின் படம் இருந்தது.

சட்டென விஷயம் புரியாமல் அவரை பார்க்க, “காலையில தான் புரோக்கர்ட்ட சொன்னேன். நம்ம ஈசுக்கு…” என ஆரம்பித்தவரை, வேகமாக இடைமறித்தான்.

“படிக்கற பொண்ணு… அவளுக்கு என்ன இப்போ கல்யாண வயசு வந்துருச்சுனு இதுலாம் பண்றீங்க?” என சற்று கோபமாக கேட்டவனை, பரிவாக பார்த்தவர்,

“வயசுல என்ன இருக்கு ப்பு. நான்லாம் இந்த வயசுக்கு முன்னமே பையனே பெத்துட்டேன்.”

“அது அப்போ பாட்டி.”

“அப்போ இப்ப?”

“இப்போலாம் வேற. அவள்…” என சொல்ல வந்தவனை,

“அவள் ஏற்கனவே பையன முடிவு பண்ணிட்டா. இதுலாம் எதுக்குனு சொல்றியா ப்பு?” என்றார் சட்டென, ஆனால் அமைதியான குரலில்.

கொஞ்ச நேரம் அவன் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே நிமிடங்கள் கழிந்தது. ஊரில் பலரும் அறிந்த செய்திதான்.

இவர்களைப் போல அத்தனை ரகசியம் இல்லையே அவர்கள் காதல்!

அதும் கதிரின் அன்றைய ஒரு நாள் கோபம், அனைவரும் அறிந்து கொள்ள முக்கிய காரணமாகிப் போனது.

வெற்றிக்கு அதற்கு முன்பே தெரியும். ஆனால் இதைப் பற்றி ஒருவார்த்தை புவனாவிடம் கேட்டதில்லை.

அவன் மீது நம்பிக்கையா? அவள் மீது நம்பிக்கையா? ரெண்டும்தான்.

அவன் வெளியே சென்றதுகூட ஒருவகையில் நல்லதுதான் என நினைத்தான்.

சில நாட்களுக்கு முன்பு அவன் ஊருக்கு வந்ததையும் அறிவான்.

நேற்றுக்காலை இருவரும் பஸ் ஸ்டாப்பில் பேசிக்கொண்டது அவனுக்கே நேற்று பொழுது சாயும் நேரம்தான் தெரியும்.

அதற்குள் இந்த பாட்டிக்கு யார் சொல்லியிருப்பார்களென ஆச்சர்யமாக இருந்தது. அதை கேள்விப்பட்டே இப்படி போட்டு வாங்க பார்க்கிறார் என நன்றாக புரிந்தது.

வெளியே செல்லாவிட்டாலும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வீடு தேடி வந்து உடனடித் தகவலை பரப்பும் திறமையை மெச்சிக்கொண்டான்.

அதேமயம் இதற்கு மேலும் பேசாமல் விட்டால் சரிவராது என, “ஏன் பாட்டி… அவள் பாத்த ஆளுக்கு என்ன குறச்சலு?” என குறும்பாக கேட்டான்.

அவரோ, “அந்த குடும்பம் நமக்கு வேணாம்யா.” என்றார் கண்கலங்கியவாரு.

அதில் விளையாட்டை விடுத்தவன், “அந்த குடும்பமா?” என ஆழ்ந்த குரலில் கேட்டவன் கண்கள் தானாக சுவற்றில் மாட்டியிருந்த சிலரின் புகைப்படங்களை உற்று நோக்கியது.

பின் சில நொடிகளில் தன்னை சமன்படுத்தியவன், “அவங்க எப்படி வேணா இருக்கட்டும் பாட்டி; அவன் அப்டியில்ல; எனக்குத் தெரியும்; நல்லப் பையன்.”

“அவனுக்கு பொசுக்கு பொசுக்குன்னு கோபம் வரும்; கைய நீட்டுவான்; பாவம் நம்ம புள்ள.” மறுக்க காரணங்கள் வந்தது.

“அதுலாம் வேணும்னு யாராச்சும் வாங்கி கட்டிக்கறது பாட்டி. மத்தபடி பண்பாதான் பேசுவான்.”

‘நீ எப்போ பேசி பார்த்தாய்?’ அவர் பார்வையில் கேள்வி தொக்கி நின்றது.

“பேசாட்டாலும் புரியும்.” சிரிப்புடன் சொன்னான்.

அவர் மேலும் மறுத்து பேசவருவதை தடுத்து, “இதுவர அவன்கிட்ட நீங்க பட்ட கோபம், பேசுன பேச்சு, ஒதுக்கனதுலாம் போதும் பாட்டி. உங்களுக்கு அவன் மேல பாசம் இல்லையா? அவங்க எனக்கு பண்ணதையே நீங்களும் அவனுக்கு பண்ணுவீங்களா?” என கேட்க, அவருக்கு அழுகை மட்டும்தான் வந்தது.

அவருக்கும் புரிந்தது கதிரிடம் தான் எப்போதும் நடந்து கொள்ளும் முறை தவறென. ஆனாலும் சிலதை மாற்றிக் கொள்ள இயலவில்லை. வீம்பு… யார் மீதோ உள்ள கோபத்தை அவன் மீதும் காட்டினார்.

இருவரும் நேருக்கு நேர் பார்த்தால் சண்டைதான்.

ஒரு கட்டத்தில் கடுப்பாகும் கதிர், “வயசாயும் வாய் ஓயுதா பாரு கிழவிக்கு.” என்றுவிட்டு சென்றுவிடுவான்.

அவரும், “போடா… மறுபடி கண்ணுக்கு எதிர வராத பாத்துக்க. கிழவியாம்ல.” என கத்துவார்.

இப்படி பேசினாலும் மனதுக்குள் பாசமில்லாமல் இல்லை. அந்த சண்டியரை அவருக்குமே பிடிக்கும்.

அவரின் கண்ணீரைத் மென்மையாக துடைத்து விட்டவன், “இதுல பிரச்சனை வரும்னு எனக்கும் புரிது பாட்டி. பாத்துக்கலாம். எல்லாத்தையும் விட அவங்க சந்தோஷம்தான் முக்கியம்.” என சொல்ல, அவருக்கு இந்த வார்த்தை சாட்டையால் அடித்தது போல இருந்தது.

இந்த வார்த்தை… இதை முன்பு ஒருமுறை கூறியிருந்தால் பல பிரச்சனைகளையும், விஷயங்களையும், கஷ்டங்களையும் தவிர்த்திருக்கலாமென நினைக்காமல் இருக்க முடியவில்லை.

இப்போ நினைத்து என்ன ஆகப்போகிறது?

மனது கலங்கினாலும், எப்போது போல தன் அன்பு பேரனின் சொல்லுக்கு ஒத்துக்கொண்டவர், “நீ சொன்னா சரியாதான் இருக்கும் ப்பு.” என,

ஒரு புன்சிரிப்போடு அதை ஏற்றவன், அவர் கைகளை அழுத்தமாக பற்றிக்கொண்டான்; ‘நான் உள்ளேன்.’ என்பது போல.

மேலும் புவனாவிடம் இதைப்பற்றி கேட்கவேண்டாம் என சொன்னவன்,

அதன் பின் மதிய உணவை பல சிந்தனைகளுடன் உண்டவன், வயலுக்கு புறப்பட்டுவிட்டான்.

===

“என்ன புவனா உன் முகத்துல ஒரு தேஜஸ் தெரியுது.”

“அப்டியா? இல்லையே எப்போவும் போலதான் இருக்கேன்.” என்றவளை நம்பாத பார்வை பார்த்தாள்.

கதிர், புவனாவிற்கு இடையே உள்ளதை பவி அறிவாள். ஒரு வருடமாக அவன் வெளியே சென்றுவிட, அவளிடம் இருந்த துறுதுறுப்பு காணாமல் போகாவிட்டாலும், கொஞ்சம் குறைந்து போனது.

இன்றே… பழைய புவனாவை பார்ப்பது போல இருந்தது.

புவனாவுக்கு கதிரை நேற்று கண்டதால் வந்த தேஜஸ் அது. அவனை வெகுநாட்கள் கழித்து பார்த்ததால் உணர்ச்சிவசப்பட்டு அழுகை வந்துவிட்டது.

அவன் முன்போல பேசாதது வலித்தாலும், எப்படியும் பேசிவிடுவான் என தன்னைத்தானே தேற்றிக் கொண்டாள்.

அவன் இங்கு உள்ளான்… அவள் பார்க்கும் தூரத்தில். அதுவே அவளுக்கு இப்போதைக்கு போதுமானதாக இருக்கிறது.

இப்போதைக்கு மட்டும்… சீக்கிரமாக பழையபடி பேசவேண்டும் என்றே ஆசைகொண்டாள்.

வேக வேகமாக நடந்தவர்கள் கோவிலை எட்டிவிட்டனர்.

“என்ன எதுக்குடி கூட்டிட்டு வர?” என சலிப்பாக வினவியவளை,

“பவி… இன்னைக்கு கோவில்ல பௌர்ணமி பூஜடி.” எனக் கூறி முப்பத்தியிரண்டு பல்லையும் காட்ட…

அவளோ, “அதுக்கு?” என்றாள் அசால்ட்டாக.

“இன்னைக்கு பொங்கல்…” என ஆரம்பித்தவள் பேச்சில், உடனே கடுப்பாகிய பவி, அவளை வெட்டவா குத்தவா என்பது போல பார்த்தாள்.

முன்பே முடித்து வைத்திருக்க வேண்டிய ஒரு முக்கியமான அசைன்மென்ட்டை விட்டுவிட்டு கோவிலுக்கு அழைக்கிறாளே, பக்தியோ இல்லை அவரை பார்க்கவோ என துணைக்கு வந்தால், பொங்கலுக்கா இந்த பயணம்?

“அப்படி அந்த பொங்கல்ல என்னடி இருக்கு?” என்ற கேள்வியில் வெகுண்டவள்,

“என்ன வார்த்தை கேட்டுட்ட? பொங்கல்ல என்னடி இல்ல?” என பதில் கேள்வி கேட்டுவிட்டு விளக்கம் கூற ஆரம்பித்தாள்.

“வெல்லம் போட்டு, நெய் ஊத்தி, திராட்ச்சை, முந்திரி, ஏலக்காய்லாம் போட்டு, நல்லா சூடா, இனிப்பா இருக்குமே… ஸ்ஸ்…” எனக்கூறிவிட்டு அவள் முகம் பார்க்க, அவள் விவரிப்பில் பவிக்கும் நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்துவிட்டது.

அசைன்மென்ட்டை மறந்தவள், “ஆமா… என்ன இல்ல அதுல? சீக்கிரமா வா போவோம். தீர்ந்துட போகுது.” என பரபரக்க சிரித்துவிட்டாள்.

“அதுலாம் தீராது. இரு… கொஞ்சம் லேட்டாகட்டும். கொஞ்சம் கடைசியா போனாதான் நெறய கொடுப்பாங்க.” என அமைதிபடுத்திவிட்டு, அங்கிருக்கும் ஒரு திட்டில் அமர்ந்து கொள்ள, அவளும் உட்கார்ந்து கொண்டாள்.

அவளின் இத்தனை நேர விவரிப்பை ஒரு தூணின் பின் நின்று அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்டுகொண்டிருந்த கதிர், “சரியான பொங்கல் பைத்தியம்.” என செல்லமாக திட்டிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டான்.

சாமிக்கு ஒரு ஹாய் சொல்லிவிட்டு அவளை பார்க்கத்தான் வந்தான். கண்டதும் கிளம்பிவிட்டான்.

புவனா… அவனுக்காகதான் முக்கியமாக வந்திருந்தாள். எப்போதும் பௌர்ணமி அன்று அவள் கோவில் வருவாள் என்பதால் அவனும் வருவான்.

இந்த ஒருவருடமாக அவனை இந்த கோவிலில் நிரம்ப மிஸ் செய்தாள்.

இங்கேதான் இருக்கிறான் என இப்போதும் அவள் உள்மனம் கூறியது. பார்வையை சுழலவிட்டவளின் கண்களின் அவன் சிக்கவில்லை.

“ஏன் மல்லி பொங்கல் தீர்ந்துட போகுது. வந்த வேலைய பாக்குறது.” என கேலி நிரம்பிய குரலில் தோழியுடன் பேசுவது போல ஜாடை பேசியபடி அவளைத் தாண்டி சென்ற தேன்மொழியை இவள் முறைக்க, அவளும் முறைப்பது போன்ற ஒரு பார்வையை செலுத்திவிட்டு நகர்ந்தாள்.

“பாத்தியாடி அவளுக்கு கொழுப்ப?” என்று பவியிடம் புகார் சொன்னவளின் கண்கள்… தேன்மொழியின் நீண்ட பின்னலிலேயே இருந்தது.

“முடி நீளமா இருக்கவங்களுக்கு திமிரு அதிகம்னு சொல்லுவாங்க. இவ விஷயத்துல சரியா இருக்கு.” என முனகியவள் மனதுக்குள்,

‘இவளுக்கு மட்டும் எப்படி முடி இவ்ளோ நீளமா இருக்கு?’ என சுணங்கினாள்.

தலைக்கு குளித்து க்ளிப் போடப்பட்டிருக்கும் தன் குட்டி கூந்தலை தொட்டுப் பார்த்தாள்.

ஏனோ புவனா தேன்மொழி ரொம்ப அழகு என்று நினைப்பாள்.

கொஞ்சம் உயரமாக, அதற்க்கேற்ற எடையோடு, சந்தன நிறத்தில், மை பூசிய விழிகளுடன், புன்சிரிப்புடன், அமைதியைக் காட்டும் முகம்.

அவள் தாவணி உடுத்தும் விதம்; பின்னல் அசைந்தாட அன்ன நடையிட்டு செல்லுவது எல்லாமே அழகு.

ஆனால் புவனாவும் அதற்கு சளைக்காத அழகுதான்.

உண்மையை சொன்னால் நாம் எப்படி இருக்கிறோமோ அப்படி அழகுதான்.

மாநிறம்; ரொம்ப உயரமில்லை; சற்று பொசு பொசுவென இருப்பாள். இயல்பாக உடுத்தும் தாவணி; காதில் உள்ள ஜிமிக்கி;

உப்பிய கன்னங்களும், அழகிய விழிகளும், அவளின் அந்த சிரிப்பும்… முகத்தில் இருக்கும் குறும்பும்… கியூட்.

ஆனாலும் நம்மிடம் எது இல்லையோ அதை நினைத்துதானே மனம் ஏங்கும்! எனவேதான் இப்படி ஒரு நினைப்பு அவளுக்கு.

இத்தனை நேரம் அவளை அழகி என்று புகழ்ந்த மனம், ‘மாமாவுக்கு ரசனையே இல்லை.’ என்றும் சொன்னது.

லாஜிக்கே இல்லை என்றாலும் அப்படித்தான் கடைசியாக நினைத்தாள்.

“ஏன் தேனு அவகிட்ட இப்படி பேசுற?” என்ற மல்லியின் கேள்வியில் சிரித்தவள்,

“சும்மாதான்டி.” என்றாள்.

“உனக்கு அவள புடிக்காதா?”

“ச்சே ச்சே… அப்டிலாம் இல்ல. புடிக்கும்…”

“அப்புறம் ஏன் எப்பவும் இப்படி அவள வம்பிலுக்கற?”

“நெஜமா விளையாட்டுக்குத்தான்.” என்றவளை முறைக்க,

“பின்ன நான் என்னடி பண்ணேன்? எப்போவும் என்ன காரணமே இல்லாம முறச்சிட்டே இருந்தா… அதான் நானே ஒரண்ட இழுத்து காரணம் கொடுக்கறேன்.” எனக்கூறியவளை பார்த்து தலையில் அடித்துக் கொண்டவள், அவளுடன் பூஜை நடக்கும் இடம் சென்றாள்.

தொடரும்…