மயிலாப்பூரு மயிலே… ஒரு இறகு போடம்மா! 19

அத்தியாயம் – 19

“பாத்தியா எனக்கு பயமா இல்ல…”

கிணற்றருகில் நின்று, கண்களில் தோன்றும் கலவரத்தை மறைத்தவாரு கூறுபவளைக் கண்டு, மல்லிக்கு ஒருபக்கம் கோபமாகவும், மறுப்பக்கம் சிரிப்பாகவும் இருந்தது.

நேற்று பேச்சுவாக்கில் தேன் ஒரு தொடைநடுங்கியென்ற உண்மையை கூறிவிட,

“நான் பயப்படுறேன்னு நீ நெனைக்குற ஏதாவது பெருசா சொல்லு. நான் அத பண்றேன்.” சவால் விட்டவளை,

அவளுக்கு பயமென அறிந்தும் அருகில் இருக்கிறோமே என்றதால் இங்கு அழைத்து வந்தாள்.

அவளுக்கு எதுனாலெல்லாம் பயமென்றால் பெரிய லிஸ்ட் போகும்.

அதிலொன்று கிணறு, ஆழம் என்பது.

அதிகாலையில் அதனை பக்கத்தில் நின்று எட்டிப் பார்க்க வேண்டும் அதுவே டாஸ்க்.

நேர்த்திக்கடன் அது இதுவென கதைவிட்டு இவள் கிளம்ப, இருவரும் வந்திருந்தனர்.

அப்போது பார்த்து மல்லிக்கு வெளியூரில் இருக்கும் அண்ணனிடமிருந்து அழைப்பு வர, எடுத்தவள் சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

அவளுக்கு அந்த கிணற்றின் ஆழத்தைக் கண்டு தலையே சுற்றியது.

‘இதுலலாம் எப்படி மேலருந்து குதிக்கறாங்க?’ தீவிரமாக சிந்தித்தவள் பின்னே சத்தம் கேட்க, திரும்பியவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.

அவர்கள் இருப்பது மல்லியின் காட்டில்தான்.

அங்குதான் போறோமென சொல்லும்போதே, “உங்க நாய் தூரத்துல என்ன கண்டாலே அப்படி கொரைக்கும். நான் வரல.” என மறுத்தவளை,

“நான் பக்கத்துல இருக்கேன்ல அப்பறோம் என்ன தைரியசாலி? அது உன்ன ஒன்னும் பண்ணாது.” எனக்கூறி இழுத்து வந்தாள்.

மல்லி இயல்பாகவே துணிச்சலான பெண். தேன் இப்படி எதற்கெடுத்தாலும் பயப்படாமல், தைரியமாக இருக்கவேண்டுமென நினைப்பாள்.

அதற்கு பல முயற்சியும் செய்து பார்த்திருக்கிறாள். இதுவரை எல்லாம் வீணெ.

இன்றும் அப்டியாப்பட்ட ஒரு முயற்சிகிக்கே அவளை அழைத்து வந்தாள்.

‘இவள நம்பி வந்ததுக்கு…’ விட்டால் அழுந்துவிடுவேன் ரேஞ்சுக்கு அந்த நாயை பாவமாக பார்க்க, அதுவோ அவளை முறைத்துக் கொண்டிருந்தது.

சற்று தூரத்தில் திரும்பி நின்றபடி போன் பேசியவளை, “ஏய்…மல்லி.” என கொஞ்சம் சத்தமாக அழைக்க, நாயோ ‘உர்ர்…’ என்றது.

கத்தி அழைக்கவும் பயம்; நாயை எதிர்கொள்ளவும் பயம்; என்ன செய்யவென தெரியாமல் பீதியில் நின்றிருக்க உறுமுவது போல நாய் சவுண்ட் விட்டுக்கொண்டே அவளருகே வந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக பின்னோக்கி சென்றவள் கால், ஒரு கல்லில் வைக்கும்போது பிரட்டிவிட, அப்படியே பின்னோக்கி சாய்ந்து விட்டாள்.

அவர்களுக்கு பக்கத்து இடம் வெற்றியுடையதுதான்.

எதற்கோ அன்று சீக்கிரம் தோப்புக்கு வந்தவன் கண்களில் அவள் கிணற்றுக்குள் தவறி விழும் காட்சி பட்டுவிட, ஏதோ விபரீதமென உணர்ந்து வேங்கையென பாய்ந்தோடி வந்தான்.

நொடியும் தாமதிக்காமல் உள்ளே குதித்தவன் அவளைத் தேட, சில நொடிகளிளேயே கைகளில் சிக்கினாள்.

இடையோடு அவளை அணைத்து, பத்திரமாக கைவளைவில் பிடித்துக் கொண்டான்.

வெளிச்சம் குறைவாக இருக்க, யாரென இன்னும் பார்க்ககூட இல்லை. காப்பாற்றும் எண்ணம் மட்டுமே அவன் மனதில் இருந்தது.

பயத்தில் அவள் மயங்கியிருக்க, கைகளில் ஏந்திக்கொண்டு, மெதுவாக படிக்கட்டில் மேலேறி வந்தான்.

தண்ணீரில் யாரோ விழும் சத்தம் கேட்டும், நாய் குரைக்கும் சத்தம் கேட்டும் அங்கு ஓடிவந்த மல்லி, வெற்றியும் உள்ளே விழ நின்றுகொண்டாள்.

அந்நேரம் பார்த்து வெற்றியைத் தவிர அங்கு யாருமில்லை.

மல்லியை கொஞ்சம் கண்டிப்பாக பார்த்தவாறே அவளை கீழே வைத்துவிட்டு எழ பார்க்க, மயக்கத்தின்‌ முன் அவன் சட்டையை பற்றியிருந்தவளது கை அவனைத் தடுத்தது.

மெதுவாக அதனை பிரித்துவிட்டவன், அப்போதுதான் அவளை கவனித்து, யாரென கண்டுகொண்டான்.

அவளை உடனே மல்லி தாங்கி, எழுப்ப மெதுவாக கன்னத்தில் தட்டினாள்.

“நீச்சல் தெரியாம இருக்கவங்கள எதுக்கு இங்க இந்நேரத்துக்கு கூட்டிட்டு வந்தமா? யாரும் இல்லனா என்னாகுறது?” என கடிய,

அவளுக்கும் தோழியின் நிலை கண்டு கண்களில் கண்ணீர் வந்தது.

அதில் கொஞ்சம் அமைதியானவன், “இனிமே கவனமா இருங்க.” என்றான்.

தேன்மொழி கொஞ்சம் இருமியவாறே கண்களைத் திறக்க ஆரம்பிக்க, மல்லி தந்தை வருவதை பார்த்தவன், டக்கென சென்றுவிட்டான்.

அதன்பின் அவள் எழுந்ததும், மல்லியை திட்டோ திட்டு என திட்ட, எப்டியோ சமாளித்து அவளை சமாதானம் செய்தாள்.

மல்லியின் அப்பா அவள் கண் விழித்த பின் எதும் பிரச்சனையில்லையென நகர்ந்த பின்தான்…

“யார் என்ன காப்பாத்தினது?” கேட்டாள்.

ஏனோ… கொஞ்சம் மயக்கத்தில் இருந்தாலும், அவள் உணர்ந்த ஸ்பரிசம் அவளை ஒருவித அவஸ்த்தைக்குள்ளாக்கியது.

தேனின் கேள்வியில், ‘இவகிட்ட யார் காப்பாத்தினானு சொன்னா… யாரும் பாத்து வீட்ல சொன்னானு புலம்ப ஆரம்பிச்சுடுவாளோ… சொல்லலாமா? வேணாமா?” என தயங்க,

“சொல்லுடி.” அவள் ஊக்கவும், உண்மையை சொல்லிவிட்டாள்.

ஆனால் அவள் எதிர்பார்த்ததுக்கு மாறான அமைதிதான் அவளிடம்.

என்னவென கேட்டாலும் ஒன்றுமில்லையென மறுத்தவள், சற்று நேரம் கழித்து வீட்டிற்கு புறப்பட்டுவிட்டாள்.

வெற்றிக்கோ,

கைகளில் அவளின் ஸ்பரிசத்தை இன்னுமே உணர முடிவதுபோல இருந்தது.

அவளை தழுவிய கைகள் ஒருவித சிலிர்ப்பை கொடுத்தது.

சட்டென தலையை உலுக்கிக் கொண்டவன், ‘உதவி… அதுக்குதான் காப்பாத்தினோம். யாரா இருந்தாலும் அததான் பண்ணிருப்போம். தேவையில்லாதத யோசிக்காத.’ அவனுக்கே சொல்லிக்கொண்டு நகர்ந்துவிட்டான்.

காலமெல்லாம் அவள் பற்றி யோசிப்பதே முக்கிய தேவையாக இருக்கப்போகிறதென அவன் அப்போது அறியவில்லை.

இதுவே அவர்களிடையே பெயரிடப்படாத ஒரு உணர்வை ஏற்படுத்த சிறிய காரணமாக அமைந்தது.

அதுவும் தேன்மொழிக்கு…

மீனாட்சி எத்தனை சுதந்திரம் கொடுத்து அன்பாக வளர்க்கப்பட்டாரோ, அதைவிட அதிகமான கட்டுப்பாட்டுடன், கண்டிப்புடன் தேன்மொழி வளர்க்கப்பட்டாள்.

அவள் வீட்டில் ஆண்கள் எப்போதும் எறிந்து விழுந்துதான் பார்த்திருக்கிறாள்.

வெற்றியின் முகத்தில் எப்போதுமிருக்கும் மென்மை மற்றவர்களிடத்தில் இருந்து அவனை தனித்து காட்டியது.

புவனாவுடன் அவன் அன்பாக பேசுவதை எங்கேயேனும் கண்டால், யாருமறியாமல் ரசிப்பாள்.

வீட்டில் யாருக்கேனும் தெரிந்தால் தோலை உரித்து விடுவார்களென்பதால், அவனைக் கண்டாலும் தவிர்க்க நிறைய முயன்றுள்ளாள். ஆனால் உண்மையில் முடியவில்லை. தோழியிடம் கூட இதைபற்றி கூறியிருக்கவில்லை.

ஆரம்பத்தில்,

“என்ன இருந்தாலும் அவரும் நமக்கு சொந்தம்தான… கதிர் மாமா போல. அதான் அவர கொஞ்சமா புடிக்கும். அதுக்கும் மேல எதுமில்ல.” என மனதுக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டவளுக்கு, இப்போது தோன்றும் குறுகுறுப்பை எந்த வகையில் சேர்த்தவென தெரியவில்லை.

யோசித்தவளுக்கு விடையும் கிடைக்காமல் போக, ரொம்ப சிந்திக்காமல் விட்டுவிட்டாள்.

ஆனால் அதன்பின் வெற்றியை முன்புபோல எளிதாக கண்டுகொள்ளாமல் இருக்க முடியவில்லை.

முன்பும் அவனைப் பார்த்தால்தான். ஆனால் அதுவேறு. இப்போது தான் பார்ப்பது வேறு என்று அவளுக்கு நன்றாக புரிந்தது.

உள்ளுக்குள் வீட்டை நினைத்து கடலளவு பயம் வந்தாலும், கொஞ்ச கொஞ்சமாக அவள் மனம் காதல் வயப்பட்டது.

முதலில் வெற்றி இதை கவனிக்கவில்லை. கவனித்தபோது, ‘இதேதுடா வம்பு.’ என்றுதான் நினைத்தான்.

‘காப்பாற்றியதைக் கண்டு ஹீரோ போல நினைத்துவிட்டால் போலும். சிறுபெண் விரைவில் புரிந்து கொள்வாள்.’ என கண்டு கொள்ளாமலிருந்தான்.

ஆனால் வாரங்களாகியும் அவள் பார்வை அவன்மீது தொடர்ந்து, ஒரு கட்டத்தில் அவனையே தடுமாற வைத்தது.

‘இருக்கும் பிரச்சனை போதவில்லையென்று புதிதாக ஒன்று. இதை வளர விடக்கூடாது.’ என முடிவெடுத்தான்.

அதற்குத் தக்க போல கோவிலில் ஒருநாள் அவள் அவனை தேடிக்கொண்டே வர, ஓரிடத்தில் மறைந்து நின்றிருந்தவன், அனைத்தையும் கவனித்தான்.

இயல்பாக பார்வையை சுழற்றுவது போல வந்தவள் கண்டது, கைகளைக் கட்டிக் கொண்டு சுவரில் சாய்ந்து தன்னையே பார்த்திருக்கும் வெற்றியைத்தான்.

அவன் ஊடுருவும் பார்வையிலேயே தன்னை… தன் மனதை கண்டு கொண்டானென புரிந்துபோனது.

ஆனால் அவளை நோக்கி அழுத்தமான காலடிகளோடு அவன் வர, உண்மையில் திடுக்கிட்டுப் போனாள்.

எப்போதும் கனிவை சுமந்திருக்கும் முகம், கோபமாக இருப்பதே அவளுக்கு என்னவோ போலிருந்தது.

அப்படியிருக்க அவன் முறைத்துக் கொண்டே அருகே வரவும், திட்டிவிடுவானோ என்ற பயத்தில் கண்கள் கலங்கிவிட, யாரோ வரும் அரவம் கேட்கவும் ஓடியேவிட்டாள்.

அவள் கலங்கிய கண்களை பார்த்த போதே, வெற்றிக்கு நடையின் வேகம் குறைந்துபோனது.

அவளிடம் காயப்படுத்தும்படி பேசி, இனி இதுபோல நடக்காதவாரு செய்யத்தான் வந்தான். ஆனால் பேசுவதற்கு முன்பே கலங்குகிறாள்.

இது அவனுக்கு சந்தோசமாகதான் இருந்திருக்கவேண்டும். ஆனால் அப்படியிருக்கவில்லை. 

அவளை கண்காணிக்கும் போது, எந்தெந்த கிழமையில் அவள் கோவில் வருகிறாளென அறிந்து வைத்திருந்தான்.

அதன்படி அவள் புதனுக்கும், வெள்ளிக்கும் கோவில் வரவில்லை.

இதுவும் அவனுக்கு உவப்பானதாக இல்லாமல், கசக்கவே செய்தது.

அந்த தவிப்பு அவனுக்கு ஏனென்று புரியாதது… ஆனால் இம்முறை அப்படியே விடுவிட்டான்.

ஞாயிறன்று, ‘அவள் வருவாளா அவள் வருவாளா’ என்று பாட்டு பாடும் அளவுக்கு எதிர்பார்த்துதான் போனான்.

தேன்மொழியும் அன்று வந்துவிட, உள்ளே அளவில்லா மகிழ்ச்சி.

ஆனாலும் அவள் அவனை பார்க்கவில்லை. ஆரம்பத்தில் உணராதிருந்தவனுக்கு புரியும்போது,

‘என்னவாம் இவளுக்கு இப்போ?’ ஒரு மனம் சுணங்க,

‘இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா!’ மற்றொரு மனம் நக்கல் செய்தது.

அவனுக்கு உண்மையில் என்ன வேண்டுமென அவனுக்கே தெரியவில்லை.

பிரச்சனை வருமென புரிந்து முதலில் மறுத்து வேண்டாமென சொன்ன மனம், இந்த கொஞ்ச நாட்களிலேயே, ‘வந்தால் வரட்டுமே. பார்த்துக் கொள்வேன்.’ என சொன்னது.

அவள் முதலில் பார்த்தது, தான் அருகே போகவும் பயந்தது எல்லாமே மனதுக்குள் மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்ப்பான்.

அவள் கண்ணீர் மட்டும்தான் அவனை வருத்தும். மற்றபடி அனைத்தும் அழகான நினைவுகளானது.

இதற்குமுன் வெற்றி இதுபோலவெல்லாம் யாரையும் பார்த்ததில்லை. இனி பார்க்கப் போவதுமில்லை.

ஆகமொத்தம் விழிகள் கொண்டே, அந்த ஆறடி ஆண்மகனை பாவையவள் விழ்த்தியிருந்தாள்.

அடிக்கடி கோவில் வரமுடியாதென்பதால், வாரம் ஒருமுறையென குறைத்துக் கொண்டான்.

ஆனால் முதலில் அவனை பார்த்து இம்சித்தவள், இப்போது பார்க்காமல் இம்சித்தாள்.

தேன்மொழியோ உண்மையில் மீண்டும் கோபமாக திட்ட வந்துவிடுவானோ என பயந்தே கண்டுக்காதது போல இருந்தாளென யார் சொல்ல அவனிடம்?

அவனை பார்க்கவே மாட்டாளென்று சொல்லமுடியாது.அவனே அறியாமல் பார்த்துவிட்டு சென்றுவிடுவாள்.

இவனுக்குத்தான் இப்போது அவள் மனநிலை புரியாமல் மண்டை காய்ந்தது.

நாட்கள் இப்படியே போக, ஆடவனின் மனமாற்றம் அறிந்தவளும், அந்த வருட திருவிழா கடைசி நாளன்று, அவனுக்கு உள்ளதை… உள்ளத்தை புரியவைத்தாள்.

அன்று எல்லாரும் மஞ்சள் தண்ணீர் ஊற்றி விளையாடிக் கொண்டிருந்தனர்.

கோவிலிலிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த வெற்றி மீது மஞ்சள் நீர் பொழிய, திரும்பியவன் கண்களில் நீண்ட கூந்தல் அசைந்தாட ஓடும் பாவையவள் பட்டுவிட்டாள்.

அதுவும் திரும்பி அவனை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தாளே!

அவ்வளவுதான் வெற்றி மொத்தமாக விழுந்தே போனான்.

எப்படி உணர்கிறானென்று அவனுக்கே தெரியவில்லை.

அவள் பின் செல்லவேண்டுமென பரபரத்த மனதை கட்டுப்படுத்தவே பெரும்பாடாகிப் போனது.

இங்கோ செய்த செயலில் வெட்கம் கொண்டு, மஞ்சள் நீர் இருந்த சொம்புடன் ஓடிவந்த தேன்மொழி, எதிரே வந்துகொண்டிருந்த கதிர், பிரபாவைக் கண்டுவிட்டு திருத்திருவென விழித்தாள்.

அவளை புரியாமல் கடந்து அதே சந்தின் வழியே வந்தவர்கள் கண்டது, சிலையென நின்றிருக்கும் வெற்றியைத்தான்.

அதுவும் முகம், சட்டையெல்லாம் மஞ்சள் தண்ணீரின் சுவடோடு.

சட்டென விஷயம் புரிந்துபோக, இருவரும் வாய்க்குள் பூந்த கொசு காது வழியே வருவதைக் கூட அறியாது வாய் பிளந்தபடி இருந்தனர்.

அதையெதையும் கவனிக்காது, தன்னை மீட்டுக்கொண்ட வெற்றியும் சென்றுவிட்டான்.

இத்தனை நாட்களாக கண்டுகொள்ளாமல் இருந்தவள் அவள் மனதை சொல்லிவிட பெருத்த நிம்மதியானான்.

‘இனி அவள்தான். யார் தடுத்தாலும், என்ன பிரச்சனை வந்தாலும் ஒரு கை பார்ப்பேன்.’ என உறுதிக்கொண்டான்.

அதன்பின்னும் அவன் அருகே வந்தால் ஓடதான் செய்தாள்.

அவள் மனம் புரிந்து கொண்டவனும், எதையும் காட்டிக்காதது போல இருந்து கொண்டான்.

அவர்களின் காதல் பாஷைகள் பார்வைகளும், புன்னகையும் மட்டுமே!

தொடரும்…